கீற்றில் தேட...

தென்னகத்தில் சிறுபகுதி நீங்கலாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் ஆட்சி செய்த  கடைசி முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் 1707இல் இறந்தார். அதன்பின் முகலாயப் பேரரசு நிலைகுலைந்தது. அவுரங்க சீப்புக்கு அடங்கிக்கிடந்த சிற்றரசர்கள் முகலாயப் பேரரசி லிருந்து துண்டித்துக் கொண்டு தனித்தனியாகச் சிற்றரசு களை உருவாக்கிக் கொண்டனர்.

tippusultanஅப்போது வங்காளத்தில் பெரும் பரப்பில் அமைந்த நவாப் அரசு வலிமையாக இருந்தது. வங்காள நவாப் சிராஜ் உத்தவுலா 1756இல் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த கல்கத்தா நகரைக் கைப்பற்றினான். எனவே சென்னையிலிருந்த இராபர்ட் கிளைவ் படையுடன் வங்காளம் சென்றார். சிராஜ் உத்தவுலாவின் தளபதி மீர்ஜாபரை மன்னனாக்குவதாக இராபர்ட் கிளைவ்  ஆசைகாட்டித் தன் பக்கம் ஈர்த்தார்.

1757இல் ஹூக்ளி ஆற்றின் கரையில் பிளாசி எனும் இடத்தில் வங்காள நவாபின் படைகளுக்கும் இராபர்ட் கிளைவின் படைகளுக்கும் போர் நடந்தது. தளபதி மீர்ஜாபர் மன்னரின் பக்கம் இருப்பதாக நடித்துக் கொண்டே குழிபறித்ததால் நவாப் தோற்றார். இந்தப் பிளாசிப் போர்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் வலிமையாகத் தன் ஆட்சி அதிகாரத்தை நிறுவிட வழி கோலியது. அதனால்தான் 1910 வரையில் கல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சியின் தலைநகரமாக இருந்தது.

1757 பிளாசிப் போருக்குப் பின் இந்தியத் துணைக் கண்டத்திலேயே கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக் குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர்கள் மைசூரை ஆண்ட அய்தர் அலியும் அவருடைய மகன் திப்புசுல் தானும் மட்டுமே ஆவர். அய்தர் அலி சாதாரணப் போர் வீரனாக இருந்தவர். எழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் தன்னுடைய ஒப்பரிய போர்த் திறத்தால் படைத் தளபதி யானார். போர்களில் பல வெற்றிகளைக் குவித்து மைசூர் மன்னராட்சிப் பகுதியை விரிவுபடுத்தினார். இறுதியில் மைசூர் மன்னனானார்.

அய்தர் அலியின் மூத்த மகன் திப்புசுல்தான் (1750-1799) தன்னுடைய 17 அகவை முதல் ஆங்கிலே யரை இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்கிற வீறார்ந்த குறிக்கோளுடன் 32 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் தொடர்ந்து போரிட்டு மாண்ட மாவீரன்.

கர்நாடக மாநிலத்தில் சித்தராமய்யா தலைமையில் உள்ள காங்கிரசு ஆட்சி 2015ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக முதல்முறையாகக் கொண்டாடியது. ஆனால் பாரதிய சனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் கடந்த ஆண்டே திப்புசுல்தானுக்கு அரசு விழா நடத்தக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தன. திப்புசுல்தான் ஒரு கொடுங் கோலன்; குடகில் ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவன்; எண்ணற்ற இந்துக் கோயில்களை இடித்தவன் என்று இந்துத்துவ அமைப்புகள் குற்றம் சாட்டின. திப்புசுல்தான் விழாவின் போது, 2015 நவம் பரில் குடகு பகுதியில் நடந்த எதிர்ப்புக் கலவரத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். திப்புசுல்தான் ஒரு இசுலாமியர்; அவருக்கு அரசு விழா எடுக்கக்கூடாது என்பதே இந்துத்துவவாதிகளின் உள்நோக்கமாகும்.

இந்த ஆண்டும் நவம்பர் 10 அன்று திப்புசுல்தான் பிறந்தநாள் விழாவை அரசு கொண்டாடும் என்று முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்தார். குடகு மாவட் டத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் இந்த அறிவிப்பை எதிர்த்து பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடுத்தார். அதில், “கடந்த ஆண்டு திப்புசுல்தான் பிறந்தநாளைக் கொண்டாடியதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் இரண்டு பேர் கொல் லப்பட்டனர். இந்த ஆண்டும் திப்புசுல்தான் பிறந்த நாளைக் கொண்டாடினால் கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே திப்புசுல்தான் பிறந்த நாளை அரசு கொண்டாடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு 3.11.2016 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “மைசூரை ஆண்ட  மன்னன் திப்புசுல்தான் ஆங்கிலேயருக்கு எதிராகத் தீரமுடன் போரிட்டவர். கர்நாடகாவின் வளர்ச்சிக்கும் கன்னட மொழியின்  வளர்ச்சிக்கும் எண்ணற்ற பணி களை ஆற்றியுள்ளார். சுதந்தரப் போராட்ட வீரர் என்ப தால் அவரது பிறந்த நாளை அரசு கொண்டாடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி, “திப்புசுல்தான் மைசூரை ஆண்ட மன்னன் மட்டுமே. சுதந்தரப் போராட்ட வீரர் அல்ல. எனவே அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட ஆர்வம் காட்டுவது ஏன்? இதுதொடர்பாக மனுதாரர் கர்நாடக அரசின் தலைமைச் செயலாளரை அணுகி எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பம் அளிக்கலாம்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

