இப்போதெல்லம் செய்தி ஊடகங்களில் பள்ளி சிறார்களின் மரணச் சம்பவங்கள் தினந்தோறும் வெளிவருகின்றது. இறக்கும் பள்ளி மாணாக்கர்கள் 3 வயது முதல் 17 வயதிற்குள் உள்ளவர்கள். தாம்பரம், முடிச்சூர் சீயோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி 2-ஆம் வகுப்பு மாணவி ஸ்ருதி பேருந்து ஓட்டை வழியாக விழுந்து இறந்த சோக நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து சம்ப‌ந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தகுந்தது. தமிழக அரசிற்கும், பல அரசுத் துறைகளின் பொறுப்பற்ற செயல்களுக்கும் கடும் கண்டணத்தையும் தெரிவித்தது. தமிழக மக்களும், ஊடகங்களும் ஒரு வாரத்திற்கு அதைப் பற்றியே பேசினர். ஆனாலும் பிறகு வழக்கம் போல் இறப்புச்சம்பவங்கள் தொடர்கின்றன.

ஆகஸ்ட் 5ந்தேதி புளியந்தோப்பு கன்னிகாபுரம், கானல் தெருவை சேர்ந்த சங்கர்-வரலட்சுமி ஆகியோரின் மகன் வினோத் புரசைவாக்கம் மெய்யப்பசெட்டியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மணவன், பேருந்து படிக்கட்டிலிருந்து விழுந்து இறந்தான். மாணவர்கள் பேருந்துப் படியில் பயணம் செய்வதை கண்காணித்து தடுத்திருக்கவேண்டிய காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்பது புரியவில்லை.

சென்னை, கே.கே நகரிலுள்ள பத்மாசேசாத்திரி பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி 4 ஆம் வகுப்பு மாணவன் ரஞ்சன் இறந்த சம்பவம் செய்தியானது. பள்ளி நிர்வாகம் இதை சாதாரண விபத்து என்றுச் சொல்லி பெற்றோர்களுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் மூட்டியதால் மக்கள் வெகுண்டெழுந்தனர். விழித்துக்கொண்ட அரசும், காவல்துறையும் பள்ளிநிர்வாகிகள் மேல் பிரிவு 304(ஏ) கீழ் வழக்கு பதிவுசெய்து 5 பேரை கைது செய்தது. அவர்கள் உடனே பிணையில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவ‌த்தைப் பற்றி பெரும்பாலான ஊடகங்கள் அடக்கி வாசித்தன. காரணம் அவர்கள் அப்படிப்பட்ட செல்வாக்குடையவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள, செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 9 ஆம் வகுப்பு படிக்கும் குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பரதன் அதிகாலை உடற்பயிற்சியின்போது மயங்கி விழுந்துவிட்டதாகவும் உடனே மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும் அவனது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்த மாணவனின் பெற்றோரும், பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் மேற்கண்ட பள்ளியின் முன் கண்டனப் போரட்டம் நடத்தினர். பள்ளி நிர்வாகம் தனது ஆசிரியர்களை பள்ளிக்கு வெளியே நிறுத்தி அன்று பள்ளிக்கும், கல்லூரிக்கும் வழக்கம் போல் வந்த அனைத்து மாணவர்களையும் தடுத்து நிறுத்தி பள்ளிக்கு விடுமுறை என்று எவரையும் நிற்கவிடாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அப்பள்ளியின் விடுதியில் தங்கியுள்ள சக மாணவர்களை ஏனைய மாணவர்கள் சந்திக்க முடியாத நிலையை பள்ளி நிர்வகம் உருவாக்கி உண்மை எதுவென்று கண்டறிய முடியாத சூழலையும் உருவாக்கியது.

மேலும் இறந்த பரதனுக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததாகவும் அதனால்தான் மரணம் நேரிட்டதாகவும் பள்ளியின் தரப்பில் தெரிவித்தனர். காவல்துறையும் பள்ளியின் முன் போரட்டம் நடத்தியவர்களையும், பெற்றோரையும் கைது செய்து மாலையில் விடுதலை செய்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் இச்சம்பவத்தில் பள்ளியின்மீது தவறு உள்ள பட்சத்தில் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாக நாளிதழ்களுக்கு பேட்டியளித்தார். அதன் பின் எதுவும் நிகழாததுபோல் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. பள்ளிநிர்வாகத்தின் மேல் உதவி ஆட்சியர் விசாரணை என்றார்கள்.. அது என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது. அம்மாணவனின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. ஏனெனில் இந்தப் பள்ளியில் மாணவர்கள் இறந்த சம்பவம் முதல் முறை அல்ல, ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு இதே பள்ளியில் விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்த விழுப்புரம் மாவட்டம் வளவனூருக்கு அருகிலுள்ள செங்காடு என்ற ஊரை சேர்ந்த எஸ்போஸ்லாஸ் என்ற மாணவன் மர்மான முறையில் மரணமடைந்தான்.

