உருசியத் தலைநகரிலுள்ள கிரம்ளின் மாளிகையின் அடியில் டங்ஸ்டன் உலோகத்தாலான நிலவறை ஒன்றுள்ளது. அவ்வறையில் உலக மொழிகளில் உள்ள சிறந்த நூல்கள் வைக்கப் பெற்றுள்ளன. போரில் உலகமே அழிந்தாலும் எதிர்காலத்தில் எப்போதாவது இவ்வறை திறக்கப் பெற்று அதிலுள்ள நூல்களை அறிந்து கொள்ள வாய்ப்பாகும் என்பதே நோக்கம். இந்நிலவறைப் பெட்டகத்தில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் நூல் திருக்குறள் மட்டுமே. இது தமிழுக்குக் கிடைத்த தனிச்சிறப்பு. உலகத்தவரால் ஏற்கப் பெற்ற இலக்கியம் என்ற பெருமை பெற்றது திருக்குறள்.

valluvar 229உலகச் சிந்தனை:

பண்புடையவர்களால் மட்டுமே உலகம் வாழும் என்பதை வள்ளுவம் பண்புடையார் பட்டுண்டுலகம் (996) எனக் குறிக்கிறது. பண்புடையவரைப் பின்பற்றி உலக மக்கள் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி வாழாதவர் எத்தகைய கல்வியைக் கற்றிருந்தாலும் கல்லாதவரே என்பதை, உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (140) எனத் தெளிவுபடுத்துகிறது. தமிழுணர்வாளராய் விளங்கிய திருவள்ளுவர் தம் நூலில் தமிழ் என்றோ, தமிழ்நாடு என்றோ எங்கும் குறிப்பிடவில்லை. திருக்குறளில் உலகப் பொதுமை பெற்ற மனிதம்தான் இருக்கிறது. சாதிப் பெயரோ, மூலப்பெயரோ, குலப்பெயரோ, குடிப்பெயரோ இடம்பெறாமல், ஆண் பெண் என்ற பகுப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (972) என்னும் வள்ளுவம் உலகினர் அனைவருக்கும் உரியது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் (322) என்னும் வள்ளுவக் கோட்பாடும் அவ்வாறே.

வாழ்வியல் நெறிகளை வையகம் முழுமைக்கும் ஏற்றவாறு வகுத்துக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். சமயங் கடந்த நெறிகள் வள்ளுவருடையவை; அறிவை முன்நிறுத்துபவை. இதற்காக வள்ளுவர் நீண்ட நாள் சிந்தனை செய்து, பலருடனும் பழகிக் கருத்தறிந்து அதன்பின் பொதுமைக் கருத்துக் கருவூலமாகத் திருக்குறளைப் படைத்திருக்க வேண்டும். இதனால்தான் இன்றும் வையகத்துக்கு வழிகாட்டும் வாழ்வியல் நீதி இலக்கியமாகத் திருக்குறள் திகழ்கிறது.

குறளில் உலகம்:

திருக்குறளில் உலகு, உலகம், உலகத்தார், உலகத்தியற்கை, உலகியல், உலகெல்லாம் போன்ற உலகத் தொடர்பான சொற்கள் முப்பாலிலும் பயின்று வந்துள்ளன. முதற் சீராக உலகத்தோடு (140) உலகம் தழீஇயது (425) உலகத்தார் (850) என மூன்று இடங் களில் பயின்று வந்துள்ளன. உலகு என்னும் சொல் ஈற்றுச் சீராக 1, 23, 27, 58, 211, 234, 290, 336 என அறத்துப் பாலில் எட்டு இடங்களிலும், 387, 389, 470, 520, 544, 571, 575, 612, 670, 809, 841, 874, 970, 994, 1015, 1025 என பொருட்பாலில் பதினாறு இடங்களிலும், காமத்துப் பாலில் 1103 என ஓரிடத்திலுமாக இருபத்தைந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது.

