spbஅஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 15 மொழிகளில் 42 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி இசை ரசிகர்களின் மனதில் நீக்கமற நிலைத்திருக்கும் அபூர்வக் குரலிசைக் கலைஞன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு பெரும்பான்மைத் தமிழ்ச்சமூகத்தையே ஆழமான துயரத்தில் இருத்தியுள்ளது. எல்லா சமூக ஊடகங்களிலும் லட்சக்கணக்கான புகழஞ்சலிகள் நிரம்பி வழிகின்றன. இவற்றை அடைவதற்கான அத்தனை தகுதிப்பாடுகளையும் கொண்டவர் அவர்.

பொதுவான சினிமாப் பாடகர்களைப்போல இவரும் ஒரு திரை இசைப் பாடகர்தானே என்ற மட்டத்தில் வைத்துப் பார்க்கப்படக் கூடியவர் அல்லர் அவர் என்பதை அவரது மரணத்திற்குப் பிறகான நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.

சமீபத்திய வருடங்களில் மறைந்த பிரபலமான பல பாடகர்களுக்கெல்லாம் நிகழாத பெரும் ஜனத்திரள் அஞ்சலி எஸ்பிபிக்கு எப்படி சாத்தியப்பட்டதென யோசித்தால் தமிழ்ச்சமூகத்தில் தனது பாடல்களால் ஆகப்பெரிய ஊடுருவலை அவர் நிகழ்த்தியிருப்பது புரியும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உவப்பாகவும் உடன்பட்ட வகையிலும் பல்வேறுவித பாவங்களில் ஏதேனும் ஒருசில பாடல்களையேனும் காற்றலையில் தவழவிட்ட அதிசயமானதொரு மேதைமை கொண்ட கலைஞனாகவே கருதத்தக்கவர் எஸ்பிபி.

தமிழ்த்திரையிசை ரசிகர்களின் மனஉணர்வுகளோடு இடைவெளியற்றுத் தொடர்ந்து பயணிக்கும் சகபயணியாகவே அவர் திகழ்ந்தார். அவர் பாடிய வரிகளைத் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் முணுமுணுக்காத உதடுகள் இங்கே சொற்பம். இந்திய சமூகமே உச்சத்தில் வைத்துக் கொண்டாடத் தக்க மகத்தான ஆளுமை மிக்க குரலுக்கு உடைமையாளர் எஸ்பிபி.

பாடல்களுக்கிடையே ஓரிரு வினாடிகள் அவர் செய்யும் குறும்பும் சிரிப்பும் அவருக்கு மட்டுமே உரித்தானவை. ஒரே பாடல்வரியை இருவிதமான பாவங்களில் பாடும்போது அத்தனை வித்தியாசங்களை வெளிப்படுத்துவார். இதன் காரணமாகவே அவரது பாடல்களின் எண்ணிக்கை இவ்வளவு நெடியதாக அமைந்தன.

பொதுவாக சமூகப் பிரபலங்களின் மரணங்கள் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படுகிறபோது தொடர்புடைய தரப்பாரைத் தவிர ஏனையோருக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தும் நிலை உண்டாவது இயல்பே. மாறாக, தொலைக்காட்சிகளில் எஸ்பிபியின் இறப்புச் செய்தி அறிவிக்கப்படும் வேளையிலும் தொலைக்காட்சியின் இன்னொரு பகுதியில் அவர் பாடிக் கொண்டிருக்கிறார். ஆம், காற்றில் கரையும் கலாபூர்வ பாடல்களைப் பாடியவருக்கு இறப்பென்பதேது? மக்களுக்கு ஏகமாக அறிமுகமாகி அவ்வப்போது அவர்கள் வாயசைத்துப் பாடிக் கொண்டிருந்த ஜீவன் மிகுந்த அந்தப் பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னும் அதே உயிர்த்துடிப்போடு உலவுகின்றன.

