ஒவ்வொரு இனக்குழுச் சமூகமும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டு வருகின்றது. தொழில் என்பது இனக்குழுச் சமூகத்தின் தனித்த அடையாளம். இத்தொழில்சார் இயங்கு வாழ்க்கை, இயற்கை சார்ந்தும் உயிரினம் சார்ந்தும் அமைகின்றது. கீதாரிகளின் இனக்குழுச் சமூகம் உயிரினம் சார்ந்த தொழிலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நான்கிலிருந்து ஆறு வரையிலான ஆடு மேய்க்கின்ற குடும்பத்திற்குத் தலைவரே கீதாரி ஆவார். காடும் காடு சார்ந்த முல்லை நிலப் பகுதி மக்களின் தொழில் கால்நடை மேய்த்தல் ஆகும். முல்லை நிலவாழ் மக்கள் ஆயர், இடையர், கோவலர், பொதுவர், அண்டர் முதலான பெயர்களில் அழைக்கப்பட்டனர். தொல்காப்பியத்திலும் ஆயர் இனமக்கள் குறிக்கப்பெற்றுள்ளனர்.

“ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”     (தொல்.அகத்திணை,967)

தமிழகத்தில் கால்நடை மேய்ப்போர் ஆயர், கோவலர், இடையர், கோனார், கீதாரி முதலான பல பெயர்களைக் கொண்டுள்ளனர். காடுகள் சார்ந்து வாழக்கூடிய கீதாரிகள் இன்றளவும் தங்களது முன்னோர்களின் குலத்தொழிலான மேய்ச்சல் தொழிலோடு ஆடுகளின் கழிவுகளையே மூலதனமாகக் கொண்ட கிடைத் தொழிலை மேற்கொண்டு வருமானம் ஈட்டி வாழ்ந்து வருகின்றனர். இத்தகு மேய்ச்சல் சமூகத்தினரின் வருவாய் ஈட்டுகின்ற ஆடுகளைக் குறித்தும் பல்வேறு ஆடுகள் இருப்பினும் கிடை போடுவதற்கான தொழில்சார் ஆடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணத்தையும் ஆய்ந்தறியும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.shepherdகீதாரிகள் - அறிமுகம்

தென்தமிழகத்தில் பெரும்பாலும் கோனார் சமூகத்தைச் சார்ந்தவர்களே கீதாரிகளாகக் கருதப்படுகின்றனர். தமிழ்ப் பேரகராதி கிடைகளுக்குத் தலைவராக இருப்பவரைக் கீதாரி என்றும் கீதாரி என்ற சொல்லிற்கு “இடையர்களின் தலைவன்” என்றும் (தமிழ்ப்பேரகராதி (தொகுதி 4) : 948) குறிப்பிடுகிறது. கீதாரி என்ற சொல் கீத்து என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்ததாகும். கீத்து என்னும் சொல்லிற்கு “ஈனுதல்”; என்பது பொருள் (தமிழ்ப் பேரகராதி (தொகுதி 2) : 769). கிடைபோடுதல் வழி வருமானம், கால்நடைகளை விற்பதால் வரும் வருமானம் முதலியவற்றால் குடும்பம் நடத்தி வருகின்றனர். நிலத்தோடும், வாயில்லா உயிரினங்களோடும் பின்னிப்பிணைந்திருக்கும் வாழ்வினை வாழ்ந்து வருகின்றனர்.

“கோனான், கோனார் என்பன இடையர்களின் பட்டப்பெயர், கொல்லர் சிலர் தங்களைக் கோனான் என அழைத்துக் கொள்கின்றனர்.” (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், (தொகுதி 3): 450).

