எழுபதுகள் தமிழ்ச் சிறுகதைகளின் பொன் விளைச்சல். இக்காலகட்டத்தில் எழுத வந்த எழுத்தாளர்கள் தமிழர்களின் வாழ்க்கையை புதுசாகவும் விதவிதமாகவும் முன்வைந்தார்கள். தமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடிகள் பார்க்காத, கவனிக்காத, அடையாளப்படுத்தாத உலகை இவர்கள் எழுதினர். அவர்களில் ஒருவர் பூமணி.

‘பனித்துளியில் தெரியும். சூரியனைப்போல சகலசம்பத்துக்களுடன் சிறுகதையில் கரிசல்காட்டு மக்களின் அசைவயக்கத்தைக் கொண்டுவந்தவர். கதை, அணுகிப் பார்க்கும் ஒரு பிரச்சினையில் நாலா பக்கமும் முழுமையாகச் சிறந்த கொள்கிறது. மிகச் சிறிய கதையாக இருந்தாலும்கூட. பூமணியின் சொந்த உலகமும் இதுதான். எட்ட நிற்கும் உலகை இவர் தமது கதையுலகிற்குள் கொண்டு வரும் போது இப்படியொரு முழுமையான சாகசம் நிகழ்வதில்லை. அங்கு இந்த மானிட உலகம் திறந்து கொள்வது போல திறந்து கொள்வதில்லை. முக்கியமான காரணம் மனக்கிடங்கில் சொந்த வாழ்க்கையின் பின்னணிகள் வண்டலாகப் படிந்திருப்பதுதான்.

விவசாயம் சார்ந்து எழுதப்பட்ட கதைகள் விழுதுகளோடும், கிளைகளோடும் இலைகளோடும், எச்சங்களோடும், காயங்களோடும், முறிவுகளோடும் நிற்கும் ஒரு முழு ஆலமரத்தின் உயிர்த்துவம் கூடி வந்திருக்கின்றன.

இவ்வகையில் எழுதியிருக்கும் கதைகளையும், பிற பின்னணியில் அதனுள் இயங்கும் பிரச்சனை களை - முரண்களை வைத்து எழுதப்பட்ட கதை களையும் வைத்துப் பார்க்கும்போது வேறு வேறு பூமணிகளாகத்தான் தெரிகிறார். கரிசல்காட்டு மக்களின் உலகத்தில் நின்று எழுதும் போதெல்லாம். மனவெழுச்சி மீதுற கிராமிய மானிட உலகம் பூமணியை முழுமையாக மேவிக் கொள்கிறது. அங்கு தெரிவது மண்ணும் மனிதர்களும்தான். உரையாடல்கள், உடல்மொழிகள், பொழுதுகள், வேலைகள், கண்காணிப்புகள், பயிர்கள், காடு கரைகள், கால்நடைகள், ஓசைகள், அலைச்சல்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், வன்மங்கள், சம நிலைகள் என ஒரு கதைக்குள் முரணைச் சுற்றி மானுட இயக்கம் இயங்குகிறது. இந்த சம்பத்துக்கள் இயல் புடன் அங்கங்கே மலர்கின்றன. கூட்டு மனிதருள் வாழும் மனிதராகத்தான் பூமணி தெரிகிறார்.

