தோழர் ஏ.எம்.கோபு அவர்களுக்கு வயது 82. கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் படித்துக் கொண்டிருந்தார். 12 வயது மாணவராக இருக்கும்போதே, அந்நிய ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கோபுவோடு சேர்ந்து நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தஞ்சையிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்கள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்தது.

am_gopu_400கோபு கும்பகோணம், புதுக்கோட்டை அரசுக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்; தொடர்ந்து அரசியல் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டார்; “பைந் தமிழ்ச் சங்கம்” என்ற அமைப்பை நிறுவினார்; அந்த அமைப்பின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி களுக்கு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள் பலரும் அழைக்கப்பட்டார்கள்; முன்னாள் முதல்வர் கலைஞர் இளைஞராக இருந்த காலத்தில் பைந் தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் பேசியதாகவும் குறிப்பு உள்ளது.

1945இல் அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மாநில மாநாடு திருச்சி மாநகரில் நடந்தது. அங்கு நடந்த பேச்சுப் போட்டியில் ஏ.எம்.கோவிந்தராஜன் என்ற மாணவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது; அவரேதான் இன்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் ஏ.எம்.கோபு ஆவார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் ‘ஜனசக்தி’ ஆசிரியர் குழுவுக்கு 1946-இல் அழைக்கப் பட்டார். “ஜனநாயகம்” என்ற மார்க்சிய தத்துவ மாத இதழ் துவங்கப்பட்டது. அவ்விதழில் ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்து வந்தார்.

மீண்டும் தஞ்சை மாவட்டத்துக்குச் சென்றார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களில் இணைந்தார்.

தஞ்சைத் தரணியில் நிலப்பிரபுத்துவ மிராசு தாரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துச் செங்கொடி இயக்கம் புயலாக வீசியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. நிலப்பிரபுக்களும், அவர் களின் அடியாட்களும் வைத்ததுதான் சட்டம். மீறினால் கொத்தடிமைகளாக வாழ்ந்து வந்த விவசாயத் தொழிலாளர்கள் சவுக்கால் அடிக்கப் படுவார்கள். தூண்களில் கட்டி வைத்து அடிக்கப் பட்டதோடு மட்டுமல்ல, சாணிப்பாலை மூங்கில் கொட்டாங்குச்சி மூலம் வாயில் ஊற்றிக் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். தட்டிக் கேட்க முடியாது; மிராசுதாரர்கள் அந்நிய ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதரவாளர்களாக இருந்ததால் ராவ் பகதூர், திவான் பகதூர் என்ற பட்டமும் அளித்து, நிலப் பிரபுக்களுக்கு அரசு பாதுகாப்பாகவும் இருந்தது.

நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களை கம்யூனிஸ்ட் செங்கொடி இயக்கம் ஒன்று திரட்டியது. சாகுபடி குத்தகை விவசாயிகளும், ஒடுக்கப்பட்ட விவசாயத் தொழி லாளர்களும், செங்கொடியின் கீழ் திரண்டார்கள். கிராமப்புறங்களில் சாதிகளின் ஒற்றுமையும் ஏற் பட்டது. செங்கொடி இயக்கம் போராடியவர்களை வர்க்க அரசியலாகத் திரட்டியதால், மிராசுதாரர் களால் சாதியடிப்படையில் மக்களைப் பிளவு படுத்த முடியவில்லை. “சவுக்கால் அடித்தால் திரும்பவும் அடிப்போம்” என்ற எதிர்க்குரல், அடி யாட்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஊர் ஊராகப் பேரணி தொடர்ந்தது; போரணியாகப் பரிணமித்தது. பண்ணை விவசாயத்துக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் கிடைக்கவில்லை. கிராம வேலைகளே முடங்கின.

நிலப்பிரபுக்களும் அதிகாரிகளும் பணிந்தனர். கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். கோட்ட அதிகாரி, காவல்துறை அதி காரி முன்னிலையில் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற் பட்டது. மிராசுதாரர்கள் தரப்பிலிருந்தும் “சவுக் கால் அடிக்க மாட்டோம், சாணிப்பால் ஊற்ற மாட்டோம்” என்று எழுதிக் கையெழுத்திட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் - விவசாயத் தொழி லாளர் அமைப்புகளின் சார்பில் கையெழுத்திடப் பட்டது.

நிலப்பிரபுக்கள் பணிந்து கையொப்பமிட்டது தஞ்சைத் தரணியில் பல நூற்றாண்டுகளாக நடந்த ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்ட ஆவணமாகக் கொண்டாடப்பட்டது. சட்டம் செய்யாததைச் சங்கம் செய்யும்; செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்தது. இதுவே முதல் வெற்றி முழக்கமாகக் கருதப்படுகிறது.

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் துவங்கிய செங்கொடி எழுச்சி நாகை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, தஞ்சை வட்டாரங்களுக்கும் பரவியது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த வெற்றி, சாகுபடி குத்தகை விவசாயிகளுக்கும் நம்பிக்கை அளித்தது. சாகுபடியாளர்களை நிலத்தை விட்டு வெளியேற்றியதை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்தன. கோனேரிராஜபுரம் வட்டாரத்தில் சங்கம் தோன்றியது; கிளர்ச்சி துவங்கியது. இப் போராட்டங்களில் தோழர் கோபுவும் தீவிரப் பங்கு கொண்டார்.

கிழக்குத் தஞ்சை முழுதும் விவசாயிகளின் எழுச்சி வேகமாகப் பரவியது. மிராசுதாரர்களும் சங்கமாகச் சேர்ந்தார்கள். தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்று அரசிடம் முறையிட்டார்கள். விவசாயிகளின் எழுச்சியைத் தாக்குப்பிடிக்க முடி யாமல் கம்யூனிஸ்டுகளின் கலகம் என்றும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் அவதூறு கிளப்பி னார்கள். பத்திரிகைகளும் ஆதிக்கக்காரர்களுக்குத் துணையாகச் செயல்பட்டன. இவ்வேளையில் தான் தோழர் பி.சீனிவாசராவ் “தஞ்சையில் நடப்ப தென்ன?” என்ற சிறு நூலை எழுதினார். கீழத் தஞ்சையில் வாழும் கிராமப்புற உழைக்கும் உழவர் பெருமக்களின் அவல வாழ்க்கை அதில் படம்பிடித்துக் காட்டப்பட்டது. மிராசுதார்களின் மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்தி எழுதினார்.

இக்காலத்தில்தான் களப்பால் குப்பு கைது செய்யப்பட்டார். திருச்சி சிறையில் விஷம் கொடுத்துக் கொல்லப் பட்டார்.

1949-50களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைவர்களெல்லாம் தலைமறைவாகவே இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக்கப்பட்டார்கள். தோழர் கோபுவும் தலைமறைவானார். பிடி வாரண்டுள்ளவர் களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நூறு, ஆயிரம் என்று சன்மானம் வழங்கப்படுவதாகக் காவல்துறையிலிருந்து விளம்பரம் செய்யப்பட்டது.

தலைமறைவு என்பது கைது செய்யப்படாமல் ஒதுங்கியிருப்பதல்ல; மக்களைத் திரட்டிப் போராடு வது என்பதே. அங்கங்கே போராட்டங்கள் நடத்தப் பட்டன. அரசின் அடக்குமுறையும் தேடலும் நீடித்து வந்தன.

தஞ்சை மாவட்டத்திலும் மற்றும் சில இடங் களிலும் கொடூரமான சில பழக்கங்கள் நடை முறையில் இருந்தன. ஒடுக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் திருமணமாவதற்குமுன், இளம்பெண்களை மிராசு தாரர் மூலம் கன்னி கழிப்பது என்ற நீசத்தனமான செயல்கள் சமூக அங்கீகாரத்தோடு அனுமதிக்கப் பட்டு வந்தன. பேரளம் அருகில் தோழர் கோபுவும் மற்ற தோழர்களும் தலைமறைவாக முகாமிட்டிருந் தார்கள். சருக்கை என்ற கிராமத்தில் திருமணத் திற்கு முதல் நாள் இளம்பெண்ணிடம் மிராசுதாரர் மகாதேவன் அய்யர் பாலியல் வன்முறையில் ஈடு பட்ட தகவல் அறிந்தார்கள். தோழர் கோபுவின் தலைமையில் தோழர்கள் ஆத்திரத்தோடு திரண்டு சென்றார்கள். மிராசுதார் தாக்கப்பட்டார். மிராசு தார் கொலை செய்யப்பட்டதாக வழக்கும், தோழர் கோபு மீது போடப்பட்டது. காரைக்கோவில் பத்தில் நடந்த கொள்ளை வழக்கு ஒன்றும் கோபு மீது பதிவு செய்யப்பட்டது.

காரைக்கால் புதுவை அரசுக்குட்பட்டது. பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்தது. பிரெஞ்சு சட்டப்படி ஆயுள் தண்டனை என்றால் உயிருள்ளவரை சிறைத் தண்டனையாகும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீக்கப்பட்டதும், தலைவர்களின் பெருமுயற்சியால் காரைக்காலிலிருந்து வழக்கு சென்னை மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.

தோழர் கோபு திருவாரூர் வட்டாரத்தில் தலைமறைவாகத் திரிந்து வந்தார். காவல்துறை இவரைச் சுட்டுப் பிடித்தது. இறந்து விட்டார் என்று மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட போது, உயிருடன் இருப்பதாக டாக்டர் உணர்ந்தார். கோபு பாதுகாக்கப்பட்டார். ஆனால் அவரின் வலக்கையில் துப்பாக்கிச் சூட்டின் ரவைத் துகள்கள் இன்னும் எலும்பில் குத்தியுள்ளன. வேதனையைத் தாங்கியும் முஷ்டி உயர்த்திக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது கோபுவின் நெஞ்சுரத்தைக் காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் தலைவர் மணலி கந்தசாமி தலைமறைவாக இருந்தே 1952-இல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தலைமறைவாக இருந்து வெளிவந்த அன்று வெளியிட்ட அறிக்கையில் தடைசெய்யப்பட்ட காலத்தில் காவல்துறையினர் செய்த கொடுமைகளையும், தன் குடும்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு, பொருள் இழப்புகளையும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அருமை இளம் தோழர் கோபு சுடப்பட்டு உயிர்பிழைத்ததையும் குறிப்பிட்டுத் தன் வேதனைகளை வெளிப்படுத்தி யிருந்தார்.

1968 டிசம்பர் 25 அன்று இந்திய சமுதாயமே வெட்கித் தலைகுனியும் சம்பவம் கீழவெண்மணியில் நடந்தது. 44 தலித் விவசாயத் தொழிலாளர்கள் குடிசையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஏ.எம்.கோபு மற்றும் தோழர்கள் சென்றார்கள். தீயில் கருகிய உடல்கள் அடுக்காக வைக்கப் பட்டிருந்தன. அரசு தரப்பில் மரணம் 43 என்று அறிவிக்கப்பட்டது. தோழர் கோபு, ஒரு பெண்ணின் மார்போடு அணைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் உடலையும் கண்டெடுத்தார். அவர் தலையிட்டுத் தெரிவித்ததால்தான் 44 என்று ஒத்துக்கொள்ளப் பட்டது.

தஞ்சைத் தரணியில் மூன்று மாவட்டங்களிலும் இரு சக்கரவண்டி மூலமே பயணித்து இயக்கங் களைக் கட்டி வளர்த்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர் களின் உரிமைக்காகப் பல முறை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியவர் கோபு. மருத்துவர்கள் அவரது உடல்நிலையைச் சோதித்து, உண்ணா விரதத்தை நிறுத்தவேண்டுமென்று தெரிவித்த போதும் பிடிவாதத்துடன் நீடித்தார். அரசு இறங்கி வந்தது. சில உரிமைகள் வழங்கப்பட்டன.

சென்னை டி.ஐ. சைக்கிள் போராட்டத்திலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே.டி.கே. தங்கமணி, தொழிற்சங்கத் தலைவர் குசேலர் ஆகியோருடன் சேர்ந்து டி.ஐ. சைக்கிள் தொழிற் சங்க உரிமைக் காகப் போராடினார்.

ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிற்சாலை மூடப்பட்டதை எதிர்த்தும் தொழிலாளர்களின் ஊதியத்துக்காகவும் இரண்டு முறை தொடர் உண்ணா விரதப் போராட்டத்தில் தனியாக இருந்தார். அரசு தலையிட்டுச் சில சலுகைகளை அளித்தது.

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

ஏ.எம்.கோபு தலைமையேற்ற நடத்திய போராட்டங்கள் தமிழகம் முழுவதிலும் கொந் தளிப்பை ஏற்படுத்தின. ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தன. சில போராட்டங்கள் வெற்றி பெற்றன. பல போராட்டங்களின் தொழிலாளர்களுக்குச் சலுகைகள் கிடைத்தன.

தோழர் கோபு அவர்களின் எழுபதாண்டு அரசியல் வாழ்க்கை அப்பழுக்கற்றது. உழைக்கும் மக்களின் துயர் கண்டு துடித்துக் கொதிப்பவர். உடன் களம் சென்று தீர்வு காணும் சிறந்த போர்க் குணம் படைத்தவர்.

தோழரின் ஆருயிர்த் துணைவியார் திருமதி காமாட்சியம்மாள் ஒரு கோர விபத்தில் காலமானார். முதிய வயதில் யாருக்கும் ஏற்படக்கூடாத பேரிழப்பு அன்புத் தோழர் கோபுவுக்கு நிகழ்ந்து விட்டது. ஆறாத் துயரத்தையும் தாங்கிக்கொண்டு இன்றும் களம் இறங்கிப் போராடும் நெஞ்சுரம் கொண்ட தோழர் கோபு அவர்களுக்குப் புரட்சி வணக்கம்.

நன்றி : தோழர் ஏ.எம்.கோபு எழுபதாண்டுத் தியாக வாழ்வு சிறப்பு மலர்.

Pin It