குலக் கல்வியை முறியடிக்க பெரியார் தொண்டர்கள் போட்ட இரத்தக் கையெழுத்து

கோவை காரமடையில் தேசியக் கல்வியையும் குலக் கல்வியையும் ஒப்பிட்டும் குலக் கல்வி எதிர்ப்பு வரலாற்றை விளக்கியும் பொறியாளர் மு. செந்திலதிபன் ஆற்றிய உரை.

இராஜகோபாலாச்சாரி - தன்னிச்சையாகக் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த போராட்ட வரலாறு மற்றும் அரசியல் சூழலை விளக்கு கிறார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகம் : சட்ட மன்றத்தில் குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து ஒரு நிபுணர் குழு அமைத்து பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத் திற்கு ஆதரவாக 139 வாக்குகள் பதிவாகின. எதிராக 137 வாக்குகள் எதிராக விழுந்தன. 2 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜாஜி அரசு தோல்வி அடைந்தது. எனவே ராஜாஜி அரசு பதவி விலக வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்தன.

அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், புதிய கல்வித் திட்டத்தை அதாவது குலக்கல்வித் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தீர்மானம் வெற்றிபெற்று இருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவைக்கு வரவில்லை. அதனால் உங்கள் தீர்மானத்தை கை விடுங்கள் என்று பலரும் கம்யூனிஸ்ட் கட்சியை வலியுறுத்தினார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி தனது தீர்மானத்தைக் கைவிட மறுத்துவிட்டது. தீர்மானம் வாக்கெடுப்புக்காக விடப்பட்ட போது, ஆதரவாக 138 வாக்குகளும், எதிராக 138 வாக்குகளும் விழுந்தன. இறுதியில் சட்டமன்றத் தலைவர் தன்னுடைய வாக்கை அரசுக்கு ஆதரவாக அளித்து, அரசை வெற்றிபெறச் செய்து கம்யூனிஸ்ட் தீர்மானத்தைத் தோற் கடித்தார்.

கம்யூனிஸ்ட் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் ராஜாஜி அரசு பிழைத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி தனது தீர்மானம் வெற்றி பெறு வதற்கு முயற்சி செய்யவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் அன்று சபைக்கு வர வில்லை. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சித் தலைவருமான தோழர் பி.இராம மூர்த்தியும் சட்டமன்றம் செல்லவில்லை. இந்த நிலையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி, ராஜாஜி அரசின் குலக் கல்வித் திட்டத்திற்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. ராஜாஜி இதனால் உற்சாகம் அடைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியைக் கடுமையாக எதிர்த்துவந்த ஆச்சாரியார், அதன்பிறகு தனது எதிர்ப்பை குறைத்து விட்டார். வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது செய்த தவறு இது. தந்தை பெரியாரை சமாளிக்க வேண்டும் என்பதற்கு ராஜாஜி திட்டம் தீட்டினார்.

குலக்கல்வி எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்திய திராவிடர் கழக தோழர்கள் மீது காங்கிரஸ் காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரஸ் காரர்கள் கலகம் செய்தால் காவல்துறை தலையிடாது என்று வெளிப்படை யாகவே ராஜாஜி அறிவித்தார்.

ராஜாஜியின் அரசு காலித்தனத்திற்குப் பச்சைக் கொடி காட்டியதால், பார்ப்பனர்களும், ஆச்சாரி யாரின் அடிவருடிகளும் துணிவு பெற்றார்கள். இதன் உச்சகட்டமாக திருச்சி பெரியார் மாளிகைக்கு தீ வைக்கத் துணிந்து விட்டனர். அங்கிருந்து கழகத் தோழர்கள் அந்தக் காலிகளை பெட்ரோல் தீ பந்தத்துடன் கையும் களவுமாகப் பிடித்து வைத்தனர். சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார் உடனடி யாக திரும்பினார். காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார் குப்பைக் கூடைக்குப் போனது.

ராஜாஜி கொக்கரித்தார். இப்போது நடப்பது தேவர் - அசுரர் போராட்டம் என்று குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்தை ராஜகோபாலாச் சாரியார் வர்ணித்தார்.

தந்தை பெரியார் பதிலடி கொடுத்தார். ஆம்! இது ஆரிய - திராவிட போராட்டம் தான் என்று விடுதலையில் எழுதினார்.

ராஜாஜி சர்க்கார் எல்லை மீறி போனபோது தான் 1953 நவம்பர் மாதத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த சுயமரியாதை இயக்க திராவிடர் கழக மாநாட்டில், திராவிடர் கழகத்தினர் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கிரகாரத்தைக் கொளுத்துவோம் : அதன் பிறகும் ராஜாஜி அரசு அடக்குமுறையை நிறுத்த வில்லை. அப்போதுதான் தந்தை பெரியார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை சட்டத்திற்கு உட்பட்டு போராடி வந்த நான் இனி சட்டத்தை மீறியாவது குலக்கல்வியை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

பெட்ரோலும் தீப்பந்தமும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நான் அறிவிக்கும் போது அக்கிரகாரத்தைக் கொளுத்துங்கள் என்று பெரியார் ஆணையிட்டார். இது மாதிரி யெல்லாம் அறிவிக்கின்ற துணிச்சல் இந்திய வரலாற்றில் தந்தை பெரியாரைத் தவிர வேறு எந்தத் தலைவரையும் காண முடியாது.

பெரியாரின் அறிவிப்பில் பார்ப்பனர்கள் நடுங்குகிறார்கள். ‘திருப்பித் தாக்குங்கள்’ என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி பார்ப்பனர்களைத் தூண்டி விட்டார். இந்து பத்திரிக்கை துள்ளிக் குதித்தது. பெரியார் கூறியபடி, ஆரிய - திராவிடப் போர் உக்கிரமானது.

