குரூப்ஸ்காயா ரஷ்ய புரட்சியாளர்களுள் ஒருவர்; எழுத்தாளர்; கல்வியாளர். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ரஷ்ய புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். கம்சோல் எனும் பொது உடைமை இளைஞர் இயக்கத்தின் சிற்பி. சோவியத் அரசில் கல்வித்துறை தொடர்பான பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டவர். முக்கியமாக வி.இ.லெனினின்  ஆலோசகரும் இணையரும் ஆவார்.

lenin 350ருஷ்யா தொழில் வளர்ச்சியில் பின் தங்கியிருந்த நாடு. ஆகவே அதன் தொழிலாளர் இயக்கம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்தான் வளர ஆரம் பித்தது. இந்தச் சமயத்தில் மற்ற பல நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கம் 1848 புரட்சியாலும் 1871 பாரிஸ் கம்யூன் புரட்சியாலும் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ஏற்கனவே தீவிரமான புரட்சிப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தின் மாபெரும் புரட்சித் தலைவர்களான மார்க்சும் எங்கெல்சும் புரட்சிப் போராட்டத்தில் நன்கு புடமிடப்பட்டிருந்தார்கள்.

சமூக வளர்ச்சியின் பாதையை மார்க்சியம் நன்கு எடுத்துக்காட்டியது, முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு அதனிடத்தில் பொது உடைமை தோன்றும் என்ற உண்மை தடுக்க முடியாதது என்பதை வெளிப்படுத்திக் காட்டியது. புதிய சமுதாய அமைப்புகளின் வளர்ச்சிப் பாதை, வர்க்கப் போராட்டத்தில், சமூக உடைமைமுறைப் புரட்சியின் பாதை எவ்விதத்தில் செல்லும் என்பதை அது எடுத்துக்காட்டியது. இப்போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் பங்கையும், அது தவிர்க்க முடியாதபடி வெற்றியுறும் என்பதைச் சுட்டிக்காட்டியும், மார்க்சியம் விளக்கியது.

மார்க்சியக் கொடியின்கீழ் நமது தொழிலாளர் இயக்கம் வளர்ந்தது. அது தட்டுத்தடுமாறி முன்னேற வில்லை, கண்ணை முடிக்கொண்டு முன்னேறவில்லை. நமது லட்சியம் தெளிவாக இருந்தது. அதன் பாதையும் அவ்வாறே.

போராட்டத்தில் ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் பின்பற்ற வேண்டிய பாதையை மார்க்சியத்தின் துணை கொண்டு லெனின் பெரும் பாடுபட்டு விளக்கினார். மார்க்ஸ் இறந்து ஐம்பது ஆண்டுகளாகிறது. ஆனால் மார்க்சியம் நமது கட்சிக்கு அதன் எல்லாச் செயல் களிலும் தொடர்ந்து வழிகாட்டுகிறது. லெனினியம் மார்க்சியத்தின் வளர்ச்சிநிலையே; அதை ஆழமாக ஆராய்வதே.

ஆகவேதான் லெனின் மார்க்ஸை எவ்வாறு படித்தார் என்பதை விளக்குவது மிகவும் சுவையானது.

லெனின் மார்க்ஸை மிக நன்றாக அறிந்திருந்தார். 1893 இல் பீட்டர்ஸ்பர்கிற்கு லெனின் வந்தபோது அவர் எந்தளவுக்கு மார்க்ஸ், எங்கெல்சின் நூல்களைக் கற்றிருந்தார் என்பதைக் கண்டு மார்க்சியர்களாகிய நாங்கள் வியப்புற்றோம்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் முதல் மார்க்சிய குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்கள் “மூலதனம்” நூலின் முதல் தொகுதியைத் தான் பெரும்பாலும் படித்தனர். அத்தொகுதியைத்தான் கடினப்பட்டாவது பெற முடிந்தது. மார்க்சின் இதர நூல்களைப் பொறுத்தவரையில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எங்களது குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் “பொது உடமை கட்சியின் அறிக் கையைக்” கூட படித்திருக்கவில்லை. நானோ 1898இல் தூரப்பகுதிக்குக் கடத்தப்பட்டு வாழ்ந்த சமயத்தில்தான் இதைப் (ஜெர்மன் மொழிப் பதிப்பில்) படித்தேன்.

மார்க்ஸ், எங்கெல்ஸின் நூல்கள் கடுமையாகத் தடை செய்யப்பட்டிருந்தன. “நோவயே ஸ்லோவோ”  (“புதிய வார்த்தை”) என்ற இதழுக்குப் “பொருளாதார ரொமான்டிஸத்தின் தன்மை” என்ற கட்டுரையை 1897ஆம் ஆண்டில் எழுதிய விளாதிமீர் இல்யீச் அக்கட்டுரையில் “மார்க்ஸ்” “மார்க்ஸியம்”  ஆகிய வார்த்தைகளைத் தவிர்த்து, அத்தத்துவங்களை மறை முகமாகக் காட்ட வேண்டியிருந்தது. இல்லாவிடில் இதழ் தொல்லைக்கு உள்ளாக நேர்ந்திருக்கும்.

மார்க்ஸ், எங்கெல்ஸின் எல்லா நூல்களையும் நன்கு அறிந்திருந்த லெனின் அவற்றை முடிந்த வரையில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிப் பதிப்புகளில் பெற முயன்றார். லெனினும் அவரது சகோதரி ஓல்காவும் “தத்துவத்தின் வறுமை” என்ற நூலைப் பிரெஞ்சு மொழியில் படித்ததை ஆன்னா இல்யீனிச்சின்  நினைவு கூர்ந்தாள். ஆனால் மார்க்ஸ், எங்கெல்சின் நூல்களில் பெரும்பாலானவற்றை லெனின் ஜெர்மன் மொழியில் படிக்க வேண்டியிருந்தது. அவற்றிலிருந்த மிகவும் சுவையான, முக்கியப் பகுதிகளை ருஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார்.

1894 இல் சட்டவிரோதமாகப் பதிப்பிடப்பட்ட “‘மக்களின் நண்பர்கள்’எனப்படுவோர் யார், சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்?” என்ற தமது முதல் பெரும் நூலில் பொதுவுடைமை கட்சியின் அறிக்கை, அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்திற்கு ஒரு முன்னுரை, மெய்யறிவின் வறுமை ஜெர்மன் கருத்து நிலை, 1843 இல் மார்க்ஸ் ரூகேயுக்கு எழுதிய கடிதம், எங்கெல்ஸின் டூரிங்குக்கு மறுப்பு, குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஆகியவற்றிலிருந்து விளாதிமீர் இல்யீச் லெனின் மேற்கோள் காட்டுகிறார்.

அக்காலத்திலிருந்த பெரும்பாலான மார்க்சியர்கள் மார்க்ஸின் நூல்களைப் பற்றிக் குறைந்த அறிவு கொண்டிருந்தனர். “மக்களின் நண்பர்கள்” என்ற நூல் பல பிரச்சினைகளைப் புதிய முறையில் விளக்கியது. ஆகவே இந்நூல் மிகவும் செல்வாக்கு பெற்றது.

லெனினது “நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும் அது திரு. ஸ்துருவேயின் நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற அடுத்த கட்டுரையில் லுயீ போனபார்தின் பதினெட்டாவது புரூமேர், பிரான்ஸில் உள்நாட்டுப் போர், கோதா வேலைத் திட்டம் பற்றிய விமர்சனம், மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுள்ளன.

மார்க்ஸ், எங்கெல்ஸின் எல்லா நூல்களையும் லெனின் வெளிநாட்டில் குடியேறி வாழும் நாட்களில் படிக்க முடிந்தது.

