"குற்றமே செய்யாமல் அடி; வண்டியே கதி!
எல்லாம் பழகி விட்டது!"

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நாளன்று, சென்னை வருவதற்காக, கோவில்பட்டி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து, முத்துநகர் விரைவு வண்டியில் முன்பதிவு செய்து இருந்தேன். இரவு 8.50க்கு அங்கிருந்து புறப்படுகிறது.

leyland_truckஅந்த வண்டியைப் பிடிப்பதற்காக 6.30 மணிக்கு சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டேன். பேருந்து நிலையத்துக்கு உள்ளே நுழைகையில் கோவில்பட்டிக்குச் செல்கின்ற ஒரு பேருந்து வெளியேறிக்கொண்டு இருந்தது. ஓடி அதைப் பிடிக்க முடியவில்லை. பேருந்து சுற்றி வருவதற்குள், குறுக்கு வழியில் சென்றால்,  கழுகுமலை சாலையில் அந்த வண்டியைப் பிடித்து விடலாம் என்று கருதி, ஒரு நண்பரின் இருசக்கர வண்டியில் ஏறி, கழுகுமலை சாலைக்கு வந்தேன். அங்கும் சற்றுத் தாமதம் ஆகி விட்டது. பேருந்து கடந்து சென்று விட்டது; பிடிக்க முடியவில்லை. அடுத்த பேருந்து, 7.00 மணிக்குத்தான். அது எட்டரை மணி அளவில்தான் கோவில்பட்டி போய்ச் சேரும். ஒருவேளை சென்னைத் தொடர்வண்டியைப் பிடிக்க முடியாமல் போய்விடுமோ? என்ற கவலையில் நின்று கொண்டு இருந்தேன்.

காலியாக வந்த வண்டிகள் சிலவற்றை, கைகாட்டி நிறுத்தும்படிக் கேட்டேன். ஒரு மணல் லாரிக்காரர் நிறுத்தி ஏற்றிக்கொண்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு, லாரியில் பயணம். அசோக் லேலண்ட் வண்டி என்பதால், ஓட்டுநரின் அறை சற்றே அகன்று, வசதியாக இருந்தது. அங்கே ஒரு படுக்கையும் உள்ளது.

ஒரு பயண எழுத்தாளன் என்கின்ற முறையில், மற்றவர்களிடம் பேசி விவரங்களைச் சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவன் நான். ஆனால், இந்த லாரியின் ஓட்டுநர், பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்தவர், நான் ஏறியவுடன், டேப் ரிகார்டரை நிறுத்திவிட்டு என்னோடு பேசுவதில் ஆர்வமானார். தம்முடைய தொழிலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், சோதனைகளைப் பற்றி அவராகவே சொல்லிக்கொண்டே வந்தார்.

இடையிடையே நானும் சில கேள்விகள் கேட்டுக்கொண்டே வந்தேன். அதற்கு விளக்கமாகப் பதில் அளித்தார். அவரது கருத்துகள்:

என் பெயர் வேலாயுதம். சொந்த ஊர் கடையநல்லூர். இந்த மணல் லாரியில் கடந்த ஓராண்டாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். இப்போது மணி 7.00. எட்டு-எட்டரை மணி வாக்கில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சென்று வண்டியை வரிசையில் போட வேண்டும். அங்கே ஆயிரக்கணக்கான வண்டிகள் வரும். சாலையோரத்தில், மலை போலக் குவித்து வைத்து இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் முழுமைக்கும் அங்கிருந்துதான் மணல் போகிறது. தாமிரபரணியில் எடுப்பது போக, திருச்சியில் இருந்தும் ஏராளமாக மணல் வருகிறது. காலை 5.00 மணிக்குத்தான் எங்களுக்கு மணல் தருவார்கள். 

நான் ஒரு நாளைக்கு இரண்டு முறை மணல் அள்ளி வருவேன். ஒருமுறைக்குக் கூலி 400 ரூபாய். எனவே, ஒரு நாளைக்கு 800 ரூபாய் கிடைக்கும். வடமாநிலங்களுக்குச் சென்று வந்தால், கூடுதலாகக் கிடைக்கும்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் ஆரஞ்சுப் பழங்கள் நிரம்ப விளைகின்றன. பருவகாலங்களில், அங்கே போய் ஆரஞ்சுப் பழங்களை ஏற்றிக்கொண்டு வருவதில் நல்ல லாபம் கிடைக்கும். ஒருமுறை இங்கிருந்து போய்வர, 3200 கிலோ மீட்டர்கள் ஆகும். அங்கே உள்ள தரகர்களோடு ஏற்கனவே தொடர்புகள் உள்ளதால், அவர்கள் சொல்லுகின்ற தோட்டங்களுக்கே வண்டியை நேராகக் கொண்டு போய் விடுவோம். ஒரு லோடு 14 முதல் 18 டன்கள் வரை பழங்கள் ஏற்றுவோம். இரண்டு மணி நேரத்துக்கு உள்ளாக ஏற்றி விடுவார்கள்.

