தமிழ்நாட்டின் கல்வித்துறையில் நீண்ட காலமாகப் பணியாற்றிவரும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, ஏராளமான அறிஞர்களையும், கல்வியாளர்களையும் உருவாக்கிய நிறுவனம் ஆகும்.. அங்கு டிசம்பர் 6, டிசம்பர் 7 ஆகிய இரு நாட்கள் “தமிழ்இலக்கியங்களில் பெண்கொடுமைகள்” என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வந்தது. அந்தக் கருத்தரங்கில் பல நாடுகளைச் சேர்ந்த, தமிழ் அறிஞர்களும், சமூக அறிஞர்களும் பங்கேற்றுக் கருத்துக்களை வழங்க இருந்தனர். அந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருந்த தலைப்புகள் சிலவற்றைப் பாருங்கள்.women 400

 1. தொல்காப்பியம் வரையறுக்கும் பெண் மீதான கட்டுப்பாடுகள்
 2. சங்க அக இலக்கியங்கள் சித்திரிக்கும் குடும்ப வன் முறைகள்
 3. சங்க இலக்கியம் சித்திரிக்கும் பரத்தையர் ஒழுக்கம்
 4. சங்ககாலச் சமூகத்தில் கொண்டி மகளிர்
 5. புறத்திணைகள் காட்டும் பெண் வன்கொடுமைகள்
 6. சிலப்பதிகாரம் காட்டும் உரைசால் பத்தினி - மறுவாசிப்பு
 7. மணிமேகலை காட்டும் கணிகையர் சமூகம்
 8. சீவக சிந்தாமணி எடுத்துரைக்கும் பலதார மணமுறை
 9. 9.கம்பராமாயணத்தில் வெளிப்படும் ஆணாதிக்க சிந்தனைகள்
 10. 10.கம்பராமாயணத்தில் சூர்ப்பனகை சந்தித்த வன்கொடுமைகள்
 11. வில்லிபாரதத்தில் பாஞ்சாலி சந்தித்த ஆணாதிக்க ஒடுக்குமுறைகள்
 12. தனிப்பாடல்களில் வேசியர் ஏசல்
 13. நீதி நூல்கள் திணிக்கும் பெண்ணடிமை சிந்தனைகள்
 14. பெண் கதை மாந்தர்கள் வழி பழங்கதைகள் கட்டமைக்கும் பெண்ணடிமைத்தனம்
 15. சமயங்கள் மறுக்கும் பெண்ணின் அடையாளங்கள் பெண்ணின்
 16. உலா இலக்கியங்கள் கட்டமைக்கும் காமம்
 17. நாட்டுப்புறப் பாடல்களில் காணலாகும் பெண்ணடிமை சிந்தனைகள்
 18. குறவஞ்சி இலக்கியங்கள் வெளிப்படுத்தும்
 19. பெண்களை பழித்துரைக்கும் பட்டினத்தார் பாடல்கள்
 20. மாதவையாவின் முத்து மீனாட்சி புதினம் சித்தரிக்கும் பெண் வன்கொடுமைகள்
 21. புதுமைப்பித்தனின் "பொன்னகரம்" கேள்விக்குள்ளாகும் கற்புக் கோட்பாடு
 22. தி.ஜானகிராமனின் "மரப் பசு" புதினத்தில் பெண் சுதந்திரம்
 23. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் கண்டிக்கும் பாலியல் வன்முறை
 24. வைரமுத்துவின் கவிதைகளில் முதிர்கன்னிகள் குறித்த பதிவுகள்
 25. சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் சித்திரிக்கும் பெண் தொழிலாளிகள் மீதான வர்க்க ஒடுக்குதல்கள்.

உலகமெங்கிலும் வலுப்பெற்ற #MeToo இயக்கம், இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தனிநபர் சிக்கல்களாக மாற்றப்பட்டு வலுவிழந்தது. அப்படி #MeToo வை வலுவிழக்கச் செய்த இந்துமதச் சிந்தனைகளால் வழிநடத்தப்படும் ஆணாதிக்கக் கும்பல், திருச்சி கருத்தரங்கத்தின் தலைப்புகளைக் கண்டு அலறியது.

“அன்னைத் தமிழை காக்க வேண்டுமென்று அனுதினமும் பாடுபடக்கூடிய அறிவுலக பெரு மக்களே, தமிழ் ஆர்வலர்களே, இலக்கிய பெரு மக்களே, இந்து உணர்வாளர்களே, அனைவரும் இணைந்து கிறித்தவ நிறுவனம் நடத்தும் கருத்தரங்கை நிறுத்துவோம்” என்று பா.ஜ.க வின் சமூகவலைத் தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டது. நமது திருப்பூர் தோழர் குமார் அந்தப் பதிவுகளை அனுப்பி வைத்தார். அவை வந்த அடுத்த நாளே, பா.ஜ.க.வின் எச்.ராஜா போன்றோர் கருத்தரங்கைத் தடைசெய்யக் கோரிக்கை விடுத்தனர். மதவெறியர் களால் கருத்தரங்கம் நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழ்இலக்கியங்களைக் கைவைத்த உடனே தமிழ்த்தேசியர்கள் போராடத் தொடங்குவதற்கு முன்பு, இந்து வெறியர்கள் தமிழுக்காகப் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். தமிழ், தமிழ் இலக்கியம், தமிழ்ப்பண்பாடு, என்று அவற்றைப் பரப்புவதும், பரப்பத் துணைபோவதும் பார்ப்பனர் களுக்கும், இந்து மதத்திற்கும்தான் வலுசேர்க்கும். அதைத்தான் இந்தக் கருத்தரங்க எதிர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

