புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!! என்றால் என்ன?

முதலாவது:- வெகுநாளாய் மறைந்திருந்த சித்திரபுத்திரன் திடீரென்று தோன்றியது ஒரு புதுமை.

இரண்டாவது:- சித்திரபுத்திரன் வெளியிடப் போகும் சேதி ஒரு புதுமை.

மூன்றாவது:- வேடிக்கை புதுமை என்ன வென்றால்,

தோழர்களே! கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மகாமக விசேஷத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது.

தேசத்தில் பஞ்சம்! பஞ்சம்!! பணப்பஞ்சம்!!! நில்லு நில்லு யாருக்கு பஞ்சம்?

சோற்றுக்கு இருந்தால் மாத்திரம் போதாது. நாடகத்துக்கு பணம் வேண்டாமா? குடிக்கிறதுக்கு பணம் வேண்டாமா? கூத்தியாளுக்கு பணம் வேண்டாமா? மோட்டாருக்கு பணம் வேண்டாமா? இந்த இழவுகள் எல்லாம் எப்படியோ போகட்டும் என்றால் எலக்ஷனுக்காவது பணம் வேண்டாமா? நில்லு நில்லு ஒரு சங்கதி என்னவென்றால் எலக்ஷனுக்கு பணம் என்னத்துக்கு? செலவு செய்த பணம் மெம்பர்-பிரசிடெண்ட் உத்தியோகம் கிடைத்த வுடன் சம்பாதித்து ஆன செலவும் போக மீதியும் ஏற்படுமே அதை ஏன் இதில் சேர்க்கிறாய் என்று கேட்பீர்கள். அது சரியான கேள்வியாகாது. ஏனெனில் தோற்றுப் போகிறவர்களுக்கும் செலவாகும். பிரசிடென்ட் போட்டி சேர்மன் இல்லாவிட்டால் மெம்பர்களுக்குப் பணம் கிடையாது. மற்றும் பல காரணத்தாலும் எலக்ஷன் செலவு உண்டு. சிநேகிதனுக்காக என்று எத்தனை பேர் “இதாவது ஒரு வேலை கிடைத்ததே” என்று வீட்டுப் பணத்தை பாழாக்குகிறவர்கள் எவ்வளவு பேர்? ஆகவே பல வழிகளிலும் மிராசுதார்களுக்கு பணம் வேண்டியிருக்கிறது. கல்யாணத்தை வேண்டுமானாலும் பணத்துக்காக கொஞ்சநாள் தாமதிக்கலாம், இழவுக்கு ஒரு நாளாவது பொருக்க முடியுமா? ஆகையால் அதற்கும் வேண்டியிருக்கிறது.periyar 90sபோதாக் குறைக்கு சர்க்காரும் சுயமரியாதைக்காரன் பேச்சைக் கேட்டுக்கொண்டு திரிகின்றது. நில்லு நில்லு. சந்தடி சாக்கில் இதென்ன புது சங்கதி? என்று கேட்கலாம். விசேஷம் ஒன்றும் இல்லை. தஞ்சாவூர் மிராசு தாரர்கள் மேற்கண்ட செலவை யெல்லாம் உத்தேசித்து நெல்லு கலம் 0-14-0 அணா ஆகிவிட்டதால் சர்க்காருக்குக் கிஸ்தி கட்ட பணமில்லை என்று கருதி “மிராசுதார் கூட்டம் போட்டு” “தீர்மானம் நிறைவேற்றி” கிஸ்து குறைக்க வேண்டும்; வசூலுக்கு வாய்தா கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள். இதைக் கண்ட சுயமரியாதைக்காரன் பிச்சை போடா விட்டாலும் நாயை இஸ்கே படுத்தி விடாமலாவது இல்லாமல் “என்னத்துக்காக வரி தள்ள வேண்டும். குடிக்கும் கூத்திக்கும் வைதீகத்திற்கும் செலவுக்குப் பணம் இல்லாவிட்டால் அதற்கு சர்க்காரார் பொருப்பாளியா? கண்டிப்பாய் யாருக்கு வரி குறைத்தாலும் தஞ்சாவூருக்கு மாத்திரம் வரி குறைக்கக்கூடாது” என்று சர்க்காருக்கு கம்பி இல்லாத தந்தி பேசி கடைசியில் “கூட்டமும்” “தீர்மானமும்” குப்பைத் தொட்டியில் போடும்படி செய்து விட்டார்களே. இந்த சு.ம.காரருடைய நன்றி கெட்டத்தனம் எவ்வளவு என்று பாருங்கள்.

