யூரி ககாரின்: சோசலிச சமூக அமைப்பு உருவாக்கிய மாமனிதன் விண்வெளியில் பறந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன

இந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதியுடன் விண்வெளியில் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மனிதன் முதன்முதலாகப் பயணிக்கத் தொடங்கிய 50-வது ஆண்டு நிறைவடைகிறது. அவ்வாறு பயணித்த முதல் மனிதன் சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரி ககாரின் ஆவார். உலகெங்கும் அந்த நாள் மனிதனின் மகத்தான சாதனை நாளாகப் பெரிதும் நினைவுகூரப் படுகிறது.

மைல்கல்

விண்வெளி குறித்து நிலவிய பல மூட நம்பிக்கைகள் விஞ்ஞானத்தால் களையப் பட்டாலும் அந்த விஞ்ஞான உண்மைகளை மையமாக வைத்து ஒரு மனிதனை விண்வெளியில் பயணிக்கச் செய்தது மனிதகுல வரலாற்றில் அதாவது மனிதனது இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் ஒரு மைல் கல்லாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவை உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் அதைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதற்குமே என்றிருந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் அடிப்படைப் போக்கிலிருந்து மாறுபட்டு இயற்கையில் பொதிந்திருக்கும் உண்மைகள் அனைத்தையும் உணர்ந்தறிந்து அவற்றை ஒட்டுமொத்த மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தத் தங்குதடையின்றி வளர்த்தெடுப்பதற்கே விஞ்ஞானம் என்ற சோசலிச சமூக அமைப்பின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் குறித்த நியதி அமுலாக்கப்பட்டதன் ஒரு வெளிப்பாடே யூரி ககாரினின் விண்வெளிப் பயணமாகும்.

அவதூறுப் பிரச்சாரம்

சோசலிசக் கண்ணோட்டத்தை முதன் முதலாக மாமேதை மார்க்ஸ் முன்வைத்த போது அதனை முதலாளித்துவ அடிவருடிகள் பல வகைகளில் கேலி செய்தனர்.

அது குறித்து மக்கள் மனதில் பீதியைக் கிளப்பினர். சமூகத்தின் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் சமூக மயமாக்க வேண்டும் என்ற அதன் கோட்பாட்டைச் சிதைத்து பொதுவுடைமை வந்தால் அந்த சமூக அமைப்பில் மனிதகுல நாகரீகத்தின் ஒரு முக்கிய வளர்ச்சியான ஒருதார மணம் அழிந்து போகும்; பெண்களும் பொதுவுடைமை ஆக்கப்பட்டு விடுவர் என்றெல்லாம் கூறி அவதூறு செய்தனர்.

அதற்கு மாமேதை எங்கெல்ஸ்: இவர்கள் கூறும் இந்தக் கருத்து பெண்களை இவர்கள் உற்பத்திக் கருவிகளாகவே எப்போதும் பார்க்கின்றனர் என்பதையே வெளிப்படுத்துகிறது; அதாவது முதலாளிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிரம்பித் ததும்பும் ஒழுக்கமின்மை இவ்வாறு இவர்களைச் சிந்திக்கச் செய்கிறது. அவர்கள் தங்களது தனிமனித ஒழுக்கக் கேடுகள் பொது நியதியானால் சமூகம் எப்படியிருக்கும் என்ற குரூரமான சிந்தனைக்கு இடம் கொடுத்தே இவ்வாறு கூறுகின்றனர் என்று கூறினார்.

அரசும் தபால் நிலையமும்

தொழிலாளர் போன்ற வியர்வை நாற்றம் பிடித்த, கல்வி- கேள்விகள் மூலம் உயர்ந்த அறிவினைப் பெறும் வாய்ப்பு கள் மறுக்கப்பட்ட உழைப்பாளிகள் எவ்வாறு ஒரு அரசை நடத்த முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பினர்.

அதற்கு மாமேதை மார்க்ஸ் தனது கோத்தாத் திட்டம் என்ற நூலில் முகத்தில் அறைந்தாற்போல் பதில் உரைத்தார். ஒரு தபால் நிலையத்தை நடத்துவதற்கும் நீங்கள் கூறும் அரசாங்கத்தை நடத்துவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்று.

