கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மரங்களுக்கு வேரோட மண் இருக்கிறது. பறவைகளுக்குக் குஞ்சு பொறிக்கக் கூடு இரக்கிறது. காட்டு விலங்குகளுக்கு உறங்குவதற்குக் குகை இருக்கிறது. ஆனால்.... தங்களுக்கென்று தரையோ, வானமோ, கடலோ, நிலமோ இல்லாத அனாதைகளாய், அடிமைகளைவிடக் கேவலமாய்... வாழ்க்கை என்ற சூழலில் வாடிக் கொண்டிருப்பவர்கள் அகதிகள். இனங்களுக்கிடையேயான இனக் கலவரங்கள் காலகாலமாய் நடந்து வரும் நிலையில் வரலாறு காணாத மிகப் பெரிய இனக்கலவரம் 1983-இல் இலங்கையில் ஏற்பட்டது. கலவரங்களும் யுத்தங்களும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளில் இருந்து.... தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிய துணியோடு குழந்தை குட்டிகளுடன் தமிழ்நாட்டின் கரைகளைத் தேடி, படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்து தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளின் வாழ்நிலையோ மிகவும் துயரம் நிறைந்ததாக உள்ளது.

               இது தவிர கடவுச்சீட்டு, விசா மூலம் விமானத்தில் வந்து தஞ்சமடைந்தவர்களும் அகதிகளாக உள்ளனர். சுமார் 36 ஆண்டுகள் அகதிகள் என்ற அடையாளத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 106 அகதி முகாம்களிலும் வெளியிலும் சுமார் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் அகதிகளாகி உள்ளனர். இலங்கையில் இருந்து வந்தவர்கள் மட்டுமின்றி இந்திய மண்ணில் பிறந்த அவர்களின் வாரிசுகளும் அகதிகளாகவே உள்ளனர். கடுமையான கண்காணிப்பும் சுதந்திரமாக நடமாடும் உரிமையின்றியும் வாடுகின்றனர். முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், எதிர்கால நம்பிக்கையற்ற ஒரு வாழ்வுதான் அகதிகளின் வாழ்வு. இதற்கு ஒரு முடிவில்லையா? அகதிகள் என்ற இழிநிலை தொடர வேண்டுமா? என்ற ஆதங்கம் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் இருக்கத்தான் செய்கிறது.

eelam refugee camp in perambalurஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதியரசர் ஜி.சுவாமிநாதன் அவர்கள் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை கொடுப்பது தொடர்பான தீர்ப்பை வழங்கி இருப்பது நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி இருக்கிறது. 

அகதி முகாம்களின் அவலநிலை:

               இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் மொத்தம் 106 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பூர்வீக இலங்கைத் தமிழர்கள் சுமார் 80,000 பேரும், இந்திய வம்சாவழித் தமிழர்கள் சுமார் 30,000 பேரும் உள்ளனர். சுமார் 1,05,043 பேர் அகதிகளாக உள்ளனர். இவர்களில் முகாம்களில் 73,241 பேரும், வெளியில் 31,802 பேரும் உள்ளனர். 1983 தொடங்கி 36 வருடங்களாக இவர்கள் அகதிகள் என்ற நிலையிலேயே வைக்கப் பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள்:

               முகாம்களில் அகதிகளுக்கு  வழங்கப்பட்ட குடியிருப்புகளில் ஒரே அறையில்தான் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் வசிக்க வேண்டிய நிலை உள்ளது. குடி தண்ணீர், கழிப்பிடம், மின்சாரம் முதலியன போதியளவு இல்லை. மின்சார வசதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சில தொண்டு நிறுவனங்களைத் தவிர மற்ற தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. குழந்தைகள் காப்பகங்களை சில தொண்டு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அரசின் சமூக நலத் திட்டங்களான தாய்,சேய் நலன், தடுப்பூசி, கர்ப்பிணிகள் பராமரிப்பு, முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை என்பன அகதிகளுக்கும் பொருந்தும். எனினும் இவை முழுமையாக அனைவருக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தனியான மருத்துவ வசதிகள் முகாம்களில் எதுவும் இல்லை. அரசுப் பள்ளிகளில் இலவசமாகக் கல்வி பெறலாம். ஆனால் உயர்கல்விக்குக் கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம்.

