தலைக்கு ஒரு கோடி ரூபா முதலீடு செய்திட தமிழ்நாட்டில் ஓரிலக்கம் பேர் இல்லையா?

இன்றைய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் மீண்டும் 2011இல் ஆட்சிக்கு வந்தது. அதன் 5 ஆண்டுக்கால ஆட்சி இன்னும் 6 மாதங்களில் முடியப் போகிறது. மீண்டும் 2016 தேர்த லில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க அக்கட்சி விரும்புகிறது.

வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் - வெற்றி பெறமுடியும் என்று அக்கட்சி நம்புகிறது.

அதைச் சாதிக்க எண்ணி, நம் மாண்புமிகு முதலமைச்சர், கண்டபடி எதிர்காலத் திட்டங்களுக்கான அறிவிப்புகளை மனம்போனபோக்கில் அறிவிக்கிறார்.

அந்த அறிவிப்புகளில் எதுவுமே கடந்த 4 ஆண்டு களில் நிறைவேற்றப்படவில்லை.

எடுத்த எடுப்பில், “2023 தொலைநோக்குத் திட்டங்களை” அறிவித்தார். அதன்படி, “15 இலக்கம் கோடி ரூபா முதலீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்” என்றும், “20 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங் கள் அமைக்கப்படும்” என்றும் அறிவித்தார்.

2012 அக்டோபரில், “கதிரொளி மின் உற்பத்தியில் அரசு நாட்டம் செலுத்தும்” என அறிவித்தார்.

இவற்றுள் எதுவுமே இன்றுவரை நிறைவேற்றப்பட வில்லை.

இதுபற்றி அமைச்சர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, அரசு உயர் நிர்வாக அதிகாரிகளுக்கோ கடுகளவு வெட்கமும் இல்லை. ஏன்?

தமிழகத்தில் படித்தவர், படிக்காதவர், பட்டணத்தார், பட்டிக்காட்டார் எவரும் சமூக அக்கறையோடு சிந்திக்கிற பழக்கத்துக்கு ஆளாகவில்லை.

தலைவர்களைக் கடவுள்களாக வழிபடும் - செம் மறிக் கூட்டங்களைப் போலச் செயல்படும் போக்கின ராகப் பெரும்பாலோர் ஆகிவிட்டனர்.

வேளாண் பெருமக்களும் ஏழைகளும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி வாரித்தரும் இலவசங்களைப் பெரிதாக மதித்து, மான உணர்ச்சி இல்லாத மக்களாக ஆகிவிட்டனர்.

போதாக்குறைக்கு இருக்கிற வருவாய் ஊர்களில் - பாதி எண்ணிக்கையான 8,000 ஊர்களில் அரசு சாராயக் கடைகளான ‘டா°மாக்’கைத் திறந்துவிட்டனர்.

1981க்குப் பிறகு கடந்த 34 ஆண்டுகளாக 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மிடாக்குடியர்களாக ஆகிவிட்டார்கள். எந்த வேளாண் வேலையையும் செய்ய முடியாத - தன்னிலை இழந்த தறுதலைகளாக இவர்கள் மாறிவிட்டனர்.

வாய்ப்பும் வசதியும் உள்ள படித்தவர்களும் படிக்காதவர்களும் வட்டிக்கடைகளையும், நிதி நிறுவனங் களையும், ஆங்கில வழிப் பள்ளிகளையும், வேளாண் நிலங்களை அடிமாட்டு விலைகளுக்கு வாங்கி வீட்டு மனைகளாக விற்றும் கொள்ளைப் பணம் சேர்ப்பதில் நாட்டம் செலுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட தொழில்களில் போதிய அளவு முதலீடு செய்ய முடியாத படித்தவர்கள், 5 இலக்கம் முதல் 30 இலக்கம் ரூபா வரை கைக்கூலி தரவேண்டி - இருக் கிற நிலபுலன்களையும் வீட்டு மனைகளையும் நகை நட்டுகளையும் விற்றுவிட்டு - வெள்ளைச் சட்டை வேலைக்குப் போக ஆளுங்கட்சி இந்நாள் முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், உயர் அதிகாரிகளையும், இவர்களுக்கு உரிய தரகர் களையும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இவர்களுள் பலர் தோல்வி அடைகிறார்கள்; சிலர் வெற்றி பெறு கிறார்கள்.

தமிழ்நாட்டில் தான் வெள்ளைச் சட்டை வேலை யை நாடும் இளைஞர்கள் கூட்டம் அதிகம். இப்படிப்பட்ட மனப்பான்மை உள்ள இளம் வயதினர் - ஆண்களும் பெண்களும் 85 இலக்கம் பேர் தமிழக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் நன்கு அறிந்த தமிழக முதலமைச்சர் அவர்கள் வெறும் ஓர் இலக்கம் கோடி ரூபா முதலீட்டுக்காக - உலக நாடுகளிலிருந்தும், இந்திய வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களை வரவழைத்து, அவர்கள் மனங் குளிர்கிற அளவுக்கு விருந்தும், கேளிக்கை நிகழ்ச்சி களும் நடத்தி, தமிழகத்தில் சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் சென்று - “எல்லாம் தர” அதிகாரிகள் என்கிற அடிமைகளை உடன் அனுப்பி - ஒரே ஒரு வாக்குறுதியை மனமார வழங்கிக் குளிப்பாட்டியிருக் கிறார். அது என்ன?

