தொழிலாளர் உறவுக்கென வால்மார்ட் ஒரு நிபுணர் குழுவையே வைத்துள்ளது. அக்குழுவின் ஒட்டுமொத்த வேலையே தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுவதை சீர்குலைப்பது தான். மேலும் அது தொழிற்சங்கத்தில் சேரக்கூடாது என்று தொழிலாளர்களின் மீது பயங்கரத்தை ஏவி விடுகிறது. தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுப்பதிலும் தகர்ப்பதிலும் அந்த நிறுவனத்தின் மேலாளர்களுக்கு தனியான குரூரமான பயிற்சித் திட்டங்களே உண்டு. அந்த நிறுவனத்தின் சொல்லாடலில் அது ‘தொழிற்சங்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதற்கான மேலாளரின் கருவிப்பெட்டி’ என்று குறிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவிலேயே இப்போது வால்மார்ட் அங்காடிகளில் தொழிற்சங்கம் முழுவதுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள 3600 வால்மார்ட் அங்காடிகளில் பணிபுரியும் 15,00,000 தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சங்கம் கூட கிடையாது. ‘வாஷிங்டன் போஸ்ட் அயல்நாட்டு சேவைகள்’ இதழில், வால்மார்ட் நிறுவனத்தின் உறுதியான தொழிலாளர் விரோத நடவடிக்கை பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் “உலகின் மிகப்பெரிய சில்லரை விற்பனை சங்கிலித் தொடர் நிறுவனமான வால்மார்ட் அமெரிக்காவில் அதன் 3600 அங்காடிகளிலும் தொழிற்சங்க முயற்சிகளை சீற்றத்துடனும் வெற்றிகரமாகவும் தடுத்துள்ளது. இருப்பினும் உணவு மற்றும் வணிகத் தொழிலாளர்கள் அமெரிக்க வால்மார்ட் தொழிலாளர்களை அமைப்பாக்க ஒரு புதிய இயக்கத்தை எடுத்துள்ளனர். அதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஒருவரே தாம் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளுக்கு ரகசியமாக ஏற்பாடு செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் அரசாங்கம் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைக்கு எவ்விதம் பணிந்து போகிறது என்பது கனடாவில் வால்மார்ட்டால் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கட்டளையின் பேரில் கனடாவின் தொழிலாளர் சட்டத்தில் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை மறுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மாற்றங்கள் கனடாவில் ‘வால்மார்ட் திருத்தம்’ என்று குறிப்பிடப்படுகிறது. அது தொழிற்சங்கங்கள் பதிவு செய்வதில் கட்டுப்பாடுகளைத் திணிக்கிறது, மேலும் தொழிற்சங்க பதிவாளரின் அதிகாரத்தை மிகவும் மோசமாகப் பறித்துள்ளது. "தொழிற்சங்க நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதற்காக, தொழிற்சங்க ஆதரவு தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்குக் கொடுப்பதற்காக வால்மார்ட் நிறுவன நிதியைப் பயன்படுத்தியதாக" வால்மார்ட்டின் முன்னாள் துணைத் தலைவர் டாம் காலின் எழுதியுள்ளார்.

2005 மே 19 அன்று ஆண்டோரியாவின் பிரதமருக்கு பொதுத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் டொரோண்டோ எழுதிய கடிதத்தில் பிற விடயங்களுடன் இரண்டு முக்கியமான அதிர்ச்சியூட்டும் கேள்விகளை எழுப்பியுள்ளார்- (அ) "ஆண்டோரியாவின் தொழிலாளர் சட்டங்களை தமக்குப் பொருந்துமாறு திருத்தி எழுதவைக்கும் வால்மார்ட்டின் சக்தி கனடாவினர் அனைவருக்கும் ஒரு அவமதிப்பாகும்." (ஆ) ‘ஆனால் கேள்வி என்னவென்றால், ஆண்டோரியோவின் அனைத்து குடிமக்களும் அறிந்து கொள்வதற்கான உரிமை என்னவென்றால், வால்மார்ட்டுக்கும் முன்னாள் பிரதமர் அலுவலகத்துக்கும் தொழிலாளர் உரிமைகளை ஒட்டுமொத்தமாக மறுப்பதை வால்மார்ட்டுக்கு எளிதாக்கிய ஆண்டோரியோ தொழிலாளர் உறவுகள் சட்டத்திருத்தத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்பது தான்."

