பெண் விடுதலை சார்ந்த மாற்று நோக்கிலான பயணங்களின் பல்வேறு படி நிலைகளில் முதல் படியாக, திருமணத்திற்கு முந்தைய பாலுறவை ஒரு குற்றச் செயலாகப் பார்க்காமல், அதைக் குற்றச் செயலாக நோக்கும் மதிப்பீட்டைத் தகர்த்து அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் ஒரு பக்குவத்தை, விழிப்புணர்வைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்.

இன்றுள்ள நவீன வாழ்க்கைமுறை, சுற்றுப்புறம், ஊடகங்களின் தாக்கம், ஆணும் பெண்ணும் சேர்ந்து கல்வி கற்கிற, பணியாற்றுகிற சூழல், இரு பாலருக்கும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்போடு உள்ளது.

இந்நிலையில் திருமணமாகாத ஒரு பெண்ணோ, ஆணோ தன் சக பாலினரிடம் விழிப்போடும் எச்சரிக்கையோடும் பழகவேண்டும். தங்கள் தங்கள் ஒழுக்க நெறிகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அவ்வாறே பழகும் பக்குவத்தில் சம்மந்தப்பட்ட இரு பாலினரும் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் எல்லாமும் சரிதான்.

ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், நேர்ந்த ஒரு வாய்ப்பில் இருவருக்கும் ஏதோ ஓர் உறவு ஏற்பட்டு விட்டதாக வைத்துக் கொள்வோம். அப்படி நேர்ந்துவிட்டால், அதை எளிமையாக எடுத்துக் கொண்டு, உதறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முயல வேண்டுமேயல்லாது அதை விட்டு, அதை ஏதோ பிரளயமே நிகழ்ந்துவிட்டது போல் இல்லாத ரகளையெல்லாம் செய்து அதைப் பெரிதுபடுத்தி ஒரு பெண்ணின் வாழ்வைப் பாழடிக்கக்கூடாது.

இதில் மறுபடியும் பெண்ணையே மையப்படுத்தி கூறுவதற்குக் காரணம் உண்டு. காரணம் ஒரு ஆண் தன் உணர்வு வெளிப்பாட்டிற்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு பெண்ணோடு உறவுகொண்டு அத்தோடு அவள் தொடர்பறுந்தது என்று விலகி விடலாம், விலகி விடுகிறான். ஆனால் அந்தப் பெண்ணோ அந்த உறவின் பலனை அனுபவிக்க வேண்டியவளாக இருக்கிறாள். இயற்கை அப்படிப்பட்ட ஒரு பொறுப்பை அவள் உடலில் சுமத்தியிருக்கிறது. எனவேதான் பெண் நலன், அவளது எதிர்காலம், மற்றும் மணவாழ்க்கை சார்ந்த நோக்கில் இச்சிக்கலை அணுக வேண்டி யிருக்கிறது. அந்த வகையில் இதன் விளைவுகள் குறித்துப் பார்ப்போம்.

முதலாவதாக திருமணத்திற்கு முந்தைய இந்தப் பாலுறவு எதேச்சையாக நிகழ்வதாகக் கொள்வோம். எதேச்சையாக நேரும் இந்த நிகழ்வு, யாருக்கும் எந்தப் பின் விளைவுகளையும், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ எதுவும் ஏற்படுத்தாமல் ஏதோ ஒரு கனவு போல நிகழ்ந்து மறையலாம். நிகழ்ந்து முடிந்ததும் இருவருமே அதை மறந்துபோய் அவரவர் தன் வேலையைப் பார்க்கலாம். இதில் ஒன்றும் பெரிய பிரச்சினை எழாது.

சிலநேரம் எதேச்சையான இந்நிகழ்வு, ஒரே சேர்க்கையில் பெண்ணிடம் உடல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தலாம். எச்சரிக்கையான பெண்ணாகவோ, பெற்றோர்களாகவோ இருந்தால், கருத்தடை சாதனங்கள் மூலம் மருந்து மாத்திரைகள் மூலம் சம்பவத்தின் பாதிப்புகளிலிருந்து மீளலாம். அல்லாது இந்த நிகழ்வு திட்டமிட்ட தொடர் நிகழ்வாக இருந்தால், இது என்ன கூடிக் கலையும் நோக்கோடு நடைபெறுகிறதா, அல்லது இணைந்து இல்லறம் நடத்தும் நோக்கோடு நடைபெறுகிறதா என்பது கேள்வி.