சு.ம. வுக்கு வேலை செய்கிற வெட்டி ஆள்கள் எல்லாம் தஞ்சாவூர் ஜில்லாக்காரர். இதனால் வெகுகுடும்பம் கெட்டுப்போய் வெகு பேர்கள் சோம்பேரிகளாகி விட்டார்கள். சு.ம. காரனை வண்டியில் வைத்து முதல் முதல் இழுத்தவர்கள் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள். தஞ்சாவூர் ஜில்லாக்காரர் தான் 6 குதிரை கட்டி இழுத்தவர்கள். தஞ்சாவூர் ஜில்லாகாரர்தான் சு.ம. காரன் வீட்டு சுவற்றில் ஒரு சதுர அடி சுவறுகூட கண்ணுக்குத் தெரிய மார்க்கமில்லாமல் வீட்டுக்கார அம்மாள் கோபப்பட கோபப்பட சுவரெல்லாம் ஆணி அடித்து மாட்டி இருக்கும் “உபசாரப் பத்திரம்” எல்லாம் முக்கால் வாசி முனிசிபாலிட்டி உள்பட தஞ்சாவூர் ஜில்லாக்காரருடையது தான், இன்னும் என்ன என்னமோ இவ்வளவும் இருக்க தஞ்சாவூருக்கு வரி குறைக்க வேண்டாம் என்றால் இது எவ்வளவு நன்றிகெட்ட தனம் - உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் தனம் என்று பலர் கேள்கக்கூடும். இதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.

இது எப்படியோ இருக்கட்டும் எடுத்த சங்கதியை விட்டு விட்டு சித்திர புத்திரன் எங்கெங்கோ வாய் வைத்து விட்டான் என்ற இலக்கணப் பிழை ஏற்படாமல் பழைய சங்கதிக்குப் போகலாம்.

ஆகவே இப்படிப் பட்ட பஞ்ச காலத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது. என்ன அநியாயம்! என்ன அநியாயம்!! என்ன அநியாயம்!!! மனதில் நினைக்கவே பயமாய் இருக்கிறது, வாயில் பேசவே பயமாய் இருக்கிறது. எப்படிதான் உலகமறிய கையில் எழுதுவது என்று தோன்றுகின்றது. ஆனாலும் புதுமையை வெளிப்படுத்தாத பத்திரிகை இருந்தென்ன? செத்தென்ன? இந்த நல்ல புதுமையை வெளியிடாத சித்திர புத்திரன் இருந்தென்ன அந்தமானுக்கு போயென்ன? ஆகையால் போவதற்குள் அதை வெளியிட்டு விட்டு போய்விடலாம் என்று துணிந்து சொல்லத் துணிகின்றேன்.

