‘செம்மலர்’ இதழில் (ஆகத்து - 2010 - பக்கம் - 1) இளமதி சென்னைக்காரர் கேட்ட கேள்விக்கு விடை எழுதியுள்ளார். கேள்வி கேட்டவர், “தமிங்கிலம்” எனும் திமிங்கிலம் தமிழை விழுங்கி வருவதாகத் ‘தினமணி’யில் (8.7.10) எழுதியிருப்பதைப் பார்த்தீர்களா? என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளிக்கும்போது த.மு.எ.க.ச. வினரின் ‘பழகுதமிழ் இயக்கம்’ பற்றி முதலில் கூறுகின்றார். அடுத்து “நாம் கூறுவது வறட்டுத்தனமான தனித்தமிழ் அல்ல” என்றும், “ஒவ்வொரு சொல்லுக்கும் தூய இலக்கணச் சுத்தமான பழந்தமிழ்ச் சொல்லைத் தேடிக் கொண்டிருப்பதல்ல” என்றும் ஒதுக்க வேண்டியதை வரையறை செய்துள்ளார். இனிமேல் ‘பழகுதமிழ் இயக்கம்’ மூலம் ஆங்கிலக் கலப்பற்ற பழகுதமிழைப் பயன்படுத்திப் பேசப் போகின்றோம் என்கிறார். பொதுவுடைமை இயக்கத்தினரின் தமிழியல் பணிகளை மேடைப் பேச்சுக் களிலும், இதழ்களில் எழுதும் எழுத்துகளிலும் கண்டிருக் கிறோம். நடப்பியல் என்னும் பெயரில் அவர்கள் தமிழுக்குச் செய்துவரும் கேடுகளையும் கண்டு வருகின்றோம்.

 

தனித்தமிழியக்கம் தோன்றியதன் வரலாற்றுப் பின்னணியை அறியாமல், தெரியாமல் ‘வறட்டுத்தனம்’ என்று அடைமொழியிட்டுள்ளார். சுவாமி வேதாசலம் என்னும் பெயரை ‘மறைமலையடிகள்’ என்று மாற்றி வரலாற்றில் இடம்பெற்றதை, ‘ஞான சாகரம்’ என்னும் இதழ்ப் பெயரை ‘அறிவுக்கடல்’ என மாற்றி நடத்தியதை வறட்டுத்தனம் என்கிறாரா? தேவநேசக் கவிவாணன் என்னும் பெயரைத் ‘தேவநேயப் பாவாணர்’ என மாற்றித் தமிழை மீட்டெடுத்ததை வறட்டுத்தனம் என்கிறாரா? நாராயணசாமி, இராமையா, சோமசுந்தரம் எனப் பெற்றோர் இட்ட பெயர்களைத் தூக்கி எறிந்துவிட்டு நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் எனப் பெயர் தாங்கி அமைச்சர்களாய் வளர்ந்துவந்ததை வறட்டுத்தனம் என்கிறாரா? துறைதோறும் தூயதமிழ்ச் சொற்கள் பல்லாயிரம் படைத்தளித்த தனித்தமிழ் அறிஞர்களை எள்ளி நகையாட எண்ணி வறட்டுத்தனம் என்கிறாரா? இன்றைக்குச் சொல்லாளர்கள் தேவையில்லை. உண்மை யான செயலாளர்கள்தான் தேவை. பழகுதமிழில் பேசியும் எழுதியும் சான்றாக வாழுவோரை நாங்களும் பாராட்டு வோம்; வாழ்த்துவோம்.

 

இன்றும் தமிழில் சமற்கிருதம், உருது, பாரசீகம், அரபி, இந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் கலந்துள்ளதைப் பார்க்கின்றோம். மேற்கண்ட மொழிச் சொற்களுக்கேற்ற பொருள் பொதிந்த தனித்தமிழ்ச் சொற்களை உருவாக்கி வழங்கியிருக்கின்றோம். இன்று பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களிலும், அகர முதலிகளிலும் மீட்டெடுக்கப்பட்ட தமிழ்ச் சொற்களைப் பார்க்கின்றோம்.

ஆட்சிச் சொற்காவலர் கீ.இராமலிங்கனார், “உண்மைத் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் உண்மை நிலையை உணர்ந்து, இத் தனித்தமிழ்ப் பற்றினைக் கொண்டவர்களாய்த் தமிழை உலகம் போற்றச் செய்யவேண்டும்” என்கிறார்.

 

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் “தமிழகத்தின் மறுமலர்ச்சி இயக்கத்தில் தனித்தமிழியக்கம் ஓர் உட்கூறு, ஓர் உயிர்க்கூறு. தனித்தமிழியக்கம் தமிழை வளர்க்கும் இயக்கம் மட்டுமன்று, தமிழ் கடந்து தமிழினத்தையும் உலகையும் வளர்க்கும் இயக்கமும் ஆகும்” என்று கணித்துள்ளார். ஆம் மேற்கண்ட அறிஞர்கள் தனித்தமிழின் தேவையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இளமதியோ வறட்டுத்தனமான தனித்தமிழ் தேவை இல்லை என்று அறிவுரை கூறுகிறார்.

