இந்தியா விடுதலைப் பெற்ற காலம் தொடங்கி ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த  காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சிகள் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிராகவே இருந்து வருகின்றன என்பதைப் பல தொடராய்வுகள் அம்பலப்படுத்தி வருகின்றன. காங்கிரசுத் தலைவர்களில் பெரும்பாலானோர் முற்பட்ட சமூகத்தைச் சார்ந்த வர்களாகவே இருந்தது இதற்கு முதன்மையான காரணமாகும்.

இந்திய விடுதலைக்குப் பின் இந்தியச் சமூக பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்த நோபல் பரிசுப் பெற்ற அறிஞர் குன்னர் மிர்தல் “இந்தியா உயர் வர்க்கத்தினரால் ஆளப்படுகிறது. இதற்கு நேர்மாறாக பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினராகவே உள்ளனர். கிடைத்த புதிய அதிகாரமும் பொறுப்பும் மேலும் அதிக சலுகைகளை அவர்களுக்கு வழங்குகிறது” (India is ruled by upper class citizens. In contrast to the poverty – stricken masses, national political leaders were all members of the privileged upper class, and their new positions of responsibility and power rapidly invested them with still greater privileges) எனக் குறிப்பிட்டார்.

social inequalityஅறிஞர் குன்னர் மிர்தலின் மேற்குறிப்பிட்ட கருத்து இன்றும் இந்தியாவில் தொடர்வதுதான் கொடுமையிலும் கொடுமையாகும்.

குன்னர் மிர்தலின் மகன் ஜேன் மிர்தல் மிகச் சிறந்த சமூகவியல் அறிஞர். இவர் 2010ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து  மாவோயிஸ்ட் கட்சியின் கொள்கை செல்வாக்குள்ள காட்டுப் பகுதிகளுக்குச் சென்று அவர்களுடன் உரையாடி, தனது “இந்தியாவின் மீது சிகப்பு நட்சத்திரம்” என்ற நூலினை 2012ஆம் ஆண்டு வெளியிட்டார். 

“ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக தலித் மக்கள் இன்றைய இந்தியாவில் விடுதலைப் பெற்றார்களா? என்ற வினாவை எழுப்பி ஒருவர் இந்தியாவை முழுமையாகப்  பார்க்கவேண்டும். சுதந்திரம் என்பது சிலருக்குத்தான் பெரும்பான்மையான மக்களுக்கு அல்ல. பெரும்பான்மையான மக்களுக்கு இந்தியா இன்றும் விடுதலை அடையவில்லை” என்ற அதிர்ச்சியான கருத்தினை ஜேன் மிர்தல் பதித்துள்ளார். அவர் 93 ஆண்டுகள் வாழ்ந்து 2020இல் மறைந்தார். (Could the Dalits in today’s formally independent India be called free? One needs only to look around in India. Freedom is for the privileged few, not for the majority of the Indian people. For them India is still not free,” – ‘Red Star Over India’ by Jan Myrdal, New Delhi, 2012, p.72).

மேற்கூறிய அறிஞர்களின் கருத்துகள் இன்றும் மென்மேலும் உறுதியாகி வருகிறது. நிர்வாகம், நீதித் துறை, சட்டமன்றம் ஆகிய துறைகளில் இடம் பெற்றோர் பெரும்பாலும்  ஆதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தவர் களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து சதிச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். விதிவிலக்காகத் தமிழ் நாடு உட்படச் சில தென் மாநிலங்களில் தந்தை பெரியார் தலைமையில் இயங்கிய சமூக சீர்திருத்த இயக்கத்தின் விளைவுகளால் இந்தப் போக்கு ஓரளவிற்குத்தான்  கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 2014இல்  பாஜக ஆட்சி ஒன்றிய அரசில் அமைந்த பிறகு சனாதன சங் பரிவாரங்களின்  கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டது.