தலைமை நீதிபதி வங்காளத்துக்காரர். கன்னட நாட்டின் திப்புசுல்தான் மைசூர் மன்னர் மட்டுமே; சுதந்தரப் போராட்ட வீரர் அல்லர் என்று எப்படி முடிவு எடுத்தார் என்று தெரியவில்லை. திப்புவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் சாதாரண மனிதர் எவரும் திப்பு சுதந்தரப் போராட்ட வீரர் என்ற முடிவுக்கு வருவர். நீதிபதிகள் என்பவர்கள் சட்டத்தில் எழுதப்பட்டிருப்ப தற்கு அப்பால் உள்ள எதைப் பற்றியும் தீர்ப்பு கூறும் அதிகாரம் தமக்கு இருப்பதாக ஒருவகையான அதிகார போதையில் இருக்கிறார்கள். தமக்குத் தெரியாதது பற்றித் ‘தெரியாது’ என்று உண்மையைச் சொல்லும் நேர்மையும் நாணயமும் அவர்களிடம் இருப்பதில்லை. “நான் கண்டறிந்த இந்தியா” என்ற நூலில் நேரு, “அய்தர் அலியும் திப்புசுல்தானும் கிழக்கிந்திய கம்பெனி யின் பேரெதிரிகளாய்  நின்றனர். படுதோல்விகளைப் பிரிட்டிஷாருக்குப் பரிசளித்து, ஆங்கிலேயரின் ஆளு மைக் கனவுகளைத் தகர்த்து வந்தனர்” என்று குறிப் பிட்டிருப்பதைத் தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி படிக்கவில்லையா? அல்லது அவர் இந்துத்துவச் சிந்த னைக்கு ஆட்பட்டு இவ்வாறு கூறினாரா?

பெங்களூரு உயர்நீதிமன்றம் இவ்வாறு கருத் துரைத்தது பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் சித்தராமய்யா அரசு திப்புவின் பிறந்தநாளைக் கொண் டாடியது. கர்நாடக மாநில பா.ச.க. தலைவர் எடி யூரப்பா தலைமையில் இதைக் கண்டித்துச் சட்டமன் றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு, திப்புவுக்குப் பிறந்த நாள் விழா எடுப்பதைக் கண்டித்து குடகு, மைசூர், மங்களூர் முதலான பல இடங்களில் இந்துத்துவவாதிகள் ஆர்ப் பாட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு இதே எடியூரப்பா பா.ச.க.விலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய போது திப்பு அணிந் திருந்தது போன்ற தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் திப்புசுல்தானைப் புகழ்ந்தார். மீண்டும் பா.ச.க.வில் சேர்ந்ததும் எதிர்க்கிறார்.

எந்தவொரு வரலாற்று நாயகரைப் பற்றியோ, வரலாற்று நிகழ்ச்சியைப் பற்றியோ அச்சமயத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளியல், பண்பாட்டுப் பின்னணியில் வைத்து ஆராய வேண்டும். இத்தன் மையில் திப்புசுல்தானின் வரலாற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அய்தர் அலி எழுதப் படிக்கத் தெரியாதவர். மன்னர் என்ற நிலையில் கல்லாமையின் இன்னல்களை உணர்ந்தார். எனவே தன் மகன் திப்புவுக்குத் தகுதி சான்ற ஆசிரியர்களைக் கொண்டு கல்வி கற்பித்தார். திப்புவுக்குப் பாரசீகம், கன்னடம், உருது, அரபு, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும். குர்-ஆன், இசுலாமியச் சட்டங்கள், குதிரை ஏற்றம், மலை ஏற்றம், போர் பயிற்சிகள் ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்பட்டார். மைசூர் மன்ன ராட்சிப் பகுதியில் பாரசீகம், கன்னடம், மாராத்தி ஆட்சி மொழிகளாக இருந்தன.

