வரலாற்றுத் தொடக்ககாலத் தமிழ்ச் சமுதாயம் குறித்து கனகசபைபிள்ளை தொடங்கி கடந்த ஒரு நூற்றாண்டாகப் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு கோணங்களிலும், வெவ்வேறு ஆய்வுத் தளங்களிலும் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவ்வாய்வுகள் பலவும் வரலாற்றுக் கோட்பாடுகளின் நோக்கில் அல்லாமல் ஆய்வு நோக்கத்திற்கும் அறிவுத் தளத்திற்குமேற்ப அமைந்தன. திணைக் கோட்பாடுகளை உள்ளடக்கி வரலாற்றுத் தொடக்ககாலச் சமுதாயத்தை முதன் முதலில் அணுகியவர் கார்த்திகேசு சிவத்தம்பி ஆவார். அவரைப் பின்பற்றி மார்க்சிய அணுகுமுறையில் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கிப் பல ஆய்வாளர்கள் தமது ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரைகள் பெரும்பாலும் தமிழில் அமைந்தவை. மார்க்சிய - அமைப்பியல்வாத ஆய்வுத் தளத்தை முன்னெடுத்து சங்க இலக்கியங்கள் காட்டும் சான்றுகளுடன், பிற துறைச் சான்றுகளையும் ஒன்றிணைத்து சங்ககாலச் சமுதாயத்தை மானுடவியல் நோக்கில் விளக்க முற்பட்டவர்களுள் ராசன் குருக்களும் அடங்குவார். சங்க இலக்கியங்களை முக்கிய சான்றாகக் கொண்டு பிறதுறைகளான தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், சமூகவியல் கோட்பாடுகளை ஒன்றிணைத்து வரலாற்றுத் தொடக்ககாலத் தமிழ்ச் சமூகம் குறித்த கட்டுரைகளை 1980களில் தொடங்கி 2010 வரை அவர் வெளியிட்டுள்ளார். அக்கட்டுரைகளை ஒன்று சேர்த்து நூலாக 2010 ஆம் ஆண்டு தொடக்ககாலத் தென்னிந்தியாவில் சமூக உருவாக்கம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.1 அந்நூல் இன்னும் தமிழக ஆய்வாளர்களின் பார்வைக்கு வராமல் இருக்கலாம்.
தமது நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் முடிவாக அவர் தர முற்படுவது சங்ககாலத்தில் அரசுருவாக்கம் ஏற்படவேயில்லை என்பதும் அக் காலத்தில் தமிழர்கள் இனக்குழுச் சமுதாயமாகவே இருந்தனர் என்பதும் அவர்கள் வேட்டையாடிப் பிழைத்தும், கொள்ளையடித்துப் பிரித்துண்டும் வாழ்ந்தனர் என்பதும் வளமையான குறு மருதநிலப் பகுதியில் மட்டும் பல உற்பத்தித் தொழிலை மேற் கொண்டிருந்தனர் என்பதும் ஆகும்.2 உரோமானியர்கள் வணிகத்திற்காக இங்கு வந்தனர் என்றாலும் இங்கு அதற்கான ஒழுங்கான வணிகக் கட்டமைப்பு இல்லை என்ற வாதத்தையும் முன்வைக்கிறார். இருப்பினும் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகளை வெளிப் படையாக (நேரடியாக) பயன்படுத்த இயலாது எனினும் நிறுவனம் (Institutional) மற்றும் கருத்தியல் (Ideational) சார் சூழலமைவுகளின் உண்மைத் தன்மையைப் புறந்தள்ள இயலாது எனவும் சுட்டுகிறார்.3 தொடக்க காலத் தமிழக வரலாறு குறித்து இறுதியாக வெளி வந்துள்ள இவர் நூலில் உள்ள கருத்துகள்தான் தற்போது வட இந்தியாவில் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங் களில் கற்பிக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் காட்டும் இரும்புக்கால இனக்குழு வாழ்க்கைமுறை எச்சச் சான்றுகளை மட்டும் இவர் கையாண்டு நகர மயமாக்க, அரசுருவாக்கக் கூறுகளை இயன்றவரைத் தவிர்த்து தமிழ்ச் சமுதாயத்தை இனக்குழுச் சமுதாயமாகக் காட்டுகிறார். சங்க இலக்கியங்களில் காணப்பெறாத சொற்களைத் தமது ஆய்வில் சுட்டுவதோடு அல்லாமல் இவர் அளித்துள்ள ஆய்வுச் சான்றுக் குறிப்புகள் பல பிழையானவையாகவும் கருத்தாடலுக்குத் தொடர் பில்லாமலும் உள்ளன.4 இவரின் பல கருத்துகளை மீளாய்விற்கு உட்படுத்தவேண்டும். காட்டாக, தொடக்க காலத் தமிழ்ச் சமுதாயத்தில் உடை குறித்த இவரின் கருத்துகள் கீழ்க்காணுமாறு உள்ளன.5
“தமிழர்களின் ஆடையும், அணிகலன்களும் திணைக்கேற்றவாறு மாறுபட்டன. குறிஞ்சித் திணையில் வாழ்ந்தவர்களின் உடை இலைதழை களாலும் மரப்பட்டைகளாலும் பூக்களாலும் அமைந்தன. இந்நிலத்தின் தலைவர்கள்கூட மரப்பட்டைகளையும் இலைகளையும் உடலிலும் தலையிலும் சூடினர். குறிஞ்சி முல்லைத் திணையில் வாழ்ந்தோர், இறந்தோர் அனைவரும் மயிலிறகு, தளிர் இலைகள் மற்றும் பூக்களாலான மாலைகளை அணிந்தனர். பிற திணையில் வாழ்ந்த வர்கள் பருத்தியிலான உடையை அணிந்தது போலத் தெரிகிறது. இருப்பினும் அது குறைந்த அளவிலேயே இருந்திருக்கக்கூடும்.’’
மேலும் அவர் பிறிதொரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார்.6
“சில தமிழக வாழ்விடங்களில் கண்டுபிடிக்கப் பட்ட சுடுமண் தக்களிகள், சாயத்தொட்டிகள் தமிழகத்தில் நெசவுத்தொழில் நடந்துள்ளமைக்குச் சான்றுபகர்வதோடு தொழில்நுட்பத்திறனையும் வெளிப்படுத்துகின்றன. அகழாய்வுகளில் கண்டு பிடிக்கப்பட்ட சாயத்தொட்டிகள் மற்றும் கண்ணாடிப் பொருள்கள் தமிழகம் ஒரு தொழில் மையமாகத் திகழ்ந்ததைக் குறிக்கின்றது என்றாலும் இது விவாதத்திற்குரியது.’’
காரல் மார்க்சு மற்றும் அவரின் தத்துவத்தின் அடிப் படையில் சமூகம் குறித்து விளக்கங்கள் அளித்துள்ள அறிஞர்களின் கோட்பாடுகள் அடிப்படையில் அவர் தந்துள்ள ஆய்வு முடிவுகள் தற்சார்பு வாய்ந்தவை. தொடக்ககாலத் தமிழகத்தில் நெசவுத் தொழில் நடைபெற்ற முறையினை அவர் மேற்கொண்ட ஆய்வு நெறிமுறையின் அடிப்படையிலேயே மீளாய்வு செய்து எவ்வாறு அவர் தவறான புரிதலுக்கு தமிழக வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு சென்றுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட இக்கட்டுரை முற்படுகிறது.
சங்க இலக்கியங்களில் பின்னர் இயற்றப்பட்டவை யாகக் கருதப்படும் பரிபாடல், கலித்தொகை மற்றும் திருமுருகாற்றுப்படை நீங்கலாகப் பிறவற்றில் காணப் படும் நெசவுத் தொழில் குறித்த சொற்களைத் தொகுத்து பிற சான்றுகளான, கல்வெட்டு, அயலவர் குறிப்புகள் மற்றும் தொல்லியல் சான்றுகளோடு பொருத்திப் பார்த்து சங்ககாலத்தில் எவ்வாறு நெசவுத்தொழில் நடைபெற்றது என்பதை இக்கட்டுரை காட்ட விழைகிறது.
