1) சங்க இலக்கியம் வரவர சாமான்ய மனிதருக்கு அருகிய வழக்காக மாறி வருகிறது. இன்னும் இருபது முப்பது ஆண்டுகள் கடந்தால் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. சங்ககால மொழி நாம் தற்போது பேசும் மொழியின் அனுபவ வட்டத்திற்கு வெளியே இருப்பதால் அதனைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. சொற்கள், இலக்கணக் கூறுகள்,தொடர்கள் யாவும் வேறுபட்டவை. சொற்களின் அமைப்பை ஆராய்வது உருபனியல் (Morphology) எனப்படும். தொடர்களின் அமைப்பை ஆய்வது தொடரியல் (Syntax) என்பர். சொற்களுக்கு மேலே தொடர்களுக்குக் கீழே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் சேர்ந்து கூட்டுச் சொற்களாக விளங்குகின்றன. தனிச் சொற்களின் பண்புகளையும் தொடர்களின் பண்புகளையும் கூட்டுச்சொற்கள் கொண்டு இருக்கும். (The boundry between word and phrase is not discrete) தொகுத்து வரும் சொற்களைத் தொகைச் சொற்கள் என்றும் கூறுவர் இலக்கணக்காரர். நாம் கூட்டுச் சொல் என்பதை இக்கட்டுரையில் கையாள்வோம்.

2) இழிதரும்: வாக்கியத்தில் தனிச்சொல் செயல் படுவதைப் போலவே கூட்டுச் சொல்லும் செயல்படும். ஒரு சொல் நீர்மைத்தாய் அவை செயல் படும்.கூட்டுச் சொல்லைப் புரிந்து கொண்டால்தான் வாக்கியத்தின் பொருளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.ஓர் எடுத்துக்காட்டு : "கலை தொட இழுக்கிய பூநாறு பலவுக் கனி/ வரை இழிஅருவி உண்துறைத் தரும்"(குறுந்தொகை:31) மலையிலிருந்து வீழ்கின்ற(இழி) அருவி நீர் பலாக்கனியை ஊர்மக்கள் உண்ணுமாறு தரும். மேற்கண்ட பாடலில் 'இழி' என்ற வினைச்சொல் இழிதல்- வீழ்தல் என்ற பொருளில் தனிச்சொல்லாக வந்துள்ளது. தரும்' என்ற வினையும் தனி வினையாக (Simple Verb) கடைசியில் வந்துள்ளது.அடுத்து வரும் பாடல் வரிகளைக் கவனிக்கவும்.

"மால்வரை இழிதரும் தூவெள் அருவி/கல்முகைத் ததும்பும் பல் மலர் சாரல்" (குறுந்தொகை-32) இப் பாடல் வரியில் 'இழிதரும்' என்ற சொல் வீழ்தல் என்ற பொருள் கொண்டுதான் வருகிறது. ஆனால் இதில் இரு சொற்கள் உள்ளன. (இழி+தரு) எனவே இதனைக் கூட்டுச் சொல் (Compound word / Verb) என்கிறோம். இதுபோன்ற பல வினைச்சொற்கள் பழந்தமிழில் பயின்று வருகின்றன.திருமுருகாற்றுப்படை இறுதி வரியில் "இழுமென இழிதரும் அருவி பழமுதிர்ச் சோலை மலைகிழவோனே" இழிதரும் இங்கும் வந்துள்ளது.

இழும் எனும் ஓசையுடன் வீழ்கின்ற அருவிக்குச் சொந்தமான பழமுதிர்ச் சோலைக்கு உரியவனே என்பது பொருள். இழிதருதல் வீழ்தல் என்று பொருள். இழிதரு - இதில் இரு சொற்கள் இருப்பதால் இதுவும் கூட்டுச் சொல் ஆகும். குறுந்தொகையில் "பெருவரை மிசையது நெடு வெள்ளருவி /முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி/சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப"(78) என வரும் பாடலிலும் "இழிதரும்" வந்துள்ளது.'பெரிய மலையின் உச்சியில் உள்ளதாகிய அருவியானது கூத்தரது முழவைப் போல ஒலித்து விழுகின்ற நாட்டுக்குத் தலைவனே'.இங்கும் இழிதரும் என்ற சொல் விழுகின்ற என்ற பொருளைக் கொண்டுள்ளது.