1914 இல் கிரனாத் கலைக்களஞ்சியத்திற்காக லெனின் எழுதிய மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு அவர் எவ்வாறு மார்க்ஸின் நூல்களைக் கற்றறிந்திருந்தார் என்பதைச் சரியாக விளக்கிக் காட்டுகிறது. மார்க்ஸின் நூல்களைப் படித்த லெனின் அவற்றிலிருந்து காட்டிய மேற்கோள்களிலிருந்து இது தெரிகிறது. மார்க்ஸின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ள லெனினின் நோட்டுப் புத்தகங்கள் பல “லெனின் கழகத்தில்” உள்ளன.

விளாதிமீர் இல்யீச் இவற்றைத் தமது நூல்களில் பயன்படுத் தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்க வில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத் தாராய்ந்தும் இருந்தார். 1920இல் பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத் தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமைமுறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று விளாதிமீர் இல்யீச் கூறினார்.

மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்கு கிறார்.

“‘மக்களின் நண்பர்கள்’ எனப்படுவோர் யார், சோஷல் - டெமாக் ராட்டுகளுக்கு எதிராக அவர்கள் எவ்வாறு போரிடுகிறார்கள்?” என்ற தமது முதல் பெரும் நூலில், “ரூஸ்க்கொயே பகாத்ஸ்த்வோ” என்ற இதழில் மார்க்சியர்களுக்கு எதிராக எழுதிய கட்டுரைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் லெனின், நரோத்னிக்குகளின் (மிகாய்லோவ் ஸ்க்கிய், கிரிவேன்க்கோ, யூஷாக்கோவ்) கருத்துகளுக்கு எதிராக மார்க்ஸின் கருத்துகளை வைக்கிறார்.

“நரோதிஸத்தின் பொருளாதார உள்ளடக்கமும், அது திரு. ஸ்துரூவேயின் நூலில் விமர்சிக்கப்பட்டுள்ள முறையும்” என்ற கட்டுரையில் ஸ்துரூவேயின் கருத்துக்கள் மார்க்ஸின் கருத்துக்களிலிருந்து எவ்வாறு வேறு படுகின்றன என்பதை லெனின் காண்பிக்கிறார்.

“விவசாயப் பிரச்சினையும் மார்க்ஸின் ‘விமர்சகர்களும்” என்ற படைப்பில் லெனின் விவசாயப் பிரச்சினையை அலசுகிறார். இதில் அவர் மார்க்ஸின் கருத்துக்களை ஜெர்மன் சமூக ஜனநாயகவாதி களும் (டெவிட், ஹெர்ட்ஸ்) ருஷ்ய விமர்சகர்களும் (செல்னோவ், புல்காக்கோவ்) கொண்டிருந்த குட்டி முதலாளிய கருத்துக்களுக்கு எதிராக வைக்கிறார்.

“மாறுபட்ட கருத்துக்களின் விளைவாகத் தோன்றுவதே உண்மை” என்று ஒரு பிரெஞ்சுப் பழமொழி கூறுகிறது. இல்யீச் இதை விருப்பத்துடன் மேற்கோள் காட்டினார். தொழிலாளர் இயக்கத்தின்  முக்கிய பிரச்சினைகள் பற்றிய பல வர்க்கத்தினரின் கருத்துக் களையும் வெளிக்கொணர்ந்து அவற்றை எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்ந்தார்.

லெனின் அதைத் தமக்கே உரித்தான பாணியில் செய்தார்.

1917க்கு முந்திய விவசாயப் பிரச்சினை பற்றி அவர் எடுத்தாண்ட குறிப்புகளையும், மேற்கோள்களையும், உரையடக்கங்களையும் உட்கொண்ட “லெனின் திரட்டுக்கள்”, XIX  இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

“விமர்சகர்களின்” கூற்றுகளை அவர் கவனமாகப் படிப்பார். மிகவும் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவார். பிறகு அவற்றை மார்க்ஸின் கருத்துக்களோடு ஒப்பிடுவார். பலதரப்பட்ட விமரிசனங்களை விரிவாக ஆராய்ந்த அவர் அவற்றிற்கு எதிராக முக்கியமான, உடனடியாகத் தீர்க்கவேண்டிய கேள்விகளைத் தொடுத்து அவர்களது வர்க்கத் தன்மையைக் காட்ட அவர் முயன்றார்.

குறிப்பிட்ட சில பிரச்சினைகளை லெனின் அடிக்கடி வேண்டுமென்றே வலியுறுத்துவார். தொனி எப்படியிருந்தாலும், குறித்த பொருளினின்று நழுவாமல் இருக்கும் ஒருவர் கடுமையாகவும் முரடாகவும் இருக்கலாம் என்பதே அவர் கருத்து. பி.அ. ஸோர்கேயின் கடிதங் களுக்கு முகவுரை எழுதும்போது அவர் மேரிங்கை மேற் கோள் காட்டிக் கூறுகிறார்: “மார்க்சும் எங்கெல்சும் ‘நல்ல தொனியுடன்’ எப்பொழுதும் இருக்கவில்லை என்று மேரிங்க் கூறுவது சரிதான். தாங்கள் பிறரைத் தாக்கும்போது, தொனி பற்றி வெகுவாகச் சிந்தனை செய்யாத அவர்கள் தங்களைப் பிறர் தாக்கும்போது விம்மியழவும் இல்லை.” வெடுவெடுப்பான நடை லெனினது இயல்பாகும். அவர் அதை மார்க்ஸிடமிருந்து கற்றார்.

“தாமும் எங்கெல்சும் ‘சமூக ஜனநாயக வாதிகளால்’ ‘படுமோசமான’ முறையில் நடத்தப்பட்டு வந்ததை விடாது எதிர்த்ததாகவும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை அடிக்கடி கடுமையாக வெளியிட்ட தாகவும் மார்க்ஸ் கூறுகிறார்” என்று லெனின் எழுதினார். கடுமையான தொனியைக் கண்டு லெனின் பயப்பட வில்லை. ஆனால் விமர்சனம் மையப்பொருளிலிருந்து நழுவாமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார்.

லெனின் மிகவும் விரும்பி உபயோகித்த சொல் ஒன்று உண்டு: “வேண்டுமென்று குற்றங்கண்டுபிடித்தல்”. விவாதங்கள் குறித்த தலைப்பினின்று நழுவும்போதும், பேச்சாளர்கள் திரித்துக் கூறும் போதும், சிறு குற்றங் களைக் கண்டுபிடித்துப் பேசும்போதும் அவர் கூறுவார்: “இது வேண்டுமென்றே குற்றங்கண்டுபிடித்தல்”.

குறித்த பிரச்சினையைத் தெளிவுசெய்ய முயலாமல் ஏதோ சில்லரை குழுப் பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் தர்க்கங்களை அவர் இன்னும் தீவிரமாக எதிர்த்தார். இது மென்ஷெவிக்குகள் கடைப்பிடித்த போக்கு என்பதை இங்கே கூற வேண்டும். மார்க்சியம் கூறிய ஆலோசனை களைத் திரித்துக் கூறி, அவர்கள் தங்களது சொந்த குழு நலனுக்காக அவற்றைத் தவறாக உபயோகித்தார்கள். “ஸோர்கேயின் கடிதங்கள்” என்ற நூலுக்கான முகவுரையில் லெனின் கூறுகிறார்:

“பிரிட்டிஷ், அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் கூறிய ஆலோசனைகளை அப்படியே இலகுவாகவும் நேரடியாகவும் ருஷ்ய சூழ்நிலைகளில் உபயோகிக்கலாம் என்று எண்ணுவது மார்க்சியத்தை, அதன் ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் திட்டமான வரலாற்று ரீதியான தனிச்சிறப்புகளை ஆராய்வதற்கோ உபயோகிப்பது அல்ல; மாறாக அறிவுஜீவிகளைப் போல ஏதோ சில்லரை குழுப் பிரச்சினைகளின் கணக்கைத் தீர்த்துக் கொள்ளு வதற்காக உபயோகிப்பதாகும்.”