உதவித் தொகை:

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உணவுப் பொருட்கள் முதலியன குறிப்பிட்ட அளவில் வழங்கப் படுகின்றன. குடும்பத் தலைவருக்கு ரூபாய் ஆயிரம், பெரியவர்களுக்கு ரூபாய் 750, சிறியவர்களுக்கு ரூபாய் 400 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையை வைத்துக் கொண்டு ஒரு குடும்பம் எவ்வாறு வாழ முடியும்? சில கூலி வேலைகளைச் செய்து அன்றாட வாழ்க்கையைச் சமாளித்து வருகின்றனர்.

மறுக்கப்படும் உரிமைகள்:

               பல உலக நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்து ஈழ மக்கள் அந்த நாட்டு மக்களுக்கு நிகராக உரிமைகளுடனும் மாண்புடனும் போதிய அடிப்படை வசதிகளுடனும் வாழ்கின்றனர். ஆனால்..... இங்கோ நிலைமை தலைகீழாக உள்ளது. அகதிகள் குற்றவாளிகளைப் போலக் கருதப் படுகிறார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு அவர்கள் முகாமில் இருப்பது உறுதி செய்யப் படுகிறது.

               வெளியில் கூலி வேலைகளுக்கு மட்டுமே செல்ல முடியும். எவ்வித சமூக, பன்னாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடையாது. வீடு, நிலம் வாங்க முடியாது. அரசு வேலைக்குச் செல்ல முடியாது. தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்காக வெளியூர் செல்ல முடியாது. உறவினரைப் பார்க்கவோ சுற்றுலா, வழிபாடு முதலியவற்றுக்காக வெளியூர் சென்ற தங்கவேண்டிய அவசியம் இருந்தாலோ உளவுப்பிரிவு காவல் (கியூ பிரிவு) முன் அனுமதியைப் பெற வேண்டும். பல நேரங்களில் வெளியில் சென்று தங்குவதற்கு உளவுத் துறையினர் அனுமதி அளிப்பதில்லை. முகாம்களில் உள்ள பெண்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை. இவர்களை அகதிகள் என்று இழிவாகக் கருதுவதும், உங்களுக்கு எது நடந்தாலும் கேட்க எவருமில்லை என்று எண்ணிப் பலவிதப் பாலியல் தொந்தரவுகளையும் சில சமூக விரோதிகள் செய்து வருகின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பு:

               திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த 64 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிப் பேராணை விண்ணப்பம் (Writ Petition W.P.(MD)No.5253 of 2019 dt.17.06.2019) தாக்கல் செய்திருந்தனர். இதன் மீது நீதியரசர் ஜி. சுவாமிநாதன் அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். இத்தீர்ப்பு 17.06.2019 ஆம் நாள் வழங்கப் பட்டுள்ளது.

               இத் தீர்ப்பில் மாண்புமிகு நீதியரசர் அவர்கள் இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், 11 மனுதாரர்களின் நிலையைப் பார்க்கும்போது இதயத்தில் இரத்தம் கசிகிறது என்றும், மனுதாரர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது, அவர்கள் உயிருக்குப் பயந்து வந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் விசாவுக்காகக் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் இலங்கை அகதிகள் இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பங்களை அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களைப் பெற்று மத்திய அரசுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டுமென்றும், மத்திய அரசு 16 வாரங்களில் இது குறித்து முடிவெடுக்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பங்களை அளித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் அரசு அலுவலர்களின் விண்ணப்பங்களை வாங்க மறுப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தனித் தனியாக விண்ணப்பங்களை வாங்காது மொத்தமாக ஒரே விண்ணப்பமாகக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப் படுவதாகவும் அறிய வருகிறது. எனவே, இலங்கை அகதிகள் தனித் தனியாக ஒவ்வொரு குடும்பமும் விண்ணப்பங்களைக் கொடுக்க அனுமதிக்க வேண்டும். அனைவரின் விண்ணப்பங்களையும் வாங்க வேண்டும். அவற்றின் மீது முடிவெடுப்பது அரசின் பொறுப்பாகும். எனவே, மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பங்கள் கொடுப்பதை எந்த வகையிலும் தடுத்து விடக்கூடாது.

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் - 2019 (The Indian Citizenship Act)

               இந்திய அரசியலமைப்பின் உறுப்புகள் 5 முதல் 11 வரை (பாகம் II) குடியுரிமை குறித்துக் குறிப்பிடுகின்றன. இதன் அடிப்படையில் 1955 ஆம் ஆண்டு ஜூலை 19இல் இந்தியக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டம் 1986, 1992, 2003, 2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடைசியாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இல் திருத்தப்பட்டது. இதன்படி ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய இந்து, சீக்கியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை சமூகத்தினர் 31.12.2014 ஆம் நாளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வந்தவர்களாக இருக்க வேண்டும். இவர்களே இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி உடையவர்களாவர்.