சங்ககால நெசவுத்தொழில் குறித்து மயிலை சீனி வேங்கடசாமி முதலாகப் பல ஆய்வாளர்கள் குறித் துள்ளனர்.7 சங்க இலக்கியங்களில் நெசவுத்தொழில், ஆடைகள் மற்றும் பயன்பாடு குறித்து 38 சொற்கள் காணப்படுகின்றன.8 இச்சொற்கள் துணியின் மூலப் பொருள் உற்பத்தி முதற்கொண்டு துணியின் பயன்பாடு வரையிலானவை. இக்கட்டுரையில் பருத்தி உற்பத்தி, நெய்தல், துணியின் தரம், உற்பத்தியாளர்கள் குறித்து முதல் பகுதியிலும் இரண்டாம் பகுதியில் துணிகளின் வகைகள் குறித்தும் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகளோடு பிற துறைச் சான்றுகளையும் ஒருங் கிணைத்து விளக்கப்பெறுகிறது.
பருத்தி உற்பத்தி
பருத்தி, தமிழகத்தில் புன்புலம் எனப்பட்ட புன்செய் நிலத்தில் பருவமழையின் பயனைக் கொண்டு விளைவிக்கப்படும் ஒரு பயிராகும். சங்க காலத்தில் பருத்தி விளைச்சலே சில ஊர்களின் வாழ்வாதாரமாக இருந்தது என்பதை அறிந்துகொள்வதற்கு சங்க இலக்கியப் பாடல்கள் உள்ளன.9 பருத்தி விளைந்த புன்செய் நிலம் பருத்தி வேலி என்றும் பன்னல் வேலி என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கு பருத்திச்செடியின் தன்மை வேலியாகப் பயன்பட இயலாது என்பதால் வேலி என்னும் சொல்லை விளைநிலமாகக் கொள்வதில் தவறில்லை. அவ்வூரில் உளுந்தும் பயிரிடப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. எவ்வாறு நெல்லும் கரும்பும் விளையும் மருதநில ஊரின் தலைவன் ஊரன் என அழைக்கப்பட்டானோ அதுபோல் பருத்தி விளைந்த ஊர்களின் தலைவன் சீறூர் மன்னன் என அழைக்கப் பெற்றான்.10 இப்பருத்திச் செடி கோடையில் விளைச்சலைத் தரும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட
பருத்தி வீட்டில் நிறைந்து கிடந்ததைச் சங்கப்பாடல் விளக்கும்.11 இப்பருத்தியை மண்சாடிகளில் விதைத்து பராமரித்து சிறிய அளவில் விற்றும் பெண்கள் பயன்பெற்றனர்.12 சங்க காலத்தில் பருத்தி பாரம் எனவும் அழைக்கப்பட்டது.13 பாரம் (பருத்தி) விளையும் நிலங் களுக்கு அருகில் சிறிய நீர்க்குட்டைகள் இருந்தனவாக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.14 பருத்தி தினைப்புனத்தில் ஊடுபயிராகவும் பயிரிடப்பட்டது என்பதைச் சங்க இலக்கியத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.15 மேற்காணும் இலக்கியச் சான்றுகளினடிப் படையில் சங்க காலத்தில் பருத்தி உற்பத்திக்கென்றே ஊர்கள் இருந்தமையை அவ்வூர்களின் தலைவர் சீறூர் மன்னன் என்றழைக்கப்பட்டனர் என்பதைக் கொண்டும் அவர்களின் வாழ்வாதாரம் பருத்தி போன்ற புன்செய் பயிர்களாகும் எனவும் அறிந்துகொள்ள முடிகிறது.
கொட்டை எடுத்து பருத்தியைப் பஞ்சாக்குதல்
விளைந்த பருத்தியைச் சேகரித்து அவற்றை நூலாக்குவதற்கு முதலில் பருத்தியிலுள்ள கொட்டை களை நீக்க வேண்டும். அவ்வாறு கொட்டை நீக்கப் பட்ட பருத்தி பஞ்சி என அழைக்கப்பட்டது. பருத்தியி லிருந்து கொட்டையை நீக்க இரும்பாலான வில்போன்ற கருவி பயன்படுத்தப்பெறும். பருத்தியை இக்கருவி கொண்டு அடிக்கும்போது கொட்டைகள் தனியே பிரித் தெடுக்கப்படும். அவ்வாறு பருத்தியிலிருந்து கொட்டைகள் இரும்புத் தடிகொண்டு எடுக்கப்பட்டதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.16 கொட்டைகள் நீக்கப் பட்ட பருத்தியில் பருத்தியின் இழைகள் சிறுதுரும்பு களாக நூல்நூற்கும் வண்ணம் திரண்டிருக்கும். இதை துய் என்றழைத்தனர். இச்சொல் இறால் மீன்களின் மூக்கு, பெண்குரங்கின் தலைமயிர், ஈங்கை மலரின் காம்பு போன்றவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப் பட்டன. எஃகு வில் கொண்டு அடிக்கப்படும் பருத்தியில் கொட்டைகள் நீங்குவதோடு நூல்நூற்கும் வண்ணம் துய் என்னும் துரும்புகள் உருவாகும். இத்துரும்பிழைகளைக் கொண்டு நூல் நூற்கப்படும். கொட்டை நீக்கம்பெற்ற பஞ்சி பெண்ணின் பாதங்களுக்கும், மழைமேகங் களுக்கும் இலக்கியங்களில் ஒப்பிடப்படுகின்றன.17 பருத்தியினைத் தட்டிப் பஞ்சாக்கும்போது பருத்தியில் ஒட்டியிருக்கும் காய்ந்த பருத்தி இலைப் பிசிறுகள் மற்றும் தூசினைப் பிரித்தெடுக்கும் முறையினையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.18
நூல் உற்பத்தி செய்தல்
நூல் உற்பத்தி நுட்பம் குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறவில்லை எனினும் நூல் நூற்கும் தொழிலில் பெண்டிர் ஈடுபட்டனர். குறிப்பாகக் கணவனை இழந்த பெண்கள் ஈடுபட்டனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.19 நூலினைப் பனுவல் என்றும் இதை உற்பத்தி செய்யும் தொழிலைப் பெண்கள் மேற்கொண்டதாகவும் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.20 இப்பெண்கள் நூலை மிகவும் நுண்ணியதாக நெய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.21 தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல தொல்லியல் ஆய்வுகளில் நூல் நூற்கும் தக்களிகள் கிடைத்துள்ளதால் தமிழகத்தில் நெசவுத்தொழில் ஒரு இன்றியமையாத தொழிலாகச் சங்ககாலத்தில் விளங்கியுள்ளது எனலாம்.22
தறிகொண்டு துணி நெய்தல்
நூல்கள் எவ்வாறு துணியாக நெய்யப்பட்டன என்பதற்கான சான்றுகளோ அல்லது அதற்கான தறிகள் எவ்வாறு இருந்தன என்பதற்கான சான்றுகளோ இல்லை. எனினும் நெசவுத்தறி குறித்து ஒரு சான்று மட்டுமே சங்க இலக்கியங்களில் காணப்பெறுகிறது. நூலைப் படர்த்த நூற்கும் தறி (பா) விரவுவதைக் கதிரவனின் கதிர்கள் பரவுவதோடு ஒப்பிட்டுக் கூறப்படுவதிலிருந்து தறிகொண்டு நூல் நூற்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது.23
சாயமேற்றுதல்
துணிகளுக்குச் சாயமேற்றுவது பல முறைகளில் மேற்கொள்ளப்படும். முதலாவது துணிகளை நெய்த பின்னர் அத்துணிகளைத் தேவையான நிறச் சாயத் தொட்டிகளில் ஊறவைத்துச் சாயமேற்றுவது, இரண்டாவது, நூல்கள் உருவாக்கிய பின்னர் நூல்களைச் சாயமேற்றி அதன் பின்னர் நெய்வது. இவ்விரு வழக்கங் களே பொதுவாகப் பின்பற்றப்படும். ஆனால் சங்க இலக்கியங்களில் சாயமேற்றுவது குறித்து வேறு வகையாக ஒரே ஒரு இடத்தில் குறிப்பிடப்படுகிறது. இம்முறையில் நூலாக்கம் பெறுவதற்கு முன்பே பஞ்சு சாயத்தில் நனைக்கப்பட்டு காயவைக்கப்பட்டு இரும்புத் தடியினால் அடிக்கப்பட்டு உருவாகும் துய் எனப்பட்ட துரும்புகளைக் கொண்டு நூலாக்கம் செய்யும் முறையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. சிகப்பு சாயம் ஏற்றப்பட்ட பஞ்சினைத் தடிகொண்டு அடித்த போது பறந்துபோன பஞ்சிப் பிசிறுகள் மழைக்காலத்தில் நிலத்தில் ஊர்ந்து செல்லும் தம்பலப்பூச்சிகள் போலக் காட்சியளிப்பதாகச் சங்க இலக்கியம் குறிப்பதால் பஞ்சாக இருக்கும்போதே சாயம் ஏற்றப்பட்ட நுட்பத்தையும் தமிழர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.24
சங்க இலக்கியங்களில் துணிகளின் வண்ணங்கள் குறித்தும் சான்றுகள் கிடைக்கின்றன. அவை வெண்ணிற மாகவும், நீல நிறத்திலும், துவர்(சிகப்பு), செந்துவர் (ஆழ்ந்த சிகப்பு நிறத்திலும்), வெளிர் சிகப்பு நிறத்திலும், கருமை நிறத்திலும் இருந்தன என்பதை அறிய முடிகிறது. வெண்ணிறத் துணிகளைக் குறிப்பிடும்போது நேரிடையாகவும் அருவிக்கு ஒப்பாகவும் இலக்கியங்கள் குறிக்கின்றன.25 சிகப்பு, செஞ்சிகப்பு வண்ண ஆடை களைப் போர்வீரர்கள் அணிந்தமையை அறிய முடிகிறது.26 சாயமேற்றிய பஞ்சினை இரும்புத் தடியால் அடித்தபோது சிதறிய துளிகள் மழைக்காலங்களில் தரையில் ஊர்ந்து செல்லும் தம்பலப்பூச்சிகளுக்கு உவமையாகச் சுட்டப்பெறுவதால் இளஞ்சிகப்பு நிறத்திலும் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டன என்பதை அறியமுடிகிறது. போர்வீரர் இடுப்பைச் சுற்றிய துணி கச்சு என வழங்கப்பட்டு அது நீலநிறத்திலும், கருமை நிறத்திலும் இருந்தன என்பதையும் அறிய முடிகிறது.27
துணியில் ஓவியம் வரைதல், பூவேலைப்பாடு செய்தல்
துணிகளில் ஓவியம் வரைதல்28 மற்றும் பூவேலைப் பாடுகளும்29 செய்யப்பட்டிருந்தன என்பதற்கு இலக்கியத்தில் சான்றுகள் இருந்தாலும் அவற்றின் தொழில்நுட்பம் குறித்த சான்றுகள் இல்லை.