திப்புசுல்தான் 5 அடி 8 அங்குலம் உயரமும் வலி மையான உடல் அமைப்பும் கொண்டவர். 1766இல், முதல் மைசூர் போரில் தன் 15ஆம் அகவையில் தன் தந்தையுடன் போரில் ஈடுபட்டார். 16ஆவது அகவை யில் கர்நாடகப் போரில் குதிரைப் படைத் தளபதியாகத் தன் போர்த்திறனைக் காட்டினார்.

1767இல் தன் 17ஆம் அகவையில் தளபதியாகத் தனியாகப் படை நடத்திச் சென்று ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலேயர் படையை வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் எதிர்த்துப் போரிட்டு வென்றார். திப்பு தனித்துப்பெற்ற வெற்றி இது. 1780 செப்டம்பரில் திப்பு 10,000 படைகளுடன் கர்னல் பெய்லியின் படைகளைத் தோற்கடித்தார். 1782இல் தஞ்சாவூர் அருகில் அன்னக்குடி என்ற இடத்தில் பிரெய்த் வெயிட் என்பவர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகளை வீழ்த்தினார். 1781இல் ஆங்கிலேயரிட மிருந்து சித்தூரைக் கைப்பற்றினார். மேலும் மலபார் மங்களூர் பகுதிகளைக் கைப்பற்றினார்.

இரண்டாம் மைசூர் போர் அய்தர் அலியின் தலை மையில் நடந்து கொண்டிருந்தபோது புற்றுநோய் காரணமாக அய்தர் அலி 1782இல் இறந்தார். திப்பு சுல்தான் முறைப்படி மைசூரின் மன்னரானார். இரண்டாம் மைசூர் போர் இன்றைய தமிழகத்திலும் கர்நாடகத் திலும் சில ஆண்டுகள் பல இடங்களில் நடந்தது. திப்பு குதிரையில் மிக வேகமாகப் பாய்ந்து செல்பவர். ஆங்கிலேயருடன் ஒரே சமயத்தில் பல இடங்களில் போர் நடந்ததால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போர் முனையில் இருப்பார். அதனால்தான் வரலாற்றாய் வாளர் துலரி குர்ஷி, திப்புசுல்தான் ஒரே சமயத்தில் பல போர் முனைகளில் போரிடுவது போல் எதிரிகள் அஞ்சும் அளவுக்கு வேகமாக இடம் மாறிக்கொண்டே இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் மைசூர் போரில் பல கள முனைகளி லும் திப்புவின் படைகள் ஆங்கிலேயப் படைகள் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தின. அய்தர் அலி காலம் முதலே படைகள் நவீனப்படுத்தப்பட்டன. பிரெஞ்சு நாட்டின் இராணுவ வல்லுநர்கள் அய்தர் அலி - திப்பு சுல்தான் படைகளுக்குப் பயிற்சி அளித்தனர். திப்பு நவீன துப்பாக்கிகளை உருவாக்கினார். 1784இல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி போர் உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தது. திப்பு விதித்த நிபந்தனை களின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை ஆங்கிலே யரால் ஏற்கப்பட்டது. மங்களூரில் இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. ஒரு இந்திய மன்னர் தான் விதித்த நிபந்தனைகளை ஆங்கிலேயர் ஏற்குமாறு செய்தது இதுவே முதன்முறையாகும்.

ஆங்கிலேயரைத் தென்னகத்திலிருந்து விரட்டி யடிப்பதை நோக்கமாகக் கொண்டு, தன் அண்டை அரசுப் பகுதிகளாக இருந்த அய்தராபாத் நிஜாம், பூனாவைத் தலைநகரமாகக் கொண்ட மராத்தாவின் பேஷ்வா மன்னருடன் திப்புசுல்தான் சமாதான உடன் பாடு செய்து கொண்டார். 1787இல் ஆங்கிலேய ஆட்சியை ஒழித்திட ஆப்கானிஸ்தான் மன்னருக்கும் துருக்கியின் ஒத்தாமன் பேரரசுக்கும் பிரான்சு நாட்டு மன்னனுக் கும் உதவி கேட்டுத் திப்புசுல்தான் மடல் எழுதினார்.

1789இல் பிரான்சில் மாபெரும் புரட்சி ஏற்பட்ட தால் உதவி கிடைக்கவில்லை. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் தளபதியாக நெப்போலியன் ஆட்சி அதிகாரம் பெற்றிருந்தபோது திப்புசுல்தானுக்குப் படைகளை அனுப்புவதாக மடல் எழுதினார். 1798இல் நெப்போலி யன் திப்புவுக்காக 15,000 படைகளை அனுப்பினார். அப்படைகள் சூயஸ் கால்வாய் வழியாக மங்களூர் துறைமுகத்திற்கு வர இருந்தன. ஆனால் ஆங்கிலே யர்கள் சூயஸ் கால்வாயில் நெப்போலியன் அனுப்பிய படைகளைத் தோற்கடித்துத் தடுத்துவிட்டனர். ஆயினும் நெப்போலியன், திப்புசுல்தான் கிழக்கிந்திய கம்பெனி யின் படைகளுக்கு எதிராகத் தீரமுடன் போரிட்டு வரு வதைப் பாராட்டி 1798 பிப்பிரவரியில் திப்புவுக்கு ஒரு மடல் எழுதினார். ஆங்கிலேய ஒற்றர்கள் கைக்கு அம்மடல் கிடைத்தால் திப்புசுல்தானுக்கு அம்மடல் கிடைக்கவில்லை.