அதாவது அரசு, அரசாங்கம், அவற்றின் செயல்பாடு அதனை நிர்வகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு துறைகள் அத்துறைகளில் பின்பற்றப்படும் நியதிகள் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவை மிகவும் சிக்கலானவை. இவற்றை ஒரு தபால் நிலையத்தை நடத்துவதைப் போல் அத்தனை எளிதாக நடத்திவிட முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே இதனைப் படிப்பவர் மனதிலும் எழவே செய்யும்.

பொய்யையும் திருட்டையும் நியாயப்படுத்த வேண்டுமானால்

ஆனால் அரசு நடைபெறும் முறையை அது இன்று இத்தனைச் சிக்கல் நிறைதுள்ளதாக ஆகியுள்ளதன் வரலாற்றை அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு வி­யம் நமக்கு மிகத் தெளிவாகப் புலப்படும்.

அதாவது ஒரு பொய்யை உண்மையயன நிலைநாட்டுவதற்கே நிறைய முயற்சியும் பற்பல வார்த்தைகளைப் பயன்படுத்திப் பசப்புவதும் அவசியம். அதைப் போல் ஒரு திருட்டை நியாயப்படுத்த வேண்டு மென்றால் அதற்குப் பெருமுயற்சி தேவை. முதலாளித்துவ சமூகம் பிறர் உழைப்பைத் திருடுவது அதன்மூலம் அடிக்கப்படும் கொள்ளையைச் சட்டங்கள் போட்டு நியாயப்படுத்து வதை அடிப்படையாகக் கொண்டது.

அச்சமூகத்திற்கு வழிப்பறி, கதவை உடைத்து திருடுவது போன்றவற்றை திருட்டு என்று காட்ட வேண்டும். அதே சமயத்தில் பலரை வேலைக்கு அமர்த்தி அவர்களது உழைப்பின் பலனாக உருவான பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை அதற்காக உழைப்பவரின் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு மீதியை லாபம் என்ற பெயரில் பகல் கொள்ளை அடிக்கும் அந்த மாபெரும் திருட்டை நியாயமானது என்றும் கூறவேண்டும்.

இத்தகைய ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டையும் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஏராளமான சட்டங்கள், நியதிகள், துறைகள் போன்றவற்றை ஏற்படுத்தித்தான் தீரவேண்டும். அந்த அடிப்படையில் சிக்கலாக்கப்பட்டதே இந்த முதலாளித்துவ அரசு அமைப்பு.

சமூகத்திலிருந்து இத்தகைய சட்ட ரீதியாக்கப்பட்ட லாபம் ஈட்டுவது என்ற கொள்ளையை தடுத்து நிறுத்தி சக்திக்கேற்ற உழைப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் என்ற விதத்தில் அதைச் சீரமைத்தால் அப்போது திருட்டு, பொறாமை, பொய்கூறுதல், மோசடிகள் செய்தல் ஆகியவை அனைத்துமே சமூகத்திலிருந்து அகற்றப்படுவதற்கான சூழல் உருவாகிவிடும்.

அப்போது மேற்கூறிய குணங்கள் ஏற்கனவே அவர்கள் வாழ்ந்த பழைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களாக ஆங்காங்கே இருப்பவையாக ஆகி அழியும் நிலைக்கு வந்துவிடும்.

அந்த நிலையில் சமூகத்தை வழி நடத்துவதற்கு ஒரு தபால் நிலையம் நடத்துவதைப் போன்ற எளிய அரசு வடிவமே போதுமானதாக இருக்கும். இதைத்தான் மாமேதை மார்க்ஸ் ரத்தினச் சுருக்கமாக தனது கோத்தாத் திட்டத்தில் முன்வைத்தார்.

கையடக்கமான அரசியல் சட்டம்

இக்கருத்தை நடைமுறைப் படுத்தி சோசலிச சமூக அமைப்பை நிறுவிய மாமேதை லெனினுக்கு சோவியத் யூனியனின் அரசியல் சட்டத்தை எழுதுவது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை.

உலகிலேயே மிகமிகக் குறைந்த ­ரத்துக்கள் கொண்ட சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் நூல் அளவிற்கான அரசியல் சட்டத்தை அவர் எழுதினார். உண்மை மற்றும் நேர்மையின் வழிகள் நேரடியானவை அவற்றைச் சுற்றி வளைத்துப் பல்வேறு பசப்பு மற்றும் ஏமாற்று வார்த்தைகளால் கூறத் தேவையில்லை என்பதை அதன்மூலம் மாமேதை லெனின் நிறுவினார்.