லெனின் மார்க்ஸை எவ்வாறு படித்தார் என்ற விஷயத்துக்கு இப்பொழுது வருவோம். இதை மேலே கூறிய எடுத்துக்காட்டிலிருந்து ஒரளவு காணலாம்: மார்க்ஸின் ஆராய்ச்சி முறைகளை அறிந்துகொள்வதும், குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் தனிச் சிறப்புகளை எப்படி ஆராய்வது என்பதை அவரிடமிருந்து கற்றறிவதும் மிகவும் அவசியம். லெனின் அதைத் தான் செய்தார். அவருக்கு மார்க்ஸியம் ஒரு வறட்டுச் சூத்திரமல்ல; மாறாகத் தமது செயல்களுக்கு வழிகாட்டும் ஒன்றாகும். அவர் ஒரு முறை கூறினார்: “மார்க்ஸிடமிருந்து ஆலோசனை பெற விரும்பினால்...” ஆம், இது ஒரு தனிச் சிறப்புடைய வாக்கிய அமைப்பு. அவரே எப்பொழுதும் மார்க்ஸிட மிருந்து “ஆலோசனை” பெற்றார். புரட்சியின் மிகவும் கடினமான, திருப்பு முனையான கட்டங்களில் அவர் மார்க்ஸின் நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்தார். நான் அவரது படிப்பறைக்குள் நுழைவது உண்டு. சுற்றிலும் நெருக்கடியான நிலைமை. ஆனால்

லெனினோ மார்க்ஸின் நூல்களில் மூழ்கியவாறு அமர்ந்திருப்பார். அவற்றிடமிருந்து அவரது கவனத் தைத் திருப்புவது எளிதான காரியமல்ல. தமது உணர்ச்சிகளைச் சாந்தப்படுத்திக் கொள்ளவோ, தொழிலாளி வர்க்கத்தின் பலத்திலும் அதன் இறுதியான வெற்றியிலும் தமக்குள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காகவோ மட்டும் - இது பற்றி அவருக்குப் போதுமான நம்பிக்கை இருந்தது - அவர் மார்க்ஸின் நூல்களில் மூழ்கியிருக்கவில்லை. மார்க்ஸிடமிருந்து “ஆலோசனை” பெறுவதற்காகவும் தொழிலாளர் இயக்கத்தை எதிர்நோக்கியுள்ள அவசரமான பிரச்சினை களுக்குப் பதில் காணவும் அவர் மார்க்ஸின் நூல்களைப் படித்தார். “இரண்டாம் டூமா பற்றி பி. மேரிங்க்” என்ற தமது கட்டுரையில் லெனின் எழுதுவதாவது: “சிலர் தங்களது தர்க்கங்களுக்காக மேற்கோள்களைத் தவறாக எடுத்தாளுகின்றனர். பிற்போக்குக் குட்டி முதலாளித்துவ வாதிகளுக்கு எதிராகப் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய அடிப்படைக் கருத்துக்களைக் கொண்டு அவற்றைச் சரியாக அலசி ஆராயாமல் ருஷ்யக் காடெட்டுக்களுக்கும் (பழமையாளர்களுக்கும்)” ருஷ்யப் புரட்சிக்கும் சம்பந்தப்படுத்துகிறார்கள்.

“இப்பேர்ப்பட்டவர்களுக்கு மேரிங்க் ஒரு நல்ல பாடம் கற்பிக்கிறார். முதலாளித்துவ புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் லட்சியம் பற்றி மார்க்ஸிடம் ஆலோசனை பெற விரும்புவோர் ஜெர்மன் முதலாளித் துவப் புரட்சி சம்பந்தப்பட்ட மார்க்ஸின் கருத்துக்

களைத் தான் ஆராய வேண்டும். தெரியாமலா நமது மென்ஷெவிக்குகள் இக்கருத்தினின்று அஞ்சி ஒதுங்கு கிறார்கள்? ருஷ்ய பூர்ஷ்வாப் புரட்சியில் சமரசவாத முதலாளிகளுக்கு எதிரான ருஷ்ய “போல்ஷெவிக்குகள்” நடத்தும் இரக்கமில்லாத போரட்டத்தில் இக்கருத்து பூரணமாக முற்றிலும் தெளிவாகப் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.”

எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையத்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்ஸின் நூல்களை எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அந்நூலில் காணப்பட்டுள்ள சூழ்நிலைமையைத் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்துநோக்கி, இவ் விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார் என்பதற்கு 1905 - 07 புரட்சியில் இம் முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

1902ஆம் ஆண்டில் எழுதிய “என்ன செய்வது?” என்ற தமது வெளியீட்டில் லெனின் கூறுகிறார்: “எந்த நாட்டிலுமுள்ள பாட்டாளி வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் மிகவும் புரட்சிகர மானவற்றைச் சரித்திரம் நம்முன் அவசரப் பிரச்சினையாக வைத் துள்ளது. இக்காரியத்தை நிறைவேற்றுவது, அதாவது ஐரோப்பாவில் மட்டு மன்றி ஆசியாவிலும் உள்ள (இப்பொழுது நாம் இதைக் கூற முடியும்) பிற்போக்கு ஆற்றல்களின் பலம் வாய்ந்த அரணைத் தகர்த்தெறி வது, ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை சர்வதேசப் புரட்சிப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையில் கொண்டு நிறுத்தும்.”

1905ஆம் வருட புரட்சிப் போராட்டம் ருஷ்யத் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசப் பங்கை உயர்த்தியது என்பதும், 1917இல் ஜாரிஸத்தைக் கவிழ்த்து ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தைச் சர்வ தேசப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையில் கொண்டு நிறுத்தியது என்பதும் நமக்குத் தெரிந்ததே. ஆனால் இது “என்ன செய்வது?” என்ற நூல் எழுதப்பட்டதற்கு 15 ஆண்டுகள் கடந்து நிகழ்ந்தது.

1905 ஜனவரி 9 ஆம் தேதி “அரண்மனைச் சதுக்கத்தில்” தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்துக் கிளம்பிய புரட்சி அலை, கட்சி மக்கள்திரளை எங்கே இட்டுச் செல்ல வேண்டும், எவ்விதச் செயல்தந்திரத்தைக் கையாள வேண்டும் என்ற கேள்வியை எழுப்பியது. இங்கு லெனின் மறுபடியும் மார்க்ஸிடமிருந்து “ஆலோசனை பெற்றார்”. 1848 ஆம் வருடத்திய பிரஞ்சு, ஜெர்மன் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சி பற்றி மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள், 1848 முதல் 1850 வரை” என்ற நூலையும், ஜெர்மன் புரட்சி பற்றியதும், பி. மேரிங்க் பதிப்பித்தது மான மார்க்ஸ், எங்கெல்ஸின்  Literary Heritage  [“இலக்கியமரபு”] என்ற நூலின் மூன்றாம் தொகுதியையும் லெனின் ஆழ்ந்து ஆராய்ந்தார்.

1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் மிதவாத குட்டிமுதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்த மென் ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.

