SPB tamilஎல்லாவற்றையும் லாப நஷ்டக் கணக்கு கொண்டு பார்க்கும் முதலாளித்துவ உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒருவரிடம் பேசுவதற்கும், சிரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் நமக்கு ஆதாயமான ஏதோ ஒன்று அவரிடமிருந்து தேவைப்படுகின்றது. அது இல்லாத போது நாம் அனைத்தையும் புறக்கணிக்கின்றோம்.

உன்னிடம் பணம் இல்லையா? உன்னிடம் அதிகாரம் இல்லையா? நீ என் சாதி இல்லையா? நீ என் மதமில்லையா? நீ கருப்பனா? நீ என் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லையா? என ஒவ்வொரு மனிதனையும் அடையாளப்படுத்தி நம் சமூக உறவுகளை கட்டமைத்துக் கொண்டோம் என்றால் அது சுயநலம் சார்ந்த வறட்டுத்தனமான வாழ்க்கையாகவே இருக்கும். அது போன்று தம் வாழ்வை அமைத்துக் கொள்ளும் நபர்கள் இயல்பாகவே தக்கை மனிதர்களாகவே இருப்பார்கள்.

அது போன்ற மனிதர்களை எதுவும் பாதிப்பது கிடையாது. அவர்களின் மூளை எங்கும் காரியவாதம் மட்டுமே மண்டிக் கிடக்கின்றது. தனது பேருக்கோ, புகழுக்கோ, தத்துவத்திற்கோ உதவாத எல்லோருமே இந்த உலகில் வாழ்வதற்கே தகுதியற்ற அற்பப் பதர்கள் என்றே அவர்கள் மதிப்பிடுவதால் சக மனிதனின் மேன்மையான பக்கங்களை அவர்கள் முகம் கொடுத்துப் பார்க்கக் கூட  விரும்புவதில்லை.

நீங்கள் ஒரு நல்ல பாடகராகவோ, இசை அமைப்பாளராகவோ, ஓவியனாகவோ, எழுத்தாளனாகவோ, விஞ்ஞானியாகவோ இருக்கலாம். ஆனால் நீங்கள் அதே தொழிலுக்குரிய மரியாதையோடு, நீங்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகளோடு பொருத்திப் பார்த்துதான் நீங்கள் மதிப்பிடப் படுகிறீர்களா என பார்த்தால் 99 சதவீதமானவர்களுக்கு அந்த மரியாதை ஒருபோதும் கிடைப்பதில்லை.

சாதி சார்ந்த பின்புலம், அதிகாரம் சார்ந்த பின்புலம் எல்லாவற்றுக்கும் மேலாக ஊடக வெளிச்சம் இவை இல்லாமல் போனால் இவை எல்லாம் கிடைத்த ஒரு முட்டாளைவிட நீங்கள் ஏளனமாகவே பார்க்கப்படுவீர்கள்.

இந்த உலகம் பிரபலங்களின் வாலாக பின்னால் ஓடிக் கொண்டு இருக்கவே விரும்புகின்றது. கோட்பாடுகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட தனி மனிதர்களின் துதிபாடிகளாக அடையாளப் படுத்திக் கொள்வதையே விரும்புகின்றது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை தன் தோட்டத்திற்கும் கொஞ்சம் திருப்பி விடும் அவசரத்தில் வாழ்க்கை முழுக்க ஓர் அற்பவாதியாகவே வாழ்ந்து சாவதையே இயல்பான மனித குணமாக ஏற்றுக் கொண்டு அதன் வழியில் பிசிறு தட்டாமல் வாழ முயற்சிக்கின்றோம். உண்மையில் நாம் இப்படிப்பட்ட மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கின்றோம்.

ஒரு முதலாளித்துவவாதியும் ஒரு பொதுவுடைமைவாதியும் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பில்தான் இரண்டு எதிர் எதிர் கருத்து நிலைகளோடே பயணம் செய்துகொண்டு இருக்கின்றோம். இன்னும் சொல்லப் போனால் பொதுவுடைமை சிந்தனை கொண்டவர்களைவிட முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்கள்தான் நம்மை முற்றிலுமாக சூழ்ந்திருக்கின்றார்கள்.

இதைவிட்டு நாம் எங்கேயும் ஓடிப் போக முடியாது. ஆனால் ஓர் உண்மையான பொதுவுடைமைவாதி நிலவும் அமைப்பு முறையை மாற்ற தொடர்ந்து முயற்சிக்கின்றான். அதன் வழியே தனது சிந்தனையையும் செழுமைப்படுத்திக் கொள்கின்றான். ஆனால் ஒரு முதலாளித்துவ சிந்தனாவாதி இந்த சமூக அமைப்பை மாறா நிலைக் கண்ணோட்டத்தில் இருந்தே அணுகுகின்றான். அவனால் ஒருபோதும் மாறும் சமூக அமைப்பைப் பற்றி சிந்திக்கக்கூட முடிவதில்லை.