               இச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளத் தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் சேர்க்கப்பட வேண்டும். இதற்காக இச் சட்டம் மீண்டும் திருத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

               ஏனெனில், மேற்குறிப்பிட்ட நாடுகளைவிட மிக அதிக அளவில் பல கொடூரமான கலவரங்களாலும் யுத்தங்களாலும் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்கு அகதிகளாக இலங்கையில் இருந்தே மக்கள் வந்துள்ளனர். 36 வருடங்களாக அடிப்படை உரிமையற்று வாழும் இவர்களையும் இச் சட்டத்தில் இலங்கையையும் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.

ஐ.நா. அகதிகள் ஆணையம் (United Nation’s High Commission of Refugees) UNHCR

               ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை 19.09.2016 ஆம் நாள் அகதிகளின் உரிமைகள் தொடர்பாக ‘குடிபெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான நியூயார்க் பிரகடனம்’ என்ற ஒன்றை நிறைவேற்றியுள்ளது (New York Declaration for Refugees and Migrants)/ இப் பிரகடனத்தின்படி....., “அகதிகளை அந்தந்த நாடுகள் மனிதாபிமானத்துடன் நடத்துவதுடன் அவர்களுக்குச் சம உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் வழங்க வேண்டும்” என்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் 1951இல் நிறைவேற்றப்பட்ட “உலக மரபுசார் சட்டங்களை” ஏற்றுக் கொள்வதென 157 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியா கையெழுத்திடமால் இருப்பது வருந்தத் தக்கதாகும்.

               பல நாடுகள் இந்த மரபு சார் சட்டங்களின் அடிப்படையிலேயே தத்தம் நாடுகளில் அகதிகளுக்குக் குடியுரிமை அளித்து வருவதுடன், அகதிகளுக்கு அனைத்து விதமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வருகின்றன. இந்தியாவும் மேற்படி ஐ.நா. மரபுசார் சட்டங்களைப் பின்பற்றியும், ஐ.நா.வின் நியூயார்க் அகதிகளுக்கான பிரகடனத்தின் அடிப்படையிலும் இங்குள்ள இலங்கை அகதிகளுக்கு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி, அவர்கள் இம்மண்ணில் மாண்புடன் வாழும் வழி வகைகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கடந்த 36 ஆண்டுகளாக அகதி முகாம்களிலும், வெளியிலும் வாடி வரும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளில், இந்தியக் குடியுரிமை பெற விரும்புவோருக்கு மேற்படி பன்னாட்டு சட்டங்களின் அடிப்படையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, உடனே “இந்தியக் குடியுரிமை” வழங்க வேண்டும்.

இந்திய வம்சவழி அகதிகள் (Refugees of Indian Origin):

               இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இரு பிரிவுகளாக நாம் காணலாம். இலங்கையின் பூர்வீகக் குடிமக்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த அகதிகள் ஒரு பிரிவினராவர். மற்றொரு பிரிவினர் இந்தியாவில் இருந்து 1815 முதல் கூலித் தொழிலாளர்களாக ஆங்கிலேயரால் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருந்து கங்காணிகள் மூலம் அழைத்துச் செல்லப் பட்டவர்களின் வாரிசுகள் ஆவர். இவர்களையே ‘இந்திய வம்சாவழி அகதிகள்’ என்கிறோம். இந்த இந்திய வம்சாவழியினர் பற்றிய சுருக்கமான வரலாற்றுச் செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வரலாற்றுச் சுருக்கம் :

               இலங்கையும் இந்தியாவும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்த காலம். 1823இல் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள சின்னப்பிட்டிய என்ற ஊரில் கோப்பி (Coffee) பயிர்ச் செய்கையை ஹென்றி போர்ட் (Henry Bird) மற்றும் அவரது சகோதரர் ஜார்ஜ் போர்ட் (Jeorge Bird) ஆகியோர் ஆரம்பித்தனர். இதுவே இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலுக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தது. கோப்பித் தோட்டங்களில் வேலை செய்யவும், கோப்பியின் அழிவின் பின்னர் உருவான தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்யவும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலிருந்து தொழிலாளர்களை ஆங்கிலேயர்கள் கொண்டு சென்றனர்.