நெசவுத் தொழிலாளர்கள், வணிகர்கள்
சங்ககாலத்தில் பிற தொழில்கள் போல் நெசவுத் தொழிலையும் ஒரு பிரிவினர் குறிப்பாகப் பெண்கள் மேற்கொண்டனர் என ஏற்கெனவே அறிந்தோம். நூலாக்கத்திற்கு முன்பு பருத்தியில் கலந்து கிடக்கும் காய்ந்த இலைகளைப் பிரித்தெடுப்பது30, நுண்ணிய நூல்களை உற்பத்தி செய்வது31 போன்ற பணிகளை மேற்கொண்டமைக்குச் சான்றுகளுள்ளன. நூல் உற்பத்தி செய்தபின்னர் அவற்றைத் தறி கொண்டு நெய்து துணி உற்பத்தி செய்தமைக்கானச் சான்று சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் காணப்படுகிறது என்பதை ஏற்கெனவே கண்டோம். இப்பணி செய்தோரைக் கம்மியர் என மதுரைக்காஞ்சி (521) குறிப்பிடுகிறது.32 சிறிய பெரிய அளவிலான மடி என வழங்கப்பட்ட இத்துணிகளைச் சந்தையில் இளையோரும் பெரியோருமாக விற்றதாகவும் குறிப்பிடப்படுவதால் நெசவுத்தொழிலை ஆண்கள் மேற் கொண்டனர் எனவும் அறியமுடிகிறது. மேலும் பிற பொருள்களை விற்ற வணிகர்களோடு கலிங்க நாட்டி லிருந்து தருவிக்கப்பட்ட துணிகளை விற்றவர்கள் குறித்தும் மதுரைக்காஞ்சி (513) விளக்குகிறது. இந்நெசவுத் தொழிலில் உருவாக்கப்பட்ட துணிகளைப் பெற்று வணிகம் மேற்கொண்டவர்கள் அறுவை வணிகர் என அழைக்கப்பட்டதை அழகர்மலைக் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.33
அர்த்தசாஸ்திரம் பகுதி 11 இல் துணி வகைகளைக் குறிக்கும் போது துணி நெய்யப்படும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டில் நெய்யப் படும் ‘பாண்டுரகா’ என்னும் துணி கருப்பு நிறத்திலும் ரத்தினங்களின் மேல்பகுதி போல் வழுவழுப்பாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது.34 ஒற்றை, இரட்டை, மூன்று, நான்கு அளவுள்ள துணிகளையும் குறிக்கிறது. இவற்றில் ‘க்சோமா’ என்னும் வகைத்துணி பாண்டிய நாட்டிலிருந்து (பாண்டுரகா) பெறப்படுவதாகக் குறிக்கிறது. மதுரா, அபராந்தா, மேலைப்பகுதிகள், கலிங்கம், காசி, வங்கம், வத்சா, மஹிசா பகுதியிலிருந்து வரும் பருத்தித் துணிகள் மிகச்சிறந்தவை எனக் குறிப்பிடுகிறது.
தமிழகத்திலிருந்து அர்கெரு என்னும் துறைமுகம் வழியாக உரோமானிய நாட்டிற்கு ‘அர்கரிடிடேஸ்’ என்னும் துணி ஏற்றுமதி செய்யப்பட்டதாக ‘பெரிப்ளூசு’ நூலில் குறிப்பிடப்படுகிறது. இத்துறைமுகம் உறையூரென்று ஆய்வாளர்களால் கருதப்பட்டது. ஆனால் அர்கெரு உறையூரல்ல என்றும் அது தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட இராமநாதபுரத்திற்கருகிலுள்ள வைகை முகத்துவாரத்தில் அமைந்த அழகன்குளம் அல்லது அதற்கருகிலிருந்த ஒரு இடம் என நிறுவப்பட்டுள்ளது.35 எனவே, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் வட இந்தியாவிற்கும், உரோமானிய நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.
இதற்கான ஒரு கட்டமைப்பு இருந்திருத்தல் வேண்டும். பொருள்களைப் பிற இடங்களுக்கு வணிகர்கள் கழுதைகள் மூலம் பெருவழிகள் வழியாகக் கொண்டு சென்றதையும்,36 அதற்காக ‘உல்கு’ எனும் சுங்கவரியைக் காவல்கள் நிறைந்த ஊரில் செலுத்தி யதையும் அவ்வாறு பெறப்பட்ட ‘உல்கு’ சரியான அளவில் வசூலிக்கப்பட்டதையும் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.37
மேற்காணும் சங்க இலக்கியச் சான்றுகளைக் காணும்போது பருத்தி விளைவிப்பதற்கென்றே புலங்கள் இருந்தன என்பதையும் விற்பதற்கென்று சேர்த்து வைக்கப் பட்ட வீடு நிறைந்த பருத்தி மூட்டைகளைச் சங்க இலக்கியம் சுட்டுவதிலிருந்து பருத்தி ஒரு வணிகப் பொருளாகத் திகழ்ந்திருக்கலாம் எனவும் அறிய முடிகிறது. பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித் தெடுத்தல், நூல்நூற்றல், தறிகொண்டு நெசவை மேற் கொள்ளல், சாயமேற்றுதல் முதலிய செய்திகளிலிருந்து தமிழகத்தில் நெசவுத்தொழில் சிறந்திருந்தது என்பதை அறியமுடிகிறது. இதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தின் பல இடங்களில் கிடைத்த நெசவு நெய்யும் தக்களிகளாலும், திருப்பூர் மாவட்டம் கொடுமணல் அகழாய்வில் கிடைத்த துணியின் எச்சமும், மதுரையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த நெசவுத் தொழில் மையமான கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் எச்சங்களும் தமிழகத்தில் நெசவுத்தொழில் சிறந்திருந்தமைக்குச் சான்றாகின்றன.38
துணிகளின் வகைகள், ஆடைகள்
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார் பாடும் போது மலையில் பிறந்த மணி, காட்டில் கிடைத்த பொன், கடலில் கிடைக்கும் முத்து இவற்றோடு வேறுபட்ட உடைகளையும் மதுக்குடங் களையும் அன்பளிப்பாக வழங்கியதாகக் குறிப்பிடுவதால் சங்க காலத்தில் பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பதை அறியமுடிகிறது.39 சங்க காலத்தில் உடைகள் ஆடை, உடை மற்றும் பிற பயன் பாட்டுப் பொருள்கள் குறித்து 19 சொற்கள் காணப்படு கின்றன. அவை அறுவை, ஆடை, மடி, மடிவை, உடுக்கை, உடை, கச்சு, கச்சை, கம்பலம், கலிங்கம், காழகம், துகில், சிதார் (சிதர்வை), பட்டு, படம், படாஅம், மெய்ப்பை, போர்வை ஆகியனவாகும். சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்களை அவற்றின் பயன்பாட்டுக் கூறுகளின் அடிப்படையை நோக்கினால் அறுவை, மடி, மடிவை, கலிங்கம், துகில், பட்டு, படாஅம் போன்ற சொற்களைப் பொதுவான துணி களின் வகைகளாகக் கொள்ளலாம். உடைகளாகப் பயன்பட்டவை ஆடை, கச்சு, கச்சை, உடுக்கை, உடை, சிதார், சிதாஅர், சிதர்வை போன்றனவாகும். இனி ஒவ்வொரு துணிவகைகளின் பயன்பாடு குறித்து நோக்கலாம்.
