கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலம் கோவை மாநகரில் பல்வேறு தொழிற்சங்கப் பணிகளை செய்தும், பல ஆண்டுகள் தலைமறைவு கட்சி பணியாற்றியும், தமிழ் கூறு நல்லுலகின் தன்னிகரற்ற பதிப்பகமாக விடியல் பதிப்பகத்தை உருவாக்கியதின் மூலம் கோவை மாநகருக்கே பெருமையும் சேர்த்த தோழர் விடியல் சிவா அவர்கள் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி மதியம் அகால மரணமடைந்தார். மறுநாள், கணத்த மனதோடு அவரை பற்றின நினைவுகளை சுமந்தபடி நான் கோவை மாநகரிலிருந்து புறப்பட்ட போது அந்நகரம் தனக்கே உரித்தான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது. நேற்று இந்நேரம் நம்முடன் இருந்த ஒரு மனிதர் இன்று இல்லை என்கிற பிரக்ஞை ஏதுமின்றி சாலையில் எதிர்ப்பட்ட, கடந்து சென்ற ஆயிரக்கணக்கானவர்கள் வழக்கம்போல தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மூழ்கிப் போயிருந்தார்கள்.

vidiyal_siva_370இச்சமுகம், எந்த ஒரு தனி மனிதனுக்காகவும் தான் காத்திருப்பதில்லை என்பதையும் எந்த ஒரு தனி மனிதனை நம்பியும் தான் இல்லை என்பதனையும் அனுதினமும் பறைசாற்றிக் கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் சமுக அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறான், ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தை நம்பியே வாழ்கிறான். தோழர் விடியல் சிவா அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல, ஆனால் அதையும் தாண்டி சமூக முன்னேற்றத்திற்காகவும் அதன் சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் திருமணம் கூட செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அந்த மாமனிதரின் பூத உடல், கோவை அரசு பொது மருத்துவமனையின் பிணவறை வாசலில் கேட்பாரற்றுக் கிடந்ததை பார்த்தபோது ஒரு சமுகப் பிரஜையாகவும், அவருடன் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியவன் என்கிற முறையிலும் வெட்கித் தலைகுனிந்தேன்.

2004ஆம் ஆண்டு வாக்கில் ஈரோட்டில் தந்தை பெரியார் பற்றி நாங்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு வந்திருந்த போதுதான் விடியல் சிவா அவர்களை நான் முதன் முதலில் சந்தித்தேன். மிகவும் எளிமையான தோற்றம், எப்போதும் மாறாத புன்சிரிப்பு எல்லாவற்றிற்க்கும் மேலாக நான் மிகவும் நேசித்த "சே குவேரா : வாழ்வும் மரணமும்" நூலின் பதிப்பாளர் போன்ற காரணங்களால் நான் அவர்பால் இயல்பாகவே ஈர்க்கப்பட்டேன். அவரும் எங்கு சென்றாலும் புதுப்புது இளைஞர்களுடன் அளவளாவுவதையும், அவர்களை அரசியல் படுத்துவதையுமே முக்கியமானதாகக் கருதினார். ஈரோடு, மதுரை, சென்னை என புத்தகக் கண்காட்சி எங்கு நடந்தாலும் அந்த ஊர் இளைஞர்கள் விடியல் அரங்கில் மொய்த்துக் கிடப்பதை பெரும்பாலான தோழர்கள் கண்டிருக்கலாம்.

