தமிழக, தமிழீழப் போராட்டங்களின் இடையுறவு

சிங்கள ஒடுக்குமுறைக்கும், இந்திய ஒடுக்குமுறைக்கும் இடையிலான வரலாற்று வேறுபாடுகளை நாம் மறுக்கவில்லை. அதேபோல் தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழக விடுதலைப் போராட்டமும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பதை நாம் கருத்தில் கொள்ளவே செய்கிறோம். ஆனால் தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கான தேவையையும், அதற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குமான இடையுறவையும் புரிந்து கொள்ளாமல், கண்டு கொள்ளாமல் அல்லது கணக்கில் கொள்ளாமல் இருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

“தமிழீழத்திற்காகத் தமிழகம் என்ன செய்துள்ளது?'' என்பதற்கு மறுமொழியாக “தமிழகத்திற்காகத் தமிழீழம் என்ன செய்துள்ளது?'' என்ற வினாவை நான் தொடுத்தபோது தமிழீழ நண்பர்கள் பலரும் திகைத்துப் போனார்கள். தமிழகத்தின் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தமிழீழத் தேசியர்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்பதைச் சுருக்கென்று உணர்த்துவதற்காகவே நான் இந்தக் கோள்வியைக் கேட்டேன்.

தமிழக அரசியல் பற்றிய பார்வை

முள்ளிவாய்க்காலுக்குப் பின் தமிழீழ மக்கள் இந்தியாவைக் கடுமையாக வெறுக்கிறார்கள் என்பது மெய்தான். ஆனால் இது மட்டும் போதாது. இந்திய அரசின் வல்லாதிக்கத் தன்மையை உணர்வதோடு, அதற்கெதிரான போராட்ட ஆற்றல்களை இனங்கண்டு அவற்றோடு தோழமை கொள்ளவும் வேண்டும். குறிப்பாகத் தமிழக அரசியலை வெறும் கருணாநிதி – செயலலிதா போட்டியாகப் புரிந்து கொள்வதிலிருந்து வெளியே வரவேண்டும். அடுத்த முதலமைச்சர் ஆகப் போகிறவர் யார்? என்ற புதிருக்கு விடை தேடுவதிலேயே காலங்கழித்துக் கொண்டிருக்கக் கூடாது. வருங்காலத்தில் தங்களுக்குப் பிடித்தமான ஒருவர் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விடுதலையைப் பொட்டலம் கட்டி அனுப்பி வைக்க மாட்டாரா? என்று ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது.

இப்பொழுதுள்ள இந்திய அரசமைப்பில் யார் முதலமைச்சர் தமிழீழ மக்களைக் காக்கத் தவறிவிட்டார் என்பதன் பொருள் அவர் முதலமைச்சருக்குரிய சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இதைச் செய்திருக்க முடியும். ஆனால் செய்யத் தவறிவிட்டார் என்ற பொருளில் அல்ல. அவர் தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தில்லி அரசை எதிர்த்துப் போராடத் தவறிவிட்டார் என்ற பொருளில்தான் இப்படிச் சொல்கிறோம். எடுத்துக்காட்டாக, ஈழத் தமிழர் இன அழிப்பில் தில்லியின் பங்கைக் கண்டித்து அவர் முதல்வர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தெருவில் இறங்கிப் போராடியிருக்கலாம். இவ்வாறு தில்லிக்கு நெருக்குதல் கொடுத்து அதன் தமிழர் விரோதப் போக்கைத் தடுத்திருக்கலாம். ஒரு முதலமைச்சரால்

அதிகபட்சம் செய்யக்கூடியது பதவி விலகிப் போராட முன்வருவதுதான். இதைச் செய்யாமல் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தார் என்பதுதான் கருணாநிதி செய்த இரண்டகம். பதவியின் பெரும் பயன் (அதிகபட்சப் பலன்) பதவி விலகல்தான் என்னும்போது விலகுவதற்கு மட்டும் பயன்படக்கூடிய பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் ஏன் இத்துணைக் கவலை.

பதவி அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதால் என்ன பயன்? இந்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பதவி விலகுவதால் என்ன பயன்? ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் என்ன பயன்? என்றெல்லாம் அப்போதே கேள்வி எழுப்பினார்கள். இவர்களெல்லாம் பதவி விலகுவது மக்களை எழுச்சி கொள்ளச் செய்யும். இந்திய அரசுக்கு நெருக்குதல் உண்டு பண்ணும்.

