thiruvalluvarதென்னாட்டின் பொன்னேடாம் திருக்குறள் இந்நாட்டில் மட்டுமின்றிப் பன்னாட்டு மொழிகளிலும் ‘அறம்’ பாடிப் புகழ்வீறு பெற்றுள்ளது. எக்காலமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உயிர்ப்பான உயர்ந்த கருத்து களைக் கொண்டு உலகப் பொதுமறையாக ஒளிர்ந்து கொண்டுள்ளது.

அத்தகைய திருக்குறளை மனு நூலோடு ஒப்பிட்டுக் குறளின் பெருமையை ‘மட்டம் தட்ட’ ஆரியரும், ஆரிய அடிவருடிகளும் முயன்று வருகின்றனர்.

ஈரோட்டுப் பெரியாரை ஈர்த்த ஒரே அறநூல் இலக்கியம் திருக்குறளே ஆகும். ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் - பெண்ணின் பெருமையைச் சிறுமைப் படுத்தும் மனுநூலைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தீயெரிப்புத் தண்டனையும் தந்தவர், தந்தை பெரியார்.

அந்நூல் எப்போதோ வழக்கொழிந்துவிட்டது. ஆனாலும் இப்போது மனுவைத் தாங்கிப் பிடித்துத் தூக்கி நிறுத்த ஒரு ‘கூட்டம்’ முயல்கிறது. அத்தோடு நில்லாமல் அக்கூட்டம் திருக்குறள் மீது ஒரு பழி சுமத்துகிறது.

“‘மனுநூல்’ பெண்களை இழிவுப்படுத்துகிறது என்று பேசுகின்ற நீங்கள், திருக்குறள், ‘பெண்வழிச்சேறல்’ என்ற அதிகாரத்தில் பெண்களை இழிவுபடுத்துகிறதே, அதற்கு என்ன விடை சொல்லப் போகிறீர்கள்?” என்று கேட்கிறது. அந்த வினாவுக்கு விடை சொல்லவே இக் கட்டுரை.

திருக்குறள் ‘பெண்வழிச்சேறல்’ என்ற அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களையும் ஊன்றிப் படித்தால் ஓர் உண்மை புலனாகும், தம் பெண்மையை நயக்கும் ஆண்களை, அதனாலேயே மயக்கித் தம் விருப்பப்படி செயல் பட வைக்கும் பெண்களையே மறைமுகமாகச் சாடுகிறது. காம இன்பத்தில் எளியராக இருக்கும் ஆண்களின் கன்னங்களில் வெளிப்படையாகவே ‘பளார், பளார்’ என்று பத்துக் குறள்களும் அறைகின்றன என்பது புலனாகும்.

இனி, அவ்வதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளின் கருத்தையும் நோக்குவோம். அதற்கு முன்பு, பரிமே லழகரின் உரையை ஒட்டி எழுந்த கருத்தை அறிவோம். காமத்தால் வருபவை நேரே பகையல்ல; ஆயினும் ஆக்கம் சிதைத்தல், அழிவுகளைத் தருதல் என்னும் தொழில்களால் பகையோடு ஒப்பாகும்.

அதனால், ஆடவன் தன் மனைவி மேலுள்ள காமத்தால் அவள் முரண்பாடுகளைக் கண்டு கொள்ளாது, அறம், பொருள் ஆகியவற்றை மறந்து துறந்துவிடக்கூடாது என்பதற்காக ஆணுக்கு எச்சரிக்கை - இடித்துரை வழங்கும் அதிகாரம் ‘பெண்வழிச்சேறல்’ என்னும் அவ்வதிகாரம்.

குறள் 1: இன்பம் காரணமாகத் தம் மனைவியை விழைந்து அவள் தன்மையராய் நடக்கின்றவர், தமக்கு இனிய துணையாகிய அறத்தினை எய்தமாட்டார். இகிழ்ச்சிக்குரிய பொருளாகக் கூடியது அவ் இன்பம்.

ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, பொலிவு, அழகு, சாயல், நாணம், மடன், நோய், வேட்கை (விருப்பம்), நுகர்தல் (இன்பம் துய்த்தல்) போன்ற சொற்களின் பொருள்களை நெஞ்சால் உணரமுடியும்; பருப்பொருள்கள் போன்று காட்ட முடியாது.

அவை நுண்பொருள்கள் என்று கூறுவர் என்பது தொல்காப்பியம் (தொல். பொருள். நூற்பா 1193). அதனால்தான் திருவள்ளுவரும் மனைவியை விழைந்து அவள் தன்மையனாய் நடக்கின்றவன் பெறுகின்ற இன்பம் இகழ்ச்சிக்குரிய பொருளாகும் என்று கூறுகிறார்.

வினையே ஆடவர்க்கு உயிர். அவ் வினையை ஆற்றினால்தான் ஆடவன் பொருள் பெற்று (பருப் பொருள்) அறம்புரிய முடியும். அன்பின் இணைந்த இன்பம் பெற முடியும். அவ்விரண்டும் தவிர்த்து மனைவியிடம் இன்பம் பெறுவதற்காக எளியனாய்த் தாழ்ந்து போகின்றவன் இகழ்ச்சிக்குரியவன் ஆவான் என்பது சொல்லாமலே விளங்கும்.

குறள் 2: தன் ஆண்மையைவிட்டு மனைவியின் பெண்மையை எப்போதும் விழைபவன் எய்தியிருக்கும் செல்வம், இவ்வுலகத்தில் ஆண் பாலார்க்கு எல்லாம் பெரிய நாணத்தைத் தருவதோடு தனக்கும் நாணத்தைக் கொடுக்கும்.

குறள் 3: இல்லாளிடத்தில் தாழ்தற்குக் காரணமாகிய காம இச்சை, அத்தகைமை இல்லாத நல்லவர்களைக் காணும் எப்போதும் நாணத்தையே தந்து கொண்டிருக்கும்.

குறள் 4: தன் மனைவியை அஞ்சி ஒழுகுகின்றவனுக்கு ஆண்மை வீறு ஏற்படாது.

குறள் 5: தன் மனைவிக்கு அஞ்சுகின்றவன் நல்லவர்க்கு நல்லன செய்யவும் அஞ்சுவான். சுற்றத்தார்க்கும் ஏதிலார்க்கும் நன்மைசெய்ய நினைப்பினும், மனைவி என்ன சொல்வாளோ, தன்னைத் தொட விடமாட்டாளோ என்ற அச்சத்தால் நல்லவை செய்யாதிருப்பான்.

குறள் 6: மனைவியின் மூங்கில் போன்ற தோளினைத் தழுவ அஞ்சுவார். வீரத்தால் துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்தில் வாழ்ந்தாராயினும் ஆண்மை இலர்.

குறள் 7: காமப் பயன் கொள்வான் வேண்டி, நாணமில்லாமல் தன் மனைவியின் ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண்மைத் தன்மையைவிட நாணத்தை உடைய அவளின் பெண்தன்மையே மேம்பாடு உடையது.

குறள் 8: தான் வேண்டிய வழியிலின்றித் தன் மனைவி வேண்டியவாறு ஒழுகுபவன் தன்னோடு நட்புக் கொண்டோரின் உற்ற குறையைப் போக்கமாட்டான்; அறச்செயல் நன்மையும் செய்யமாட்டான்.

குறள் 9: பெண் இன்பம் விழைந்து தாழ்ந்தோன்; பெண்ணின் ஏவல்படி நடப்போன் அறம் புரியவும் மாட்டான்; அதற்கு வேண்டிய பொருள்திரட்சி செய்ய ஊக்கமும் கொள்ளமாட்டான்.

குறள் 10: வேந்தர்க்கும், காம இன்பத்தில் தோய்வாரானால் புகழ்ச்சி இல்லை.