ஆங்கிலேயர்கள் திப்புவை எப்படியேனும் ஒழித்திட வேண்டுமென்று பெரும் படையுடன் 1792இல் தலை நகர் ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டனர். இரண்டு கிழமைகள் நடந்த இந்த முற்றுகையைத் திப்புசுல் தானால் தகர்க்க முடியவில்லை. எனவே ஆங்கிலே யருடன் உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி மலபார், மங்களூர் பகுதிகளை இழக்க நேரிட்டது. தன் ஆட்சிப் பகுதியில் பாதியை இழக்க நேரிட்டதுடன், ரூ.3.30 கோடி பணத்தை அபராதமாகத் தரவும் ஒப்புக் கொண் டார். அப்பணத்தைத்தரும் வரையில் திப்புவின் இரண்டு மகன்களை ஆங்கிலேயர் பிணைக் கைதிகளாகப் பிடித் துச் சென்றனர். பணத்தை இரண்டு தவணைகளில் தந்து திப்பு தன் பிள்ளைகளை மீட்டுவந்தார். திப்பு வின் இறப்புக்குப்பின் திப்புவின் இந்த இரண்டு பிள்ளை கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். 1806இல் வேலூர் புரட்சியில் கோட்டைக்குள் பங்கேற்ற இவர்கள் ஆங்கிலேயரின் ஞூயூனியன் ஜாக் கொடியை இறக்கி, புலிக்கொடியை ஏற்றினர் என்பது அறிய வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.

இறுதியாக நான்காம் மைசூர் போர் 1799இல் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் அய்தராபாத் நிஜாம், மாராத்தியரின் படைகளையும் உதவிக்குப் பெற்று 50,000 படையுடன் ஸ்ரீரங்கப்பட்டிணத்தைத் தாக்கினர். திப்புசுல்தான் 30,000 படைகளுடன் போரிட்டார். கோட்டையின் சுவர்களைத் தகர்த்து ஆங்கிலேயப் படைகள் நுழையத் தொடங்கின. அச்சமயம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த திப்புவின் இராணுவ ஆலோசகர் திப்புவிடம் “இரகசிய வழியில் தப்பிச் செல்லுங்கள்; பிறகு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிடலாம்” என்று ஆலோசனைக் கூறினார். அதற்கு திப்புசுல்தான், “ஆயிரம் ஆண்டுகள் ஒரு ஆட்டைப் போல் வாழ்வதை விட புலியைப் போல் ஒருநாள் வாழ்வதே மேல்” என்று கூறி தப்பிச்செல்ல மறுத்துவிட்டார். போர்க்களத் தில் 1799 மே 4ஆம் நாள் வீரச்சாவு எய்தினார்.

ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று முப்பது ஆண்டுகளுக்கு மேல் சூறாவளியாய்ப் போர்க்களங்களிலேயே தன் வாழ்வையே ஒப்படைத்துக் கொண்ட ஒப்பரிய மாவீரன் திப்புசுல்தான் சுதந்தரப் போராளி என்பது இமயம் போன்ற வரலாற்று உண்மையாகும்.

இந்துத்துவ - சங் பரிவாரங்கள் திப்புசுல்தான் இசுலாமியர் என்ற ஒரே காரணத்திற்காகவே களங்கம் கற்பிக்க முயல்கின்றன. திப்புசுல்தான் சுதந்தரப் போராளி மட்டுமின்றி எண்ணற்ற ஒப்பரிய பணிகளைச் செய் துள்ளார். திப்புவைப் பற்றிக் காந்தியார், “நல்லதொரு முசுலீமான அவர் மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வருமான இழப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்திய உயர்ந்த மன்னர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியார் குறிப்பிடுவது போல திப்புசுல்தான் இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால் அதேசமயம் மற்ற மதங்கள்பால் சகிப்புத்தன்மை கொண்டவராக மட்டுமின்றி, அவைகளுக்குப் பேருதவி கள் செய்தார் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் இருக் கின்றன. திப்புசுல்தான் காலத்தில் தலைநகர் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் மசூதியும் அரங்கநாதர் கோயிலும் அரு கருகில் இருந்தன. கோயில்கள், மடங்கள் முதலான சமய நிறுவனங்களுக்குத் திப்புவின் ஆட்சியில் ஓராண் டில் ஒதுக்கப்பட்ட தொகை 2,33,959 வராகன்கள். இதில் 2,13,959 வராகன்கள் இந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் வழங்கப்பட்டன. இச்சான்று ஒன்றே போதும் இந்து மதத்தையும் திப்பு எந்த அளவுக்கு மதித்துப் புரந்தார் என்பதை அறிந்துகொள்ள!