ஜாரிஸத்துக்கு முடிவு கட்டுவது அவசியம் என்று லெனின் இவ்வறிக்கையில் கூறினார். இதில் அவர் தொடர்ந்து எழுதியதாவது: “மாநாடு (புது இஸ்க்ராவாதிகளால் கூட்டப்பட்டது - குரூப்ஸ்காயா) மற்றொன்றை மறந்துவிட்டது. அதிகாரம் ஜாரின் கையில் இருக்கும் வரையில் எந்தப் பிரதிநிதி களால் நிறைவேற்றப் பட்ட எல்லாத் தீர்மானங்களும் சாரமற்றவை; அவை வெறும் வீண் பிதற்றல்கள்.

1848 ஆம் வருட ஜெர்மன் புரட்சியில் பிரபலமாய் விளங்கிய பிராங்பர்ட் பாராளுமன்றத்தின் ‘தீர்மானங்கள்’ இத்தகை யவையே. புரட்சிப் பாட்டாளி வர்க்கத்தின் பிரதி நிதியான மார்க்ஸ் தமது  New Rheinische Zeitung  [புதிய ரைன்பிரதேசப் பத்திரிகை”] என்ற பத்திரிகையில் பிராங்பர்ட்டின் மிதவாத ‘அஸ்வொபஷ்தேன்த்ஸிக்களை’ [விடுதலை வீரர்களை] இரக்கமற்று நிந்தனை செய்தும் கண்டித்தும் எழுதினார். ஏனெனில் இவர்கள் நயச் சொற்களைக் கூறினார்கள், எல்லாவித ஜனநாயகவாதத் ‘தீர்மானங்களையும்’ நிறைவேற்றினார்கள், எல்லாவித உரிமைகளையும் ‘நிறுவினார்கள்’.

ஆனால் உண்மையில் இவர்கள் மன்னரின் கையில் அதிகாரத்தை விட்டு விட்டார்கள்; மன்னரின் வசம் இருந்த இராணுவ ஆற்றலுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யத் தவறிவிட்டார்கள். இவ்வாறு பிராங்பர்ட் ‘அஸ்வொபஷ் தேன்த்ஸிக்கள்’ வீண் பேச்சு பேசிக் கொண்டிருக்கையில் மன்னர் தனது நேரம் வரும்வரை காத்திருந்து, தனது இராணுவப் படையினை ஒன்று திரட்டினார்; எதிர்ப்புரட்சியினர் உண்மையான பலத்தை ஆதாரமாகக் கொண்டு ஜனநாயகவாதிகளையும் அவர்களது நயத் ‘தீர்மானங்களையும்’ குப்புறக் கவிழ்த்தனர்.”

லெனின் கீழ்க்கண்ட கேள்வியைக் கிளப்பினார்: முதலாளிகள் ஜாரிஸத்துடன் உடன்பாடு செய்வது மூலம் ருஷ்யப் புரட்சியைச் சீர்குலைப்பார்களா, அல்லது, மார்க்ஸ் கூறியது போல், “கீழ்மக்கள் முறையில்” ஜாரிஸத்தை முறியடிப்பார்களா?

“புரட்சி திட்டமான வெற்றியைப் பெறுமானால் நாம் ஜாரிஸத்தை ஜாகோபின் முறையில், அல்லது நீங்கள் விரும்பினால் கீழ்மக்கள் முறையில் முறியடிக் கலாம். பிரசித்தி பெற்ற New Rheinische Zeitung  பத்திரிகையில் மார்க்ஸ் 1848 இல் எழுதினார்: “பிரெஞ்சுப் பயங்கரவாதமானது, முதலாளிகளின் எதிரிகளான வரம்பிலா முடியரசு, நிலப்பிரபுத்துவம், அற்பவாதம் இவற்றை கீழ்மக்கள் முறையில் முறியடிப்பதன்றி வேறு எதுவுமல்ல (மார்க்ஸ் ‘Nachlass’, மேரிங்கின் பதிப்பு, தொகுதி III,, பக்கம் 211ஐ பார்க்கவும்). ஜனநாயகப் புரட்சிக் காலத்தில் ‘ஜகோபினிஸம் என்ற பூச்சாண்டி காட்டி ருஷ்யாவிலுள்ள சமூக ஜனநாயகத் தொழிலாளர் களைப் பயமுறுத்த முயன்றவர்கள் மார்க்ஸின் இந்தச் சொற் களுக்குள்ள மதிப்பை நினைக்க மறுத்துவிட்டார்களா?”

“தீவிரப் புரட்சிகர எதிர்க்கட்சியாக இருப்பதே” தங்கள் செயல் தந்திரம் என்றும் இது தற்செயலாக ஓரளவுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றிச் சில நகரங்களில் புரட்சிகரக் கம்யூன்களை ஏற்படுத்துவதை உட்கொண்டது என்றும் மென்ஷெவிக்குகள் கூறினர். “புரட்சிகரக் கம்யூன் என்பது என்ன?’’ என்று கேட்ட லெனின் அதற்குத் தாமே பதிலளிக்கிறார்: “புரட்சிகர எண்ணங்களில் அவர்களுக்கு (புதிய இஸ்க்ராவாதிகளுக்கு - நா. குரூப் ஸ்காயா) உள்ள குழப்பத்தினால் பல சமயங்களில் புரட்சிகர வாக்கியங்களை உபயோகிக்கிறார்கள்.

ஆம், சமூக ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய தீர்மானத்தில் உள்ள ‘புரட்சிகர கம்யூன்’ என்ற வார்த்தைகள் வெறும் புரட்சிகரச் சொல்லடுக்குகளே யன்றி வேறெதும் இல்லை. கடந்துபோன பழங் காலத்தின் ‘மயக்கு’ மொழிகளைக் கொண்டு எதிர்காலக் கடமைகளை மறைக்கும் நோக்கம் கொண்டுள்ள மேற் குறிப்பிட்ட சூத்திரத்தை உபயோகிப்பதை மார்க்ஸ் பன்முறை கண்டித்தார்.

இவ்வாறு வரலாற்றில் ஏற்கனவே தன் பங்கை முடித்துக் கொண்ட மயக்கு சொற்களை உபயோகிப்பது, சாரமற்ற, தீங்கு விளைக்கும் பகட்டே; அது குழந்தைக் கிலுகிலுப்பையைப் போன்றது. ஏன் தாற்காலிகப் புரட்சி அரசாங்கத்தை நாம் அமைக்க விரும்புகிறோம் என்பதையும், ஏற்கனவே ஆரம்பித்துள்ள வெகுஜன எழுச்சி வெற்றி பெற்ற உடனே ஆட்சி அதிகாரத்தின்மீது திட்டமாகச் செல்வாக்குச் செலுத்துவோமானால் என்னென்ன மாறுதல்களை அமுல் நடத்துவோம் என்பதையும் நாம் தொழிலாளர்களுக்கும் மற்ற எல்லா மக்களுக்கும் தெளிவாகவும் ஐயமின்றியும் விளக்க வேண்டும். இவைதான் அரசியல் தலைவர்களை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்.”

லெனின் மேலும் கூறுகிறார்: “விமரிசனத்தின் ஆயுதங்களை ஆயுதங்களின் விமரிசனமாக ஆக்குவதின் அவசியத்தைப் பற்றி மார்க்ஸ் கூறியுள்ளதை, மார்க்சியத்தைக் கொச்சைத்தனமாகத் திரித்துரைப்போர் எப்போதும் எண்ணியே பார்ப்பதில்லை. மார்க்ஸின் பெயரை வீணாகச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பிராங்பர்ட் முதலாளித்துவ வீண்பேச்சு வாதிகளின் போக்கைப் பின்பற்றியே தமது செயல்தந்திரத் தீர்மானங்களை வரையறுக்கின்றனர். மேற்கூறிய முதலாளித்துவ வீண்பேச்சுவாதிகள் வரம்பிலா முடியரசைத் தயங்காது நிந்தனை செய்தனர்; ஜனநாயக உணர்வை மேலும் ஊட்டினர்; ஆனால் புரட்சியின் நேரம் செயல்பட வேண்டிய நேரமாகும், மேலிருந்தும் கீழிருந்தும் செயல்பட வேண்டிய நேரமாகும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.”