அவனது பெற்றோர்கள் உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்காடினார்கள். ஆனால் சர்வ வல்லமை பொருந்திய பள்ளி நிர்வகம் தங்களது தகிடுதத்த முயற்சிகளால் வழக்கை தங்களுக்குச் சாதகமாக திருப்பினர். கடைசியில் மேற்படி எஸ்போஸ்லாஸ் மரணம் தெய்வாதீனமாக ஏற்பட்டதாகக் கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து 31.01.2011 அன்று இதேப்பள்ளியில் விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்த விழுப்புரம் மாவட்டம் சின்ன மாரனோடையை சேர்ந்த ஆரோக்கியதாஸ்- விண்ணரசி இவர்களின் மகன் ஜாய்ஸ் ஆல்வின் மர்மான முறையில் மரணமடைந்தான். அப்போதும் பெற்றோர்கள், உறவினர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர் அனைவரும் இப்பள்ளியை கண்டித்து போராட்டம் நடத்தினர். அப்போதும் இப்பள்ளி நிர்வாகம் ஜாய்ஸ் ஆல்வினுக்கு மஞ்சள்க்காமாலை நோய் என்று வடிகட்டிய பொய்யை அவிழ்த்துவிட்டது. உடல்நிலையில் எவ்வித நோயுமற்ற அம்மாணவன் திடீரென இறப்பதற்கு எக்காரணமும் இல்லை. மேலும் ஜாய்ஸ் ஆல்வின் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவனது தாய் அவனை விடுதியில் சந்தித்துள்ளார். அப்போது ஆல்வின் நலமாக இருந்துள்ளான். மேலும் விடுதியில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதகவும் அதற்கு மறுப்பு தெரிவித்தற்காக தன்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்றும் ஆகையால் தன்னால் தொடர்ந்து அப்பள்ளியில் படிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளான்.

குடும்ப சூழ்நிலை கருதியும் கல்வியாண்டு முடிய மூன்று மாதங்களே இருப்பதாலும் பொறுமையுடன் படிக்குமாறு தன் மகனிடம் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு வேறு பள்ளியில் சேர்த்துவிடுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் அவரது மகனை பிணமாகத்தான் அப்பள்ளியினர் கொடுத்தனர். பள்ளி நிர்வகம் மற்றும் பேராயரும் ஆல்வின் மரணத்தில் நிகழ்ந்த உண்மையை மறைக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் ஆல்வின் குடும்பத்தினருடன் சமரசம் பேச புதுவை கடலூர் மறைமாவட்ட பொருளாளர், மறைமாவட்ட பள்ளிகளின் மேலாள‌ர் ஆகிய இரண்டு பாதிரிகளை அனுப்பி நீலிக்கண்ணீர் வடித்து தவறு செய்தவர்களுக்கு தண்டணை பெற்றுத் தருவதாக பொய் சொல்லி ஆல்வின் உடலை அடக்கம் செய்துவிட்டு வரும்படி பணித்தனர். அவர்களும் மேற்படி நாடகமாடி மகனை இழந்த அக்குடும்பத்தை ஏமாற்றினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல் ஆல்வின் மரணத்திற்குக் காரணமான யாருக்கெதிராகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இம்மரணத்திற்கு காரணமானவர்களை காப்பாற்ற அனைத்து மோடி வித்தைகளையும் செய்தார்கள். அந்த தைரியம் தான் மீண்டும் ஒரு பரதனை இன்று பலிகொடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. தற்போது மர‌ணமடைந்த பரதனுக்கு ஓராண்டிற்கு முன்பே இதயத்தில் ஓட்டை இருந்ததால் உடற்பயிற்சியின் போது இறந்ததாக பள்ளித்தரப்பில் கூறப்படுகிறது. அப்படியானால் அம்மாணவனை உடற்பயிற்சிக்கோ, கால்பந்து விளையாடவோ அனுமதித்த‌தேன்?

பரதன் விடுதியில் ஏதோ சிறு தவறு செய்ததினால் பள்ளி விளையாட்டு மைதானத்தை சுற்றி 10 முறை ஓடி வரும்படி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. 8வது முறை ஓடும் போது மயக்கமடைந்து விழுந்து விட்டதாகவும் அவனுடன் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கூறுகிறார்கள்.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நலனில் அக்கறையின்றி, பணம் கொள்ளையடிக்கவும், தங்களது பலத்தையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவது, விடுதியில் உள்ள மாணவர்களை பாலியல் உறவிற்கு பயன்படுத்துவது, அதற்கு ஒத்துழைக்காத அல்லது இப்படிப்பட்ட தவறுகளை பார்த்துவிட்ட மாணவர்களை துன்புறுத்திக் கொல்வது என பல முறைகேடுகளை நிகழ்த்திவரும் பள்ளி நிர்வாகத்தை அதற்கு தலைமை வகிக்கும் மறைமாவட்ட பேராயரோ, மாவட்ட நிர்வாகமோ எவ்வித்திலும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கியதில்லை. குறைந்தபட்சம் அவர்கள்மீது கடுமையான விசாரணைகூட நடத்த முன்வருவதில்லை. இவ்விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்படுபவர்கள் அப்பள்ளியின் ஆண்டுவிழா, அறிவியல் கண்காட்சி, விளையாட்டு விழா என பல விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு அவர்களுடன் நெருக்கமான உறவில் உள்ளவர்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அப்பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க இடம் வாங்க சிபாரிசு செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பள்ளியில் தொடர்ந்து 3 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். நமக்கு எழும் சந்தேகங்கள் இவைகள் தான்.