கி.ரா., கரிசல்காட்டு மனிதர்களை மேடையில் நிறுத்தி நிகழ்த்திக்காட்டியபோது பூமணி அவர் களை கரிசல் காட்டில் புரள விடுகிறார். தமிழ்ச் சிறுகதைகளில் அதுவரை காட்டப்படாத உலகம் பூமணியால் வருகிறது. தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் புதிய பிரதேசத்தை முன்நிறுத்தியதில் பூமணிக்குப் பங்கு இருக்கிறது. ஒரிஜினல் உழைக்கும் மக்கள். அவர்களின் விருப்பங்கள், கோபங்கள், மறைப்புகள், எசிர்ப்புகள், சமாளிப்புகள் எல்லாம் ஜீவனாகி ஊடாடுகின்றன. இந்தச் சாதணை எண்ணிக்கையில் மிகப் பிரமாண்டமானதாக இல்லை. அவரால் செய் திருக்க முடியும். முழுநேர எழுத்தாளனாக இருக்கும் பட்சத்தில். பூமணியின் நாவல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிரமாண்டம் தெரியவரும். இருந்தாலும் சிறுகதை வகைக்குள் இல்லை. மூத்தத் தலைமுறை எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, இ.ராஜநாராயணன், அசோகமித்திரன், ஜெயகாந்தன் அளவு சிறுகதை துறையில் சாதனை இல்லை. சமகால எழுத்தாளர்களான வண்ணநிலவன் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் அளவு அதிக கதைகள் எழுதவில்லை என்றாலும் இவர்கள் காட்டாத தமிழர் வாழ்வை உக்கிரத்தோடு காட்டியவர். வண்ண தாசன் இந்த வகையில் ஒரு சாதனைக்காரர்.

பூமணியின் சாதனை நாவல்களிலும் இருப்பதால் சிறுகதையின் பரப்பு குறைந்து விட்டதையும் பார்க்கமுடியும். உழைக்கும் மக்களின் எண்ணங்கள் உரையாடல்வழி நாலாபக்கமும் பொங்கிய படியே இருக்கின்றன. அம்மக்களின் சமூக உளவியல் மதிப்புகள் உறவு அறுபடாத உறவுநிலையில் கரிசல் மண் மணக்க வெளிப்பட்ட படியே இருக்கின்றன. இந்த வெளிப்பாடு இயல்பாகக் கூடி வரும்போது படைப் பிற்குக் கூடுதல் அழகையும் ஒளியையும் தருகின்றது. ‘நொறுங்கல்’, ‘அடமானம்’, ‘நாக்கு’, ‘நேரம்’, ‘கசிவு’, ‘கலங்கல் ’, ‘கரு’, ‘இழிசல்’, ‘தொலைவு’, ‘எதிர்கொண்டு’, ‘ரீதி’, இவை மண் வழங்கிய செல்வங்கள். பூமணியின் உலகின் மிக அருகில் இருக்கும் உலகிலிருந்தும் சில நல்ல கதைகளைத் தந்திருக்கின்றார். விடிவதற்கு முன்பே கட்டிட வேலைக்குப் போய் நிற்க ஓடும் பாண்டியன் (ஏலம்) ஓராசிரியராய் கிராமத்தில் நின்று மல்லாடும் காளிமுத்து வாத்தியார் (பொறுப்பு) கலவரபூமியில் கணவனின் கள்ளத்தனம் பிடிக்காமல் சம்சாரிவீட்டுப் பையனோடு சேர்ந்து வாழும் கீழ்சாதி வெள்ளத் தாயி பலிகடா ஆவதைச் சொல்லும் (தகனம்), சிறு நகரத்தில் இட்லிக்கடை வைத்து பிழைப்பு தேடிச் சென்ற பெண்ணுடைய மகனின் பால்யம் சிதை வதை சொல்லும் (கோலி) கதைகள் முக்கியமானவை.

