1892 ஆம் வருடம் ஏப்ரல் மாதம், சென்னை விக்டோரியா டவுண் ஹால். சென்னை மஹா ஜன சபையின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரந்து விரிந்த சென்னை மாகாணத்தின் அனைத்து ஜில்லாக்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். மக்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கேட்டு, விவாதித்து, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் முகமாக அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

மஹா ஜன சபையின் தலைவர், அரங்கைய நாயுடு நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருக்கும் வீரராகவாச்சாரியார், சபையின் செயலாளர். கூட்டம் எந்தவித இடையூறுமில்லாது திட்டமிட்டபடியே நடந்து கொண்டிருக்கிறது.

ayothidasar_340தலைவர் அரங்கைய நாயுடு, ஏற்கனவே தம்மிடம் தெரிவிக்கப்பட்டிருந்த மக்கள் குறைகளை வாசித்துக் கொண்டிருந்தார். அன்றைய தினம் எந்தெந்தப் பிரச்சினைகளையெல்லாம் மஹாஜனசபை விவாதிக்கப் போகிறது என்பதன் பட்டியல் அது. அப்பட்டியலை வாசித்து முடித்ததும், அதில் குறிக்கப்பட்ட சிக்கல்களைச் சபை விவாதித்து, ஆவன செய்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பின்னர் இத்தீர்மானங்கள் முறைப்படி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமது கையிலிருந்த காகிதத்தைப் பார்த்து வாசித்துக் கொண்டிருந்த அரங்கைய நாயுடு இடையில் ஒரு நிமிடம் தயங்கினார். காகிதத்திலிருந்து விலகி ஒரு முறை கூட்டத்தைப் பார்த்தார். கூட்டத்தினர் அமைதியாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். எதற்குத் தயங்குகிறாரென அவர்களுக்கு விளங்கவில்லை.

அந்த ஒரு கணம் மட்டும்தான். மறுகணம் அரங்கைய நாயுடு ஏதோ நினைப்பு வந்தவராய் அருகிலிருந்த பென்சிலால் காகிதத்தில் எழுதி இருந்த எதையோ அடித்து விட்டுப் புன்னகைத்தார். கூட்டத்தை ஏறிட்டார்.

ஏன் முதலில் தயங்கினார்? பின் எதை நினைத்து அமைதியானார்? இதற்கிடையில் காகிதத்தில் அவர் எந்த விஷயத்தை அடித்துத் திருத்தினார்? சென்னை மாகாண மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகள் எழுத்தப்பட்டுள்ள காகிதத்தில் தலைவர் பார்த்துத் திருத்தும்படிக்கு என்ன தவறு நேர்ந்திருக்கும்?

பென்சிலால் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட வரியை அடித்து முடித்த அரங்கைய நாயுடு தொடர்ந்து இவ்வாறு பேசத் துவங்கினார் : “நமது மாகாணத்தில் வாழும் பறையர் இன மக்களின் பிரச்சனைகள் குறித்து நாம் இங்கு சபையில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. 'Parayar Problem' குறித்து ஏராளமான துரைமார்கள் பேசவும், எழுதவும் செய்திருக்கிறார்கள். எனவே இது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரிந்த விஷயம். எனவே நாம் புதிதாய் விவாதிக்க எதுவுமில்லை.''

அரங்கைய நாயுடு இப்படிச் சொன்னதும்தான் கூட்டத்தில் பலருக்கும் அவர் தயங்கியதும், பின் சுதாரித்ததும், அதன் பின் காகிதத்தில் திருத்தியதற்குமான காரணம் விளங்கியது. கூட்டத்தில் அமர்ந்திருந்த பலருக்கும் தலைவரின் செய்கை நியாயமானதாகவே பட்டது. மஹா ஜன சபையின் நோக்கமே மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுதான். சபை சில பிரச்சனைகளை விவாதித்துத் தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கும். அரசு இத்தீர்மானங்களை உடனே நிறைவேற்றும் என்ற உத்தரவாதம் இல்லை.

ஆனால், சென்னை மாகாணம் மிகப் பெரியது; ஜில்லாக்களின் எண்ணிக்கை அதிகம்; வசிக்கும் சாதிகளின் எண்ணிக் கையும் அதிகம். இதனால் எல்லோருடைய குறைகளையும் கவனத்தில் கொள்வது யதார்த்தத்தில் முடியாதவொன்று. எதை யாவது செய்து தங்களது சாதிக்கான வசதிக் குறைவுகளைச் சபையில் எடுத்துச் சொல்லி, தீர்மானம் போடச் செய்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்பதே பலரின் கனவாக இருந்தது. அந்த நோக்கத்திலேயே அக்கூட்டத்திலும் கலந்து கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் பறையர் குல மக்களின் பிரச்சனைகளைத் தவிர்த்துவிடுவது எல்லோருக்குமே சாதகமாய் இருந்தது. அரங்கைய நாயுடு காகிதத்தில் திருத்தி விளக்கியதும் அனைவரும் அமைதியாய் இருந்து ஆமோதித்தனர்.

