SPB musicஒரு மனிதனால் இத்தனை பேரை சந்தோஷப்படுத்த முடியும் என்றால் இத்தனை பேரை துக்கப்படுத்தவும் முடியும். 

அது தான் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் துக்க மயம். புலம்பல்கள், மரணம் இயற்கையானது, இயல்பானது. ஆனால்... செய்திக் கேட்டதில் இருந்து சொல்ல... பகிர வார்த்தையற்று வெறும் நினைவுகளோடு மட்டுமே ஐந்து மணி நேரம் வெறிக்கத்தான் முடிந்தது. வெற்றிடத்தில் இருந்து முளைத்து வரும் குரல் வழியே… நிகழ்ந்த மரணத்தை ஒலியற்ற நெடுவழியில் காண்கிறேன். செவியற்ற பொழுதுகள் நடுக்கமானவை.

எங்கிருந்தெல்லாமோ தானாக... ஒரு நானாக.. ஒரு நீயாக.. ஒரு நாமாக வரும் அவரின் பாடல்களில்... லயித்திருந்த பொழுதெல்லாம் தாண்டி வெறித்திருக்கவும்.. தனித்திருக்கவுமாக இருக்கிறது இன்றைய நிமிடங்கள். தலையில்... தவத்தை தூக்கி வைத்து விட்டு காற்றோடு கலந்து விட்ட அவரை... மூளை நழுவ மீண்டும் மீண்டும் தேடும் மனதுக்கு பதில் தெரிந்தாலும்... அவர் அளவுக்கு கேள்வி ஒன்றைச் சுமக்கத் தேவை இருக்கிறது.

வேண்டி விரும்பி அவரை மனதால் சுமக்கும் சுமைக்கு நீண்ட நாட்களுக்கு பின் கண்ணீரும் துக்கமும் பூச்சொரிகின்றன. கொரோனா... மரணங்களுக்கு நம்மை பழக்கி விட்டன... என்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ்- ஐ ஒரு ஜென் தத்துவத்தில் கடந்து கொண்டிருந்தோம்.

இல்லை... மரணத்துக்கு நெஞ்சில் அடித்துக் கொண்டு அழும் மண் சார்ந்த மனம் சார்ந்த சக அன்பை மீட்டெடுத்திருக்கிறார் என்று தான் நம்புகிறேன். மனித மனம் ரெம்ப இலகுவானது. ஒருமுறை ஏற்றுக் கொண்டவருக்கு அது தன்னை வருத்திக் கொள்ளும்.

நாம் நம்மையும் அறியாமல் இசையோடு வாழ்ந்திருக்கிறோம். இசையாகவே வளர்ந்து இருக்கிறோம். கிட்டத்தட்ட 45 ஆண்டுகள்... நமக்கும் முன்னும் பின்னுமென நாலைந்து தலைமுறைகளோடு ஒவ்வொரு இரவும்... ஒவ்வொரு பகலும்.. ஒவ்வொரு பொழுதும்... அவரின் குரல்.. பயணித்திருக்கிறது. எப்படி இளையராஜா இல்லாத சமூகம்... பண்பட்டிருக்காதோ... அப்படி SPB குரல் இல்லாத மனமும்.. அமைதி கொண்டிருக்காது. இவையெல்லாம் கால மாற்றத்தின் அடுத்தடுத்த பெருவெடிப்புகள். 

இந்த சமூகத்தின் ஓர் அங்கம் தான் SPB. அதனால் தான் அவரின் மரணத்தைக் கண்டு மனம் பத பதைக்கிறது. ஒவ்வொரு வீட்டு டிவியிலும் ரேடியோவிலும்... தானாக முணுமுணுக்கும் உதடுகளிலும் அவர் இருக்கிறார். அதனால் தான் அவரின் இறப்பை ஏற்க முடியாமல் தவிக்கிறது மனம். அவர் பொது உடைமையாகி விட்டார். அதனால் தான் கூட்டமாய்... தனியாய்... குழுக்களாய்... எப்பக்கமிருந்தும் துக்கம் பீறிட வார்த்தையற்று நடுங்குகிறோம். 

கலைஞன் என்ன செய்வான் என்ற கேள்விக்கு இதோ பதில். நாட்டையே அமைதிப்படுத்தி விட்டான்.