தம் பாடல்களால் மௌனத்தைத் தழுவிக்கொள்வதும் மௌனத்திலிருந்து விடுதலையும் பெற்றுத் தருவதுமான சாதுர்யம் கொண்டவையல்லவா அவரது குரல். அவரது மறைவுக்கு ஆறுதலாக அவரது பாடல்களையே காணிக்கையாக்குவதுபோல, அப்பாடல்களைக் கொண்டே இசை ரசிகர்கள் தங்களைத் தேற்றிக் கொள்ள விழைகின்றனர். சிறார்கள் தொடங்கி பெரியோர் வரை அசைவற்று அமர்ந்தபடி ஊடக அஞ்சலி நிகழ்வுகளைக் கண்டுகண்டுக் கரைகின்றனர். தமிழ்ச்சூழலில் இதுவொரு அபூர்வமான காட்சியாகவேபடுகிறது.

தொடக்ககாலத் தமிழ்த் திரைப்படங்கள் நாடக வடிவத்திலேயே உருவாக்கப்பட்டு வெளிவந்தன. அதனால் குரல்வளம் வாய்க்கப் பெற்றவர்களே பாடல்களைப் பாடி நடிக்கவேண்டிய சூழலிருந்தது. பின்னர் வந்த காலகட்டங்களில் பின்னணிப் பாடகர்கள் உருவாகி பாடல் வரிகளுக்கேற்ப நடிகர்கள் வாயசைத்து நடித்தனர். அதனால் பாடும் திறம் பெற்றிருந்த பாடகருக்குக் கிடைக்கவேண்டிய பெருமைகள் வெறுமனே வாயசைத்த அந்தந்த நடிகர்களுக்குப் போய்ச் சேர்ந்தன.

டி.எம்.சௌந்திரராஜன் எனும் அற்புதமான பாட்டுக்கலைஞன் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்கள் எம்ஜிஆர் பாட்டு, சிவாஜி பாட்டு, ஜெமினிகணேசன் பாட்டு என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு கொண்டாடப்பட்டன. நல்வாய்ப்பாக எஸ்.பி.பி திரையிசைப் பாடல்களைப் பாட வந்த காலகட்டத்தில் இந்தப் பாடலைப் பாடியவர் யார் என்பதைக் கண்டறிந்துகொள்வதில் நம் மக்களுக்குக் கவனம் கூடியிருந்தது.

இதற்குக் காரணம் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறுபட்ட வகைமையான பாடகர்களின் குரல்வளமையே எனலாம். எஸ்பிபியை தன் இசை வாகனமேற்றி தமிழ் மக்கள் உள்ளமெல்லாம் கொண்டுசென்ற பெரும்பங்கு இளையராஜாவுடையது என்பதில் மாற்றில்லை.

ராகம், தாளம், பாவம், சுதி, ஆலாபனை, இன்னபிற என்பவையெல்லாம் சங்கீதம் அறிந்தவர்களுக்கானவை. ஆனால் எளிய மக்களுக்கு இசையறிவு என்பது திரைஇசைப்பாடல்கள்தாம். அவ்விசையறிவை உறுதியாக அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தவை எஸ்பிபியின் பாடல்கள்.

பகலில் தங்கள் வேலைகளின்போது பாடல்களை ரசித்துக் கேட்டபடியே பணியாற்றியவர்கள் ஒவ்வொரு இரவையும் கடத்துவதற்கான கருவியாகவும் அவற்றைப் பாவித்தனர். ஏனைய பாடகர்களின் பாடல்களை இதுபோலத் தொடர்ச்சியாகக் கேட்பது அரிதானது. அதுவே எஸ்பிபியின் குரல் ஏற்படுத்திய தாக்கமெனலாம்.

42 ஆயிரம் எனும் மலைக்கவைக்கும் எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபியின் தனித்த சிறப்பு எல்லாவித மனநிலைக்கும் அவரது பாடல்கள் பொருந்திப்போவதேயாகும். பெரும்பாலான பாடகர்கள் ஒரு குறிப்பிட்ட வகைமைப் பாடல்களை மட்டுமே திறம்படப் பாடுவதில் வல்லமை கொண்டவர்களாக இருப்பர்.

