இந்திய அரசமைப்புச் சட்டம் 1950இல் நடை முறைக்கு வருவதற்கு முன்பு, பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் 1919ஆம் ஆண்டும், 1935ஆம் ஆண்டும் இரண்டு இந்திய அரசுச் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. பிரித்தானிய அரசு ஒற்றையாட்சி முறையைப் பின்பற்றியே இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநிறுத்தினாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவால் கூட்டாட்சி இயலைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
காங்கிரசுக் கட்சி மாநில உரிமைகளுக்காக விடுதலைப் போராட்டக்காலத் தில் போராடியதை யாரும் மறுத்துவிட முடியாது. 1919, 1935ஆம் ஆண்டுச் சட்டங்களை ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கும் சட்டங்கள் என காங்கிரசுத் தலைவர்கள் கடுமையான முறையில் சாடினர்.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது சட்டங்களில் மாகாணங்களுக்கு வழங்கிய உரிமைகளைக்கூட, தற்போது இருக்கிற நடுவண் அரசு பறித்துக் கொண்டு வருகிறது.
ஓற்றை ஆட்சிமுறையைவிட மோசமான ஏகாதிபத்திய ஆட்சிமுறையை இன்றைய பா.ஜ.க அரசு மக்கள் மீது திணிக்கிறது.
சான்றாக சென்னை மாகாணத்தில், 1937இல் இராஜாஜி முதல்வராக இருந்த போது மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த முற்பட்டார். அப்போது மதுவிலக்கால் ஏற்படும் வருவாய் இழப்பால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்த பி.ஜே.தாமஸ் அவர்களின் பரிந்துரையின் பேரிலேயே, விற்பனை வரியை விதித்தார்.
அன்றைய பிரித்தானிய அரசு இதற்கு அனுமதி அளித்தது. இந்த வரிதான் விடுதலை பெற்ற இந்தியாவில் மாநிலங்களுக்கு அதிக வரிவருவாயை ஈட்டுகின்ற முதன்மையான வரியாக இருந்து வந்தது.
இந்த விற்பனை வரியை மாநிலங்களிடமிருந்து பறிக்கத்தான் வாட் வரியை நடுவண் அரசு நடைமுறைப்படுத்தியது. தமிழ்நாட்டில் வாட் வரி 2007ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போதைய நடுவண் அரசின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இந்த வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படுகிற இழப்பினை நடுவண் அரசு ஈடு செய்யும் என்று உறுதியளித்தார். வாட் வரியை நடைமுறைப்படுத்தியதால் 2008இல் ஏறக்குறைய 3000 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு வரிவருவாயை இழந்தது.
இழப்பீடு தொகையையும் நடுவண் அரசு அளிக்கவில்லை. ஆனால் வாட் வரி வந்தால் முதலீடுகள் பெருகும்-விலைவாசி குறையும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
இதை நம்பித்தான் மருந்துப் பொருட்கள் மற்றும் ஏழைகள் நுகரும் பொருட்கள் மீது வாட் வரியை 4 விழுக்காட்டிற்குத் தமிழக அரசு குறைத்தது. இந்த வரிக் குறைப்பினால் மருந்து விலைகளும் மற்ற பொருட்களின் விலைகளும் குறையவில்லை என்று நிதிச் செயலர்கள் பின்பு உணர்ந்தனர்.
மாறாக, சில மருந்துப் பொருட்களின் விலைகள் 100 முதல் 150 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளன என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும். மாநிலத்தில் பல நிதி நிர்வாகக் குழப்பங்களை வாட் வரி உருவாக்கிவிட்டது.
பல பொருட்கள் மீது வாட் வரியும், சில பொருட்கள் மீது வாட் வரி அமைப்பின் கீழ் (Non-VAT) வராத வரிகளும் விதிக்கப்படுகின்றன. சான்றாக மது, பெட்ரோலியப் பொருட்கள், சர்க்கரை புகையிலை ஆகிய பொருட்கள் மீது வாட் வரிவிதிப்பின் கீழ் வராத மாநில வரி விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் மேற்குறிப்பிட்ட பொருட்களின் வழியாக வரும் வருவாய் மாநிலம் திரட்டும் வரிவருவாயில் 50 விழுக்காடாக உள்ளது.
