புதுதில்லியில், இடஒதுக்கீடு பணிக்காக, 17-2-15 முதல் 25-3-15 முடிய நான் தங்கியிருந்தேன்.
“தினகரன்” நாளேட்டின் 18-2-2015 தில்லி பதிப் பில், “ஓசூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 2300 ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம். நோட்டீஸ் பெற்ற விவசாயிகள் கதறல்” என்ற தலைப்பில் ஒரு செய்தியைப் படித்தேன். அதில் வெளியான படம், அப்பகுதி நிலங்களின் செழிப்பை வெளிக்காட்டியது.
அதற்கான காரணங்களை நேரில் கண்டறிந்திட வேண்டுமென்று கருதி, 31-3-15 முற்பகல் 11 மணிக்கு, ஓசூரிலுள்ள மா.பெ.பொ.க. தோழர் கு. தொல்காப்பி யன் இல்லத்திற்குச் சென்று நானும், பெங்களூர் புலவர் கி.சு. இளங்கோவனும் தங்கினோம். அதற்கு முன்னரே என் வருகை பற்றி, தொல்காப்பியனுக்கும், ஓசூர் தோழர் மூவேந்தனுக்கும் அறிவித்திருந்தேன்.
தொல்காப்பியன் இல்லத்துக்குச் சில பெரியார் தொண்டர்களும், அப்பகுதி வேளாண் தோழர்களும் வந்திருந்தனர். இயக்கம் பற்றியும், வேளாண் நிலங் களைப் பார்வையிட யார் யாரை உடனழைத்துச் செல்லுவது என்பது பற்றியும் அவர்களுடன் கலந்துரை யாடினோம்.
31-3-15 இரவு முன்னேரத்தில் மூவேந்தன் இல் லத்தில், 20, 30 உள்ளூர் இளைஞர்களுடன் கலந்து ரையாடினேன்.
1-4-15 காலை 9 மணிக்கு மூவேந்தன் தலை மையில், அவருடைய மகிழுந்தில், நானும் இரா. சீனிவாசன், தி.சந்திரப்பிரகாசு ஆகியோரும் புறப்பட் டோம். நாங்கள் கேட்டுக் கொண்டபடி, கிருஷ்ணகிரி புலவர் சி. மாணிக்கமும் எங்களோடு இணைந்து கொண்டார்.
இந்தப் பகுதியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம், 15 கிலோ மீட்டரில் வடக்கு எல்லையில் இருக்கிறது; மேற்கே 15 கிலோ மீட்டரில் கர்நாடகா எல்லை இருக் கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அடுத்த சூளகிரி ஒன்றியம் குண்டுக்குறிச்சி சாலையில், நல்ல கான கொத்தப்பள்ளி நிலங்களைப் பார்வையிட்டோம். ஏற்கெனவேயே, அங்கே உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு எதிரில், மார்வாடிகளின் கிரானைட் தொழிற்சாலை இருக்கிறது. இந்த ஆய்வுத் தொடக்கத்தில், வேளாண் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திய தோழர் சப்படி எஸ். அப்துல் ரகீம் மற்றும் சில தோழர்கள் இன்னொரு மகிழுந்தில் வந்து கலந்து கொண்டனர்.
அங்கே தொடங்கி, பச்சைப்பசேலென விரிந்து பரந்துள்ள - தென்னை, தக்காளி, நெல் நாற்று, புதினா கீரைத் தோட்டங்கள், கத்தரி, முட்டைக்கோசு, கேழ்வரகு, சோளம் முதலான பயிர்களிடையே ஆண்களும் பெண் களும் இளைஞர்களும் வேலை செய்து கொண்டி ருந்தனர்.
நாங்கள் அவர்களுக்கு ஏற்படப் போகும் துன்ப நிலை பற்றிக் கேட்கத் தொடங்கியவுடன் மடமடவென அவர்கள் பேசத் தொடங்கினர்.