தமது தன்னிச்சையான முடிவிற்குச் சபை முழுவதும் கட்டுப்பட்டது கண்டு அரங்கைய நாயுடுவுக்கு உள்ளூர பெருமிதமாய் இருந்தது. பெருமிதம் அவருக்குள் மிருகமாய் பரவியது. விரலைப் போன்ற பாவனையுடன் மீண்டுமொரு முறை அந்த அரங்கம் முழுவதையும் பார்வையால் துழாவினார். பின் மேற்கொண்டு வாசிப்பதற்கென காகிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அந்த நேரம் கூட்டத்திலிருந்து ஒரு நபர் எழுந்து நின்று அரங்கைய நாயுடுவை நோக்கிப் பேசத் துவங்கினார்.

“தலைவர்களுக்கு வணக்கம்! பறையர் குலத்தவரின் குறைகளைப் பேசுவதற்கான பிரதிநிதியாய் நான் வந்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டது போல் சில துரைமார்கள் எங்களது சோதனைகளை அறிந்துள்ளார்கள்தாம். அதே போல் சில துரைமார்கள் சொற்ப உதவிகளையும் செய்கிறார்கள். ஆனால், இந்தக் குலம் இவ்வாறு வேதனைப்படுவதற்குக் காரணமான நீங்கள் அல்லவா அவர்களை முன்னேற்றுவது குறித்து ஏதும் செய்தாக வேண்டும். பறையர்களின் இழிநிலைக்குக் காரணமான நீங்களே இவ்வாறு கைகழுவி விடுவது போல் பேசுவது நியாயமாகுமா?''

அந்த நபர் இப்படிப் பேசியது அங்கிருந்த அனைவருக்கும் திகைப்பாய் இருந்தது. மஹா ஜன சபையின் தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்கக்கூடிய நபரை எல்லோருமே தெளிவாய்ப் பார்க்க விரும்பி, அந்த நபரை நோக்கித் திரும்பலானார்கள்.

அந்த நபர் கரிய நிறத்தவராய் இருந்தார். வயது அய்ம்பதுக்குள் இருக்க வேண்டும். வளர்த்தியுமில்லாமல் குள்ளமாகவுமில்லாமல் நடுத்தர உயரத்தில் கனவானைப் போன்ற உடையில் காணப்பட்டார். படித்தவர் என்பது அவரது கண்களில் வெளிப்பட்டது. அறிந்து கொள்ளத்தக்க எந்தவித உணர்ச்சியையும் தாண்டிய அமைதியொன்று அவரது பளபளத்த முகத்தில் நிரம்பியிருந்தது.

இதற்குள் அரங்கம் சலசலப்படையத் துவங்கியிருந்தது. யாரென்று அறிந்திராத ஒருவர் இப்படிப் பேசுவதை அனுமதிப்பதா கூடாதா என்று பலரும் விவாதிக்கத் துவங்கினர். அரங்கைய நாயுடு செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தார். சபை பரபரப்படைவதைக் கண்ட சபாநாயகர் கூட்டத்தைக் கையமர்த்திவிட்டு “பறையர் குலத்திற்கு இந்தச் சபை என்ன செய்ய வேண்டுமென்று நோக்கிக் கேட்டார். தங்களது படபடப்பைக் கொஞ்சமும் தணிக்காத கூட்டம், அந்த நபர் என்ன சொல்லக்கூடுமென அவர் புறம் திரும்பி வேடிக்கைப் பார்த்தது.

அதுவரையிலும் நின்றபடியேயிருந்த அவர் இப்படிப் பேசத் துவங்கினார். “ஐயா, தெய்வம் என்பது சகலவிதமான சாதியினருக்கும் பொதுவானது. அது போலவே தெய்வம் உறைந்துள்ள கோவிலும் பொதுவானது. இப்படித்தான் பலரும் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவே உண்மையும்கூட. உண்மை இப்படியிருக்க, எங்களில் வைணவர்களாய் இருப்பவர்களைச் சிவன் கோவிலுக்குள்ளும் சேர்க்க மறுப்பது ஏனென்று விளங்கவில்லை. எங்களையும் சேர்த்துக் கொண்டால் நாமெல்லோரும் அன்போடும் நயமோடும் இருக்க முடியும். நமது மதமும்கூட பிடிபடுமான மதமாகுமே, இதை ஏன் யாரும் செய்வதில்லை?

