பதன்கோட் தாக்குதலில்  ஈடுபட்டதாக  ஜெய்ஷ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகளுக்கோ அல்லது அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாருக்கோ அவருடைய  உதவியாளர்களுக்கோ பாகிஸ்தான் அரசின் முகமைகள் உதவியதாக இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என என்ஐஏ வின் தலைவர் சரத்குமார் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சரத்குமாரின் பேட்டியை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாக என்ஐஏ மறுத்துள்ளது. என்ஐஏ மறுத்தாலும் இதை அப்படி நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த ஜனவரி மாதம் 2-ம் தேதி பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத்தை சேர்ந்த 7 வீரர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் ஜெய்ஷ்- இ- முகம்மது தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது.  இதைத் தொடந்து கடந்த மே மாதம் டெல்லி மற்றும் உத்திரபிரதேசத்தில் இருந்து 12 பேரை தீவிரவாதிகள் என சிறப்பு காவல் துறையினர் கைது செய்தனர். இதுவரை அந்த 12 பேர் யார்யார் என எந்தத் தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. அவர்கள் ஊடகங்களுக்குக் கொடுத்த ஒரே தகவல் இந்த 12 பேரும் அமைதியாக இருந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தும் பிரிவை சேர்ந்தவர்கள் என்பதுதான்.

 இப்போது என்ஐஏ தலைவர் சரத்குமார் இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்- இ- முகம்மது ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். அப்படி என்றால் கைது செய்யப்பட்ட அந்த 12 நபர்கள் யார்? அவர்கள் அமைதியாக இருந்து பயங்கரவாத தாக்குதலை நடத்துபவர்கள் என்று சிறப்பு காவல்துறையினர் கூறினார்கள் அல்லவா? அப்படி இதுவரை அவர்கள் வேறு எங்கெங்கு பயங்கரவாத தாக்குதலை நடத்தி உள்ளனர் என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக மோடி அரசு அவ்வாறு அறிவிக்காது. அவர்களது நோக்கமே இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மீது தீவிரவாத முத்திரைகுத்தி தனிமைபடுத்த வேண்டும் என்பதுதான். அதற்காக திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்படுகின்றன.

  இந்தப் பதன்கோட் தாக்குதல் சம்பவமும் அது தொடர்பான விசாரணையும் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்திற்கு இடமாகவே நடந்துவருகின்றது. பதன்கோட் தாக்குதால் சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் மோடி பாகிஸ்தானுக்குத் தீடீர் என்று சென்று நவாப் ஷரிப்புக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்தார். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்துக்குள்ளாக தாக்குதல் நடைபெற்று இருக்கின்றது என்று சொன்னால் இந்தத் தாக்குதலை நடத்தியது யார்? என்ஐஏ தலைவர் சரத்குமார் ஜெய்ஷ்- இ- முகம்மதோ, அல்லது பாகிஸ்தான் அரசு நிறுவனமோ இந்தத் தக்குதலை நடத்தவில்லை என்று சொல்லிவிட்டார். அப்படி என்றால் இதை நடத்தியது இந்து தீவிரவாதிகளாய் ஏன் இருக்கக்கூடாது.

 ஏற்கெனவே சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவை காவி தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என அம்பலமாகி உள்ளபோது இதுவும் ஏன் அவர்களது வேலையாக இருக்கக்கூடாது. அதற்கும் சில வலுவான காரணங்கள் உள்ளன. எப்படி மாலேகான் குண்டுவெடிப்பை விசாரித்து வந்த மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப்படை தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் கொல்லப்பட்டாரோ அதேபோல இந்தப் பதன்கோட் தீவிரவாத தாக்குதலை விசாரித்துவந்த தேசிய புலனாய்வு அதிகாரி தன்சில் அகமது அவரது மனைவியுடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது மிக கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த அவரது மனைவி பர்சானா கத்தூன்  டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுப் பின்பு அவரும் இறந்துபோனார். ஒருவேளை அவர் உயிர் பிழைத்திருந்தால் தனது கணவரை சுட்டுக்கொன்ற நபர்களை அவர் அடையாளம் காட்டியிருப்பார். ஆனால் யாருடைய விருப்பத்துக்காகவோ அவரும் இறந்துபோய்விட்டார்!.

