கீற்றில் தேட...

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவைபோல

- ஆலங்குடி வங்கனார். குறுந்தொகை 8

thamilvan 350ஒவ்வொரு கதையாடலும் ஒவ்வொரு கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அது ஒரு வாசகன் ஒரு கதையை வாசிப்பதைப் பாதிக்கும். பார்த் ஐந்து குறியீடுகளைக் (codes) குறிப்பிடுவார். இவை அனைத்துமே ஒரு கதைக் கூற்றில் காணப்பட்டாலும் வாசகன் கதையிலுள்ள பல்வகைப்பொருள்களையும், உட்பொருள்களையும் முதலில் காண அழைக்கப்படுகிறான். எனவே ஒரு கதையை ஒரு நேர்கோட்டு அமைவில் பார்க்காமல், அதாவது கால/இட வரிசைப்படி பார்க்காமல் வாசிக்க வேண்டும். எனினும் கதையை வாசகனே எழுதுகிறான். மேலும், பார்த் ஒரு கதையைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரையில் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றும் சொல்கிறார். ஏனென்றால் கதாசிரியனுடைய பிரதிக்குப் பல நுழைவாயில்கள் இருக்கும், பல வெளி வாயில்களும் இருக்கும்.

தமிழவனுடைய  ‘ஆடிப்பாவைபோல’ நாவலுக்குப் பல வாயில்கள் இல்லாவிட்டாலும், இரட்டைக்கதவுகள் இருக்கின்றன: ஒன்று அகத்துக்கு வழி, இன்னொன்று புறத்துக்கு வழி. வாசகன் எந்த வழியாகவும் நுழையலாம், வெளியில் வந்து மீண்டும் அடுத்த வாயில் வழியாகப் போகவேண்டும். அதே சமயம் ஒரு சாதாரணக் காதல் கதையும், ஒரு சாதாரண அரசியல் கதையும் பக்கத்துப் பக்கத்தில் வைக்கப்பட்ட இரட்டை நாவலாகவும் இதைக் காணலாம். இறுதியில் ஏன் இந்தக் கட்டமைப்பு என்று கண்டுபிடிக்க முனையும்போது உட்பொருள் -பல அல்ல - ஒன்றாவது இருக்கிறதா என்று தேடவும் முடியும்.

நாவலாசிரியர் அறிவுறுத்தியிருப்பதுபோல, கதையை அகத்தை மட்டும் வாசித்து, பிறகு புறத்தை வாசித்து, அதன் பிறகு அகம் புறங்களை வாசிக்காமல் நான் இரண்டையும் ஒன்றாகவே வாசித்தேன் (வாசகனின் உரிமை இது). எனினும் இந்த மதிப்புரைக்காக இரண்டையும் தனித்தனியாகவே பார்ப்போம்.

‘அகம்’ மட்டும் பத்து இயல்களைக்கொண்டது. கால வரிசைப்படிதான் கதை நகர்கிறது. கோயமுத்தூரில் கதை தொடங்கினாலும், நாம் அங்கே, மீண்டும் போகப்போவதில்லை. நெல்லையிலும் (பாளையையும் சேர்த்து), பெயர் சொல்லப்படாத - ஒருவேளை நெல்லைக்கு அருகிலுள்ள - ஊரிலும் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. கோவையில் தொடங்குகின்ற வின்சென்ட ராஜா - காந்திமதி சந்திப்பு நெல்லையில் தொடர்கிறது. அது நட்பாக மலர்கிறது - காதலாகக் கனிகிறதா என்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரிய வில்லை, முதலில். மென்மையான சந்திப்புகள், உரை யாடல்கள் (தமிழவனுக்கு ‘ரொமான்ஸ்’ உரையாடல்கள். சரிப்படவில்லை. அவருடைய இடம் தத்துவார்த்த உளவியல் சிந்தனைகள்தான். வின்சென்ட் அவற்றில் ஈடுபடும்போது தமிழவனைக் காண்கிறோம்). - பாடல்களும், வழக்கமான வில்லனும்தான் இல்லை, தமிழ்த் திரைக்கதைக்கு. முக்கோணக் காதலும்

இல்லை. அவர்கள் காதல் மலராதிருப்பதற்குக் காரணம் காந்திமதியின் தந்தை, அவரை எதிர்த்துப் போய் செல்வராஜைத் திருமணம் செய்துகொண்டு பிறகு தற்கொலை செய்து கொண்ட தமக்கை விசாலாட்சி ஆகியோர் தான்.