இந்த தன்நிலை மறந்த வெளிப்பாடு. வேறு சூழல்களின் கதைகளில் முழு ஆற்றலைப் பெறு வதில்லை. புதிய பிரச்சினைகளை எதிர்கொண்டு முன் நகர்ந்த விதத்தையும் எதிர்கொண்டு, கீழ்ந்த வதத்தையும் கதையுலகிற்குள் கொண்டு வந்திருக் கிறார். லஞ்சத்திற்கும் மிரட்டலுக்கும் பயப்படாது பொதுப்பணித்துறையில் பணியாற்றும் பெண் (குடை) பணம் என்றால் மட்டும் கிறித்துவ தலித் வீட்டில் நுழைந்து சாகித்துக்கொள்கிற பாதிரியார் (நிலை) என சிலகதைகள் எழுதியிருக்கிறார். அவை எழுத்தாளன் எழுதிய சிறுகதைகள் என்ற எல்லைக்குள் நிற்கின்றன. நல்ல சிறுகதைகள் என்ற அம்சத்தைப் பெற்றாலும் கூட அவரின் கரிசல் காட்டு மனிதர்களின் கதைகள் போல ஆற்றலோடு ஜொலிப்பதில்லை. முக்கியமாக எழுத்தாளனைப் பிளந்துகொண்டு பீறிட்டவை அல்ல. எங்கு ஆழ் மனத்திலிருந்து கதையுலகம் விரிகிறதோ அங்கு படைப்பு கலையாக மாறுகிறது. வடிவம் கச்சித மாக இருப்பதால் மட்டுமே சிறந்த படைப்பு என்று கூறிவிட முடியாது. வேறு பின்னணிகளில் வாழும் மக்களின் பிரச்சினைகள் பூமணியால் கதை வடிவத் திற்குள் வனைந்தவை. ‘போட்டி’ ‘அடி’, ‘ஆழம்’ முதலிய கதைகள் இத்தகையவை. பூமணி உரை யாடல்களில் உச்சபட்ச எல்லையைத் தொட்டிருக் கிறார். இந்தக் கலைவெளிப்பாட்டைச் சில இடங் களில் கதையை நடத்துவதற்காக செயற்கையாக பயன்படுத்தும் போது! கதையெழுதுதல் என்ற எல்லைக்குப் போய் விடுகிறது.

இந்த விசயங்களையெல்லாம் தாண்டி ‘நொறுங்கல்’, ‘அடமானம்’, ‘நீதி’, ‘கசிவு’, ‘கரு’, ‘தொலைவு’ என்கிற ஆறு கதைகள் இவரின் கலை ஆற்றலுக்கு சாட்சிகளாக என்றென்றும் உடன் நிற்கும்.

பா.செயப்பிரகாசத்தின் நிலமும் பூமணியின் நிலமும் ஒன்றுதான். நிலத்தின் கதை கைக்குக் கை எப்படி மாறுபடுகிறது என்பதற்கு இரு வேறு உதாரணங்கள் இவர்களின் படைப்புகள்.

பா.செயபிரகாசத்தின் மனம் ஒருவித ரொமாண்டிக் தன்மை வாய்ந்தது. உணர்வுகளை அதீத உணர்வு களுக்கு வார்த்தைகளால் கொட்டிச் செல்வார். கதைகளில் அவர் முன்நின்று பேசும் சோக உணர்வுகள் இல்லாமல் எழுதப்பட்டிருக்குமேயானால் அவை இன்னமும் ஆழமான பாதிப்பை வாசகனுள் ஏற் படுத்தும். பாதிப்பு என்பது உணர்ச்சிகரமான வார்த்தைகளால் உருவாவதில்லை. வார்த்தைகளை மீறிய செயல் அது. அது காட்டும் உலகிலிருந்து உருவானது. அப்போது வார்த்தைகள் அழிந்து படைப்புலகம் உருவாக்கும் உணர்வொன்று உண்டு. அது அரூபமான ஒன்று. அதுதான் வாசகனுக்கும் படைப்புக்கும் உள்ள அந்தரங்கமான உறவு. ஒரு சிறுகதை முடிந்த பின் அதன் முழு உருவத்திலிருந்து உருவான ஒரு படிமம் - வாழ்வின் தருணம் - ஒரு திறப்பு- ஒரு அதிர்வு அதுவாகும். இதைத்தான் சிறுகதையின் உருவம் என்று நினைக்கிறேன். ஆசிரியனே சம்பவத்தைப் பதற்றத்திற்குள்ளாக்கும் வார்த்தைகளால் விவரிக்கக்கூடாது. அது ஆசிரியரின் உணரும் பதற்றமே அன்றி வாசகனைப் பதற்றத் திற்குள்ளாக்கும் வார்த்தைகள் அல்ல. படைப்பிற்குள் உள்ளாந்திருக்கும் பிரச்சினையின் கோணம்தான் அதிர்விற்குள்ளாக்குகிறது. இது தேர்வுமுறையாலும் சொல் முறையாலும் உருவாகி வரும் ஒன்று.