மற்றவர்களுடன் உரையாடும்போது பிரசங்கம் செய்வது போல பேசிக்கொண்டே இருப்பவரல்ல அவர். 'எனக்கு சரின்னு பட்ரதனால நா அத ஆதரிக்கிரேன், இப்போ நீங்க அத தப்புனு நிருபிச்சிட்டீங்கன்னா நா என்னோட கருத்த மாத்திக்க போரேன், அவ்வளவுதான். நாம எந்த கொள்கையோடயும் தாலி கட்டிக்கிலியே தோழர்...' என்றுதான் பெரும்பாலும் ஒரு விவாதத்தை ஆரம்பிப்பார். ஆனால் அவ்வளவு சுலபமாக அவர் தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்பவரல்ல. நள்ளிரவைத் தாண்டினாலும் அது நீண்டுகொண்டே போகும். ஒருவேளை அந்த விவாதத்தில் நீங்கள் ஒரு பார்வையாளராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர். ஏனென்றால் பல நாட்கள் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய விசயங்கள் போகிற போக்கில் அங்கு தெறித்து விழ ஆரம்பித்துவிடும். நீங்கள் கொஞ்சம் உஷாராக இருந்தால் அவற்றைப் பொறுக்கி எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இன்றைக்கு நான் கொண்டுள்ள பல்வேறு கருத்துநிலைகளுக்கும், (முன்)முடிவுகளுக்கும் சொந்தக்காரர் அவர்தான்.

இறுதியாக நான் அவரை நல்ல நிலையில் பார்த்தது கோவையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் போதுதான். அப்போதே இடைவிடாமல் இருமிக் கொண்டுதான் இருந்தார். கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பெரு மழையும் புயல் காற்றும் வந்து மாநாட்டுப் பந்தலையே அள்ளிக்கொண்டு போனபோது மனமொடிந்து போனவர்களில் அவரும் ஒருவர். மழை ஓய்ந்த பிறகு, அங்கு கொண்டு வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகக் கட்டுகளை ஒரு டெம்போவில் அள்ளிப் போட்டுக் கொண்டு நானும், தோழர் குறிஞ்சியும், தோழர் ராமச்சந்திரனும் தோழர் சிவாவோடு விடியல் போய்ச் சேர்ந்தபோது மணி பன்னிரெண்டு ஆகியிருந்தது. அதன் பிறகு தோழர் கல்யாணியின் கையால் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.

அதற்குப் பிறகு நான்கைந்து மாதங்கள் கழித்து அவருக்கு புற்றுநோய் தாக்கியது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை சென்று பார்த்தேன். அப்போது இரண்டு முறை கீமோ தெரபி சிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தார். புற்றுநோயுடன் கூடவே இடைவிடாத இருமலும் வாந்தியும் அவருடைய உடலை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தன. அன்றிரவு அங்கேயே தங்கலாம் என்று சென்ற நான் அவர் அனுபவிக்கும் வேதனையை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் ஒரிரு மணிநேரத்திற்குள் புறப்பட்டு வந்துவிட்டேன். பிறகு அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதை நண்பர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். மே மாதத்தில் ஒருநாள் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மாவோவின் தொகுப்பு நூல்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் தயாராகிவிடும் என்றும் அதற்கான வெளியீட்டு விழாவினை ஈரோட்டில் நடத்துவது குறித்தும் பேசினார். அவருடைய பேச்சில் பழைய கம்பீரம் தெரிந்தாலும் அவருடைய குரல் தேய்ந்துபோயிருந்தது. ஒருவேளை நாங்கள் அவருடன் இணைந்து மாவோ புத்தக வெளியீட்டு விழாவினை நடத்தியிருப்போமேயானால் அது இப்பொழுது எங்களுக்கு மிகப்பெரிய மனத்திருப்தியை கொடுத்திருக்கும்.

பல மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது அவரை சுற்றியிருந்தவர்கள் மட்டுமின்றி அவரும் கூட நம்பிக்கையிழந்துதான் காணப்பட்டார். இம்முறை நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. நோயின் வலி தாங்கமாட்டாமல் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டதாகவும், வெறும் காயங்களுடன் தப்பித்துக்கொண்டால் அதன் வேதனை இன்னும் கொடுமையாக இருக்குமே என்று பயந்து அப்படி செய்துகொள்ளவில்லை என்றும் தோழர் கல்யாணியிடம் கூறியிருக்கிறார். இருந்தாலும் மரணத்தை எப்படியாவது வென்றுவிடத் துடிக்கும் சாதாரண மனித இயல்புதான் அவரையும் அவர் உடலையும் மீண்டும் ஒரு மாத காலம் தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்வதை சாத்தியமாக்கியிருக்கும் என நான் நினைக்கிறேன்.

