இந்துத் தேசியம் (Hindu Nationalism) என்பது வெற்றி பெறக்கூடிய ஒரு திட்டமா? இது ஒரு வீணான வினா அல்ல. ஏனெனில் இந்தியாவின் தலைமை அமைச்சரே தன்னை ஒரு இந்துத் தேசியவாதி என்று சொல்லிக் கொள்கிறார். இந்துத்துவம் எனப்படுகின்ற - வன்முறை வடிவிலான இந்துத் தேசியத்தைத் தீவிரமாகப் பரப்புகின்ற ஒரு கலாச்சார அமைப்பின் (ஆர்.எஸ்.எஸ்.) தீவிர உறுப்பி னராக இவர் இன்றும் இருக்கிறார்.
வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இது ஒரு வீணான வினா அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்தியா ஒருபோதும் ஒரு “இந்துத் தேசமாக”த் திகழமுடியாது. தேச-அரசு (Nation-State) என்ற நிலையில், அதனுடைய அரசியல் கோட்பாடு எந்தவொரு மதத்தையும் சாராததாகவே இருக்க வேண்டும்.
இதே வினாவை வேறு வகையிலும் கேட்கலாம் : மதச்சார்பற்ற “இந்திய”த் தேசியம் (‘Indian’ Nationalism) என்பது வெற்றி பெறக்கூடிய திட்டமா? ‘இல்லை’ என்று உரத்துச் சொல்கின்றன ‘கீதா அச்சகம்’ (Gita Press) வெளி யிட்டுள்ள நூல்களும் இதழ்களும். இவற்றின் அடிப்படைத் தத்துவம் இந்துத் தேசியம்; இவற்றின் குறிக்கோள் “இந்து இந்தியா”.
இந்துத்துவம் குறித்த ஆய்வு
அக்சய முகுல் என்பவர் அண்மையில் “கீதா அச்சகமும் இந்து இந்தியாவை உருவாக்கலும்” எனும் நூலை எழுதி யுள்ளார். இந்துத்துவத்தின் தலையாகவும், உறுப்புகளாகவும், நாடி நரம்புகளாகவும், குருதியோட்டமாகவும் எவையெவை, யார் யார் இருக்கிறார்கள் என்கிற வரலாற்றுச் செய்திகளுக்கு இந்நூலில் முதன்மை தந்து அக்சய முகுல் விளக்கியிருக் கிறார். இச்செய்தியை கீதா அச்சகத்திலிருந்து தொடங்கு கிறார். சங் பரிவாரத்தின் அனைத்து வகையான கிளை அமைப்புகளுடனும் நீண்ட நெடுங்காலமாக நெருக்கமான உறவு கொண்டுள்ள கீதா அச்சகம், தீவிரமான இந்துத்துவத் துக்கான வலிமையான எழுத்து வடிவிலான ஆயுதங்களைத் தயாரித்து வழங்கும் உலைக்களனாக விளங்கி வருகிறது.
கீதா அச்சகமும், அதன் வெளியீடான ‘கல்யாண்’ இதழும் 1920களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டன. அதே காலக்கட்டத்தில், கொள்கைப் பரப்புதலுக்கெனத் தொடங்கப் பட்ட அச்சகங்களும் இதழ்களும் நீண்டகாலத்திற்கு முன்பே செயலற்று மறைந்துவிட்டன. ஆனால் கீதா அச்சகமும், கல்யாண் இதழும் இன்றளவும் வலிமையோடு இயங்கிக் கொண்டிருக்கின்றன.
2014ஆம் ஆண்டின் தொடக்கக் காலம் வரையிலான கணக்குப்படி, கீதா அச்சகம், 720 இலட்சம் பகவத் கீதை படிகள், துளசிதாசர் இந்தியில் எழுதிய இராமாயணமான ‘இராமச்சரிதமனஸ்’ 700 இலட்சம் படிகள், ‘இந்து என்கிற இலக்கணத்தின்’படி வாழ்ந்த பெண்கள், சிறுவர்கள் ஆகியோ ரின் ‘போற்றுதலுக்குரிய’ வாழ்க்கை வரலாற்றுச் சிறு நூல் கள் 948 இலட்சம் படிகள் ஆகியவற்றை விற்பனை செய் துள்ளது. இன்று ‘கல்யாண்’ இதழ் இந்தியில் இரண்டு இலட்சம் படிகளும், ஆங்கிலத்தில் ‘கல்யாண்-கல்பதரு’ என்ற பெயரில் ஒரு இலட்சம் படிகளும் அச்சிடப்படுகின்றன.