“எங்கள் நிலம் நல்ல நீர்வளம் உள்ளது. போட்ட பயிர் விளையக் கூடியது. என் தகப்பனார் பெரிய நாகப்பா, 1981இல் ஆழ்குழாய் இறக்கினார். 90 அடி ஆழத்திலேயே நீர் கிடைத்தது. இன்றைக்கும் அக் குழாய் வழியாக நீர் பாய்ச்சுகிறேன். எங்கள் குடும் பத்துக்கு 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. நான் தலை யெடுத்த பிறகு, 2012-இல் இன்னொரு ஆழ்குழாய் இறக்கினேன். அதில் 150 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் நிலத்தில் உழைக்கிறோம். பணத்துக்கு இந்நிலங்களை விற்றுவிட்டால், இவ்வளவு செழிப்பான நிலங்களை நாங்கள் எங்கே போய் வாங்குவது?” என்று கேட்டு, அங்கலாய்ப்போடு கூறினார், வெங்கடேசப்பா.
இப்படிப்பட்ட செழிப்பான நிலங்கள் 834 ஏக்கர் இந்தப் பகுதியிலிருப்பதைப் பார்வையிட்டோம்.
ஆழ்குழாய்க்கிணற்றுப் பாசனம் அன்னியில், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வரும் வாய்க் கால் பாசன வசதியும் இப்பகுதியிலுள்ள சிறு, குறு, நடுத்தர வேளாண் மக்கள் தத்தம் நிலங் களில் ஆண்டு முழுவதும் தோட்டப் பயிர்கள் செய்யப் பயன்படுகிறது என்பது மாபெரும் உண்மை.
நாங்கள் அங்கிருந்து பெங்களூர் முதன்மைச் சாலைக்கு வந்து, சின்ன சப்படி, பெரிய சப்படி, கொட்ட ரப்பள்ளி வழியாக அட்டக்குறுக்கியை அடைந்தோம். ஊருக்குள் போகும் வழியில் சிவம் கிரானைட்ஸ், சேஷா கிரானைட்ஸ், அர்ஜுனா கிரானைட்ஸ் தொழிற் சாலைகள் வரிசையாக ஏற்கெனவே அமைந்துள்ளன.
நாங்கள், ஊர் கான லட்டி ஊராட்சி, தோரப்பள்ளி அடைந்தோம்.
அங்கு, இப்போராட்டத்தில் வேளாண் மக்களுக்குத் துணைநிற்கும் வழக்குரைஞர் தோழர் எஸ்.எம். முருகேசன் அவர்களும் எங்கள் குழுவினரோடு இணைந்து கொண்டார்.
இப்பகுதி நில உரிமையாளர்கள் பலரையும் நாங் கள் கண்டு பேசினோம்.
இங்கே நாங்கள் அறிந்த உண்மை என்ன?
இந்தப் பகுதியில் உள்ள 1800 ஏக்கர் பட்டா நிலங் களையும், இந்நிலங்களுக்கு இடையே ஆங்காங்கே 3 ஏக்கர், 4 ஏக்கர் என்று அரசுப் புறம்போக்கு வகையில் 600 ஏக்கர் இருப்பதையும் - ஆக மொத்தம் 2400 ஏக் கரையும் சிப்காட் தொழிற்சாலையின் புதிய உற்பத்திக் கிளையைத் தொடங்குவதற்காகத் தமிழக அரசு கையகப்படுத்த, 2012 நவம்பர் 21 முதல் முயற்சிக் கிறது; அறிவிப்புச் செய்திருக்கிறது.
செழிப்பான வேளாண்மை நடைபெற்றுக் கொண்டி ருக்கிற இந்நிலங்களைக் கையகப்படுத்தினால், நூற் றுக்கணக்கான வேளாண் குடும்பங்களில், ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் எங்கே போய் நிலம் வாங்குவது? எங்கே போய், என்ன தொழில் செய் வது? என இப்பகுதி மக்கள் கதறுவதும் போராட்டம் நடத்துவதும் மிகவும் நேர்மையானவை.
3-3-2015 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வேளாண் மக்களிடம் கருத்துக் கேட்டதோடு இம்முயற்சி நிற்கிறது.
இப்பகுதியில் வேளாண் மக்களைத் திரட்டிப் போராடி வருகிற தோழர்கள் எஸ்.அப்துல் ரகீம், செயராமன் மற்றும் இப்பகுதிவாழ் ஊராட்சிமன்றத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்து போராடி, சூளகிரி பகுதி வேளாண் மக்களின் விளைச்சல் நிலங்களைத் தமிழக அரசு கையகப்படுத்துவதைக் கைவிடும்படிக் கோரு வது மிக மிக முதன்மையானது; அவசரமானது.