அறுவை
அறுவை என்ற சொல் பொதுவாகத் துணியைக் குறிப்பதாகச் சங்க இலக்கியத்தில் அமைகிறது. இது உடையாகவும் போர்வையாவும் பயன்படுத்தப்பட்டது. அறுவையை விளக்கும் போது அது மெல்லிய மூங்கில் தோலை ஒத்ததாகவும் மிகவும் நெருக்கமாக நெய்யப் பட்டிருந்ததாகவும், பாம்புத் தோலில் காணப்படுவது போன்று பூவினைப்பாடுகள் நிறைந்ததாகவும் வெண்மை நிறத்திலிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. தரையில் தேயும் வகையில் இதை அணிந்ததாகவும் சுட்டப் பெறுகிறது.40 தமிழ்-பிராமி கல்வெட்டொன்றில் அறுவை வணிகன் எனக் குறிப்பிடப்பெறுவதால் இச்சொல்லினைத் துணியைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல்லாகக் கருதலாம்.
மடி, மடிவை
இச்சொற்களும் பொதுவாகத் துணி என்ற பொருளைத் தருவதாகக் கருதலாம். இத்துணிகள் குறிப்பிட்ட அளவைக் கொண்டதாக இருக்கலாம். இவற்றைச் சிறிய மற்றும் பெரிய அளவிலான மடி என மதுரைக்காஞ்சி (520) குறிப்பதால் வெவ்வேறு அளவு களைக் கொண்டவையாக இத்துணிகள் இருந்திருக்கலாம்.41 இன்றும் மடிப் புடவை என்னும் சொல் புழக்கத்தி லுள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது.
கலிங்கம்
கலிங்கம் என்னும் துணிவகை கலிங்கநாட்டி லிருந்து தருவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் ஆய்வாளர் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதே. சங்க இலக்கியங்களில் இச்சொற்கள் பிற சொற்களுடன் ஒப்பிடும்போது மிகுந்த அளவில் பயின்று வருவதால் இத்துணி வகைகள் மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்கின என்பதை அறியமுடிகிறது.42 இதை வணிகர்கள் சந்தையில் விற்றனர் என்பதையும் மதுரைக்காஞ்சி (514) குறிப்பிடுவதால் இது முக்கிய வணிகப்பொருளாக இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
துகில்
துகில் என்னும் சொல் பெண்கள் அணிந்த உடையாகவே சங்க இலக்கியங்களில் அடையாளம் காணமுடிகிறது.43 இச்சொல்லும் சங்க இலக்கியங்களில் மிகுந்த அளவில் பயின்று வந்துள்ளது. ஒரு பாடலில் மட்டும் (புறநானூறு 398) தலைவன் தமக்குப் புகையை ஒத்த துகில் அளித்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார். எனவே, துகில் என்னும் சொல் பெண்கள் அணிந்த உடையைக் குறிப்பதாகக் கொள்வதில் தவறில்லை.
பட்டு
பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. காவிரிப்பூம்பட்டினத்தில் இரவுக்கால நிகழ்வு களுக்காகப் பெண்கள் தாம் உடுத்தியிருந்த பட்டுடை யினைக் களைந்து துகிலை உடுத்திச் சென்றனர் (பட்டினப்பாலை, 107). இக்காலம் போலவே இதனை மிகவும் விலையுயர்ந்த பாதுகாக்கப்பட வேண்டிய துணி வகையாக அக்காலத்திலும் கருதியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும், பட்டுடையின் ஓரங்களில் குஞ்சங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதையும் அறியமுடிகிறது.44
ஆடை
ஆடை என்ற சொல் வீரர்கள் அணிவதாக மட்டுமே சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது.45 மேலும் வீரர்கள் தங்களின் அடையாளமாகத் தலையில் மயிலிறகைச் சூட்டி ஆடை அணிந்ததாக வந்துள்ளது. இவ்வாடை செந்நிறத்தில் இருந்ததாகவும் குறிப்பிடப் படுகிறது. சங்க இலக்கியங்களில் ஆடவர் என்னும் சொல் ஆள்பவரைக் குறித்ததாகப் பொருள் கொள்ள வேண்டும் என மாதையன் கருத்துரைக்கிறார்.46 எனவே, ஆடவர் அணியும் இவ்வுடை ஆடை என வழங்கப் பட்டிருக்க வேண்டும். படை வீரர்களுக்கென்றே பிரித்தறியும் வகையில் உடை இருந்திருக்கலாம். மேலும் ஆடை என்னும் சொற் பயன்பாட்டில் பெண்களின் உடைக்கு உரியதாகச் சங்க இலக்கியங்களில் வழங்கப் பெறவில்லை. இது மேலாடையாக இருந்திருக்க வேண்டு மென்பதைக் கச்சு, கச்சை என்னும் சொற்களுக்கான பின் வரும் விளக்கத்தின் மூலம் அறியமுடியும்.
கச்சு, கச்சை
இவை படைவீரர் இடையைச் சுற்றி அணிந்த உடையாகும்.47 இக்கச்சின் இடையில் வாள்களைச் செருகியிருந்ததாகச் சங்க இலங்கியங்களில் காண முடிகிறது.48 குதிரைப்படை வீரர்கள் இவ்வுடையை அணிந்ததாகவும் சுட்டப்பெறுகிறது.49 இச்சொற்கள் பிறர் அணிந்ததாகச் சங்க இலக்கியங்களில் சுட்டப் பெறவில்லை என்பதாலும் இக்கச்சு வீரர்கள் அணிந்த தாகக் குறிப்பிடப்படுவதாலும் இது படைவீரர் களுடைய இடையாடை என்பதை அறியமுடிகிறது.
உடுக்கை, உடை
இச்சொற்கள் துணியின் பயன்பாட்டிற்கேற்றவாறு ஆடைகளாக உருவாக்கப்பட்டிருக்கலாம் எனச் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.50 ஆனால் அவற்றின் அமைப்பு குறித்த எவ்வித செய்தியும் அறியமுடியவில்லை.
சிதார், சிதாஅர், சிதர்வை
இம்மூன்று சொற்களும் ஒரே பொருளைத் தரலாம். ஏனெனில் இச்சொற்கள் பாணர் பாட்டுடைத் தலைவனைப் பாடும்போது தமது பழைய சிதாஅர் என வழங்கப்பட்ட உடையைக் களைந்து பட்டு, துகில், அறுவை, கலிங்கம் ஆகியன அளித்ததாக இலக்கியங் களில் குறிப்பிடப்படுகிறது.51 மேலும் பாணரைப் பற்றிப் பிற இடங்களில் குறிப்பிடும்போதும் அவர்களின் உடைகள் சிதார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.52 ஆனால் அழுக்கடைந்த துணிகளை அணிந்த பிறரைக் குறிப்பிடும்போது இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. பாணர்கள் அணிந்திருந்த பழைய துணிகளில் பாசி படர்ந்திருந்ததாகவும். கிழிந்த பகுதி வேறு ஒரு நூலால் தைக்கப்பட்டிருந்ததாகவும் அது கூதிர்ப் பருந்தின் நிறத்தையத்ததாகவும் முட்டையீனும் பாம்பின் வாய் போன்ற துளைகளை உடையதாகவும் குறிப்பிடப்படுகிறது.
