jayalalitha dead body

2016 டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11:30 மணிக்கு நமது தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, அங்கிருந்து தங்கப்பேழையில் மெரினா கடற் கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தங்கப்பேழையில் இருந்து சந்தனப்பேழைக்கு மாற்றப்பட்டு, அவரது தோழி சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரால் பார்ப்பன முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. நிச்சயமாக இந்தச் செய்தி தெரியாத எந்தத் தமிழனும் இன்று தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன். காரணம் 5 ஆம் தேதி ஆரம்பித்து 6 ஆம் தேதிவரை தமிழ் செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் மரண செய்தியை மட்டுமே ஒட்டு மொத்தமாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது என அப்போலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிமிடம் முதல் ஊடகங்கள் அனைத்தும் அப்போலா மருத்துமனையைச் சுற்றியே முகாமிட்டிருந்தன. ஊடக வன்முறை என்று இதைச் சொல்லலாம். எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ள முடியுமோ, அவை அவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டன. ஜெயலலிதா பிழைக்க வேண்டும் என்பதைக் காட்டிலும் அவரது மரணச் செய்தியை யார் முதலில் தருவது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.

இந்த கடுமையான போட்டியில் தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே முந்திக்கொண்டார். மருத்துவமனை ஜெயலலிதா இறந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே தந்தி டிவி பாண்டே ஜெயலலிதா இறந்துவிட்டதாக அறிவித்தார். உடனே புதிய தலைமுறை மற்றும் சன் நியூஸ் போன்றவை ஜெயாவின் புகைப்படத்தைக் கட்டம் கட்டி மாலைபோட்டு, மரண அறிவிப்பை பின்னணி இசையுடன் அமர்களமாக வெளியிட்டன. தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் பாதிவழிகளில் நிறுத்தப்பட்டன. வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்றவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளானார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அப்போலா அது வதந்தி என அறிவித்ததும், சூடு சுரணையற்ற ஊடகங்கள் தங்களது செய்திகளை திருப்ப பெற்றுக்கொண்டன. எனினும் தங்களது கேமராக்களை அப்போலாவில் இருந்து வரும் அதிகாரப்பூர்வ மரண அறிவிப்பை எதிர்நோக்கியே அவை வைத்திருந்தன. கையில் கிடைத்த ஒவ்வொரு அதிமுக தொண்டனையும் அழவைத்து பேட்டி எடுத்து அவை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தன. ஒரு திரைப்படத்தின் உச்ச காட்சியில் பார்வையாளனை இருக்கை நுனியில் உட்கார வைக்க முயற்சிக்கும் ஒரு தேர்ந்த இயக்குநரைப் போல அவை தமிழ் மக்களை ஜெயலலிதாவின் மரண அறிவிப்பை எதிர்நோக்கி உட்கார வைத்தன. ஒரு கட்டத்தில் மக்களே ‘சீக்கிரம் ஏதாவது சொல்லுங்கப்பா தூக்கம் வருகின்றது’ என்று சொல்லும் நிலைக்கு அவை தள்ளின. பெரும்பாலான மக்கள் தூங்கச் சென்ற பிறகு இரவு 11:30 மணிக்கு ‘திட்டமிட்டபடி’ ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டதாக அப்போலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அனைத்து செய்தி சேனல்களும் தொடர் நேரலையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான செய்திகளைத் தவிர, மற்ற அனைத்து செய்திகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அதை மட்டுமே ஒளிபரப்பிக்கொண்டு தங்களது ஊடக அறப்பணியைச் செய்துகொண்டு இருந்தன. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக என்று சொல்லி வைக்கப்பட்டாலும் விஐபிக்களுக்கு மட்டுமே ஜெயலலிதாவின் உடலுக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்தாரோ, அதைப் போலவே அவர் இறந்த பின்னரும் அவரது உடல் சாமானிய உழைக்கும் மக்களின் வியர்வை வாடையில் இருந்து காப்பாற்றப்பட்டு வைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பலரும் அவரைப் பற்றி அவரது தகுதிக்கு மீறியே புகழ்பாடினார்கள். அதில் குறிப்பாக நம்மை எல்லாம் நெளியவைத்தது வைகோ அவர்களின் புகழ் அஞ்சலிதான். ஜெயலலிதாவை வேலு நாச்சியாரோடு அவர் ஒப்பிட்டுப் பேசியது உலக வரலாற்றில் இழவுவீட்டிலே நின்று கொண்டு அடித்த மிகப்பெரிய காமெடியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வைகோ ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்த போது எனக்கு மனதுக்குள் என்ன தோன்றியது என்றால், அதிமுகவை பிஜேபியிடம் இருந்து காப்பாற்றுவதைவிட இனி வைகோவிடம் இருந்து காப்பாற்றுவது மிகக் கடினம் என்று தோன்றியது.