இந்த அடிப்படையில் உருவான, வியர்வை நாற்றமும் உழைப்பின் அழுக்கும் நிறைந்த தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சிதான் விண்வெளி விஞ்ஞானத்தின் கதவினை அகலத் திறந்துவிட்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் அந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியது.

மனிதனை அவ்வாறு அனுப்புவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, விண்வெளிக்கு அனுப்பப்படும் மனித உயிருக்கு எந்த வகையான பங்கமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக மிருகங்களை வைத்துச் சோதனை செய்யும் முயற்சிகளையும் சோவியத் யூனியன் மேற்கொண்டது. அதில் வெற்றி கண்ட பின்னரே மனிதரை அனுப்பும் அந்த மகத்தான அடியினை அச்சமூக அமைப்பு எடுத்து வைத்தது.

இன்று நம்மில் பலரிடையே மனதில் முன் சிந்தனைகளாக நின்று நிலவும் கருத்துக்கள் ஒளிவுமறைவற்ற உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல.

அதற்குக் காரணம் நமக்கு அவற்றை வழங்குவதற்கான சாதனங்களாக இருக்கக் கூடியவை முதலாளிகள், ஏகாதிபத்திய வாதிகளின் கட்டுப் பாட்டில் உள்ள ஊடகங்களாகும். அவை அவற்றை நடத்துபவரின் வர்க்க நலன் களுக்கு உகந்த வகையிலேயே செய்திகளை நமக்குத் தருகின்றன.

அப்படிப்பட்ட முன் சிந்தனைகளின் விளைவாக விண்வெளிப் பயணம் போன்ற ஏராளமான பொருட் செலவு தேவைப்படும் திட்டங்களுக்கெல்லாம் செலவு செய்ய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளால் மட்டுமே முடியும் என்பதாகவே பலரது எண்ணங்கள் இருக்கின்றன.

உண்மையில் இத்தகைய உடனடி லாபம் கிட்டாத விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களின் முன்னோடிகளாக இருந்தது சோசலிச சோவியத் யூனியனே. அந்த நாடே ஸ்புட்னிக் என்ற பெயர் கொண்ட விண்வெளி ஆராய்ச்சித் திட்டத்தை முதன்முதலில் மேற்கொண்டு அதன் வளர்ச்சிப் போக்கில் யூரி ககாரினை விண்வெளிக்கு அனுப்பும் வோஸ்டாக் என்ற பெயர் கொண்ட திட்டத்தை அமுல்படுத்தி முதன்முதலில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதில் வெற்றியும் கண்டது.

மிரண்டுபோன ஏகாதிபத்திய அமெரிக்கா

சோசலிச சமூக அமைப்பின் விஞ்ஞான வளர்ச்சியின் வெற்றியினால் மிரண்டு போயிருந்த ஏகாதிபத்தியங்கள், குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பின்னரே நாசா போன்ற திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கியது.

ஒரு உழைக்கும் மக்களின் அரசு இந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்பது தங்கள் நாட்டின் உழைக்கும் மக்களின் கண்களில் பட்டு அவர்கள் அதனால் ஈர்க்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் கண்ணும் கருத்துமாக இருந்தது. அதன் விளைவாகவே சந்திரனுக்கு முதல் மனிதனை அனுப்பும் திட்டத்தை அதன்பின் அமெரிக்கா மேற்கொண்டது.

சோவியத் சோசலிச சமூக அமைப்பு அதன் தலையாய சிற்பியும் வடிவமைப்பாளருமான மாமேதை ஸ்டாலினது கருத்துக் களால் வழிநடத்தப் படுவதாக இருந்த வரை இதுபோன்ற பிரமிக்கத் தகுந்த, லாப நோக்கம் கருதாத, விஞ்ஞான வளர்ச்சியில் முன்னணியில் இருந்தது.

அதுவரை சோசலிச சோவியத் யூனியனின் போட்டியாளர் என்ற ரீதியில் அவ்விஞ்ஞான வளர்ச்சியில் முனைப்புக் காட்டிய அமெரிக்கா அதன் பின்னர் ஆதாயம் இல்லாமல் ஆற்றுநீரை இறைக்காது அது என்ற அதன் புத்தியைக் காட்டத் தொடங்கியது.