1973ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாடு அரசு விற்பனை வரியை ஒருமுனை வரியாக விதித்து வந்தது. இதில் குழப்பங்கள் இல்லை. இதனால் மாநி லத்தின் ஒட்டுமொத்த வருவாய்க்கு ஏற்ப வரிவருவாயும் பெருகி வந்தது.
மேலும் மாநிலத்தினுடைய வேளாண் மை சிறு, குறு, நடுத்தர பெருந்தொழில்கள் எல்லா மாவட்டங்களிலும் பரவுவதற்கு வரிவிலக்கு அளிக்கும் உரிமையையும் மாநில அரசு பெற்றிருந்தது.
சான்றாக, வரி விடுமுறை (Tax Holiday) அளிப்பதன் வழியாகத் தொழில்களில் பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் துறையை வளர்க்கும் அதிகாரத்தையும் மாநில அரசு பெற்றிருந்தது.
பின்தங்கிய மாவட்டமான தருமபுரியில் தமிழக அரசு அளித்த வரிச்சலுகையின் காரணமாகத் தான் ஓசூரில் தொழில் நகரங்கள் உருவாயின என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவேதான் மாநிலத்திட்டக் குழு இந்த வாட் வரியை விதிக்கக்கூடாது எனக் கூறியது. இதனால் இவ்வரி 2006 ஆம் ஆண்டு விதிக்கப்பட வில்லை.
வாட் வரி நடைமுறைக்கு வந்த பிறகு மாநிலத்தின் வரிவருவாய் குறைந்து வந்துள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. இச்சூழலில் மாநிலங்கள் விதிக்கின்ற கேளிக்கை வரி, பொழுதுபோக்கு வரி, மாநிலங்களுக் கிடையே விதிக்கப்படும் மத்திய விற்பனை வரி, சேவை வரி ஆகியவற்றை இணைத்துத்தான் தற்போது நடு வண் அரசால் நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரக்கு-சேவை வரியாகும் (Goods and Services Tax). இன்னும் இவ்வரி அமைப்பு முறையை நடைமுறைப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வரிவிதிப்பின் வழியாக மாநிலங்கள் தங் களுடைய நிதி வருவாயை இழப்பதுடன் நிதித் தன்னாட்சியையும் இழந்து விடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
எளிமையான முறையில் வரிவிதிக்கப்படும் என்று ஏமாற்றுக் காரணத்தைக் குறிப்பிட்டு, ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் வஞ்சிக்கும் வரிவிதிப்பு முறையே சரக்கு-சேவை வரியாகும்.
2006ஆம் ஆண்டு நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவ்வரியை 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இன்றையப் பிரதமர் மோடி உட்பட பல மாநில பாஜக முதல்வர்கள் இவ்வரிவிதிப்பு முறைக்கு அப்போது கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக உறுப்பினர்கள் கூட்டாட்சி இயலைச் சிதைக்கும் வரி என்று வாதிட்டனர். இப்படி வாதிட்டவர்கள், இன்று ஏன் இந்த வரியைக் கொண்டு வந்தார்கள் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
குறிப்பாக ஒரே வரிமுறையைச் செலுத்திவிட்டால் உள்நாட்டு-பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் தங்களின் பொருட்களை மாநிலங்களுக் கிடையே எடுத்துச் செல்லும் போது எவ்விதத் தடையுமில்லாமல் எளிதாகத் தங்கள் வணிகத்தைப் பெருக்கலாம் என்ற காரணத்தை முன்வைத்துத்தான், நடுவண் அரசின் அமைச்சர்களையும் உயர் அலுவலர் களையும் வலியுறுத்தி வந்தனர்.
மாநிலங்களை உரிய முறையில் கலந்தாலோசிக்காமல் முதலாளிகள் நலனை ஒட்டியே இவ்வரியின் சட்ட வரைவு உருவாக்கப்பட் டுள்ளது.
இந்த வரி வருவதனால் விலைவாசி கட்டுப்படுத் தப்படுமா? சரக்கு-சேவை வரியை 18 விழுக்காடு விதிக்கலமா? அல்லது 24 விழுக்காடு விதிக்கலாமா? என்பன போன்ற கருத்தொற்றுமை இன்றளவும் ஏற்படவில்லை.
அதிக அளவு விழுக்காடு வரியை உயர்த்தினால்தான் தமிழ்நாடு போன்ற தொழில் உற்பத்தியிலும் சரக்கு விற்பனையிலும் முன்னிலை வகிக்கின்ற மாநிலங்கள் இவ்வரி வழியாக உரிய பலனை அடைய முடியும்.