துணி குறித்த பிற சொற்கள்
துணிகள் காழகம்53 என்றும் படம்54 என்றும் மெய்ப்பை55 என்றும் தூசு56 என்றும் இழை57 என்றும் சங்க இலக்கியங்களில் வழங்கப்பெற்றுள்ளன. காழகம் என்பதைப் புடவை எனவும் உடை எனவும் அறிஞர்கள் பொருள் கொள்கின்றனர். மெய்ப்பை என்பது சட்டை எனவும் இதனை யவனர்கள் அணிந்திருந்தனர் எனவும் அறியமுடிகிறது. இழை என்பது பொதுவாக நூல் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில் காணப் பட்டாலும் பதிற்றுப்பத்தில் வரும் சொல் ஆடை என்னும் பொருளைத் தருகிறது.
துணிகளின் பிற பயன்பாடுகள்
துணிகள் உடையன்றி பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. துணிகளில் கணைப்புட்டில்கள் (அம்பராத்துணி) செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இவை ஆவம் என வழங்கப்பட்டன.58 மூத்தோர் வழிபாடான நடுகல் வழிபாட்டின் போது நடுகல்லில் துணியைச் சுற்றி வழிபடும் வழக்கமுமிருந்தது.59 இதன் வழி துணி தமிழர் வாழ்வியலில் ஓர் அங்கமாகத் திகழ்ந்ததை அறியமுடிகிறது.
கம்பலம், போர்வை
துணிகள் கம்பலமாகவும்,60 போர்வையாகவும்,61 படுக்கை விரிப்பாகவும்62 பயன்படுத்தப்பட்டன. போர்வையாகப் பயன்படுத்திய உரோமத்திலான பத்து துணி வகைகளைக் குறிக்கும் போது கம்பலம் என்னும் சொல்லையும் அர்த்தசாத்திரத்தில் காணமுடிகிறது.63
சன்னல் திரையாக
மேலும் சன்னல் திரையாகத் துணி பயன்படுத்தப் பட்டதை எழினி எனச் சங்க இலக்கியம் குறிக்கிறது.64 மேலாடை படம் என்றும் வழங்கப்பட்டது.65
மேற்காணும் சான்றுகளை நோக்கினால் தமிழகத்தில் சங்க காலத்தில் பலவகைப்பட்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டும், பிற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டும் புழக்கத்திலிருந்தன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இத்துணிகள் எவ்வகைத் தரத்திலிருந்தன என்பதையும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
துணிகளின் தரம்
துணிகளின் தரம் குறித்த சான்றுகளை நோக்கினால் துணிகள் மூங்கில் உட்புறத்தோல் போலவும்,66 பாம்புரித்த சட்டை போலவும் இருந்ததாகவும்,67 ஆவி68 போன்றும் புகை69 போன்றும் இருந்ததாகவும் நூலிழை களை அறிய இயலாதவாறு நுண்மையாக இருந்த தாகவும்70 மலர் போன்று மென்மையாக இருந்ததாகவும்71 சுருக்கமற்று72 இருந்ததாகவும், ஒளி73 பொருந்திய தாகவும் இருந்தன என்றும் அறியமுடிகிறது.
கிழிந்த துணிகளின் நிலை
கிழிந்த துணிகளைக் குறிக்கும்போது கிழிந்த நிலையைப் பிற பொருள்களுக்கு உவமையாக இலக்கி யத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.74 கிழிந்த துணிகள்
நூல் கொண்டு தைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. தையலைத் துன்னம் எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.75 அவ்வாறு தைக்கப்பட்ட உடையில் பயன்படுத்தப் பட்ட நூல் பருமனாக இருந்ததாகவும் இலக்கியம் சுட்டுகிறது.
அழுக்கேறிய துணிகள்
சங்க இலக்கியங்களில் துணிகள் உடையாகப் பயன்படுத்தப்பட்டு அழுக்கேறிய நிலையைப் பல இடங்களில் காணமுடிகிறது. பாணர்கள் பயன்படுத்திய அழுக்கேறிய உடையை சிதார், சிதாஅர், சிதர்வை என்று அழைத்ததைப் போலப் பிறர் பயன்படுத்திய அழுக் கேறிய உடைகள் குறித்தும் சான்றுகள் உள்ளன.76
துணியை துவைத்தல்
துணிகள் உவர்மண் கொண்டு துவைக்கப்பட்டன. இத்துணிகளை வெளுக்கும் பணியினை மேற்கொண்ட பெண்களைப் புலைத்தி எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.77 துவைக்கும் பணியை மேற்கொண்ட ஆண்களைக் ‘காழியர்’ எனச் சங்க இலக்கியம் ஓரிடத்தில்78 குறிப்பதால் சில வேளைகளில் ஆண்களும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கக்கூடும். இத்துணியினை வெளுக்கும் பணிக்கு உவர் மண்ணைப் புலத்தியரும் காழியரும் பயன்படுத்தினர்.79 மேலும் துவைக்கப்பட்ட துணிகளுக்குக் கஞ்சியிட்டதையும் இலக்கியங்களில் அறியமுடிகிறது.80
மருத்துவப் பயன்பாட்டிற்குப் பஞ்சி
பஞ்சி போரில் ஏற்பட்ட காயங்களை மூடப் பயன்படுத்தப்பட்டது என்பதைச் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது.81 எனவே, தமிழர் புண்ணுக்குப் பஞ்சியைப் பயன்படுத்திய முறை சங்ககாலத்திலேயே இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
தழையுடை?
இனி, ராசன் குருக்களின் கருத்தைக் கூர்ந்து நோக்கலாம். குறிஞ்சி நிலப்பெண்கள் இலை, தழை களையும், பூக்களையும், மரப்பட்டைகளையும் சேர்த்து அணிந்திருந்தனர் என அவர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தழை அணிந்த பெண்கள் பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும்போது அதைத் தழையுடை எனப் பல பதிப்பாசிரியர்களும், உரையாசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியங்களில் தழையுடை என்ற சொல் எவ்விடத்திலும் காணப்பெறவில்லை. மகளிரின் இடையில் தழையை அணிந்ததாகவே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. தழைகளின் ஊடே ஆம்பல் மலர்கள் கட்டப்பட்டு பெண்களின் இடை அழகுறுத்தப்பட்டது. இதை பெண்கள் இடையாடைக்கு மேலே அணிந்திருந்தனர் என்பதாகக் கொள்ளவேண்டும். இதற்கு முன் இவர்கள் வாழ்ந்த இனக்குழு வாழ்க்கையின் தொடர்ச்சியாக இது இருந்திருக்கக்கூடும். இதன் தொடர்ச்சியே பல்லவர் காலத்திலும் அதன் பின்னர் செதுக்கப்பட்ட சிற்பங் களிலும் காணப்பெறும் இடையணிகளாகும் என்று கருதலாம். இப்பொருள் குறித்து விரிவாக வேறு கட்டுரையில் விளக்கப் பெறுகிறது.
சங்க இலக்கியங்களை நோக்கும்போது இடையில் அணிந்த தழையணி குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை நிலப் பெண்கள் அணிந்ததாகக் குறிப்பிடப்பெறுகிறது.82 முல்லை நிலப் பெண்களும், ஆண்களும் அணிந்ததாகக் குறிப்பிடப்பெறாதது ஆய்வுக்குரியது. எனவே, ராசன் குருக்கள் குறிஞ்சி நிலப்பெண்கள் மட்டும் தழையுடை அணிந்ததாகக் குறிப்பிடுவது முற்றிலும் தவறான கருத்தாகும். மேலும் குறிஞ்சி நிலத்தலைவர்களும் பூ, தழை, மரப்பட்டைகள் கொண்ட தழையுடையை அணிந்ததாகக் குறிப்பிடுவதும் மிகத்தவறானதாகும். இருப்பினும் குறிஞ்சி நிலத்தில் வசித்த குறவர் தாவர நாரினால் செய்யப்பட்ட உடையை அணிந்ததற்கான குறிப்பு ஓரிடத்தில் இடம்பெற்றுள்ளது.83 இதை ராசன் குருக்கள் தவறாகப் புரிந்து மேற்காணும் கருத்தை அளித்திருக்கலாம். மேலும் குறவர் என்ற சொல் குறிஞ்சி நிலத்தில் வசித்த ஆண்களைக் குறிக்கப் பொதுவாக வழங்கப்படும் சொல்லாகும். இது குறிஞ்சி நிலத் தலைவனைக் குறிப்பதாகாது. இவர் கூற்று தவறென்பதற்கு முத்தாய்ப்பாகத் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில்84
கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப
(மெய்ப்பாட்டியல் 248)
என்று கூறும்போது தழை என்னும் சொல்லைப் பயன் படுத்தாமல் உடை என்ற சொல்லைப் பயன்படுத்தி யுள்ளமை இங்குக் கருதத்தக்கது.