"பச்சை மலை பூவு... நீ உச்சி மலைத் தேனு..." தேன் சொட்டும் நிம்மதியை ஒவ்வொரு முறையும் உணர முடிந்த காரணத்துக்கு அவரின் குரலும் ஒன்றென திரும்ப திரும்ப நினைத்துக் கொள்கிறேன். எப்போதெல்லாம் மனம் சோர்வு அடைகிறதோ... அப்போதெல்லாம்... "எவனுக்கு என்ன பலம்... எவனுக்கு என்ன குணம்... கண்டதில்லை ஒருவருமே... ஒரு விதைக்குள்ள அடைப்பட்ட ஆலமரம் கண் விழிக்கும்... அதுவரை பொறு மனமே..." வரி வழியே குரல் கர்ஜிக்க... தெம்பு கொண்டிருக்கிறேன்.

"நீ போய்ட்ட பாலு. உலகம் சூனியமாகிடுச்சு" ன்னு இசை ராஜா சொல்கையில்... சுழலும் பூமி நின்று சுழல்கிறது. அன்பு அறிவியல் தாண்டியது.

திரும்பும் பக்கமெல்லாம் அவரின் பாடல் வரிகளோடு பித்துப் பிடித்து அலைகிறார்கள்... மனிதர்கள். மௌனமற்ற மலரின் ஒற்றைத் தனிமை இப்படித்தான் பிதற்றித் திரியும் போல. திரும்ப திரும்ப அவரின் பாடல்களையே கேட்க தூண்டும் மனவெழுச்சி... மாய சூனியத்தில்.. மாட்டிக் கொண்டிருக்கிறது. வட்டத்தின் நடுவே ஒற்றைப் புள்ளி தொலைக்கவே ஒவ்வொருவரின் சூதானமும். நாட்கள் நகர அவர் மரணமும் பழகும் தான்.

ஆனாலும்... ஒரு அப்பாவின் மரணத்துக்கு ஈடானது  அது. ஒரு குருவின் மரணத்துக்கு தோதானது அது. மனிதன் இசையின் நரம்பில் ஜனித்தவன்.

6 தேசிய விருதுகள். 25 நந்தி விருதுகள்... 45000 பாடல்கள்... கிட்டத்தட்ட 16 மொழிகளில் - சாதனை சரித்திரமாகி விட்டது. எந்த முகத்துக்கும் பொருந்தும் குரல். ஓ பாசிட்டிவ் ரத்தம் மாதிரி. தகுதி உள்ள பாவனைக்கு அற்புதமாய் தன்னை கோர்த்துக் கொள்ளும். திரையில் மாயம் செய்யும்... நரை கூடாத குரலுக்கு செவி உள்ளோர் அடிமை தான். துக்கமோ... துயரமோ... காதலோ... காமமோ... அன்போ... அரவணைப்போ... எல்லாமும் குரல் வழியே நிகழ்த்த முடியும் என்று நிகழ்த்திக் காட்டிய ஒரு நிகழ்த்துக் கலைஞன். 

அவருள் ஓர் அற்புதமான நடிகரும் இருந்தார் என்று நாம் அறிவோம். "சிகரம்" - "கேளடி கண்மணி" - கொஞ்ச காலத்துக்கு முன்பு "நாணயம்" என்றொரு படம். அலட்டல் இல்லாத அசைவுகள் அவரிடம் காணலாம். அவருள் ஓர் இசையமைப்பாளரும் இருந்தார். சிகரம் அவரின் இசை தான்.  "உன்னை சரணடைந்தேன்" பார்த்திபன் நடித்த "தையல்காரன்"... ரஜினியின் "துடிக்கும் கரங்கள்" அவரின் இசையில் தான். இதில் சிகரம் மனதுக்கு நெருக்கம்.

ஒரு நேர்காணலில் கூட எப்படி ரஜினிக்கு வேறு மாதிரி கமலுக்கு வேறு மாதிரி பாடுகிறீர்கள் என்று கேட்டார்கள். 

"இல்லை அது பொய். நான் அப்படி பாடுவதில்லை. நான் அந்த சூழலுக்குத்தான் பாடுகிறேன்" என்றார். 

எச்சூழலுக்கும் பொருந்தும்... எதார்த்தம் அந்த குரலில் இருக்கிறது. இனி இன்னும் இன்னும் வீரியத்துடன் அவரின் பாடல்கள்... மனித சமூகத்தை ஆட்கொள்ளும். அது தான்... நமக்கும் நிம்மதி. ஆனால் இசை ராஜா சொன்னது போல இந்த துக்கத்துக்கு அளவு இல்லை தான்.

- கவிஜி

Pin It