2008 அக்டோபர் 14 ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். ஒருசில கட்சிகள் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியிருந்தாலும் மற்ற கட்சிகள் விலகல் முடிவைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். நடுவண் அரசின் தி.மு.க., பா.ம.க. அமைச்சர்கள் பதவி விலகியிருக்க வேண்டும். போரை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே கடைசிவரை பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தை மன்னிக்க முடியாது. இன அழிப்புப் போரை எதிர்ப்பதாகச் சொன்ன அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்து, போரை நிறுத்தும் வரை இங்கே தேர்தல் நடத்தத் தேவையில்லை என்று அறிவித்திருந்தால் அது காங்கிரசைத் தனிமைப்படுத்தி இருக்கும். மற்ற கட்சிகள் தயங்கினாலும், உறுதியான ஈழ ஆதரவு கட்சிகள் மட்டுமாவது இவ்வாறு நிலை எடுத்திருக்க வேண்டும்.

இதை விடுத்து ஈழ ஆதரவுக் கட்சிகள் தமக்குள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திருக்க வேண்டும் என்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலை. இப்படியொரு கூட்டணி அமையாததால்தான் தி.மு.க. காங்கிரசுக் கூட்டணியில் இணைந்தேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சொல்லும் சமாதானம் ஏற்புடையதன்று. எந்தக் கூட்டணியும் தேவையில்லை என்று தனித்துப் போட்டியிடாதது ஏன்? என்பதற்கு அவரிடமிருந்து பொருத்தமான விளக்கமில்லை. பேசாமல் தேர்தலையே புறக்கணித்திருக்கலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை?

இப்படி எல்லாம் இந்த அரசியல் கட்சிகள் செய்யாமல் போனதற்கு என்ன காரணம்? இந்தக் கட்சிகள் நடத்துவது பதவி அரசியல். ஈழத் தமிழர்கள் அழிவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தங்கள் பதவி அரசியலைச் சிறிது காலம் ஒத்தி வைக்கக்கூட இக்கட்சித் தலைமைகளுக்கு மனமில்லை.

மேலிருந்து கீழ்வரை இந்தக் கட்சிகளின் இயைபே இப்படிப்பட்டதுதான். காலமெல்லாம் பொதி சுமந்து பழகியபின் திடீரென்று போர்ப் புரவிகளாக மாற முடியாது. ஒரு தேசிய விடுதலை இயக்கத்தை வழிநடத்துவதற்கு மட்டுமல்ல. பிறிதொரு தேசிய விடுதலை இயக்கத்தை ஆதரிப்பதற்கும்கூடத் தேசியம் குறித்துத் தெளிவான புரிதல் தேவைப்படுகிறது. செயலளவில் இந்தியத் தேசியத்திற்குச் சேவகம் செய்து கொண்டே தாயகம், இறையாண்மை, தன்னாட்சி என்றெல்லாம் தமிழ்த் தேசிய வாய்ப்பந்தல் போடுவதால் தமிழகத்திற்கும் பயனில்லை, தமிழீழத்திற்கும் பயனில்லை.

விடுதலைப் போராட்டங்கள் இரண்டு

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும், தமிழக விடுதலைப் போராட்டத்துக்குமான இயங்கியல் இடையுறவை உள்வாங்கிச் செயல்படும்போதுதான் உலகத் தமிழர் ஒற்றுமை என்பது பொருளும் பயனும் உடைத்தாகும். இவ்விரு விடுதலைப் போராட்டங்களும் தனித்தனியானவை; ஆனால் நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றுக்கொன்று புறநிலையில் துணை செய்யக் கூடியவை. ஆனால் ஒன்றுக்கொன்று நிபந்தனையாகக் கூடியவை அல்ல. இந்த இடையுறவை மாறாது நிலைத்திருக்கும் சூழலில் இடம் பெறுவதாக அல்லாமல், தொடர்ந்து மாறிவரும் உள், வெளி நிலைமைகளில் இயங்கி வருவதாகக் காண வேண்டும். இருதரப்பிலும் முன்னின்று போராடும் ஆற்றல்களுக்காவது முதலில் இந்தப் புரிதல் தேவை. பிறகு இது உலகத் தமிழர்களின் கூட்டுணர்வில் இறங்கிப் பதிய வேண்டும். இருதரப்பு அறிவாளர்களும் இதற்காக முன்முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம், தமிழக விடுதலைப் போராட்டம் இரண்டுமே வரலாற்றுத் தேவைகள் என்றாலும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் இருப்பவை. எனவே, அவை ஒன்றுக்கொன்று துணை செய்யும் வழிகளும் – வடிவங்களும் வேறுபடத்தான் செய்யும்.