ஆல்பர்ட் சுவைட்சர் :

ஆப்பிரிக்காவில் மருத்துவப் பணியாற்றிய ஆல்பர்ட் சுவைட்சர் திருக்குறளைக் கற்றுணர்ந்து அதன் கருத்துகளில் உள்ளந் தோய்ந்த சிந்தனையாளர். ஒழுக்கமே மனிதனுடைய உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை மிகுந்த உறுதியோடு வள்ளுவர் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தமக்குத் தாமே செய்ய வேண்டிய கடமை என்ன, மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன என்பவற்றை யெல்லாம் சிறந்த பண்பாட்டோடும், மதிநுட்பத்தோடும் வள்ளுவர் பேசுகிறார். உலக இலக்கியத்தில் இத்துணை மாண்பு மிக்க மெய்யறிவு வேறு எந்த நூலிலும் இத்துணைச் சிறப்பாகப் பொலிவு பெறவில்லை என்று கூறலாம் என்ற ஆல்பர்ட் சுவைட்சரின் கருத்து உலகப் பார்வையாளரின் திருக்குறள் கருத்துக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகிறது.

உலகந்திருந்த ஒரு குறள்:

ஐ.நா. மன்றத்தின் குறிக்கோள் தனிமனிதனைத் திருத்து. உலகம் திருந்தி விடும் என்பது.

மக்களில் பெரும்பாலோர் தம்மிடமுள்ள குறைகளைக் கண்டு அவற்றை நீக்கிக் கொள்வதைவிட மற்றவர்களின் குற்றங்களைப் பட்டியலிடுவதில்தான் முன்னிற்கின்றனர். முதலில் ஒவ்வொருவரும் தம்மிடமுள்ள குற்றங்களை நீக்கிக் கொண்டபின் மற்றவரின் குற்றங்களைக் காண வேண்டும். இந்த நிலை உருவாகுமானால் உலக மக்கள் அனைவருக்கும் எந்தத் தீமையும் இல்லை. இதனைத் திருக்குறள் ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு (190) எனக் கூறுகிறது. உலக மக்கள் அனைவரும் இவ்வொரு நெறியைத் தவறாது பின்பற்றினால் உலக அமைதி தாமே அமைந்து விடும் அல்லவா?

வள்ளுவம் வழங்கும் அறம்:

மனத்தூய்மையே அறம் என வலியுறுத்தும் வள்ளுவம் அழுக்காறு, அவா, வெகுளி, கடுஞ்சொல் ஆகிய நான்கையும் விலக்கி வாழ வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறது (35). இத்தகு தூயமனமே மக்களுக்கு ஆக்கத்தைத் தரும் என்பதை மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (457) எனவும் வலியுறுத்துகிறது. இத்தகு மனநலம் உடையவர்களாக மக்கள் வாழும் நிலை வர வேண்டும். இத்தகு வாழ்வுதான் அறவாழ்வு என வள்ளுவம் வரையறை செய்கிறது. வஞ்ச மனமும் போலி ஒழுக்கமும் வையகத்தில் வர இடங்கொடுத்ததால்தான் அழிப்பொழிப்புக் குழுக்கள் பல நாடுகளில் வெளிப்படையாக வளர்ந்து ஆட்டிப் படைக்கின்றன. இப்படித் தான் வாழ வேண்டும் என்ற அறத்தை விலக்கி, எப்படியும் வாழலாம் என்ற மற வாழ்க்கையைத் தேர்ந்து பொருள்களைக் குவிக்கின்றன.

இல்லறம்:

இல்லற வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலத்துடன், மக்கட்பேறு பெற்று, அன்புடைமையுடன், விருந்தோம்பி, இனியவை கூறி, செய்ந்நன்றி அறிந்து, நடுவு நிலைமையுடன், அடக்கம் பெற்று, ஒழுக்கத்துடன், பிறனில் விழையாது, பொறுமையுடன், அழுக்காறாமை, வெஃகாமை ஆகியவற்றுடன் பயனில சொல்லாமல், தீவினைக்கு அஞ்சி, ஒப்புரவறிந்து, ஈகைக் குணத்துடன், புகழ்பெற்று வாழ்தலே என அறத்தை முன்னிறுத்தித் தெளிவுபடுத்துகிறது. இந்நெறி உலக மக்கள் அனைவர்க்கும் உரியதே.