  இதை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இந்துத் தீவிரவாதிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என நாம் சொல்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் காவி தீவிரவாதிகளுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடனும் தொடர்பிருப்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட பல வழக்குகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான  தாவூத் இப்ராகிம் உடன் மகாராஷ்ரா அமைச்சர் ஏக்நாத் காட்சே பலமுறை தொலைபேசியில் பேசியது தற்போது தெரியவந்துள்ளது.ஏக்நாத்தின் எண்ணில் இருந்து கடந்த 2015 செப்டம்பர் முதல் 2016 ஏப்ரல் வரை தொடர்ச்சியாக பலமுறை தாவூத்தின் வீட்டிற்கு தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன. அங்கிருந்தும் தாவுத்தின் மனைவி மெக்ஷாபீன் ஷேக்கும் பேசியுள்ளார். இதற்காக ரூ. 683.22 பில்லும் ஏக்நாத் காட்சேவுக்கு வந்துள்ளது.

 வழக்கம் போல இந்துதீவிரவாதிகள் இதையும் மறுத்துள்ளனர். தான் பேசியதாக சொல்லப்படும் அந்த எண்ணை தான் ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தவில்லை என ஏகநாத் காட்சே கூறுகின்றார். அப்படி என்றால் அந்த எண்ணை பயன்படுத்தியது யார்? அதுதான் இதுவரை யாராலும் கண்டிபிடிக்க முடியாத புதிராக உள்ளது!.

  இப்படி பல காரணங்களை நாம் சொல்லலாம். பதன்கோட் தாக்குதலில் இந்து தீவிரவாதிகளின் கைங்கரியம் இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அப்படி என்றால் இந்திய இராணுவ வீரர்கள் இதில் சுட்டுக்கொல்லப்பட்டார்களே அதற்கும் இந்து தீவிரவாதிகள் தான் காரணமா? என நீங்கள் கேட்கலாம். தாம் மாட்டிக்கொள்வோம் என தெரிந்தால் உடன் இருப்பவரையே கழுத்தறுத்துக் கொல்லும் வஞ்சம் நிறைந்தது தான் காவிபயங்கரவாதம். இதை சோராபுதின் போலி என்கவுண்டரில் தொடர்புள்ள பலபேர் மர்மமான முறையில்  கொல்லப்பட்டதில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். மேலும் காவிபயங்கரவாதிகளுக்கு இந்திய இராணுவ வீரர்கள் மேல் பெரிய மதிப்பும் மரியாதையும் எல்லாம் எப்போதுமே இருந்தது கிடையாது. இராணுவ வீரர்களுக்கு ‘ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்’ வழங்குவதாக அறிவித்துவிட்டு பின்னர் கொடுக்காமல் அவர்களை அலையவிட்டு, கெஞ்சவிட்டு பின்னர் வேண்டா வெறுப்பாக கொடுத்ததை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கின்றோம். அவர்களை பொருத்தவரை இராணுவ வீரர்கள் என்பவர்கள் அவர்களது இந்துத்துவ செயல்திட்டத்தையும், கொடிய பொருளாதார கொள்கைகளையும் செயல்படுத்தும் போது எழும் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கான ஒரு கூலிப்படை அவ்வளவுதான்.

 பதன்கோட் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் அந்த 6 தீவிரவாதிகள் யார் என்பது நேர்மையாக விசாரணை மேற்கொண்டால் மட்டும் தான் தெரியவரும். ஆனால் மோடி பிரதமராக இருக்கும் ஒரு நாட்டில் நேர்மையாக விசாரணையை நடந்தினால் என்ன ஆகும் என்று நாம் ஏற்கெனவே ஹேமந்த் கர்கரே, தன்சில் அகமது போன்றவர்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கின்றோம். அதனால்  பதன்கோட் தாக்குதலை யாரோ பெயர் தெரியாத இஸ்லாமிய தீவிரவாத அமைப்புதான் நடத்தியது என நாம் உறுதியாக நம்புவோம். இல்லை என்றால்  காவிபயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு நாமும் பலியாகவேண்டிய சூழ்நிலை வரலாம்.

- செ.கார்கி

Pin It