இவ்வரிவிதிப்பு முறையை விட்டுக் கொடுப்பதால் ஏற்படும் வருவாய் இழப்பையும் சரிக்கட்ட முடியும். உற்பத்தியாளர்களுக்கும் முதலாளி களுக்கும் ஆதரவாக வரிவிகிதத்தைக் குறைக்க, குறைக்க மாநிலங்களுக்குக் கிடைக்கின்ற வரிவரு வாயில் இழப்பு ஏற்படும்.
சான்றாக, தமிழ்நாடு அரசிற்கு மட்டும் இவ்வரிவிதிப்பு நடைமுறைப்படுத் தப்பட்டால் ஏறக்குறைய 9000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சுட்டப்படுகின்றது.
இந்த வரித் தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியவுடன் நடுவண் அரசின் வருவாய் துறையின் செயலர் அ`முக் அதியா, இச்சட்டம் 2017 ஏப்ரல் முதல் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கூறிவிட்டு, 18 விழுக்காட்டு வரியை விதிக்கலாம் என்று பேசுவது சரியாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெரும்பான்மையான மாநிலங்கள் இந்தச் சட்டத்திற்கு 30 நாள்களுக்குள் தங்கள் சட்ட மன்றங்களின் ஒப்புதலை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நிதித்துறையைச் சார்ந்த உயர் அலுலவர் குறிப்பிடுவதைப் பலர் ஏற்றுக் கொள்ள வில்லை.
22 விழுக்காட்டிலிருந்து 24 விழுக்காடு அளவிற்கு இந்த வரியை உயர்த்தி விதித்தால்தான் வருவாய் இழப்பு ஏற்படுகின்ற மாநிலங்களுக்கு நடுவண் அரசு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு உதவி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சாதாரண மாக எல்லாச் சேவைகளுக்கும் 22 முதல் 24 விழுக் காடு வரியை விதித்தால் நடுத்தரப் பிரிவினரும் ஏழைகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக முடித்திருத்தம் செய்பவர்கள்கூட 22 அல்லது 24 விழுக்காட்டுச் சேவை வரியைச் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.
இதே போன்று உணவகங்களுக்கும், செல்லும் நுகர்வோர்க்கும் இதே அதிக விழுக்காடு வரியைச் செலுத்த வேண்டும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சரக்கு சேவை வரிவிகிதத்தை 5 முதல் 10 விழுக்கா டாகத்தான் வைத்திருக்கிறார்கள். இதுவே மிக உயர் வான வரிவிகிதம் என்று அந்நாட்டினர் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் தான் ஏறக்குறைய 80 விழுக்காட்டிற்கு மேல் இந்த வரியின் வழியாக வருவாய் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த மாநிலங்களில்தான் தொழில் துறை தொடங்கிப் பல சேவைத் தொழில்கள் பரவிக் கிடக்கின்றன.
இந்தப் பத்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில்தான் அதிகத் தொழில்களும் சேவைகளும் குவிந்துள்ளன.
எனவே 19 மாநிலங் களில் தொழில் துறை சேவைத் துறைகள் போதிய வளர்ச்சியடையாத காரணத்தினால், இந்த வரி வழியாக அரசிற்கு வருகின்ற வருமானம் மிகச் சொற்பமாக இருக்கும். ஒடிசா, பீகார் மாநிலங்கள் இந்த வரி விதிப்பு முறையை ஆதரித்து, சட்டமன்றங்களில் தீர் மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றன. இந்த வரியால் ரூ.30,000 கோடிகள் அளவிற்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறை வழியாக மாநிலங்களுக்கு இடையே காலப்போக்கில் கசப்புணர்ச்சி வளரும். கல்வி, திறன் வளம் ஆகிய துறைகளில் சாதனை படைத்து வரும் மாநிலங்களில் இவ்வரிவிதிப்பு முறை சமூக பொருளாதார பாதிப்புகளைப் பெருமளவில் ஏற்படுத்தும்.
ஏற்கெனவே நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடுவண் அரசினுடைய நிதிப் பகிர்வுகள், அதிக அளவில் வரிவருவாய் ஈட்டித் தரும் மாநிலங்களுக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.