பொருள்:

எந்த வழியிலாவது பொருள் ஈட்ட வேண்டும் என்பதே இன்றைய மக்களின் குறிக்கோளாய் இருக்கிறது. இவ்வெண்ணமே ஊழலை வளர்க்கவும் உதவுகிறது. பொருள் ஈட்ட வேண்டிய நெறியை வள்ளுவம் தெளிவு படுத்துகிறது. அருளொடும் அன்பொடும் திறனையறிந்து தீமையின்றி சேர்க்கும் பொருள் அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும் (754) எனக் குறிப்பிடுகிறது. ஈன்ற தாய் பசியாக இருந்தாலும் அதற்காகச் சான்றோர் பழிக்கும் செயல்களைச் செய்யாதே (656) என வள்ளுவம் எச்சரிக்கிறது.

வள்ளுவர் காலச் சமுதாயம்:

வள்ளுவர் காலச் சமுதாயம் மேலும் கீழும் அமைந்தது. ஒருமை மகளிரும் இருந்தனர். இருமனப் பெண்டிரும் இருந்தனர். செல்வரும் இருந்தனர். வறியவரும் இருந்தனர். நல்லினம், தீயினம், சிற்றினம் இருந்தன. ஈவாரும் இரப்பாரும் இருந்தனர். களவும் கொலையும் இருந்தன. உழவரும் வணிகரும் இருந்தனர். செங்கோன்மையும் கொடுங்கோன்மையும் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் வையகம் வாழ வள்ளுவத்தைப் படைத்தார் வள்ளுவர்.

களையெடுக்க வேண்டும்:

கொள்ளைக் குழுக்கள் நாடுகள் பலவற்றிலும் செயல்பட்டுக் கொடுமைகளை விளைவிக்கின்றன. மக்களைக் கொன்று குவிக்கின்றன. இத்தகைய கொடியவர்களை ஆட்சி தண்டிக்க வேண்டும். தண்டிக்கவில்லை என்றால் பயிர்களுக்கிடையே களைகளை வர விடுவதற்கு ஒப்பாகும் (550) என வையகப் பொது நீதியை வலியுறுத்துகிறார்.

உழவு:

உலக மக்களுக்கு உணவிடுவது உழவுதான். எனவே, உழவுக்கு ஓர் அதிகாரம் வகுத்தார் வள்ளுவர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் (1033) எனச் சிறப்பிக்கிறார்.

பணத்தைச் சேர்த்து வைத்த நாடுகள்கூட உணவுக்கு, உழவுத் தொழில் செய்பவர்களைத் தான் எதிர்பார்த்திருக்கின்றன. இந்த நிலை இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும்.

மருத்துவம்:

இரண்டாயிரம் ஆண்டுகளில் மருத்துவத் துறை எத்தனையோ மாற்றம் பெற்றிருக்கிறது. உடல் நோய் அனைத்துக்கும் அடிப்படை, உண்ட உணவு செரிக்கப் பெறா நிலையில், மேலும் மேலும் மீதூண் உண்பதுதான். இதற்கு வழிகாட்டும் வள்ளுவம், உண்ட உணவு செரித்தபின் அளவறிந்து உண்ண வேண்டும். இதுவே நீண்ட காலம் வாழும் வழியாகும் (943) எனக் குறிக்கிறது. மேலும், மருத்துவம் நோயுற்றவன், மருத்துவன், மருந்து, உதவி செய்பவன் என்ற நான்கு பிரிவுகளை உடையது என்பதனை,

உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்று

அப்பால்நாற் கூற்றே மருந்து (950)

என வரையறை செய்கிறது. இவ்வடிப்படையில் தான் இன்றைய மருத்துவ உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

கற்கும் வழிகள் ஓர் ஒப்பீடு:

அறுபதாண்டுகட்கு முன் பெரம்பலூரில் தமிழாசிரியராகப் பணியாற்றும்போது அங்குள்ள கிளை நூலகத்தில் கற்கும் வழிகள் என்ற ஆங்கில நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்நூலை எழுதியவர் அமெரிக்கப் பேராசிரியர் சான் சினைடர் என்பவர். ஐந்நூறு பக்கங்களைக் கொண்ட அந்நூலில் நான்கு வினாக்களை எழுப்பி அவற்றிற்கு விடையாக நூலைப் படைத்திருக்கிறார். அவ்வினாக்கள்,

என்ன படிக்க வேண்டும்?

எப்படிப் படிக்க வேண்டும்?

ஏன் படிக்க வேண்டும்?

எப்போது படிக்க வேண்டும்?  