அதற்காக நாம் அவர்கள் அனைவரையும் துரோகிகள், முட்டாள்கள் என ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. காரணம் நாம் அவர்களை மாற்றத்தான் பணி செய்து கொண்டிருக்கின்றோம் என்ற எதார்த்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறோம். அந்தப் புரிதல் இல்லை என்றால் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள ஒருவனால் ஒருநாள் கூட தாக்குப் பிடித்து கொள்கையில் நிலையாக நிற்க முடியாது.

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார், அம்பேத்கர் என நாம் சமூக மாற்றத்தின் முன்னணி போர் வீரர்களாக நினைக்கும் அனைவருமே இதில் தெளிவாக இருந்ததால்தான் அவர்களால் எடுத்துக் கொண்ட கொள்கையில் வெற்றிபெற முடிந்தது.

நாம் இந்தச் சமூகத்தின் விளைபொருட்கள். இந்தச் சமூகம் முற்று முழுக்காக ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு பொதுவுடைமை சமூகமாக மாறும்வரை  அந்தச் சமூகம் நம் மீது செலுத்தும் அனைத்து தாக்கங்களுக்கும் உட்பட்டுக் கொண்டேதான் இருப்போம். அதன் மீதான நமது போராட்டமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இசை ரசனை என்பதும் அப்படித்தான். அது இதயமற்ற உலகின் இதயமாகவும், ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சாகவும், முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மன நெருக்கடியில் இருந்து தன்னை மறக்கச் செய்யும் ஒரு அபினாகவும் இருக்கின்றது.

பொதுவுடைமைவாதிகளும் ஒரு சமூக மனிதனாக அதை ஒருபோதும் முற்று முழுக்காக புறக்கணித்து விட்டோ, கண்டும் காணாதது போலவோ இருந்துவிட முடியாது. ஆனால் மதத்தைவிட, சாதியைவிட, இனவெறியைவிட, பணக்காரத் திமிரைவிட இசை ஒன்றும் அவ்வளவு கொடூரமான அருவருக்கத்தக்க ஒன்றல்ல.

இசை என்பது போதையாகவும் பொழுதுபோக்காவும் இருக்கின்றது என்பது மெய்தான் ஆனால் அலுத்துப் போன வாழ்க்கையை அது உயிர்ப்புள்ளதாக மாற்றும் வல்லமையைப் பெற்றிருக்கின்றது.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் சிந்தனையை மட்டுமே தட்டி எழுப்ப வேண்டும் என்ற நோக்கில் பாடும் ஒரு புரட்சிகரப் பாடகனுக்கும், இசை அமைப்பாளனுக்கும் பாடலாசிரியனுக்கும் உள்ள சுதந்திரம் பணத்துக்காகப் பாடும் பாடகனுக்கோ, இசை அமைப்பாளனுக்கோ, பாடலாசிரியனுக்கோ இருப்பதில்லை.

ஒரு இயக்குநரின் ஆபாசமான சிந்தனைக்கு வடிவம் கொடுக்க ஒரு இசை அமைப்பாளனும், பாடலாசிரியனும், பாடகனும் முற்படும் போது அவர்களின் முன்னால் நிற்பது இந்தப் பாட்டு சமூகத்தில் என்ன மாதிரியான பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைவிட இந்தப் பாட்டுக்கு தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதாகவே உள்ளது.

அதற்காக நிச்சயம் நாம் கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும். சமூகத்தை சீரழிக்கும் கீழ்த்தரமான மலிவான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் பாடல்களை இசை அமைக்கவோ, பாடல் எழுதவோ, பாடவோ கூடாது என வற்புறுத்தலாம். ஆனால் அவர்கள் இசை அமைத்த, பாடிய, எழுதிய சில ஆபாச பாடல்களுக்காக ஒட்டுமொத்தமாக அவர்களின் ஆளுமையை சிதைப்பதும், ஏற்றுக் கொள்ளாமல் போவதும் தவறானது ஆகும்.