‘ஒரு ஜெருசலம்’ கதையில் சிறுவர்கள் கோரைக் கிழங்கு சேகரிக்க சுடுகாட்டிற்குச் சென்றதும் தன் தாயை எரித்த இடத்திலிருக்கும் கோரைக் கிழங்கு களைக் கூட்டாளி பறிக்கச் செல்கிறான். இவனை விட பெரியவன் அவன். இவன் பயந்தாங்கொள்ளி; சிறுவன். தன் தாயின் உடலிலிருந்து முகிழ்த்தக் கோரைக் கிழங்குகளாகக் கருதி அவனைத் தள்ளி விட்டு சுடுகாட்டு மேட்டை அணைத்தபடி படுத்து மறிக்கிறான். இந்தக் குழந்தமை உணர்வின் அச்சம், அதற்கு முன்பே வார்த்தைகளால் அள்ளிவீசப் பட்டிருப்பதால் படைப்புத் தரும் அனுபவம் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. பா.செ.யின் பல நல்ல கதைகள் இந்தப் பிரச்சினைகளால் வாசகப் பாதிப்பின் உச்சம் பெறுவதில்லை. ஆனால் அவர் தேர்ந்து சொல்லும் கரிசல் வாழ்க்கை அபூர்வ மானது. ரொமாண்டிக் அம்சங்களை மீறியும் பா.செயப்பிரகாசம் பொருட்படுத்தத்தக்க நல்ல படைப்பாளியாகவே எனக்குத் தோன்றுகிறார்.

பா.செ.யின் இந்த பலவீனங்கள் ஒழிந்த எழுத்தை உருவாக்குகிறார் பூமணி. இவருடைய சாதாரண கதைகளும் கரிசல் மொழியாலும் பாமரத்தனமான செயல்களாலும் வசீகரம் கொண்டுவிடுகின்றன. ‘பாதை’ மலம் கழிக்கச் செல்லும் சிறுவர்களின் உலகம் பற்றிய கதை. அதில் பெரியவரும் வருகிறார். வெளிக்கிருக்கும் மந்தை திருவிழாக்கோலம் பூணு வதை சிறுவர்களைக் கொண்ட உருவாக்கியிருக்கிறார். ‘எதிர்கொண்டு’ கதை பக்கத்து வீட்டு வாயாடியின் அடாவடித்தனத்திற்கு மறைமுகப் பதிலடியாக சிறு வர்கள் ஒன்றுசேர்ந்து அவளின் கொட்டத்தில் கன்றை கம்பால் தாக்கி சொல்கின்றனர். தெருவில் அவளைக் கத்தி கத்தி வாயாடச் செய்து பார்க்கத் தயாராகுகின்றனர். சிறுவர்களின் உலகத்தை அவர்களின் குசும்புத்தனங்களோடு உருவாக்கி யிருக்கிறார். ஒருவர் பயன்படுத்திய பொருள்மீது அவரின் நேரடி வாரிசுகளுக்கு உள்ள உணர்வார்ந்த பந்தத்தால் பிரியத்தோடு கைப்பற்றும் போது மூன்றாவது தலைமுறையான பேரன்கள், அல்லது பேத்திகள் எப்படி செயல்படுகின்றனர் என்பதைச் செல்லும் கதை ‘பேனாக்கள்’. மூத்தோர்களின் மீதான உறவழுத்தம் பேரன்களிடம் பொருளாசை மட்டுமாக மாறுவதையும் காட்டுகிறது.