3) திரிதரு: இன்னொரு எடுத்துக் காட்டு காண்போம். இதுவும் திருமுருகாற்றுப்படையில் வருகிறது. "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு"- உலகத்தில் உள்ள உயிர்கள் மகிழ்ச்சி அடையும்படி மேருவை வலப்பக்கமாகச் எழுந்து சுற்றுகின்ற சூரியன் கடலிடத்தே காணப்பட்டாற் போல' இதன்படி திரிதரு என்ற கூட்டுவினைக்குத் திரிகின்ற அல்லது சுற்றுகிற என்பதுதான் பொருள்.பொருநராற்றுப்படையில் திரிதரு என்ற கூட்டுவினை இருமுறை அடுத்தடுத்து வருகின்றன.

"வெந்தெறல் கனலியொடு

மதிவலம் திரிதரும். கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்"-

'ஞாயிறும் திங்களும் வலம் வருதலை யுடைய கடல் சூழ்ந்த இவ்வுலகு'

...'அழுகை ஒலியையுடைய சுற்றத்தோடே ஓடித் திரியும் பாணர்'

(பொரு. 7,11). இங்கு 'திரிதரு' கூட்டுச் சொல்லாகச் செயல்படுகிறது.

4) எழுதரு: தற்போது 'எழுதரு' என்ற இன்னொரு வினைச்சொல்லைப் பார்ப்போம். "மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து/அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்" இதன் பொருள் : மேகங்கள் சேர்ந்து எழுந்த மழையை உடைய மலையினிடத்திலே அருவிக்கு அருகிலுள்ள தண்ணிய நறிய காந்தள்,' என்பதாகும்.எழுதரு என்பதற்கு எழுந்த என்று பொருள்.(குறுந்- 159).எழுதரும் மற்றோர் உதாரணம் : "கழை விரிந்து எழுதரும் மழைதவழ் நெடுங்கோட்டு" (பதி-73-14)' மூங்கில்கள் பரந்து உயர்ந்து வளர்தற்கு இடமாயிருப்பதும் மேகங்கள் படிவதுமான நெடிய உச்சிகளையுடைய' இங்கு எழுதரும் என்பதற்கு வளரும் என்று பொருள்.

5) பாய்: பாய்தரு "கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி யாம்பல் நாடுகிழ வோனே

"(ஐங்-40-4). கெண்டை மீன்கள் பாய்வதால் மலர்ந்த வண்டு விரும்பும் ஆம்பல் மிக்க நாட்டுக்கு உரியவனே' பாய்தர என்பது பாய்வதனால் என்று பொருள் கொள்ளப்படுகிறது. 'பாய்தர என்புழித் தருதலைத் துணைவினை என்ப' என்று துரைசாமி பிள்ளையவர்கள் குறிப்பிடுகிறார்.பாய் என்பது முதன்மை வினை என்று சொல்லாமலே பெறப்படுகிறது.

6) புகு: புகுதரு கன்றை அழைக்கும் குரலினவாய் மன்று நிறையும்படி பசுக்கள் புகுகின்ற மாலைக் காலத்தும் எம்மை நினைந்து நம் தலைவர் வாராராயின் எனது தன்மை என்னவாகும் "கன்றுபயிர் குரல மன்றுநிரை புகுதரு/மாலையும் உள்ளா ராயின் காலை/ யாங்காதுவங் கொல் பாண! " (அகம்-14;பக் ,104,105) "மாநிதிக் கிழவனும் போன்மென் மகனொடு/ தானே புகுதந்தோனே "(அகம்-66) 'பெரும் செல்வந்தன் என்று கூறத் தகுந்த மகனோடு மனைவாயிற் புகுந்தான்' "தெருவில்/புனிற்றாப் பாய்தெனக் கலங்கி யாழிட்/டெம்மனைப் புகுதந்தோனே அதுகண்டு"(அகம்-56). 'தெருவிடத்தே ஈன்றணிமையுடைய பசு பாய்ந்தாற் போல கலங்கி யாழை ஒலித்து என் மனையிடத்தே புகுந்தான்.' புகுதலும் புகுதருதலும் ஒத்த பொருளைத் தருவன.