மூன்றாம் மைசூர் போரின் போது பரசுராமபாகு தலைமையில் படையெடுத்து வந்த இந்து வீரர்களைக் கொண்ட மராட்டியப் படை ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதிசங்கரர் நிறுவிய மடங் களில் ஒன்றான சிருங்கேரி மடத்தைச் சூறையாடி 17 இலட்சம் வராகன்கள் பெறுமானமுள்ள செல்வத்தைக் களவாடிச் சென்றது. கோரி முகம்மதும் கஜனி முகம்மதும் இந்தியாவில் கோயில்களில் கொள்ளையடித்தது பற்றிக் கூச்சல் போடும் சங் பரிவாரங்கள், பூனாவின் சித்பவன பார்ப்பன ஆட்சியின் படைகள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடித்ததற்கு என்ன பதில் சொல்வார்கள்?

மராத்தியரின் தாக்குதலின் போது சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாக இருந்த சச்சிதானந்த பாரதி தனது சீடர்களுடன் கார்கிலாவிற்குத் தப்பிச் சென்றார். மடத்தின் மூலச்சிலையான தங்கத்தால் செய்யப்பட்ட சாரதா தேவி சிலையையும் இந்து மராத்தியர் கள வாடிச் சென்றனர். கார்கிலாவிலிருந்து தமக்கு உதவும் படி திப்புவுக்கு மடல் கொடுத்து அனுப்பினார் சிருங்கேரி சங்கராச்சாரி (New History of Marathas by Sardesi G.S. Volume III. p..180).

சங்கராச்சாரியாரின் மடலுக்கு எழுதிய பதில் கடிதத் தில் திப்புசுல்தான், “புனித இடங்களை அழிப்ப வர்கள் தங்களது தீயச் செயல்களுக்கான பலனை அனுபவிப் பார்கள். குருவுக்குத் தீமை செய்பவர்களுக்கு அழிவே உண்டாகும். சாரதா பீடம் மீண்டும் அமைய 200 ரஹாடி ரொக்கமாகவும், 200 ரஹாடி பொருள்களாக வும், 200 ரஹாடி தானியமாகவும் வழங்கியுள்ளேன். மேலும் நிதி தேவையெனில் கொடுக்கும்படி கிராம நிருவாக அலுவலருக்கு ஆணையிட்டுள்ளேன்” என்று எழுதி உள்ளார் (திப்புவின் கடித எண்.47). இந்துக் களின் புனித இடம் தாக்கப்பட்டதை இசுலாமிய திப்பு கண்டித்ததுடன், அதைப் புதுப்பித்திட உதவி செய்தார். ஆனால் சங்பரிவாரங்களோ அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததுடன், முசுலீம்கள் புனிதமாகக் கருதும் இடத்தில் இந்துக் கடவுளான இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று கொக்கரித்து வருகின்றன. இத்தகைய உயர்ந்த உள்ளம் கொண்டிருந்த திப்புவை இந்துக்களின் எதிரியாகச் சித்தரிக்க முயல்வது எத்த கைய பித்தலாட்டம்!

திப்பு 1790 முதல் 1799 இல் இறக்கும்வரை சிருங் கேரி சங்கர மடத்திற்கு 21 மடல்கள் எழுதியிருந்தார். அம்மடல்கள் அனைத்தும் கன்னட மொழியில் எழுதப் பட்டிருந்தன. சங்கர மடத்திலிருந்து திப்புவுக்கு எழுதப் பட்ட மடல்கள் சமற்கிருதத்தில் இருந்தன. தன் நாட்டில் இருந்த இந்துமதத் தலைவருடன் மிகுந்த மதிப்புடனும் பணிவுடனும் உறவு கொண்டிருந்தார் திப்பு சுல்தான்,

திப்புவின் ஆட்சியில் முதன்மையான துறைகளின் அமைச்சர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தனர். திப்பு வின் ஆட்சியில் நிர்வாகத்தில் கிட்டத்தட்ட 50,000 பார்ப்பனர்கள் வேலைகளில் இருந்தனர். திப்புவின் ஆட்சியில் பத்து நாள்கள் நடைபெறும் தசரா விழா எப்போதும் போல் சிறப்பாக நடந்தது. தசரா விழாவில் உடையார் அரச குடும்பத்தினரே தலைமை தாங்கினர்.

