பரந்தூர் புதிய விமான நிலையத்துக்காக பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபணை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபணைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு எதிராக ஏகனாபுரம், பொடவூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிலிருந்து டிராக்டரில் பேரணியாகப் புறப்பட்டு காஞ்சிபுரம் பொன்னேரிக் கரை பகுதியில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை ஒடுக்க நூற்றுக்கணக்கான போலீசை குவித்து வைத்திருந்த திமுக அரசின் காவல்துறை, 137 விவசாயிகள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்திரவை மீறுவது ஆகிய மூன்று பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.farmers protest against parandur airportஒரு பக்கம் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் அவர்கள் மீது பாசிச பிஜேபி அரசு தொடுத்துள்ள தாக்குதலைக் கண்டித்தும் பேசும் திமுக, தமிழ்நாட்டில் தன்னுடைய நிலத்துக்காகப் போராடும் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து அச்சுறுத்துகின்றது.

கார்ப்ரேட்டுகளுக்காக விவசாயிகளை ஒடுக்குவதில் பிஜேபிக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை திமுக பகிரங்கமாக ஒத்துக் கொள்கின்றது.

இந்தத் திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கரும், அரசு நிலம் 1,972 ஏக்கரும் கையகப்படுத்தப்படப் போவதாக தமிழக அரசு தெரிவிக்கின்றது.

ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து எதற்காக, யாருக்காக தமிழக அரசு இந்த விமான நிலையத்தை அமைக்க வேண்டும்?

நிச்சயமாக இது பன்னாட்டு தொழில்நிறுவனங்களை தமிழகத்தை நோக்கி ஈர்ப்பதற்காக செய்யப்படுவதாக ஒரு தோற்றத்தை திமுக அரசு ஏற்படுத்தினாலும், இதற்குப் பின்னணியில் இந்திய கார்ப்ரேட்டுகளின் நலனும் ஒளிந்திருக்கின்றது.

2021 ஆண்டு டிசம்பர் மாதம் விமா­னப் போக்­கு­வரத்து இணை அமைச்­சர் வி.கே.சிங் அவர்கள் “வரும் 2025ஆம் ஆண்­டிற்­குள் மொத்­தம் 25 விமான நிலை­யங்­க­ளைத் தனி­யா­ரி­டம் ஒப்­ப­டைக்க இந்­திய அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக” அறிவித்தார்.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழ்­நாட்­டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நக­ரங்­களில் உள்ள அனைத்­து­லக விமான நிலை­யங்­கள் தனி­யார்­வ­ச­மா­கி­ வி­டும்.

25 விமான நிலை­யங்­களை­யும் தனி­யார்­ம­ய­மாக்­கு­வ­தன்­மூ­லம் ரூ.20,782 கோடி திரட்­ட திட்­ட­மிட்­டுள்­ள­தாக மத்­திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இப்படி விற்பதற்கு முக்கிய காரணம் விமான நிலையங்களை அரசு நடத்துவதால் இழப்பு ஏற்படுகின்றது என்பதுதான். கடந்த 2020-21 நிதி­யாண்­டில், இந்­தி­யா­வில் உள்ள 136 விமான நிலை­யங்­க­ளி­லும் ஒட்­டு­மொத்­த­மாக ரூ.2,882.74 கோடி வருவாய் இழப்பு ஏற்­பட்­ட­தா­கத் தர­வு­கள் கூறு­கின்­றன.

அதி­க­மாக, மும்பை சத்­ர­பதி சிவாஜி மக­ராஜ் அனைத்­து­லக விமான நிலை­யத்­திற்கு ரூ.384.81 கோடி­யும், புது­டெல்லி இந்­திரா காந்தி அனைத்துலக விமான நிலை­யத்­திற்கு ரூ.317.41 கோடி­யும் இழப்பு ஏற்பட்டன.

நிலைமை இப்படி இருக்க விமான நிலையத் திட்டத்திற்கு 100 கோடி செலவு செய்தால் மாநில அரசுக்கு 325 கோடி வருமானம் கிடைக்கும் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய்!.