 

தனித்தமிழியக்கத்தார் தன்மானத்தோடு ‘சோறு’ வேண்டுமென்கிறோம். நீங்கள் பழகுதமிழ் என்னும் பெயரில் பெரும்பான்மையினர் ‘சாதம்’ என்றும் ‘ரைஸ்’ என்றும் சொல்லுவதால் த.மு.எ.க.ச.வினர் இந்த இரண்டு சொற்களை ஏற்று வாழ்வியல் சொல்லாக்கப் போகின்றீர்களா? ‘வாசம்’ என்னும் சொல்லுக்குத் தனித்தமிழ்ச் சொல்லான ‘மணம்’ இருப்பதைத் தனித்தமிழறிஞர்கள் பழந்தமிழ்ச் சொல்லாக வழங்கினால் நீங்கள் ஏற்றுப் பயன்படுத்தமாட்டீர்களா? வட்டார வழக்குச் சொல் என்று எண்ணிக்கொண்டு நமஸ்காரம், ரசம், கும்பாபிசேகம், அலமாரி, கக்கூசு எல்லாம் காலங்காலமாய் இருக்கவேண்டும் என எண்ணுகிறீர்களா? வணக்கம், சாறு, குடமுழுக்கு, நிலைப்பேழை, கழிப்பிடம் போன்று மாற்றுச் சொற்களைத் தனித்தமிழியக்கம் வழங்கியதை வரவேற்கமாட்டீர்களா?

 

சோற்றில் கல் என்றாலும், பயிரில் களை என்றாலும் நீக்குகின்ற அறிவுடையவர்கள் மாந்தர்கள். மொழியில் கலப்பு என்றால் நீக்குபவர்கள்தான் உண்மையான மொழி மானமிக்கவர்கள். இன்று ‘தமிங்கலம்’ வாழ்வியலில் நடைபோடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? நோய் முதல் நாடிப் பார்க்கவேண்டும். தமிழினம் கலப்பினமான தால் தமிழ்மொழி கலப்பு மொழியாகியுள்ளது. ஆங்கிலேயரை வெளியேற்றினாலும் ஆங்கிலத்தை வெளி யேற்றாததற்கு யார் யார் பொறுப்பாளிகள்? ஆங்கில விரும்பிகள் அம்மொழி தமிழ்மொழியை வளரச் செய்யாமல், வாழச் செய்யாமல் தடுப்பணைகளாக மழலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அரசின் அரவணைப் புடன் ஆங்கிலவழிக் கல்வியை முன்நிறுத்தித் தமிழை முடக்கியுள்ளனரே! தனித்தமிழை ஆட்சியில் புகுத்தித் தமிழீழத்தில் தம்பி பிரபாகரன் (எல்லாளன்) வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் என்ற வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டாமா?

 

ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கல்வி வணிகம் செய்பவர்களும், வெளிநாட்டுப் பணக் (டாலர்) கனவில் கல்வியைத் தேடும் பெற்றோர்களும், அறியாமையால் பிறமொழி எது, தமிழ் மொழி எது எனத் தெரியாது வாழும் தமிழ்க் குடிமக்களும் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழழிப்பில் நோயுயிரிகள் போல உள்ளனர். தமிழில் கலைச் சொற்களைத் தனித்தமிழியக்கத்தார் வாரி வழங்கி வருகின்றனர். மக்கள் மொழிச் சொல் என்னும் போர்வையில், பழகுதமிழ்ச் சொல் என்னும் முழக்கத்தில் மீண்டும் மீண்டும் ‘ஆட்டோ’ ‘செராக்சு’ என்றழைக்கப் போகிறீர்களா? அல்லது ‘தானி’ ‘ஒளிப்படி’ என மக்களுக்குப் புதிய சொற்களைக் கற்பித்து வாழ்வியல் சொற்களாக ஆக்கப் போகிறீர்களா?

 

தனித்தமிழியக்கத்தை மதிப்பீடு செய்வதற்கு முன்னர், அதனால் தமிழகத்தில், உலகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுவரும் தாக்கங்களைக் கருத்தில் கொள்ளவேண்டுகிறோம். ‘கணினி’ என்னும் சொல்லில் என்ன வறட்டுத்தனத்தைப் பார்க் கின்றீர்கள். இன்று மக்களும் மாணவர்களும் கணினியைப் பற்றி அறிந்துள்ளனரே! கணினியில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தனித்தமிழ்ச் சொற்களைக் கூறும் நிலை வந்துவிட்டதே!

‘தமிழ்’ என்பது ‘தனித்தமிழே’ என்கிறார் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர். “ஒரு மொழியின் வளம் அல்லது வலிமை அதன் சொற்களாலாயது. ஆங்கில எழுத்துகளும், சொற்களும் சேரின், தமிழ் விரைந்து அழிந்து போவது திண்ணம்” என்னும் பாவாணர் வழித் தடத்தில் ‘பழகுதமிழ்’ இயக்கத்தை நடத்தினால்தான் தமிழைப் பிற மொழிக் கலப்பிலிருந்து மீட்டெடுக்க முடியும் - முயன்று பாருங்கள்.

Pin It