7) படர்: படர்தரு "தாஅவல் அஞ்சிறை நொப்பறை வாவல்/ பழுமரம் படரும் பையுள் மாலை"(குறுந்தொகை -359) துன்பம் தரும் மாலை படர்ந்து வந்துவிட்டது; வாவல் மரத்திற்குத் திரும்பி விட்டன. இங்குப் 'படரும்' தனி வினையாகும்.இதற்கு இணையாகப் படர்தரும் என்ற கூட்டுவினையும் கிடைக்கிறது. திரைபயில் அழுவம் வழங்கி உரனழிந்து/நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்" (அகம்-210-5,6). இதன் பொருள்:

(மீன்கள் )திரை வீசுகின்ற கடலைக் கலக்கி வலிகெட்டு கட்டுமரங்களின் பக்கத்தே கிடக்கும்.இவ்வகையான துறையை உடையவனே! இங்கு படரும் என்பதும் படர்தரும் என்பதும் ஒரே பொருள்தான்.மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:

உகுதரும் (குறு.251)

புலம்புதரு (குறு.79)

உடைதரும் (குறு.361)

ஊர்தரும். (குறு.205)

எறிதரும் (குறு.110)

ஏர்தரும் (நற். 30)

நெறி தர( குறு.66)

நிகழ்தரும் (பதிற்று.48) திகழ்தரும் (பதிற்று.52) உறைதரு (ஐங்.105)

விரிவஞ்சி எடுத்துக்காட்டுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

8) மேற்கண்ட கூட்டு வினைகளுக்கு அதே பொருள் கொண்ட எளிய வினைகள் இருப்பதைக் காண்கிறோம்.இதுமொழிக்கு ஆடம்பரம் தானே!. ஆடம்பரமாக இல்லாவிட்டால் வேறேதாவது பணி இருக்க வேண்டும். நடை­யியல் பணியாக இருக்கலாம். (Expressive function) புது மொழி வளர்ச்சிக்குத் தொடக்கமாக இருக்கலாம். சங்ககால மொழியில் நிகழ் காலமும் எதிர்காலமும் இல்லை. இறப்பு, இறப்பல்லா காலம் (past and non-past) தான் உண்டு. இடைக்காலத்தில் நிகழ், எதிர்காலங்கள் தோன்றி விடுகின்றன. இவற்றின் தோற்றம் எப்படி ஏற்பட்டது?தற்போதைக்கு இவற்றை நடையியல் (expressive) கூட்டுவினைகள் என்று எடுத்துக் கொள்வோம்

9) தற்காலத்தில் வழங்கும் வேறு சில கூட்டு வினைகளையும் காண்போம்:

கற்றுக் கொள் : 'learn'

தட்டிக் கொடு : 'encourage'

கண்டுபிடி : 'discover, invent'

இத்தகைய கூட்டு வினைகளிலும் இரண்டு வினைச்சொற்கள் சேர்ந்து கூட்டாகப் பொருள் உணர்த்துவதைக் காணலாம். பொருளுக்கு இரு சொல்லுமே அவசியம்.' கற்றுக் கொடு' இதில் எந்தச் சொல்லை நீக்கினாலும் teach என்ற பொருள் வராது. இங்கே இரு உறுப்புகளும் "Constituents" புதுப் பொருளுக்கு அத்தியாவசியம் ஆகின்றன. இவை போன்ற கூட்டுச் சொற்கள் நூற்றுக் கணக்கில் உருவாக்கிப் இன்று பயன்படுத்தப்படுகின்றன. இவை புதுப் பொருள் கொண்டு படைக்கப்படுகின்றன. கூட்டு வினை குறைந்தது இரு சொற்களுக்கு மேல் உள்ளவை. Lexeme 1 + Lexeme 2 = Compound Verb

தட்டிக்கொடு 'to encourage' போன்ற கூட்டு வினைகளில் இரு சொற்களுமே மொத்த பொருண்மைக்குக் காரணமாகின்றன. (To the sum total of meaning).

