நீலச் சாயம் வெளுத்துப்போச்சு டும்..டும்..டும்..டும்..

ஒரு சில தினங்களாக வலைத்தளங்களிலும் முகநூலிலும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி தவறான ஒரு தகவல் திட்டமிட்டு பரப்பி விடப்படுகிறது.

periyar_mahalingam_640

1967-68ல் திருச்சியில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் நிகழ்வின்போது அடிகளார் காலில் பெரியார் விழுந்ததாக கூறுகிறார்கள். அடிகளாருக்கு பெரியார் மீதான மதிப்பீட்டை நாம் முதலில் அறிந்து கொள்வது அவசியம். அடிகளார் தனது கட்டுரைகளில் பெரியாரை பற்றி குறிப்பிடும் பொழுதெல்லாம் தலைவர், தமிழர் தலைவர், தமிழினக்காவலர், மற்றும் வழிவழி தலைமுறைத் தலைவர் என்றுதான் எழுதுகிறார். அவர் மேடைகளில் பேசும்பொழுதும் இந்த சொற்களையே பயன்படுத்தியிருக்கிறார்.

அடிகளாரால் தலைவர் என்று அழைக்கப்படும் பெரியார், "ஒரு மனிதன் காலில் மற்றொருவன் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு" என்று தன்வாழ்நாள் முழுதும் பரப்புரை செய்த பெரியார், அடிகளார் காலில் விழ வாய்ப்பு இருக்கிறதா என்று சில நொடிகள் சிந்தித்திருந்தாலே தெரிந்திருக்கும்! இது புரட்டர்களின் பொய் மூட்டை என்பது புரிந்திருக்கும்.அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்குமேயானால் சமகாலத்தில் வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர்கள் இன்றும் இருக்கிறார்கள். பெரியார் கொள்கை பிறழாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சொல்வார்கள்.
      
அடிகளாரைப்பற்றி இதோ பெரியார் எழுதுகிறார்.

"சைவர்கள் நெற்றியில் விபூதி பூசிக்கொள்வதுதான் பக்கதர்களின் இன்றியமையாத கடமை என்பார்கள். வைஷ்ணவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வதுதான் பக்கதர்களின் இன்றியமையாத கடமை என்பார்கள். பகுத்தறிவுவாதிகளோ இவ இரண்டையும் பார்ரத்து சிரிப்பார்கள். 
          
மனித சமுதாய நல்வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மதம் ஒரு முட்டுக்கட்டை என்று கருதுகிறவர்கள் பகுத்தறிவுவாதிகள். சிரிப்பதைப்பற்றி கவலைப்படாமல் தங்களால் முடிந்த அளவுக்கு பகுத்தறிவுவாதிகளை அனுசரித்து ஆதரித்து பயன்படுத்திக்கொள்வர்கள் சிலர். அக்குழுவில் சேர்ந்தவர்கள்தாம் நம் பணிவுக்கும் போற்றுதலுக்கும் உரிய குன்றக்குடி மகா சன்னிதானமாவார்கள்.
           
அதாவது சர்க்கஸ் வளையத்தில் சிங்கமும் ஆடும் எப்படி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து விளையாட்டுக்காட்டி ஒன்றை ஒன்று சுமக்கிறதோ, அது போலத்தான் ஒன்றுக்கொன்று பரிகாசம், வெறுப்பு, எதிர்ப்புக்கொள்ளக்கூடிய பகுத்தறிவும் மதமும் குலவுவதுமாகும்.
          
சிங்கத்துக்கும் ஆட்டுக்கும் ஒற்றுமைக்குக் காரணம் சர்க்கஸ் மாஸ்டரின் சவுக்கடிதான். அதுபோல மதமும் பகுத்தறிவும் ஒன்றுபட்டுக் குலவக்காரணம் மக்கள் நலமும் வளர்ச்சியும் தாம். ஆகவே இதில் ஒன்றும் அதிசயம் இல்லை."
 
இதுதான் அடிகளாரைப் பற்றிய பெரியாரின் கூற்று.

அய்யா அவர்களுக்கு இறுதிவரை உதவியாளராக உடன் இருந்து தியாகச்செம்மலாக விளங்கிய புலவர் இமயவரம்பன் அவர்கள் மறைந்துவிட்டார். இறுதிக்காலத்ததில் உடன் இருந்த மற்றொரு உதவியாளர் திருச்சி மகாலிங்கம் அவர்கள்.
             
       எனவே இது தொடர்பாக பெரியார் அவர்களின் உதவியாளரும் அந்த காலகட்டத்தில் உடன் இருந்தவருமான திருச்சி மகாலிங்கம் அவர்களிடம் தொடர்புகொண்டு "1967-68ல் இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறதே நீங்கள் பெரியாரின் அருகிலேயே இருந்தவர்.நீங்கள் இதற்கு விளக்கம் கூறவேண்டும்" என்று கேட்ட போது "இது விஷமத்தனம்.அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவே இல்லை" என உறுதிப்படுத்தினார். நீங்கள் கூறிய மறுப்பை அப்படியே கடிதமாக எழுதித்தாருங்கள். இணையதளத்திலும் பத்திரிகையிலும் வெளியிடுவோம். அதன் பிறகாவது, பொய்யர்கள் தங்கள் பொய்களை மூட்டை கட்டிக் கொள்ளட்டும் என்று கூறினேன்.

periyar_karunanidhi_veeramani_640

அய்யா மகாலிங்கம் அவர்கள் ஆர்வத்தோடு தன்கைப்பட கடிதம் எழுதி தந்தார்கள். அத்துடன் 1967/68ல் பெரியார் அவர்களோடு அவர் இருந்த புகைப்படங்கள் சிலவற்றையும் வாங்கிகொண்டேன். இனத்துரோகிகளின் முகத்திரையை கிழிக்க அவரது கடிதத்தையும் பெரியாருடன் மகாலிங்கம் அவர்கள் உள்ள புகைப்படங்களையும் குறியீடு செய்து வெளியிட்டுள்ளோம். தூங்குகிறவனை எழுப்பலாம். தூங்குபவனைப் போல் பாசாங்கு செய்பவனை........

mahalingam_letter_640

- கி.தளபதிராஜ்

Pin It