சான்றாக, தமிழ்நாட்டிற்கு நிதிக்குழுவின் வழியாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் நிதி ஒதுக்கீடு ஒட்டுமொத்த நிதிப்பகிர்வில் 4 விழுக்காடே கிடைக்கின்றது என்பதைப் புள்ளி விவரங்கள் சுட்டுகின்றன.
எனவே இந்த வரிவிதிப்பு முறை ஏற்கெனவே வரியை ஏய்ப்பு செய்து வரும் பன்னாட்டு உள்நாட்டு முதலாளி களுக்கும் பெரும் வணிகர்களுக்கும் மட்டுமே சாதகமாக அமையும். பொருளாதாரத்தையும் வரிவருவாய் வளர்ச்சியையும் நிதிப்பகிர்வையும் ஆய்ந்த அறிஞர்கள், இந்த வரிவிதிப்பு முறையைக் கடுமையாக எதிர்க் கிறார்கள்.
மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் ஆட்சி செய்த போது வாட் வரியை விதிப்பதற்கான மாநிலங்களுக்கான அமைச்சரவைக் குழுத் தலைவராக அஜிம்தாஸ் குப்தா என்பவர் செயல்பட்டார்.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பொருளாதார அறிஞரும் ஜோதிபாசு அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பணியாற்றியவருமான அசோக் மித்ரா, மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் மேற்கூறிய காரணங்களைச் சுட்டி வாட் வரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களில் இருந்து வரியை நடுவண் அரசு எடுத்துச் செல்லுவதற்கும், மாநிலங்கள் வரி உரிமையை இழப்பதற்கும் இந்தியக் கூட்டாட்சி நிதியியலை (Fedeal Finance) நன்குணர்ந்த பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது நடுவண் அரசு விதிக்கும் வரிகள் மாநில அரசு விதிக்கும் வரிகள் எனப் பகுத்தாய்ந்து பிரிக்கப்பட்டது.
மாநில அரசுகள்தான் முதன்மையான மக்கள் பணிகளைச் செய்கின்றன.
எனவே மாநில அரசுகளுக்கு நடுவண் அரசின் வரிவருவாயில் இருந்து நிதிக்குழுவின் வழியாக வரிவருவாய் பகிர்வையும் மானியத்தையும் அளிக்க வேண்டும் என்று அரசமைப்புச்சட்டத்தில் 280ஆம் விதி இணைக்கப்பட்டது.
ஆனால் இன்று வரி வருவாய் திரட்டுவதில் மாநிலங்களின் தனித்தியங்கும் தன்மையே தகர்க்கப்படுகிறது.
தனியார்மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற பெயரில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு 1990ஆம் ஆண்டி லிருந்து தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே இது போன்ற வரிவிதிப்பு முறைகளை ஏற்படுத்தி மாநிலங்களின் அதி காரங்களைக் குறைக்கும் செயல் இந்திய ஒரு மைப்பாட்டிற்கு உலை வைக்கும் முயற்சியாகும். அரசமைப்புச் சட்டத்தின் 124வது திருத்தம் வழியாக இவ்வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முரண்பாடுகளும் குழப்பங்களும் உள்ள சரக்கு-சேவை வரி விதிப்பு முறையை அரசமைப் புச்சட்டத்தின் வழியாகக் கொண்டு வராமல் மேலை நாடுகளில் நடைமுறையில் இருப்பது போன்று வரி ஒப்பந்தங்கள் (Tax Agreement) வழியாகவே சில ஆண்டுகள் சோதனை அடிப் படையில் செயல்படுத்தி இருக்கலாம்.
இவற்றை யெல்லாம் விட்டுவிட்டு நடுவண் அரசு தனது அதிகார எல்லையை விரிவுப்படுத்துவதை மட்டும் தான் ஒற்றை இலக்காக வைத்துச் செயல்படு கிறதோ என்ற ஐயம் எழுகிறது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மீது பேசிய பிரதமர் மோடி சரக்கு- சேவை வரி வரி பயங்கரவாதத்திற்கு (Tax Terrorism) முற்றுப்புள்ளி வைக்கிறது என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஒரு நாடு ஒரே வரி (One Nation, One Tax) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நாள் வரை நடுவண், மாநில அரசுகளுக்கு மறைமுக வரி வழியாகத் தான் 60 விழுக்காட்டிற்கு மேல் வருவாய் வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் பயங்கரவாதம் என்று மோடி குறிப்பிடுகிறார்.