“புரட்சிகள் வரலாற்றின் ரயில் எஞ்சின்களாகும்” என்று மார்க்ஸ் கூறினார். பொங்கியெழுந்துவந்த புரட்சியின் பங்கை நிர்ணயிப்பதில் மார்க்ஸின் இக்கூற்றை லெனின் மேற்கோள் காட்டினார்.

New Rheinische Zeitung பத்திரிகையில் மார்க்ஸ் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை மேலும் அலசி நோக்கிய லெனின், பாட்டாளி வர்க்கத்தின், விவசாயி களின் புரட்சி - ஜனநாயக புரட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன என்று விளக்கினார். அவர் எழுதுவதாவது:

“ஆக, 1849 ஏப்ரலில்தான், அதாவது இந்தப் புரட்சிப் பத்திரிகை வெளிவரத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டு கழிந்த பிறகுதான் (New Rheinische Zeitung 1848 ஜீன் 1 ஆம் தேதி முதல் வெளிவரத் தொடங்கியது) மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளர்களுக்கான ஒரு நிறுவனம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்! அதுவரையில் அவர்கள் சுயேச்சையான தொழிலாளர் கட்சியுடன் அமைப்புரீதியான தொடர்பின்றி வெறுமனே ஒரு ‘ஜனநாயகத்தின் செய்தித்தாளை’ நடத்திவந்தனர்!

“தற்காலக் கண்ணோட்டத்தில் இது நம்ப முடியாத, எண்ணியும் பார்க்க இயலாத விஷயமாகும். ஆனால் இது அக்கால ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் தற்கால ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சிக்கும் உள்ள பெருத்த வேறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. இவ்விஷயம், (1848 இல், பொருளாதாரத் துறையிலும், பிளவுபட்டு பல அரசுகள் இருந்ததால் அரசியல் துறையிலும், ஜெர்மனி பின் தங்கிய நாடாகையால்) ஜெர்மன் ஜனநாயகப் புரட்சியில் எவ்வளவு குறைந்த அளவுக்கு இயக்கத்தின் பாட்டாளி வர்க்கத்திற்குரிய தன்மைகளும் பாட்டாளி வர்க்கப் போக்கும் காணப்பட்டது என்பதைக் காட்டுகிறது”.

மார்க்ஸின் கடிதங்கள் பற்றியும் நடவடிக்கைகள் பற்றியும் 1907 இல் விளாதிமீர் இல்யீச் எழுதிய கட்டுரைகள் தனிச்சுவை வாய்ந் தவை. அக்கட்டுரைகள் வருமாறு: கார்ல் மார்க்ஸ் லு. குகல்மனுக்கு எழுதிய கடிதங்களின் ருஷ்ய மொழிபெயர்ப்புக்கான முகவுரை, இரண்டாம் டூமா பற்றி பி.மேரின்க் இ.பி. பெக்கர்,யோ. டித்ஸ்கேன், பி. எங்கெல்ஸ், கா. மார்க்ஸ் மற்றும் சிலர் பி.ஆ. ஸோர்கேயுக்கும் இதரருக்கும் எழுதிய கடிதங்களின்’ ருஷ்ய மொழிபெயர்ப்புக்கான முகவுரை.

இக்கட்டுரைகள், லெனின் எவ்வாறு மார்க்ஸை ஆராய்ந்தார் என்பதைத் திண்ணமாகக் காட்டுகின்றன. கடைசியாகக் கூறப்பட்டது மிகவும் சுவையானதாகும். பக்தானவுடன் தமக்குக் கருத்து வேற்றுமை தோன்றி யதையடுத்து, தமது கவனத்தை இயங்கியல் பொருள் முதல் வாதம் பற்றிய பிரச்சினைகள் வெகுவாக ஈர்த்த போது, லெனின் தீவிரமாகத் தத்துவவாதத்தைப் படிக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் தான் இது எழுதப் பட்டது.

புரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும், இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.

தமது “பி.ஆ. ஸோர்கே எழுதிய கடிதங்களுக்கு முகவுரையில்” அவர் கூறுகிறார்: “பிரிட்டிஷ் - அமெரிக்கத் தொழிலாளர் இயக்கங்கள் பற்றியும் ஜெர்மன் தொழிலாளர் இயக்கம் பற்றியும் மார்க்சும் எங்கெல்சும் கூறியவற்றை ஒப்பிடுவது மிகவும் அறிவூட்டுவதாகும். ஒருபுறம் ஜெர்மனியும் மறுபுறம் இங்கிலாந்தும் அமெரிக்காவும் முதலாளித்துவ வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களை அடைந்துள்ள நாடுகளாக இருக்கின்றன. அந்நாடுகளில் அரசியல் வாழ்வு முழுவதிலும் முதலாளிகள், ஒருவர்க்கம் என்ற முறையில், வெவ்வேறு வகைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதை நாம் நினைவில் வைத்துக் கொண்டால் மேற்குறிப்பிட்ட ஒப்பிடுதல் மேலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

அறிவியல் கண் ணோட்டத்திலிருந்து பார்த்தால் நாம் இங்கே காண்பது பொருள்முதல்வாத இயங்கியலின் ஒரு மாதிரியும், வெவ்வேறு திட்டமான அரசியல், பொருளாதார நிலைமைகளின் தனித் தண்மைகளுக்கேற்ப குறித்த பிரச்சினையின் வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்தி வெளிக்கொணரும் திறமையுமாகும். நடைமுறைக் கொள்கையினின்றும் தொழிலாளர் கட்சியின் செயல் தந்திரத்தின் கண்ணோட்டத்திலிருந்தும் நோக்கினால் நாம் இங்கே காண்பது பல்வேறு நாட்டுத் தொழிலாளர் இயக்கங்களின் வெவ்வேறு கட்டங்களுக்கேற்பப் போராடும் பாட்டாளி வர்க்கத்தின் கடப்பாடுகளை ‘பொதுவுடமை அறிக்கையின்’ ஆசிரியர்கள் எவ்வாறு வரையறுத் துள்ளார்கள் என்பதின் ஒரு மாதிரியேயாகும்.”

1905 புரட்சி பல புது அவசியமான பிரச்சினைகளை முன்கொணர்ந்தது. அவற்றைத் தீர்க்க லெனின் மேலும் அழமாக மார்க்ஸின் நூல்களைப் படிக்கலானார். மார்க்ஸை ஆராயும் லெனினுக்குரிய முறை புரட்சியின் தழல்களில்தான் புடமிடப்பட்டது.

இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான், மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும், அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியது. அக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது “அரசும் புரட்சியும்” என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும். அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.

லெனினின் அரசும் புரட்சியும் என்ற நூலின் முதல் பக்கத்தை மட்டும் இங்குத் தருகிறேன்: “மார்க்ஸின் போதனைகளுக்கு இப்பொழுது என்ன நேரிட்டுள்ளதோ அதுதான், வரலாற்றுப் போக்கில் புரட்சிகரச் சிந்தனை யாளர்களின் போதனைகளுக்கும், விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் தலைவர் களின் போதனைகளுக்கும் நேர்ந்துள்ளது. மகத்தான புரட்சியாளர்கள் உயிரோடு இருந்த போது ஒடுக்கும் வர்க்கத்தினர் இடைவிடாது அவர்களைத் துன்புறுத்தினர்; வெறிபிடித்த எரிச்சலுடன் அவர்களது போதனைகளை எதிர்த்தனர்; அவர்கள்பால் கடும் பகையுணர்ச்சி கொண்டனர்; சிறிதும் தயங்காது அவர்கள் மீது பொல்லாத அவதூறுகளையும் பழிகளையும் பொழிந்தனர்.