அந்த நபர் இப்படிக் கேட்டதும்தான் தாமதம் கூட்டத்தில் பலரும் "அபச்சாரம், அபச்சாரம்' என்று கதறத் துவங்கினார். அந்த நபரின் சொற்களைக் கேட்க விரும்பாதவர்களாய்த் தங்களுடைய காதுகளைப் பொத்திக் கொண்டனர். உன் மத்தம் கண்டவர்கள் போல் பிதற்றத் துவங்கினார்கள். "முடியவே முடியாது' என்று ஓங்கிய குரலில் கூச்சலிட்டார்கள். "எங்கு வந்து எதைப் பேசுவது?' என்பதாகக் கோபம் கொண்டார்கள். "பேசவிட்டதே தவறு' என்று சபாநாயகரைக் கடிந்து கொண்டனர். "அடி மடியிலேயே கை வைப்பதா?' என்று அங்கலாயக்கத் துவங்கினார்கள்.

இப்படியே சபையில் பலரும் பலவிதமாய்ப் பேசிக் கொண்டிருக்க விக்டோரியா டவுன் ஹால் கலவரம் கண்டு நடுங்கிக் கொண்டிருந்தது. இதில் எதையுமே எதிர்பாராதது போல் அந்த நபர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு இதுவெல்லாம் ஏனென்று விளங்காமல் ஆச்சர்யமாய் இருந்திருக்க வேண்டும். இந்தச் சிறு விஷயத்திற்கு இவர்களெல்லாம் ஏன் பதட்டமடைய வேண்டுமென்று அவருக்கு விளங்கவில்லை. "கோவிலுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்று சிறுகோரிக்கை இவ்வளவு பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்துமென அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. சபையோர்களின் கொந்தளிப்பை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டேயிருந்தார்.

இதனிடையே எதிர்க் கூச்சல் போட்டவர்களிலிருந்து ஒரு நபர் எழுந்து நின்று மற்றவர்களையெல்லாம் பேசாமலிருக்கும்படி அமைதிப்படுத்தத் துவங்கினார். அவரது பெயர் சிவராம சாஸ்திரி என்று சொன்னார்கள். தஞ்சாவூரைச் சார்ந்தவர் என்றும் அங்கிருந்து ஒரு பிரதிநிதியாக இச்சபைக்கு வந்திருக்கிறார் என்றும் கூறினார். சிவராம சாஸ்திரியின் சொல்லுக்குக் கூச்சலிட்டவர்கள் மரியாதை தந்தனர். அமைதியாக இருக்கத் துவங்கினர். ஆனால் அதே நேரம் அந்த புற மனிதனின் கேள்விக்குச் சிவராம சாஸ்திரி பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். கூச்சலிட்டவர்களையெல்லாம் அமர்த்திவிட்டு சிவராம சாஸ்திரி மட்டும் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நேர் எதிரே இன்னொரு பக்கத்தில் அந்தப் புதிய மனிதர்.

“பறையர் குடும்பத்தின் பிரதிநிதியாய் வந்திருக்கும் அன்பருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அந்த அன்பர் எங்களை ஏன் சிவன் கோவிலுக்குள்ளும், விஷ்ணு கோவிலுக்குள்ளும் சேர்க்க மறுக்கிறார்கள் என்று கேட்கிறார். இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். சிவனும் விஷ்ணுவும் என்றைக்குமே அவர்களது கடவுள்கள் இல்லை. அவர்கள் கும்பிடுவதற்கென்று சில தெய்வங்களை நாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். மதுரை வீரன், காட்டேரி, கருப்பண்ணசாமி மாதிரியான தெய்வங்கள் மட்டுமே அவர்களுக்கானவை. சிவனும், விஷ்ணுவும் நம்முடைய கடவுள். அவர்களுடையது அல்ல.''

சிவராம சாஸ்திரி இப்படிச் சொன்னதும் அந்த அரங்கமே அதிரும் வண்ணம் கரவொலி எழுந்தது. கூட்டத்தில் ஒருவர் மற்றவரைத் தழுவிக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலரும் சிவராம சாஸ்திரியைச் சரியான பதிலடி தந்ததற்காகப் பாராட்டினார்கள்.

இந்த வேடிக்கைகளெல்லாம் முடியும் மட்டும் காத்திருந்த அந்தப் புதியவர், சிவராம சாஸ்திரியையும் சபையையும் நோக்கி, “உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வது போல் இருக்கும் என்றால், உங்களுடைய கடவுள்கள் எங்கள் மக்களுக்கு என்றைக்கும் வேண்டாம்'' என்று சொல்லி மேலும் பேசலானார்.

