முந்தைய தி.மு.க. அரசு செய்த உருப்படியான ஒன்றிரண்டு சாதனைகளுள் ஒன்று சமச்சீர்க் கல்வி. தமிழ்நாட்டில் ஏழை மாணவனுக்கு ஒரு விதமான கல்வி; பணக்கார மாணவனுக்கு வேறு விதமான கல்வி என்றிருக்கும் நிலை மாறுவதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவான சமச்சீர்க் கல்வி, தனியார் கல்வியை மையப்படுத்தி உருவாகியிருந்த அதிகார மையங்களை எரிச்சலைடைய வைத்தது.

தற்போதைய அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அந்த மையங்கள் தெளிவாகக் காய் நகர்த்தி அரசு உதவியுடன் சமச்சீர்க் கல்விக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றன. ஆனால் நீதியும் எப்போதாவது வெல்லும் என்பது போல அவர்களுடைய முயற்சிகளை நீதிமன்றம் தகர்த்தெறிந்தது. சமச்சீர்க் கல்வி தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அவ்வாறு பெற்ற நீதி இன்று இருளில் தடுமாறுகிறது.

மின் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் சென்னை தவிர பிற பகுதிகளில் நாள்தோறும் ஏறத்தாழ பதினோரு மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. புண்ணியம் செய்த சென்னைவாசிகளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு. சில நாட்களுக்கு முன்னால் இது இரண்டு மணிநேரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மற்ற பகுதிகளில் இருந்த எட்டு மணிநேர மின்வெட்டு நான்கு மணிநேரமாகக் குறைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஆனால் அவர் அறிவித்ததற்கு மாறாக தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் எட்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு, பத்து முதல் பனிரெண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டினால் உற்பத்தி பாதிக்கப்பட்டு சிறுதொழில் நிறுவனங்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். இவற்றுக்கு இணையாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மாணவர்களின் கல்வி.

தனியார் பள்ளிகளிலும் பொதுப்பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கல்வி எனும் கனவை நிறைவேற்றிய சமச்சீர்க்கல்வியின் நோக்கம் இன்று தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டுள்ளது. பள்ளியிறுதியாண்டுத் தேர்வுகள் (பிளஸ் டூ) நடந்த போதும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. தேர்வு மையங்களுக்கு மட்டும் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டது. ஆனால் தேர்வுக்கு முன்னர் மாணவர்கள் படிப்பதற்கு மின்சாரம்? இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

மின்வெட்டினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டிப்பாக ஏழை மாணவர்கள்தான். வசதிபடைத்த மாணவர்களுக்கு இது ஒரு சிக்கலேயில்லை. அவர்கள் ஜெனரேட்டர், யு.பி.எஸ்., இன்வெர்ட்டர் போன்ற உபகரணங்களின் உதவியுடன் தங்குதடையின்றி படித்துத் தேர்வு எழுத முடிகிறது. ஆனால் ஏழை மாணவர்கள் அமைதியாகப் படிப்பதற்கேற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.

முன்பு ஒரு காலத்தில் வீட்டில் மின் விளக்கு இல்லாமல் தெரு விளக்கில் படித்து உயர்ந்த நிலையை அடைந்ததாகப் பெருமிதத்துடன் பலர் கூறுவர். ஆனால் தற்போதைய மாணவர்களுக்கு அந்த வாய்ப்பும்கூட இல்லை. தெருக்கள் இருண்டு கிடக்கின்றன. மின்சார விளக்கு கொஞ்ச நேரம், மெழுகுவர்த்தி கொஞ்ச நேரம் என்று மாறி மாறிப் படிப்பதால் ஏழை மாணவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி படிப்பில் கவனம் சிதறி, படிக்கும் செயல் மீதே வெறுப்பு அடைகின்றனர்.

இந்தப் பாதிப்புகள் அனைத்தும் தேர்வு முடிவுகளில் வெளிப்படும். ஏழை மாணவர்களை விட வசதி படைத்த மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் பொதுப்பாடத்திட்டம் எனும் நிலை இருந்தும் கூட, பணக்கார மாணவர்களுக்கும் ஏழை மாணவர்களுக்கும் இடையிலான போட்டி சம வாய்ப்பை அளிப்பதாக இல்லாமற் போகிறது. சமச்சீர்க் கல்வியால் எரிச்சலடைந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியளிக்கும் செய்திதான்.

ஏழை, பணக்கார மாணவர் எனும் இடைவெளி போதாதென்று மற்றொரு இடைவெளியையும் தமிழ்நாட்டின் மின் வினியோகக் குறைபாடு உருவாக்கியுள்ளது. சென்னை மாணவர்கள், மற்ற பகுதி மாணவர்கள் எனும் வேறுபாடுதான் அது.

சென்னையில் இரண்டு மணி நேரம் மட்டுமே மின்தடை இருப்பதால் அங்குள்ள மாணவர்கள் (அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் கூட) சிக்கலின்றி தேர்வுக்குப் படிக்க முடிகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதி மாணவர்களுக்கு மட்டுமே படிக்க முடியாத நிலை தொடர்கிறது. இதுவும் தேர்வு முடிவுகளை நிச்சயம் பாதிக்கும். சென்னை தவிர்த்த தமிழ்நாட்டின் மற்ற பகுதியைச் சேர்ந்த வசதியற்ற மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் சாதிக்க முடியாமல் போனால் அதற்கு யார் பொறுப்பு? என்ன செய்யப் போகிறது அரசு?

Pin It