முதல்வகையானாலும், இரண்டாம் வகையானாலும் இதில் சம்மந்தப்பட்ட இருவருக்கும், இரு குடும்பத்தாருக்கும் ஏதும் பிரச்சினை இல்லை என்றால் இது பற்றிச் சமூகம் ஒன்றும் அதிகம் கவலைப்பட்டுக் கொள்ள வேண்டியதில்லை. காரணம் பல சிக்கல்களில் சம்மந்தப்பட்டவர்கள் சும்மாயிருந்தால்கூட சமூகம் என்கிற பெயரில் சுற்றியிருப்பவர்கள் பண்ணுகிற அமளியும், உண்டாக்குகிற ரகளையும்தான் பல குற்றச் செயல்களுக்குக் காரணமாகிறது.

யாரோ இரண்டு பேர், எங்கிருந்தோ வருகிறார்கள், போகிறார்கள், பழகுகிறார்கள் என்றால், நமக்கு இடையூறு இல்லாதவரை, நம்மீது விழுந்து பிடுங்காதவரை, அதனால் நமக்கொன்றும் பாதகம் இல்லை என்று அதைக் கண்டும் காணாது ஒதுங்கிப் போகிற பக்குவம் சமூக உறுப்பினர்களுக்கு வேண்டும். ஆனால் அதை விட்டு அது யார், எவர் என்கிற ஆராய்ச்சியில் இறங்கி அதை ஊதிப் பெரிதாக்கி, அது ஏதோ ஒரு சர்வதேச பிரச்சினை போல மிகைப்படுத்தி அதையே பேசிக் கொண்டிருப்பதுதான் வேண்டாம் என்று சொல்லத் தோன்றுகிறது.

சரி, முதல் வகையில் குறிப்பிட்டது போல் சும்மா இப்படிக் கூடிக் கலையும் நோக்கம் அல்லாது திருமண உறவை இலக்காக்கியே அவர்கள் பழகுவதாகக் கொள்வோம். அப்போது சாதி, பிற சமூகத் தகுநிலைகள் குறுக்கிடும். இதில் இரண்டு குடும்பமும் இணங்கிப் போய் சிக்கலில்லாமல் திருமணம் முடிப்பதும் நிகழும். அல்லாது ஏதாவது ஒரு குடும்பம், இதிலும் குறிப்பாகச் சாதி ரீதியாகவோ, சமூகத் தகுநிலை ரீதியிலோ மேல்நிலையில் உள்ள குடும்பம், இந்த உறவை ஏற்காது பிரிக்க முயலும் நடவடிக்கைகளும் நேரும். இதில் சேர்ந்து வாழவிடாமல் தடுப்பது, பிரித்து விடுவது என்கிற தீவிர முயற்சிகளில், அடிதடிகள் உருவாகி கொலைகளில் முடிவதும் உண்டு. இது பெரும்பாலும் வட மாநிலங்களில் சாதிப் புனிதம், குலப் புனிதம் காக்க என்கிற பெயர்களில் “கௌரவக் கொலைகளாக” நடத்தி முடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் அரிதாக இப்படிச் சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

இம்மாதிரி நிகழ்வுகளிலும், முதலில் பாதிக்கப்படுவது பெண்களே. இந்த உறவில் ஆணும் உறுதியோடு இருக்கும் பட்சத்தில் இருவருமே படுகொலைக்குள்ளாக்கப்படும் சம்பவங்களும் உண்டு. அப்படிப் பலது நடந்திருக்கிறது.

ஆக, இவை எல்லாவற்றின் சாரமும், திருமணத்திற்கு முந்தைய பாலுறவைச் சமூகம் அனுமதிக்காது, அனுமதிப்பதில்லை என்பதும், அப்படி ஏதாவது உறவு ஏற்படின், அது திருமணத்தை நோக்கியதா யிருப்பினும், தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் கட்டுத்திட்டங்கள், ஒழுக்க நெறிகள் ஆகியவற்றுக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே அதை அனு மதிப்போம். இல்லாவிட்டால் இருவரில் ஒருவரை அல்லது தேவைப்பட்டால் இருவரையுமே தீர்த்துக் கட்டுவோம் என்கிற வெறியோடு சமூகம் இருந்து வருகிறது என்பதும் தான் உண்மை.