1.இப்பள்ளியில் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்கள் மூன்று பேரும் தாழ்த்தப்பட்ட இனத்தை (தலித்)சேர்ந்தவராக இருப்பது எப்படி?

2.இந்தப் பள்ளியின் விடுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மரணம் ஏன் நிகழ்கிறது?

3.கடுமையான எவ்வித உடல் நோயுமற்ற நிலையில் அரை மணி நேர, ஒரு மணி நேர இடைவெளியில் திடீரென மரணம் ஏற்படுவதேன்?

4. கடந்த இரண்டாண்டுகளில் இரண்டு மாணவர்கள் இறந்த பின்னும் அப்பள்ளியின் முதல்வராக உள்ள பாதிரி ஆக்னல் மீதும், விடுதிக்கப்பாளர்கள் மீதும் அப்பள்ளி நிர்வாகத்தின் தலைவர் புதுவை –கடலூர் மறைமாவட்ட பேராயர் நடவடிக்கை எடுக்காததேன்?

5. பேராயர் இம்மரணங்களில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றுகிறரா? அல்லது பள்ளி, கல்லூரி முதல்வர்களாக உள்ள பாதிரிகளால் மிரட்டப்படுகிறாரா?

6.தொடரும் மாணவர் மரணங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

7.பள்ளிகளிலும், பள்ளி விடுதிகளிலும் நிகழும் மாணவர்களின் மரணங்களை சந்தேக மரணங்களாக வழக்கு பதிவுசெய்து பேருக்கு விசாரணை நடத்தி பின் அவ்வழக்கை மூடி விடுவதேன்?

8. கடந்த 20 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பள்ளிகளிலும் பள்ளிவிடுதிகளிலும் நிகழ்ந்த மரணங்கள் எத்தனை? அவைகளில் எத்தனை சந்தேக மரணங்களாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அம்மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது?

9.மாணவர் மரணங்களில் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த அக்கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள அரசு அலுவர்கள்(மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், கோட்டாட்சியர்) விசாரனை நடத்த அனுமதிப்பதேன்? அவர்களுக்குள்ள தொடர்பு விசாரணையை நேர்மையாக நடத்த உதவுமா?

10. குழந்தைகள் உயிர்வாழவும், பாதுகாப்பாக இருக்கவும் உரிமையளிப்போம் என சட்ட உறுதியளித்துள்ள மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கை என்ன?

இதுப்போல் ஆயிரம் சந்தேகங்களையும், கேள்விகளையும் சமீபமாக அதிகரித்துவரும் மாணவர்களின் மரணங்கள் எழுப்புகின்றன. நாம் கோருவதெல்லாம் இவைதான்.

1. பள்ளிகளிலும், பள்ளிகளின் விடுதிகளிலும் மாணவர்கள் மரணமடைந்தால் அவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, பள்ளி நிர்வாகிகளை கைது செய்து விசாரணை நடத்தவேண்டும்.

2.இம்மாதிரியான வழக்குகளை சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி கடும் தண்டனை வழங்கவேண்டும்.

3. இம்மரணங்களை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களையும் தகுதிநீக்கம் செய்யவேண்டும்.

4. பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நிவாரணம் வழங்கவேண்டும்.

ஒரு குழந்தையின் உயிரைப் பாதுக்காக்க முடியாத, அதன் உயிர் போக காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர இயலாத சமூகம் வளர்ந்த சமூகமாக இருக்க முடியாது. ஒரு சமூகத்தில் ஒரு தீமை நிகழும் போது, அத்தீமைக்கு எதிராக, அத்தீமையினால் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகப் போராடி நியாயத்தைப் பெற்றுத்தர இயலாத சமூகம் வாழ்வதற்குத் தகுதியற்ற சமூகமாகும். நாம் வாழும் சமூகம் எப்படிப்பட்டது என சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். மீண்டும் ஒரு குழந்தை மரணம் நிகழ்வதைத் தடுக்கவேண்டியது நம் கடமை. அனைவரும் குரல் கொடுப்போம். அரசுக்கு நம் கோரிக்கையை முன்வைப்போம்.

- பெ.கிறிஸ்டோபர், கடலூர்.

Pin It