ஜூலை 30, திங்கள் கிழமை மதியம் அவர் மரணமடைவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு ஜுலை 23ஆம் தேதி, திங்கள் கிழமை மதியம் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்றபோது தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அங்கு அமர்ந்திருந்தார். தோழர் சிவா அவர்கள் வழக்கம்போல தலையணையை தொடையில் வைத்து அதன் மீது முழங்கையை ஊன்றியபடி தலையை தொங்கவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். நாம் மனிதர்கள், ஆறறிவு படைத்தவர்கள், எனவேதான் அங்கே படுக்கையின் மீது அமர்ந்திருந்தவர் தோழர் சிவா என்பதை என்னால் உடனடியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. மற்றபடி நாம் பார்த்துப் பழகிய சிவா என்கின்ற திடகாத்திரமான உடல்பலமும், மலை போன்ற தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்தான் அங்கே எலும்பும் தோலுமாக, பெயருக்குக் கூட சதை துணுக்கற்ற உடலோடு அமர்ந்திருக்கிறார் என்பதை நாம் யாரும் ஒருக்காலும் நம்பமாட்டோம்.

அன்றைக்கு சுமார் மூன்று மணி நேரம் அந்த அறையில் நான் அமர்ந்திருந்தேன். மிகவும் சன்னமான குரலில் ஒன்றிரண்டு வார்த்தைகளை மட்டுமே அவரால் பேசமுடிந்தது. உணவு என்று எதையும் அவர் உட்கொண்டு ஒரு மாதம் ஆகியிருந்தது. அவர் உடலில் செலுத்தப்பட்ட மருந்தும் வாந்தியாக வெளியேறிக்கொண்டிருந்தது. தோழர் கல்யாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் வாந்தியெடுத்துவிட சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு வந்து படுக்கையை சுத்தம் செய்தார். நானும் தோழர் பொன்னுசாமியும் அவரை அப்படியே கைத்தாங்கலாகப் பிடித்து அங்கிருந்த நாற்காலியில் அமர்த்தினோம். படுக்கையை சுத்தம் செய்தபிறகு தோழரின் உடைகளை மாற்றி அவரை மீண்டும் படுக்கையில் கிடத்தியபோது அவர் கண்களில் ஒரு குற்ற உணர்வு தெரிந்தது. அதை உணர்ந்துகொண்ட தோழர் கல்யாணி நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள், இதையெல்லாம் செய்வது என்னுடைய கடமை என்று அவரை சமாதானப் படுத்தினார். நாங்கள் மீண்டும் சாப்பிடச் சொல்லி அவரை வற்புறுத்தியபோதும் அவர் வேண்டாமென்று மறுத்துவிட்டார். தோழர் கல்யாணி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் ஆறு மாதங்களுக்கு முன் தோழர் சிவாவிற்கு தொடர் இருமல் ஏற்பட்ட போதே அவரை நாம் இழந்திருப்போம் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

இறுதியாக, ஒரு மாத கால தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தபோது, அவருடன் நெருங்கிப் பழகிய பெரும்பாலான உள்ளூர் நண்பர்கள், அவருடைய உறவினர்கள், தோழர் சிவா உருவாக்கிய விடியல் அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஆகியோர் அவருடனிருந்தனர். மற்ற உள்ளூர் தோழர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையின் முன் குவியத் துவங்கினர். அதே போல தமிழகமெங்குமிருந்த என்னைப் போன்ற தோழர்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக புறப்பட்டபோது, எங்களுக்குக் கிடைத்த செய்தி 'யாரும் புறப்பட்டு வராதீர்கள், வந்தாலும் சிவாவின் உடலைப் பார்க்க முடியாது' என்பதுதான். அது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. தோழர் சிவா அவர்கள் கடைசியாக ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் "உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக் கூட பார்க்கக் கூடாது" என குறிப்பிட, அதை தவறாகப் புரிந்து கொண்ட(!) விடியல் அறக்கட்டளை நிர்வாகிகள் அவர் உடலை யார் கண்ணிலும் படாமல் உடனடியாக அரசு மருத்துவக்கல்லூரியிடம் ஒப்படைத்து விடுவதிலேயே குறியாக இருந்தனர். அதற்கு மற்ற உள்ளூர் தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இறுதியாக தோழர் கு.இராமகிருஷ்னன் தலையிட்டு சிவாவின் உடலை அனைத்து உள்ளூர் தோழர்களும் பெரியார் படிப்பகத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களை சம்மதிக்க வைத்தார். பிறகு அங்கேயே ஒரு இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