வாழ்வின் எல்லா இழைகளும் கூடிவரும் போது குறைந்த ஆக்கமாக மாறிவிடுகிறது. அந்த மனோநிலையைப் படைப்பாளி எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அப்படித் தக்க வைத்து செயல்படுவதற்கான சூழல் நம்மிடையே இல்லை. ‘நொறுங்கல்’, ‘அடமானம்’, ‘நாக்கு’ போன்ற கதை கள் கைக்குச் சிக்கினது போகும் நிம்மதியின்மை பற்றிப் பேசுகின்றன. தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடும் காலம், சூழல் இவரின் கதைகளில் இடை யறாது தளும்புகின்றன. மகத்துவமான பகுதிகளை வலிமை மிக்க அழிவு சக்தி சிதறடித்துவிடுகிற கோலத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியாத கையாலாகத் தனத்தை நம் முன்வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள் கிறார். நம்மை கண்ணீரோடு, அக்கதைகள் சொல்லும் வாழ்க்கையோடு அரவணைக்க வைத்து விடுகிறார். கரிசல் மக்கள் மீது பெருங்காதல் படைப்பாளிக்கு இல்லாத பட்சத்தில் இதைச் சாத்தியமாக்க முடியாது. பொன்னம்மா கிழவிக்கு இந்தக் கரிசல் மீதிருந்த பேரன்பும், சிறு சிறு வியாபாரத்தின் வழி தன் உழைப்பால் உயர்ந்து வந்த சண்முகத்தின் வீழ்ச்சியும், பூச்சனின் சந்தைப் பயணமும் அவனின் மண்ணுடனான உறவும் சின்னாபின்னமாகிற சித்திரத்தை என்றென்றும் வாசக நெஞ்சிலிருந்து நீக்கிவிட முடியாது.

ஆடு மேய்க்கும் சிறுவர்களைப் பற்றிய கதை தான் ‘நீதி’, ஆனால் ஒரு ஊரே வறுமையோடு எழுந்து வந்துவிடுகிறது. பச்சைபிள்ளைக்காரி பால் ஊட்ட தவதாயப்படும் கதைதான் ‘நேரம்’. ஆனால் வேலை செய்யும் பிரதேசமே கதைக்குள் புரண்டெழுகிறது. அவளின் குடும்பமே ஒரு கணப் பொழுது கதைக்குள் தலைக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது. ‘தொலைவு’ தாய் மகன் உறவு பற்றி பேசும் கதைபோல தோன்றினாலும் வறுமையின் தத்தளிப்பில் கடந்து செல்ல வேண்டிய நெடிய தூரம் பின்னணியில் தெரிகிறது. கலவரபூமி பற்றி சொல்லும் ‘தகனம்’ பேதமைமிக்க அன்பான காலம் ஒன்றை இனம் காட்டுகிறது.

இந்தக் கரிசல்காட்டு மக்களின் உள்ளம் மூடு மந்திரம் மிக்கதல்ல, உள்ளுறைந்து கிடப்பதும் அல்ல. அந்தந்த கணத்தில் தங்கள் மொழியால் வெளிப்படுத்தியபடியே இருக்கின்றனர். தங்கள் சோகங்களை, கனவுகளை, விருப்பங்களை, கோவங் களை, எரிச்சல்களை, குரூரங்களை மொழியாலும் செயல்களாலும் வெளிப்படுத்தி ஆற்றிக்கொள் கின்றனர். வேதனைகளையும் பிரியமான பந்தங் களையும் அவர்களுக்கே உரிய வசவுகளோடும் ஏடாதிதனத்தோடும் வெளிப்படுத்தியபடி வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். இந்த வாழ்க்கையில் இவர்கள் சாதித்தது என்னவென்றால் ஒன்றுமே இல்லைதான். அப்படி ஒன்றுமே இல்லாமல்தான் வாழ்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? எல்லாத் துன்பதுயரங்களுடன் எழுச்சியையும் வீழ்ச்சியையும் செரித்து மீண்டும் மீண்டும் வாழ ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். வறுமையிலும் இப்படி வாழ்க் கையை நேசிக்கிற இந்த எளிய மக்கள் எல்லாப் பக்கங்களிலும் தலைகாட்டுகிறார்கள். செத்துக் கிடக்கும் பொன்னம்மா கிழவியின் வாயில் தெள்ளி போட்ட கரிசல் மண்ணைத்தான் காண்கிறோம். ஓகோ என்று வியாபாரத்தில் எழுந்துவந்த சண்முகம் பெரிய வியாபாரியின் மோசடியால் வீழ்ந்து விட்ட பின், பிடுங்கும் வறுமையிலிருந்து அன்றைய தினம் மீள மனைவி கரிசகாட்டின் இருட்டிலிருந்து மழை யுடன் மீண்டு வரும்போது குழந்தையைக் கோவ மில்லாமல் தோள்மாற்றுகிறான்.

