தமிழகத்தில் கல்வி என்பது பல்லவர்காலம் தொட்டு மாரட்டியர் காலம் வரையில் குருகுலக் கல்வியாகவே இருந்தது. அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் பொதுக் கல்வி நடைமுறைக்கு வந்தது. மெக்காலே கல்வித் திட்டத்தின் அடிப்படையில் அது ஆங்கில வழிக் கல்வியாகவே அமைந்தது. இந்திய அரசு 1857 இல் சென்னை, மும்பை கொல்கொத்தா ஆகிய இடங்களில் உயர்கல்விக் கென மூன்று பல்கலைக் கழகங்களைத் தொடங்கியது. அப்பல்கலைக் கழங்களில் மொழிப் பாடங்களாக, அரபி, இலத்தீன், பாரசீகம், சமற்கிருதம் ஆகிய மொழிகளை மட்டும் பயிற்று விக்க ஏற்பாடு செய்யப் பட்டது. இந்திய மொழிகளுள் சமற்கிருதம் மட்டுமே தனிமொழியாகக் கோலோச்ச பார்ப்பனர்களால் வழிவகை செய்யப்பட்டது.

தமிழின் அன்றைய நிலை சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1915 வரை திராவிட மொழிகளுக்குத் தனித்துறை கிடையாது. சமற்கிருதத் துறையின்கீழ்தான் இம்மொழிகள் இடம் பெற்றிருந்தன. 1915இல் தான் திராவிட மொழிக்குத் தனித்துறை ஏற்பட்டது. அப்படி இருந்தும் தமிழையோ, வேறு திராவிட மொழிகளையோ தனித்துப்படித்து வித்துவான் (அ) புலவர் பட்டம் பெற முடியாத நிலை இருந்தது. சமற்கிருதத்தை ஒரு பாடமாகப் படித்துத் தேர்ச்சி பெற்றால் தான், தமிழ் வித்துவானாக முடியும்; இல்லையேல் தமிழ் வித்துவானாக ஆக முடியாது. இந்த நிலையில்தான், 1918 இல் மொழிப்பாடம் படிப்பவர்க்கு ஆங்கிலம் கட்டாயம் என்பது நீக்கப் பட்டது. ஆனால், சமற்கிருதப் பாடம் கட்டாயப்படுத்தப் பட்டது.

சமஸ்கிருத அறிவில்லாத ஒருவன் திராவிட மொழிகளில் வித்துவானாக ஆகமுடியாது என்று சென்னைப் பல்கலை செனட் கூட்டத்தில் பார்ப்பனர்கள் வாதாடி வெற்றியும் பெற்றனர். சென்னை திராவிடர் சங்கம் மார்ச் 1918 இல் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அது என்ன வென்றால் சமற்கிருத மொழிக்குப்பதிலாக வேறு திராவிட மொழி ஒன்றைக் கூடுதலாகப் படிக்கலாம் என்பதுதான். இதுவும் போதாத ஒரு நிலையே ஆகும். இந்த நிலையில் தான் தமிழ்ப் பண்டிதர்களின் முதல் மாகாண மாநாடு டிசம்பர் 1918 இல் திருச்சியில் கூடியது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘தமிழை சமற்கிருதம், மற்றும் அரபு மொழிக்கு இணையாக ஆக்க வேண்டும். தமிழைத் தனித்த பாடமாகக் கருதி ஏற்றுக் கொண்டு பட்டம் வழங்க வேண்டும்’ என்பது. 1918 மார்ச்சில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய தமிழ்ப் பண்டிதர்கள் சைவ சித்தாந்த சமாஜம் சார்பில் நடைபெற்ற விழாவில் “தமிழைச் செம்மொழியாக” சென்னைப் பல்கலைக் கழகம் ஏற்பளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

திருச்சிராப்பள்ளியில் கூடிய பார்ப்பனரல்லா தார் மாநாட்டில் சென்னைப் பல்கலைக் கழகமும் ஆட்சிப்பணிகள் (சிவில் சர்வீஸ்) தேர்வு நடத்து வோரும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும்; பார்சி, அரபி, சமற்கிருதத்திற்குக் கொடுக்கும் அதே தகுதியைத் தமிழுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (“மதராஸ் மெயில்” 19-3-1918) கரந்தைத் தமிழ்ச் சங்கம் தன்னுடைய ஆண்டு நிறைவு விழாவில் 1919, மற்றும் 1920இல் மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றியது. இந்த நிலையில் தான் 1920 டிசம்பரில் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தது. இந்து மதச் சட்டத்திருத்த வரைவின் விவாதத் தின்போது, 22.12.1922இல் டாக்டர் சி. நடேச முதலியார் ‘செத்துப் போய்விட்ட மொழியான சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்கு அற நிறுவனங்களின் சொத்து. தண்aராகச் செலவழிக்கப்படுகிறது. அன்றும், இன்றும், என்றும் இயங்கிய இயங்குகிற இயங்கும் கலைச் செல்வமாம் தமிழ் இலக்கியங்களைப் படுபாதாளத்தில் புதைத்து விட்டனர். இனியும் பனகல் அரசரின் அரசு இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது’ என்று பேசினார்.