ஒத்த அன்பினராக உள்ள கணவன் மனைவியிடம் இணை விழைச்சு இயல்பாக இனிதாக ஏற்பட வேண்டியது இயற்கையாகும். மலரினும் மெல்லியது காமம் என உணர்ந்தார்க்கு இருவர் மாட்டும் ‘நிறுத்த காம வாயில்’ - (காமம் துய்த்தற்கு உரிய உள்ளக் கிளர்ச்சி) தோன்றக் கூடுவார்க்கு இன்ப நிறைவு ஏற்படும். அவ்வாறு இல்லாமல் கணவன் மட்டும் மனைவியிடம் இன்பம் பெற, அளவில்லாத அவாவைக் காட்டினால், மனைவி அவனை எளியனாய், தாழ்வுடையோனாய் கருதித் தன் விருப்பப் படி ஆட்டிவைப்பாள்.

தன்வயமாக்கித் தன் ஏவல் செய்ய விடுவாள். “உரனும் ஆண்மையும் ஆடவர்க்குரிய பண்புகள். அவற்றைவிடுத்து பெண்ணின்ப நாட்டத்தில் அவள் வழி ஒழுகுவான். நல்லோரால் பழிக்கப்படுவான். அறம் புரியாது தடுக்கப்பட்டுச் சிறுமை அடைவான். நண்பர்களுக்கு, சுற்றத்தினர்க்கு, ஏதிலார்க்கு - உதவமுடியாத இழிதகைமை கொள்வான். வினை ஊக்கம் இழந்து நிற்பான்.”

வேந்தர்க்கும் அவ்வாறு ஒழுகின் பழிப்பு ஏற்படும் புகழ்ச்சி விளையாது. ஆட்சி அல்லற்படும். உட்பகை, புறப்பகை அவன் ஆட்சியைக் கவிழ்க்கும்.

எனவே, ஆடவனுக்கு வேண்டிய இயல்பு : ‘பெருமை யும் உரனும் ஆடூஉ மேன’ (தொல். களவு. நூற்பா 1044) என்பதற்கேற்ப பெருமையும் வலிமையும் ஆடவர்க்கு இயல்பாகும். இது உலகம் முழுவதும் பொருந்தும் என்பதற்கு ஏற்ப ஆடவன் நற்செயல் புரிவதற்கு நல் வழியில் பொருள் ஈட்டி நற்புகழை நிலைநாட்டிப் பெருமையுற வேண்டும்.

நல்வழியில் பொருளீட்ட, இடைவரும் இடையூறுகளை வெல்ல மனவலிமை (உரன்) கொள்ள வேண்டும். புகழ்புரிந்த இல்லறம் நடத்தும் இல்லாளை இணைநலமாகத் துணைநலமாக இருத்த, நிறுத்தச் சமவுரிமை வழங்கும் மனவுரம் - பரந்த மனம் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறு இன்றி மனைவியின் பெண்மையைப் பெரிதாக நயந்து, அவளின் முரண்பாடான எண்ணங்களுக்கு அரணாக, அடித்தொழில் ஏவலுக்குப் பணியாளனாக அமைந்து ‘அறம், பொருள்’ மறந்து ஒழுகும் கணவன் இழிதகைமைக்கு ஆளாவான். நல்லோரால் எள்ளப்படும் பொருளாவன். இத்தகு கணவனைத்தான் திருவள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்னும் அதிகாரத் தில் சாடுகிறார்.

இதற்குச் சான்றாக ஒரு குறுந்தொகைப் பாடலை இங்கே சுட்டுவது பொருத்தமாகும்.

“கழனி மாத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப்பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே”

- ஆலங்குடிவங்கனார், (குறுந்தொகை-9)

முன்நிற்பவன் தன் கையையும் காலையும் தூக்கும் போது தானும் கை, கால்களைத் தூக்கும் இயல்புடைய கண்ணாடியில் தோன்றும் பாவையைப் போன்று, தலைவன் தன் மனைவிக்கு அவள் விரும்பியவற்றை அறிந்து அவற்றிற்கு இயைய நடக்கின்றான் என்னும் பகுதியில் நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான்: தலைவன் ஆண்மையின் இழிந்து மனைவியைத் தாழ்ந்து ஒழுகுகின்றான்.