கல்யாண் இதழ், இவ்வளவு நீண்டகாலமாக வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருப்பதன் இரகசியம் என்ன?
இம்மாபெரும் வெற்றியின் பெரும்பங்கு, கீதா அச்சகத்தை நிறுவிய ஜெய்தயாள் கோயங்காவையும், 40 ஆண்டுகள் கல்யாண் இதழின் ஆசிரியராக விளங்கிய அநுமன் பிரசாத் பொட்டாவையும் சாரும். அக்சய முகுல் தன்னுடைய நூலில் இவ்விருவரையும் “மார்வாரி வணிகர்களாக இருந்து ஆன்மிகவாதிகளானவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றியின் திரைக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட கிளை அமைப்புகள், ஊக்குவித்து உதவியவர்கள், ஆசிரியவுரைப் பகுதியில் எதை எழுத வேண்டுமென்று முடிவு செய்தவர்கள் முதலான விவரங்களை முகுல் 400 பக்கங்களில் தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்துமதச் சார்பு கொண்ட ஒரு அச்சகம், இந்துத்துவ அரசியலை வளர்த்தெடுப் பதில், சமூக- கலாச்சார, பொருளியல் மற்றும் மனித ஆற்றல் ஆகிய தளங்களில் அளித்த பங்களிப்பைத் தேர்ந்த மதிநுட்பத் துடன் முகுல் இந்நூலில் விளக்கியுள்ளார்.
மார்வாரி மூலதனத்தில் இயங்கும் கீதா அச்சகமும், கல்யாண் இதழும் இந்து மதத்தை நிலைபெறச் செய்வதற் காக வெளியிடும் கருத்துகளில், சாதி அமைப்பைப் பற்றி என்ன கூறுகின்றன என்பதற்கு முகுல் முதன்மை தந்து விளக்கியிருக்கிறார். கல்யாண் இதழின் ஆசிரியராக நாற்பது ஆண்டுகள் இருந்த பொட்டார் பார்ப்பன எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், கலைஞர்களுடன் பணி செய்தவர். கீதா அச்சகம் டால்மியாக்கள், திவேதிகள், கோயங்காக்கள், குப்தாக் கள், பிர்லாக்கள், ஜெயின்கள், சதுர்வேதிகள், முகர்ஜிகள் ஆகிய பார்ப்பன-பனியாக்களின் ஆதிக்கப்பிடியிலேயே இருந்து வந்துள்ளது என்பதை முகுல் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பார்ப்பன-பனியா கூட்டு என்பது தற்செயல் நிகழ்வன்று. இந்துத் தேசம் என்கிற திட்டம் ஏன் உருவாக்கப்பட வேண் டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டே பார்ப்பன-பனியா கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மார்வாரிகள் இந்திய முதலாளிய வர்க்கத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங் கினர். இதன் விளைவாக, “இரண்டு முரண்பாடான நிலைகள்” ஏற்பட்டன என்று இந்நூலின் ஆசிரியர் முகுல் குறிப்பிடுகிறார். ஒன்று, மார்வாரிகளின் வளர்ச் சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்பட்டனர். இரண்டாவது மார்வாரிகளின் வருண-சாதி அடையாளம் பற்றிய சிக்கல். பொருளாதார நிலையில் மார்வாரி கள் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்த போதிலும், வருணாசிரமப் படிநிலையில் பார்ப்பனர், சத்திரியருக்கு அடுத்து மூன்றாம் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், ‘தங்களின் செல்வ உயர்நிலைக்கு ஏற்ப சமூகத்தில் உயர் தகுதிநிலை கிடைக்கவில்லையே’ என்று பொரு மினர். ஏழைப் பார்ப்பனரும் ஏழையாக உள்ள சத்திரி யரும் தங்களைவிட உயர்ந்த மதிப்பைச் சமூக நிலை யில் பெற்றுள்ளதைக் கண்டு மனம் கசந்தனர்.
அதனால், உயர் சமூக அடையாளத்தைப் பெறுவதற் காக மார்வாரிகள் கோயில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் முதலானவற்றைக் கட்டினர், ‘இராமச்சரிதமனஸ்’ பசனைகள் நடத்தவும், பசுப் பாதுகாப்புச் சங்கங்கள் செயல்படவும் பணத்தை அள்ளித் தந்தனர்.