மேலும் ஏறக்குறைய 1990க்குப் பிறகு வரிச்சலுகைகளை நடுவண் அரசு முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. இதனுடைய ஒட்டு மொத்த மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 150 இலட்சம் கோடியைத் தாண்டுகிறது.
இதைத் தவிர நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நேர்முக வரிகளில்தான் வரி ஏய்ப்பும் மோசடிகளும் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இந்த வரிஏய்ப்பு செய்த பணம்தான் மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இயங்கி வரும் வங்கிகளில் கறுப்புப் பணமாகக் குவிக்கப்படுகிறது. இந்தப் பணம்தான் மீண்டும் இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் திரும்புகிறது என்பதை 2016ஆம்ஆண்டின் நடுவண் அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே சுட்டப் பட்டுள்ளது. இதுபோன்ற நிதி மோசடிகள்தான் பொருளாதார பாசிசத்தையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கிறது.
இந்த உண்மைகளை மறைத்து விட்டு பாஜகவும் காங்கிரசும் முதலாளித்து வத்தின் தரகர்களாகவே செயல்பட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் சரக்கு-சேவை வரியை அறிமுகப்படுத்துகிறார்கள்.
இதன் நீண்டகால விளைவுகளை உணராத அரசியல் கட்சிகளும் முதலாளித்துவ ஏடுகளும் அவர்களின் தரகர்களும் சரக்குச் சேவை வரி முறையை ஆதரிக்கின்றனர்.
19ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய போதே இத்தகைய வன்மங்களோடுதான் செயல்படும் அதிகாரங்களைக் குவிக்கும் என்று பொதுவுடைமை அறிக்கையில் மார்க்சும்-ஏங்கல்சும் நுண்மான் நுழைப்புலத்துடன் விளக்கியுள்ளனர்.
தனித்தனியாகப் பிரிந்து நிற்கும் மக்களையும் உற்பத்திக் கருவிகளையும் சொத்துக்களையும் முதலாளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறார்கள்.
இதனால் சிலர் கையில் சொத்துகள் சேருவதும் உற்பத்திச் சாதனங்கள் மையப் படுத்தப்படுவதும் மக்கள் ஒன்று திரட்டப்படுவதும் நிகழ்கின்றன. இதன் விளைவாக அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படுகிறது.
தனித்தனி நலன்களையும் சட்டங்களையும் அரசுகளையும் வரிவிதிப்பு முறைகளையும் கொண்ட சுயாட்சி உடைய அல்லது தனித் தனியாக இயங்குகின்ற மாநிலங்கள் ஒரே சட்டத்தோடு ஒரே வரிவிதிப்பு முறையோடு ஒரே தேசிய வர்க்க நலனிற்காக ஒரே அரசாக ஒரே எல்லையோடு ஒரு நாடாகத் திணிக்கப்படுகிறது என இப்பேரறிஞர்கள் சரியாகக் கணித்துள்ளனர் (The bourgeoisie keeps more and more doing away with the scattered state of the popul ati on, of the means of production, and of property. It has agglomerated population, centralized means of production and has concentrated property in a few hands. The necessary consequence of this was political central izati on, independent, or but loosely connected provinces with separate interests, laws, governments and systems of taxation, became lumped together into one nation, with one government, one code of laws, one national class interest, one frontier and one customstariff (Ref:From Communist Manifesto (1848) – Karl Marx- Frederic Engels – On the National and Colonial Questions – Selected Writings, edt. By Aijaz Ahmad, 2001, p.37)
இந்தியாவின் பத்து மாநிலங்களில் இருந்து பெறப்படும் அதிக வரி வருவாயை மிகக் குறைவான வரிவருவாயை ஈட்டும் ஏனைய 19 மாநிலங்களுக்கு சரக்கு-சேவை வரி என்ற பெயரில் பிரித்துக் கொடுப்பதுதான் தேசிய ஒருமைப் பாடா? இதுதான் நிதிச் சமத்துவமா? வட மாநிலங்களில் உள்ள முதலாளிகளின் நலன்களுக்காகவே மானுட மேம்பாட்டுக் குறியீடுகளில் முதல் மூன்று இடங்களில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வஞ்சிக்கத்தான் இந்த வரிவிதிப்பு முறையா? சுமை ஒரு பக்கம்! சுகம் ஒரு பக்கமா?