வைகோ மட்டும் அல்ல, மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவை நன்றாக மனம்விட்டு பாராட்டித் தீர்த்தார்கள். அண்ணன் திருமா அவர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தன்னுடைய ஆழ்மனதில் இருந்த ஜெயலலிதா பற்றிய தன்னுடைய நினைவுகளை எல்லாம் தோண்டித் தோண்டி எடுத்து, புளகாங்கிதம் அடைந்து கொண்டு இருந்தார். நமக்குத்தான் தர்மபுரி கலவரமும், பரமக்குடி துப்பாக்கிச் சூடும், இளவரசனின் மரணமும் ஏனோ ஜெயலலிதாவின் உடலைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றிக் கொண்டே இருந்தது. ராமகிருஷ்ணன், முத்தரசன், அப்புறம் நம்ம தா.பா போன்றோர் ஜெயலலிதாவிற்குப் புகழ்பாடி தங்களுடைய செஞ்சோற்றுக்கடனை தீர்த்துக் கொண்டனர். ஏறக்குறைய தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருமே ஜெயலலிதா மிகுந்த ஆளுமைத்திறன் கொண்டவர், போராளி, இரும்பு மனுசி, வீரமங்கை, சாதனையாளர், மனித நேயமிக்கவர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசினர். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அவர் மீது அவர்கள் வைத்த பல்வேறு விமர்சனங்கள் அவர் மரணித்த பின்னால் அந்த விமர்சனங்களும் கூட மரணித்துப் போனது. ஒருவர் மரணித்துவிட்டால் அவரைப் பற்றி நேர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் கற்றுக்கொண்ட நேர்மையான அரசியல் போல் இருக்கின்றது.

admk cadres jayalalitha dead

மதமாற்று தடைச்சட்டம், கிடாவெட்டு தடைச் சட்டம், சாலைப் பணியாளர்களையும், மக்கள் நலப் பணியாளர்களையும் ஒட்டுமொத்தமாக வேலையை விட்டுத் துரத்தியது, அரசு ஊழியர்கள் மீது ஏவப்பட்ட எஸ்மா சட்டம், பால் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பரமக்குடி துப்பாக்கிச் சூடு, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் இன்னும் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் ஆட்சியில் கட்டற்று நடந்த பல சாதி ஆணவப் படுகொலைகள், கிரானைட் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, அனைத்து அரசுத் துறைகளிலும் தலைவிரித்து ஆடிய ஊழல், அமைச்சர்கள் மீதான பெரும் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள், தமிழக காவல்துறை மூலம் அவர் கட்டவிழ்த்துவிட்ட அரசு பயங்கரவாதம், டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம், ராம்குமாரின் மர்ம மரணம், இன்னும் காவல் நிலையங்களில் நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகள், காவல்துறையால் பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் ரீதியான தாக்குதல்கள் , ஊர்முழுவதும் தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை திறந்துவைத்து தமிழ் இளைஞர்களை குடிக்க வைத்து குடிநோயாளியாக்கி லட்சக்கணக்கான பெண்களை இளம்விதவைகள் ஆக்கியது என சொல்லிக்கொண்டே போகலாம்.

எந்த விதத்தில் பார்த்தாலும் ஜெயலலிதாவை ஒரு குறைந்தபட்ச மனித்தன்மை உடைய நபர் என்று கூட சொல்ல முடியாது. இந்த உலகில் தோன்றிய பல மோசமான பாசிஸ்ட்டுகளின் வரிசையில் வைத்து, பார்க்கப்பட வேண்டிய எல்லா தகுதியும் உடையவர்தான் ஜெயலலிதா. அப்படி இருந்தும் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் ஜெயலலிதாவைப் போற்றி புகழ்கின்றார்கள் என்றால், இவர்கள் ஜெயலலிதாவைவிட மோசமான கீழ்த்தரமான அரசியல்வாதிகள் என்பதுதான் உண்மை. எம்எல்ஏ சீட்டுக்காகவும், எம்பி சீட்டுக்காகவும் இடுப்பிலே கட்டி இருக்கும் வேட்டியைக் கழற்றி, கக்கத்திலே வைத்துக்கொண்டு, கூழைக் கும்பிடு போடத் தயங்காதவர்கள். அதனால்தான் அவர்களால் தன்மானத்தையும், சுயமரியாதையையும் உதிர்த்துவிட்டு, உலுத்துப்போன பேர்வழிகளாய் ஜெயலலிதாவைப் புகழ்பாட முடிகின்றது.

