சங்க இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் பதிவுகளும் ஆண்பாற் புலவர்களின் பெண் பற்றிய பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. சங்கப் பாடல்களில் 181 பாடல்கள் பெண்பாற் புலவர்களால் பாடப்பட்டுள்ளன. இவற்றில் 131 அகப்பாடல்கள்; மீதமுள்ள 50 பாடல்கள் மட்டுமே புறப்பாடல்கள். சங்க இலக்கியம் குறிப்பிடும் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. அவ்வை நடராசன், பெண்பாற் புலவர்கள் 41 பேர் என்று தக்க சான்றுடன் நிறுவியுள்ளார்.
பத்துப்பாட்டில் சரிபாதி அதாவது ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்கள். இவற்றில் திருமுருகாற்றுப் படையை நக்கீரரும், பொருநராற்றுப்படையை முடத்தாமக் கண்ணியாரும், சிறுபாணாற்றுப்படையை நல்லூர் நத்தத்தனாரும், பெரும்பாணாற்றுப்படையைக் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும், கூத்தராற்றுப் படை எனும் மலைபடுகடாமைப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனாரும் பாடியுள்ளனர். இந்த ஐவருள் முடத்தாமக்கண்ணியார் பெண்பாற் புலவராவார். இவ் ஐவரும் பாடிய ஆற்றுப்படை நூல்களுள் ஏறத்தாழ 45 இடங்களில் பெண் பற்றிய சித்திரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ஆற்றுப்படை சித்திரிக்கும் பெண்கள் - விறலியர், கோதை மகளிர், வெறியாடு மகளிர், புனலாடு மகளிர், செவிலி அம்பெண்டிர், நாடக மகளிர், ஏவல் மகளிர், இல்லற மகளிர், மகவு (பெண்குழந்தை), பாடினி, பழையர் மகளிர், கிணைமகள், உமட்டியர், ஆய்மகள் என 19 பெயர்களில் சுட்டிக்கூறப்பட்டுள்ளனர். இத்தகைய பெண்களைப் பற்றிய சித்திரிப்புகளில், இரவலர்களோடு உடன் செல்பவர்களாகப் பாடினி, விறலி, கிணைமகள் போன்றோரும் ஏனைய பெண்கள் ஐந்நில வருணனையின் ஒரு பகுதியாகவும் வருணிக்கப்பட்டுள்ளனர்.கோவலர் குடியிருப்பைக் காட்சிப்படுத்தும் முகமாக ஆய்மகள் (இடையர் மகளிர்) அதிகாலையில் எழுந்து தயிர் கடைந்து விற்பவளாகவும், அவளுடைய மேனி, காது, தோள், கூந்தல் ஆகிய உடற்கூறு வருணனைகளோடு (பெரு.155-166) பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். உமணரின் துணைவியாகிய உமட்டியர், சுட்டப்படும் இரண்டு இடங்களிலும் (சிறு.55-62, பெரு.57-65) குழந்தைகளோடு உமணரின் உப்பு வண்டியுடன் செல்வதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடிக்கை மகடூஉ எனும் பெயரால் சுட்டப்படும் உழத்தியர் (சிறு. 189-195) ‘பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்தை’ உடையவர்களாக இரவலர்க்கு விருந்து (உணவு) படைக்கும் தன்மையோடு ஓரிடத்தில் மட்டும் காட்டப்பட்டுள்ளனர்.
இரவலர்களாகச் செல்லும் விருந்தினர்களுக்கு விருந்து உவந்தளிக்கும் தன்மை உடையவர்களாக எயிற்றியர் (சிறு.174-177, பெரு.88-100) காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர். இதில்,
“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு” - சிறு.175
“நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்” - பெரு.94
என இரண்டிடங்களிலும் அவர்களின் சமைக்கும் திறன் முதன்மைப்படுத்தப் பட்டுள்ளன.
குறிஞ்சிநில மக்களாக அடையாளப்படுத்தப்படும் குறமகள், ஆறு இடங்களில் (திரு.227-244, மலை.175-185, 305-306, 320-322, 328-329, 342) குறிப்பிடப் பட்டுள்ளாள். இவற்றில் அவளின் வெறியாடும் தன்மையும் உணவு சமைக்கும் திறனும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன. கூத்தராற்றுப்படையில்,
“கழைவளர் நெல்லின் அரிஉலை ஊழ்த்து
வழைஅமை சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறுஇரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வால்அவிழ் வல்சி” (மலை.180-183)
என குறத்தியின் உணவு அடுதிறன் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.