இந்த இரண்டுக்கும் அப்பால் கட்டுப்பாடு என்கிற பெயரில் இன்னொன்றும் நடக்கும், நடக்கிறது. அதாவது, எந்தவித நோக்கமோ திட்டமோ இல்லாமல் சந்தர்ப்பச் சூழலால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பாலுறவில் ஈடுபட்ட, அல்லது அதைத் தொடர்கிற இருவரைக் கையும் களவுமாகப் பிடித்து அவர்களது விருப்பத்திற்கு மாறாக இருவருக்கும் மணமுடித்து வைப்பது என்கிற போக்கும் நிலவுகிறது.

அல்லது ஆண் விரும்பி பெண் விரும்பாத நிலையிலோ, அல்லது பெண் விரும்பி ஆண் விரும்பாத நிலையிலேயும் இது செய்து முடிக்கப்படுகிறது. இவை ஒரு நன்னோக்கில் செய்யப்படுவதாகச் சொல்லப் பட்டாலும் இது இரண்டுமே எந்த அளவுக்குச் சரி என்பது கேள்வியாகிறது.

இதில் காரியத்தை முடித்து விலக முயலும் ஆணைக் கட்டுப்படுத்தவும், அவனோடு தொடர்பு கொண்ட பெண்ணின் வாழ்வு பாதிக்கப்படாமலிருக்கவும் சில கட்டாயத் திருமணங்கள் செய்து முடிக்கப்படுகின்றன. முதலில் இருவருக்கும் இணக்கம் ஏற்பட இயலாவிட்டாலும் பிறகு காலப்போக்கில் அவர்கள் இணைந்து இனிதே குடும்பம் நடத்துவதோ, அல்லது பிரிந்து விடுவதோ நேர்கிறது என்றாலும் ஒரு நன்னோக்கில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்கிற வகையில் இது சரி.

ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணே விரும்பாத நிலையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எப்போதோ நேர்ந்த ஒரு விபத்து என்பது போல அவளே அவனிடமிருந்து விலகி சம்பந்தப்பட்டவனோடு மண உறவு வேண்டாம் என்று ஒதுங்கியபோதிலும், அதெல்லாம் முடியாது, முதலில் தொட்டவன் அவனே. எனவே, அவனேதான் மாப்பிள்ளையாக வேண்டும் என்று அவனுக்கே அவளைக் கட்டிப் போட முயல்வதும் நேர்கிறது. இதனால் பெண் தனக்கு விருப்பமில்லாதவனோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறாள்.

எனவே, இப்படிப்பட்ட சூழல்களைக் கருத்தில் கொண்டு, திருமணத்திற்கு முன்பான பாலுறவு நிகழ்வுகளைச் சமூகம் கீழ்க் கண்டுள்ள புரிதல்களோடு நோக்குவதும் அதற்குரிய மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதும் சரியாயிருக்கும் என்று தோன்றுகிறது.

1. முதிர் நிலை ஆணோ பெண்ணோ ஒருவருக்கொருவர் தன் சம்மதத்துடன் பழகுவதையோ பாலுறவு கொள்வதையோ, சமூகம் குற்றச் செயலாக நோக்க வேண்டியதில்லை.

2. மேற்குறித்த இருவரது நடவடிக்கையும், சமூக இயக்கத்திற்கு, சமூக ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கிறது என்கிற நிலை ஏற்படாதவரை சமூகம் அதில் குறுக்கிடவோ தலையிடவோ தேவையில்லை.

3. மேற்படி உறவு இருவர் விருப்பத்துடன் திருமணத்தில் போய் முடிவதானாலோ, அல்லது இருவர் விருப்பத்துடன் திருமணத்திற்கு உள்ளாகாமல் பிரிந்து போவதானாலோ எதுவானாலும் சமூகம் இதுபற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

4. இதில் இந்த இருவரில் யாராவது ஒருவர் ஏமாற்றப்படுவதாகவோ, வஞ்சிக்கப்படுவதாகவோ ஏதும் நேர்ந்தால் மட்டும், இதில் சம்பந்தப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வந்து புகார் தெரிவிப்பதானால் மட்டும் காவல்துறையோ, மற்ற சமூக நிறுவனங்களோ இதில் தலையிடலாம்.

5. இப்படிப்பட்ட தலையீடும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக, வாழ்வளிப்பதாக இருக்க வேண்டுமேயல்லாது, வாழ்வளிக்கிறேன் என்கிற பெயரில் தண்டனை அளிப்பதாக இருந்து விடக்கூடாது.

