வரலாறு எழுதுதல் என்றுமே பொருள்கோடல் (interpretation) முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன. அரச பரம்பரைகளைப் பட்டியலிடுவது, பேரரசுப் பெருமைகளை விவரிப்பது என்று தொடங்கிய நவீன வரலாறு எழுதும் போக்கு, மார்க்சியத்தின் செல்வாக்கிலும் அதன் கூர்மைப்படுத்தப்பட்ட வரலாற்றெழுதியல் வடிவங்களில் சமூகப் பொருளாதார அமைவுகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் போராட்டங்களையும், விவரித்துச் செல்வதாக வளர்ச்சியுற்றது.

எத்தனை வடிவங்களில் வரலாறுகள் எழுதப்பட்டாலும், அவை பொருள்கோடல் முயற்சிகள் என்ற வரையறையை மீற முடியாதவையாகவே இருப்பதை உணர முடியும். அதே நேரம், பொருள்கோடல் முயற்சிகளான வரலாறுகள் அனைத்தும், நிகழ்கால அரசியல் நோக்கில் இருந்தே எழுதப்படுகின்றன என்ற நிதர்சனமான உண்மையும் உண்டு.

எந்த ஒரு தேசத்தின் வரலாறும், இவ்வாறு நிகழ்கால அரசியல் நோக்கில் இருந்து எழுதப்படுவதே. ஒடுக்கபட்டிருக்கும் ஒரு தேசிய இனம், தான் ஒடுக்கப்பட்டிருந்த வரலாற்றை எழுதுவது அதன் நிகழ்கால அரசியலான, விடுதலை வேட்கையிலிருந்தே இருக்கும். கல்விப் புலங்களில் இதற்கு தேசியவாத வரலாற்றெழுதியல் (nationalist historiography) என்று பெயர்.

roger_griffin_400இத்தகைய தேசியவாத வரலாற்றெழுதியல், அக்குறிப்பிட்ட தேசத்தின் பழம்பெரும் பொற்காலம், இருண்ட காலங்கள், புதிய எழுச்சி என்ற வரிசையில் ஒரு “கதை”யை (his – story) விவரித்துச் செல்வதாக இருக்கும். இவ்வாறு, ஒரு “கதை”யை விவரித்துச் செல்லும்போது, அதில் எந்த எந்த சம்பவங்களை எப்படி கோர்வையாக விளக்குகிறது, எந்த வகையான சம்வங்களை சொல்லாமல் தவிர்க்கிறது (ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை) என்பதில் அதன் நிகழ்கால அரசியல் நோக்கம் தெரிந்துவிடும்.

தேசியவாத வரலாற்றெழுதியல், அதன் நிகழ்கால அரசியல் நோக்கங்களில் இருந்தே எழுதப்படுவதாக இருந்தாலும் அது பருண்மையான தகவல்களை – கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள், இன்னபிற – ஆதாரமாகக் கொண்டே எழுதப்படுபவை. அத்தகைய சான்றுகளை அவை எவ்வாறு பொருள்கோடல் செய்கின்றன என்பதில் அதன் அரசியல் வெளிப்படும். அந்த அரசியலின் மிக முக்கியமான ஒரு அம்சமாக, அன்னிய ஆக்கிரமிப்பினால் விளைந்த கேடுகளின் விவரிப்பு இருக்கும்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறிய தொகையிலான ஒரு வரலாற்றெழுதியலும் உண்டு – அது பாசிஸ்டுகளின் வரலாற்றெழுதியல். தேசிய வரலாற்றெழுதியலைப் போன்றே பாசிச வரலாற்றெழுதியலும் அன்னிய ஆக்கிரமிப்பை விவரித்துச் செல்லும். ஆனால், தேசிய வரலாற்றெழுதியலில் இல்லாத ஒரு அம்சத்தை இணைத்துக் கொள்ளும்.