அதனால்தான் தோழர் பெரியாரும், உண்மையான பெரியார் தொண்டர்களும் தமிழ் இலக்கியங்களையும், தமிழ்ப் பண்பாடு என்பவைகளையும் கடுமையாக எதிர்த்துப் பரப்புரை செய்து வந்தனர். பெரியாருக்குப் பின் ‘உண்மை’ (14.02.1970, 14.03.1970) ஏட்டில் புலவர் இமயவரம்பன் அவர்கள் எழுதிய, “சங்க இலக்கியங்களில் வர்ணாசிரமம்” என்ற தொடர் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்தக் கட்டுரை காட்டாறு இதழில் 2017 ஜூன், ஜூலை மாத இதழ்களிலும் வெளியானது.

அந்தத் தொடரில், தொல்காப்பியம் தொடங்கி, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நெடுநல்வாடை, பரிபாடல் போன்ற அனைத்து சங்ககால இலக்கியங்களின் இந்து, வேத மத ஆதரவு மற்றும் பார்ப்பன ஆதிக்க ஆதரவுப்போக்கு சிறப்பாக விளக்கப்பட்டிருக்கும்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த பேராசிரியர், முனைவர் இரா.மணியன் அவர்கள் 2009 இல் “பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்” என்ற ஒரு நூலை வெளியிட்டார். அதில் சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாமல், அதற்குப் பிந்தைய சிலப்பதி காரத்தைப் பற்றியும் பெரியார் கொண்டிருந்த எதிர்ப்புக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அந்த நூலில், சிலப்பதிகாரம் நிறுவ விரும்பும் பெண்ணடிமைத்தனம் சான்றுகளுடனும், பெரியார் கருத்துக்களுடனும் விளக்கப்பட்டுள்ளது.

திராவிடர் இயக்கத்தின் புராண, இதிகாச, இலக்கிய எதிர்ப்புப் பண்பாட்டின் தொடர்ச்சியாக, ஒருபெரிய கல்விநிறுவனமே உண்மையான சமூக அக்கறையோடு ஏற்பாடு செய்த “தமிழ் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள்” என்ற கருத்தரங்கம் இந்துமத வெறியர்களால் நிறுத்தப் பட்டது என்பது, நமக்குப் பெரும் பின்னடைவாகும்.

இந்த நிலையில், தமிழ் இலக்கியங்கள், இந்துப் புராணங்கள், இதிகாசங்கள் பற்றிய பெரியாரின் கருத்துக்களை வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் பரப்புவதே இந்துவெறியர்களுக்கான எதிர் வினையாக இருக்கும் என்ற அடிப்படையில் பெரியாரின் சில கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு.

இலக்கியங்கள் பற்றிப் பெரியார்

இந்தியா, கம்பன்: இரண்டு சனியனும் வேண்டாம்

மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?

இந்தியா வேண்டுமா? கம்ப ராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத்தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான். மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் கடவுள் சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப் படுகிறார்கள்.

...கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன். ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்பராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

-தோழர் பெரியார், குடி அரசு - 26.01.1936

குறளின் புதுமை ஏது?

அறிவுத்துறைப் பெரியவர்கள் வள்ளுவரை பலர் காட்டலாம். அதற்கு இரண்டாயிரம் ஆண்டு ஆயுள் சொல்லுகிறார்கள். என் கருத்துப்படி அதற்கு 1500 ஆண்டுகளுக்கு மேல் சொல்லுவதற்கு இட மில்லை; என்றாலும், அதிலும் எவ்விதப் புதுமையையும் காணமுடியவில்லை என்பதோடு, தற்கால நிலைமைக்கு அல்லாமல், எதிர்காலத்து வளர்ச்சிக்கு வழி காட்டும் துறை எதுவும் காண முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

காட்டுக் கற்பனைகள்

நமது புலவர்களும், பக்தர்களும் அந்த ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகளை அடிப்படை யாய்க் கொண்டே “நமது இலக்கியங்” களை உண்டாக்கி இருக்கிறார்கள். ஆதலால், அந்த இலக்கியங்களைக் கொண்ட நமது பழங்கால நிலை என்பதைக் காட்டுமிராண்டித்தனம் என்கிறேன்.