“இது தவிர வேறு சில கோரிக்கைகளும் என்னிடம் உண்டு. எங்கள் குழந்தைகள் நான்காவது வரையில் கற்பதற்கு இலவசப் பாடசாலைகள் வேண்டும். அதே போல் அங்காங்கே வெறுமனே கிடக்கின்ற நிலங்களை, இக்குலத்துக் கிராமவாசிகளுக்குக் கொடுத்து ஆதரிக்க வேண்டும். இவ்விரு கோரிக்கைகளையும் இந்தச் சபை அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்தால் நலமாக இருக்கும்.''

அந்தப் புதிய நபர் கோவில் பிரச்சனையைத் தவிர்த்துவிட்டு வேறு சில சலுகைகளைக் கேட்டதும் சபையில் அமர்ந்திருந்தவர்களுக்குப் பெருத்த சந்தோஷமாய் இருந்தது. சிவராம சாஸ்திரி கொடுத்த பதிலடியிலேயே அந்த நபர் கோவில் பிரச்சனையைக் கைவிட்டார் என்று நம்பி அகமகிழ்ந்து போனார்கள். இதனால் சிவராம சாஸ்திரியைக் கூட்டத்தினர் வெற்றி நாயகனைப் போல் பார்த்தனர். இதைக் கண்ட சாஸ்திரியும் புளகாங்கிதம் கொண்டார். தமது இரு கோரிக்கைகளையும் சொல்லிவிட்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் அப்புதிய மனிதரைக் கடைக்கண்ணால் ஒரு முறை பார்த்துக் கொண்டார். அந்தப் பார்வையில் மேலும் அவரைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.

சிவராம சாஸ்திரி வெற்றிக் களிப்பில் மறுபடியும் பேசத் துவங்கினார். மகாசன சபையின் தலைவர் அரங்கைய நாயுடுவும் செயலாளர் வீரராகவாச்சாரியும் இவையனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். தமது கோரிக் கைகளைச் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்த அந்தப் புதிய மனிதர் எதுவுமே நடக்காத பாவனையில் அமைதியாகவே இருந்தார்.

கோவிலில் சேர்த்துக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொண்ட அந்த அன்பர் இப்பொழுது நான் சொல்லப் போவதையும் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்.'' சிவராம சாஸ்திரி இப்படித் துவக்கியதும் அந்தப் புதிய நபர் தலையை உயர்த்திக் கவனிக்கத் துவங்கினார்.

“கல்வி கற்றலும், புத்தி சாதுரியமும் பயிற்சியாலோ கட்டாயத்தினாலோ வருவது இல்லை. விவேகமும், புத்தியும் பிராமண வித்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதை அன்பர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆதி என்ற பறையர் குலப் பெண்ணிற்குப் பிறந்தவர் என்றாலும், வள்ளுவ நாயனாருக்குக் குறள் இயற்றும் விவேகம் வந்ததற்குக் காரணம் அவருடைய தந்தை பகவன் என்ற பிராமணராய் இருந்ததால் தான். பிராமணர் வித்து இருந்திருக்காவிட்டால் வள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்க முடியாது. புத்தி வளர வேண்டி பறையர் குலச் சிறுவர்களுக்கு இலவச பாடசாலை கேட்கும் அன்பர் வள்ளுவர் வரலாறு தெரிந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார்.''

சாஸ்திரியின் பேச்சிலிருந்த கேலியையும் கிண்டலையும் அங்கிருந்த அனைவரும் ரசித்தனர். பேச்சில் வல்லவர் சிவராமசாஸ்திரி என்று பலரும் சிலாகித்தார்கள்.

சிவராம சாஸ்திரி வள்ளுவர் கதையென்று பிதற்றிய சங்கதிகளைக் கேட்ட அந்தப் புதிய நபர் முதன் முறையாய் நரகலை மிதித்து விட்ட உணர்வைப் பெற்றார். கேவலமான மனிதனுடன் வாதம் செய்ய வேண்டியதாயிற்றே என்ற வருத்தம் அவரை வாட்டியது. எதிர்பாராததையெல்லாம் சந்திக்க நேர்ந்ததே என்ற கலக்கம் அவருக்குள் மூண்டது.