தமிழகத்தின் தமிழ்த் தேசிய இயக்கம் வயதில் மூத்ததென்றாலும் பின்தங்கி விட்டது. தமிழீழத்தின் தமிழ்த் தேசிய இயக்கம் முந்திக் கொண்டுவிட்டது. தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின் தேவையைத் பெருந்திரளான தமிழ் மக்கள் உணரச் செய்வதற்காகப் போராடி வருகிறோம். தமிழ்த் தேசியம் பெருந்திரளான தமிழ் மக்களை ஆட்கொள்ளாமல் விடுதலைக்கான அரசியல் ஆற்றலாக மலர முடியாது. தமிழ் நாட்டில் வெறும் பரப்புரைக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதன்று இதன் பொருள். தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள்தாம் தமிழ்த் தேசியத்தின் தேவையைப் பெருந்திரளான மக்கள் உணரும்படி செய்வதற்கான முதன்மைவழி, இந்தப் போராட்டங்களைத் தமிழ்த் தேசிய விடுதலைக் குறிக்கோளின் திசையில் செலுத்துவதற்குத் தமிழ்த் தேசிய அமைப்புகளை உறுதியும் வலிமையும் மிக்கவையாகக் கட்டியெழுப்ப வேண்டும். இந்தக் கடமைகளைச் செய்வதற்குத் தமிழ்த் தேசிய ஊடகங்களை வலுவாக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் அறப் போராட்டமாகத் தொடங்கி ஆயுதப் போராட்டமாக வளர்ந்து கரந்தடிப்போர் என்ற நிலையிலிருந்து மரபுவழிப் போராக வளர்ந்து, இறுதியில் பெருத்த படையியல் தோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழீழ மக்கள் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழுந்து தங்கள் சூழலுக்குப் பொருத்தமான புதிய வடிவங்களில் போராட்டத்தைத் தொடர வேண்டும். அதற்கு உலகத் தமிழர்கள் உதவ வேண்டும்.

சிங்கள அரசைத் தனிமைப்படுத்தல்

எப்படி? தமிழீழ மக்கள் எவ்வகையிலும் போராடுவதற்குமான வெளியை இழந்து நிற்கிறார்கள். இந்த வெளியை உருவாக்கித் தர வேண்டுமானால் சிங்கள அரசுக்குக் கடும் நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

இனக் கொலைக் குற்றவாளியைத் கூண்டிலேற்றுக! ஈழ மக்கள் மீதான இனப் பேரழிப்புப் போர் குறித்து அய்.நா. அமைப்பின் வழியாக விசாரணை நடத்துக! சிறைப்படுத்திய போராளிகள் அனைவரையும் விடுதலை செய்க! இன்னமும் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்க! அதியுயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றுக! தமிழ் மக்கள் அனைவரையும் மீள் குடியமர்த்தம் செய்க! அவர்களின் நிலம், உடைமைகள், தொழில் அனைத்தையும் திருப்பித் தருக! போரினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்க! தமிழர் தாயகப் பரப்பில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்துக! தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளை உறுதி செய்க! இவை போன்ற கோரிக்கைகளுக்காகத் தமிழகத் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் போராட வேண்டும். இது அறப்போராட்டம்தான் என்றாலும் அடையாளப் போராட்டமாக இருந்துவிடக் கூடாது.

சிங்கள அரசுக்கு உறைக்கும் விதத்தில் நம் போராட்டம் அமையும் பொருட்டுச் சிறிலங்காவை உலக அளவில் தனிமைப்படுத்த வேண்டும். பொருளியல் வகையிலும் அரசியல் – அரசுறவியல் வகையிலும், பண்பாட்டு வகையிலும் சிறிலங்கா மீது தடை கொண்டுவரச் செய்ய வேண்டும்.