கானவனின் மனைவி கொடிச்சி மூன்று இடங்களில் (மலை.17-19, 302-304, பெரு. 134-136) வீரப்பெண்ணாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். இவற்றில்,
“யானை தாக்கினும் அரவுமேல் செலினும்
நீல்நிற விசும்பின் வல்ஏறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை” (பெரு.134-136)
என இயல்பான குறிஞ்சி நிலத்திற்கே உரிய வீரப்பண்புடன் வருணிக்கப்படும் கொடிச்சியர், புலிபாய்ந்த தன் கணவனின் புண் ஆற (மலை.305-306) பாடல் பாடுவதாகவும் காட்சியுருப்பெற்றுள்ளனர்.
நெய்தல் நிலத்தில் காட்சிப்படுத்தப்படும் நுளைமகள் (கள் விற்பவர்) இரண்டிடங்களில் (சிறு.154-159...163, பெரு.336-342) கள் உண்டாக்குபவளாகவும், கள் விற்பவளாகவும் சுட்டிக்கூறப்பட்டுள்ளாள். சிறுபாணாற்றுப்படை கூறும் நுளைமகள்,
“........................................................ பெருந்தோள்
மதிஏக் கறூஉம் மாசுஅறு திருமுகத்து
நுதிவேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப” (சிறு.156-159)
என இரவலர்க்கு விருந்து புரக்கும் தன்மையோடு புனையப்பட்டுள்ளாள்.
பொருநன் மனைவியாகிய கிணைமகள் ஓரிடத்தில் மட்டும் (சிறு.130-139) வறுமையின் உச்சக்கட்டத்தில் உழன்ற நிலையில் சுட்டிக்கூறப்பட்டுள்ளாள். இதனை,
“ஒல்குபசி உழந்த ஒருங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்” (சிறு.135-139)
எனக்கூறும் நல்லூர் நத்தத்தனாரின் வருணனையின் மூலம் அறிய முடிகின்றது. மருத நிலத்துக் கள் விற்கும் பழையர் மகளிர் பற்றிய சித்திரிப்பு, ஓரிடத்தில் (மலை.457-484) பெருங்குன்றூர் பெருங்கௌசிகனாரால் சுட்டப்பட்டுள்ளது. இக்காட்சியில் அம்மகளிர் பகன்றை மாலை அணிந்திருந்தமையும் வேளாண் செய்யும் ஆடவர்க்குக் கள் விற்பதையும் அவர் பதிவு செய்துள்ளார்.
பாணனின் மனைவியாகிய பாடினி இசைநுணுக்கம் கற்றவள்; அவளைப் பற்றிய வருணனை இரண்டிடங்களில் (பொரு.25-47, 159-162) பொருநராற்றுப் படையில் முடத்தாமக் கண்ணியாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. பாடினி பற்றிய சித்திரிப்பில், அவள் கூந்தல், நெற்றி, புருவம், வாய், கண், பல், காது, கழுத்து, தோள், கை, விரல், நகம், மார்பு, இடை, அல்குல், தொடை, அடி போன்ற உடல் உறுப்புகள் அனைத்தும் முடி முதல் அடி வரை இயற்கையான உவமை உருவகத்துடன் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. இதனை,
“அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலவுறு முத்திற பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்
நாணடச் சாய்ந்த நலங்கிளரெ ருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்திரள் குறங்கின்
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி” (பொரு.25-47)
என வரும் அடிகளால் அறியலாம்.
மலைபடுகடாம் நன்னன் சேய் நன்னனின் பல்குன்றக் கோட்டத்து கோதை மகளிர் (மலை.349-351) திருவிழாக்களில் பல வண்ண மாலைகளை அணிந்திருந்தமையைப் பெருங்கௌசிகனார் சுட்டியுள்ளார். இதனை,
“குரூஉக்கண் பிணையல் கோதை மகளிர்
முழவுத்துயில் அறியா வியலுள் ஆங்கண்
விழவின் அற்று அவன் வியன்கண் வெற்பே” (மலை.349-351)
என வரும் அடிகளால் அறியலாம்.