பூமணியின் ‘பொறுப்பு’ கதையில் வரும் காளி முத்து வாத்தியார் நல்லவரா கெட்டவரா என்று சட்டென எடை போட்டு விட முடியாத தன்மையில் உருவாக்கியிருக்கிறார். எந்தவிதமாக தூக்கலும் உணர்வுகரமான வார்த்தைகளும் இல்லாமல் குக் கிராம இளையோர் பள்ளியில் அடர்ந்திருப் பவரைப் பார்க்க முடிகிறது. பள்ளித் திண்ணைகளில் ஆட்டுப் புழுக்கைகளும், நூலாம் படையின் தோரணங்களும், பின்புறத் தோட்டத்தில் கமலை இரைக்கும் ஓசையும், சாணித்தட்டப் போவோரும், வாய்ப்பாடு படிக்கும் மாணவர்களின் உச்ச ஸ்தாசியும், இறங்கு முகமும் அந்த வகுப்பறையே உயிர்த்துவ மாக இயங்குவதை வாசகன் உணர்கிறான்.

சுதந்திர தினத்திற்கான முன்னேற்பாடுகளில் வகுப்பறையைக் கழுவிவிடுவதும் விடிவிற்கு முன் வைகறையில் மாணவர்கள் குழுமியிருப்பதும் வெளிக்கு வந்தவர்கள் நின்று பார்ப்பதும் கொடிக் காசு கொண்டு வராததற்காக தொடை நசுக்கலில் மாணவன் திணறுவதும், கேட்காமல் பேனாவை எடுத்தவனுக்கு அடிவிழுந்து - பின் எழுதிட்டுத் தாடா’ என பேசுவதும் படைப்பில் வேறொரு அர்த்தப் பரிமாணத்தை அளிக்கிறது. காளிமுத்து வாத்தியார் மாணவர்களின் மூத்த மாணவராகவே மாறிப்போயிருக்கிறார் என்பது விளங்கும்.

மாணவர்கள் விடுமுறை என்று தெரிந்து ஓடி விடுகிறபோதுதான் எவ்வளவு நல்லவர் என்ற தோற்றத்தைக் காணமுடிகிறது. ‘எதுக்கு விடுமுறை விடுறான்க. பள்ளிக்கூடத்தை வைத்துத் தொலைத்தால் என்ன! என்று நினைப்பது வெளிப்படுகிறது. எதை யாவது படிக்கச் சொல்லி முகட்டைப் பார்த்து குறட்டை விட்டும் தூங்கும் மனிதர்தான் காளி முத்து வாத்தியார். ஆனால் இவர்களை மேய்ப்பதில் அலாதியான சுகத்தைக் காண்கிறார். அடிக்கக் கூடியவரும்தான். உடனே மறந்துவிட்டு தப்பு செய்கிற-செய்த மாணவனுக்கு அனுசரணையாக நின்று உதவக்கூடியவர். தி. ஜானகிராமன் எப் போதும் அபூர்வமான மனிதர்களைத் தம் கதை களில் பிடித்து நிறுத்தி வாசனை உலுக்கச் செய் வார். பூமணி சாதாரண மனிதர்களை எடுத்துக் கொண்டு அபூர்வமான உணர்வுகளுக்கு ஆளாக்கி விடுகிறார். இது ஒரு நல்ல படைப்பு வித்தையாகப் படுகிறது.