அவர்கள் இறந்த பிறகு அவர்களைத் தீங்கற்ற தேவ உருவங்களாக்கி, தெய்வ வழிபாட்டுக்குரியவர்களாக ஆக்கி, அவர்களது பெயர்களைப் புனிதப்படுத்து கிறார்கள். ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் ‘மனஅமைதிக் காகவும்’, அவர்களை ஏமாற்றவும் இவ்வாறு செய் கின்றனர். அதே சமயத்தில் இந்த மகத்தான புரட்சிக் காரர்களின் புரட்சிப் போதனையின் உள்ளடக்கத்தை மறைத்துவிடுகிறார்கள். இந்தப் போதனையின் புரட்சி அம்சத்தை மழுங்கடித்து அதைத் திரித்துக் காட்டு கிறார்கள். மார்க்சியத்தை இவ்வாறு ‘வெளிக்காட்டு வதில்’, தற்காலத்தில் முதலாளிகளும், தொழிலாளர் வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளும் கூட்டு சேர்ந்துள்ளனர். மார்க்சியப் போதனையிலுள்ள புரட்சி காரச் சாரத்தை, அதன் புரட்சி உள்ளத்தை, மறைப் பதிலும், திரித்துக்காட்டுவதிலும், உருக்குலைப்பதிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

முதலாளிகள் ஏற்கக் கூடியவற்றை அல்லது ஏற்பார்கள் என்று தோன்றுகிற வற்றை மட்டும் முன்வைக்கிறார்கள். எல்லா சமூக - சீர்திருத்த பழமையாளர்களும் இப்போது “மார்க்சியர் களே” (சிரிக்காதீர்கள்!). ஜெர்மன் முதலாளித்துவ அறிஞர்கள் - நேற்றுவரை மார்க்சியத்தை அழிக்கப் பாடுபட்டவர்கள் - இப்போது அடிக்கடி ‘ஜெர்மன் தேச’மார்க்ஸைப் பற்றிப் பேசுகிறார் கள். அவர்தாம், சூறையாடும் போருக்கு நன்கு தயாராக இருந்த தொழி லாளர் சங்கங்களுக்கு அறிவூட்டியது போன்றும் பேசுகிறார்கள்!

“இத்தகைய சூழ்நிலையில், இதுவரையில் கண்டிராத அளவுக்கு மார்க்ஸியம் பரவலாகத் திரித்துக் கூறப்படும்போது, அரசு பற்றிய மார்க்ஸின் உண்மை யான அறிவுறுத்தலை மீண்டும் நிலைநாட்டுவது நமது முக்கிய கடமையாகிறது”

“லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற நூலில் தோழர் ஸ்டாலின் பின்வருமாறு எழுதுகிறார்:

“பிற்பட்ட கட்டத்தில்தான், அதாவது பாட்டாளி வர்க்கம் நேரடி நடிவடிக்கைகளில் இறங்கிய கட்டத்தில், முதலாளிகளைத் தூக்கி யெறியும் பிரச்சினை நேரடி நடைமுறை முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக ஆகிவிட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கட்டத்தில், பாட்டாளி வர்க்கத்தின் துணைப்படைகள் பற்றிய கேள்வி (போர்த் தந்திரம்) மிகவும் அத்தியாவசிய மானதான கட்டத்தில், பார்லிமென்டு முறையைச் சார்ந்ததும் சாராததுமான எல்லாப் போராட்ட, நிறுவன வகைகளும் (நடைமுறைத் தந்திரம்) தெளிவாக உருப்பெற்ற கட்டத்தில்தான் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கான முழுமையான போர்த் தந்திரத் தையும் விரிவான நடைமுறைத் தந்திரத்தையும் தீட்ட முடிந்தது.

இவ்வாறாகிய கட்டத்தில்தான், இதுகாறும் இரண்டாம் சர்வதேசியத்தின் சந்தர்ப்பவாதிகளால் மூடிமறைக்கப்பட்ட  மார்க்ஸ், எங்கெல்ஸின் போர்த் தந்திரம், நடைமுறைத் தந்திரம் பற்றிய மகத்தான கருத்துக்களை லெனின் உலகறிய வெளியிட்டார். மார்க்ஸ், எங்கெல்ஸின் நடைமுறைத் தந்திரத்தை வெளிக்கொணர்வதோடு மட்டும் லெனின் நிற்க வில்லை. அவர் அதை வளர்த்தி, புது கருத்துக்களையும் திட்டங்களையும் சேர்த்து, பாட்டாளி களின் வர்க்கப் போராட்டத்துக்கு வழிகாட்டும் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் ஒன்றுசேர்த்து வெளிக்கொணர்ந்தார்.”

தங்களது “போதனை வறட்டுச் சூத்திரமல்ல; மாறாகச் செயலுக்கு வழிகாட்டியாகும்” என மார்க்சும் எங்கெல்சும் எழுதினர். லெனின் இதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். மார்க்ஸ், எங்கெல்ஸின் நூல்களை அவர் கற்ற முறையும், புரட்சி நடைமுறையும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காலத்திய முழு சூழ்நிலை மையும் மார்க்ஸின் புரட்சிச் சிந்தாந்தத்தை உண்மை யிலேயே செயலுக்கு வழிகாட்டியாக்கச் செய்ய லெனினுக்கு உதவின.

மிகமிக முக்கியத்துவம் உள்ள செய்தி ஒன்றைப் பற்றி இங்கே கூற விரும்புகிறேன். சோவியத் ஆட்சியின் பதினைந்தாம் ஆண்டு விழாவை அண்மையில் நாம் கொண்டாடினோம். இதையட்டி, 1917 அக்டோபரில் ஆட்சியைக் கைப்பற்ற எவ்வாறு ஏற்பாடு செய்யப் பட்டது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொண்டோம். அது திடீரென்று ஏற்பட்டதல்ல, புரட்சி எழுச்சிகளுக்கு எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது பற்றி மார்க்ஸ் கூறியவற்றை வழிகாட்டியாகக் கொண்டு லெனினால் முற்றிலும் திட்டமிட்டுச் செய்யப்பட்டது.

அக்டோபர் புரட்சிக்குப் பிறகு பாட்டாளி வர்க்கத்தினரின் கையில் சர்வாதிகாரம் வரப்பெற்றதால் போராட்டத்துக்கான நிலைமைகள் முற்றிலும் மாறி விட்டன. பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்துக்கு வந்துள்ள சகாப்தத்தில் லெனின், சமூகஉடைமை கட்டுமான வேலைகளில் மார்க்சியத்தைக் கொண்டுவர முடிந்தது. ஏனென்றால் மார்க்ஸ், எகெல்ஸின் ஆராய்ச்சி உரைகளில் கூறப்பட்டுள்ளனவற்றை லெனின் அப்படியே எழுத்துக்கு எழுத்து கடைபிடிக்கவில்லை. மாறாக அவற்றின் புரட்சிசாரத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார்.

ஒரு சில சந்தர்ப்பங்களை மட்டும் கூறுகிறேன். ஒரு பெரும் ஆராய்ச்சி வேலையைச் செய்வது அவசியம்: லெனின் மார்க்ஸிடமிருந்து எவற்றை, எப்படி, எச் சமயத்தில், புரட்சி இயக்கத்தின் எந்தக் கடப்பாடு களுக்காக எடுத்தாண்டார் என்பதைக் காண வேண்டும். மிக முக்கியப் பிரச்சினைகளான தேசிய இனப் பிரச்சினை, ஏகாதிபத்தியம் போன்றவற்றைப் பற்றி யெல்லாம் நான் கூறப்போவதில்லை.