அதாவது விபசாரத்தனம் என்றால் இத்தனை காலம் பெண்களுக்கு மாத்திரந்தான் சொந்தமாய் இருந்தது. இப்போது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு அது ஆண்களுக்கும் சொந்தமாய் விட்டது. எப்படி என்றால் சு. ம. காரன் பெண்களை காப்பாற்றப் போவதாய்ச் சொல்லி “விபசார தோஷம் பெண்களுக்கு மாத்திரம் தான் சொந்தமோ ஆண்களுக்கும் அது. ஏன் சொந்தமாய் இருக்கக்கூடாது” என்று பேசிப் பேசி சும்மா கிடந்த ஆண்களைத் தூண்டிவிட்டு கொஞ்சங் கொஞ்சமாய் ஆண்களையும் விபசார தோஷத்துக்கு ஆளாகும்படி செய்து விட்டார்கள். அது இப்போது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, செருப்பைக் கடித்து கடைசியில் வேட்டை நாய் ஆனது” போல் ஆண்கள் விபசாரித்தனமானது பெண்கள் விபசாரித்தனம் போலவே அதாவது திருட்டுத்தனமாய்ச் செய்து வெளிப்படையாய் செய்து, வீட்டை விட்டுக் கிளம்பி கூத்தியாளாகி விலை மாதாகிச் சந்து பொந்து குச்சுக்காரியாகி, கடைசியாக உற்சவத்தில் வியாபாரம் நடத்தும் குச்சுக்காரி என்கின்ற நிலைமைக்கு எப்படி வந்துவிட்டதோ அது போலவே ஆண்களும் விபசாரனாகி மாமாங்க உற்சவத்தில் சில அறைகள் வாடகைக்கு வாங்கிக் கொண்டு பணத்துக்காக பெண்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விபசாரத்தனம் செய்வது என்கின்ற துணிவின் மீது இப்போதே பலர் கும்பகோணம் வந்து இறங்கி விட்டார்கள். அதற்காக சில வீடும் பிடித்துக் கொண்டார்கள். இவர்களுக்கு தரகர்களாக சில பெண்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உற்சவத்திற்கு பெண் விபசாரிகளுக்கு தரகர்களாய் இருக்கும் ஆண் தரகர்கள் மற்ற ஆண்களிடம் எப்படி வந்து, சார் கொஞ்சம் பொடி கொடுக்கிறீர்களா என்று கூப்பிட்டு, இந்த கடுக்கன் எங்கு வாங்கினீர்கள்! இந்த மோதிரம் எங்கு வாங்கினீர்கள் ஜில்ல்ல்லென்று ஜொலிக்கின்றதே என்று ஆரம்பித்து மெள்ள மெள்ள சங்கதி ஆரம்பிப்பது போலவே சில பெண் தரகர்களும் உற்சவத்திற்கு வந்த பெரிய இடத்து பெண்களிடம் சென்று அம்மா கொஞ்சம் சுண்ணாம்பு கொடுக்கின்றீர்களா? என்று ஆரம்பித்து இந்த கம்மல் எங்கு வாங்கினீர்கள்? இந்த புடவை எங்கு வாங்கினீர்கள் என்று பேசி மெள்ள மெள்ள சங்கதிகள் பேசத் தர்ப்பித்து செய்து கூட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.

இதற்காக நகைகள், உடுப்புகள் சென்னை எஸ். எஸ். ஆனந்தம் கம்பெனியிலும், திருச்சி சிங்காரம் கம்பெனியிலும், சென்னை அருணகிரி கம்பெனியிலும் பலவித மருந்துகள் வாங்கிக்கொண்டு, நில்லு நில்லு இதென் னையா புதுமையிலும் புதுமை விபசாரத்தில் பணம் சம்பாதிக்க போகிறவனுக்கு மருந்தென்ன என்று கேள்க்கலாம். விபசாரத்தில் பெண்க ளுடன் ஆண்கள் போட்டிபோட முடியாது. ஏனென்றால் அது கடவுளே பெண்களிடம் கருணை வைத்து அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் விபசாரம் செய்யப்பட இடம் கொடுத்து விட்டான். ஆண்கள் மீது கோபப்பட்டோ அல்லது பொறாமைப்பட்டோ வரையறை ஏற்படுத்தி விட்டான். இந்த வைத்தியர்கள் கடவுளோடு போட்டி போடத்துணிந்து இப்போது என்ன என்னமோ மருந்துகள் செய்திருக்கிறார்களல்லவா. ஆதலால் இந்த மருந்துகளையும் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். இதனால் பெண்கள் விபசாரித்தனத்துக்கு ஆண்கள் கொடுக்க வேண்டிய சார்ஜைவிட ஆண்கள் விபசாரத்திற்கு பெண்கள் கொடுக்க வேண்டிய சார்ஜ் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். ஏனென்றால் மருந்துக்கு பணம் வேண்டியிருக்குமல்லவா? ஆதலால் கும்பகோண மாமாங்கத்துக்கு போகின்ற ஆண்கள் ஷோக் பேர் வழிகள் குடும்ப சகிதமாய் போவதானால் நில்லு! நில்லு!! போவதானால் என்பதென்ன போய்த்தானே ஆக வேண்டும். ஏனென்றால் மகாமக புராணம் படித்தால் அந்த சங்கதி தெரியும். மாமாங்கக் குளத்தில் குளிக்கும் போது பெண்ஜாதியும் புருஷனுமாய் குளித்தால் தான் புண்ணியம். இல்லாவிட்டால் புண்ணியமும் போய் பாபமும் ஏற்படுவதல்லாமல் செலவு பண்ணின காசும் வீணாய் விடும். ஆதலால் சம்சாரத்துடனேயே போயாக வேண்டும். இப்படிப் பட்ட மற்ற செலவும் இரட்டிப்பாய் விடும். இந்த பஞ்ச காலத்தில் சர்க்காரர் வரி குறைக்காத காலத்தில் மிராசுதாரர்கள், பிரபுக்கள், ஜமீன்தாரர்கள், மற்ற செல்வவான்கள் மாமாங்கம் போவதென்றால் இந்தப் புதிய வியாபாரத்தில் நிலைமை கஷ்டமாக ஏற்பட்டு விட்டது.