அதாவது எந்தச் சந்தர்ப்பத்திலுமே இதுபோன்ற நிகழ்வுகளில் பெண் மிக வசதி படைத்தவளாக, மேல்சாதியைச் சார்ந்தவளாக இல்லாத பட்சத்தில், பெரும்பாலும் ஆண் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை. பெண்ணே அதிகம் பாதிக்கப்படுகிறாள் என்பதால், அப்பெண்ணுக்குப் பாதிப்பு நேராமல் இருக்க ஆணை வற்புறுத்தி அவளுக்கு வாழ்வளிக்கத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப்படுத்தலாம். செய்தும் வைக்கலாம். ஆனால் பெண் விரும்பாமல் எந்தத் திருமணத்தையும் செய்து கொள்ளச் சொல்லி அவளைக் கட்டாயப்படுத்தக் கூடாது. செய்து வைக்கவும் முயலக்கூடாது.

காரணம், இதுபோன்ற திருமணங்களில் ஒடுக்கப்பட்ட உயிரி என்கிற வகையில் பெண்ணின் நிலையே முக்கியமே தவிர ஆணின் நிலை அல்ல. காரணம் ஒரு பெண்ணை ஆசை வார்த்தை கூறி அவளோடு உடலுறவு கொண்டு தப்பிக்க முயலும் ஒரு ஆணை அந்தப் பெண்ணுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்துவது வேறு. காரணம், இதில் அந்த ஆணை விட்டால், அவளுக்கு வாழ்வளிக்க வேறு ஆண் கிடைப்பது அரிது.

ஆனால் பெண் நிலை அப்படியல்ல. பெரும்பாலும் எந்தப் பெண்ணும், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் என்று எந்த ஆணையும் ஏமாற்றி உடலுறவு கொண்டு, பிறகு அவனைக் கைவிட்டுப் போவதாகப் பொதுப் போக்கு இல்லை. அப்படியே அரிதாக ஏதும் நிகழ்வதானாலும், விருப்பமில்லாத பெண்ணைக் கட்டாய மணமுடிப்பு செய்தாலும் வாழ்க்கை நிம்மதியாயிருக்காது. தவிர, இந்தப் பெண்ணை விட்டால் அந்த ஆணுக்கு வேறு எந்தப் பெண்ணும் கிடைக்க மாட்டாள் என்கிற நிலையும் இல்லை.

அரிதிலும் அரிதான சில சிக்கல்களில் அப்படி ஏதும் நேர்ந்தால் அதன் கதை தனி. ஆகவே இந்த நோக்கில் அதை விடுத்து ஒரு பொதுப்போக்கு என்கிற வகையில் சமூகம் திருமணத்திற்கு முன்பான பாலுறவில் இதுபோன்ற அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்க பக்குவம் பெறவேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இப்போதும் முதிர் வயது ஆணோ பெண்ணோ தங்களுக்குள் தன் விருப்பத்துடனும் சம்மதத்துடனும் சேர்ந்து வாழ, உடலுறவு கொள்ள சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆனால் சமூகம்தான் அதை ஏற்க மறுக்கிறது. அதைக் குற்றச் செயலாகக் கருதுகிறது.

இன்றுள்ள வாழ்க்கைச் சூழலில் பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள், குறிப்பாக ஆயத்த ஆடை, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் இருபாலரும் சேர்ந்து இயங்கும் வாய்ப்பு மலிந்துள்ள நிலையில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் இயல்பானவை, தவிர்க்க இயலாதவை என்கிற புரிதல்களோடு இவ்வுறவு சார்ந்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, இதைச் சமூகம் எப்படி எதிர்கொள்வது என சிந்தித்து அதற்கான மாற்று வழிகளையும் மதிப்பீடுகளையும் தேடுவதுதான் பொறுப்புள்ள சமூகத்தின் பணியாயிருக்க முடியுமே அல்லாது இன்னமும் பழைய பத்தாம் பசலித்தனமான கட்டுத்திட்டங்களையும் மதிப்பீடுகளையும் வைத்துக் கொண்டு இந்தச் சிக்கலை எதிர்கொள்ள முடியாது என்பதை சமூகம் உணரவேண்டும்.

இவ்வாறு திருமணத்திற்கு முந்தைய பாலுறவைக் குற்றச் செயலாகப் பார்க்கும் மனோபாவத்திலிருந்தும் மதிப்பீட்டிலிருந்தும் சமூகம் விடுபட வேண்டும்.

Pin It