பத்தாண்டுகளுக்கு முன்னர் ஈரோடு என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது மஞ்சள் மற்றும் துணி வணிகம். தந்தை பெரியார், குடியரசு, புலவர் குழந்தை, இராவண காவியம், புலவர் தெய்வசிகாமணிக் கவுண்டர், ஆண்டவனையும் அடியாரையும் மலையையும் காட்டையும் எல்லோரும் பாடியபோது மனிதனைப் பாடுகிறேன் என்று முழங்கிய வெ.நா. திருமூர்த்தி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இப்போது உடனே நம் நினைவில் வருவது மக்கள் சிந்தனைப் பேரவையும், பேரவை நடத்தும் புத்தகத் திருவிழாவும்தான்.

erode book fair 340ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னர் பகத்சிங் மன்றமாகவும், பாரதி மன்றமாகவும் இயங்கிய அமைப்புக்கள் ஆளுமையும், தனித்துவமும், பாரதி சொன்னது போல “நெஞ்சிலே துணிவு, அறிவிலே தெளிவு, அகத்திலே அன்பினோர் வெள்ளமும்” கொண்ட ஒருவரால் ஒருங்கிணைக்கப்பட்டு மக்கள் சிந்தனைப் பேரவை உருவானது. மேலோட்டமாகப் பார்த்தோமெனில் தனிப்பட்ட ஒருவரின் ஆளுமையின் கீழ்ச் செயல்படுவதாகத் தோன்றினாலும், உற்று நோக்கின் முற்றிலும் ஜனநாயகத்திற்கான செயலும் தன்மையும் இருப்பதைக் காண முடியும்.

தமிழகத்தில் எத்தனையோ இலக்கிய அமைப்புக்கள் பண்பாட்டு இயக்கங்கள் வெவ்வேறு வகைகளில் தலைமைகளில் இயங்கி வருவதை நாம் அறிவோம். ஆனால் அவை எல்லாம் ஒற்றைப் பரிமாணமுள்ள இயக்கங்களே. அதாவது ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கில் மட்டுமே செயல்படுபவை. ஆனால் மக்கள் சிந்தனைப் பேரவை பன்னோக்குப் பார்வையுடைய அமைப்பாகும். மக்கள் சிந்தனைப் பேரவையின் தொடர்ந்த செயல்பாடுகளைப் பார்ப்போம்.

எட்டையபுரத்தில் நடந்துவரும் பாரதி விழாவுக்கு இணையாகப் பாரதி விழா-பாரதி விருது வழங்கும் விழா என மக்கள் சிந்தனைப் பேரவை நடத்துகிறது. இதில் தொமுசி, சி.சுப்ரமணியம், லட்சுமண அய்யர், கா.சிவத்தம்பி எனப் பல நிலைகளில் இயங்கிய சமூகப் போராளிகள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் ஆகி யோருக்குப் பாரதி விருது வழங்கிப் பெருமிதப்படுத்தி வருகிறது.

கல்வி முற்றிலும் தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு வருகிற நேரத்தில் அரசு பள்ளிகள், அருகாமைப் பள்ளிக் கல்வியின் சிறப்புக்கள் பற்றிய தெளிவான புரிதல்களை ஏற்படுத்தி, பொதுப்புத்தியில் நிலவும் அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பற்றிய தடு மாற்றங்கள், ஊசலாட்டங்களை அகற்ற, அதிகம் தேர்ச்சி காட்டிய ஆசிரியர், பள்ளி, மாணவர் ஆகியோரை ஆண்டுதோறும் பரிசு வழங்கிப் பாராட்டி ஊக்கு விக்கிறது.

முற்போக்கான, சமுதாய வளர்ச்சிக்கான, அறிவியல் பார்வையுடன் கூடிய திரைப்படங்களையும், இம்மாதிரி யான திரைப்படங்களை வழங்கும் ஞானராஜசேகரன், பாரதி கிருஷ்ணகுமார் போன்ற இயக்குநர்களையும் பாராட்டிக் கௌரவப்படுத்துகிறது.

ஊர்கள் தோறும் வாசகர் வட்டங்கள் ஏற்படுத்தி புத்தகங்களைப் படிக்கத் தூண்டுவது, பின்னர் அவை பற்றிப் பேச ஊக்குவிப்பது, செயல்படவைப்பது என அறிவாலயங்களை ஏற்படுத்தித் “தேமதுரத் தமிழோசை தெருவெல்லாம் முழங்கச் செய்யும்” பணியைப் போற்றத் தக்கவகையில் செய்து வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது எவரைத் தேர்ந்தெடுப்பது என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வுடன் வழிகாட்டியது. இப்படியாக மக்கள் சிந்தனைப் பேரவையின் பணி நிலவுகிற சமூக அமைப்பில் நமக்குத் தற்போதுள்ள அரசமைப்பு வழங்கி யுள்ள உரிமைகள், உதவிகள், சலுகைகள், ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளவும், பயன்படுத்திக் கொள்ளவும், செயலாற்றவும், வழிகாட்டும் ஜனநாயக அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வாறான தொடர்ச்சியான செயல்பாட்டின் பரிணாமத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் பரிமாணத்தில் உருவானதுதான் ஈரோடு புத்தகத் திருவிழா.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் புத்தகங்கள் வாங்குவதே சிரமம். அறுபதுகளின் இறுதியில் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற அப்போதைய இளைஞர்களின் கனவுப் படைப்பான ‘குறிஞ்சிமலரை’ தேடி அலைந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. சென்ற நூற்றாண்டின் எழுபதுகளில் இயங்கிய பதிப்பகங்களைப் பாரி நிலையம், ஸ்டார் பிரசுரம், தமிழ்ப்புத்தகாலயம், NCBH என விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில் இருண்ட வானில் ஒளிக்கீற்றாய்த் தோன்றியது தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் வெளியீடான புத்தக நண்பன். புத்தக நண்பன் இதழ் மூலம்தான் பதிப்பகம், படைப்பாளி, வாசகன் இவர்கள் இடையே இடைவெளி குறைகிறது.