திருவள்ளுவர் தம் நூலில் கற்றலைப் பயன்படுத்தி இருக்கிறாரேயன்றி படிப்பது என்பதை எங்கேயும் பயன்படுத்தவில்லை. கற்றதன்படி நடந்து காட்டலே கற்றல் ஆகும். படிப்பது அறிவைப் பெருக்கிக் கொள்வது. அமெரிக்கப் பேராசிரியரின் நான்கு கேள்விகளுக்கும் வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் விடை அளித்துள்ளார். கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (391). இக்குறட்பாவில் மூன்று வினாக்களுக்கு விடையுண்டு. என்ன படிக்க வேண்டும்? கற்க வேண்டியவைகளை மட்டும் கற்க வேண்டும். கற்பவை கற்க.

எப்படிப் படிக்க வேண்டும்?

குற்றமறக் கற்க வேண்டும். கசடறக் கற்க.

ஏன் படிக்க வேண்டும்?

கற்றபடி நடந்து காட்டக் கற்க வேண்டும். அதற்குத் தக நிற்கக் கற்க.

நான்காம் வினாவுக்கு விடையாக,

யாதானும் நாடாமால் ஊராமால் என் னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு (397) என்ற குறளைப் படைத்துள்ளார். கற்றவர்கட்கு மட்டுமே எல்லா நாடும் அவர்தம் நாடாகும். எல்லா ஊரும் அவர்தம் ஊராகும். அவ்வாறிருக்கும் போது, ஒருவன் ஏன் சாகும் வரைக் கற்காமல் இருக்கிறான் என்ற வினாவை வள்ளுவர் எழுப்புகிறார். பலருக்குப் பணியில் சேர்ந்தபின் படிப்பது நின்று விடுகிறது. இன்னும் பலருக்கு ஓய்வுக்குப் பிறகு படிப்பது நின்று விடுகிறது. இவற்றை விலக்கி, இறக்கும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வள்ளுவ நெறி. வையத்துக்குரிய நெறி. கற்ற தன்படி வாழ்ந்து காட்டலே கற்றல் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொண்டால் வள்ளுவத்தின் சிறப்பு புலப்படும்.

தமிழர்தம் கைகாட்டி:

தமிழன் மட்டும் கைகாட்டிக்கு அடியில் அமர்ந்து கொண்டு கைகாட்டியே நம்மை இலக்கில் கொண்டு சேர்க்கும் என எண்ணுகிறான். திருக்குறள் என்னும் அருமையான வழிகாட்டியைப் பெற்றும் பயன்படுத்தாதவனாய், ஒளி விளக்கிருந்தும் இருளில் தவிப்பவனாய், அரிய உணவைப் பெற்றும் பசியில் வாடுபவனாய், நல்ல படகிருந்தும் வாழ்வியல் ஆற்றைக் கடக்கத் தெரியாதவனாய், கடவுளை நம்பி, மூடநம்பிக்கையில் மூழ்கித் துன்பத்தில் தொலைந்து கொண்டிருக்கிறான்.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், திருக்குறளை அறியாதவர்கள், வாழ்க்கையில் அன்பும் அறனும் ஒழுக்கமும் கொண்டு வாழ்கிறார்கள். பட்டங்கள் பலவற்றைப் பெற்றுப் பணிக்கும் பதவிக்கும் வந்தவர்கள் கற்றவற்றைப் பின்பற்றாமல் படிப்புக்கும் பண்புக்கும் தொடர்பற்றவர்களாக வாழ்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை.

இன்றைய கல்வி வாழ்வியலுடன் தொடர்புடையதாக இல்லை. கற்பிப்பவர்களும் எடுத்துக் காட்டாக வாழ்வதில்லை. கற்பவர்களும் பின்பற்றுவதில்லை. இத்தகையவர்களை வள்ளுவர் அறிவில்லாதவர்கள் என்றே அறைகிறார்.

கற்றும், உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் மட்டும் அவ்வாறு வாழ்ந்து காட்டாதவரை விட அறிவில்லாதவர் இல்லை என்பதை,

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல் (834)

எனக் குறிக்கிறார்.

வள்ளுவத்தை வாழ்வியலில் பின்பற்றி ஏனையோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இதுவே வையக அமைதிக்கு வழி. வையக அமைதிக்கு வள்ளுவமே வழி!

முனைவர் அ.ஆறுமுகம், திருமழபாடி