1925இல், “இந்த அரசு திராவிட அரசு. இது திராவிட மொழிகளுக்கு மட்டும் தான் அரசுப் பணத்தைச் செலவிடும்” என்று அன்றைய கல்வி அமைச்சர் ஏ.பி. பாத்ரோ கூறியதோடு நில்லாமல், அரசாணையும் வெளியிட்டடார். அக்காரணத்தால் தான் பார்ப்ப னர்கள் தமிழைத் தனிமொழிப்பாடமாக சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயில ஒப்புக் கொண்டார்கள். 1926இல் தான் தமிழைத் தனித்த மொழி யாகப் படித்து சமற்கிருதமோ (அ) வேறு பிற மொழி களோ பயிலாமல் வித்துவான் பட்டம் பெற முடிந்தது. வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி - பரிதிமாற் கலைஞர் 1898 இலேயே தமிழைச் செம்மொழியாக சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி எழுதிய நு£ல் கட்டுரைத் தொகுப்பு 1902இல் வெளி வந்தது. அந்நூலில் தமிழ் செம்மொழிதான் என்பதை விளக்கி எழுதி இருந்தார். மிகப்பெரிய தமிழ் அறிஞரான இவர் தமிழ் மொழியை ஆழ்ந்து கற்றவர். கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றியவர், இவர் தன்னுடைய நூலில் (தமிழ் மொழியின் வரலாறு பூம்புகார் பதிப்பகம் 2005ஆம் ஆண்டு திருத்திய முதற்பதிப்பு) “தமிழர்கள் பூர்வீக குடிகள் அல்ல. அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

“கொஞ்சம் காலம் சென்ற பின்னர் வடக்கே இமயமலைக்கப்பாலிருந்து சில சாதியார் இந்தியா வினுட் புகுந்தனர். அவர்கள் வந்து சம பூமிகளிற் கண்ட இக்காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேக காலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் நாகர்கள் எனப்படுவோர். இவர்களிற் சிலர் நீல கிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர். இனி, மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்திய வர்கள் தமிழராவார். இவர்கள் இமய மலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்த வர்கள். அங்கே பொறுக்க முடியாக் குளிரினாலும், மழையின்மையாலும், நிலம் கற்றரையாக இருந்தத னாலும் ஆறுகளும் அதிகமில்லாமையாலும் தானியம் முதலிய விளையாமையாலும் இவர்கள் சீவனஞ் செய்வதற்கே மிகவும் கஷ்டப்படுவார்கள், தங்கள் ஆடு மாடுகளுக்குக்காகப் புல்லைக் தேடிக் கொண்டு ஊரூராய்த் திரிவார்கள். இத்தகையோர் இமய மலைக்குத் தெற்கே வெப்பமும் வெயிலுமுடையனவாய்ப் பெரிதும் செழிப்பாக வளர்ந்த புல்வெளிகள் நூற்றுக் காவதத்திற்கு மேற் பரந்திருத்தலையும், அவ்வெளிகளின் வழியாய்ப் பெரிய ஆறுகள் ஓடுதலையும், அங்கே பலவகைத் தானியங்களும் நன்றாய் விளைதலையும் கண்டாற் கைப்பற்றிக் கொள்ளாது எளிதில் விடுவார்களோ? ஆதலால், அவர்கள் இந்தியாவிற் புகுந்து முன்னிருந்தாரைத் துரத்திவிட்டு மேற்கூறிய புல் வெளிகளையே தமது சொந்த தேசமாக்கிக் கொண்டனர்.

இவர்கள் வடமேற்குக் கணவாய்களின் வழியாக வந்து சிந்து நதிச் சமவெளியற்றங்கியிருந்து இடம் போதாமை யாற் பிறகு கங்கை நதிச் சமவெளியிலும் குடியேறி னார்கள். தமிழர்கள் எத்துணைக் காலம் இங்கே தங்கி யிருந்தன ரென்பது தெரியவில்லை. அதன்மேற் சிலகாலஞ் சென்ற பின்னர், வட கிழக்குக் கணவாய்களின் வழியாகத் தூரானியர் என்னும் வேறொரு முரட்டுச் சாதியார் இந்தியாவில் புகுந்து தமிழர்களை வென்று துரத்தி விட்டனர். அவர்கள் மங்கோலியர் இனத்தைச் சேர்ந்தவர், மஞ்சனிற மக்கள் என்ற பெயரும் அவர்கட்குண்டு. அங்ஙனம் துரத்தப்படவே, தமிழர்கள் விந்திய மலையின் கிழக்கு முனையைச் சுற்றியும், கடற்கரையோரமாகவுள்ள நெருக்கமான சமவெளியினூடும் மேலும், சென்றனர். சிலர் தம்மை வென்ற தூரானியரோடு கூடிக்கொண்டு முன்னிருந்த இடத்திலேயே தங்கினர். சிலர் கிழக்கு மலைத் தொடர்ச்சியின் கணவாய்களின் வழியாகப் போய்த் தக்ஷ்ண பீட பூமியில் வந்து தங்கினர். இறுதியாக அநேக ஆண்டுகள் திரிந்து, பலர் தென்னிந்தியாவிலுள்ள பெரிய பெரிய சம வெளி களில் தங்கிவிட்டனர்.

தமிழர்கள் தெற்கு முகமாக நோக்கி வரும் பொழுது பன்னெடு நாட்பிராயணஞ் செய்ய வேண்டியிருந்தமையின், அவர்களுட் சிலர் களைப்படைந்து இனிமேற் போதல் இயலா தென்று அங்கங்கே தங்கிவிட்டனர். இப்படி அங்கங்கே நின்று விட்டோர் தமிழ் மொழியின் பாகதங்களை இன்னும் பேசிக் கொண்டு வாரா நிற்கின்றனர். சிந்து நதிச் சமவெளியில் ஒரு சாதியாரும் விந்திய மலையின் கிழக்கு முனையி லுள்ள நாகபுரியில் மற்றொரு சாதியாரும் தமிழின் பாகதங்கள் இன்னும் பேசுகின்றனர். இனி இவ்வாறன்றித் தமிழர் இந்திய சுதேசிகளே யென்று கொள்வாருமுளர். வேறு சிலர் கடல் கொள்ளப்பட்ட இலெமூரியா வென்னும் நாட்டினின்றும் தமிழர் பரவி இந்தியா புகுந்தன ரென்பர்.” (“தமிழ் மொழியின் வரலாறு” பக்கம் 14, 15 பூம்புகார் பதிப்பகம் 2005ஆம் ஆண்டுப் பதிப்பு) இந்தப் பார்ப்பனர் தமிழர்களை மத்திய ஆசியாவில் இருந்து நாடோடிகளாக அலைந்து திரிந்து வந்து குடியேறியவர்கள் என்று வரலாற்றுத் திரிபு செய்துள் ளார். மங்கோலியர் தமிழரை விரட்டினர் என்ற பொய் வரலாற்றை எழுதியுள்ளார். ஆரியர்கள் பிறகு இந்தியாவில் புகுந்து மீதம் இருந்த தமிழர்களையும், மங்கோலி யரையும் விரட்டினர் என்று எழுதியுள்ளார்.

“ஆரியர்கள் ‘கைபர்க் கணவாய்’ வழியாக இந்தியா வினுட் புகுந்தனர். அவர்கள் அவ்வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ இதனை யறிவுடையோர் எளிதினுணர்ந்து கொள்வார்கள்.” (தமிழ்மொழி வரலாறு பக்கம் 17) மிகப் பெரிய தமிழ் அறிஞர் ஆரியர்கள் புகுந்தது தமிழர்களின் நன்மைக்கோ, அன்றித் தீமைக்கோ என்று ஒதுங்கிக் கொள்கிறார். இதுவும் ஒரு பார்ப்பனத் தந்திரமேயாகும். அன்று உயர்கல்வியில் பார்ப்பனர்கள் தங்கள் சுயலாபத்திற்காக - நம்மைப் படிக்கவிடாமல் செய்வதற்காக கட்டாய சமற்கிருதத்தைத் திணித்த போது, தமிழ் சமற்கிருதத்திற்கு இணையான மொழி என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுதுதான், தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள் என்று கோரிக்கை வைத்தனர். எந்தப் பல்கலைக்கழகம் தமிழழைச் செம் மொழியாக ஏற்க மறுத்ததோ அதே பல்கலைக் கழகத்தில் டாக்டர் பொற்கோ அவர்கள் துணை வேந்தராக வந்தபோது. 2000த்தில் ‘தமிழைச் செம் மொழியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று’ ஆளவை மற்றும் ஆட்சி மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை முன்வைத்துத் தலைநகர் தமிழ்ச் சங்கம். பெங்களூர், புதுதில்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மாநாடுகளும் பல போராட் டங்களும் நடத்தின. தேவநேயப் பாவாணர் இதற்காக ஆங்கிலத்திலும், தமிழிலும் தனி நு£லே எழுதினார். இக் கோரிக் கையை வலியுறுத்திப் பல்வேறு சிறு சிறு தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அவ்வப்போது சில போராட்டங்களையும் நடத்தின. திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை யில் இதை வலியுறுத்தியது. ஒரு வழியாக 2004இல் இதை வென்றெடுத்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஒரு ஆணை இது. அவ்வளவு தான். இதனால், தமிழ்மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கிடைக்கும். 

Pin It