நீலகிரியிலிருந்து புறப்பட்டபோது இப்படியெல்லாம் நடக்கு மென்று தோணாமல் போச்சே என்று தன்னையே கடிந்து கொண்டார். நோய் கண்ட மனிதர்களைப் பார்ப்பது போல அங்கிருந்த அனைவரையும் பார்த்தார். சிவராம சாஸ்திரியின் கண்களில் வழியும் குரோதம் அவருக்கு எரிச்சலைத் தந்தது. இப்படியான மனிதருக்குப் பதில் சொல்ல வேண்டுமா என்ற எதிர்மறை எண்ணமும் தோன்றியது. ஆனால் வேறு வழியே இல்லை என்பதால் தரை இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்.

நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்குச் சில கேள்விகள் கேட்க வேண்டும்.

உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்த சாஸ்திரி பெருந்தன்மையாய் இருப்பது போல் "தாராளமாய்' என்று கேட்கச் சொன்னார்.

அந்தப் புதிய நபர் ஒரு முறை தமது தொண்டையைச் செருமிக் கொண்டு, நிதானமாய், கணீரென்ற குரலில் அந்த விக்டோரியா டவுன் ஹாலே அதிரும்படி பேசத் துவங்கினார்.

“கல்வியும், விவேகமும் பிராமண வித்திற்கே சொந்தமானது என்றால், இன்றைய தினம் மிஷனெரிமார்களின் துணையால் பி.ஏ., எம்.ஏ. போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கின்ற பறையர்கள் அனைவரும் யாருடைய வித்திற்கு பிறந்திருப்பார்கள்? அதே போல் இன்றைய தினம் சிறைச்சாலைகளில் இருக்கக் கூடிய பிராமணர்களெல்லாம் யாருடைய வித்திற்கு பிறந்திருப்பார்கள்?''

இந்த வார்த்தைகளை கேட்டதும் அந்த அரங்கத்தில் இடி விழுந்தது. சிவராம சாஸ்திரி முகத்தை மூடிக் கொண்டார். உற்சாகத்தில் திளைத்த அனைவரும் தங்களது தலைகளைத் தொங்கவிட்டு அவமானத்தின் சுமை தாங்காது கூனிக்குறுகிப் போனார்கள். அந்தப் புதிய நபர் அந்த அரங்கில் அனாதரவாய் நிற்பது போல் உணர்ந்தார். அவரது கேள்வி மட்டும் தொடர்ந்து அந்த அரங்கில் கேட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே சில நிமிடங்கள் கடந்தன. அரங்கைய நாயுடுவும் வீரராகவாச்சாரியும் அந்தப் புதிய மனிதரை அமரும்படி சைகை செய்து அதன்பின் வேறு விஷயங்களைப் பேசத் துவங்கினார்கள். அன்றைய தினம் முழுவதும் ஒரு வனாந்திர வெறுமை அரங்கினுள் புரண்டு கொண்டேயிருந்தது.

அன்றைய சென்னை மாகாண மஹாஜனக் கூட்டம் இந்தக் களேபரங்களுக்குப் பின் வழக்கம் போல் நடந்து முடிந்தது. சிவராம சாஸ்திரியோ அல்லது அவரை ஆதரித்த பிற உறுப்பினர்களோ அன்றையக் கூட்டத்தில் வேறெதுவும் பேசியிருக்கவில்லை. நீலகிரி யிலிருந்து வந்ததாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த புதிய மனிதர் இறுதி வரையில் மனக்கிலேசத்திலேயே அமர்ந்திருந்தார்.

அவர் முன் வைத்த இரு கோரிக்கைகளும் – பறையர் குலச் சிறுவர்களுக்கு நான்காவது வகுப்பு வரை இலவசக் கல்வி, பறையர் குலக் கிராமவாசிகளுக்கு வெறுமனே கிடக்கும் நிலங்களை வழங்குவது – சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை முறையே தீர்மானங்களை மாற்றப்பட்டு அரசாங்கத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோரிக்கைகளை முன்வைத்தவராக இராஜா சர்வசபை இராமசாமி முதலியார் தீர்மானத்தில் கையொப்பமிட்டார். இக்கோரிக்கைகளை ஆமோதித்தினரா என எல்லூர் சங்கரன் என்பவரின் பெயர் சேர்க்கப்பட்டது. பிரதி ஆமோதகர் ஒருவரின் பெயரும் சேர்க்கப்பட வேண்டுமென கேட்டபொழுது, நீலகிரியைச் சார்ந்த அப்புதிய மனிதர் எழுந்து நின்று தனது பெயரை பிரதி ஆமோதகராக சேர்க்கச் சொன்னார். அவர் சொன்ன பெயர் அயோத்திதாசப் பண்டிதர்.

நன்றி : “நான் பூர்வ பௌத்தன்''

Pin It