திப்புசுல்தானின் மிக நெருங்கிய உதவியாளராக இருந்த பூர்ணய்யா  என்பவர் பார்ப்பனர். சிலர் திப்பு விடம், பூர்ணய்யா உங்களைக் காட்டிக்கொடுத்துவிடக் கூடும் என்று கூறினர். அதற்குத் திப்பு, “யாரோ சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே நிந்திப்பது கூடாது” என்று குர்-ஆனில் கூறப்பட்டுள்ளதை மேற் கோள்காட்டி அவர்களைக் கடிந்து கொண்டார். ஆனால் இன்று இசுலாமியர்களில் சிலர் தீவிரவாதிகளாக இருப் பதைக்காட்டி இந்தியாவில் உள்ள 15 கோடி இசுலாமி யர்களையும் தீவிரவாதிகளாகவும், தேசத்துரோகி களாகவும் காட்ட முயலும் சங்பரிவாரங்களின் கொடு மதியுடன் திப்புசுல்தானின் பெருந்தன்மையை ஒப் பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர் களிலேயே தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த போதிலும் தன் ஆட்சிப் பகுதியின் வளர்ச்சிக்கும் மக் களின் நலனுக்குமான பல திட்டங்களைச் செயல் படுத்தினார். பெங்களூரில் அய்தர் அலி தொடங்கிய லால்பாக் பூங்கா பணிகள் திப்புசுல்தான் காலத்தில் நிறைவடைந்தன. நீண்ட சாலைகள், பொது கட்டடங் கள், துறைமுகங்களை திப்புசுல்தான் உருவாக்கினார். அருகமை பள்ளி முறையை இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கியவர் திப்புசுல்தான். ஆறு மைல் தொலைவிற்கு ஒரு பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்றார். திப்புவின் காலத்தில் எண்ணற்ற பள்ளிகள் தொடங்கப்பட்டன. நிதி நிர்வாகத்தை நவீனப்படுத்தித் திறம்பட மேம்படுத்தினார். இந்தியாவிலேயே முதலாவது கூட்டுறவு அமைப்பை உருவாக்கினார். கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இன்று மைசூர் பட்டுச்சேலை புகழ்பெற்று விளங்குவதற்கு அன்று அதன் வளர்ச்சிக்கு வித்திட்டார் திப்புசுல்தான்.

இந்தியாவில் எந்வொரு சிற்றரசரும் மேற்கொள்ளாத வகையில் படைப் பிரிவை நவீனப்படுத்தினார். இராணு வத்தில் உலகிலேயே ஏவுகணையை முதன்முதலாக உருவாக்கிப் பயன்படுத்தியவர் என்கிற பெருமைக்கு உரியவர் திப்புசுல்தான். இந்த ஏவுகணைகள் இரண்டு மைல்கள் தொலைவு சென்று தாக்கும் திறன் கொண் டவை. திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளில் இரண்டு இலண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. திப்புதான் ஏவுகணையின் தந்தை என் பதை அறிவிக்கும் தன்மையில் அமெரிக்காவில் விண் வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (நாசா) முகப்பில் திப்பு சுல்தான் போரில் ஏவுகணையை எறிவது போன்ற பெரிய ஓவியம் வைக்கப்பட்டுள்ளது.

திப்புசுல்தான் சிறந்த படிப்பாளியாகவும் இருந்தார். அரண்மனையில் அவருடைய பயன்பாட்டுக்காக வைத்திருந்த நூலகத்தில் 2000 நூல்கள் இருந்தன. கணிதம், வானவியல், சட்டம், தத்துவம் முதலான பலதுறை சார்ந்த நூல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. திப்பு இறந்த பின் இந்த நூல்கள் இலண்டனில் ஆக்ஸ் ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கும், கல்கத்தாவில் இருந்த வில்லியம் கோட்டை கல்லூரிக் கும், இராயல் ஆசிய கழகத்துக்கும் அனுப்பப்பட்டன.

ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்தரப் போராளியாகவும், மக்கள் நலன் நாடிய நல்ல மன்ன ராகவும், சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கிய திப்பு சுல்தானின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று இந்துத்துவக் கும்பல் எதிர்க்கிறது. அதேசமயம், சுதந்தரப் போராட்டத்திலோ, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களிலோ பங்கேற்காத தீன்தயாள் உபாத்தியாயாவுக்கு மோடி தலைமை யிலான பா.ச.க. ஆட்சி ஓராண்டு காலத்துக்கு அவரு டைய நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.

தீன்தயாள் தன் வாழ்நாள் முழுவதும் செய்த ஒரே பணி இசுலாமியருக்கு எதிராக நஞ்சைக் கக்கி வந்தது தான். தீன்தயாள் என்ற பெயருடன் ஒட்டிக் கொண்டுள்ள ‘உபாத்தியாயா’ என்பது இந்துத்துவ நச்சுக் கருத்து களைக் கற்பித்து வந்த ஆசான் என்பதைக் குறிப்ப தாகும். இந்துத்துவ தத்துவத்தின் தத்துவத் தந்தைய ராக வி.டி. சாவர்கரும், கோல்வால்கரும் கருதப்படு கின்றனர். அவ்விருவருக்கு அடுத்த நிலையில் தீன் தயாள் போற்றப்படுகிறார். காங்கிரசுக் கட்சிக்கு காந்தி எப்படியோ, அதுபோல் பா.ச.க.வுக்கு தீன்தயாள் உபாத்தி யாயா. எனவே தீன்தயாள் நூற்றாண்டை மோடி அரசு கொண்டாடுவதில் வியப்பில்லை.