இவ்வாறு யுத்த மற்றும் லாப நோக்கம் எதுவுமின்றி சோசலிச சோவியத் யூனியனால் துவங்கப் பெற்ற இந்த விண்வெளி விஞ்ஞானத்தை அது யுத்த நோக்கங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் நட்சத்திரப் போர் (றீமிழிr நிழிrவி) என்ற விண்வெளியில் பல இடங்களில் ஏவுகணைகளை நிறுவி உலக நாடுகள் எதன் மீதும் எப்போதும் நினைத்த மாத்திரத்தில் தாக்க முடியும் என்ற அச்சுறுத்தும் போக்கு அதன் பின்னர் பிரதானமாகிப் போனது.

சீரழிவின் தொடக்கம்

மாமேதை ஸ்டாலினுக்குப் பின் சோவியத் யூனியனில் ஆட்சிக்கு வந்த யாருமே அவரைப் போல் சோசலிச சமூக அமைப்பின் விதிகளைப் புரிந்து கொண்டு அந்தப் புரிதலின் அடிப்படையில் அச்சமூகத்தை வழிநடத்தவில்லை.

குருச்சேவில் தொடங்கி ஆந்த்ரப்போவ் வரை அனைவருமே கருத்து ரீதியாக ஸ்டாலின் முன்வைத்த வழிமுறைகளிலிருந்து தடம் புரண்டவர்களாகவே இருந்தனர்.

அதற்குகந்த வகைகளில் உற்பத்தியை அதிகரிக்கவும் பராமரிக்கவும் ஊக்கத் தொகைகளைத் தொழிலாளருக்கு வழங்கி அவர்களை வேலை செய்ய வைப்பது என்ற முதலாளித்துவ வழி முறைகளைப் பின்பற்றினர். இருந்தாலும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பு முறையில் அவர்கள் கை வைக்கவில்லை.

தொழிலாளரின் உணர்வு மட்டம் பராமரிக்கப் படாமலும், சரியான திட்டமிடுதல் இல்லாததனாலும் உற்பத்தி முன்போல் அதி வேகத்துடன் வளராது ஒருவகைத் தேக்கநிலை ஏற்பட்டு அது பலகாலம் நீடித்துச் செல்லரித்தது போல் சோவியத் யூனியனின் சோசலிசக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்திக் கொண்டிருந்தது.

அந்நிலையில் தான் துரோகி கோர்பச்சேவிற்கு ஸ்டாலினின் நிர்வாக அமைப்பின் மீது கைவைக்கும் துணிச்சல் வந்தது. தனது எதிர்ப்புரட்சித் திட்டங் களை முனைப்புடன் அமல் நடத்தத் தொடங்கிய அவன் அமெரிக்காவின் இந்த நட்சத்திர யுத்தத் திட்டத்தைக் கண்டு அஞ்சி சோவியத் சமூக அமைப் பில் சீர்திருத்தம் என்ற பெயரிலான சீரழி வினைக் கொண்டு வருவதற்கு அதனை ஒரு முகாந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

தொடை நடுங்கித் தனம்

முதலாளித்துவ அமைப்புகளின் உள்ளார்ந்த மீள முடியாத பலவீனத்தை யும், அதன் ஆட்சியாளர்களின் வெற்றுச் சவடால்களையும் இனம் கண்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர் எவரும் ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சியதில்லை.

மாறாக மாவோ போன்ற மேதைகள் அமெரிக்காவை ஒரு காகிதப் புலி என்றே வர்ணித்தனர். கோர்பச்சேவிடம் இருந்த தொடை நடுங்கித் தனம் அவர்களிடம் இருக்கவில்லை. இருந்தாலும் சமூகத்தை, மனித வாழ்க்கையை அடிப்படையிலேயே மாற்றும் அந்த மகத்தான முயற்சி கோர்பச்சேவ் போன்ற தொடை நடுங்கிகளால் பெரும் பின்னடைவிற்கு ஆளானது.

அதன்பின்னர் ரஷ்யாவின் விஞ்ஞான வளர்ச்சி தேக்கம் கண்டது. அது உலக அளவில் ஆற்றிவந்த விஞ்ஞானப் பரவலாக்கல் பணியும் தடைப்பட்டது. அதன் அன்றாட வாழ்க்கை வி­யங் களில் சம்பந்தப்பட்ட விஞ்ஞான உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஸ்புட்னிக் இதழின் வெளியீடும் நிறுத்தப்பட்டது.