பெண்ணுக்குரிய பண்பு (அடக்கம், அன்பு...) இல்லாதவள் தலைவி (மனைவி) என்னும் அவளுக்குத் தாழ்ந்து ஒழுகும் தலைவன் (கணவன்) ஆண்மை இலன் என்றும் இருவரையும் ஒருசேர இகழ்ந்து உரைக்கிறார், ஒரு பரத்தை வாயிலாகப் புலவர் ஆலங்குடிவங்கனார்,

எனவே, திருவள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்னும் அதிகாரத்தின் வழியாக ஆடவனை, மனைவியிடம் பெண்மையை விழைந்து தன் ஆண்மையை, பெருமையை, மன வலிமையை, இழக்காதே என்றும், அற மறுப்பை, செயல் வெறுப்பை, சான்றோர் பழிப்பைக் கொள்ளாதே என்றும் இடித்துரைக்கிறார். வேந்தனுக்கும் அதையே எச்சரிக்கிறார்; நேரே சொல்லாமல் பண்புநலம் அழிந்த பெண்களின் தகைமையையே மறைமுகமாக, அடிநிலை யாக நமக்கு உணர்த்துகிறார்; நயத்தக்க நாகரிகமாகச் சுட்டுகிறார்.

‘பெண்வழிச் சேறல்’ என்ற அதிகாரத்தில் ஆடும் (வெற்றியும்), பீடும் (பெருமையும்) இல்லா ஆடவனையே திருவள்ளுவர் சாடுகிறார். இல்லறவியலில் (அறத்துப் பாலில்) ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்ற அதிகாரத்தில் பண்புநலன்கள் பொதிந்த பெண்களையே முதன்மையாக - தலைமையாக வைத்து விதந்து போற்றி அறவுரை, அறிவுரை வழங்குகிறார், திருவள்ளுவர்.

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலான் பெண்” (குறள்-56)

என்ற குறள் ‘பெண்’ணுக்கு (மனைவிக்கு) இலக்கண விளக்கம் அளித்து நம்மை இன்புறுத்துகிறது.

“சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை” (குறள்-57)

மேற்கூறிய ‘தற்காத்து...’ என்ற சீருக்கு இக்குறள் (57) ‘மகளிர், நிறைகாக்கும் காப்பே தலை’ என்ற அடியால் ‘மனநிறை’ விளக்கம் தருவது நயத்தகுவதாகும்.

‘பெண்வழிச் சேறல்’ என்ற அதிகாரத்தில் வரும் குறள் :

“இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்”

என்ற இக்குறள் அவ் அதிகாரத்தில் உள்ள மற்றைக் குறள் களுக்கான கருத்துகளுக்கு ஒரு தானாகித் திரட்சிக் கருத்தைத் தெரிவிக்கும் நயம் சிறப்புடையது. இல்லாள் கண் தாழ்ந்த இயல்பின்மை என்பதற்கு, மனைவியிடத்துத் தாழ்வதற்குக் காரணமாகிய ஆணியல்பு இல்லாமை; அஃதாவது ஆண்களுக்கு ஆளுந் தன்மையாகிய ஆண்மை, இயல்பு என்பதாகும். அவ்வியல்பு இல்லாத அச்சம் ஆணின் நெஞ்சுக்கும் நாணத்தைத் தரும்.

நல்லோராகிய சான்றோரைக் காண்பதற்கும், அவரிடையே உள்ளபோதும் என்றைக்கும் ‘நாணம்’ தந்து கொண்டே இருக்கும் என்ற கருத்துத் திரட்சி கண்டு இன்புறலாம். இக்கருத்தை ‘நாணுடைமை நாணு’ - இழிந்த கருமம் (செயல்) காரணமாக நன்மகன் நாணுதலே (ஆணுக்கு) நாணமாகும். பெண்ணின் நாணம் என்பது அவளின் இயல்புப் பண்பு என்று அரண் செய்கிறார்.