ஆனால் உற்சாகம், விரக்தி, துயரம், மோகம், சந்தோஷம், வெறுப்பு, சோகம், கோபம், வெறுமை, கொண்டாட்டம் என பலவேறுபட்ட உணர்ச்சிகர சூழலுக்கும் எஸ்பிபியின் பாடல்கள் ஒத்திசைந்தமையே அவரது தனித்த பேராளுமை. தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும் தமிழில்தான் அவர் ஏராளம் பாடினார். அதேயளவு மேலதிகமாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டார்.

80, 90களில் காதல் மையலில் சிக்குண்டு தாடிவாலாக்களாகத் திரிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் தற்கொலைகளிலிருந்து காப்பாற்றியவை அவரது பாடல்கள் எனச் சொல்வதில் வியப்பேதுமில்லை.

இளமையில் தங்கள் காதலை இழந்தவர்களுக்கு எஸ்பிபியின் காதல் தோல்விப் பாடல்கள் ஆற்றுதலையும் தேற்றுதலையும் தருபவையாக விளங்கின. துயரமான பொழுதுகளில் இரவுகளை இட்டு நிரப்பும் அரிய சாதனமாகவும் துன்ப தருணங்களில் மனஅமைதி கொள்வதற்கான மருத்துவமாகவும் எஸ்பிபியின் பாடல்களே இன்றளவும் விளங்குகின்றன.

எஸ்பிபி கடைசியாகப் பாடியது கொரோனா குறித்த விழிப்புணர்வுப் பாடல் என்பதாகத் தகவல் கூறப்படுகிறது. கொரோனாவை விரட்டுவதற்காக தமது கடைசிப் பாடலைப் பாடிவிட்டு அந்நோய்த் தாக்கத்தினாலேயே உயிரிழந்தார் என்பது விரக்தியை ஏற்படுத்தும் செய்தி.

‘அரசு மரியாதையுடன் நல்லடக்கம்’ என்று எஸ்பிபியின் மறைவுக்கு தமிழக அரசு அறிவித்தது உள்ளபடியே போற்றத்தக்கது. கோடிக்கணக்கான தமிழ் மக்கள்தம் உணர்வுகளில் குடிகொண்டிருக்கும் ஆளுமை மிக்கக் கலைஞர்களுக்கு நிகழ்த்த வேண்டிய இதுபோன்ற மரியாதையை இப்போதேனும் செலுத்த முனைந்திருப்பதைப் பாராட்டுவதோடு இதைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் இதனை நீட்டிக்கவேண்டுமென்பதே நம் அனைவரது பெருவிருப்பமுமாகும்.

கொரோனா அச்சம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்திலும் எஸ்பிபிக்கு சாதாரண எளிய மக்கள் பெருந்திரளாய்த் திரண்டு இரவுபகலாகக் காத்திருந்து அஞ்சலி செலுத்துவதிலிருந்தே தமிழ்ச்சூழலில் அவருக்கான இருப்பைப் புரிந்து கொள்ளமுடியும்.

‘ஆயிரம் நிலவே வா!’ என்றழைத்தபடி தமிழ்த்திரை வாயிலாக தமிழ் மக்கள் மனங்களுக்குள் உட்புகுந்து ஆக்கிரமித்த எஸ்பிபியின் குரல் ஏராளமான நிலாப்பாட்டுகளை இசைத்திருக்கின்றன. யதேச்சையாக நிலாவைப் பார்க்கிற தருணங்களிலெல்லாம் எஸ்பிபியின் ஏதேனுமொரு பாடலைத் தன்னியல்பாக முணுமுணுக்கும் இசைத்தமிழ் ரசிகர்கள் இருக்கிறவரை அவரது அமுதக்குரலுக்கு அழிவில்லை, அழிவேயில்லை.

- ஜி.சரவணன்

Pin It