இதற்கு அண்மைக்காலமாக நடைபெற்று வரும் பல அரசியல் நிகழ்வுகள் சான்று பகர்கின்றன. உயர் வகுப்பினரின் ஆதிக்கம்  மென்மேலும் நிலைப்பெற, வலுப்பெற அரசமைப்புச் சட்டத்தை  அவசர அவசரமாகத் திருத்தி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப் பட்ட 10 விழுக்காடு இட ஒதுக்கீடு உரிமையை பிரதமர் மோடி அளித்தார்.

ஆனால் பாஜக சங்கிகள் இந்தச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது ஒரு தவறான அறிக்கையைச் சுட்டிக்காட்டினர். 2010இல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்த போது முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாகத் திரு.சின்ஹோ தலைமையில் (Sinho Commission) ஒரு  குழு அமைக்கபட்டு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் மாநிலங்கள் முற்பட்ட பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு உரிய சலுகை களை அளிக்கலாம். அதற்கான திட்டங்களுக்கு உரிய தொகையை வழங்கலாம். ஆனால் அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி சமூக கல்வி தளத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கியது போன்று இட ஒதுக்கீட்டைப் பொருளாதாரத்தை அளவுகோலாக எடுத்து அளிக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தது.

இக்குழு அளித்த தெளிவான பரிந்துரைகளுக்கு மாறாக மோடி அரசுத் திட்டமிட்டு முற்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார அடிப்படையில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் வழியாக 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை வழங்கியது. ஆனால் தமிழ்நாடு இன்று வரை இச்சட்டத்தை ஏற்கவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி குறிப்பாக 1951இல் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தத்தின்படி சமூகம், கல்வித் தளங்களில் பின்தங்கியோர்க்கு மட்டுமே இட ஒதுக்கீடு எனத் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. 

மகாராட்டிர மாநிலத்தில் பொருளாதார அடிப் படையில் முற்பட்ட பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மாநில அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் செல்லாது என  நீதி மன்றம் அறிவித்தது. இக்காலக்கட்டத்தில் 1991இல் நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது முற்பட்ட வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த ஓர் அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்ட போது  உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு பல மாதங்கள் ஆய்வு செய்து 1993இல் வழங்கிய தீர்ப்பில் பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கையை வழங்கியது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது எனக் குறிப்பிட்டு இந்த இட ஒதுக்கீடு அரசாணையை நீக்கியது.

2014ஆம் ஆண்டு  ஆட்சியமைத்த மோடி அரசு  இந்த  அரசமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக 2019இல் முற்பட்ட பிரிவினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து, அதை அரசமைப்புச் சட்டத் திருத்தமாகக் கொண்டு  வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்த போது உச்ச நீதிமன்றம் இதற்கு இடைக் காலத் தடையை விதிக்க மறுத்துவிட்டது.  இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. 

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மண்டல் குழுவின் பரிந்துரைகளின்படி இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். இந்த இட ஒதுக்கீட்டு ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட போது இந்த வழக்கை  101 முறைகள்  தள்ளி வைத்து பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது உச்ச நீதிமன்றம். 1994ஆம் ஆண்டில்தான் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு  வழங்கிய இட ஒதுக்கீடு உரிமையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. காலந்தாழ்ந்து வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற கூற்றுக்கு உச்ச நீதிமன்றமே துணை போனதோ என்ற நிலையும் நினைப்பும் உருவானது.

உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய இரட்டை நிலைப்பாட்டினைக் கண்டு  பல சட்ட வல்லுநர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். உச்ச நீதிமன்றத்தின்  மீதிருந்த நம்பிக்கையும் மக்களிடம் தளர்ந்துவிட்டது. உயர் சாதிக்கு ஒரு நீதி ஒடுக்கப்பட்ட சாதியினர்க்கு ஒரு நீதியா? என்ற வினா இன்றளவும் சட்டவியல் தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. 

மும்பையிலிருந்து வெளிவரும் 2022 ஆகஸ்ட் 6ஆம் நாளிட்ட அரசியல் பொருளாதார வார இதழில் முற்பட்ட வகுப்பினர்க்கு வழங்கப்பட்டு வரும் சலுகை களைப் பற்றி அசுவினி தேஷ்பாண்டே ராஜேஷ் ராமச்சந்திரன் என்ற இரு ஆய்வாளர்கள் ஆய்வு செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரையில் கர்நாடகா ஆந்திரா தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும்  சிறப்புத் திட்டங்களையும் சலுகைகளையும் பற்றி விளக்கியுள்ளனர்.

2011-12ஆம் ஆண்டில் இந்திய மானுட மேம்பாட்டு ஆய்வின் புள்ளிவிவரங்களை அடிப்படை யாகக் கொண்டு (அக்காலக்கட்டத்தில் ஆந்திராவும் தெலங்கானாவும் ஒரே மாநிலமாக இருந்தன) பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாத முற்பட்ட இந்து சாதியினர், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பழங்குடியினர் மற்றும் உயர் வகுப்பு இசுலாமியர்களிடம் ஓர் ஒப்பீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வானது கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பார்ப்பனர்கள் கல்வி, சுகாதாரம்  (Human Capital measures)  உள்ளிட்ட மானுட மூலதன   அளவீடுகளில் மற்ற அனைத்து சமூகங்களைவிட மிக உயர்ந்த நிலையில் உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்கள் “பார்ப்பனர்கள் சமூக, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட பல தளங்களில் மற்ற சமூகத்தினரை ஒப்பிடும்போது உச்ச நிலையில் உள்ளனர். மண்டல் (இட ஒதுக்கீடு) கொள்கைகளின் செல்வாக்கு அரசியலில் இதரப் பின்தங்கியோரின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்ற உயர் வர்க்கப் பார்ப்பனர்களை மண்டல் குழு பரிந்துரைகளினால் ஏற்பட்ட விளைவுகள் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை” (Viewing Caste Inequality Upside and Down – The Perversity of Special Schemes for Brahmins in South India by Ashwini Deshpande and Rajesh Ramachandran, EPW,p.48) என்று சுட்டுகின்றன.

பார்ப்பனர்களுக்கிடையில் வறுமை ஒரு பிரச்சினையா? என்ற  வினாவையும் இந்த ஆய்வாளர்கள் எழுப்பி அதற்கான விடையையும் கண்டுள்ளனர். “மற்ற சமூகங்களில் இருப்பதைப் போலப் பார்ப்பனர் களிலும் ஏழைகள் உள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டமும் (2005) அதற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த இத்திட்டமும் இதன் வழியாக வழங்கப்படும் ஊதியம் பொது விநியோகத் திட்டமும் இதன் வழியாகக் குறைந்த விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் எல்லோருக்கும் முழுமையாகச் சென்றடைகிறதா? என்ற வினாவையும் எழுப்பியுள்ளனர்.

கொரானா தொற்று நோய் பரவல் 2019க்குக் பிறகு மேற்கூறிய திட்டங்களின் வழியாக வழங்கப்படுகிற உதவிகள் தேவையான அளவிற்குக் கிடைக்கவில்லை. இத்திட்டங்களை மேலும் செம்மைப்படுத்தி எல்லாச் சமூகங்களிலும் காணப்படுகிற வறுமையைப் போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு மேயன்றி  பார்ப்பனர்களுக்கு மட்டும் பயன்படுகிற சிறப்புச் சலுகைகளை வழங்குகிற இந்த முறையற்றத் திட்டத்தை  எவ்விதத்திலும் நியாயப்படுத்து முடியாது. பார்ப்பனர்களுக்கு வழங்கப்படும் இந்தச் சிறப்புத் திட்டங்கள் உறுதியான சாதியக் கட்டமைப்பு முறையைத் தகர்க்காமல் அதற்கு நேர் எதிராக இந்த மூன்று மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் அமைகின்றன” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் தேர்தல் கொள்கைச் சார்ந்த (இந்துத்துவா) அடிப்படையில் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புத் திட்டங்களை  தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்குச் சமூகநீதி அடிப்படையில் வழங்கப் படுகின்ற (இத்திட்டத்திற்கும் நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது) திட்டங்களுடன் சமமாக ஒப்பிட  முடியாது. இத்தகைய அற்பமான திட்டங்களைக் கொண்டு உலக குரு (Modi) கூறுகிற புதிய இந்தியாவை உருவாக்கவே முடியாது. “(Viewing Caste Inequality Upside and Down – The Perversity of Special Schemes for Brahmins in South India by Ashwini Deshpande and Rajesh Ramachandran, EPW, pp.43-49).

அரசியல்-பொருளாதார 2022 சூன் 25 முதல் சூலை 2 வரையிலான வார இதழில் சமூக நீதி தொடர்பான இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஊர்ப்புற நகர்ப்புற வேலை வாய்ப்புகளில் சாதி வேற்றுமைகளும் வருவாய் ஏற்றத்தாழ்வுகளும்  என்ற கட்டுரையில் ஆனந்த் சகஸ்ரநாம் நிஷாந்த் குமார் என்ற இரு ஆய்வாளர்கள் 2014 முதல் 2019 வரை உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சில அரிய தகவல்களை வழங்கியுள்ளனர். சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினரின் வருமான அளவு தொடர்ந்து குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சிறு குறு வேளாண் குடியினர் வேளாண் தொழிலா ளர்களின் வாழ்வாதாரமும் இந்தக் காலக்கட்டத்தில் பெருமளவிற்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறைந்த வருமானப் பிரிவினர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினரும்தான் (Income and Inequality across Rural – Urban, Occupational, and Caste Divides by Anand Sahasranaman, Nishanth Kumar, EPW, June 25- July 2 Issue, 2022, pp.23-30) என இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே இதழில் மற்றொரு கட்டுரையில் தீபிகா ஜஜோரியா, மனோஜ் ஜாதவ் ஆகிய ஆய்வாளர்கள் வேளாண் சாராத் தொழில்களில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் அதனால் தொழில்துறை உறவுகளில் ஏற்படும் விளைவுகளும் (2004-05 முதல் 2018-19 புள்ளிவிவரங்கள் அடிப்படையில்) என்ற கட்டுரையில் “வேலைவாய்ப்பு படிநிலைகளையும் அவற்றால் பெறப்படுகின்ற வருமானத்தையும் கணக்கிட்டு 9 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். அதே போன்று  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதரப் பிற்படுத்தப்பட்டோர், முற்பட்ட வகுப்பினர் ஆகியோரின் வேலைவாய்ப்பு படிநிலைகளை இக்கட்டுரையில் விளக்கியுள்ளனர்.

பல ஆண்டு தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. உயர் வகுப்பினர்தான் மிக அதிக வருமானம் பெறுகிற அனைத்துப் பதவிகளிலும் இடம் பெற்றுள்ளனர். மற்ற சமுதாயப் பிரிவினர் உயர் பதவிகளில் மிகமிகக் குறை வாகவே இடம் பெற்றுள்ளனர். குறைந்த ஊதியம் வழங்கப்படுகிற கடைநிலை பணிகளில் மற்ற பிரிவினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள 9 நிலை வேலைவாய்ப்பு படிநிலை களில் 9வது கீழ்நிலை படியில்தான் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் அதிக அளவில் பணியில் உள்ளனர். 

தொழில் தொடங்குவதற்குத் தாழ்த்தப்பட்டோ ருக்கு மூலதனம் கிடைப்பதில்லை. சமுதாய அரசியல் நிதித் துறைகளிலும் இப்பிரிவினர் பின்தங்கியுள்ளனர். மேலும் நிரந்தரமான அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாலும் தனியார்த் துறை வளர்ந்து வருவதாலும் இப்பிரிவினர் பெருமளவு பொருளாதாரப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் (Caste Inequalities in Access to Regular Non-Farm Jobs and the likely Implication of the Industrial Relation code by Deepika Jajoria and Manoj Jatav, EPW, June 25- July 2 Issue, 2022, pp.31-37).

இந்தியாவின் பிற மாநிலங்களில் சனாதனக் கொள்கைகளைப் புகுத்தி ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி உயர்வகுப்பினரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது போன்று தமிழ்நாட்டிலும் கொண்டு வர சங் பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்கு முதலாளித்துவ பார்ப்பன சக்திகள் ஒன்றிணைந்து ஊடகங்கள் வழியாக எதிர்மறையான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் ஊடுருவிய இந்த சங்கிகள் இன்று ஆளுநர் வழியாகப் பல்கலைக்கழகங்களில் தங்களின் சனாதன ஆதிக்கப்போக்கைத் திணிக்க முற்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைச் சீர்குலைப்பதற்கு ஆளுநரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒன்றிய அரசு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.

பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீடு சமூக நீதிக் கொள்கைகளைச்  சிதைக்க  ஒன்றிய அரசு முற்பட்டு வருகின்றது.

தந்தை பெரியார் தனது தன்னலமற்ற பணிகளால் கட்டமைத்த சமூக நீதியை சமூக அமைப்பை வீழ்த்திவிடலாம் என்று திட்டமிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் சமூக நீதி சார்ந்த சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. சான்றாக இக்கட்டுரை யாசிரியர்  11ஆம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் (2006-11) மாநில அரசின் திட்டக்குழுத் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றிருந்த போது மொத்த திட்டச் செலவான ரூபாய் 92 ஆயிரம் கோடி தொகையில் 42 விழுக்காடு அளவிற்குக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மானுட மேம்பாட்டுத்  திட்டங்களுக்காகவே செலவிடப்பட்டது. எனவேதான் மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்திய மாநிலங்களின் வரிசைப் பட்டியலில் 1983லிருந்து முதல் மூன்று இடங்களில் இடம் பெற்று வருகிறது. இவற்றையும் சீர்குலைக்கும் நோக்கோடுதான் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசிற்கு வரி வருவாய் நிலுவைத் தொகையை வழங்காமலும் நீட் தேர்வை நீக்கும் சட்டமன்றத் தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக் காமலும் கடந்த ஓராண்டாக இழுத்தடிப்புச் செய்கிறது.

இன்றைய முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தந்தை பெரியார், அறிஞர் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்த நாள்களை சமூக நீதி நாளாகவும் சமத்துவ நாளாகவும் அறிவித்து அவர்களின் கொள்கை களை அரசின் வழியாக உயர்த்திப் பிடித்து வருகிறார். இப்போக்கைத் தடை செய்வதற்காக அரசியல், கலைத் துறைகளில் செல்வாக்குப் பெற்றவர்களை மிரட்டிப் பணிய வைத்து அவர்களைச் சனாதனத்  தரகர்களாக  பாஜக அரசு மாற்றி வருகிறது. 

இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, பழங்குடியினப் பிரிவினரின் வாழ்நிலையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் கல்வி, அரசியல், பொருளாதார, சமூகத் துறைகளில் இப்பிரிவினர் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்று வளர்ந்து வருகின்றனர். 50 ஆண்டுக்கால சமூகப் புரட்சியைப் புறந்தள்ளி சனாதனத்தை மீண்டும் தமிழ்நாட்டிலும் புகுத்துவதற்கு ஒன்றிய அரசும் பாஜகவும் சங் பரிவாரங்களும் பலபல வடிவங்களில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தந்தை பெரியாரிய, அம்பேத்காரிய, இடதுசாரி, தமிழ் முற்போக்கு இயக்கங்கள் இந்தப் பேராபத்தைத் தடுப்பதற்குப் பெருமளவில் விழிப்புணர்வு பரப்புரைகளை மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயமாகும்.

பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It