காமத்துப் பாலில், ‘நாணுத் துறவுரைத்தல்’ என்னும் அதிகாரத்தில் தலைமகன் கூறுவதை அறிக. நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடு கின்றது என்கிறான் தலைவன். இங்கும் அல்லன செய்ய அஞ்சும் நாணத்தையே தலைவனின் (ஆணின்) பண்பாகச் சுட்டப்படுகிறது.

“கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்”

என்னும் அவ்வதிகாரத்து உள்ள குறள் (7) பெண்ணின் பெருந்தகைமைப் பண்பை விதந்து பேசுகிறது.

‘குறிப்பறிவுறுத்தல்’ என்னும் அதிகாரத்தில்,

“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு”

என்னும் குறள் “முகைமொக்குள்ளே (அரும்பு) அடங்கி இருக்கும் மணம் போல் காதலியின் - தலைவியின் நகை அரும்பில் (புன்னகையில்) அடங்கியிருக்கும் (காமக்) குறிப்பு ஒன்றுள்ளது” என்னும் பெண்மையின் ஒண்மை யான நுண்மைப் பொதிப்பு நெஞ்சில் பதித்து எண்ணி எண்ணி இன்புறத்தக்கது.

பிற அறநூலில் (நாலடியாரில்) உள்ள, ‘அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையான்’ (பொதுமகள்), ஆமா போல் நக்கி (காட்டுப் பசுவினைப் போல் நக்கி), தீப்பறக்கத் தாக்கி முலைபொருத் தண்சாந்து அணியகலம் (தீப்பொறி எழுமாறு பொது மகளிரின் கொங்கைகள் மோதப் பெற்றுச் சந்தனம் கலைந்த தலைவனின் மார்பு - தலைவியின் கூற்று) போன்றவற்றைக் காண்க.

பெண் உறுப்புகளின் (அல்குல், கொங்கைகள்) செயல்கள் (நக்குதல், பரத்தையரின் கொங்கைகள், தீப்பொறி பறக்கத் தலைவன் மார்பை தழுவுதல்) முதலான அசைப் பயன்பாடு திருக்குறளில் முப்பாலில் எங்கேனும் காட்ட முடியுமா? அதுதான் வள்ளுவத்தின் வானளாவிய நாகரிகப் பண்பாடு.

‘பிறனில் விழையாமை’யில் பிறனில் விழைபவனின் கேடும் இழிவும் பழியும் பாவமும் குற்றமும் கொற்றவனின் தண்டனையும் வலியுறுத்தப்படுகின்றன.

‘வரைவின் மகளிர்’ என்னும் அதிகாரத்தில் ஆண் களுக்கே பரத்தமையால் விளையும் இழிதகைமையைப் பெரிதும் சுட்டிக்காட்டி, பரத்தமையையே இக்குமுகத்தில் ஒழிக்க உரத்துக் குரல் கொடுக்கிறார் திருவள்ளுவர்.

“பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பார்
நண்ணேன் பரத்தநின் மார்பு”

என ஒவ்வொரு பெண்ணும் (மனைவியும்) உறுதி பூண்டு விட்டாள் ஆணுலகம் அல்வழிவிட்டு ‘இல்’ வழியாம் நல்வழி வரும். வள்ளுவமும் வெல்லும்.

இதுவரையில் கூறியவற்றால் முப்பாலில் எப்பாலிலும் பெண்களை இழித்துப் பேசும் புன்மை ஆலம் விதை யளவும் இல்லை என்பது தெளிவாகப் புலனாகும்.

இனி மனுநூல் பெண்களை எவ்வாறெல்லாம் இழிவுபடுத்துகிறது என்பதை அறிவோம்.