பின்னர் வாசகர் வட்டம், அன்னம், அகரம், சென்னை புக்ஸ், மக்கள் வெளியீடு, தற்போது பாரதி புத்தகாலயம், விடியல், அலைகள், எதிர், காலச்சுவடு, உயிர்மை இப்படி எண்ணற்ற பதிப்பகங்கள். இப்படியாகப் புதிய புத்தகம் பேசுது, உங்கள் நூலகம் எனப் பதிப்பாளர்கள், படைப்புக்கள், படைப்பாளிகளைப் பற்றிப் பேசும் பத்திரிகைகள். இந்தச் சூழல் புத்தகங்களைப் பெறுவதற்கான சந்தைகளின் அவசியத்தையும் தேவையையும் ஏற்படுத்துகிறது.

எனவே எல்லா நகரங்களிலும் புத்தகச் சந்தைகள் நடைபெறுகின்றன. எல்லா வாசகங்களின் விருப்பங் களையும் ஒரே கூரையின் கீழ் ஒரே வளாகத்தில் பெற வைப்பது மகிழ்ச்சியான விசயம். ஈரோடு புத்தகச் சந்தையை, இல்லை இல்லை ஈரோடு புத்தகத் திருவிழாவை இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

புத்தகச் சந்தைகளில் சென்னைப் புத்தகச் சந்தைக்கு அடுத்தபடியாகப் பதிப்பாளர்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகிய எல்லோரும் சொல்வது ஈரோடு புத்தகத் திருவிழாவைத்தான். ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிறப்புக்களை நாம் இங்குத் தொகுத்துக் கொள்ளலாம்.

1) இது புத்தகச்சந்தை இல்லை, புத்தகத் திருவிழா. எனவே நுழைவுக் கட்டணம் இல்லை.

2) புத்தகங்களை வாங்க வங்கிக்கடன் கூட மக்கள் சிந்தனைப் பேரவை பெற்றுத் தருகிறது. இது மகிழ்ச்சிக்குரிய விசயம்.


3) இங்குத் தேவாரமும் வாங்கலாம், திருமந்திரமும் வாங்கலாம். பேய்க்கதைகளும் உண்டு, பெரிய புராணமும் உண்டு. ‘ராசலீலையும்’ கிடைக்கும் ‘த’வும் கிடைக்கும். NANOவா POMA வா எல்லாம் கிடைக்கும். எதுகை மோனை அகராதிகள் இணைப் பொருள் சொற்களஞ்சியங்கள் கூடக் கிடைக்கலாம். எல்லாம் ஒரே கூரையின் கீழ் ஒரே வளாகத்தில், NBT, சாகித்ய அகாதெமி பப்ளிகேசன் டிவிசன், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என அரசு வெளியீட்டு நிறுவனங்கள் அனைத்தின் அரங்குகளும் உண்டு.

4) சாதாரணமாக ஒரு திருமண மண்டபத்தில் 75 அரங்குகளில் 2005-இல் தொடங்கிய ஈரோடு புத்தகத் திருவிழா 10-ஆம் ஆண்டில் 230 அரங்குகள் கொண்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டில் ஹெர்பர்ட் காலின்ஸ், ரூபா என ஆங்கிலப் பதிப்பகங்களும் உண்டு. வருங் காலங்களில் SAGE, P.P.H., Left மற்றும் AAKAR போன்ற பதிப்பகங்களையும் எதிர்பார்க்கலாம்.

5) நூல் விற்பனையாளர்களுக்கு அரங்குகளை ஒதுக்குவதில் மக்கள் சிந்தனைப் பேரவைக்குக் கறாரான பார்வை இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் கண்டு பிடிக்கலாம். பத்தாண்டுகளில் பக்தி, ஆன்மிக நூல்கள் விற்பனை செய்வோர்க்குத் தடையேதும் இருந்ததில்லை. அதே சமயத்தில் குழுமச் (கார்ப்பரேட்) சாமியார்களின் பதிப்பகங்களுக்கும் வெளியீடுகளுக்கும் அரங்கு ஒதுக்காதது குறிப்பிடத்தக்கது.

6) Choose and Read, பாலாஜி புக் ஹவுஸ், லியோ புக் ஹவுஸ் எனப் பழைய புத்தகங்கள் விற்பனை செய்யும் அரங்குகளும் உண்டு. இங்கு எங்குத் தேடினாலும் கிடைக்காத புதையல்கள் கூடச் சில சமயங்களில் கிடைக்கும்.

7) வருங்காலங்களில் இந்தியா முழுதும் உள்ள ஆங்கிலப் பதிப்பகங்கள் அனைத்தையும் வரவழைத்து ஆங்கிலப் புத்தகங்களுக்கென்று தனி வரிசையை ஏற்படுத்தலாம்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக, தமிழகக் கலை, இலக்கிய, அரசியல், பண்பாட்டுச் சூழல்களோடு உடன்பட்டும் முரண்பட்டும் இருக்கிற ஒரு தீவிர வாசகன் என்ற முறையில் ஈரோடு புத்தகத்திருவிழா பற்றிய எனது அனுபவங்களை உங்கள் நூலகம் வழியாகப் பகிர்ந்து கொள்கிறேன்.

Pin It