திப்புசுல்தான் மைசூரை ஆண்ட மன்னன் என்ற அளவில் மட்டுமே பெங்களூரு உயர்நீதிமன்றம் ஏற் கிறது. சங்பரிவாரங்களோ இந்துக்களைக் கொன்ற திப்பு வுக்கு அரசு விழா எடுக்கக்கூடாது என்று எதிர்க்கின் றன. தீன்தயாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்; தன்னு டைய அரசியல் அமைப்பாக 1951இல் ஜனசங்கம் என்கிற அரசியல் கட்சியை உருவாக்கிட ஆர்.எஸ்.எஸ். தெரிவு செய்த முதன்மையான தலைவர்களில் தீன்தயாளும் ஒருவர். இந்த இரு அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்தவர் என்பதற்குமேல் எந்தத் தகுதியும் இல்லாத தீன்தயாளுக்கு நடுவண் அரசு நூற்றாண்டு விழா நடத்துவதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். மோடி அரசு தீன்தயாளுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம் தீன்தயாளின் இந்துத்துவ நச்சுக் கருத்துகளை பரப்புவதற்கான சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதே ஆகும்.

25.9.2016 அன்று கேரள மாநிலத்தில் கோழிக் கோட்டில் நடந்த பா.ச.க.வின் தேசியக் குழுக் கூட்டத் தில் தீன்தயாளுக்கு நூற்றாண்டு விழா நடத்தப் போவ தாக அறிவித்தார். அப்போது பேசிய மோடி, “தீன்தயாள் உபாத்தியாயா அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, முசுலீம்களை நயத்தலோ அல்லது ஒதுக்கி வைத்தலோ கூடாது; அவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றார்” என்று மோடி கூறினார். அதே கூட்டத்தில் உரையாற்றிய பா.ச.க.வின் ராக்கேஷ் சின்ஹா தீன் தயாள் கூறிய தூய்மைப்படுத்தல் என்பதற்கான பொருள் இசுலாமிய மதம் இந்தியாவில் பரவுவதற்குமுன் இந்தி யாவில் நிலவிய கலாச்சர - அறிவுநெறி மரபுகளை முசுலீம்கள் ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்பதாகும் என்று விளக்கமளித்தார்.

தீன்தயாள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மோடி தலைமையில் 149 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த 149 பேர்களில் 23 பேர்களைக் கொண்ட செயற்குழு உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஷியாமா பிரசாத் முகர்ஜி தலைமையில் ஜனசங்கம் 1951இல் அமைக்கப்பட்டது. அதுமுதல் ஜனசங்கத் திற்குத் தத்துவ விளக்குநராக தீன்தயாள் விளங்கி வந்தார். இவர் முன்மொழிந்த தத்துவம் ‘ஒருங்கி ணைந்த மனிதநேயம்’ (Integral Humanism) என்ப தாகும். இது மனித சமத்துவத்தைப் போற்றும் கோட்பாடு என்கிற மயக்கத்தைத் தரும். ஆனால் மக்கள் பிரிவினையை நிலைக்கச் செய்வற்கான கோட்பாடு இது. தீன்தயாள் நால்வருணம் சமூகத்தின் ஒத்திசை வான இயக்கத்திற்குத் தேவை என்றார். ரிக் வேதத்தில், விராட் என்னும் புருஷாவை யாகத்தில் பலியிட்ட போது, அவனது தலையிலிருந்து பார்ப்பனரும் தோளிலிருந்து சத்திரியரும், தொடையிலிருந்து வைசியரும், பாதத்தி லிருந்து சூத்திரரும் தோன்றினர் என்று கூறப்பட் டுள்ளது. எனவே ஒரு மனிதன் செயல்பட தலைமுதல் கால்வரை ஒத்திசைவாக இயங்கிட வேண்டும். அது போன்றதுதான் நால்வருணம் என்று தீன்தயாள் கூறு கிறார். தீன்தயாள் கூறிய இத்தகைய ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்பதை ஜனசங்கம் 1965இல் தன் கோட்பாடாக அறிவித்தது. ஜனசங்கத்திலிருந்து மறு அவதாரம் எடுத்த பா.ச.க. 1980இல் தீன்தயாளின் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்பதைக் கட்சிக் கொள்கையாக ஏற்றது.