மனுதர்ம சாத்திரம் : அத்தியாயம் 5 :

எந்தப் பருவத்தினளாயினும், தனது இல்லத்திலே கூட எந்த பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்ற லாகாது (கூற்று 147).

• இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள், இவர்கள் காவலின்றிப் பெண்கள் தம் இச்சையாக இயங்கலாகாது (கூற்று 148).

• இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றை உடையவாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக (கூற்று 154).

அத்தியாயம் 9 :

• நிறைபிறழ்தலும், நிலையில்லா மனமும், நண்பின்மை யும் மாதர்தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதும் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை (கூற்று 15).

• படுக்கை, ஆதனம், அழகுசெய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார் (கூற்று 17).

• மாதர்க்குப் பிறவியைத் தூய்து ஆக்கும் சம்காரங்கள், மந்திர பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர் களுக்கு வெள்ளை உள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது.

எனவே, பொய்யைப் போல் மாசு வடுவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (கூற்று 18).

• தன் தாய் மனத்தால் கற்பிழைந்தாள் என்றறிந்து ஒருவன் அதற்குக் கழுவாய் இயற்றுங்கால், “என் அன்னை நிறையிழந்து அயலான் இல்லம் சென்று, அவனைக்கண்டு மனத்தால் இச்சை உற்றிருந்தால், அவ் இச்சையால் அவளது உடலில் இளகிய பெண்மை நலத்தை என் தந்தை தனது வீரியத்தால் வென்று தூய்தாக்கக் கடவன்” என்று பிரார்த்திக்கிறான். இதி லிருந்தே மாதர் மன இயல்பு விளங்குகின்றது (கூற்று 20).

• இந்தக் கழுவாய் மனத்தால் விளைந்த மாசு நீங்கும் பொருட்டே.

அதுவும் அத்தகைய தாய் வயிற்றில் பிறந் தமைக்காக மைந்தன் தனது பிறப்பின் தூய்மையை நாடியே அன்றி, அவளுக்கு அன்று (கூற்று 21).

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”

“ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”

என்ற குறட்பாக்களின் முன்பு, மேற்கூறிய மனுவின் கருத்துகள் எவ்வளவு தலைகுனிய வேண்டும் என்பதை அறிக.

• பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் கூறப்படுவனவற்றையும் கேட்பீராக. (மனு.அத்.9, கூற்று 19).

• நிபீஜம் (ஆண்குறி), யோநி (பெண்குறி), இவ் இரண் டையும் நோக்குமிடத்து, பீஜம் உயர்வு. ஏனெனில் தோன்றும் உயிர் அனைத்தும். அதன் தன்மையைச் சார்ந்திருக்கிறது (கூற்று 35).

• நிசான்றாக, விதைக்கும் விதை அதே பயிரை அந்த நிலத்தில் விளைவிக்கிறது அல்லவா? (கூற்று 36)

மனு பெண்ணின் பெருமையைச் சிறப்பைப் பேசுகிறார் என்பதில் யாருக்கும் மறுப்பில்லை. ஆனால், அதை யெல்லாம் அடியோடு அடித்துப்போடும் அளவுக்குப் பெண்ணின் பிறப்பை, தாய்மையை, பெண்ணுறுப்பை, பண்பிழப்பை, உரிமையை, கற்பினை வெளிப்படையாக இழிக்கும் பெருவெள்ள அருவருப்பைப் பாய்ச்சுகிறார் என்பதே ஏற்கப்பட வேண்டிய உண்மையாகும்.

திருக்குறள் பெண்ணின் பண்பாட்டுச் சீர்மையை ஒளிர்விக்கும் நேர்மறை (வேதம்) ஆகும். மனுநூல் அதற்கு அப்பாற்பட்டு நிற்கும் எதிர்மறையாகும் என்பதைத் தமிழ்ப் பகைவர் அறிந்து தம் பிழைபடு எண்ணங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

- பேராசிரியர் இரா. சோதிவாணன்

Pin It