ஆற்றுப்படை நூல்களில் பெண் பற்றிய வருணனையில் விறலி பற்றிய சித்திரிப்பு, ஏறத்தாழ எட்டு இடங்களில் (பொரு. 109-110, சிறு. 13-33, பெரு. 481-486, மலை.41-46, 201-202, 358-360, 532-538, 569-570) இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பகுத்துப் பார்க்கும் பொழுது,
1. விறலியர் கடவுளை வழிபடுதல் (மலை. 201-202, 358-359, 533-538, பெரு. 481-486)
2. பரிசு அவாவி செல்லும் நிலை (மலை.41-46)
3. விறலியர் பரிசில் பெறும் நிலை (மலை.569-570)
4. அரசவையில் யாழிசைத்து ஆடுதல் (பொரு.109-110)
5. விறலியின் கேசாதி பாத வருணனை (சிறு.13-33)
ஆகிய காட்சிக்கூறுகள் சித்திரித்துக் கூறப்பட்டுள்ளன. இக்காட்சிக் கூறுகளில் விறலியின் தலைமுடி, சாயல், அடி, கை, தொடை, மார்பு, பல், நெற்றி, என முடி முதல் அடி வரை உள்ள உடலுறுப்புகள் உவமையாகவும் உருவகமாகவும் இயற்கைப் பொருட்களோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளன. இதனை,
“ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயில்மயிற் குளிக்குஞ் சாயல் சாஅய்
உயங்குநாய் நாவின் நல்லெழில் அசைஇ
வயங்கிழை உலறிய அடியின் அடிதொடர்ந்து
ஈர்ந்துநிலத் தோயும் இரும்பிடித் தடக்கையிற்
சேர்ந்துடன் செறிந்த குறங்கில் குறங்கென
மால்வரை ஒழுகிய வாழை வாழைப்
பூவென பொலிந்த ஓதி ஓதி
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றும் சுணங்கில் சுணங்குபிதிர்ந்
தியாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்
பூணகத் தொடுங்கிய வெம்முலை முலையென
வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன்சே றிகுதரும் எயிற்றின் எயிறெனக்
குல்லையம் புறவிற் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாணுதல் விறலியர்
நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி” (சிறு.13-32)
எனவரும் அடிகளால் அறிந்து கொள்ளலாம். இவையல்லாது
1. வெறியாடு மகளிர் - திரு.198-205
2. புனலாடு மகளிர் - பொரு.241, சிறு.116-118, பெரு.311-312, 380-387
3. செவிலி அம் பெண்டிர் - பெரு. 249-252
4. கூத்தியர் (நாடக மகளிர்) - பெரு.55-56
5. ஏவல் மகளிர் - பொரு.76-85
6. இல்லற மகளிர் - சிறு.213-215
7. மகவு (பெண் குழந்தை) - மலை.185, பெரு.58, 89-90, 271, 477-479, சிறு.191-192
ஆகியோர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே மேலோட்டமாகச் சுட்டிக் கூறப்பட்டுள்ளன.
ஆற்றுப்படை நூல்களில் பெண்ணைப் பற்றிய மேற்கண்ட சித்திரிப்புகள் சில உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. பத்துப்பாட்டு நூல்கள் நீண்ட பாடலடிகளைக் கொண்டவை; அடி நீட்சியின் காரணமாக எதனையும் விரிவாகப் பாடுவது இயல்பாக அமைந்துவிட்டது. சங்கப் பாடல்கள் நீண்டகால இடைவெளியில் தோன்றியவை; அவற்றில் இனக்குழுவிலிருந்து அரசுருவாக்கம் நிலைபெற்ற காலம் வரையுள்ள பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இனக்குழு நிலையில் இயற்கையோடு இயற்கையாய் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். பின்னர் அரசுருவாக்க நிலையில் ஏற்பட்ட வசதிகள், வாய்ப்புகள், நாடு, நகரக் காட்சிகள் அவர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கின. எனவே இயற்கைக்கும் செயற்கைக்குமான வளர்ச்சி வேறுபாடுகள் அவர்களின் பாடல்களில் எதிரொலித்தன.