சோவியத் சோசலிசத்தின் வீழ்ச்சி ஆக்கபூர்வ விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விஞ்ஞானக் கருத்துக்களின் பரவலுக்கும் ஒரு பேரிழப்பாக ஆகியது.

இந்நிலையில் இன்று உள்ளபடியே பொருளாதார ரீதியில் அழிவின் விளிம்பில் நிற்கும் முதலாளித்துவம் மனித குலத்தின் மேம்பாட்டிற்கு உதவவல்ல விஞ்ஞான வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும் முட்டுக் கட்டையாக ஆகியுள்ளது.

விண்வெளி விஞ்ஞானமும் விண்வெளிச் சுற்றுலா என்ற பெயரில் பெரும் வசதி படைத்தவர்களிடமிருந்து பெரும் பணம் கறக்க அமெரிக்கப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் திட்டமாக ஆகியுள்ளது.

சோசலிசம் உருவாக்கிய மனிதன்

யூரி ககாரினின் விண்வெளிப் பயணம் வேறு ஒரு வி­யத்தையும் முன் நிறுத்துகிறது. யூரி ககாரின் ஒரு கூட்டுப் பண்ணைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர். சோசலிச சமூக அமைப்பு வழங்கிய அனைவருக்கும் உயர்மட்டம் வரை இலவசமான உயர்தரக் கல்வியினால் உருவானவர்.

அவர் நிகழ்த்திய சாதனைக்காக அவருக்கு வழங்கப்பட்டது முதலாளித் துவ நாடுகளில் செய்யப்படுவது போல் கோடிக் கணக்கான ரூபாய் ஊதியமோ அல்லது சன்மானங்களோ அல்ல. அவரை அந்த நிலைக்கு உயர்த்திய சமூகம் அவருக்கு வழங்கிய அங்கீகாரமே அவர் அவரது திறமைக்கும் துணிச்சலுக் கும் பெற்ற மிக உயர்ந்த வெகுமதியாக இருந்தது.

அங்கீகாரம் வெகுமதி

அவருக்கு அவ்வாறு வழங்கப்பட்ட வெகுமதி சோசலிச உழைப்பின் கதாநாயகன் என்ற விருதாகும். நாடெங்கிலும் அவரது சிலைகள் நிறுவப்பட்டு அவர் கெளரவிக்கப் பட்டார். இயற்கையை வென்ற மனிதனுக்குப் பேருவகை தருவது சக மனிதர்களின் அங்கீகாரமே.

இவ்வாறு யூரி ககாரின் சோசலிச அமைப்பு விஞ்ஞானத்திற்கு ஆற்றிய வழங்கலை நிரூபித்தவர். அவர் விண்ணில் பறந்த அந்த தினத்தைக் கொண்டாடும் போது சோசலிசம் ஒரு ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பு என்ற ரீதியில் விஞ்ஞானம் உள்ளிட்ட அனைத்து விஷ‌யங்களிலும் ஆற்றிய மகத்தான பங்களிப்பினையே நாம் நினைவு கூரவேண்டும்.

ஆனால் இது முன்பு இருந்து, இப்போது இல்லாமல் போய்விட்ட சோசலிசம் குறித்த ஒரு புலம்பல் அல்ல. அது ஒரு விஞ்ஞானபூர்வ எதிர்பார்ப்பு.

மகத்தான பெருமிதத்துடன் மீண்டும் அந்த அமைப்பு பல உரிய படிப்பினை களை எடுத்துக் கொண்டு புது அவதாரம் எடுத்துப் புது மெருகுடன் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பு.

ஏனெனில் அவ்வாறு அது வருவது வரலாற்று ரீதியாகத் தவிர்க்க முடியாதது. அதன் வருகையின் மூலம் விஞ்ஞானம் அதாவது முதலாளித்துவத்தால் அழிவு மற்றும் லாபம் ஈட்டும் சுயநலப் பாதைக்கு மாற்றி விடப்பட்ட விஞ்ஞானம், ஆக்கப்பூர்வப் பாதைக்குத் திரும்பும்; அச்சூழ்நிலையில் இன்னும் உரிய முறையில் யூரி ககாரின் மனித குலத்தால் நினைவுகூரப் படுவார்.

Pin It