மார்வாரிகள் மேற்கொண்ட மற்றோர் உத்தி, அச்சகங் களை அமைப்பது, இதழ்களை வெளியிடுவது என்பதாகும். தொடக்கத்தில் இவர்களின் நோக்கம் மார்வாரி சமூகத்தைச் சீர்திருத்துவது என்பதாக இருந்தது. அடுத்து அவர்கள் இந்து தருமத்தைப் பேணிக்காத்து வளர்ப்பதை மேற்கொண்டனர். 1889இல் ‘இராஜஸ்தான் சமாச்சார்’, 1890இல் ‘மார்வாரி கெசட்’, 1921இல் ‘மார்வரி சுதார்’, 1923இல் ‘மார்வாரி அகர் வால்’ ஆகிய இதழ்களைத் தொடங்கினர். இந்தப் பின்னணி யில்தான் கீதா அச்சகம் ஏற்படுத்தப்பட்டது; கல்யாண் இதழ் தொடங்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, மார்வாரிகள், “பெரும் நிலப்பிரபுக்களாகவும், மேட்டிமைக் குடியினராகவும்” (Aristrocracy) இந்து மதத்தின் புரவலர்களாகவும், இருந்து வந்த சத்திரியரின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். வரலாறு நெடுகிலும் இந்துச் சமூகத்தின் முகமாக பார்ப்பன-சத்திரிய கூட்டணி இருந்து வந்த நிலை, பார்ப்பன-பனியா கூட்டணி என்பதாக மாறியது என்று முகுல் குறிப்பிட்டுள்ளார் (இக்கருத்தை மேதை அம்பேத்கர் 1945இல் காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் - மொழிபெயர்ப்பாளர்).
தீவிரவாத இந்துத்துவத்தை வளர்த்தெடுக்க மார்வாரிகள் பெருமளவில் நிதி உதவி செய்தனர் என்பதைப் பல சான்று களுடன் முகுல் இந்நூலில் குறித்துள்ளார். கீதா அச்சகமும் கல்யாண் இதழும் ஊட்டி வளர்க்கும் இந்துத்துவம் என்பதன் அடிப்படை, “பக்தியிலிருந்து இலாபம் ஈட்டும் பனியா முன் மாதிரி”யாகவே (a baniya model of profit from bhakti) இருக்கிறது என்றும், எப்போதும் இந்து மதத்தின் தத்துவத் தலைவர்களாக இருந்து வரும் பார்ப்பனர்கள் இதற்குத் தங்கள் சான்றொப்பத்தை அளித்துள்ளனர் என்றும் முகுல் கூறியுள்ளார்.
இந்துத்துவத் திட்டத்தின் குறிக்கோள் ‘துவிஜா’ எனப்படும் இரு பிறப்பாளர் தகுதி பெற்ற வருணங்களான பார்ப்பனர், சத்திரியர், ‘புதிய சத்திரியர்களாக’ உருவெடுத்துள்ள வைசியர் ஆகிய மூன்று வருணத்தினரின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைபெறச் செய்தலே ஆகும். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமாயின், அம்பேத்கர் முன்மொழிந்த இந்துச் சட்டத் திருத்த வரைவைக் கல்யாண் இதழ் கடுமையாக எதிர்த்தது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், கீழ்ச்சாதியினர் மேல் சாதியினருடன் திருமண உறவு பூண்டு அவர்களின் வீடு களுக்குள் நுழைந்துவிடுவார்கள் என்று கல்யாண் இதழ் எழுதி யது. வருணாசிரமத்தைப் பாதுகாக்க அழைப்பு விடுத்தது.
‘கோவிந் பவன் காரியாலயா’ என்கிற பெயரிலான அறக்கட்டளைக்குச் சொந்தமானதாக கீதா அச்சகம் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையில் இருபிறப் பாளர் எனும் உயர்தகுதி பெற்றுள்ள பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தார் மட்டுமே உறுப்பினராக முடியும். சூத்திரரோ, பட்டியல் வகுப்பினரோ, பழங்குடியினரோ இந்த அறக்கட்டளையில் உறுப்பின ராக முடியாது. கீதா அச்சகம் இராஜஸ்தானில் ஒரு வேதப்பள்ளியை நடத்துகிறது. இதிலும் பார்ப்பன, சத்திரிய, வைசிய வருண-சாதிக் குடும்பங்களின் பிள்ளைகள் மட்டுமே சேர்ந்து படிக்க முடியும்.