வணிகக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், ‘தொழிற்சங்கமற்ற நிறுவனம்’ என்பது வால்மார்ட்டின் வணிக உத்தியின் ஒரு முக்கிய அம்சமாக இருப்பது தெளிவு. இந்த நெறிமுறையற்ற, மனித்தன்மையற்ற உழைப்புச் சுரண்டல் கொள்கை தான் அந்த நிறுவனத்தை உலகில் 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பெறச் செய்வதற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளது. அந்த நிறுவனம் கடை திறக்கும் இடங்களில் எல்லாம் மிகக் குறைந்த காலத்திற்குள் வாடிக்கையாளர்களை வளைத்துப் போடுவதற்கு அதன் செலவைக் குறைக்கும் நடவடிக்கையே ஆகும். "செலவை முடிந்தவரை குறைப்பதன் மூலம் (தொழிலாளர் ஊதியத்தைக் குறைப்பதன் மூலம் என்று வாசிக்க வேண்டும்), தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருப்பதன் மூலம், நீங்கள் போட்டி விலைக்குக் கொடுக்கமுடியும்."

கனடாவின் அனுபவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். "காகிதம் மற்றும் அலுமினிய ஆலைகளில் ஒரு மணி நேரத்துக்கு தொழிலாளர் ஊதியம் 35 டாலர்கள் ஆகும்; ஆனால் வால்மார்ட் ஊழியருக்கு வழங்கப்படும் ஊதியம் வெறும் 6.20 டாலர்கள் தான்." அதன் விளைவு, உயர்ந்த ஊதிய விகிதத்தில் வேலை வாய்ப்புள்ள ஒரு தொழிற்சங்கப் பகுதியில், வால்மார்ட் அங்காடியில் இருந்த தொழிலாளர்கள் 51 விழுக்காட்டினர் சங்கத்தில் சேர்ந்து உறுப்பினர் அட்டை பெற்று சங்கத்திற்கு சட்ட அங்கீகாரம் பெற்றனர். ஆனால் வால்மார்ட் தொழிற்சங்கத்தை எப்படி சகித்துக் கொள்ளும்? அவர்கள் அந்த வால்மார்ட் அங்காடி நட்டத்தில் நடக்கிறது என்று கூறி மூடிவிட்டுத் தொழிலாளர்களை வீதிக்கு அனுப்பினார்கள். “கனடாவிலும் அமெரிக்காவிலும் பல நிர்ப்பந்தங்களையும் நீதிமன்றப் போராட்டங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் தொழிற்சங்கங்களை எச்சரிக்கும் விதமாக அந்த நிறுவனம் தனது ஒரு அங்காடியையே தியாகம் செய்துள்ளது" என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

‘கல்வி மற்றும் தொழிலாளர்களுக்கான’ அமெரிக்க நாடாளுமன்றக்குழு 2004ல் வால்மார்ட்டின் தொழிலாளர் நடைமுறைகள் பற்றிய பரிசீலனை அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அந்தக் குழுவின் கண்டுபிடிப்புக்களில் சில உண்மையில் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடியவை. “அமைப்பாகும் உரிமை குறித்த வால்மார்ட்டின் நடவடிக்கை அண்மையில் உலக அளவில் மோசமான பெயரைப் பெற்றுள்ளன... வால்மார்ட்டின் தொழிலாளர் சட்ட மீறல்கள், சங்கம் அமைக்க முயற்சி செய்யும் தொழிலாளர்களை சட்டவிரோதமாக வெளியேற்றுவது, சட்டவிரோதமாக ரகசியமாக வேவுபார்ப்பது, பேசத் துணிந்த ஊழியர்களை அச்சுறுத்துவது வரை நடைபெறுகின்றன.” என்று பதிவு செய்துள்ள அந்த அறிக்கையின் இறுதிப் பகுதியில் “வால்மார்ட்டின் வெற்றி தொழிலாளர் ஊதியம், பயன்கள், தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை மீறுதல், சமூக வாழ்க்கைத் தரத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்றவற்றைக் குறிக்கிறது. வணிகத்தின் வெற்றி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை துன்புறுத்துவதன் மூலம் வரவேண்டியது அவசியமில்லை. அத்தகைய குறுகிய பார்வை கொண்ட லாபமீட்டும் உத்திகள் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘பெருங்குழும தேசபக்த விருது’ பெற்ற வால்மார்ட்டின் லாபமீட்டல் உத்தி தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சுவது தான் என்று அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவே அறிக்கை அளித்துள்ளது. தொழிலாளர் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுப்பது தான் முதலாளித்துவ தேசபக்தியாகும்.

- வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It