லெனினது படைப்புகள் அனைத்தின் திரட்டு வெளியிடப் பட்டதும், “லெனின் திரட்டுக்கள்” பதிப்பிக்கப்பட்டதும் இதை எளிதாக்குகிறது. முதலிலிருந்து கடைசிவரை புரட்சிப் போராட்டத்தின் எல்லாக் கட்டங்களிலும் லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பது, மார்க்ஸைப் புரிந்துகொள்ள மட்டும் அல்ல, லெனினையும் அவர் மார்க்ஸை கற்ற முறைகளையும், மார்க்ஸின் போதனையை நடைமுறையில் கொண்டுவரக் கடைப்பிடித்த வழி களையும் நாம் நன்கு புரிந்துகொள்ளவும் உதவும்.

லெனின் மார்க்ஸை கற்ற முறையின் பெரும் முக்கியத்துவமுள்ள மற்றொரு அம்சத்தைக் கவனிப்பது அவசியம். மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதியவற்றையும், மார்க்ஸைப் பற்றி “விமர்சகர்கள்” எழுதியவற்றையும் மட்டுமின்றி, மார்க்ஸ் தனது கருத்துக்களை மேற் கொள்ளக் காரணமாயிருந்த பாதையையும், மார்க்ஸின் எண்ணங்களைத் தூண்டி, அவற்றைக் குறிப்பிட்ட திசையில் திருப்பக் காரணமாயிருந்த நூல்களையும் லெனின் படித்தார். மார்க்ஸின் உலகக் கண்ணோட் டத்துக்கான ஊற்றுக்களையும் (இவ்வாறு நாம் சொல்லலாமே யானால்), பிற எழுத்தாளரிடமிருந்து மார்க்ஸ் எவற்றை, எப்படி எடுத்தாண்டார் என்பதையும் லெனின் ஆராய்ந்தார்.

இயங்கியல் பொருள்முதல்வாதத்தின் ஆராய்ச்சி முறையைக் கூடிய அளவு ஆழமாக அலசி ஆராய லெனின் விருப்பப்பட்டார். “மார்க்ஸியக் கொடியின் கீழ்” என்ற சஞ்சிகையின் நிர்வாக ஊழியர்கள் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஹெகலின் இயங்கியல் வாதத்தை முறையாகக் கற்றறிய ஏற்பாடு செய்ய வேண்டுமென லெனின் “போர்க் குணமுள்ள பொருள்முதல் வாதத்தின் முக்கியத்துவம்” என்ற தமது கட்டுரையில் (1922) எழுதியுள்ளார். பூர்ஷ்வா உலகக் கண்ணோட்டம் மீள்வதை எதிர்த்தும் ஒரு கெட்டியான தத்துவார்த்த அடிப்படையின்றிப் போராடுவது சாத்திய மற்றது என அவர் கூறுகிறார். ஹெகலின் இயங்கியல்

வாதத்தை பொருள்முதல்வாதக் கண்ணோட்டப்படி படிக்க எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது பற்றி லெனின் தமது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதினார். இது பற்றி அவர் கூறுவதாவது:

“...ஒரு கெட்டியான தத்துவார்த்த அடிப்படை யின்றி எந்த இயற்கை அறிவியலாலும் எந்த பொருள் முதல்வாதத்தாலும் முதலாளித்துவக் கருத்துக்களின் தாக்குதல்களை எதிர்த்தும், முதலாளித்துவ உலகக் கண்ணோட்டம் மீள்வதை எதிர்த்தும் போரிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்போராட்டத்தில் தாக்குப் பிடித்து வெற்றியடைய, இயற்கை அறிவியலாளர் நவீன பொருள்முதல்வாதியாக இருக்க வேண்டும்; அதாவது அவர் இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்க வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைய ‘மார்க்ஸியக் கொடியின் கீழ்’ சஞ்சிகையின் நிர்வாக ஊழியர்கள் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஹெகலின் இயங்கியலை, அதாவது மார்க்ஸ் தமது ‘மூலதனம்’ நூலிலும் இதர பிற வரலாற்று, அரசியல் நூல்களிலும் நடைமுறை யில் உபயோகித்த இயங்கியல்வாதத்தைக் கற்றறிய ஏற்பாடு செய்ய வேண்டும்...

மார்க்ஸ் எவ்வாறு ஹெகலின் இயங்கியலை பொருள்முதல்வாத முறையில் உபயோகித்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு இயங்கியலை நாம் எல்லாக் கோணங்களிலிருந்தும் வளர்க்க முடியும், வளர்க்க வேண்டும்; ஹெகலின் முக்கிய நூல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளைச் சஞ்சிகையில் வெளியிட வேண்டும்; அவற்றைப் பொருள்முதல் முறையில் விளக்க வேண்டும்; பொருளாதார, அரசியல் துறைகளில் மார்க்ஸ், இயங்கியல்வாதத்தையும், அதன் எடுத்துக் காட்டுக்களையும் உபயோகித்த முறையை உதாரண மாகக் காட்டி (அண்மைய வரலாறு, குறிப்பாக இக்கால ஏகாதிபத்தியப் போரும், புரட்சியும் இதற்கு நன்கு வாய்ப்பளிக்கின்றன) அவற்றை மதிப்பிட வேண்டும். இவ்வாறு செய்வது அவசியம்; அது சாத்தியமானதும்.

என் கருத்துப்படி, ‘மார்க்ஸியக் கொடியின் கீழ்’ சஞ்சிகையின் ஆசிரியர்களும் நிர்வாக ஊழியர்களும் ஒருவித ‘ஹெகலின் இயங்கியல்வாதத்தின் பொருள் முதல்வாத நண்பர்களின் சங்க’மாக இயங்க வேண்டும். இயற்கை அறிவியலில் புரட்சி தோற்றுவித்த தத்து வார்த்தப் பிரச்சினைகளுக்கும், முதலாளிய நாகரிகத்தைப் போற்றும் அறிவு ஜீவிகள் எதிர்ப்பட்டால், அவர்களைத் “தடுமாறச் செய்து” பிற்போக்கில் கொண்டு தள்ளும் தத்துவார்த்தப் பிரச்சினை களுக்கும் ஹெகலின் இயங்கியல்வாதத்தில் பொருள்முதல்வாத முறையில் பதில் கூறப்பட்டிருப்பதை எவ்வாறு காண்பது என்பதை நவீன இயற்கை அறிவியலாளர் அறிய முடியும் (எவ்வாறு காண்பது என்பது அவர்களுக்குத் தெரிந்தால், அல்லது நாம் அவர் களுக்கு உதவக் கற்றுக்கொண்டோ மானால்).”

“லெனின் திரட்டுக்களின் IX,XII, தொகுதிகள் இப்போது வெளிவந்துள்ளன. ஹெகலின் அடிப்படை நூல்களை ஆராய்ந்த போது லெனின் எண்ணியவற்றின் முழுப்போக்கையும், ஹெகலின் தத்துவத்தைப் படிப்பதில் அவர் எப்படி இயங்கியல் பொருள் முதல்வாத ஆராய்ச்சி முறைகளை அனுசரித்தார் என்பதையும், இதை ஆராயும் அதே சமயத்தில் மார்க்ஸின் கூற்றுகளையும் இணைப்படுத்தி ஆராய்ந்து மார்க்ஸியத்தைப் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் செயலுக்கு வழிகாட்டியாக உபயோகிப்பதை எப்படி அலசினார் என்பதையும் இத்தொகுதிகள் வெளிப்படுத்து கின்றன.