காளிமுத்து வாத்தியார் மனைவியின் நச்சரிப்புக்கு பயப்படக் கூடியவர். அவளின் வேலை பராக்கிர மத்தில் சிக்கினால் நொந்துப்போக நேரிடும். தோட்டம் துறவு என்று வேலை வாங்கி விடுவாள். அதற்கு பயந்துதான் விடுமுறையே தேவை இல்லை என்று நினைக்கிறார். வேறு தியாக உணர்வினாலோ அல்ல. ஆனாலும் அவர் மாணவர்களின் உலகத் தோடு இரண்டறக் கலந்தவராக மாறி இருப்பதை சொல்லாமல் குறிப்பால் உணர்த்தி விடுகிறார் பூமணி. கரும்பலகைக்கு சாயம் பூச நினைப்பதும், கிழிந்த துணியைப் போட்டுக் கொண்டு வராதே என்பதும், சரஸ்வதி பூஜை தினத்தில் புத்தகத்தின் முன் பிள்ளைகளோடு நிற்பதும், அடிப்பதும், திருத்து வதும் எளிதினும் எளிதான உருவத்தில் வருகிறார் காளிமுத்து வாத்தியார். நல்ல கதை இது.

‘கிழிசல்’ வேலையற்ற பட்டதாரி பற்றிய கதை. தாயின் இடைவிடாத ‘சொட்டிப் பேசுவது’ தாங்காமல் தற்கொலைக்கு முயல்கிறான். தூக்கிட்டுக் கொள்ள முயன்று முடியாமல் போய்கிறது. கல்லைக் கட்டி கிணற்றில் குதிக்கிறான். நீச்சல் பழகியவன். அவனால் மூச்சுத் திணறலைப் பொறுக்காமல் உலும்புகிறான். வேட்டிக் கட்டு கிழிந்து கல் அடியாழத்திலேயே நழுவிவிடுகிறது. கல்லைத் தூக்கி வந்து மீண்டும் சாகப் பார்க்கிறபோதுதான் வேட்டி கிழிந்து கிடக்கிறது. வீட்டில் வந்து தைத்துக் கொண்டிருக்கும்போது, தாய் சொட்டிப் பேசுகிறாள். அவன் எதையும் காதில் போடாமல் சிரித்துக் கொண்டே தைக்கிறான். மனதில் கிழிசலைத் தைப்பது போல இருக்கிறது. வறுமைமிக்க வாழ்வின் ஆதங்கத் திலிருந்து தாய் கத்துவதை உணர்ந்து கொள்கிறான். அவன் கிழிந்து போன வேட்டியைத் தைக்கவில்லை. தாஸ்-மகனிடம் சதா வெறுப்பின் இழையால் கிழியும் உறவையும் தான் பிணைக்கிறான். எதிர்பார்ப்பு களையும் ஏமாற்றங்களையும் அவன் புரிந்துகொள்கிற பக்குவம்தான் முக்கியமானது.

பூமணியின் கதைகளில் கிளம்பும் நடை உடை பாவம் நம்மை ஒரு பாத்திரமாக்கிப் பிணைக்கிறது. கதாமாந்தர்களுடன் நாமும் பின்தொடரும் நிழலாக மாறிவிடுகிறோம். ஏதோ நம் வீட்டில் நிகழ்ந்த நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பது போல மாற்றிவிடுகிறார். அதனை அவர் செய்யவில்லை. அவரின் படைப்பு மனம் நம்மை அவ்விதமாக உருமாற்றுகிறது. அக்கதாமாந்தர்களின் பேச்சு தன் தாயினுடைய பேச்சுப் போல இருக்கிறது. பதில் சொல்லமுடியாத இக்கட்டு - வாசகனின் இக்கட்டாகவும் இருக்கிறது. தாய், மகன், கணவன், சகோதரன், மாமா அவரவர்களுக்கு உரிய அதிகாரத்தி லிருந்து அல்லது மட்டுமரியாதையின் பிணைப்பி லிருந்து வெளிப்படுகிறார்கள். எவ்வளவு பெரிய சுமையிலிருந்து வெளிப்படும் சேனபத்தின் அடியிலும் வகைப்படுத்திவிட முடியாத பேரன்பின் ஈரம் கசிந்தபடி இருப்பதை வெளிப்படுத்தி விடுகிறார்.

ஏழ்மையான ஒரு விடலைப் பெண்ணுக்கு நேர்கிற முதல் தொடர்பு எவ்விதம் பிரச்சினைக்கு உரியதாக மாறுகிறது என்று சொல்கிற ‘கரு’ என்ற கதை, தமிழ்ச் சமூகத்தின் குணாம்சத்தை அசலாக இனம் காட்டுகிறது. புல்லறுக்க தோட்டத் தொரவு என்று அலைகிற பெண்ணுக்கு ஆடவனின் சந்திப்பு நேர்கிறது. இதனைக் காதலின் கூடல் என்பதா? கள்ளத் தொடர்பு என்பதா? என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு அது ஒரு பிரியத்தால் விளைந்த விளைவு என்ற உண்மையை மறக்கடிக்க விழைய வில்லை. தான் ஒரு அந்தஸ்தான ஆள் என்று காட்டித் திரியும் அப்பா. மூத்த மகளுக்கு தகுதிக்கு மீறி நகை செய்துபோடுவதாகக் கூறி செய்யாத தால் வாழாவெட்டியாக வந்திருக்கும் அக்கா. ‘அவள்’ நகை என்று அப்பாவிடம் தெரியப்படுத்தும்

போதும் ‘அப்படியா போடுறப்ப வந்து கூட்டிட்டுப் போகட்டும்’ என்று தெனாவெட்டாக பதில் சொல்லும் அப்பா, நம் அப்பாவின் பிரதிநிதியாக இருக்கிறார். கம்பைத் தூக்கிக்கொண்டு காவலுக்கும் பஞ்சா யத்திற்கும் ஓடுவதில் பெரிய கௌரவத்தைப் பார்ப் பவர். அவரின் இளைய மகள் கரும்பு ஆலைவைத் திருப்பவனுடன் தொடர்பு கொண்டிருப்பது. இந்தக் குறிப்புகள் கேலிக்காக இணையாமல் பெருமைக்குள் நிகழ்ந்த சரிவாகக் காட்டுகிறார்.

கருவைக் கலைக்க, கணவனுக்குத் தெரியாமல் தாய் எடுக்கிற முயற்சி மனசை வதைக்கிறது. கற்பு, கத்திரிக்காய் என்ற பழங்கீர்த்திக்குள் மனதை அவன் செலுத்த முடியாது. அவனை செருப்பால் அடிக்கணும் யாருக்கும் தெரியாமல் கருவை கலைத்து ஒருவன் கையில் பிடித்துத் தரவேண்டும். மகளுக்கு எந்த தொக்கமும் இல்லாமல் அது நடந்தேறவேண்டும் என்ற பதற்றம்; பிரச்சினை தெரிந்தால் ஆலைக் காரன் குடும்பமும் நாசமாகப்போகும். இருந்தாலும் அவனை செருப்பால் அடிக்கவேண்டும். புல்லறுக்கப் போகும்போது வைத்துக்கொள்ள வேண்டியது தான். தாயின் முணுமுணுப்பு வழி அவளின் ஆதங்கமும் கோவமும் அன்பும் வெளிப்பட்டபடியே இருக்கிறது. மகளுக்கு ஒரு பயம்தான் சக தோழி களுக்கு தெரியக்கூடாது. இந்தச் சித்திரத்தின் வழியே கிராமத்தின் வாழ்வியலில் கிடந்து உழலும் எண்ணற்ற பெண்கள் இதனைக் கடந்து வந்திருப் பதாகத் தோன்றுகிறது. தமிழின் மகத்துவமான கதைகளில் இதுவும் ஒன்று. எழுச்சியுடன் எழு வந்த பூமணியையும் அலுவலக வாழ்க்கை நின்று தீர்த்துவிட்ட போல இருக்கிறது - அவர் எழுதாமல் இருப்பது.

Pin It