odiyanஆதிவாசி மக்களின் மொழி, வாழ்க்கை, உழைப்பு, இழப்பு, சோகங்கள், அவலங்கள், ஏமாற்றம் இப்படிப்பட்ட பல்வேறு பரிணாமங் களைக் கொண்டது லட்சுமணனின் ‘ஒடியன்’ என்ற கவிதை நூல். ஒரு மொழி பேசும் மக்களின் தொன் மங்கள், குறியீடுகள், சிந்தனைச் சிதறல்களை யெல்லாம் அவரவர் மொழியிலேயே சொன்னால் தான் அவற்றுள் ஊறிக்கிடக்கும் அன்பு, கோபம், வெறுப்பு, நேசம் ஆகியவை வெளிப்படும். இங்கு மொழியின் பொருள் தெரியாவிட்டாலும் வெளிப் படுத்துபவரின் அங்க அசைவுகள், முகபாவம், கண்களின் பார்வை இவற்றால் அவரது உளம் காட்டும் உணர்வை நாம் காணமுடியும். இந்த ஊமை உணர்வுகள் ஆக்ரோஷமாக வெளிப்படும் போது மொழிகூட ஒரு தடையாகவும் கூடும்?

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் 1. 5 லட்சம் பேரும், கூடலூரில் 1 லட்சம் பேரும், குன்னூரில் 1 லட்சம் பேரும், ஆக 3 லட்சம் படுகர் இனத்தவர் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

1817-இல் அன்றைய ஆட்சியாளர்கள் தோடர், கோட்டா, குரும்பர், படுகர் என்ற நான்கு வகை யினரை பழங்குடி மக்களாகக் கருதியதாகவும் ஆனால் பழங்குடி மக்களுக்கான சலுகை அவர் களுக்கு மறுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

முன்னுரையில் ச.பாலமுருகன் சொல்வது போல் சோழ மன்னன் சேர நாட்டின் மீது படை யெடுக்க ஒரு தளம் சோழ மன்னனுக்குத் தேவைப் பட்டதென்றும் இருளர் தலைவன் கோவன் ஆட்சி செய்த கோவன்பதி என்ற கோவை மீது தாக்கி வன்முறை மூலம் கோவன்மூப்பன் அழிக்கப்பட்ட தாகவும் வரலாறு பேசுகிறது.

“குடிகள் வனங்களுக்குள் பதுங்கினர்; பழங்குடி தெய்வம் மட்டுமே நின்றது. வனதேவதை சோழனிடம் நியாயம் கேட்டாள்!” என்பதும் ‘தோல்வியுற்றவர்கள் வரலாறுகள் எழுதப்படுவதில்லை’ என்பதும் பாலமுருகன் கூறும் கசப்பான உண்மைகள்.

ஒரு குழந்தையின் மொழி தாய்க்கு மட்டுமே புரியும். அதுபோல இருளர் மொழியிலேயே லட்சுமணன் எழுதியிருப்பது; அவரே சொல்வது போல கொஞ்சம் சிரத்தை மேற்கொண்டால், அவர் தந்துள்ள குலக் குறிப்புகளைக் கொண்டே நாமும் புரிந்துகொள்ளலாம். அதன் மூலம் பழங் குடிகளின் சிந்தனைப் போக்கையும் உணர்வு களையும் நன்றாகவே புரிந்து கொள்ளலாம். அம் முறையில் லட்சுமணன் வெற்றி பெற்றிருக்கிறார், நமக்கும் விளங்குமாறு சிறப்பாக -விளக்கமாக அடிக்குறிப்புகள் தந்திருக்கிறார்.

சமவெளியிலிருந்து மலைக்கு வந்தவர்கள். குலதெய்வத்தைப் புறக்கணித்துவிட்டு காரமடை ரங்கநாதரைப் பள்ளி கொள்ள வைக்கின்றார்கள். இயற்கை வேளாண்மை பாழ்படுகிறது; மலை துளைக்கப்படுகிறது. ஐந்து இட்டிலியைக் கொடுத்து விட்டு மலைவாசியிடம் ஆறு ஏகர் நிலத்தை அபகரிக்கின்றார்கள். இழந்துவிட்ட நிலத்தில் இருளன் மண் சுமக்கிறான். ‘மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே!’ எனப் புலம்புகிறான் மலைவாசி.

பிரித்தாளும் சூழ்ச்சியால் சமூகக் கட்டுப்பாடு உடைபடுகிறது; பாடம் நடத்தாத வாத்தியாரை வெளியூர்க்குத் தூக்கியடிக்க அதிகாரியின் ஜீப்பில் பலாப்பழங்கள் அன்பளிப்பாகத் தரப்படுகிறது. பலாப்பழ வாசனையை முகர்ந்த யானை ஒரு வேளை அதிகாரியின் வாகனத்தை மறிக்கலாம்.

ஓட்டுப்போட்டு ஏமாறுகிறார்கள்.. கொங்கு மரப் பட்டையைப் போட்டு மீன் குஞ்சுகள் மரணிக்காமல் மீன் பிடிக்கும் முறையை மாற்றி ஒட்டுமொத்தமாக மீன்வளத்தையே அழிக்கும் வந்தேறிகளால் அந்த மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. ஜப்பானின் ஆசியன் டெவலப்மென்ட் வங்கியின் உதவியால் பயிரிட்ட ஏழாயிரம் நாற்றுகளில் எல்லாமே பாழ் பட்டுப் போக, இயற்கையாய் உதிர்ந்த விதைகளால் முளைத்த பத்தாயிரம் கன்றுகள் பசுமையாய் வளம் தருகின்றன.

சகுனங்கள், பழக்கவழக்கங்கள், இருளர் சமூகத்தை, தலித் மக்களை, முஸ்லிம்களை இந்து மதவாதிகள் அழிக்க நினைப்பது. கவுண்டிச்சி, இருளர் பெண்கள் மீது தங்கள் பழக்கவழக்கங் களைத் திணிப்பது. அணைக்கட்டு மூலம் மின்சாரம் பெற்றுச் சமவெளியில் வாழும் ஆதிக்க சாதியினரால் பழங்குடி மக்கள் வீடுகள் இருளில் கிடப்பது. பல்வேறு சட்டங்களால் இயற்கை வளங்கள் பாழ்படுத்தப்படுவது போன்ற பலவற்றை வேதனை யோடு அவர்கள் மொழியில் தமது விளக்கங் களோடு தருகிறார் லட்சுமணன்.

சுமார் 90 பக்கங்களில் இவர் கோடிட்டுக் காட்டும் ஏராளமான செய்திகளை விவரித்துப் பல நூறு பக்கங்கள் எழுதலாம். சுருக்கமாகச் சொல் வதென்றால் உலகமயமாக்கல் என்ற பெயரிலும் நலத்திட்டங்கள் என்ற பெயரிலும் இயற்கை யோடிணைந்த வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களை எப்படி அரசும் உயர்குடிமக்களும் வாட்டி வதைக் கின்றனர் என்ற விரிவான செய்தியை ‘ஒடியன்’ கூறுகிறது. மிகவும் தெளிவாகவே விளக்குகிறது!

தமிழுக்கு இது மிகவும் புதிய முயற்சி; இதை லட்சுமணன் துவக்கி வைத்துள்ளார். இதுபோன்ற நூல்கள் இன்னும் விரிவான விளக்கங்களுடன் தமிழில் வர வேண்டும்.

நண்பர் லட்சுமணனுக்கு என் பாராட்டுக்கள்.

ஒடியன்

ஆசிரியர்: லட்சுமணன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ. 75.00

Pin It