நிற்க, இந்த மாதிரி ஆண்களும் விபசார வியாபாரம் செய்வது என்பது மேல் நாட்டில்தான் வழக்கத்திலிருப்பதாய் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் நமது நாட்டில் சில ஆண்கள் இந்த மகாமக புண்ணிய காலத்தை உத்தேசித்து வயிற்றுக்கொடுமைக்காக பணம் சம்பாதிக்க இந்த மாதிரி ஒரு வழி கண்டு பிடித்து உற்சவத்தின் போது கடை போட்டிருக்கிறார்கள் என்றால் இது புதுமை அல்லவா?

இந்த மாதிரி ஆண்கள் விபசாரக் கடைகள் மற்ற புண்ணிய nக்ஷத்திரங்களுக்கும் போகும் போல் தோன்றுகின்றது. ஆதலால் சென்னை மாகாண விபசாரச் சட்டத்தில் விபசாரம் என்பதற்கு வியாக்கியானம் செய்யும் போது “பெண்ணாயிருந்தாலும், ஆணாயிருந்தாலும் பணத்துக்காக விபசாரத்தனம் செய்தால்” என்று ஒரு திருத்தம் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் இந்த மாதிரி “புண்ணிய nக்ஷத்திரங்கள்” என்றுதான் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட சட்டம் செய்தாலும் புண்ணிய nக்ஷத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் ஒழிந்தா லல்லது விபசாரத்தை நிறுத்தி விடலாம் என்று நினைத்து சட்டம் செய்வது சட்டசபை அங்கத்தினர்களின் முட்டாள்தனம் என்றுதான் சொல்லுவேன். இந்தப் புதுமை இதற்கு முன்னும் இரண்டொரு புண்ணியnக்ஷத்திரங்களில் இருந்து வந்திருக்கின்றது. அது எங்கே என்றால் பிள்ளைவரத்துக்காக என்று செல்லும் nக்ஷத்திரங்கள் சிலவற்றில் ஆண் விபசாரகர்கள் சிலர் இருந்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஆனால் அது மத சம்பந்தமான கணக்கில் தாக்கலாய் வந்ததால் அதைப் பற்றிய விளம்பரம் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்களுடைய குஷாலையும் சௌகரியத்தையும் எதிர்பார்த்து வயிற்றுக் கொடுமைக்காக பெண்கள் நடத்துவதுபோல் பெண்களுடைய குஷாலையும் சௌகரியத்தையும் ஆண்களின் வயிற்றுக் கொடுமையையும் உத்தேசித்து வியாபார முறையில் ஆண்கள் இந்த விபசாரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த புது வியாபார முறையானது இந்த மகா புண்ணிய ஸ்தலமாகிய கும்பகோண nக்ஷத்திரத்தில் அதுவும் மகா புண்ணிய காலமான 12 வருடத்திற்கு ஒரு தடவை வரும் மகாமகபுண்ணிய காலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருப்பதால் எல்லாம் வல்ல விசாலாட்சி சமேத விஸ்வநாத ஸ்வாமிகள் இதை என்றும் நிலைபெறவும், எங்கும் பரவவும் அருள் புரிவாராக.

“எவ்வளவு தான் தெய்வத் தன்மை இருந்த போதிலும் (தெய்வத்தாலாவ தெனினும்) மனுஷ எத்தனமும் இருந்தாக வேண்டும்” என்பது போல் மகாமகத்துக்கு வரும் சதிபதிகள் ஒருவரைப்போல் ஒருவர் ஆண்களைப் போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற முறையில் இந்தப் புதுத்தொழிலை ஆதரிப்பார்களாக. பாவமோ புண்ணியமோ தோஷமோ விசேஷமோ எல்லாம் ஆண்களைப் போலவே தானே ஒழிய பெண்களுக்கு என்று வேறு வித மாறுதல் இல்லை. இருந்தாலும் மகாமகத் தீர்த்த ஸ்நானத்தின் பயனாய் சர்வ தோஷமும் பாவமும் பரந்து போகும். ஆகையால் கவனிக்க கவனிக்க தயவு செய்து கவனிக்கக் கோறுகிறேன்.

(' சித்திரபுத்திரன்' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 12.02.1933)

Pin It