அதுவும் எஸ்.பி.பி ஒரு பார்ப்பனர் என்பதற்காகவே அவரின் ஒட்டுமொத்த இசை பங்களிப்பையும் உதாசீனப் படுத்துவது கோட்பாடு அற்ற வறட்டுத்தனமாகும். அவர் ஆபாசப் பாடல்களை பாடினார், ஆம் பாடினார். அதற்காக அவர் உயிரோடு உள்ளபோதே கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று அவர் நம்மோடு இல்லை. இப்போது யாரும் எஸ்.பி.பி.க்கு கோயில் கட்டச் சொல்லவில்லை. அவரின் ஆபாசமான பாடல்களுக்கு கண்டனம் தெரிவிப்பது போல அவரின் பல சிறந்த நல்ல பாடல்களுக்கு வாழ்த்துபவர்களை சபிக்காமல் இருக்கலாம் அல்லவா?

அது எல்லாம் முடியாது, அவர் புரட்சிக்கு பங்களிப்பு செலுத்தவில்லை, அவர் ஒரு பார்ப்பனர், அதனால் அவர் என்ன பாடி இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. பெரும்பாலான மக்களின் மகிழ்ச்சியின், துக்கத்தின் வெளிப்பாடாக அவர்கள் இசையும் பாடலும் இருந்தாலும் அதை மதிக்க வேண்டிய எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை, நாங்கள் சாதியைப் போலவே, மதத்தைப் போலவே தான் இசையையும் மதிப்பிடுவோம் என்றால் நல்லது அவ்வாறே மதிப்பிடுங்கள்.

ஆனால் மார்க்ஸ் அவ்வாறு இருக்கவில்லை. நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்த தனது தாயாரைக் காண்பதற்கு ஜென்னி சென்றிருந்த போது அவரது பிரிவை நினைத்து மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கடிதத்தில் “உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அழகாகவும் இருக்கின்றார்கள். ஆனால் மற்றொரு அழகிய முகத்தை அதன் ஒவ்வொரு தோற்றமும் கவர்ச்சிக் கூறும் ஏன் அதன் ஒவ்வொரு திரையும் ரேகையும் கூட என்னுடைய வாழ்கையின் மிகவும் பலமான, மிகவும் இனிமையான நினைவுகளை என்னுள்ளே கிளப்பிவிடக் கூடிய மற்றொரு அழகிய முகத்தை நான் எங்கு காண்பேன்? உனது இனிய முகத் தோற்றத்தில் என்னுடைய முடிவில்லாத துன்ப துயரங்களையும் எனது ஈடும் சீரும்  செய்ய முடியாத நஷ்டங்களையும் கூட நான் காண்கிறேன். நான் உனது இனிய முகத்தில் முத்தமிடும்போது எனது வேதனைகளையும் கூட முத்தமிட்டுத் துடைத்து விடுகிறேன்" என்று தன் அன்புக் காதலியை உருகி உருகி காதலித்து எழுதி இருக்கின்றார்.

அது மட்டுமல்ல மார்க்ஸும் ஜென்னியும் தனது குழந்தைகளுக்கு கிரிம் சகோதரர்கள், ஹாப்மான் போன்றோர் எழுதிய காட்டு தேவதைகளின் கட்டுக் கதைகளைக் கொண்ட மந்திர உலகம், ஆயிரத்தோர் இரவுகள், ஹோமருடைய கவிதைகள், நிபிலுங்ஸ் மற்றும் குட்ரன் ஆகியோரின் பாட்டுகளில் உள்ள காவியக் கதைகள் போன்றவற்றை எல்லாம் அறிமுகப்படுத்தினர்.

அவர்களின் குடும்பங்களுக்கு மிகவும் பிரியமான பிரபலமான எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் ஏயிஸ்சிலுஸ், சோபோக்கின்ஸ், தாந்தே, செர்வென்தேஸ், கோத்தே, பீல்டிங் ராபர்ட் பர்னஸ், ஷேக்ஸ்பியர், வால்டர், ஸ்காட் போன்றோரும் இருந்தனர்.

மார்க்சிடம் ஒரு போதும் வறட்டுவாதம் இருந்ததில்லை. அவர் இயல்பாகவே சிந்தித்தார், இயல்பாகவே செயல்பட்டார். ஆனால் நம்மில் பலர் வறட்டுவாதிகளாய் இருக்கின்றோம். கடுங்கோட்பாட்டுவாதிகளாய் இருக்கின்றோம். விமர்சனம் இரக்கமற்றது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு அந்த விமர்சனம் யாரை நோக்கி எதற்கு எதிராக வைக்கப்படுகின்றது என்பதும் உண்மை.

எஸ்.பி.பியை நோக்கிய நம்முடைய விமர்சனத்தையும் குறுகிய மனப்பான்மையில் இருந்து வைக்காமல் முழுமையாக மதிப்பீடு செய்து வைக்குமாறே அன்புடன் கேட்கின்றோம்.

- செ.கார்கி