இந்துத்துவத்தின் சாதிய நோக்கு
இந்துத்துவம், இந்துப் பெருமிதத்தின் காவலராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால், வருணாசிரமத் தைத் தன் இதயமாகக் கொண்டுள்ள சனாதன தர்மம் என்கிற ஒடுக்குமுறை நஞ்சிலிருந்தே இந்தப் பெருமிதத் தைப் பெறுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக, கீதா அச்சகம் பதிப்பித்துள்ள வெளியீடுகளின் உள்ளார்ந்த நோக்கம் இந்துக் களில் பெரும்பான்மை மக்களாக உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் பட்டியல் வகுப்பினரையும், பார்ப்பன-பனியா- சத்திரிய மேல்வருணத்தினர் தீட்டுகின்ற வஞ்சகத் திட்டங் களுக்குக் கட்டுப்பட வைத்து, இந்துமதம் என்கிற தளையில் பிணைத்திருக்கச் செய்வதேயாகும்.
மத அடிப்படையிலான மக்கள் தொகை விவரத்தை அண்மையில் நடுவண் அரசு வெளியிட்டது. அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், இந்துக்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 80 விழுக்காட்டுக்கும் கீழ் இருப்பதைக் கண்டு இந்துத்துவ சக்திகள் அதிர்ச்சியடைந்து ஓலமிடுகின்றன. சங் பரிவாரத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்த வர்கள் இவர்களின் ஒப்பாரியைக் கண்டு வியப்படைய மாட்டார்கள். உண்மை நிலை என்னவெனில், இரு பிறப்புத் தகுதியிருப்பதாகக் கூறிக்கொள்ளும் மேல் மூன்று வருணத் தார் (பார்ப்பன-சத்திரிய-வைசிய) எண்ணிக்கை இருபிறப் பாளர் அல்லாத சூத்திரர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மதச்சிறுபான்மையினரின் மொத்த மக்கள் தொகை யுடன் ஒப்பிடும்போது சிறுபான்மையே (15 விழுக்காடு) ஆகும்.
இந்தப் பின்னணியில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மையைக் காப்பாற்ற வேண்டும் என்று கருதுவோரின் நிலைமை எப்படியிருக்கிறது? இதற்கான விடைக்குறிப்பு அண்மைக்கால நிகழ்வுகளிலேயே இருக்கிறது.
முதலாவதாக, 1990களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த போராட்டங்கள், தேசிய அரசியல் தளத்தில் முதன் முதலாக, மேல்சாதிகள்-கீழ்ச்சாதிகளுக்கிடையேயான மோத லாக வடிவெடுத்தது. அப்போது இராசீவ் காந்தியின் தலை மையின் கீழ் இருந்த “மதச்சார்பற்ற” காங்கிரசுக் கட்சியும் “வகுப்புவாத” பாரதிய சனதாக் கட்சியும் மண்டல் குழு அறிக் கையை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அப்போது பா.ச.க.வும் ஆர்.எஸ்.எஸ்.-உம் சேர்ந்து, ‘மண்ட லை’ எதிர்ப்பதற்காக அயோத்தியில் இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற போராட்டத்தைக் கையில் எடுத்தன. ‘இந்து ஒற்றுமை’ என்ற பெயரால் மண்டல் குழுவின் அறிக் கையால் இந்து மேல்சாதிகளுக்கும் இந்து கீழ்ச் சாதிகளுக்கும் இடையே எழுந்த முரண்பாட்டை - மோதலை நீர்த்துப் போகச் செய்தன. இந்துமத ஓர்மை என்பது சாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை மூடி மறைக்க ஒரு முகமூடியாகப் பயன் படுத்தப்படுகிறது.
அடுத்து, கீதா அச்சகத்தின் புரவலர்களாக எண்ணற்ற காங்கிரசாரும், சோசலிஸ்டுகளும் இருந்து வருகின்றனர். எனவே இவர்களின் அரசியல் கோட்பாடுகள், மத நம்பிக் கைகள் ஆகியவற்றுக்கும் ஆர்.எஸ்.எஸ்.-இன் கோட்படுகளுக் கும் குறிப்பிடும் படியான வேறுபாடு இல்லை என்பது தெளி வாகிறது. எனவே இன்றும், தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவைகளுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பது ஊரறிந்த உண்மையாகும்.
எனவே இந்த நிலையில் ஒரு வினாவைக் கேட்க வேண்டியுள்ளது. இந்துத்துவத்துக்கு மாற்று அரசியலாக மதச் சார்பின்மையை முன்வைத்த போக்குக்கு அண்மைக் காலத்தில் பெரும் பின்னடைவு - குறிப்பாக குசராத்தில் - ஏற்பட்டுள்ள சூழலில் மேற்கொண்டு என்ன செய்வது என்கிற வினா எழுகிறது.