வட அமெரிக்காவில் அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை (க்குகூகஅஇ) சிறிலங்காவிலிருந்து வரும் பண்டங்களைப் புறக்கணிப்பதற்கான இயக்கத்தை நடத்தி வருகிறது. தமிழகத் தமிழர்கள், தமிழீழத் தமிழகர்களோடு யூதப் பெண்மணி மரு. எலின் சாண்டரும் இந்த இயக்கத்தில் முனைப்புடன் பங்காற்றி வருகிறார். அய்ரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவிற்கான “ஜி.எஸ்.பி. பிளஸ்'' சலுகையை நிறுத்த முன்வந்திருப்பது நல்ல அறிகுறி.

நம்பிக்கையும் ஊக்கமும்

கொழும்பில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவைப் பிசுபிசுக்க வைப்பதில் தமிழ்த் திரைக் கலைஞர்களும், மே 17 இயக்கம், தமிழர் காப்பு இயக்கம் போன்றவையும் வகித்த பங்கு நமக்கு ஊக்கமளிக்கக் கூடியது. கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கத் தமிழக எழுத்தாளர்கள் எடுத்துள்ள முயற்சிக்குக் குறிப்பிடத்தக்க வெற்றி கிட்டியுள்ளது.

இவை நமக்கு ஊக்கமளித்துள்ளன என்றாலும் போதாமாட்டா. நம் முயற்சியை நூறு மடங்கு விரிவாக்கவும் தீவிரமாக்கவும் வேண்டும். சிறிலங்காவைப் புறக்கணிப்போம்! என்ற முழக்கமும் இயக்கமும் தமிழகத்தில் எதிர்ப்பாளரும் மறுப்பாரும் இல்லாதவையாக விரைவாய் வளரச் செய்ய வேண்டும். இந்தியாவெங்கும் இந்தப் புறக்கணிப்பு இயக்கத்துக்கு சனநாயக ஆற்றல்களின் முனைப்பு மிக்க ஆதரவைப் பெற இயலும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

உலக அளவில் ஈழத் தமிழர்கள் சனநாயக முறையில் தேர்ந்தெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ.) தமிழீழத் தனியரசுக் குறிக்கோளின் பின்னால் பல்வேறுபட்ட தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழீழத் தனியரசுக் கோரிக்கைக்குப் பன்னாட்டுச் சமுதாயத்தின் அறிந்தேற்பையும் ஆதரவையும் ஈட்டும் கடமையை நா.க.த.ம. சிறப்பாக நிறைவேற்றும் என நம்பலாம்.

நா.க.த. அரசாங்கத்துக்கும் அதன் முயற்சிகளுக்கும் தமிழ் நாட்டிலும், இந்திய அளவிலும் ஆதரவு திரட்டத் தமிழகத்தின் ஈழ ஆதரவு ஆற்றல்கள் திட்டமிட்டு முன்முயற்சி எடுக்க வேண்டும். இங்கே ஏதிலிகளாக வாழும் ஈழத்தமிழர்களும் நா.க.த. அரசாங்கத்தை அமைப்பதிலும் இயக்குவதிலும் தங்களுக்குரிய பங்கினை ஆற்றுவதற்கு நாம் உதவ வேண்டும்.

நா.க.த. அரசாங்கமும் விடுதலைப் புலிகளும்

நா.க.த. அரசாங்கத்தைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியாக கருதுவதும் இரண்டையும் ஒரே அளவு கோலால் ஒப்புநோக்குவதும் தவறு. இதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