கருத்துரை
முடிவாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழகத்தில் நெசவுத்தொழில் மிகச்சிறந்த நிலையில் இருந்திருந்தது என்பதையும் இத்தொழிலில் பருத்தி விளைவித்தல் தொடங்கி துணிகள் விற்பனை வரையிலான ஒரு கட்டமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பதையும் அறியமுடிகிறது. இதில் பருத்தி உற்பத்திக்கென்றே தனி ஊர்கள் இருந்ததையும் அவை ஊடுபயிராக விளைவிக்கப் பெற்றமையையும் அறியமுடிகிறது. நூல் நூற்கும் பணியினைப் பொதுவாகப் பெண்கள் மேற்கொண்டனர். நெசவுத்தொழிலைத் தனி ஒரு சமூகம் மேற்கொண்டு அவற்றைச் சந்தையில் கொண்டு சென்று விற்றது. அவற்றைப் பெற்று வணிகர்கள் பிற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர் என்பதை அறியமுடிகிறது. இச்செயலை ஒரு இனக்குழு மட்டும் மேற்கொண்டிருக்க இயலாது என்பதையும் அறியமுடிகிறது.
ஆடைகள் எவ்வாறு செய்யப்பட்டிருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லையெனினும் ஆடை, கச்சு, கச்சை என்பனவற்றை வீரர்கள் மட்டும் பயன் படுத்தியுள்ளனர் என்பதையும் துகில் பெண்களால் அணியப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது. பாணருக்கு வழங்கப்பட்ட உடைகள் மடி, கலிங்கம், துகில், பட்டு என்னும் பொருளில் வந்துள்ளன. எனவே, இவை துணிகள் என்ற பொருளன்றி உடலைச் சுற்றிக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஆடையாகவும் பயன் படுத்தப்பட்டிருக்கலாம். இவற்றில் சிதாஅர், சிதர்வை, சிதார் போன்ற சொற்கள் மிகவும் பயன்பாட்டிலிருந்த உடைகளைக் குறிக்கும். இவற்றைப் பாணர் அணிந் திருந்ததாகவும் அவற்றை நீக்கி புதிய உடையைத் தலைவன் வழங்கியதாகவும் மட்டுமே வருகிறது.
இச்சொற்களில் கலிங்கம், பட்டு ஆகிய சொற்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. கலிங்கம் என்பது கலிங்கநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட துணியாக இருக்கலாம். பட்டு சீனாவிலிருந்து கொண்டுவரப் பட்டிருக்கலாம். கலிங்கநாட்டில் உற்பத்தி செய்யப் பட்ட துணிகள் வட இந்தியாவிற்கும், தென்னிந்தியா விற்கும் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழகம் வந்த துணிகள் கடல் வழியில் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வட இந்தியாவிலிருந்து இங்கு பல பொருள்கள் வந்தமைக்கான சான்றுகள் உள்ளன.85 சீனத்துணிகள் நேரிடையாக இங்கு வந்ததற்கான சான்றுகள் இல்லை. எனவே, இவையும் வட இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம். இவற்றின் மூலம், சங்க காலத்தில் நெசவுத்தொழில் தொடக்க நிலையிலேயே இருந்திருக்கலாம் என ராசன் குருக்கள் குறிப்பிடுவது தவறானது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.
சான்றெண் விளக்கம்
1. Rajan Gurukkal, 2010. Social Formations of Early South India. OxfordRajan Gurukkal, 2010. Social Formations of Early South India. OxfordUniversity Press, New Delhi.
2. மேலது. பக்.29
3. மேலது பக்.139
4. சான்றாக, ‘தழையுடை’ என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஓரிடத்திலும் காணப்படவில்லை. ஆனால் தமது ஆய்வில் அச்சொல்லைத் தாமாகவே உருவாக்கி தமது கருத்தாடலுக்குப் பயன்படுத்தித் தவறாக செய்தியை அளித்துள்ளார்.(மேலது. பக்.89) மேலும் தமது சான்றெண் குறிப்பில் 1955-57 ஆம் ஆண்டுகளில் உ.வே.சாமிநாதையர் குறுந்தொகை, குறிஞ்சிப் பாட்டு, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம், முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பரிபாடல், பட்டினப்பாலை, பெரும் பாணாற்றுப் படை, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய நூல்களைப் பதிப்பித்ததாகவும் அவற்றைச் சைவசித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டதாகவும் குறிக்கிறார் (மேலது பக்.90). மேலும் சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல்தான் வழக்கத்திலிருந்தது. ஆனால் தமது கருத்தில் குடிமக்கள் என்ற புதிய சொல்லைப் பயன்படுத்துகிறார் (மேலது பக். 128). மேலும், கிழான் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. சங்க இலக்கியங்களில் காணப்பெறும் கிழவன் என்ற சொல் இடைக்காலத்தில் கிழான் என்றானது. இவர் அரசு உருவாக்கம் குறித்த தமது கருத்தாடலில் கிழான் என்ற இடைக்காலச் சொல்லை ஊரின் தலைவன் எனப் பயன்படுத்துகிறார். ஆனால் சங்க இலக்கியங்களில் நாட்டிற்கு உரிமையாளனும் கிழவன் என அழைக்கப்பெற்றான். மேலும் மீனவர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆனால் அவர் தமது விளக்கத்திற்குப் பயன்படுத்துகிறார் (மேலது பக். 139). இது போன்று சங்க இலக்கியச் சான்றுகளை அவர் தமது கருத்தாக்கத்தில் அளித்திருப்பதில் பல பிழையானவை.
5. மேலது. பக். 89
6. மேலது. பக்.25
7. மயிலைசீனி. வேங்கடசாமி, 1974, பழங்காலத் தமிழர் வணிகம் (சங்க காலம்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் விமிடெட், சென்னை.(நான்காம் அச்சு, 1991); சுப்பராயலு, எ. 1983, ‘பொருளியலும் வணிகமும்’, தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - வாழ்வியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. ப. 167; வி.சி. சசிவல்லி, 1989, பண்டைத் தமிழர் தொழில்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை; Champakalakshmi, R., 1996. Trade, Ideology and Urbanisation: South IndiaChampakalakshmi, R., 1996. Trade, Ideology and Urbanisation: South India300 BC to 1300 AD. Oxford University Press, Delhi.
8. சங்க இலக்கியங்களில் காணப்பெறும் நெசவு, நெசவாளர், ஆடைகள், துணி குறித்து காணப்பெறும் சொற்கள். பிறைக்குறியீட்டில் இருப்பது இலக்கியங்களில் வரும் எண்ணிக்கை 1. பரீஇ (1), 2. பருத்தி (6), 3. பருத்திப் பெண்டிர் (3), 4. பன்னல் (1), 5. பஞ்சி (8), 6. பாரம் (1), 7. துய் (14), 8. அறல் (1), 8. அறுவை (9), 9. ஆடை(4), 10. மடி (7), 11. மடிவை (2), 12. ஆவம் (1), 13. இழை (7), 14. உடுக்கை (6), 15. உடை (11), 16. கச்சு (3), 17. கச்சை (6), 18. கம்மியர் (1), 19. கம்பலம் (1), 20. கலிங்கம் (23), 21. கிழி (1), 22. துகில் (19), 23. சிதர்வை, சிதாஅர், சிதார் (13), 24. பா (1), 25. நூல் (4), 26. தூசு (1), 27. காழகம் (2), 28. காழியர், 29. புலைத்தி (6), 30. பிணையல் (2) 31. பனுவல் (3), 32. பட்டு (3), 33. படம் (4), 34. படாம் (1), 35. துன்னம் (3), 36. மெய்ப்பை (1), 37. போர்வை (1), 38. எழினி (1)
9. புறநானூறு 299:1, 324:7-8
10. சீறூர் மன்னர் முல்லை, குறிஞ்சி நிலப்பகுதியில் மழையின் பயனாக வேளாண்மை செய்த புன்செய் நிலம் சார்ந்த ஊரின் தலைவனாகச் சுட்டப்பெறுகின்றனர் (புறநானூறு 197, 299, 308, 319, 328). இவர்களில் சிலர் வேந்தருக்குத் துணையாகப் போருக்குச் சென்றனர் (புறநானூறு 319). மேலும் பார்க்க, மாதையன், பெ., 2004, சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 38-59.
11. கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப்பண்டம் இடைநிறைத்தன்ன
வெண்நிண மூரிஞ் (புறநானூறு 393:12-14)
12. தாழிமுதல் கலித்த கோழ்இழைப் பருத்திப்
பொதிவயிற்று இளங்காய் பேடை ஊட்டி
போகில் பிளந் திட்ட பொங்கல் வெண்காழ்
நால்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் (அகநானூறு 129:7-10)
13. குறிஞ்சிப்பாட்டு 92, புறநானூறு 345:20
14. சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாரம் மலிசிறு கூவலின் தணியும் (நற்றிணை 41:3-4)
15. ......... மாமலைப்
பரீஇ வித்திய ஏனல் (குறுந்தொகை 72:3-4)
16. வில்எறி பஞ்சி போல மல்குதிரை
வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் (நற்றிணை 299:7-8)
வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
கொல்லை இதைய குறும்பொறை மருங்கில் (அகநானூறு 133:6-7)
பெய்துபுலம் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப் பட்டன்ன (அகநானூறு 217:1-2)
17. அம்சில் ஓதி இவள்உறும்
பஞ்சி மெல்அடி நடைபயிற்றும்மே (நற்றிணை 324:8-9)
பெய்துபுலம் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப் பட்டன்ன (அகநானூறு 217:1-2)
18. சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறநானூறு 326:4-6)
19. பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச்சினம் தணிந்த நிசந்தயங்கு கொழுங்குற் (புற.125:1-2)
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
கவிர்ப்பூ நெற்றிச் சேவலில் தணியும் (புறநானூறு 326:7-8)
ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் பொல கணம் கொள (நற். 353:1-2)
20. பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச்சினம் தணிந்த நிசந்தயங்கு கொழுங்குற்
(புறநானூறு 125:1-2)
கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழிமின்
மைபடு மாமலைப் பனுவலிற் பொங்கிக்
கைதோய் வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு. 360-362)
ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் பொல கணம் கொள (நற்றிணை 353:1-2)
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
கவிர்ப்பூ நெற்றிச் சேவலில் தணியும் (புறநானூறு 326:7-8)
21. ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் பொல கணம் கொள (நற்றிணை 353:1-2)
22. காட்டாக, கொடுமணல் மற்றும் கீழடியைக் குறிப்பிடலாம்.
23. துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
வெயில் அவிர்பு நுடக்கும் வெவ்வெங்களரி (அகம். 293:4-5)
24. ஊட்டுறு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன
வண்ண மூதாய் தண்நிலம் வரிப்ப (அகநானூறு 283:14-15)
25. மலைபடுகடாம் 561; நற்றிணை 70:2, 328:8; புறநானூறு 154:10-11, 286:3-5, 291:1-3
26. நற்றிணை (33:6); ஐங்குறுநூறு 363(1-2)
27. புறநானூறு (274:1);சிறுபாணாற்றுப்படை 96,97; மதுரைக் காஞ்சி 639; மதுரைக்காஞ்சி 636; அகநானூறு 376:7-8
28. தூவினை நுண்நூல் ஆகம் பொருந்தினள் (அகநானூறு 198: 5-6)
புதுவதியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் (நெடுநல்வாடை 159-160)
29. நீலக்கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் (புறநானூறு 274:1-2)
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்
தரவுரியன்ன அறுவை நல்கி (பொருநராற்றுப்படை 81-84)
30. ஆளில் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் பொல கணம் கொள (நற்றிணை 353:1-2)
31. சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து (புறநானூறு 326:4-6)
32. கம்மியர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பொற் கொல்லரைக் குறிப்பதாகும். உ.வே.சாமிநாதயைர் ‘கம்மியர்’ என்பதைக் ‘கர்மியர்’ என்பதன் சிதைவென்பர் எனவும் தொழில் செய்வோரென்பது அதன் பொருள் எனவும் குறிக்கிறார். உ.வே.சாமிநாதையர், 1986, பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்கினியருரையும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (1931இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பின் மறுதோன்றிப் பதிப்பு), பக். 397.
33. சு.இராசகோபால், பொ.இராசேந்திரன், வெ.வேதாசலம், சொ.சாந்தலிங்கம். (உ.ப.ஆ) 2006, தமிழ்-பிராமி கல்வெட்டுகள், (ப.ஆ) தி.ரீ. ரீதர், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. பக்.52
34. Shamasastry, R. (Tr.), 1915, Kautilya's Arthasastra, Goverment Press, Bangalore,Shamasastry, R. (Tr.), 1915, Kautilya's Arthasastra, Goverment Press, Bangalore,Digital PDF Copy, pp. 109-110.
35. அதியமான், ந. 2017, ‘அயலவர் குறிப்பிடும் அர்கெரு உறையூறா?’, புதிய ஆராய்ச்சி, இதழ் 7, பக்.134-140.
36. அணர்ச்செவிக் கழுதை சாத்தொடு, வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டு இயவின்
(பெரும்பாணாற்றுப்படை 80-83)
37. வைகல்தொறும் அசைவின்றி
உல்கு செயக் குறைபடாது (பட்டினப்பாலை 124-125)
38. கீழடி அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப் பெற வில்லை. Rajan, K. 2015, Early Writing System: A Journey from GraffitiRajan, K. 2015, Early Writing System: A Journey from Graffitito Brahmi, Pandya Nadu Centre for Historical Research, Madurai. Pl.1.20p. 47.
39. மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
கனவின் கண்டாங்கு வருந்தாது நிற்ப (புறநானூறு 377:16-19)
40. புறநானூறு 154:10-11, 286:3-5, புறநானூறு 291:1-3; அகநானூறு 195:12-13; பொருநராற்றுப்படை 80-84; சிறுபாணாற்றுப்படை 235-236; நெடுநல்வாடை 34-35; நற்றிணை 70:1-2; பதிற்றுப்பத்து 34:3-4
41. புறநானூறு 390:13-15,393:15-18;அகநானூறு 13:15-16, 54:9-10, 226:3; நற்றிணை 70:1-2; பதிற்றுப்பத்து 27:3; மதுரைக்காஞ்சி 519-522; நெடுநல்வாடை 132-135.
42. புறநானூறு 383:11-12, 392:14-15, புறநானூறு 393:16-19, 397:15, 400:10-13;பதிற்றுப் பத்து 12:20-21, பதிற்றுப் பத்து 76:13;அகநானூறு 86:20-22, 136:19-20;குறுந்தொகை 167:1-2; நற்றிணை 20:4, 90:2-4, 380:1-2; சிறுபாணாற்றுப்படை 85,86, 96,97;பெரும்பாணாற்றுப்படை 468-470; மதுரைக் காஞ்சி 431-433, 513-514,553-554, 720-722;நெடுநல்வாடை 132-135, 45-147; மலைபடுகடாம் 561.
43. புறநானூறு 337:8-10, 398:8-20; அகநானூறு 293:4-5, 387:5-7; நற்றிணை 15:1-2, 43:1, 99:2, 120:7-8, 366:2; பதிற்றுப்பத்து 54:5; சிறுபாணாற்றுப்படை 262:2; பெரும்பாணாற்றுப்படை 235, 327-329; நெடுநல்வாடை 145-147,181; குறிஞ்சிப்பாட்டு 54-55; பட்டினப்பாலை 107, 145.
44. அகநானூறு 236:11; பட்டினப்பாலை 107; பொருநராற்றுப் படை 154, 155
45. நீலக்கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் (புறநானூறு 274:1-2)
கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் (புறம். 275:1-2)
துவர் செய் ஆடைச் செந்தொடை மறவர் (நற்றிணை 33:6)
சிலையில் பகழிச் செந்துவர் ஆடைக்
கொலைவில் எயினர் (ஐங்குறுநூறு 363:1-2)
46. மாதையன், பெ. 1987-88, ‘எவ்வழி நல்லவர் ஆடவர்’, தமிழ்ப் பொழில் 61(8-9), பக். 367,379,399,412
47. ஒண்பெரி புனைகழல் சேவடிப்புரள
கருங்ககச்சு யாத்த காண்பன் அவ்வயிற்று (அகம். 376:7-8)
பாசி சூழ்ந்த பெருங்கழல்
தண்பனி வைகிய வரிக்கச்சினே (ஐங்குறுநூறு 206: 4-5)
நீலக் கச்சை பூவார் ஆடை
பீலிக் கண்ணி பெருந்தகை மறவன் (புறநானூறு 274:1-2)
... ... .... இளையர்
அரைச்செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ (நற்றிணை 21:1-2)
காஎரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் (சிறுபாண். 238-239)
நுண்வினைக் கச்சைத் தயக்குஅறக் கட்டி
இயல் அணிப் பொலிந்த ஈகை... (குறிஞ்சிப்பாட்டு 125-126)
48. பொருகணை தொலைச்சிய புண்டீர் மார்பின்
விரவுவரிக் கச்சின் வெண்கை யள்வாள் (பெரும்பாண். 70-71)
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி
நிறங்கவர்பு புனைந்த நீலக்கச்சினர்
மென்னேலேணிப் பன்மாண் சுற்றினர் (மதுரைக்காஞ்சி 639-640)
49. ...................... பொற்கோட்டியானையர்
கவர் பரிக்கச்சை நன்மாவினர் (புறநானூறு 377:23-24)
50. அகநானூறு 7:18-19, 54:9-10, 285:8-9, 136:14-15; புறநானூறு 54:10-11, 138:4-5, 159:13-14, 376:10-11, 377:16-19, 390:13-15; நற்றிணை 64:4-5, 90:1-4; பொருநராற்றுப்படை 153-155;பெரும்பாணாற்றுப்படை 175; முல்லைப்பாட்டு 59-61; மதுரைக்காஞ்சி 720-722; பட்டினப்பாலை 146-150.