நமது புலவர்கள் எவ்வளவு பெரிய காட்டு மிராண்டிகள் என்பதற்கு கம்பனையும், இளங்கோவையும் எடுத்துக் கொண்டாலே போதும்; இவர்களதும் மற்றும், பழங்காலம் புலவர்களதும் இலக்கியங்களையும் (நூல்களை) எடுத்துக் கொண்டு, அதன் இலக்கண - கற்பனை அமைப்பு முறை ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதிலுள்ள கற்பனைக் கதை வடிவங்களை எடுத்துக் கொண்டு பார்ப்போமானால்- அவற்றின் காட்டுமிராண்டித் தனம் எவ்வளவு குறைந்த அறிவுள்ளவர்களுக்கும் நல்லவண்ணம் விளங்கும்.

இந்நிலையில் நம்மை நாம் பழங்காலப் பெருமை பேசும் காட்டுமிராண்டிகள் என்பதைத் தவிர வேறு சொல்ல என்ன இருக்கிறது. தமிழர் களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுரைப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள், மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

 - தோழர் பெரியார், உயர் எண்ணங்கள் நூல்

எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை

நம் அறிஞர்களும், புலவர்களும் நமக்கு மனித தர்மத்திற்குக் குறளைத்தான் எடுத்துக்காட்டு வார்கள். அந்த வள்ளுவன் கூட இருக்கிற மற்றவனை விடக் கொஞ்சம் பரவாயில்லை என்பதுதானே யொழிய, அவன்தான் எல்லாவற்றிற்கும் என்பது பொருந்தாதது. நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும்போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். பாரதிதாசனைப் போல சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்ல நம் புலவர்கள் முன்வர வேண்டும். புலவர்களை வணக்கத்தோடு கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்களுக்கு எந்தப் புலவனும் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அத்தனை நீதி சொன்னவனும், ஒழுக்கம் பற்றிச் சொன்னவனும் பெண்களுக்குத்தான் சொல்லி இருக்கிறான். இன்றைக்கு நாம் நினைப்பதை அவன் எப்படி நினைக்க முடியும். இன்றைய உலகம் வேறு; நேற்றிருந்த உலகம் வேறு.

...வள்ளுவன் அப்படிச் சொன்னான்; தொல்காப்பியன் இப்படிச் சொன்னான் என்றால், அதெல்லாம் அவன் வாழ்ந்த காலத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர, இப்போதைக்கு அவை பயன்படக் கூடியதல்ல. இந்த வாழ்க்கைக்கு எவனும் வேலி போட முடியாது. நாளைக்கு எப்படி அமையும் என்று சொல்ல முடியாது. நாளுக்கு நாள், நேரத்திற்கு நேரம் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப மனிதன் மாறிக் கொள்ளத்தான் வேண்டும்.

நம் புலவர்களுக்குத் தைரியம் இல்லை. இலக்கணம் - இலக்கியத்தின் மேலேயே அவர்கள் கண் இருப்பதால் அவர்கள் எண்ணம் பழைமை யிலேயே போகிறது. பகுத்தறிவே அவர்களுக்கு ஏற்படுவது கிடையாது. பகுத்தறிவு ஏற்படும்படியான இலக்கியங்கள் - நூல்கள் எதுவும் தமிழில் கிடையாது. இருப்பதெல்லாம் மனிதனின் அறியாமை - முட்டாள்தனம் - மூடநம்பிக்கை இவற்றை வளர்ப்பவைதான். பார்ப்பான் வருகிற வரை நமக்குச் சரித்திரமே கிடையாது. இருந்ததை யெல்லாம் பார்ப்பான் கொளுத்தி விட்டான். ஒன்றிரண்டு மிஞ்சியதையும் மாற்றி விட்டான்.

...தமிழனின் பழைய இலக்கியம், சிறந்த இலக்கியம் என்று தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் கூறும் தொல்காப்பியம் தமிழன் நூலல்ல. வருணாசிரமத் தர்மத்தை பாதுகாக்க ஏற்பாடு செய்து, நமக்குச் சுவையான சிலவற்றையும் சேர்த்து நமக்குள் மடமையையும் - முட்டாள்தனத்தையும் - அறிவற்ற தன்மையையும் வளர்க்க மேல்ஜாதிக் காரனால் புகுத்தப்பட்டதேயாகும்.

அதைத்தான் தமிழ்ப்புலவர்கள் மிக உயர்ந்ததாகப் போற்றுகின்றனர், புகழ்கின்றனர். அதில் இந்த அய்யர் வகுத்த கரணங்கள் மூவோர் மேலோர்க்கும்தான். அது நாளடைவில் கீழோர்க் காயிற்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு இந்நிகழ்ச்சிக்கு முறையே இல்லை என்பதோடு, இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெற்றது என்பதற்கு ஆதாரமில்லை. தமிழனுக்கு நிகழ்ச்சியானது இருந்திருக்குமானால், தமிழில் அதற்காக ஒரு சொல் இருக்கும். தமிழ் மொழியில் இந்நிகழ்ச்சியினைக் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய சொல்லே இல்லை என்பதிலிருந்து, இது தமிழனுக் கில்லாத மற்றவனால் புகுத்தப்பட்டது என்பதை உணரலாம். யாராவது புலவர்கள் தமிழர்களுக்கு இந்நிகழ்ச்சி இருந்தது, அதற்கு இதுதான் முறை யென்பதை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். - தோழர் பெரியார், விடுதலை, 06.08.1968

Pin It