போகும்போது வண்டி காலியாகத்தான் போகும். எனவே ஓட்டுவது எளிது. இரண்டு ஓட்டுநர்கள் போவோம். மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிகொள்வோம். மற்றவர், பின்னால் இருக்கின்ற படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வார். எனவே, வண்டி எங்கேயும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஆங்காங்கு நிறுத்தி டீ சாப்பிடுவோம். வண்டியில் அடுப்பு, பாத்திரங்கள் வைத்து இருக்கின்றோம். வழியில் எங்காவது ஓரிடத்தில் நிறுத்தி, ரொட்டி, சோறு சமைத்து வைத்துக் கொள்வோம். வண்டி ஓட்டத்திலேயே சாப்பிட்டுக் கொள்வோம். சம்பளம் போக, சாப்பாட்டுக்காக, ஒரு நாளைக்கு 100 ரூபாய் தருவார்கள். அதற்குள் மூன்று வேளை உணவையும் முடித்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி ரொட்டிதான் சரி.

இங்கிருந்து நேராக, ஏழாம் எண் தேசிய நெடுஞ்சாலையில், சேலம், தருமபுரி, பெங்களூர், பெல்லாரி, ஹைதராபாத் வழியாக இரண்டு அல்லது இரண்டரை நாள்களில் நாக்பூர் போய்விடுவோம். தமிழகத்தைத் தாண்டினால், வழியில் பல பிரச்சினைகள். குறிப்பாகக் காவல்துறையினர் அடிக்கடி மறித்து, மாமூல் கேட்பார்கள். சில வேளைகளில் ஆயிரம் ரூபாய் வரையிலும் கேட்பார்கள்.

“ஐயா, காலி வண்டியாகத்தான் போறோம். ஆயிரம் ரூபாய் கேட்டால் எப்படி?” என்று பேசி, நூறோ, இருநூறோ கொடுத்து விட்டுப் போவோம். வழிநெடுகிலும் அப்படிப் பல இடங்களில் நிறுத்துவார்கள். சில இடங்களில், நாங்கள் வண்டியை விட்டுக் கீழே இறங்கும்போதே, லத்தியால் இரண்டு அடி அடித்து விடுவார்கள். நீண்ட நேரம் காக்க வைத்து மிரட்டுவார்கள். எந்தக் குற்றமும் செய்யாமல், தேவை இல்லாமல் அடி வாங்குவோம். அப்படிப் பலமுறை அடி வாங்கி இருக்கிறேன். இப்படி ஒரு முறையில், ரூ 2000 முதல் 3000 வரையிலும் தண்டம் அழ வேண்டும்.

சில இடங்களில் காவலர்களைப் போன்றே உடை அணிந்த கொள்ளையர்கள் நிற்பார்கள். கையில் இருப்பதையெல்லாம் அடித்துப் பிடுங்குவார்கள். இரவு நேரங்களில் பெண்களைப் போலவும் உடை அணிந்து, வண்டியை நிறுத்தி, வழிப்பறி செய்வார்கள்.

ashok_leylandஇதையெல்லாம் மீறி நாக்பூர் சென்று திரும்பினால், 5000 ரூபாய் கிடைக்கும். இரண்டு ஓட்டுநர்களுக்கும் சேர்த்து 10,000 ரூபாய் கிடைக்கும். திரும்பி வரும்போது, வண்டியில் முழுமையாக சரக்கு இருக்கும். எனவே, ஓட்டுவது கடினம். வேகமாக ஓட்டினால், திருப்பங்களில் குடை சாய்ந்து, அப்படியே வண்டி கவிழ்ந்து விடும். வேகமாகச் சென்று, திடீரென பிரேக் பிடிக்க முடியாது. எனவே, ஒரே சீராக ஓட்டிக் கொண்டு வர வேண்டும். வட்டை அழுத்தமாகப் பிடிக்க வேண்டும்.