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல்’ - குறு, சிறு, நடுத்தர வேளாண் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தித்தர, முதலீட் டாளர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

“முதலீட்டாளர்களுக்கு எனத் தமிழகத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலம் தயாராக இருக்கிறது” என்று 9, 10-9-2015 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மகிழ்ச்சி பொங்க அறிவித்திருக்கிறார், முதலமைச்சர்.

இந்த 42 ஆயிரம் ஏக்கர், 10 பெரிய பெரிய முதலீட்டாளர்களுக்கு மட்டுமே போதும்.

மீதப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தமிழகத்தில் கையகப்படுத் தப்பட வேண்டும்.

உலகத்தையே அழித்துவரும் ‘ஷைலக்குகள்’ உலக-இந்தியப் பெருமுதலாளிகள். அந்தக் கொள்ளை யர்கள் தொழிலைத் தொடங்கிட 30 நாள்களில் தமிழக அரசு அதிகாரிகள் அனுமதி அளித்துவிடுவார்கள். அதற்குக் கைக்கூலியும் கிடைக்கும்.

ஆனால் அவர்களுக்குத் தடையில்லா மின்சாரம் 24 மணிநேரமும் தரத் தமிழகத்துக்கு வக்கு இருக் கிறதா? 24 மணிநேரமும் நல்ல தண்ணீர் தரத் தமிழகத்துக்கு வக்கு இருக்கிறதா?

உறுதியாக இல்லை! அப்புறம் எப்படி, ஓரிலக்கம் கோடி ரூபா தொழில் முதலீடு வந்து கொட்டும்? ஒரு போதும் வராது.

தமிழகத்தைத் தொழில் வளம் மிக்க நாடாக ஆக்கிட முதலாவது தேவை மின்சாரம். அடுத்தது தண்ணீர்.

2012 அக்டோபர் 12இல் கதிரொளி மின்சாரம் (Solar Power) பற்றி ஆரவாரமாக அறிவித்த நம் மாண்புமிகு முதலமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில் இதில் சாதித்தது என்ன?

ஆளும் அதிகார வர்க்கத்தினரில் பெரும்பாலோர் ஆளும் கட்சியினர்க்குத் தரகர்களாகவே இருக்கின்றனர் என்பது தமிழகத்திலும், மற்ற பல மாநிலங்களிலும், இந்திய மத்திய அரசிலும் இருக்கிற உண்மை நிலை.

1917இல் இரஷ்யாவில் சோவியத்துகளை அமைத்த லெனின் சொன்னார் : மின்சாரம் + கூட்டுறவு = சமதர்மம் (Electricity plus Co-operatives is equal to Socialism) என்று.

இந்த இரண்டு துறைகளையும் வளர்த்தெடுக்கத் தவறியவர்கள் - 68 ஆண்டுக்கால இந்திய ஆட்சித் திருடர்கள்.

தமிழகத்தில் இந்த இரண்டு துறைகளையும் பாழ் படுத்தியவர்கள் - இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி களும், அவ்வக்கால அதிகார வர்க்கத்தினரும், இவர் களை வணங்கத் தக்கவர்களாக நினைக்கிற தமிழக மக்களும்தாம்.

தலைக்கு ஒரு கோடி, இரண்டு கோடி என முதலீடு செய்திடவல்ல தொழிலதிபர்கள் - பெருநில உடைமையாளர்கள் - சாலை, ஏரி, கட்டட ஒப்பந்தக் காரர்கள்-அடகுக் கடைக்காரர்கள் - அரசியல்வாதிகள் - மணல் கொள்ளையர்கள்-சாராய மன்னர்கள் 500க்கு மேற்பட்ட கல்வி வணிகர்கள் ஓரிலக்கம் பேர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.

இவர்கள் கூடித் தொழில் செய்யத் தமிழக அரசினர் ஏற்பாடு செய்யட்டும்.

தமிழர்கள் பல இலக்கம் பேருக்கு அப்போதுதான் வேலை கிடைக்கும். தமிழ்நாட்டு நிலம் அப்போது தான் தமிழர்களிடமே இருக்கும்!

தமிழக அரசினர் இவற்றைச் செய்வார்களா? தமிழ்ப் பெருமக்கள் இப்படிப்பட்ட கோரிக்கைகளை எதிர்வரும் 2016 தமிழகத் தேர்தலில், தேர்தல் கட்சிகளிடம் முன்வைப்பார்களா?

Pin It