10)ஆனால் பழந்தமிழில் முதலில் வரும் வினை முக்கிய வினையாக வருகின்றன. வினைப்பொருண்மையைத் தாங்கி வருவது அவையே. இரண்டாவது வரும் வினை துணை வினை என்று ஔவை துரைசாமி பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.துணை வினை என்ற கலைச்சொல் சில பொருள்களில் பயன் படுத்தப்படுகின்றன.எனவே இவ்வினையை (Vector verb) இலக்கணக் கூறுகளைத் தாங்கிச் செல்லும் (carriers) வினைகள் எனலாம்.

பழையவடிவம் - புதியது புகுதர- புகுந்ததினால்

புகு தரும்        - புகும்/ புகுகின்ற

புகுத       - புக

புகு தரின்        - புகுந்தால்

புகு தராக்கால்    - புகாவிட்டால்

புகு தர்வாய்      - புகுவாய்

புகு தந்த         - புகுந்த

புகு தந்தோன்     - புகுந்தோன்

புகு தந்தார் - புகுந்தார்

புகு தந்தான்      - புகுந்தான்

கூட்டு வினைகள் பழையனவா எளிய வினைகள் பழையனவா என்ற வினாவிற்கு என்ன பதில் சொல்வது?போதரும்' என்ற வடிவம் (கலி.105,அகம்,52) பழந்தமிழில் வருகின்றது. 'போதரின்' என்ற வடிவம் (கலித்.145) கலித்தொகையில் வந்துள்ளது. பரிபாடலில் (10-5) 'போந்தது' என்று சுருங்கி வந்துள்ளது. ஆண்டாள் பாசுரத்தில்" போய பிழையும் புகு தருவான் நின்றனவும்" என்றும் 'ஒல்லை நீ போதாய்" என்றும் 'போதராய்' என்றும் வருகிறது. "போந்தார் போந்து எண்ணிக் கொள்"என்று வரும் வரியிலும் 'போ தந்தார்' என்பது 'போந்தார்' என்று சுருங்கி விட்டது. நெல்லைத் தமிழில் (தகரம்)

வரு-த்-ஆன் சொல்லு-த்-ஆன் ஓடுத்-ஆன்

நிகழ்காலத்தைக் குறிக்கும் பழைய வடிவங்களின் எச்சமோ? தற்காலத்தில் -த்- இறந்த காலமாக வழங்குகிறது. இன்னொன்று பழந்தமிழ் கூட்டு வினைகள் செயல் வினைகளாக (Action Verbs) இருக்கக் காணலாம் காண்க: சொரிதரு இழிதரு, பாய்தரு, எழுதரு, போதரு, ஊர்தரும், ஏர்தரு போன்றவை செயல் வினைகளாகும். புலம்புதரு- அனுபவ (experiencer) வினை போல உள்ளது. சங்க காலத்துக்கு முன்பு கூட்டு வினைகளாக இருந்து பின்னர் துணை வினைகள் இடை நிலைகளாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.

இத்தகைய வினைச்சொற்களை இடைக்காலம் வரை செய்யுட்களில் காண முடிகின்றது."செற்றிலேன் இன்னும் திரிதருகின்றேன்" (திருவா- செத்திலாப்பத்து) தற்காலத்தில் இவை வழக்கொழிந்து விட்டன.

துணை நூல்கள்:

1)           சங்க இலக்கியக் கருவூலம், (தொகுதி-15) தமிழ்மண் அறக்கட்டளை, பதிப்பாளர் இளவழகன் (2005).சென்னை-17.

2)           மாதையன்,பெ. சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

3)            திருவாசகம், கா.சு.பிள்ளை உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி..

- ஆ.கார்த்திகேயன், ஓய்வுபெற்ற பேராசிரியர்.

Pin It