இப்படி, அங்கிருந்து கொண்டு வருகின்ற ஆரஞ்சுப் பழங்களை நேராகக் கேரளாவில் உள்ள பழச்சந்தைகளுக்குக் கொண்டுபோவோம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு உள்ளாக, அவ்வளவு பழங்களையும் கீழே இறக்கி விடுவார்கள். உடனே நாங்கள் வீட்டுக்குப் போக மாட்டோம். அப்படியே, அடுத்து நாக்பூருக்குப் புறப்பட்டு விடுவோம். ஏனென்றால், ஆரஞ்சு பழ சீசன் என்பது மூன்று மாதங்கள்தாம். அதற்குள் குறைந்தது 20 முறை சென்று வந்து விடுவோம். மூன்று மாதங்களில் ஒரு இலட்ச ரூபாய் வரை சம்பாதித்து விடுவோம். அதற்குப்பிறகு, சில மாதங்கள் வண்டியில் ஏற மாட்டோம்.

பழங்களைக் கொண்டு வருபவர்களுக்கு, ஒருமுறைக்கு, 25,000 முதல், 50,000 ஒரு இலட்சம் வரையிலும் லாபம் கிடைக்கக்கூடும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். எவ்வளவு கிடைக்கும் என்று உறுதியாகத் தெரியாது. சில வேளைகளில் விலை குறைந்து விட்டால் நட்டமாகவும் வாய்ப்பு இருக்கிறது. விபத்து இல்லாமல் வந்து சேர வேண்டும்.

நான் பதினாறு வயதில் வண்டியில் ஏறினேன். இப்போது வயது 26. கடந்த ஆண்டுதான் திருமணம் ஆனது. எனவே, நெடுந்தொலைவுப் பயணம் போகாமல், ஒராண்டாக இந்த மணல் வண்டியில் ஒடிக்கொண்டு இருக்கின்றேன். சராசரியாக ஒரு நாளைக்கு 800 ரூபாய் கிடைத்து விடுவதால், பிரச்சினை இல்லை. மாதம் 20 அல்லது 25 நாள்கள் ஓடுவோம். நினைத்த நேரத்தில் வீட்டுக்குச் சென்று வர எளிதாக இருக்கிறது என்றார்.

இப்படிப் பேசிக்கொண்டே சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு லாரிக்காரர் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே வந்தார். இவர் சற்று ஒதுங்கி இடம் கொடுத்ததும், வேகமாக முன்னேறிச் சென்றார்.

பாருங்கள். அவரும் என்னைப் போல மணல் எடுக்கத்தான் போகிறார். இப்படி என்னை முந்திக்கொண்டு போய் என்ன ஆகப் போகிறது. இரவெல்லாம் அங்கே காத்துக்கிடந்து காலையில்தான் மணல் தருவார்கள். ஐந்து நிமிடங்கள் முன்னால் போய் நின்றுவிட வேண்டும் என்று இப்படி அவசரமாக ஓடுகிறார் என்றார்.

‘நீங்கள் என்ன படித்து இருக்கின்றீர்கள்?’ என்று கேட்டேன்.

‘ஆறாம் வகுப்புதான்’ என்றார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான அடையாளங்கள், அறிவிப்புகளை வைத்து இருக்கின்றார்கள். பல இடங்களில், வண்டியைத் திருப்பி விட்டு விடுகிறார்கள். படித்தவர்களே திணறுகிறார்கள். பாதை மாறிப் போய்விடுகிறார்கள். நீங்கள் எப்படிச்  சமாளிக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

“எல்லாம் பழக்கம்தான். பத்து ஆண்டுகள் ஆகி விட்டதே. திருமணத்துக்கு முன்பு, வண்டியே கதி என்று கிடந்தேன். இடைவெளி இன்றி சுற்றிக்கொண்டே வந்தேன். எல்லா இடங்களும் அத்துபடியாகி விட்டது. என்னுடைய அண்ணன்கள் கொஞ்சம் படித்து, காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்து விட்டார்கள். நான் படிக்காததால், இந்தத் தொழிலுக்கு வந்து விட்டேன். பிழைப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது.

உங்களைப் போன்றவர்கள் அலுவலகங்களில் வேலை செய்யும்போது, களைப்பாக இருந்தால் இலேசாகக் கண் அயர்ந்து கொள்ளலாம். ஆனால், நாங்கள் ஓட்டும்போது, ஒரு வினாடி கண் அயர்ந்தால் கூட அம்போதான். உயிர் போய்விடும்’ என்றார்.

நாலாட்டின்புதூர் விலக்கு வந்தது. அங்கே என்னை இறக்கி விட்டு, அருகில் இருந்த ஒரு கடையில் புரோட்டா சால்னா வாங்கிக்கொண்டு, என்னிடம் விடைபெற்றுக் கொண்டு வண்டியில் ஏறி விரைந்தார். நமக்கு வாழ்க்கைச் சக்கரம் ஓடுகிறது. அவரது வாழ்க்கையோ, சக்கரத்தின் மீதே ஓடுகிறது.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It