இனக்குழு சமூகம் பெரிய அளவிலான ஆடை அணிகலன்களை அணியவில்லை. அவர்கள் இலை தழைகளை ஆடையாக அணிந்திருந்தமையைச் சங்கப் பாடல்கள் வழி அறியலாம். உடலைப் பார்த்து வளர்ந்த சமூகம் அவ்வுடலைத் தங்கள் படைப்பில் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்றாகும். அந்த அடிப்படையிலேயே ஆண் பெண் எனும் வேறுபாடின்றி தங்கள் உடல் பற்றிய வருணனைகளைச் சங்கப் புலவர்கள் இயல்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர். பெண்ணுடலை எழுதுவோம் என்ற பெண் படைப்பாளிகளின் இன்றைய குரல், ஆண், பெண் வேறுபாட்டின் - பெண் அடிமைத்தனத்தின் உச்சநிலையாகவே இன்று எழுந்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதன் காரணமாக சங்கப் பனுவல்களில் பெண்ணுடலை மட்டுமின்றி, ஆணுடலையும் விரிவாக வருணித்து எழுதுவது அக்கால மரபாக இருந்தது. இதனைக் குறிஞ்சிப்பாட்டில் தலைவன் வருணனை (குறி.107-127) முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை தலைவன் வருணனை (முல்.43-76, 89-92, 101-103, நெடு.168-188) கானவர் - (திரு.190-197, பெரு.106-117, குறி.153-165, மலை.14-19) எயினர் - (பெரு.117-133) உழவர் - (பெரு.206-228) என்பன போன்ற ஆண் பற்றிய சித்திரிப்புகள் இதனை உணர்த்துகின்றன. இவற்றில், கபிலர் குறிஞ்சிப்பாட்டில் தலைவனை முடி முதல் அடி வரை வருணிக்கும் போக்கினை,
“எண்ணெய் நீவிய சுரிவளர் நறுங்காழ்த்
தண்ணறுந் தகரங் கமழ மண்ணி
ஈரம் புலர வரலுளர்ப் பவிழாக்
காழகில் அம்புகை கொளீஇ யாழிசை
அணிமிகு வரிமிஞி றார்ப்பத் தேங்கலந்து
மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்
வண்ணவண் ணத்த மலராய்பு விரைஇ
தண்ணறுந் தொடையல் வெண்போழ்க் கண்ணி
நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சிப்
பைங்காற் பித்திகத் தாயிதழ் அலரி
அந்தொடை ஒருகாழ் வளைச் செந்தீ
ஒண்பூம் பிண்டி ஒருகாது செரீஇ
அந்தளிர்க் குவவுமொய்ம் பலைப்பச் சாந்தருந்தி
மைந்திறை கொண்ட மலர்ந்தேந் தகலத்துத்
தொன்றுபடு நறுந்தார் பூணொடு பொலியச்
செம்பொறிக் கேற்ற வீங்கிறைத் தடக்கையின்
வண்ண வரிவில் லேந்தி அம்புதெரிந்து
நுண்வினைக் கச்சைத் தயக்கறக் கட்டி
இயலணிப் பொலிந்த ஈகை வான்கழல்
துயல்வருந் தோறும் திருந்தடிக் கலாவ” (குறி.107-127)
என வரும் அடிகளால் அறியலாம்.
சங்ககாலச் சமூகத்தில் இயற்கை அறிவின் தேவை இருந்தது; அதனால் அது மதிக்கப்பட்ட சூழல் நிலவியது. இதன் காரணமாகத் தான் பார்த்து வளர்ந்த இயற்கை நுட்பங்களை - இயற்கை வடிவங்களை உயிர்ப்பொருட்களை, மனித வடிவம் மற்றும் செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பாடுவது இயல்பாக வெளிப்பட்டுள்ளது.
தாங்கள் நுகர்ந்த நுகர்ச்சிப் பொருளை மிகையின்றி பாடிய புலவர்களின் பெண் பற்றிய சித்திரிப்பில் விறலியர், பாடினி பற்றிய வருணனைகள் கவனம் பெற்ற அளவிற்குப் பிற பெண் மாந்தர்களான கொடிச்சி, ஆய்மகள், எயிற்றியர் பற்றிய காட்சிப்படுத்தல்கள் கவனம் பெறவில்லை. இதற்குக் காரணம் விறலியர், பாடினி வருணனையில் கேசாதி பாத வருணிப்பு அடுக்கடுக்காய் அமைந்திருப்பதே.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களைப் பாடிய புலவர்கள் ஐவர்; பாடிய இலக்கிய வடிவம் ஒன்றே; இலக்கிய செல்நெறிகளும் ஒன்றே; பாடிய ஐவருள் பெண்பாற் புலவர் உள்ளபோதும் அடிப்படை அமைப்பிலும் புலப்பாட்டு முறையிலும் மாறுபாடு இல்லை. எனவே, ஆற்றுப்படையில் இடம்பெறும் பெண் சித்திரிப்பில், இத்தகைய பின்புலத்தையும் காலப்பரிமாணத்தையும் மனதிற் கொண்டே பிற்காலக் கோட்பாடுகளைப் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
துணை செய்த நூற்கள்
1. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
2. பத்துப்பாட்டு மூலமும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரையும்.
3. பத்துப்பாட்டு பொருளடைவு - முனைவர் ச.பொ.சீனிவாசன்
4. பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் - முனைவர் ச.பொ.சீனிவாசன்
- முனைவர் ச.பொ.சீனிவாசன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம் - 695 034