தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் என்கிற முஸ்லிம் அமைப்பு சென்ற ஜனவரி 29 அன்று குடந்தையில் மிகப்பெரிய முஸ்லிம் பேரணி ஒன்றை நடத்தியது. லட்சக்கணக்கான முஸ்லிம்கள், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் “இடஒதுக்கீடு” என்கிற ஒற்றைக் கோரிக்கையை முன் வைத்து எழுச்சியுடன் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்பது இன்று ஒரு அர்த்தமற்ற விஷயமாகிப்போனாலும் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் கோருதல் என்கிற வகையில் இக் கோரிக்கை இன்று முக்கியமாகிறது.

முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் இன்று இக் கோரிக்கையை முன்வைக்கின்றன. ஆந்திராவில் வழங்கப்பட்ட முஸ்லிம் இடஒதுக்கீடு இன்று உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினை எழாமல் இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டுமெனில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் 15(4), 16(4) பிரிவுகளில் class என்கிற சொல்லுடன் Community என்கிற சொல்லும் இணைக்கப்பட வேண்டும். இருக்கிற சட்டத்திற்குள்ளேயே இட ஒதுக்கீடு கொண்டு வரும் போது எல்லா முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்காமல், முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே சாத்தியம் என்கிற நிலை வந்து விடுகிறது.

ஆந்திராவிலும் கேரளத்திலும் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீடுகளில் சில முஸ்லிம் பிரிவுகள் (எ.டு.: போரா, மேமன், கோயா, தஸ்கல், கோம்பு முஸ்லிம்) ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களும் உள்ளடக் கப்பட்டிருந்த போதிலும் அதிலும் சில பிரிவுகள் விலக்கப் பட்டுள்ளன. எனினும் 92 சதம் முஸ்லிம்கள் இதன் மூலம் உள்ளடக்கப்படுகின்றனர். எனவே இப்போதுள்ள சட்டத்தின் கீழேயே முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு கொண்டு வரும் போது இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்ட முஸ்லிம்கள் என்கிற அளவிலாவது வரையறுக்கப்பட்டால் தான் அச்சட்டம் நிற்கும்.

தவிரவும் இப்போதுள்ள நிலையிலேயே உள்ளாட்சித் தேர்தல்களில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு அளிக்க முடியும். ஏதோ நாமும் கோரிக்கையை வைத்தோம் என இல்லாமல் முஸ்லிம் அமைப்புகள் இந்தப் பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு கோரிக்கைகளை உருவாக்க வேண்டும்.

வரலாற்று ரீதியாக ஏற்பட்டுப்போன ஒரு அநீதியை நீக்குவதற்காக அந்த அநீதி குறித்த பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் உள்ளோம். இப்படியான பதிவுகள் தவறானது என்று சொல்வதன் மூலம் இந்த அநீதிகளை நீக்கிவிட முடியாது. மாறாக இந்த அநீதிகளை மூடி மறைக்கவே இது உதவும்.

Pin It