கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே தமிழ்நாட்டில் படிப்பை உதறும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்ற செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மத்திய மனித வளத் துறை அமைச்சர் இரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி 9 மற்றும் 10ஆம் வகுப்புகளோடு படிப்பை உதறிய மாணவர்கள் 2017-18இல் 16.2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விட்டது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 100 சதவீதம் அதிகம். 2015-16இல் பள்ளிப் படிப்பை உதறியவர்கள் 8 சதவீதம். வறுமை, பொருளாதார நிலை, குழந்தைகளின் மோசமான சுகாதார நிலை, வீட்டு வேலை போன்ற பிரச்சினைகளே இதற்குக் காரணம் என்று பட்டியலிட்டுள்ள அமைச்சர், மற்றொரு முக்கிய காரணியையும் சுட்டிக்காட்டுகிறார். பெற்றோர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டி குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற அமைச்சரின் கருத்து தமிழ்நாட்டின் சமூக நீதி கொள்கை கட்டமைத்த உணர்வுகளையே நிலைகுலைய வைத்திருக்கிறது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

பள்ளிக்கு குழந்தைகளைக் கொண்டு வருவதற்கு எத்தனையோ திட்டங்களை வகுத்த பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. கிராமந்தோறும் அரசுப் பள்ளி - பகல் உணவு - மதிய உணவுத் திட்டங்கள் - இலவச பாட நூல் - இலவச சீருடை - உதவித் தொகை - மிதிவண்டி - கணிப்பொறி என்ற சமூக நலத் திட்டங்களை உருவாக்கியது மட்டுமல்ல; அத்திட்டங்கள் அனைத்துக் குழந்தைகளையும் சென்றடையக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. பள்ளி இறுதிப் படிப்பு வரை வழங்கப்பட்ட இலவசக் கல்வி, பட்டப் படிப்பு வரை உயர்த்தப்பட்டது. பட்டியலினப் பிரிவு மாணவர்களின் பொறியியல் பட்டப் படிப்புக்கும் இலவசக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.

ஜாதியமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை வழங்கும்போது சமூகக் காரணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகப் பிரச்சினைகளை கல்வியோடு இணைத்துப் பார்த்ததால்தான் தமிழகம் இந்த சாதனைகளை படைக்க முடிந்தது.

சமூகத்தைக் கல்வியிலிருந்து துண்டித்து, அதைத் தொழிலாகவும், அரசு செலவீனமாகவும் பார்த்தார், இராஜகோபாலாச்சாரி. பள்ளிகளை மூடியதும் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததும் அதே கண்ணோட்டத்தில்தான். அதன் காரணமாகவே தமிழர் சமூகம் அவரை புறக்கணித்தது.

இப்போது புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியின் நவீன வடிவத்தை பார்ப்பன சங்பரிவாரங்கள் திணிக்கின்றன. நீட் தேர்வு வைத்து வடிகட்டுகிறார்கள்; கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாததோடு மட்டுமல்ல; இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பதாரர்களே, 17 சதவீதம் குறைந்து விட்டார்கள். 5ஆம் வகுப்புக்கும் 8ஆம் வகுப்புக்கும் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களை வடிகட்டும் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது.

பார்ப்பனர்கள் ஒரே குரலில் கல்வித் தரத்தை மேம்படுத்திட இந்தத் தேர்வுகள் தேவையானவை என்றார்கள். கல்விக்காக இவர்கள் வைத்திருக்கும் ‘தரம்’ என்ற அளவுகோல்கூட சமூகத்திலிருந்து கல்வியைத் தூண்டித்துப் பார்க்கும் அணுகுமுறைதான். மக்கள் எதிர்ப்புக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தாலும் புதிய கல்விக் கொள்கை அமுலுக்கு வரும்போது மீண்டும் அத்திட்டத்தை அமுல்படுத்த மாட்டார்கள் என்பதற்கு உறுதி கூற முடியாது.

‘நடுவண்’ ஆட்சிக்கு அடிபணிந்து தமிழக அரசு நமது செல்வங்களான வளரும் துளிர்களை முளையிலே கிள்ளி எறிந்து கல்விக் கண்ணை குத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலே இந்த நிலையா? நெஞ்சம் பதறுகிறது.