27/3/2012 கோவை மேட்டுப்பாளையம் சாலையில் தொப்பம்பட்டிப்பிரிவு என்ற இடத்தின் அருகில் மாற்றுத்திறனாளியான நான் ஓட்டி வந்த மகிழுந்தை மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகிழுந்து (எண் KA 09 Z 8720) மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நான் சில நிமிடங்களில் காவல்துறைக்கு வண்டி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அளித்து அந்த வண்டியை நிறுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அப்பொழுது நேரம் மதியம் இரண்டு மணி. சுமார் நான்கு மணி அளவில் வாகனத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினார்கள். அப்பொழுதுதான் எனக்குப் பொறி தட்டியது. என்னால் யார் மேலும் எவ்விதமான குற்றச்சாட்டும் பதிவு செய்ய இயலாது. அப்படிப் பதிவு செய்தால் அது எனக்கு எதிராகவே இருக்கும். ஏனென்றால் மகிழுந்து ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் எனக்கு வழங்கப்படவே இல்லை. கடந்த ஜூலை 10, 2011 அன்று தானியங்கித் தொழில் நுட்பமுடைய ( Auto Transmission Vehicle)  ஒரு மகிழுந்தை வாங்கினேன். (எண் TN 38 BH 9241) எனது இடது கால் கடுமையான ஊனத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வலது கால் சற்று நல்ல நிலையில் இருப்பதினால் என்னால் அந்த வண்டியை எளிதாக இயக்க முடிந்தது. எவ்விதமான பிரச்சனைகளும் இன்றி இரண்டு நாட்களில் வண்டியை சுலபமாக ஓட்டக் கற்றுக் கொண்டேன்.

எனது வாகனத்தை ஓட்டிப் பழகுவதற்காக பழகுநர் உரிமம் கோரி கோயம்புத்தூர் வடக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களை சென்று பார்த்தேன். அவர் சாலை ஆய்வாளரைச் சென்று பார்க்கச் சொன்னார். அவரிடம் சென்று விபரத்தைச் சொல்லி வாகனத்தை இயக்கியும் காட்டினேன். அவரும் அந்த வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டு மிகவும் அருமையான வாகனம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வாகனம் என்று கூறி மிகுந்த திருப்தியுடன் நாளை வாருங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் கூறி பழகுநர் உரிமம் பெற்றுத் தருகிறேன் என்று கூறினார். ஆனால் மறுநாள் எனது ஊனத்தை காரணமாகக் கூறி உங்களுக்கு உரிமம் தர இயலாது என்று கூறி மறுத்துவிட்டார். மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களைச் சந்தித்து முறையிட்டேன். அவர் மீண்டும் சாலை ஆய்வாளரைச் சென்று பார்க்கச் சொன்னார். மீண்டும் மூத்த சாலை ஆய்வாளரைச் சென்று சந்தித்தேன். அவர் மருத்துவச் சான்றிதழ் வாங்கி வரும்படிப் பணித்தார். அரசுப் பொது மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்து வாகனத்தை இயக்கிக் காட்டி சான்றிதழ் பெற்று வந்தேன்.

மருத்துவச் சான்றிதழைப் பார்த்துவிட்டு மூத்த சாலை ஆய்வாளர் இந்த மருத்துவச் சான்றிதழ் மருத்துவக் குழுவினரால் (Medical Board) வழங்கப்படவில்லை என்று கூறினார். நான் வாங்கியிருக்கும் மருத்துவச் சான்றிதழ் சரியானதுதான் என்று கூறி புதிய அரசாணையின் நகலை அளித்தேன். (G.O. Ms.No.21 Welfare of Differently Abled Persons (DAP2.2)17th June 2011) இவ்வரசாணையின் படி மருத்துவச் சான்றிதழ் சிறப்பு மருத்துவரிடம் இருந்து பெற்றாலே போதுமானது, மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறினேன். இல்லை இந்தப் புதிய அரசாணை எங்களது துறைக்குச் செல்லாது என்று கூறி எனது கோரிக்கையை நிராகரித்தார். கடந்த மூன்று மாதங்களாக ஆறு முறை வட்டாரப் போக்குவரத்து அலுவலத்திற்கு அலைந்தும் எனக்குப் பழகுநர் உரிமம் வழங்ககப்படவில்லை. அனைத்து சான்றிதழ்களும் சரியாக இருந்தும் எனக்கு உரிமம் வழங்கப்படவில்லை.

மீண்டும் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகி மருத்துவக் குழுவின் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கச் சென்றேன். ஆனால் அவர்கள் எனது விண்ணப்பத்தை ஏற்கவில்லை. நீங்கள் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் உங்களது விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்று வாருங்கள் என்று கூறினார்கள். மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுலவலர் அவர்களை அணுகினேன். அவ்வாறான கையொப்பம் எதையும் இட்டு மருத்துவக் குழுவிற்கு பரிந்துரைக்க இயலாது என்று கூறிவிட்டார். இவ்வாறாக எனக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் தாமதம் செய்கின்றனர் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு நீதி நாளில் சென்று மனு அளித்தேன். அவரும் ஆவன செய்வதாகக் கூறினார். ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயலர் திருமதி.கண்ணகி பாக்கியநாதன் அவர்களுக்கு எனது நிலமையை மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்தேன். ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை.

1. மோட்டார் வாகனச் சட்டப்படி உடல் இயக்கக் குறைபாடு உடையவர்கள் வாகனங்களைச் செலுத்தக் கூடாது அவர்கள் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் (Danger to the public)
என்று கூறுகிறது.

2. அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், மாற்றியமைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் அனைத்துமே செல்லுபடியாகாத வண்டி (invalid carriage) என்று மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. இவ்வாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களால் பதிவு செய்யப்படும் வண்டிகள் சாலைவரி செலுத்தத் தேவையில்லை என்ற அரசாணையும் உள்ளது. ஆனால் இவ்வரசாணையானது நடைமுறையில் இல்லவே இல்லை.

மாற்றுத்திறனாளிகள் இரண்டு சக்கர வாகனங்களை வாங்கி ஏதேனும் ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்து வண்டியின் இரு புறங்களிலும் இரண்டு சக்கரங்களைப் பொறுத்தி அதை இயக்குவார்கள். இவ்வாறு வாங்கும் இரண்டு சக்கர வாகனங்கள் வட்டாரப் போக்கு வரத்து அலுவலரால் சாலைவரி விலக்குகள் இன்றி இரண்டு சக்கர வாகனங்களாகவே பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. பதிவுக்குப் பின்னரே மாற்றுத்திறனாளி அதில் மாற்றங்களைச் செய்ய இயலுகிறது. வாகனம் பதிவு செய்வதற்கு முன்பு  அந்த வாகனத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அத்தகைய வாகனத்தை பதிவு செய்வதில்லை. "நீ போய் இந்த எக்ஸ்ட்ரா வீல் ஃபிட்டிங் எல்லாம் கழட்டிட்டு வா" என்று கூறி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். பதிவு செய்த பின் வாகனத்தை மாற்றிவிட்டு அதனை ஓட்டிப் பழகி விட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம் கேட்டால்

1. இந்த வாகனத்தை எந்த பணிமனையில் மாற்றி அமைத்தீர்கள்?
2. அந்தப் பணிமனை அரசு அங்கீகாரம் பெற்றதா?
3. அந்தப் பணிமனையின் அங்கீகாரச் சான்றிதழ் பெற்று வந்திருக்கின்றீர்களா?
4. இந்த வாகனத்தை இயக்குவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழை மருத்துவக் குழுவிடமிருந்து பெற்று வந்திருக்கின்றீர்களா?

இதையெல்லாம் கேட்டுவிட்டு இந்த வாகனத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமே இவ்வகையாக மாற்றியமைத்து, மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செய்ததா? இதற்காக இந்த வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனத்திடமிருந்து சான்று பெற்று வந்திருக்கின்றீர்களா? என்று மேலும் பல சான்றிதழ்களைக் கேட்டு துன்புறுத்துகிறார்கள்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களால் அவர்களுக்கு நேரும் துன்பங்களைப் பட்டியலிடலாம்.

1. மாற்றுத்திறனாளிகள் காவல்துறையின் கருணையினை நம்பியே வாகனங்களைச் சாலையில் இயக்க வேண்டும். ஏதேனும் ஒரு போக்குவரத்துக் காவலர் நினைத்தால் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களைப் பறிமுதல் செய்வதுடன், தண்டத் தொகையும் விதிக்க முடியும்.

2. மாற்றுத்திறனாளிகள் இயக்கும் வாகனங்கள் விபத்துகளில் சிக்க நேர்ந்தால் எவ்விதமான நட்ட ஈடும் பெற இயலாது. ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கி வருகிறார் இதனால் இவருக்கு நட்ட ஈடு தரத் தேவையில்லை என்று காப்பீட்டு நிறுவனங்கள் மறுத்துவிடுகின்றன.

3. வாகனங்களை இயக்கும் பொழுது சாலை விபத்துகளில் சிக்கி மாற்றுத்திறனாளிகள் இறக்க நேரிட்டால், ஓட்டுநர் உரிமம் இன்றி செல்லுபடியாகாத வண்டியைச் செலுத்தி விபத்தில் சிக்கி இறந்துவிட்டார், இவருக்கு எவ்விதமான உயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்கத் தேவையில்லை என்று உயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் கைகளை விரித்து விடுகின்றன.

மாற்றுத்திறனாளிகளின் உடமைகளுக்கோ, அவர்களின் உயிருக்கோ எவ்விதமான உத்திரவாதமும் இல்லை. எங்கு பிறக்கிறார்கள் என்பதையும் யாரும் கவனிப்பதில்லை, அவர்கள் எங்கு இறக்கிறார்கள் என்பதையும் யாரும் கவனிப்பதில்லை. நோயும், வறுமையும், இயலாமையும், குறைவான கல்வியும், வேலையின்மையும், சமூகப் புறக்கணிப்பும், உற்றார் உறவினர்களின் அலட்சியப்படுத்தலும், சக மனிதர்களின் கேலிகளும் கிண்டல்களும் என்று அவர்கள் சந்தித்து வரும் துன்பங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைந்த ஒரு இனக்குழுவாக, சமூகத்தின் அவலங்களில் அக்கறை கொண்டு அவற்றை மாற்றப் போராடும் அமைப்புகளில் கைகோர்த்து, மக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு என்ன என்பதை அவர்கள் இப்பொழுதாவது முடிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளே நீங்கள் இநத் சமூகத்தின் மீது அக்கறை கொள்ளுங்கள் இந்த சமூகமும் உங்கள் மீது அக்கறை கொள்ளும். மாற்றுத்திறனாளிகளே உங்களின் பிரச்சனைகளுக்காகப் பேசுங்கள், எப்படியும் சாகத்தான் போகிறீர்கள் பேசிவிட்டுச் செத்துப் போங்கள். போராட்டமே வாழ்வு போராட்டமின்மை மரணம்.

(பொள்ளாச்சியைச் சேர்ந்த மா.காமராஜ் என்ற மாற்றுத்திறனாளி அவரது வாகனத்தை முறையாகப் பதிவு செய்வதற்கும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் எடுத்து முயற்சிகள் பாராட்டத் தக்கவை. இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் தங்களின் உரிமைக்காகவும், பொது நலனுக்காகவும் போராடி வருகிறார்கள் அவர்கள் அனைவரையும் நன்றியோடு மாற்றுத்திறனாளிகள் சமூகம் நினைவு கூற வேண்டும்)

மாற்றுத்திறனாளிகள் வாகனங்களைப் பதிவு செய்வது, ஓட்டுநர் உரிமம் தொடர்பாக நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள், அரசாணைகள் தொடர்பான மேலதிக செய்திகளுக்குச் சொடுக்குங்கள்.

http://www.indiankanoon.org/doc/94108995/
http://www.hindu.com/2010/11/11/stories/2010111160040200.htm
http://www.thehindu.com/news/cities/chennai/article1165586.ece?css=print

Pin It