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் நமக்கு பெரும் வருத்தத்தைத் தருவது ஜெயலலிதாவின் மறைவை ஒட்டி, அவரது வயதுக்கு ஏறக்குறைய கொஞ்சம் கூடவோ, குறையவோ இருக்கும் மிகவும் மோசமான வாழ்நிலையில் வாழும் சாமானிய உழைக்கும் பெண்களும், ஆண்களும் கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தியதாகும். ஆண்கள் மொட்டை அடித்துக் கொண்டும், பெண்கள் மாரடித்துக் கொண்டும் கண்ணீர்விட்டு அழுதது நமக்கு பெரும் வருத்தத்தைத் தருகின்றது. ஒரு மோசமான பாசிஸ்ட்டை வெறும் சினிமா கவர்ச்சியில் மயங்கியும், அவர் போட்ட சில எச்சில் சலுகைகளுக்காகவும் இந்த மக்கள் இப்படி போற்றிப் புகழ்கின்றார்களே!. அரசு மருத்துமனைகளில் போதிய மருத்துவர்கள் இன்றியும், மருந்துகள் இன்றியும், உள் நோயாளிகள் படுப்பதற்கு படுக்கை வசதி இன்றியும், கழிப்பிட வசதி இன்றியும் இருக்கும் போது பல கோடிகளை செலவு செய்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை ஜெயலலிதா பெறுகின்றார். ஆனால் அதை இந்த சாமானிய மக்கள் ஒரு பெரிய குற்றமாகப் பார்க்கவில்லையே!. இன்னும் பெரும்பாலான மக்கள் அடிமைத்தனமான மனநிலையில் தான் இருக்கின்றார்கள் என்பதைத்தான் இது காட்டுகின்றது.

ஒரு அரசு என்ற அமைப்பில் இருந்து அவர்கள் அதிகபட்சமாக எதிர்பார்ப்பது சில சில்லரை சலுகைகளைத்தான். பெரியதாக எல்லாம் இந்த மக்கள் எதையும் எதிர்பார்ப்பது கிடையாது என்பதைத்தான் அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றன. அனைவருக்கும் சமமான இலவசக் கல்வி வேண்டும், படித்து முடித்த அனைவருக்கும் வேலை வேண்டும், தரமான இலவச மருத்துவம் வேண்டும், உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும் போன்ற குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட அவர்கள் வைத்திருப்பதில்லை. அதனால் தான் இதுபோன்ற பாசிஸ்ட்களை எல்லாம் கடவுள் என்று வழிபடும் நிலைக்கு அவர்களால் செல்ல முடிகின்றது.

ஜெயலலிதாவிற்காக சாமானிய அரசியல் அறிவற்ற மக்கள் கண்ணீர்விட்டு அழுதுகொண்டு இருக்கும் போது, மன்னார்குடி மாஃபிய கும்பலோ கொள்ளையடித்த பணத்தைக் காப்பதற்காக, ஜெயலலிதாவின் பிணத்தை கடைசிவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் திட்டமிட்டு, தங்களது பணபலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி மூடி மறைத்து இருக்கின்றார்கள். சாமானிய மக்களின் கண்களில் இருந்து அனைத்துமே மறைக்கப்படுகின்றன. அவர்களின் அரசியல் அறியாமை இது போன்ற பாசிஸ்ட்டுகளை எப்போதுமே நிலைநிறுத்திக் கொள்ளவே உதவுகின்றது. இந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெறவைப்பதும், அவர்களை அடிமைத்தனமான சிந்தனையில் இருந்து மீட்டெடுக்கவும் நாம் இன்னும் கடுமையாகப் போராட வேண்டி இருக்கின்றது.

- செ.கார்கி