இந்தச் சூழலில் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தற்போது இந்தியாவில் நைந்து கிடக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாடு இந்துப் பெரும்பான்மை என்ற பெயரில், இந்துத்துவச் சக்திகளால் மேலும் நார்நாராகக் கிழிக்கப்படா மல் தடுத்துக் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய தலையாய பணி ஒன்று இருக்கிறது. இரு பிறப்பாளர் அல்லாதவர்களை (Non-dvijas) பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் மொத்த மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுக்கு மேல் இருக்கின்றனர். பார்ப்பன-பனியா-சத்திரிய வருணத்தார் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக முன்னிறுத் தும் போலியான இந்துப் பெருமிதம் என்கிற சிந்தனைக்கு எள்ளளவும் ஆளாகாமல் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் சில சிறுபான்மை மதத்தவரை (இசுலாமியர்-கிறித்தவர்) இழிவானவர்களாகவும் எதிரிகளாக வும் சித்திரிக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால், இத்தகைய நிலை ஏற்பட வேண்டுமானால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பட்டியல் வகுப்பு மக்களும் சமூக நிலையில் சம அதிகாரமும், பொருளாதார நிலையில் மற்றவர்களைச் சார்ந்திராத முன்னேற்றமும் பெற்றிருக்க வேண்டும். சாதி அடிப்படையில் எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாக்கப்பட வேண்டும். இதைத் தீர்வாகச் சொல்லுதல் எளிது; ஆனால் நடைமுறைப்படுத்துதல் அரிது.
அரசியல் நிலையில் சரியானது என்பது போலக் கருதப் படும் ஒரு திட்டம், சமூக நிலையில் வெறும் நல்லெண்ணம் கொண்ட - நடைமுறைப்படுத்த முடியாத ஒரு திட்டமாகக் காட்சியளிக்கிறது. இதில் வேடிக்கை என்னவெனில், மேல் சாதியினரும், மதச்சார்பின்மைக் கொடியைத் தூக்கிக்கொண்டு திரிகின்றனர்.
சமூகத்தில் எந்தவொரு ஆதிக்கப் பிரிவினரும் தாமாக முன்வந்து தங்களின் சிறப்புரிமைகளையோ அல்லது அதிகாரத்தையோ விட்டுக்கொடுத்ததாக வர லாற்றில் ஒரு நிகழ்வுகூட இல்லை, பிரித்தானியர் இந்தியாவைத் தங்கள் காலனி நாடாக ஆக்கும் வரை யில், இந்தியத் துணைக் கண்டத்தின் சமூகக் கட்ட மைப்பைப் பார்ப்பனர்-சத்திரியர் கூட்டுச்சேர்ந்து தங்கள் நலன்களுக்கு ஏற்ப ஆட்டிப் படைத்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதன்பின், பார்ப்பன-பனியா கூட்டு மேலா திக்கம்தான் இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண் டிருக்கிறது.
எவ்வளவு குறைபாடுகள் இருந்த போதிலும் இந்தியா வில் நிலவும் சனநாயகமும், சமூக நிலையில் முற்போக்கான கூறுகளைக் கொண்ட அரசமைப்புச் சட்டமும், பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. முன்பிருந்த பார்ப்பன-சத்திரிய மேலாதிக்கத் தை எதிர்த்து எவரும் மூச்சுக்கூட விடமுடியாத நிலை இருந்தது.
இந்துத்துவாவும் சனநாயகமும் இயைந்து இருக்க இயலாது; அதேபோன்று சமத்துவக் கோட்பாடும் இந்துத்து வாவும் இணைந்து இருக்க முடியாது என்கிற கருத்துகள் கீதா அச்சகத்தின் வெளியீடுகளில் விரவிக் கிடக்கின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மதச்சார்பின்மையைச் செயல்படுத்துவதற்கான போராட்டத்தில் வெற்றிபெற வேண்டு மானால், முதலில், இந்துத்துவத்தின் வைரசு போன்ற கொடிய நஞ்சாக உள்ள சாதி அமைப்பின் முதுகெலும்பை முறிக்க வேண்டும். சனநாயகம், எந்த அளவுக்குச் சாதிய மேலாதிக்கத்தை வீழ்த்துகிறதோ, அதைப் பொறுத்தே இந்தியாவின் எதிர்கால வரலாறு அமைந்திருக்கும்.
நன்றி : ‘The Hindu’, 9.9.2015
தமிழாக்கம் : க. முகிலன்