1965இல் பூனாவில் தீன்தயாள் பேசிய போது, “சிவாஜி மகாராசா சுயராச்சிய அரசை நிறுவினார். சுயராச்சியத்தின் அடிப்படையில் பாரதத்தை விடுதலை (முசுலீம்களிடமிருந்து) செய்யவேண்டும் என்பதே சிவாஜியின் குறிக்கோள். சிவாஜியின் வழிமுறையைப் பின்பற்றி நாம் நிஜாமிடமிருந்து அய்தராபாத்தையும்,  கோவாவையும் விடுதலை செய்தோம். இதே தன் மையில் நம் நிலத்தின்மீது நிறுவப்பட்டுள்ள பாக்கிஸ் தானிடமிருந்து நம் நிலத்தை மீட்போம். இது நமது உரிமையும் கடமையுமாகும். எந்தவொரு அயல் நாட்டுச் சக்தியும் நம் நிலத்தின்மீது இருப்பதைப் பொறுத் துக்கொள்ள மாட்டோம். பாக்கிஸ்தானிடம் உள்ள நிலத்தை மீட்டு பாரதத்துடன் இணைப்பது ஆக்கிரமிப்பு அல்ல; பண்டைக்காலம் முதல் நமது நிலமாக இருந்ததை மீட்பது நமது உரிமையாகும்” என்று பேசினார். சங் பரிவாரங்களின் கனவான அகண்ட பாரதத்திற்கு அடி கோலியவர்களுள் தீன்தயாள் முதன்மையானவர். இவர் வழிவந்ததால், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை மீட்போம் என்று சூளுரைத்தார்.

கோல்வால்கர் வலியுறுத்திய தேசிய கலாச்சாரம் என்பதே நமது தேசத்தின் அடையாளம் என்கிற கோட்பாட்டை அடியொற்றி தீன்தயாளும், பாரதமாதா என்கிற பெயரால் இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, பஞ்சாபி முதலான மொழிகளும் அம்மொழி களின் அடிப்படையிலான இன உணர்வும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். தீன்தயாளின் கூற்றைப் படியுங்கள்: “நம்முடைய புண்ணிய பூமிதான் பாரத மாதா. ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் பாரதம் எனப் படும் இந்தியா மாநிலங்களின் கூட்டமைப்பு (Federation) என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாதா, வங்க மாதா, பஞ்சாப் மாதா, கன்னட மாதா, தமிழ் மாதா ஆகிய எல்லோரும் சேர்ந்ததுதான் பாரத மாதா என்று கூறுவது முட்டாள்தனமானது. மாநிலங்களைப் பாரதமாதாவின் உறுப்புகளாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, தனித்தனி மாதாவாகப் பார்க்கக்கூடாது. இந்தியா ஒற்றையாட்சியாக இருக்க வேண்டும். பாரத நாடு எப்படி பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறதோ, அதுபோல் ஒரே பாரத கலாச்சாரம்தான் இருக்க வேண்டும் என்று ஜனசங்கம் கருதுகிறது.”

இந்தியாவில் வாழும் இசுலாமியர்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும்; நால்வருணம் நல்லதோர் அமைப்பு; பாக்கிஸ்தான் மீது படையெடுத்துப் பாரதத்துடன் இணைக்க வேண்டும்; இந்தியாவில் உள்ள தேசிய இனங்களை-மொழிகளை-அவற்றின் தனித்த பண்பாடுகளை ஒழித்து, இந்து மதத்தின் - சமஸ்கிருதத்தின் அடிப்படையிலான ஒரே கலாச்சாரமே நிலைநாட்டப்பட வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் வலியுறுத்திய தீன்தயாள் உபாத்தியாயவின் நூற் றாண்டை இந்துத்துவ மோடி அரசு கொண்டாடுவதை இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இன மக்களும், மதச்சார்பாற்ற-சனநாயக-முற்போக்கு அமைப்புகளும் சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஆங்கிலேயரை இம்மண்ணிலிருந்து விரட்டிட வாழ்நாள் முழுவதும் தீரமுடன் போராடிய - மதச் சார்பற்ற உயர்ந்த சிந்தனையும் செயல்பாடும் கொண்டி ருந்த திப்புசுல்தானுக்கு அரசு விழா நடத்தக்கூடாது என்று கூறும் இந்துத்துவா கும்பல் வாழ்நாள் முழு வதும் இந்துப் பாசிசத்தைப் பரப்பிய தீன்தயாளுக்கு விழா நடத்துவது இந்துத்துவத்தின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்துகிறது.

(குறிப்பு : தீன்தயாள் உபாத்தியாயாவின் கூற்றுகள் ஃபிரண்ட்லைன் 2016 நவம்பர் 11 இதழில்  ஏ.ஜி. நூரனி எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. நன்றி : ஃபிரண்ட்லைன்)