51. புறநானூறு 385:5-7, 392:14-15, 393:15-18, 398:8-20, 400:10-13;பதிற்றுப் பத்து 12:20-21;அகநானூறு 337:11-13; பொருநராற்றுப்படை 80-84,பொருநராற்றுப்படை 153-155; பெரும்பாணாற்றுப்படை 468-470.
52. புறநானூறு 69:2-3, 138:4-5, 150:1-2
53. புறநானூறு 41:9; மதுரைக்காஞ்சி 597-98
54. புறநானூறு 260:28-29; பெரும்பாணாற்றுப் படை 68-69; முல்லைப்பாட்டு 66; நெடுநல்வாடை 159-160)
55. முல்லைப்பாட்டு 59-60
56. பட்டினப்பாலை 146-147
57. புறநானூறு 69:2-3, 136:1-3, 376:9-10, 383:10-12; பதிற்றுப் பத்து 62:1; பொருநராற்றுப்படை 80-84; மலைபடுகடாம் 561
58. நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ (புறநானூறு 14:7-9)
59. இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படம்செய் பந்தர்க் கல்மிசையதுவே (புறநானூறு 260:28-29)
60. கம்பலத்து அன்ன பைம்பயிர்த் தாஅம் (நற்றிணை 24:1-2)
61. உடாஅ போரா ஆகுதல் ஆறிந்தும்
பாடாம் மஞ்ஞைக்கு ஈட்ட எம்கோ (புறநானூறு 141:9-10)
கலிங்கம் ...................
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் (அகம். 136:23)
62. துணைபுண ரன்ன தூநிறத் தூவி
யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை (நெடுநல்வாடை 132-135)
63. ஷிலீணீனீணீsணீstக்ஷீஹ், ஸி. (ஜிக்ஷீ.), 1915, ரிணீutவீறீஹ்ணீ's கிக்ஷீtலீணீsணீstக்ஷீணீ, நிஷீஸ்மீக்ஷீனீமீஸீt றிக்ஷீமீss, ஙிணீஸீரீணீறீஷீக்ஷீமீ, ஞிவீரீவீtணீறீ றிஞிதி சிஷீஜீஹ், ஜீ. 110.
64. திருமணி விளக்கங்காட்டி திண்ஞா
ணெழினி வாங்கிய வீரறைப் பள்ளியுள் (முல்லைப்பாட்டு 63-64)
65. மரும்பொரு ளருத்துந் திருந்துதொடை நோன்றா
அடிபுதை யரணமெய்தப் படம்புக்கு (பெரும்பாண். 68-69)
படம்புகு மிலேச்ச ருழைய ராக (முல்லைப்பாட்டு 66)
66. புறநானூறு 383:10-12; சிறுபாணாற்றுப்படை 235-236
67. புறநானூறு 383:10-12, 397:15, பொருநராற்றுப்படை 80-84
68. பெரும்பாணாற்றுப்படை 468-470
69. புறநானூறு 398:8-20
70. புறநானூறு 392:14-15; நற்றிணை 366:2; அகநானூறு 198:5-6
71. புறநானூறு 390:13-15, 393:15-18; பதிற்றுப்பத்து 54:5; பெரும்பாணாற்றுப்படை 235
72. அகநானூறு 136:19-20
73. நெடுநல்வாடை 145-147; குறிஞ்சிப்பாட்டு 54-55
74. ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்
தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
அகன்றுமடி கலிங்கம் உடீஇச் (புறநானூறு 393:15-18)
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல்எடுத்து எறிந்த பல்கிழி உடுக்கை (அகநானூறு 285:8-9)
75. யாழ்ப் பத்தர்ப் புறம்கடுப்ப
இழைவலந்த பஃறுன்னத்து
இடைப்புரை பற்றிப் பிணிவிடாஅ (புறநானூறு 136:1-3)
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி (பொருநராற்றுப்படை 154)
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்
தரவுரியன்ன அறுவை நல்கி (பொருநராற்றுப்படை 80-84)
76. காட்டாக, புறநானூறு 54:10-11, 159:13-14, 376:10-11
77. உடைஓர் பான்மையின் பெருங்கை தூவா
வறன்இல் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு (நற்றிணை 90:3-5)
கழுவுறு கலிங்கம் கழாஅது உடிஇக் (குறுந்தொகை 167:2)
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி (பதிற்றுப் பத்து 76:13)
காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை (நெடுநல்வாடை 134-135)
78. ஊழுறு வினை நெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ்உவர்ப்பு ஒழியக் (அகம். 89:7-8)
79. முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத்
தாவுபு தெறிக்கும் மான்மேல் (புறநானூறு 259:5-6)
களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை (புறநானூறு 311:1-2)
பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி
துறைவிட்டன்ன தூமயிர் எகினம் (அகநானூறு 34:11-12)
அவ்வரி கொன்ற கறைசேர் வள்உகிர்ப்
பசைவிரல் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும், பொலன்காழ் அல்குல் (அகம். 387:5-7)
நலத்தகைப் புலத்தி பசைதோய்ந்து எடுத்துத்
தலைப்புடை போக்கித் தண்கயத்து இட்ட (குறுந். 330:1-2)
80. சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலிய............ (மதுரைக் காஞ்சி 720-722)
காடிகொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல்வாடை 134)
81. செருவாய் உழக்கிக்குருதி ஓட்டிக்
கதுவாய் போகிய துதிவாய் எஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர் (புறநானூறு 353:14-16)
82. காட்டாக, குறுந்தொகை 342:4-5 (குறிஞ்சி), நற்றிணை 80:5 (மருதம்), நெய்தல் ஐங்குறுநூறு 191:3 (நெய்தல்), அகநானூறு 7:2 (பாலை).
83. மரல்நார் உடுக்கை மலையுறைக் குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் (நற்றிணை 64:4-5)
84. பதிப்பாசிரியர் குழு, தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையுடன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. பக். 379
85. வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
.......
.......
கங்கை வாரியும் காவிரிப் பயனும் (பட்டினப்பாலை 187, 190)
வடக்கிலிருந்து இங்கு கொணரப்பட்ட சூதுபவளங்கள் தமிழகத்தின் அகழாய்வில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கங்கையிலிருந்து வெட்டிவேர் கொணரப் பட்டதற்கு இலக்கியம் மட்டுமன்றி ஆவணச் சான்றும் உள்ளது. (பார்க்க ந.அதியமான் 2016 ‘சங்க காலத் துறைமுகத்தில் முசிறித் துறைமுகத்தின் பங்கு குறித்த ஒருகிரேக்க ஆவணம்’ புதிய ஆராய்ச்சி, இதழ் 6. பக். 96-104). இவ்வாறு வெட்டிவேர் கொணரப்படும்போது கலிங்கநாட்டுத் துறைமுகத்திலிருந்து துணிகளும் பெற்று வந்திருக்கலாம்.
வால்உளைப் புரவியடு வடவளம் தரூஉம்
நாவாய்சூழ்ந்த நளிநீர்ப் படப்பை (பெரும்பாண். 320-21)
நாவாய் என்னும் ஆழ்கடலில் பயணம் செய்யும் கப்பல்களில் மேலைநாடுகளிலிருந்து வந்த குதிரைகளையும் வட இந்தியாவி லிருந்து வந்த பொருட்களுடனும் நீர்பெயற்று என்னும் துறை முகம் விளங்கியதாகப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது