பொதுவாழ்வில் பெண்கள்:

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண் டும். பொருளாசை இல்லாதவர்களா கவும், கொள்கைப் பிடிப்புள்ளவர்களாகவும், புகழாசை அற்றவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் பொது நலத்தொண் டர்கள் மனித நேயம் மிக்கவர்களாகவும், எளிய வாழ்க்கை வாழ்பவராகவும் இருத்தல் வேண்டும். புகழ் பெற எதையும் செய்யத் துணியும் எவரும் நேர்மையானவர்களாக இருக்க இயலாது.

tharumambalபெண்கள் பொதுவாழ்வில் ஈடுபடத் தயங்கிய அந்த நாள்களில் டாக்டர். தருமாம்பாள், மேலே சுட்டிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்து பொது நலத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தஞ்சை மாவட்டம் கருந்தட்டாங்குடியில் வாழ்ந்த சாமிநாதன் செட்டியார், பாப்பம்மாள் என்ற நாச்சியார் அம்மையார் இணையருக்கு தருமாம்பாள் 1890 ஆம் ஆண்டு திருவையாறில் பிறந்தார். இவருக்கு அவரது பெற்றோரிட்ட பெயர் சரஸ்வதி.பின்னாளில் அவரது பெயர் தருமாம்பாள் என்றழைக்கப்பட்டது.

அவரது தந்தை சாமிநாதன் துணி வியாபாரம் செய்து புகழுடன் சிறப்பாக வாழ்ந்தவர்.அவரின் நண்பர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் பிள்ளை ஆவார்..

குழந்தைப் பருவத்திலேயே, தருமாம்பாள் தன் பெற்றோரை இழந்துவிட்டார்.இவரை இலக்குமி என்ற பெண்மணி தான் வளர்த்து வந்தார். இளம் பருவத்தில் பெற்றோரை இழந்துவிட்டதால், அவருக்குப் பள்ளிக் கல்வி எட்டாக்கனியாயிற்று, என்றபோதிலும் கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் மிகவும் கொண்டிருந்தார். ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலும் அவரிடம் மிகுந்திருந்தது.ஆதலால் அவர் கல்வி கற்க மிகுந்த ஆர்வத்துடன், வேட்கை சீவகாருண்யம் சுப்ரமணியனார், மணி திருநாவுக்கரசு ஆகியோரிடம் சென்று தமிழ் கற்றார். பண்டித நாராயணி அம்மையாரிடத்தில் தெலுங்கு மொழியைப் பயின்றார், ஆங்கிலம், மலையாள மொழிகளில் ஓரளவிற்குத் தேர்ச்சி பெற்றார்.

அவர் சிறுவயது முதற்கொன்டே கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சிறப்பாக நாடகக் கலை மீது பற்று மிகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் நாடகங்களில் நாயகன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகராக விளங்கியவர் குடியேற்றம் முனிசாமி நாயுடு. அவர் தருமாம்பாள் அம்மையாரின் உள்ளம் கவர்ந்த கள்வராக விளங்கினார். இருவர் மனமும் ஒன்றியதின் விளைவாக, சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டனர். திருமணத்திற்குப் பின்னர் சிறிதுகாலம் நாகப்பட்டினத்தில் தன் காதல் கணவருடன் வாழ்ந்தார். பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்து எண் 330. தங்கச்சாலையில் வாழ ஆரம்பித்தார்..

சித்த மருத்துவர்

மக்கள் தொண்டு புரிதற்கு மருத்துவத் தொழிலே சிறந்தது என்று உணர்ந்து சித்த மருத்துவம் கற்க ஆர்வங்கொண்டு தானே முயன்று கற்றும், பயிற்சிகள் மேற்கொண்டும் நல்ல சித்தமருத்துவராக விளங்கி சிறந்த முறையில் சேவை புரிந்தார். அவர் சித்தமருத்துவராகப் பணியாற்றத் தொடங்கிய 1930 ஆம் ஆண்டில் அலோபதி மருத்துவர்கள் (மேனாட்டு மருத்துவம் பயின்றவர்கள்) அருகியே காணப்பட்டனர். சென்னை மக்களின் பிணி நீக்கும் பணியில் சித்தமருத்துவர்கள் சிறப்பாகச் சேவை புரிந்து வந்துள்ளனர்.

பெரும் பகுதி மக்கள் சித்தமருத்துவர்களையே தேடி நாடி வந்தனர்.வேப்பேரியில் கங்காதரத் தேவர், சூளையில் முருகேச முதலியார், சித.ஆறுமுகம் பிள்ளை, தியாகராய நகரில் பண்டித எஸ்.எஸ். ஆனந்தம் (இவரது குமாரர். ஆனந்தகுமார் இக்கட்டுரையாளருடன் பயின்றவர்) சைதாப்பேட்டையில் தணிகாசல மருத்துவர் ஆகியோர் புகழ் மேவிய மருத்துவர்களாக விளங்கினர். அந்த வரிசையில் தங்கச் சாலையில் புகழ்பெற்ற மருத்துவராக இருந்தவர் டாக்டர் தருமாம்பாள். பெருஞ்செல்வம் ஈட்டும் தொழிலாக மருத்துவத் தொழிலைக் கருதாமல் ஏழை மக்களின் துயர் போக்கும் சேவையாகவே தனது மருத்துவத் தொழிலை அன்னை தருமாம்பாள் தங்கச் சாலையில் செய்து வந்தார்கள். மருத்துவச் சேவைதான் டாக்டர் தருமாம்பாளுக்கு மக்கள் தொடர்பை அதிக அளவு ஏற்படுத்திக் கொடுத்தது.

சித்தமருத்துவர்களது சிறப்புமிக்க சேவையைக் கண்ட நீதிக்கட்சித் தலைவர்கள், தங்கள் ஆட்சியின் போது நம் நாட்டு மருத்துவப் பிரிவுகள்-(சித்த மருத்துவம், ஆயுர் வைத்தியம், யுனானி மருத்துவம்-) செழித்திட இந்திய மருத்துவப் பள்ளியினை 1925-1926 இல் எக்மோர் பாந்தியன் சாலையில் அன்றைய சென்னை மாநில முதல்வர் மேதகு பனகல் அரசர் தோற்றுவித்தார். 330 தங்கச்சாலை டாக்டர் தருமாம்பாளின் நிரந்தர முகவரியாயிற்று. அந்த முகவரியில்தான் அம்மையாரின் வாழ்வில் பல அரிய வரலாற்று நிகழ்வுகள் நடை பெற்றன.அந்த முகவரியிலிருந்து தான் டாக்டர் தருமாம்பாள், சமூக அக்கறையுடன் தன் மருத்துவப் பணியைத் தொடர்ந்தார். அவரது கனிவான சேவையில் மகிழ்ந்தமக்கள், தங்களின் வாழ்வியல் இடர்ப்பாடு களுக்கும் அவரிடம் ஆலோசனைகள் பெற்றனர்; நலம் உற்றனர், பெண்களை அடிமைகளாக நடத்திய சமூகத்தில், “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திரு நாட்டின் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயல் கொம்பே” என்று பெண்ணடிமை நீங்க அயராது பாடுபட்டவர்.பெண் விடுதலைக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த டாக்டர் தருமாம்பாள், பல பெண்களுக்குக் கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்திடவும், வேலை வாய்ப்பினைப் பெறுதற்கும் உறுதுணையாக இருந்து அப்பெண்கள் வாழ்வினைச் சிறக்கச் செய்துள்ளார். தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்கள் முன்னேற் றத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக, பண்டிதர் நாராயணி அம்மை யாரும், செயலாளராக டாக்டர் தருமாம்பாளும் பொறுப் பேற்றுக் கொண்டு பெண்கல்வியைச் செழிக்கச் செய்தனர். கல்வி அறிவின்றி அறியாமையில் மூழ்கிக் கிடந்த பெண்களிடையே மண்டிக்கிடந்த மூடப்பழக் கங்களை எடுத்துக்கூறி அவர்களிடையே பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்தார், பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்வித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். சாதி ஒழிப்பைக் கருத்தில் கொண்டு பல இளையோர்க்குக் கலப்புத் திருமணம் செய்வித்தார். இதன் மூலம் மருத்துவர் தருமாம்பாள் ஒரு சமூகப் போராளியாகவும் திகழ்ந்தார்.

தேவதாசி ஒழிப்பு

இந்து மதத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த பெண்களைப் பொட்டுக்கட்டிக் கோயில்களில் நேர்ந்து விட்டுவிடுவார்கள். அப்பெண்கள் கல்வி, இசை, நாட்டியம் போன்ற கலைகளைக் கற்றுணர்ந்து கோயில்களில் சேவை புரிதல் வேண்டும் என்பது சனாதன இந்துமத முடிவாக இருந்துவந்துள்ளது. அவர்கள் மற்ற பெண்கள் போல் திருமணம் செய்துகொண்டு வாழ்கையின் இனியப் பக்கங்களை அனுபவிக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் இவர்களைச் செல்வச்சீமான்களும், கோயில் அர்ச்சகர்களும் மதத்தின் பெயராலும் கடவுள் பேராலும் ஆண்டு அனுபவிக்கின்ற கொடுமைகள் நடைபெற்றே வந்துள்ளன.கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்தே இத்தகைய கொடுமைகள் மதத்தின்பேரால் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. இந்த அக்கிரமத்தை, அநியாயத்தை எதிர்த்துப் போராடிட எவரும் முன்வரவில்லை-இந்தத் தேவதாசி முறை ஆண்டவன் அனுக்கிரகம் பெற்றது என்பதாலும்,சாஸ்திர சம்மதமானது என்பதாலும் இக்கொடுமையை எதிர்க்க அந்நாளில் எவரும் முன் வரவில்லை போலும். இந்நிலையில் தந்தை பெரியார் தேவதாசி முறையை எதிர்த்துக் களமிறங்கினார். அதேநேரத்தில், சட்டமன்றத்தின் முதல்பெண் உறுப்பி னர் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி 1927 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 ஆம் நாள் தேவதாசி முறையை ஒழிக்கச் சட்டமுன் வரைவு ஒன்றினைச் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதனை எதிர்த்துக் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் அவரைச் சார்ந்தவர்களும் குரல் கொடுத்தனர். சட்டமன்றத்துக் குள்ளே டாக்டர் முத்துலட்சுமி தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய போது, மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், திருவிக, பெரியார் ஆகியவர்களுடன் டாக்டர் தருமாம்பாள் அவர்கள் போர்க்களம் நோக்கிச் செல்லும் வீராங்கனையைப் போல் புறப்பட்டார்கள். அப்போதுதான் டாக்டர் தருமாம்பாள் அம்மையாருக்குச் சென்னையில் மக்களிடமிருந்த செல்வாக்கு எத்தகையது என்பதை உணரமுடிந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் அந்த மசோதாவிற்கு அவர்கள் ஆதரவு தேடி வீடுவீடாக ஏறி இறங்கினார்கள். மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த சத்தியமூர்த்தியின் அணியைச் சார்ந்த பெரிய மனிதர்கள் இல்லங்களிலும் அவரின் குரல் ஒலித்திருக்கிறது, டாக்டர் தருமாம்பாள் எடுத்த முயற்சிகளின் பயனாய், டாக்டர் முத்துலட்சுமி யின் மசோதாவிற்குப் பொதுமக்களின் ஆதரவு பல்கிப்பெருகியது. சட்டமன்றத்திலும் முத்துலட்சுமிக்கு ஆதரவுப் பெருகியது; மசோதா வெற்றிகரமாக நிறை வேறியது.

பெண்கள் மாநாடு:-

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு 13-11-1938 அன்று சென்னை ஒற்றைவாடை நாடக அரங்கில் நடைபெற்றது. இம்மாநாடு திராவிட இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற மாநாடாகும்.

அன்னை தருமாம்பாள், மலர்முகத்தம்மையார், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் மாநாட்டு அமைப்பாளர்கள். மாநாட்டு அலுவலகம் அன்னை தருமாம்பாள் இல்லத்தில் செயல்பட்டது.

தமிழ் நாட்டுப் பள்ளிகளில் முதல்வர் இராஜாஜியால் இந்திமொழி, கட்டாயமாகத் திணிக்கப்பட்ட சூழ்நிலையில் இம்மாநாடு நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட பெண்கள் மாநாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தமிழ்க் கொடியை அன்னை மீனாம்பாள் சிவராஜ் ஏற்றினார்.மறைமலை அடிகளாரின் மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையார் மாநாட்டுத் தலைவர்.மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.அதில், திராவிடர் கழகத்தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போது, இனிமேல் “பெரியார்”, என்றே வழங்க வேண்டும் என்ற தீர்மானம்,மிகவும் முக்கிய மானதாகும். அந்தத் தீர்மானம்:

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற்போன வேலைகளை, இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லா மையாலும் அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மா னத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியதில் பெரும் பங்கு ஆற்றியவர் அந்த மாநாட்டின் அமைப்பாளராக இருந்த அன்னை தருமாம்பாள் ஆவார்..

இந்தி எதிர்ப்புப் போரின் முதல் வீராங்கனை:-

1938 இல் முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியாரால் (இராஜாஜி) பள்ளிகளில் இந்திமொழி கற்பது கட்டாயம் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.இந்த ஆணையை எதிர்த்துத் தந்தை பெரியார் போராட்டம் நடத்தினார்.

தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு முடிந்த மறுநாள் 14-11-1938 அன்று அன்னை தருமாம்பாள் தலைமையில் பெண்கள் இந்தி எதிர்புப் போராட்டத்தில் களம் கண்டனர். 10,000 க்கும் மேற்பட்ட பெண்களும் பொதுமக்களும் திரண்டு-“இந்தி ஒழிக! தமிழ் வாழ்க” என்ற முழக்கத் துடன் ஊர்வலமாகச் சென்று, சென்னை தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளி முன் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று காவல்துறையினர் ஆணையிட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் உரத்த குரலில், இந்தி ஒழிக தமிழ் வாழ்க வென்று முழக்கமிட்டு கலைந்து செல்ல மறுத்தனர், அதன் பின் காவலர் பெண்தலைவர்களை கைது செய்தனர் - டாக்டர். தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர் முகத்தம்மையார், திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி பட்டு அம்மாள், தருமாம்பாள் மருமகள்-சீதாம்மாள் (தன் இரு குழந்தைகளுடன் நச்சினார்க்கினியன் 3 வயது, மங்கையர்க்கரசி 1 வயது) ஆகியோர் கைதானார்கள். அப்போது அங்கு நின்று உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆண்களும் பெண்களும் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க வென உரத்தக்குரலில் முழங்கினர்.

தமிழினத்திற்கு இந்தியால் ஏற்படவிருந்தக் கேட்டினை ஒழித்திடத் தீரமுடன் போராடிய தாய்மார் களின் வரிசையில் முன்னணியில் இருந்தவர் அன்னை தருமாம்பாள்.

தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர் களுக்காகவும் அன்னைதருமாம்பாள் பெரும் அளவில் உதவியுள்ளார்.கருந்தட்டாங் குடியிலிருந்த தன் வீட்டை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தமிழ் நாடு முழுதும் பள்ளியில் பயிலும் மாணவர் களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் பெறவும், பேச்சாற்றல், எழுத் தாற்றலை வளர்த்துக் கொள்ளவும் சென்னை மாணவர் மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றி னார்.பெரும் பொருள் திரட்டி இந்த அமைப்புக்கு சொந்தக் கட்டடம் ஒன்றை உருவாக்கினார்.மயிலை சிவமுத்து நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்டடம் வடசென்னையில் செயல்பட்டு வருகிறது.

1940 க்கு முன்பு வரை தமிழாசிரியருக்கு சமூகத்தி லும், அரசியலிலும் உரிய மதிப்பினை எவரும் தரு வதில்லை. அவர்களை இரண்டாந்தரமாகவே மதிப் பிடுவர். மற்ற ஆசிரியர்களைவிடக் குறைந்த ஊதியமே பெற்றுவந்தனர், இவ்வேற்றுமையைக் களைந்திட வேண்டும் என்று மாநிலத் தமிழாசிரியர் கழகத்தினர் போராடி வந்தனர். அன்னை தருமாம்பாள் தமிழா சிரியருக்கு ஆதரவாகப் போராடினார். தமிழாசிரியர் ஊதியத்தை மற்ற ஆசிரியர்கள் ஊதியத்திற்கு இணையாக உயர்த்தாவிட்டால் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி இழவு வாரம் கொண்டாடுவோம் என்று அன்னை தருமாம்பாள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். அன்று தமிழக அரசின் கல்வி அமைச்சர் உயர்திரு அவினாசிலிங்கம் செட்டியார். அவர் தமிழாசிரியர், அன்னை தருமாம்பாள் ஆகி யோரின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, ஏனைய பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையாகத் தமிழாசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க ஆணையிட்டார். இந்தப் போராட்டத்தின் வெற்றி தருமாம்பாள் மூலம் தமிழுக்குக் கிடைத்த வெற்றியாகும்

1940 க்கு முன் தமிழ் நாட்டில் இசை மேடைகளில் தமிழ்ப்பாடல்கள் இசைப்பதில்லை.தமிழில் பாடுதற் கேற்ற இசைப்பாடல்கள் இல்லை என்று இசைவாணர்கள் செப்பினர், இது அப்பட்டமான பொய்க் கூற்றாகும்.

தமிழிலேயேபாட்டெழுதி, தமிழிலேயே பாடித் தமிழிசையை வளர்த்தவர்கள் அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவர்.

பொதுவாக கருநாடக இசையின் மும்மூர்த்திகள் என்று அறியப்படும் தியாகய்யர், சியாமாசாஸ்திரிகள், முத்துச் சாமி தீட்சிதர் ஆகியோரைவிட, இவர்கள் காலத்தால் முற்பட்டவர்கள்.

தமிழிசை மூவரே ‘கிருதி’ என்று அழைக்கப்படும் கீர்த்தனைகளுக்கு வடிவம் கொடுத்தோர். இன்று உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் அமைப்பு இவர்களின் பாடல்களிலேயே காணக்கிடைக்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, இசைவாணர்கள் தமிழ்ப் பாடலைப் பாட மறுப்பதேன்?

அந்த நாள்களில் பெரும்பாலும் பாடியவர்கள் நால் வருணத்தில் மேல் வருணத்தைச் சேர்ந்தோரே. இசை மேடைகளும் சபாக்களும் அவாள் வசமே இருந்தன. ஆதலால் தமிழ்பாடல்களைப் பாட அவாள் இசைய வில்லை.

தமிழ் நாட்டில் தமிழ்ப்பாட்டு பாடு என்று கேட்க வேண்டியிருக்கிறது என்று சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் வருந்திக் கூறினார்.அந்த அளவிற்குத் தமிழில் பாடி மகிழும் உரிமை கூட நமக்கு இல்லாமல் இருந்தது. இப்போக்கை மாற்றவே தமிழிசைச் சங்கம் தோற்றம் கண்டது.தமிழர்களின் உயிர்ப் பகுதியாகிய இசைத் தமிழை வளர்க்கவே இம்முயற்சியில் பல தமிழறிஞர்கள் தலையிட்டனர்.இதில் செட்டிநாட்டு அரசர் இராஜா சர். அண்ணாமலை செட்டியாருடன் அன்னை தருமாம் பாளின் பங்கும் உண்டு

இரண்டாம் தமிழிசை மாநாட்டிற்கு அன்னை தருமாம்பாள் வரவேற்பு குழு உறுப்பினராக இருந்து பணியாற்றினார். இன்று தமிழிசைப்பாடல்கள் மேடை யில் முழங்குகிறது என்றால் அதில் அன்னை தருமாம் பாளின் பங்கும் உண்டு.

1948 இல் “இந்துநேசன்” பத்திரிக்கை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், எம்,கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. டி.ஏ. மதுரம் செய்வதறியாது அன்னை தருமாம்பாளை அணுகினார். இலண்டனி லுள்ள பிரிவியூ கவுன்சிலில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அன்னை தருமாம்பாள் சென்னை யிலுள்ள பலரை அணுகிப் பொருள் திரட்டி வழக்கினை நடத்தி வெற்றியும் பெற்றார்.கலையுலகம் அன்னை தருமாம்பாளை வாழ்த்திற்று.

தன் வாழ்நாள் முழுதும் தமிழ்மக்கள், தமிழ் மொழி தமிழிசை ஆகியவற்றின் மேன்மைக்காகவே வாழ்ந்த அன்னை தருமாம்பாளுக்கு 1951 இல் திருவிக தலை மையில் நடைபெற்ற மணிவிழாவில் தமிழறிஞர் டாக்டர் அ.சிதம்பர நாதன் செட்டியார் வீரத்தமிழன்னை என்ற பட்டத்தை வழங்கினார்.

வீரத்தமிழன்னை பட்டம் பெற்ற அன்னை தருமாம் பாள்தான் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத் தையும். தியாகராஜ பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தையும், எம்.எம்.தண்டபாணி தேசிகருக்கு இசையரசு என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்புச் செய்தார்.

மக்கள் தொண்டு புரிந்து வாழ்ந்த அன்னை 1959 ஆம் ஆண்டு தனது 69 வது அகவையில் இம் மண்ணுலகை நீத்தார்.

புகழாரம்

கரந்தையில் டாக்டர் எஸ்.தர்மாம்பாளின் நினை வினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டி னைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது. சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.

வாழ்க அவரது புகழும் தொண்டும்!

Pin It