பெரியார் நடத்தியப் போராட்டங்களால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே ராஜாஜிக்கு எதிர்ப்புத் தீவிரமானது. பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியாரின் போராட்டம் நியாயமானது என்று உணர்ந்தார். ‘குலக்கல்வித் திட்டம் உருப்படாது; பயனும் அளிக்காது’ என்று பேசத் தொடங்கினார். ஓமந்தூரார், “தற்போதுள்ள படிப்பும் இல்லாமல் போய்விடும்” என்று கூறினார்.

உழைப்பாளர் கட்சி தலைவரும், பின்னாளில் திமுகவின் முக்கிய தளகர்த்தகராக பேறிஞர் அண்ணா அவர்களுக்குத் துணை நின்றவருமான ஏ.கோவிந்தசாமி, சட்டமன்றத்தில் புதிய கல்வித் திட்டத்தைப் புகுத்திய ராஜாஜியை கடுமையாக எதிர்த்தார். ராஜாஜிக்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், பிரதமர் பண்டித நேருவிடம் புகார் அளித்தனர். ராஜாஜி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. பிரதமர் நேரு ராஜாஜியை முதல்வராக தொடர அனுமதி அளித்தாலும், நிலைமை இங்கு சரியில்லை.

இரத்த கையெழுத்து: குலக்கல்வித் திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்ட தந்தை பெரியார் இறுதியாகப் போராட்டம் அறிவிக்க முடிவு செய்து, போராட்டத்தில் கலந்துகொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் இரத்தத்தில் கையெழுத்து இட்டு அனுப்புங்கள் என்று ஆணை பிறப்பித்தார். திராவிடர் கழகத்தினர் இரத்தக் கையெழுத்து போட்டு அனுப்பிய கடிதங்கள் குவிந்தன.

இந்த நிலையல்தான் ஈரோட்டில் 1954 ஜனவரி 23, 24 தேதிகளில் புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு - குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார். அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் மூன்று மாதத்திற்குள் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1954 மார்ச் 27, 28 தேதிகளில் நாகப்பட்டினம் அவுரி திடலில் சென்னை மாநில விவசாய மாநாடு நடந்தது. மாநாடு முடிந்து மறுநாள் பெரியார் அறிவித்தவாறு குலக்கல்வி எதிர்ப்புப் படை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டது.

குலக்கல்வி எதிர்ப்புப் படைக்கு பட்டுக் கோட்டை டி.வி.டேவிஸ் தளபதியாக இருந்து வழிநடத்த 29 தோழர்களுடன் நாகை அவுரி திடலில் நடந்த மாநாட்டிலிருந்து புறப்பட்டு விட்டது படை. நாகையிலிருந்து சென்னை வரை சென்ற குலக்கல்வி எதிர்ப்புப் படை செல்லும் வழியெங்கும் ராஜாஜியின் குடிகெடுக்கும் குலக்கல்வித் திட்டத்தின் தீய நோக்கத்தை மக்களிடம் பரப்புரை மேற்கொண்டது.

ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக பெரியார் மூட்டிய தீ பற்றி எரிந்தது. வேறு வழியில்லாமல் ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. குலக்கல்வித் திட்டத்தை வடித்துக் கொடுத்த கல்வி ஆலோசகர் ஜி.ராமச்சந்திரன் பதவி விலகினார்.

காங்கிரஸ் சட்டமன்ற புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடியது. முதல்வர் பதவிக்கு போட்டி யிட்ட பெருந்தலைவர் காமராசர் 93 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து, ராஜாஜி ஆதரவுடன் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம் 41 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

பெருந்தலைவர் காமராஜர், முதல்வர் பதவி ஏற்ற நிலையில், நாகப்பட்டினத்திலிருந்து புறப்பட்ட குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை 600 மைல்கள் பிரச்சார பயணம் மேற்கொண்டு, மக்களிடையே எழுச்சி ஏற்படுத்தி, சென்னை வந்தடைந்தது. முதல்வர் காமராசர் அவர்களை சென்னை கோட்டையில் குலக்கல்வி எதிர்ப்புப் படையின் சார்பில் நீடாமங்கலம் அ.ஆறுமுகம், படைத் தளபதி டி.வி.டேவிஸ், க.ராஜாராம், எம்.கே.டி.சுப்பிர மணியம், டி.எம்.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர்.

அவர்களை அன்போடு வரவேற்ற முதல்வர் காமராஜர் உங்கள் கோரிக்கையை இந்த அரசு நிறைவேற்றும் என்று தந்தை பெரியாரிடம் கூறுங்கள் என்றார்.

தந்தை பெரியாரின் போராட்டத்திற்கு வெற்றி பெறும் சூழலும் கனிந்தது. 1954 மே 18ஆம் தேதி குலக்கல்வித் திட்டத்தை திரும்பப் பெறு வதாக முதலமைச்சர் காமராசர் அறிவித்தார். ராஜாஜிக்கு ஆதரவாக ஓராண்டு காலமாக எந்த சி.சுப்பிரமணியம் குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்துப் பேசினாரோ அவரையே கல்வி அமைச்சராக்கி, அவர் வாயாலேயே திரும்பப் பெறுகிறோம் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கச் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.

பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்து அறிவிப்பு வெளியிட்டாலும், உண்மையிலேயே வெற்றி பெற்றவர் தந்தை பெரியார் தான்.

1954 இல், தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்ட குலக் கல்வித் திட்டம், இன்றைக்கு தேசிய கல்விக் கொள்கை-2020 மூலமாக மீண்டும் திணிக்கப்படுகிறது.

- மு.செந்திலதிபன், ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர்

(நிறைவு)

Pin It