கீதாரி மேய்ச்சல் தொழில் செய்தாலும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நெடுந்தூரம் தங்கள் ஆடுகளை அழைத்துச் சென்று கிடையிட்டு வருகின்றனர். “இடையர்களிடையே மற்ற சாதியரிடையே காணப்படுவதைப் போல ஊர்ப் பஞ்சாயத்து முறை வழக்கில் உள்ளது. கீதாரி அல்லது கீலாரி என்பவனை அது தலைவனாகப் பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். ஊரைச் சேர்ந்த ஆடுகளைப் பார்த்துக் கொள்வதும் அவற்றைப் பட்டியில் அடைப்பதும் இவன் பொறுப்பாகும். சில இடங்களில் சாதித் தலைவன் அம்பலக்காரன் என்றும் அழைக்கப்படுகின்றான்.” (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், (தொகுதி 2) : 462).எனக் குறித்திருப்பதும் எண்ணத்தக்கது. கள ஆய்வுத் தகவலாளர்கள், பெருந்தாலி இடையர்கள், சிறுதாலி இடையர்கள் என இரு வகைமையாக இக்கீதாரிகள் அமைவதைச் சுட்டினார்கள். இதனை “இடையர் கைக்கோளர் சாதிகளுக்குரிய உட்பிரிவின் பெயர். இப்பிரிவினர் பெரிய அளவிலான தாலியினை அணிவர்” (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்,(தொகுதி 6): 213)எனும் சான்றும் குறிப்பிடுகிறது. பெரிய அளவிலான தாலியினை அணிகின்ற இடையர்களாதலால் பெருந்தாலி இடையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்பிரிவினர் இன்றைய காலகட்டத்தில் வணிகம், சிறுதொழில் எனப் பல்வேறு தொழில்களைச் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். இதனைக் கள ஆய்வுத் தகவலாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

சிறுதாலி இடையர்களை “மணமான பெண்கள் அணியும் தாலியின் அமைப்பைக் கொண்டு ஏற்பட்ட பிரிவுகள்” (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், (தொகுதி 2) : 459) எனும் சான்றின் வழி அறிய இயலுகின்றது. சிறிய அளவிலான தாலியினை அணியக்கூடியவர்கள் சிறுதாலி இடையர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இப்பிரிவின மக்களே கீதாரிகளாகக் கிடையிட்டுத் தங்கள் குலத்தொழிலைச் செய்து வருகின்றனர். செல்கின்ற இடங்களில் மண்வளம் செழிக்க வயல் வெளிகளில் ஆடுகளைக் கொண்டு கிடை போட்டு வருகின்றனர்.

தொழில்: காலநிர்ணயம்

ஆடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கிடைக்காக அழைத்துச் செல்வதால் கீதாரிகளை “ஆட்டுக்காரர்கள்” என்றும் பல ஆடுகள் வைத்திருக்கும் கீதாரிகளிடமிருந்து சில ஆடுகளைப் பெற்றுக் கூலிக்காக மேய்ப்பவர்கள் “வரத்தாட்டுக்காரர்கள்” என்றும் அழைப்பதுண்டு. கீதாரிகள் வருமானத்திற்காக நெடுநாட்களாக இடம்பெயர்ந்து சென்று கிடையமைத்து வாழ்ந்து வருகின்றனர். ‘ஆட்டுரம் ஓராண்டு நிற்கும்.. மாட்டுரம் ஆறாண்டு நிற்கும்..’ என்றொரு பழமொழி உண்டு. வேளாண் விளை நிலங்களின் மண்வளத்தைச் செறிவூட்டுவதற்காக தங்களுடைய ஆடுகளை அழைத்துச் சென்று கிடையமைக்கின்றனர். ஆடுகளின் கழிவுகளே விளைநிலங்களின் உரமாக மாறி மண்ணிற்கு வளமூட்டுகின்றன. நிலத்தின் உரிமையாளர் வழங்குகின்ற கூலியைப் பொறுத்தும் நிலத்தின் பரப்பளவைப் பொறுத்தும் எத்தனை நாட்கள் கிடையமைப்பது என்று கீதாரிகளே நிர்ணயிக்கின்றனர். பத்து, இருபது நாட்களோ அல்லது மாதக் கணக்கிலோ கிடையமைத்து அந்த நிலத்திலேயே தாங்களும் குடும்பமாகத் தங்கி வருகின்றனர். உணவு, இருப்பிடம் என அனைத்தையும் கிடை அமைக்கின்ற இடத்திலேயே அமைத்துக் கொள்கின்றனர்.

தொழில்சார் உயிரின வகைமை : களப்பார்வைத் தகவல்கள்

செம்மறியாடுகள் கொண்டே கிடையமைக்கின்றனர். பழங்காலம் முதல் இன்று வரை செம்மறியாடுகள் வளர்க்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. செம்மறியாடுகள் கிடை வளர்ப்பு சார்ந்தும், பொருளாதார நிலை சார்ந்தும் மிகவும் பயனுள்ளவை. இந்த செம்மறியின் கழிவுகள் மற்றும் உதிரும் உரோமங்கள் வயலுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்களை வழங்கி மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகின்றன.

மதுரை மாவட்டம் அத்திபட்டி கிராமத்தில் தம்முடைய குடும்பத்துடன் வசித்தும் ஆடு மேய்த்தும் கிடையமைக்கும் தொழில் செய்து வருகின்றனர். பொன்னுத்துரை (கள ஆய்வுத்தகவலாளர், அத்திப்பட்டி, 01.05.2023) என்பவர் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். கடலாடிப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்துள்ளார். இவர்; தங்கள் குலத்தொழிலான மேய்ச்சல் தொழிலையே தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றார். பொருளாதாரத்திலும் வாழ்க்கை முன்னேற்றத்திலும் இத்தொழிலே தங்களை முன்னேற்றமடையச் செய்து வருகின்றதாகக் கூறுகின்றார். விளைநிலங்களின் தன்மையை வலுவூட்டவே தங்களின் தொழில் பெரிதளவில் பயன்பட்டு வருவதாகக் கூறினார். செம்மறியாடுகளோடு நான்கு வெள்ளாடுகளும் வளர்த்து வருகின்றார். செம்மறியாடுகள் மந்தையாகவே செல்லும் பண்புடையது. மேய்ச்சலின் போது செம்மறி வழி தப்பினால் வெள்ளாடுதான் வழியறிந்து செம்மறி மந்தையை வழிநடத்திச் செல்லுமெனக் கூறினார். தங்களது ஆடுகளைப் பராமரிக்கவும் அவற்றை அடையாளம் காணவும், தோற்றம், நிறம் கொண்டு பகுத்து அழைக்கின்றனர்.

.              வெளிச்சி ஆடு - ஆட்டின் உடற்பகுதி முழுவதும் வெள்ளை நிறம் கொண்ட ஆடுகள்.

.              பட்டணத்து ஆடு - உடற் பகுதி முழுவதும் வெள்ளை நிறமும் அடிவயிற்றுப் பகுதி கறுப்பு நிறமும் கொண்ட ஆடுகள்.

.              ராயா ஆடு - செந்நிறம் போன்ற சிவப்பு நிறமுடைய ஆடு

.              மூளியாடு - பிற ஆடுகளின் அமைப்பிலிருந்து வேறுபட்டுச் சிறிய அளவிலான காதுகளை உடையவை.

.              தாலி ஆடு - ஆட்டின் கீழ் தாடைகளுக்குக் கீழ் தாலி போன்று தொங்கும் அமைப்புடையவை.

.              கொப்பாடு - கொம்புகளை உடைய ஆடுகள்

.              புருவை ஆடு - ஈனாத ஆடுகள்.

மேலும் செம்பவர் ஆடுகள், கரும்புள்ளி ஆடுகள், செம்புள்ளி ஆடுகள் எனப் பல வகையான அடையாளங்களைக் கொண்ட ஆடுகளை அடையாளப் படுத்துகின்றனர்.

தொழில்சார் தன்மை (கிடையிடுதல்)

தென் தமிழகத்தில் கிடை போடுவது என்பது கீதாரிகளின் பாரம்பரியத் தொழில் ஆகும். ‘ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை’ என்றொரு பழமொழி உண்டு. இப்பழமொழி ஆட்டுக்கிடையிடுதலின் சிறப்பை விளக்கி நிற்கின்றது. பகலில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை இரவில் விளை நிலத்தில் சுமார் 200 முதல் 500 செம்மறி ஆடுகளைக் கொண்டு வேலியிடப்பட்ட வயலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்க வைப்பதே கிடை ஆகும். இவ்வாறு இரவில் தங்குகின்ற ஆடுகளால் இடப்படும் கழிவுகளான சாணம், சிறுநீர் போன்றவற்றை சேகரிப்பதே இந்தக் கிடையின் முக்கிய நோக்கமாகும். விளை நிலங்களின் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் இவ் ஆட்டுச்சாணத்திலும், சிறுநீரிலும் காணப்படுகின்றது. கிடை கட்டுதலில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். பெண்கள் தங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கின்ற வளசைக் குடியிருப்பான குடாப்புகளில் தங்கியிருக்கின்றனர். ஆடுகளை மேய்ப்பவர்கள் பகல் முழுவதும் ஆடுகளைப் புல்வெளிகளில் மேய்த்து விட்டுப் பின்னர் குளம், கண்மாய்களில் தண்ணீருக்கு அழைத்துச் சென்று பின்னர் அந்தி சாயும் நேரத்தில் ஆடுகளைக் கிடைக்கு அழைத்து வந்து நிலத்தின் பரப்பளவிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு பகுதியாகக் கிடையிடுவர். ஒரு நாள் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதையும் அவற்றை உரிமையாளரிடம் பேசி கீதாரியே பெற்றுத் தருவார். அந்த நிலத்தின் எந்தப் பகுதியில் கிடையிட வேண்டு;ம் என்பதை கீதாரியே முடிவு செய்வார். தேர்ந்த இடத்திலேயே தங்களது குடாப்புகளை அமைத்து ஆடுகளைப் பாதுகாப்பர். கிடையிட்டுக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆடுகளுக்குத் தேவையான மருந்துப் பொருள்களையும் வாங்குகின்றனர், தங்கள் வாழ்க்கையையும் நகர்த்திச் செல்கின்றனர்.

தொழில்சார் உயிரினம் : வெள்ளாடா? செம்மறியா?

ஆடுகளின் இனம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பண்பினைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு இன ஆட்டிற்கும் தனித்த பண்புகளும் தனித்த அடையாளங்களும் காணப்படுகின்றன. இருப்பினும் கீதாரிகள் தங்கள் கிடைத்தொழிலுக்கு ஆடுகளை அறிவுசார் நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் தேர்ந்தெடுக்கின்றனர். அறிவியல், வாழ்வியல் தன்மையிலான ஆடுகளின் தேர்வு வியப்பூட்டுகின்றது. ஆடு மேய்க்கின்ற தொழில் புரியும் கீதாரிகள் பொருளாதார முறையில் குறைந்த செலவில் வளர்க்கக்கூடிய செம்மறி ஆடுகளைத் தேர்வு செய்கின்றனர். த.திருநாவுக்கரசர் அவர்கள் “செம்மறியாடுகள் மந்தையாகவே மேய்கின்ற பண்புடையவை, வெள்ளாடு மற்றும் மற்ற இன ஆடுகள் தனித்தனியாக மேய்கின்ற பண்புடையவை. செம்மறியாடுகள் சாதுவான தன்மை பெற்றவை. வெள்ளாடுகள் சுதந்திரமானவை. செம்மறியாட்டின் பராமரிப்பு எளிது. வெள்ளாட்டின் பராமரிப்பு கடினம். செம்மறியாடு மேய்ச்சல் நிலத்தின் தரைப்புற்களை மட்டுமே மேயக்கூடிய பண்புடையவை. வெள்ளாடு செடி, கொடி, மரம் என அனைத்தையும் மேய்கின்ற பண்புடையவை. மற்ற இன ஆடுகளோடு செம்மறியாடுகள் பெரிதளவில் வேறுபாடு இல்லையெனினும் பொருளாதார அளவில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடியவை.

செம்மறியின் கழிவுகளான சாணம் மண்ணிற்குத் தேவையான நைட்ரஜன் பாஸ்பேட் சத்தினையும், சிறுநீர் விளைநிலங்களுக்குத் தேவையான பல நுண்ணூட்டச் சத்துக்களையும் இயற்கையாகத் தருகின்றன. செம்மறியாட்டின் வெப்பம் விளைநிலங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். செம்மறியாடுகள் குளிர், வெயில் என அனைத்துத் தட்ப வெப்ப காலநிலைப் பருவங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவை. புல்லின் மேற்பகுதியை மட்டுமே மேய்வதால் மேய்ச்சல் தரைகள் மற்றும் மரங்களையும் செம்மறி ஆடுகள் அழிப்பதில்லை” (தகவலாளர் : த.திருநாவுக்கரசன், கால்நடை மருத்துவர், மதுரை, 19.09.2023) எனச் செம்மறியாடுகளின் அறிவியல் பண்புகளையும் வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கான வேறுபாடுகளையும் புலப்படுத்தினார். கிடையிடுபவர்கள் செம்மறியாடுகளைத் தேர்வு செய்வதன் முக்கிய காரணம், மந்தையைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எளிதாக ஓட்டிச் சென்று விடலாம். இறைச்சி மற்றும் கம்பளி செய்யப் பயன்படும் அடர்த்தியான உரோமத்திற்காக செம்மறியாடுகளை வளர்க்கின்றனர். “விவசாயிகளே வெள்ளாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். செம்மறியாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். பட்டி அடைத்து வளர்க்க வேண்டும் முதலான பல காரணங்களினால் பண்ணைகளில் வளர்ப்பது குறைவு. ஆனால் கிடையிடுபவர்களுக்கோ செம்மறியாடுகளே அதிகளவில் பயன்தருகின்றன. திறந்த வெளியில் மேய விட்டும், இடவசதி குறைவாகக் காணப்படுகின்ற இடங்களில் பட்டிகளில் அடைத்தும் ஆடுகளை வளர்க்கலாம். மந்தையாகவே மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதால் பராமரிப்பும் எளிதாகின்றன. 100 ஆட்டிற்கு 1 ஆள் மட்டுமே போதுமானது” (தகவலாளர் : மலையராஜா, அத்திப்பட்டி, மதுரை, 01.05.2023) எனக் கருத்துரைப்பதும் கருதத்தக்கது.

நிறைவுரை

கீதாரிகள் நேசித்து வளர்க்கும் ஆடுகள் இடும் எச்சங்கள் நிலச் செழிப்பிற்கும் கீதாரிகளின் வாழ்வியல் வளமைக்கும் காரணமாகின்றன. வாயில்லா அஃறிணைகளே (ஆடுகள்) கீதாரிகளின் தொழில் மூலதனமாகின்றன. பல்வேறு வகையான ஆடுகள் இருப்பினும் செம்மறியாடுகளே கிடைத்தொழிலுக்கு ஏற்ற ஆடுகளாக அமைகின்றன. செம்மறியாடுகளைக் கையாள்வதும் பராமரிப்பதும் மேய்ச்சலின் பொழுது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் எளிதான செயலாக இருப்பதால் கீதாரிகள் தம் கிடைத்தொழிலுக்கு செம்மறியாடுகளையே தேர்வது புலனாகின்றது. மேலும், வெள்ளாடுகளின் சுதந்திரப்பண்பு செம்மறியாடுகளுக்கு இல்லை என்பதும் விளைபயிர்களைத் தீண்டாது தரைப்புற்களை மட்டுமே மேயும் பண்பு செம்மறியாடுகளுக்கு உண்டு என்பதும் கள ஆய்வுத் தகவலாக இருப்பினும் அறிவியல் மெய்ம்மை சார்ந்த கருத்தாகவும் இதனை நோக்க முடிகின்றது.

துணை நின்றவை

தமிழண்ணல், “தொல்காப்பியம் மூலமும் கருத்துரையும்”, செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், ஆறாம் பதிப்பு 2021.

எட்கர் தர்ஸ்டன், (மூலநூல் ஆசிரியர்), முனைவர் க.ரத்னம், (மொழிபெயர்ப்பு ஆசிரியர்), “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”, தொகுதி 2, தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், மறுபதிப்பு 2010.

எட்கர் தர்ஸ்டன், (மூலநூல் ஆசிரியர்), முனைவர் க.ரத்னம், (மொழிபெயர்ப்பு ஆசிரியர்), “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”, தொகுதி 3, தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், மறுபதிப்பு 2010.

எட்கர் தர்ஸ்டன், (மூலநூல் ஆசிரியர்), முனைவர் க.ரத்னம், (மொழிபெயர்ப்பு ஆசிரியர்), “தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”, தொகுதி 6, தமிழ்ப் பல்கலைக்கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர், மறுபதிப்பு 2010.

- ஜீ.ஜெனித் குமார், முனைவர் பட்ட ஆய்வாளர்,  நெறியாளர்: முனைவர் ந. அருள்மொழி , இணைப் பேராசிரியர் (தமிழ்த்துறை) அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி) சிவகாசி.

Pin It