ஏற்கெனவே மும்பை விமான நிலை­யத்­தின் 74% பங்கு அதானி குழுமத்திடமும், எஞ்­சிய 26% பங்கு இந்­திய விமான நிலைய ஆணையத்திடமும் உள்­ளன. காலப்போக்கில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அதானி அம்பானி, டாடா கைகளில் போய்விடும் என்பது நிச்சயம்.

இதிலே பெரிய கொடுமை என்னவென்றால் இந்திய அரசிடம் சொந்தமாக ஒரு விமான நிறுவனம் கூட இல்லை என்பதுதான்.

இந்தியாவின் ஒரே பொதுத்துறை விமான சேவை நிறுவனமாக இருந்த `ஏர் இந்தியா'வை டாடா நிறுவனத்திடம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மோடி அரசு விற்று விட்டது. இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், விமான சேவையை இலாபத்தில் நடத்தும் போது ஏன் ஏர் இந்தியாவால் மட்டும் நடத்த முடியவில்லை?

காரணம் அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் அளவுக்கு சிக்கலானது அல்ல. பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டும் என்று முடிவெடித்துவிட்டால் இதுவரை விற்ற எல்லா பொதுத்துறை நிறுவனத்துக்கும் எப்படி நட்டக் கணக்கு எழுதினார்களோ அதே முறையை கடைபிடித்து விற்று விடுவார்கள். போலீசாரை வெட்ட வந்த ரவுடிகள் எப்படி ஒரே பேட்டர்னில் என்கவுன்டர் செய்யப்படுகின்றார்களோ அதே போலத்தான் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கான ஒன்றிய அரசின் பேட்டர்னும் ஒரே மாதிரி இருக்கும்.

ஏற்கெனவே மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து கடல் வளங்களை அழித்து உருவாக்கப்படும் காட்டுப்பள்ளி துறைமுகம் அதானியின் கைகளுக்குச் சென்றுவிட்டதைப் போல ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையமும் நிச்சயம் ஒரு நாள் சென்றுவிடும்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ச்சியாக தொழில்வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் மீது கொடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டு இருக்கின்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தும் திட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்கப் பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை எடுக்கும் திட்டம் உட்பட பல்வேறு இடங்களில் சிப்காட் அமைக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் திமுக அரசு போராடும் விவசாயிகளை மிரட்டுவதோடு அவர்கள் மீது குண்டர் சட்டம் போடும் அளவுக்குத் துணிந்திருக்கின்றது.

தொழில்வளர்ச்சி என்ற பெயரில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அழித்து அவற்றை சில கார்ப்ரேட்டுகளுக்குக் கொடுப்பதன் மூலம் சில நூறு பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கலாம். ஆனால் இப்படி வளங்களை அழித்து உருவாக்கப்படும் செல்வம் அனைத்தும் ஒருசில கார்ப்ரேட்டுகளின் கைகளில்தான் குவிக்கப்படுகின்றது.

விவசாய நிலங்களை அராஜகமான முறையில் அடித்துப் பிடுங்கி விமான நிலையம் அமைக்கும் அரசால், ஏன் தொழில்நிறுவனங்களை அமைத்து நடத்த முடியவில்லை என்று யோசித்துப் பார்த்தால் கார்ப்ரேட் அடிமைகளின் யோக்கியதை அம்பலமாகும்.

மக்களை அடித்து உதைத்து அடக்கி கார்ப்ரேட்டுகளுக்கு சேவை செய்வதில் திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் என யாருக்கும் வித்தியாசம் இல்லை. சில சில்லரை சீர்திருத்தங்கள் மூலம் இவர்கள் நம்மிடம் காட்டும் மனித முகத்தை நம்பி நாம் ஏமாந்து விடுகின்றோம். உண்மையில் அதற்குப் பின்னால் இருக்கும் கொடிய கார்ப்ரேட் மிருக முகத்தை நாம் பார்ப்பதே இல்லை.

பரந்தூர் விமான நிலையம். திமுகவின் கொடிய கார்ப்ரேட் மிருக முகம்!

- செ.கார்கி

Pin It