லெனின் ஹெகலின் நூல்களை மட்டும் படிக்க வில்லை. உதாரணமாக 1858, பிப்ரவரி 1 இல் மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தையும் படித்தார். இக்கடிதத்தில், லஸ்ஸால் எழுதிய “எபீஸஸைச் சார்ந்த இருட்டு ஹெராக்லிடஸின் தத்துவ இயல்” என்ற நூலின் ஐஐவது தொகுதியை மார்க்ஸ் கடுமையாக விமர்சனம் செய்து, அது “கற்றுக்குட்டியின்” நூல் என்றார். முதலில் மார்க்ஸ் கூறியவற்றை லெனின் சுருக்கிக் கூறுகிறார். “லஸ்ஸால் ஹெகலின் கருத்துக்களைத் திரும்பவும் கூறுகிறார்; அவரைப் பார்த்தெழுதுகிறார்; ஹெராக்லிடஸிடமிருந்து சில பகுதிகளை லட்சக் கணக்கான தடவைகள் எடுத்தாளுகிறார்.

தமது நூலில் எல்லை மீறிய அறிவுக் கூர்மையையும் நடைமுறைக்கு ஒவ்வாத பாண்டித்தியத்தையும் பொழிந்து தள்ளுகிறார்.” இருப்பினும் லெனின் லஸ்ஸாலின் இந்த நூலைப் படித்தார், குறிப்புரை எழுதி, எடுத்துக்காட்டுகளைத் தயார் செய்தார்; இது பற்றிய தமது கருத்துக் களைக் குறிப்பெழுதி கீழ்க்கண்ட முடிவுக்கு வந்தார்: “மொத்தத்தில் மார்க்ஸின் கருத்து சரியானதுதான். லஸ்ஸாலின் நூல் படிக்கத் தகுந்ததல்ல.” இந்த நூலை ஆராய்ந்ததால் லெனின் மார்க்ஸை நன்கு புரிந்து கொள்ளவும், அவர் ஏன் இந்நூலை விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

முடிவாக மார்க்ஸ் பற்றிய லெனினது வேறொரு விதப் பணியை - அவர் மார்க்ஸியத்தைத் தெளிவாக்கிய பணியை - குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு தெளிவாக்குபவர் மார்க்ஸின் நூல்களைத் “தீவிரமாக” ஆராய்ந்து, குறிப்பிட்ட கருத்துநிலையின் சாரத்தை எளிதாகவும் தெளிவாகவும் தர முயலும்போது தாமே ஏராளமான வற்றைக் கற்றறிவார்.

லெனின் இப்பணியில் எப்பொழுதும் தீவிரமாக ஈடுபட்டார். தூரப்பிரதேசத்துக்கு வெளியேற்றப்பட்டு வாழ்ந்த காலத்தில் பிளெகானவுக்கும் அக்ஸெல்ரொ துக்கும் லெனின் பின்வருமாறு எழுதினார்: “தொழிலாளர் களுக்காக எழுதுவதைக் கற்றறிவதைப் போன்று வேறு எதையும் நான் அவ்வளவு விரும்பவில்லை.”

மார்க்சியத்தைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ளுமாறு விரித்துரைக்க லெனின் விரும்பினார்.

19 ஆம் நூற்றாண்டின் தொண்ணூறாமாண்டுகளில் மார்க்சிய குழுக்களில் பணி புரிந்தபோது அவர் எல்லாவற்றுக்கும் மேலாக “மூலதனம்” நூலின் முதல் தொகுதியை விளக்கப் பாடுபட்டார். இதற்கு அவர், தம் விளக்க உரையைக் கேட்பவர்களின் வாழ்விலிருந்தே பல உதாரணங்களைக் காட்டி விளக்கினார். 1911 இல், லொன்ஜீமோவிலுள்ள (பாரிஸ¨க்கு அருகே) கட்சிப் பள்ளியில், ஏற்கனவே தோன்றியுள்ள புரட்சி இயக்கத்துக்குத் தலைமை தாங்கக் கூடிய தலைவர்களைத் தயார் செய்யும் போது, லெனின், தொழிலாளர்களுக்கு அரசியல் பொருளாதாரம் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இவ்வாறு செய்யும்போது மார்க்ஸியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மிகவும் சுலபமான முறையில் விளக்க முயன்றார். “பிராவ்தா” பத்திரிகையில் தாம் எழுதிய பல கட்டுரைகளில் மார்க்சியத்தின் பல்வேறு அம்சங்களைத் தெளிவாக்க லெனின் பாடுபட்டார்.

1921 இல் தொழிற் சங்கங்கள் பற்றிய விவாதத்தில், எந்தப் பொருளையும் சம்பவத்தையும் இயங்கியல்வாதக் கண்ணோட்டத்தி லிருந்து ஆராய்வதற்கான முறைகளைப் பற்றிப் பேசம் போது லெனின் குறிப்பிட்ட ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணமாகும். லெனின் கூறினார்: “ஒரு பொருளை உண்மையாகவே அறிய வேண்டுமானால் அதைப் பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அதைப் பற்றிய எல்லாவற்றையும், எல்லா நேரடித் தொடர்புகளையும், எல்லா மறைமுகத் தொடர்புகளையும் ஆராய வேண்டும். இதை நாம் முற்றிலும் தீரச் செய்ய முடியாது. ஆயினும் இவ்வாறு அழ்ந்து ஆராய்வதால் பெருந்தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், உணர்ச்சியற்றுச் செயல் படுவதைத் தடுத்துக்கொள்ளலாம். இது முதலாவது; இரண்டாவதாக, இயங்கியல் தர்க்கப்படி ஒரு பொருளை அதன் வளர்ச்சி நிலையிலும் ‘இயங்கு நிலையிலும்’ (ஹெகல் அவ்வாறு சில சமயங்களில் கூறினார்), மாறும் நிலையிலும் வைத்துக் காண வேண்டும்...

மூன்றாவதாக, ஒரு பொருளை முழுமையாக ‘வரையறுக்கும்’ போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அனுபவம் உண்மையின் அளவு கோலாகவும், அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது. நான்காவதாக, காலஞ் சென்ற பிளெகானவ் ஹெகலைப் பின்பற்றிக் கூறியது போல் ‘புறநிலை உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை எப்பொழுதும் திட்டவட்டமானது’ என்பதை இயங்கியல் தர்க்க வாதம் கற்பிக்கிறது.”

எப்பொழுதும் இயங்கியல் பொருள்முதல்வாத ஆராய்ச்சி முறையை உபயோகித்தும், மார்க்சிடமிருந்து “ஆலோசனை” பெற்றும் தத்துவ இயல் பற்றிய பிரச்சினைகளைப் பல ஆண்டுகள் ஆராய்ந்து லெனின் சாதித்துள்ளனவற்றின் சாரம் இதுதான். நிகழ்ச்சி களை ஆராய வழிகாட்டுவதற்கு முக்கியமான எல்லா வற்றையும் இவ்வரிகள் சுருக்கமாகக் காட்டுகின்றன.

லெனின் எவ்வாறு மார்க்ஸை படித்தார் என்பது, நாம் எவ்வாறு லெனினைப் படிக்க வேண்டும் எனக் கற்பிக்கிறது. லெனினது போதனை மார்க்ஸின் போதனையுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது - அது செயல்பாட்டில்  உள்ள மார்க்ஸியம், ஏகாதிபத் தியமும், பாட்டாளி வர்க்கப் புரட்சிகளும் நிலவும் சகாப்தத்தின் மார்க்ஸியம்.

(இக்கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை).

Pin It