இரவு எட்டு மணியளவில் இரங்கல் கூட்டம் முடிந்த பிறகு உடனடியாக தோழர் சிவாவின் உடல் அவருடைய விருப்பப்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. மாலை ஐந்து மணிக்கே மருத்துவக் கல்லூரி பூட்டப்பட்டுவிடும் என்பதால், தோழரின் உடலை பெற்றுக் கொண்ட நபர் அதனை அரசு பொது மருத்துவமனையின் பிணவறை (mortuary) வாயிலில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை ஏழு மணியளவில் நான் அங்கு சென்றபோது அதே இடத்தில் அவருடைய உடல் கேட்பாரற்றுக் கிடந்தது. பிறகு தோழர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். இறுதியாக, அங்கிருந்து தோழரின் உடல் பதினோரு மணியளவில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களுக்காகவும், தான் கொண்ட மார்க்சிய நோக்கங்களுக்காகவும் செலவழித்த ஒரு மனிதரின் உடல், அவருக்கென்று அவரே கட்டிய ஒரு பெரிய வீடொன்று இருந்தும் இவ்வாறு அலைகழிக்கப்பட்ட கொடுமையையும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் முதற்கொண்டு தமிழகம் முழுக்க அவரை அறிந்த, அவருக்கு தங்களுடைய இறுதி அஞ்சலியை செலுத்த விரும்பிய நூற்றுக்கணக்கானவர்களை அவருக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாமல் செய்ததையும் என்னவென்று சொல்ல?

விடியல் சிவா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறியதும் பெரியதுமாக பல கனவுகளைக் கண்டார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை (கனவுகளை) தெரியப்படுத்த அவர் தவறியதே இல்லை. முதலில் 'பெரியார்: சுயமரியாதை சமதர்மம்' நூலை வெளியிடுவதே அவரின் பெரும் கனவாக இருந்தது, பிறகு 'சே குவேரா வாழ்வும் மரணமும்' எனத் தொடர்ந்த அந்தப் பயணம் இறுதியாக மாவோவின் தொகுப்பு நூல்கள் வரை நீண்டுகொண்டே சென்றது. அவர் வெளியிட்ட ஒவ்வொரு நூலும் தமிழ்ச்சமூகம் தவறாமல் கற்க வேண்டிய அறிவுப் பெட்டகங்களாகவே இருக்கின்றன. அதிலும் அவர் பதிப்பித்த ·ப்ரான்ஸ் ·பனானின் வாழ்க்கை வரலாற்று நூலை இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து கூட யாரும் பதிப்பிக்க அஞ்சுவர். அந்தளவிற்கு விற்பனையைப் பற்றி கவலையே படாமல் தரமான நூல்களை பதிப்பிப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

தன் இறுதிக் காலத்தில் உலகத்தரமான நூலகம் ஒன்றை கோவையில் அமைத்துவிடவேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகளையும் செய்து முடித்திருந்தார். ஒரே வளாகத்தில் பெரிய நூலகம் ஒன்றும் மேற்கத்திய பாணியில் கம்யூன்களைப் போன்ற தங்குமிடங்களையும் ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருந்தார். ஜூலை 30ஆம் தேதி அவர் இறந்த போது அவருடைய அந்தக் கனவுகளும் அவருடனேயே மரணித்துவிட்டன. இப்போது நம்மிடம் எஞ்சியிருப்பது அவரைப் பற்றிய நினைவுகளும் அவர் பதிப்பித்த புத்தகங்களும் மட்டுமே. அவற்றைப் போற்றுவோமாக.

Pin It