புலிப்படை என்பது தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கட்டத்தில் – ஆயுதப் போராட்டம் முதன்மை வடிவமாகத் திகழ்ந்த கட்டத்தில் எழுந்து வளர்ந்து தன் கடமைகளைச் செய்தது. போராட்டத்தின் புதிய கட்டத்தில் தமிழீழ மக்களின் பன்னாட்டு வாழ்வு, தமிழ்த் தேசியத்தின் பன்னாட்டு அளõவல் ஆகியவற்றின் அடிப்டையிலான அரசியல் போராட்டம் முதன்மை வடிவமாகியுள்ள கட்டத்தில் – இக்கட்டத்திற்குரிய கடமைகளைச் செய்வதற்கு நா.க.த.அ. பிறந்துள்ளது. புலிகளின் குறிக்கோளும் தனித் தமிழீழம்தான், நா.க.த.அ. அரசாங்கத்தின் குறிக்கோளும் தனித் தமிழீழம்தான் என்ற பொருளில் மட்டுமே நா.க.த. அரசைப் புலிகளின் வரலாற்றுத் தொடர்ச்சியாகக் கருத முடியும். அவை ஆற்ற வேண்டிய பணிகள் அடிப்படையிலேயே வேறுபட்டவை என்பதால் அமைப்புமுறை, வழிமுறை, உத்திகள் ஆகிய எல்லா வகையிலும் அவை வேறுபட்டவையாகவே இருக்கும். இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளத் தவறினால் குழப்பம்தான் மிஞ்சும்.

சிங்களத்தின் மீது தாக்கம்

சிங்களப் பேரினவாத அரசைத் தனிமைப்படுத்தி நெருக்குதல் ஏற்படுத்தும் முயற்சிகள் சிங்களப் பேரினவாதத்தின் சமூக அடித்தளமாகிய சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கும். அவர்களைத் தங்கள் அரசுக்கு எதிராகத் திருப்பும். சிங்கள மக்களிடையே உண்மையான சனநாயக ஆற்றல்கள் வளர்வதற்கு உதவும். அதுமட்டுமல்ல சிங்கள ஆளும் வர்க்கத்துக்குள் இதனால் முரண்பாடுகள் முற்றும். மோதல்கள் வெடிக்கும். ஆளும் பாசிசக் கும்பல் மேன்மேலும் தனிமைப்படும். இவை யாவும் சேர்ந்து தமிழ் மக்களுக்கான சனநாயக வெளியைத் தோற்றுவிக்கும், விரிவாக்கும். அடக்குண்டு நசுக்குண்டு கிடக்கும் தமிழ் மக்கள் இந்த வெளியைப் பயன்படுத்திக் களம் காண்பார்கள்.

பாலஸ்தீன மக்களின் “இண்டிஃபாடா'' போல், இப்போதைய காசுமீரத்து மக்களின் பேரெழுச்சி போல், ஈழத்து மக்களும் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள். இந்தப் போராட்டமே வெற்றியைத் தேடித் தந்துவிடுமா? அல்லது மீண்டும் ஆயுதப் போராட்டம் தேவைப்படுமா? என்பதை இப்போதே நம்மால் கணிக்க இயலாது. மேலும் அது ஈழ மக்களை மட்டும் அல்லது அவர்களை வழிநடத்தும் விடுதலை ஆற்றல்களை மட்டும் பொறுத்ததன்று. ஒன்று மட்டும் உறுதி. வடிவம் எதுவானாலும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஒருமுறை பயங்கரவாத முத்திரை குத்தித் தனிமைப்படுத்தி ஒழிப்பது நடவாது.

வருங்கால வாய்ப்பு

நம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வருங்காலப் பாதை இப்படியே அமையக்கூடும். வேறு விதமாக அமைந்தாலும், அதை உள்வாங்கிச் செயல்படத் திறந்த மனத்துடன் அணுகுவோம். ஆனால் இப்போது செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக இருப்போம். சிங்கள அரசைத் தனிமைப்படுத்தும் இயக்கத்தை விரிவாக முன்னெடுப்போம்!

தமிழீழத்தைத் தமிழகம் புரிந்து கொள்வது போலவே, தமிழீழமும் தமிழகத்தைப் புரிந்து கொள்ளட்டும். உலகத் தமிழினம் தன் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து, திட்டமிட்டுச் செயலாற்றினால், உலகில் தமிழருக்கு ஒரு நாடு பிறக்கும். பிறகு மற்றொரு நாடும் பிறக்கும். உலக அரங்கில் தமிழருக்கென்று இரு கொடிகள் உயரும். மனிதகுல முன்னேற்றத்துக்குத் தமிழினத்தின் பங்களிப்பு இருபடி மேலே செல்லும்.

– நிறைந்தது

Pin It