தேசத்திற்குள்ளாக, மிகப்பெரும் சுரண்டல் சக்தியாக, தேசத்திற்குள்ளாகவே இருந்து அதை அரிக்கும் ஒரு சக்தியாக, வெல்லமுடியாத அளவிற்கு பலம் பொருந்திய சக்தியாக, தேசத்திற்கு வெளியேயும் எங்கும் பரவி இருக்கும் சக்தியாக, ஒரு பிரிவு அல்லது கருத்தியலை அடையாளம் காட்டி, அதை ஒழிப்பதுவே தேசம் நலம் பெறுவதற்கான ஒரே வழி என்பதாக விவரிக்கும். எடுத்துக்காட்டாக, நாஜிக்கள் ஜெர்மன் தேசத்தை உள்ளிருந்தே அழிக்கும் நச்சுச் சக்தியாக, உலகெங்கும் பரவியிருக்கும் பெரும் பலம் பொருந்திய சக்தியாக யூதர்களை விவரித்து தமது அரசியலைக் கட்டியெழுப்பியதைக் குறிப்பிடலாம்.

இந்த விவரிப்பிற்காக, வரலாற்றைத் திரிக்கும். அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு எழுதப்படும் வரலாற்று முறைமையில் இருந்து விலகி, கற்பனையான தொன்மக்கதை (mythology) ஒன்றை வலிந்து கட்டி எழுப்பும். அதையே வரலாற்றுச் சம்பவங்களாக விவரித்துச் செல்லும்.

”நாம் தமிழர்” கட்சியினர் முன்வைத்திருக்கும் ஆவணம், இத்தகைய ஒரு பாசிச வரலாற்றெழுதியலின் அடிப்படையில் அமைந்த அரசியலை முன்மொழிந்திருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், தனது பாசிச நோக்கிலான அரசியலுக்கு உகந்த வகையில் வரலாற்றைத் திரித்து, தேசத்திற்கு உள்ளே இருந்தே அரித்துக் கொல்கிற, இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவியிருக்கிற ஒரு நச்சு சக்தியாக, ஒரு எதிரியை – கருத்தியலை,  வலிந்து கட்டமைத்து, அதை ஒழிப்பதன் மூலமே தமிழ்த் தேசம் வளம்பெற முடியும் என்ற கோட்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது.

நாம் தமிழரின் அரசியல் தேசிய அரசியல் அன்று; பாசிச அரசியல்.

அது எங்ஙனம் என்பதை விரிவாகக் காண்போம்.

 "நாம் தமிழர்" ஆவணம் சில அரசியல் முடிவுகளைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த அரசியல் முடிவுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாது, தொன்ம அடிப்படையில் மீள எழுதியிருக்கிறது. அத்தொன்ம வரலாற்றில் இருந்து, தமிழியம் என்ற ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறது. அக்கருத்தியலின் வழி தனது அரசியல் முடிவுகளுக்கு வலுவான நியாயங்களைக் கற்பிக்கிறது. ஆவணம் இயங்கும் முறை இது.

ஆனால், ஆவணத்தை வாசிப்பவர்களுக்கு இது புலப்படாமல் இருக்க, தொன்ம வரலாற்று விளக்கத்தில் இருந்து தொடங்கி, அரசியல் முடிவுகளுக்கு வந்து, அதற்கான விளக்கங்களையும் தரும் வகையில் ஆவணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்படையாகத் தெரியும் வடிவத்தைத் தவிர்த்து, மேலே விளக்கிய அதன் இயங்கு – கட்டமைவில் இருந்து ஆவணத்தை அணுகிப் பார்க்கலாம். "நாம் தமிழர்" கட்சி ஆவணம், தனது இலக்குகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறது:

இந்தியாவில், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநிலத்தவரே ஆளும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழர் ஆளமுடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதே உடனடி இலக்காகும்.

இந்திய ஒன்றிய இறையாண்மைக்கு உட்பட்ட முழுத் தன்னாட்சி உரிமைகொண்ட மாநிலங்களின் உண்மையான கூட்டாட்சி ஒன்றியத்தை நிறுவுதலே நாம் தமிழர் கட்சியின் அடுத்த திட்டமாகும். (பக்கம்: 30)

ஒரு தேர்தல் கட்சிக்கு உரிய, மிகவும் எளிமையான, நல்ல கோரிக்கைகள்தாம். வரவேற்கப்பட வேண்டியவைதாம். இவ்வளவு எளிமையான இலக்குகளை வைத்திருக்கும் ஓர் ஆவணத்தை பாசிசம் என்று குற்றம் சாட்டுவது தகுமா? இப்படி எளிமையான கோரிக்கையோடு நின்றிருந்தால் பிரச்சினையே இல்லை!

ஆனால், ஆவணம், முகப்பிலேயே வைத்திருக்கும் முழக்கங்கள் இவை: "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று! மாற்று அரசியல் புரட்சி!", "நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர்! புரட்சிவாதிகள்!"

இந்த இருமுழக்கங்களுக்கும் இவ்வளவு எளிமையான இலக்குகளுக்கும் பாசிசத்திற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வி எழலாம்.  “புரட்சி” என்பதன் பொருள் அறியாமல் பேசுகிறார்களோ என்று சந்தேகமும் இயல்பாக எழலாம்.

ஆனால், பிற்சேர்க்கையில் "ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்" பகுதியில் உள்ள தெளிவான விளக்கத்தில் இருந்து தொடங்கினால் விடயம் புரிய வரும்.

அது பின்வருமாறு:

புரட்சி என்பது,
தலைகீழ் மாற்றம்!
அடிப்படை மாற்றம்!
அமைப்பு மாற்றம்!
அரசியல் மாற்றம்! (பக்கம்: 51)

மிகத் தெளிவான புரிதல் இருப்பது தெளிவாகிறது.

மாநில ஆட்சியைப் பிடிக்கும் இலக்கு, உண்மையான இந்தியக் கூட்டாட்சியை உருவாக்கும் இலக்கு புரட்சிகர மாற்றம் இல்லை என்ற தெளிவுடனேயே ஆவணம் இயற்றப்பட்டிருக்கிறது. "தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு” என்ற பகுதியில், பக்கம் 23–ல் "அதிகாரமற்ற தமிழ்நாட்டு ஆட்சியைக்கூட ஆளும் உரிமையையும் இழந்ததாக” தமிழர் குமுகம் வீழ்ந்துபட்டிருப்பதாக ஆவணம் வெளிப்படுத்தும் ஆதங்கம் அத்தகைய தெளிவை வெளிக்காட்டி விடுகிறது.

அப்புறம் என்ன "தலைகீழ் மாற்றம்" செய்யத் துடிக்கிறது “நாம் தமிழர்” கட்சி!
அதையும் தெளிவாகவே கூறியிருக்கிறது ஆவணம்.

"ஆய்தப் புரட்சி அல்ல!
அறிவுப் புரட்சி!

கருவி ஏந்திய புரட்சி அல்ல!
கருத்துப் புரட்சி!”

"நாம் தமிழர்” கட்சி நிகழ்த்தப் போவதாகக் கூறும் புரட்சி கருத்துப் புரட்சி மட்டுமே! அத்தகையதொரு புரட்சியைச் செய்யப் போவதாலேயே அவர்கள் தம்மை ”அரசியல்வாதிகள் அல்லர் புரட்சிவாதிகள்” என்று முழு சுய உணர்வோடு முகப்பிலேயே அறிவிக்கிறது ஆவணம்.

அத்தகைய ”கருத்துப் புரட்சி” என்ன என்பதையும் ஆவணம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

கடந்த 80 வருடங்களாக, தமிழ் நாட்டில் ஆதிக்கத்தில் இருக்கும் திராவிடக் கருத்தியலை – அது சமூகத்தில் முற்போக்கான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது, பார்ப்பனியத்திற்கு அணைபோட்டிருக்கிறது என்று நிலவும் ஒருமுகமான கருத்தொருமிப்பை வீழ்த்தி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனியத்தைக் காட்டிலும் மோசமான சமூகச் சீரழிவை உருவாக்கியது திராவிடக் கருத்தியலே;

பார்ப்பனியமும் திராவிடக் கருத்தியலும் எதிரெதிரானவை என்ற கருத்தியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, 'இரண்டும் எதிரெதிரானவை அன்று, உடனொட்டிப் பிறந்தவையே' என்று ஒரு தலைகீழ் கருத்துப் புரட்சியைச் செய்வதே “நாம் தமிழர்” கட்சி ஆற்றவிருக்கும் கருத்துப் புரட்சி என்று ஆவணம் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறது.

”நாம் தமிழர்” ஆற்றவிருப்பதாக அவர்களது கட்சி ஆவணம் பறைசாற்றும் இந்தப் புரட்சியையே பாசிசம் என்று விளக்க விழைகிறேன்.

புரட்சி எப்படி பாசிசமாகும் என்ற கேள்வி உடனடியாக வாசிப்பவர் மனதில் எழக்கூடும்.

பாசிசம் குறித்த மரபான மார்க்சிய விளக்கங்கள், அதை ஒரு மிகப் பிற்போக்கான, மிக மோசமான, ஆபத்தான போக்காகவே வரையறுத்திருக்கின்றன. பாசிசம் மிகவும் பிற்போக்கான, ஆபத்தான போக்கு என்பது சரியே என்றாலும், அது நிலவும் சமூக அமைவில் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தவே முனைகிறது என்ற பொருளில், நிலவும் அனைத்தையும் புரட்டிப் போட முனைகிறது என்ற பொருளில் ஒரு “புரட்சிகரமான” அரசியல் போக்கே!

பாசிஸ்டுகளின் அகவயமான புரிதலும் தாம் புரட்சியாளர்கள் என்பதுவே!

"நாம் தமிழர்" கட்சியின் ஆவணம் அறிவித்திருப்பதைப் போன்று அக்கட்சி நிகழ்த்த முயற்சிப்பது ஒரு "பாசிசப் புரட்சி" யையே. இதை விளங்கிக் கொள்ள "பாசிசம்" என்பதை வரையறுத்துப் புரிந்து கொள்வது முதலில் அவசியம்..

ஒருபுறம், “தேசியம் என்றாலே பாசிசம்” “தேசியம் பாசிசக் கூறுகளை தன்னளவிலேயே உட்கொண்டிருக்கிறது” என்ற அறிவுப்புல ஆதாரம் அற்ற அபத்தமானக் குற்றச்சாட்டு;

இன்னொருபுறம், தேசியக் கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைத்துக் கொண்டு மிக ஆபத்தான பாசிசத்தை முன்வைக்கும் ஆபத்தான போக்கு.   

உருப்பெற்று வரும் தமிழ் தேசியத்தை ஒரு ஜனநாயகப் பூர்வமான நோக்கில் வளர்த்தெடுப்பதற்கு, இந்த இரு எதிர் முனைப் போக்குகளின் ஆபத்துக்களை உணர்ந்து கொள்வதும், பாசிசத்தை தேசியத்தில் இருந்து வித்தியாசப்படுத்தி தெளிவுபடுத்திப் புரிந்துகொள்வதும் இன்று மிக அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் கல்விப் புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆரோக்கியமான ஆய்வுகள், விவாதங்களின் ஊடாக பாசிசம் குறித்து ஒரு தெளிவான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்புகளை அளித்திருப்பவர், Roger Griffin என்ற பிரிட்டிஷ் கல்வியாளர். பாசிசம் குறித்து அவர் முன்வைக்கும் விரிவான கருத்துக்களுக்குள் புகுவது இங்கு சாத்தியமில்லை. அவர் முன்வைக்கும் மையமான வரையறுப்புகளை மட்டும் தற்சமயம் எடுத்துக் கொள்வது போதுமானது.

(தொடரும்)

Pin It