கொடிய வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக, ஆங்கிலேயர்களின் முகவர்கள் மற்றும் கங்காணிகளின் பொய்ப் பிரச்சாரங்களினால் ஏமாந்து, தமிழ்நாட்டு கிராமங்களில் இருந்து ஏழை, எளிய மக்கள் இலங்கைக்கு வாழ்வு தேடிச் சென்றனர். செல்லும் வழியில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடிய துன்பங்களை அனுபவித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் செத்து மடிந்தனர். தோட்டங்களில் கொத்தடிமைகளாக உழைத்து இலங்கையின் பொருளாதார அடித்தளமான பெருந்தோட்டங்களையும், இரயில் பாதை மற்றும் சாலைகளையும் தங்கள் கடின உழைப்பால் உருவாக்கினர்.

               ஆனால், அவர்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகவே இருந்தது. இலங்கை 1948இல் சுதந்திரம் அடைந்த உடனேயே சுமார் 10 இலட்சம் இந்தியத் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை ஒரே நாளில் பறிக்கப்பட்டது. இலங்கையை செல்வச் செழிப்பாக்கிய மக்கள் அனைத்து உரிமைகளையும் இழந்து நாடற்றவர்களாக்கப் பட்டனர். இந்நிலையில் இந்திய இலங்கை அரசுகள் 1964இல் ஸ்ரீமா-சாஸ்திரி உடன்படிக்கையை உருவாக்கின. 1974 ஸ்ரீமா-இந்திரா உடன்படிக்கை உருவானது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் சுமார் ஐந்தே கால் இலட்சம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டு, அவர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டனர்.

மீதமுள்ளவர்கள் எவ்வித உரிமைகளும் இன்றியே தொடர்ந்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தனர். 1977, 1981இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வவுனியா, திருகோணமலை போன்ற பகுதிகளுக்குச் சென்று கூலிகளாக உழைத்தனர். இலங்கையின் தலைநகரான கொழும்பில் கூலித் தொழிலாளர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் இருந்த இந்தியத் தமிழர்கள் இனக் கலவரங்களின்போது கொடூரமாகப் பாதிக்கப்பட்டனர்.

               யுத்தப் பாதிப்பு மற்றும் இனக் கலவரங்களின் காரணமாக இந்தியாவுக்குத் தப்பி, தஞ்சமடைந்த தமிழ் அகதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகள் ஆவர். அவ்வாறு சென்றபோது அவர்கள் இலங்கையின் குடிமக்களாகவே கருதப் பட்டனர். இங்குள்ள அகதி முகாம்களிலும் வெளியிலும் சுமார் 30,000 பேர் இவ்வாறு இந்தியாவிலிருந்து சென்ற தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகள் ஆவர்.

இவர்கள் தங்களின் தாய் மண்ணிலே அகதிகளாக இருக்கும் அவலம் நேர்ந்துள்ளது. இந்திய, இலங்கை அரசுகளால் சிறிமாவோ - சாஸ்திரி மற்றும் சிறிமாவோ - இந்திரா ஆகிய உடன்படிக்கைகளின் மூலம் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை இலங்கையில் இருக்கும்போதே வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 36 ஆண்டுகளாக இந்திய வம்சாவழியினரான இவர்கள் இந்தியக் குடியுரிமை இன்றி அகதிகளாக உள்ளனர். தற்போதாவது, உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கைகள்:

  1. இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2016இல் திருத்தம் செய்து, ஆப்கானிஸ்தான், வங்காளத் தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படுவது போல, இந் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் இணைத்து, இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
  2. அகதி முகாம் மற்றும் வெளியிலும் உள்ள அனைத்து இந்திய வம்சவழி அகதிகளுக்கும் எவ்வித ஆவணமும் கோராமல் உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
  3. இலங்கையின் பூர்வீகத் தமிழ் அகதிகளுக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை கோருபவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
  4. இந்தியக் குடியுரிமை பெறும் அனைவருக்கும் அடிப்படை வாழ்வாதார வசதிகளை அளிக்கும் வகையில் மறுவாழ்வுத் திட்டமொன்றை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப் படுத்த வேண்டும்.
  5. அனைத்து அகதிகளிடமும் குடியுரிமை கோரும் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்துதர வேண்டும்.

- வழக்குரைஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி.