12.6.2010 காலை 8.30 மணிக்கு விழுப்புரத்தைச் சேர்ந்த எழில் இளங்கோ, சோதி நரசிம்மன், கணேசன், பாபு, பாலமுருகன், கொத்தமங்கலம் சிவராமன், லலித்குமார், இடையர் செயராமன், அன்றில் ஏழுமலை ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழர் தேசிய இயக்கத் தோழர்களும், மற்ற சிறுசிறு அமைப்புகளையும் சேர்ந்த தோழர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் கூட்டமைப்பு என்ற அமைப்பை அமைத்துச் செயற்பட்டு வந்தவர்கள் ஆவர்.

12.6.2010 அன்றே இவர்கள் அநியாயமாகக் கைதுசெய்யப்பட்டதைச் சென்னையில் உள்ள காவல் துறைத் தலைவர், உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்குத் தந்திமூலம் தெரிவிக்கப்பட்டது. 12.6.2010 அன்று இரவு எழில் இளங்கோவும் சோதி நரசிம்மனும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் 13.6.2010 அன்று காலையே மீண்டும் அவர் களைக் கைது செய்தனர். 13.6.2010 அன்று விழுப்புரத்தில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர்கள் சுமார் 40 பேர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் மனித உரிமை ஆர்வலர் திண்டிவனம் பிரபா கல்விமணி, முருகப்பன், இராசகணபதி, உள்ளிட்ட தோழர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குண்டு வெடிப்பைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் தமிழ் இன உணர்வாளர்களைக் கைது செய்து அடக்க உளவுத்துறையே குண்டு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் காவல்நிலையத்தில் 4 பேர் வளவனூர் காவல் நிலையத்தில் 2 பேர், காணை காவல் நிலையத்தில் 3 பேர், கஞ்சனூர் காவல் நிலையத்தில் 2 பேர் எனப் பிரித்துப்பிரித்து வைத்து, சட்டவிரோத மாக காவல்நிலையத்திலேயே மூன்று நாள்கள் வைத்திருந்து கியூ(னி) பிரிவு போலிசாரும் மற்ற உளவுத் துறையினரும் மாறி மாறி வந்து இவர்களை விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தினர். குற்றவாளி என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரைக் கைது செய்தால் 24 மணி நேரத்தில் நீதிபதி முன் நிறுத்தி, சிறையில் அடைத்து, பிறகு நீதிமன்றம்தான் விசாரணை நடத்த வேண்டும் என்பது சட்டம். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது எங்கே கடைப்பிடிக்கப்படுகிறது?

15.6.2010 அன்று உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்து 16.6.2010 அன்று அது விசாரணைக்கு வந்த பிறகே அனை வரையும் விடுதலை செய்துவிட்டோம் என்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் நேர் நிற்க வேண்டும் என ஆணையிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி மறு நாள் அவரைக் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். காவல்துறையின் இத்தகைய அத்துமீறலைக் கண்டித்து விழுப்புரத்தில் 18.6.2010 அன்று பகல் 12 மணிக்கு சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை அழைத்து வருவதற்காகச் சென்ற தோழர்கள் பாபு, ஏழுமலை, சோதி நரசிம்மன், சீனு. தங்கராசு, லலித்குமார் ஆகியோரை மாலை 6 மணிவரை காவல்நிலையத்திலேயே உட்காரவைத்திருந்தனர்.

எங்களுக்கு மேலேயிருந்து உத்தரவு வந்தவுடன் முருகனை அனுப்பிவிடுகிறோம் என்றனர். ஆனால் 7 மணிக்குப்பிறகு முருகனை அழைத்துவரச் சென்ற அய்ந்து பேர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் பொய் வழக்குப் போட்டு அவர்களைக் கடலூர் சிறையில் அடைத்தனர். அவர்களுக்குப் பிணை கேட்டு மனுப்போட்டபோது கடலூர் மாவட்ட நீதிபதி இவர்களை இப்போது வெளியே விட்டால் செம்மொழி மாநாட்டைச் சீர் குலைப்பார்கள். ஆகவே செம்மொழி மாநாடு கழித்து மனுப்போட்டால் பிணையில் விடுகிறேன் என்று கூறிவிட்டார்.

செம்மொழி மாநாடு 27.06.2010 அன்று முடிந்தபிறகு, 28.06.2010 அன்று மனு போடப்பட்டது. இருநபர் ஜாமின் பேரில் விழுப்புரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் விடுதலை செய்யப் பட்டனர். 13.7.2010 அன்று அன்று நிபந்தனையில் தளர்வு கிடைத்தது. ஆனாலும் வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழ் இன உணர்வாளர்களை ஒடுக்க நினைக்கும் காவல்துறையின் போக்கை வன்மை யாகக் கண்டிப்பதுடன் இந்தப்பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப்பெற காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இல்லையேல் தமிழின உணர்வாளர்களை ஒடுக்குவதில் தமிழக அரசுக்கும் தொடர்பு உண்டு என்ற அவப்பெயரைத் தமிழக அரசு ஏற்க நேரிடும்.

- சீனு.தங்கராசு

Pin It