இந்தி எதிர்ப்புப் பேராட்டத்தினால் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம். வின்சென்ட் ராஜா காந்திமதிக்குத் துணையாகப் பயணிக்கிறான். உடல் நெருக்கம், இரவில் திண்ணையில் தங்கும் போதும் நெருக்கம் தொடர்கிறது. உள்ளங்களும் நெருங்கியிருக்கும் - நெருங்கி வந்தன. ஆனால் வின்சென்டின் தயக்கம் ஒரு காரணம். ஏன் தயங்கினான் என்பது 19ஆம் இயலில்தான் தெரிகிறது. அவன் அநாதை, எந்தச் சாதி என்பது தெரியாது. இந்நிலையில் காந்திமதியின் தந்தை விநாயக மூர்த்திக்குக் காதல் திருமணத்தின்மேல் இருந்த வெறுப்பு கார்த்தியையும் பாதிக்கும் என்ற அச்சம் - அந்த இளைஞனிடம் இயற்கை யாகவே இருந்த மென்மையான மனநிலையில் துணிவான முடிவு எடுக்க இயலாமை இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும்.

காந்திமதி  வின்சென்ட் ராஜாவைவிடத் துணிச்சல் மிக்கவள் தான். ஆனால் அதுவும் அவனது அக்கா கணவன் செல்வராஜ் விநாயகமூர்த்தி பற்றிச் சொன்னவை அவளைக் கலங்கச் செய்திருக்க வேண்டும். அவளது தாயார் அவரைப் பற்றித் தேவையில்லாமல் கிளப்பி விட்ட புரளி, அவளது தங்கை அபிராமியின் எச்சரிக்கை இவையெல்லாம் கூட அவளையும் பாதித்திருக்க வேண்டும். அபிராமியின் எச்சரிக்கை காந்திமதியும் செல்வராஜும் நெருக்கமாகக் கூடாது என்பதற்காகவா? வாசகனும் எல்லாக் கதைகளிலும் போல அவள் அவனை மணமுடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அவளது தந்தை, செல்வராஜு சொன்னதுபோல அவர் களைத் தன்னைவிட்டுப் போக விடமாட்டார் (எலக்ட்ரா காம்ப்ளக்சின் மறுதலை?). எனினும் காந்திமதி தனது காதலைத் துணிச்சலாக சொல்லப்போக, தந்தை தற்கொலைக்கு முயல, காந்திமதி கல்லூரிக்குத் திரும்ப வில்லை.

வின்சென்ட் ராஜா சாதிக்கலவரத்தால் தன்னிடம் அடைக்கலம் புகுந்த சந்தோசம் எரித்துக்கொல்லப்பட்ட பிறகு கதையிலிருந்து காணாமல் போய்விடுகிறான். முதன்மைக் கதைக்கு ஒரு கிளைக்கதை ஹெலன் - கிருபாநிதி காதல். இங்கே சாதியில்லை, மதம் குறுக்கே நிற்கிறது.

வின்சென்ட் இதற்கு உதவுகிறான். இவர்கள் திருமணம் செய்து கொண்டதும், குழந்தைகள் பெற்றுக் கொண்டதும், சண்டைகள் போட்டுக் கொண்டதும் கடைசி இயலில் தெரிகின்றன.

இந்தக் காதல் கதைக்கு இணையாகப் புற இயல்கள் வருகின்றன. இந்தக் கதை ஒரு கிறிஸ்தவக் கல்லூரியின் விடுதியில் ஏற்றப்பட்டிருந்த கறுப்புக் கொடியுடன் தொடங்குகிறது. அது எந்தக் கல்லூரி என்பதும் , இக்னேஷியஸ் ஹாஸ்டல் எது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஏற்றப்பட்ட கொடி இது. இந்த இரண்டாவது  கதையின் மையப் பொருள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிதான். காதல் கதையின் நாயகர்களுக்கு இந்துக் கல்லூரிக்கு வெளியிலிருந்த விடுதிகளும், பெண்கள் கல்லூரி விடுதியியும் பூங்காக்களும் சந்திக்கும் இடங்களாக இருந்தால், அரசியல் கதைக்கு இந்தக் கல்லூரி விடுதியும், மரியா கான்டீனும் களன் களாக இருந்தன. மாணவர் தலைவர்களான பேச்சாளன் அமரனும், ஜி.கே சாமியும், இங்கே இந்தி எதிர்ப்பின் அடையாளங்கள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து கொண் டிருந்த காலகட்டம் அது. கல்லூரி மாணவர்களும், மாணவி களும் பிரச்சனையைக் கையிலெடுத்து ஊர்வலங்கள் நடத்திப் போராட்டத்தைத் தமிழகமெங்கும் எடுத்துச் சென்றார்கள். மாணவர்கள் மத்தியில் புதிய தலைவர்கள் தலையெடுத்தார்கள். அமரன் போன்றவர்களின் பேச்சாற்றல் உணர்ச்சிகளைத் தூண்டப் பயன்பாட்டாலும், வேறு சில சக்திகளும் போராட்டங்களில் உட்புகுந்தன.  எதிர்க் கட்சிக்காரர்களும் ஆளும் கட்சியினரும் தங்களுக்குச் சாதகங்கள் ஏற்படச் சதிகளில் ஈடுபட்டார்கள். பொன் வண்ணன் என்ற பழனியும், அவனது பூர்வீகமும், மனைவி மலர்க்கொடியும், ஆளும் கட்சிக்காரரான வான்மீக நாதனும் அவரது மனைவியான எம்.எல் ஏவும் அரசியல் பிரமுகர்கள். இவர்களின் சதித் திட்டங்களுக்கு இடையில் பொதுவுடைமைக் கொள்கைக்காரர்களின் அரசியல் ஈடுபாடுகளும் சொல்லப்படுகின்றன. வன் முறைத் தீவிரவாதிகளான வங்காளச் சட்டர்ஜி, அவரோடு சேர்ந்திருந்த பட்டரின் மகன் ஆகியோரும் நடமாடு கிறார்கள் இளைஞர்களைத் தங்கள் வலைக்குள் இழுக்கப்பார்க்கிறார்கள்.

இந்தி எதிர்ப்புப் போரின்போது ஏற்பட்ட வன்முறை துப்பாக்கிச் சூடுகள் முதலிய நிகழ்வுகள் இக்கதையில் இடம் பெற்றாலும். பொன்வண்ணனின் அரசியல் ஆதாயங்களும் அவரைச் சார்ந்திருந்தவர்கள் பெற்ற பயன்களும் முக்கிய இடம் பெறுகின்றன.  அதோடு திரைப்படம் தமிழரின் வாழ்வில் எப்படி ஆதிக்கம் செலுத்தியது, அதனை அன்றைய அரசியல் வாதிகள் எப்படி பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதும் கதையாக விரிகிறது. அரங்கநாதனின் உதவியால் வளரும் நாட்டியக்காரி வாணி பின்னர் பெரிய திரைப்ப நடிகையாகிறாள்.

இறுதியில் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகிறது. ஆளும் கட்சியிலிருந்த வான்மீகநாதன் இப்போது கட்சிமாறி ஆளும் கட்சி அமைச்சராகி விட்டார். ஊழல் இன்னும் தொடர்கிறது. சபாஷ் ராஜு இப்போது மத்திய அரசு அலுவலர். நேர்மையைக் காப்பாற்றுபவ்ர். கடைசிப் புற இயல் விரைவாகவே இந்தி எதிர்ப்புக்குப் பிந்தைய தமிழக அரசியலை விவரிக்கிறது.

இங்ஙனம் இரண்டு கதைப் பின்னல்களும் (பின்னல் அதிகமில்லை) இணைகோடுகளில் செல்கின்றன. இணைகோடுகள் சந்திக்க முடியாது ஆனால் ஓரிடத்தில் மட்டும் அவை ஒன்றோடொன்று குறுக்கிடுகின்றன. காந்திமதியும் வின்சென்ட் ராஜாவும் ஒன்றாகப் பயணிப்பது, இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழப்பத் தினால். அப்படியானால் நாவலுக்கு இந்தக் கட்டமைப்பு ஏன்? நான் முதலில் எழுப்பிய வினாவிற்கு இப்போது விடை காணவேண்டும்.

கதைத்தலைவர்களான காந்திமதியும், வின்சென்ட் ராஜாவும், அவர்களது நெருங்கிய நண்பர்களான ஹெலனும், கிருபாநிதியும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மேல் அக்கறையோ அனுதாபமோ கொள்ளவில்லை. காந்திமதி நினைப்பதாக ஆசிரியர் சொல்வதைக் கேளுங்கள்: “காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வயது தனக்கு இல்லை என்று நினைத்தாள். அல்லது தன் சூழலில் அரசியல், போராட்டம் என்ற நினைவுகளுக்கு இடமில்லை என்று நினைத்தாள். பெரும்பான்மை ஆட்களும் தன்னைப் போலத்தானே என்றும் எண்ணினாள்.” (பக் 327) ஆனால் இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் பல மாணவர்களும் கலந்து கொண் டார்கள் (பக் 45). 17 ஆம் இயலில் வருகிற இந்தக் கூற்று மிகவும் முக்கியம் வாய்ந்தது. உணர்ச்சிபூர்வமாக போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு அளித்தவர்கள். நேரடியாகப் பங்கு கொள்ளமுடியாமல், (வார்டனைப் போல) இருந்தார்கள். அதே சமயம் யாருக்கென்ன என்று தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போனவர்களே - போகிறவர்களே - அதிகம். வின்சென்ட் ராஜாவும் இதையேதான் சொல்கிறான். “எனக்கு ஆச்சரியமாக இருக்கு. நான் இந்தி எதிர்ப்புச் சூழ்நிலையில் நடந்து கிட்ட முறைகளும், என் சுயமான உணர்வுகளை மட்டும் சார்ந்து வாழ்ந்து வந்திருக்கிறேன்.Ó (பக் 388)

பரத்தை வழிப் பிரிந்த நாயகனுக்கு எந்த வகையில் நமது கதைத்தலைவன் (தலைவியும்கூட) ஒப்பாவான் என்பது ஆய்வுக்குரியது. எனினும் பொம்மலாட்டத்தில் வரும் ஆடிப்பிம்பங்கள்போல நாம் அனைவருமே நமது சுயமான உணர்வுகளுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருக்கிறோம்.

அரசியலும் தனி வாழ்க்கையும் பின்னப்படுகின்ற பல நாவல்கள் இருக்கின்றன. சிலவற்றில் அரசியல் பின்புலமாக மட்டும் இருக்கும். சிலவற்றில் முக்கிய கதைமாந்தரின் வாழ்க்கையே அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கும், Ôதோல்’ நாவலில்போல. அல்லது உண்மையான அரசியல்தலைவர்கள் குறியீடுகளாய் உருவகங்களாய் வந்து போவார்கள், மிட்நைட்ஸ் சில்ட்ரனில் போல. நாடின் கார்டிமரின் ‘மை சன்ஸ் ஸ்டோரி’யில் தந்தையும், தாயும், தமக்கையும் ஒவ்வொருவராய் தென்னாப்பிரிக்க விடுதலைப்போரில் ஈடுபட மகன் மட்டும் தனித்துவிடப்படுகிறான் - அவர்களது கதையை எழுத. அதேபோல Ôபர்கர்ஸ் டாட்டர்’ நாவலில் போராட்ட அரசியலில் ஒட்டாமல் விலகி விடுகிறாள் ரோசா. தனிவாழ்க்கையா அரசியலா என்ற வினாவிற்கு விடைகாண முயற்சி செய்வதைக் கருப்பொருளாகக் கொண்டவை. அவை.

இதைத்தான் Ôஆடிப்பாவைபோல’விலும் பார்க் கிறோம். அகத்திணையில் வருவது ஒரு மிகச் சாதாரணக் கதை. அதுபோல மொழிப்போர் வரலாற்றைப் பேராசிரியர் இராமசாமி ஆதாரங்களுடன் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஆனால் அவை இரண்டையும் இங்கே இணையாகக் கொடுத்திருப்பதற்குக் காரணம் அரசியல், சமூகப்பிரச்சனைகளில் மத்தியதர வர்க்கத்தினர் பலரும், மாணவர் மாணவியரும் ஈடுபாடுகொள் வதில்லை என்று காட்டத்தான்.

கடைசி இயலைப்பாருங்கள்! எவ்வளவு அபத்தமான முடிவு! இருபது ஆண்டுகளுக்குப் பிறகு காதலர் ஒன்று சேர்கிறார்களாம் - அதுவும் ஆம்ஸ்டர்டேமில்! மூத்த நாவலாசிரியருக்குத் தெரியாதா, இது அபத்தம் என்று? இன்றைய மாணவர்களின் கனவு - படித்தோர் பலரின் கனவு - விமானத்தில் பறப்பது, அமெரிக்காவில் டாலர்களை ஈட்டி அங்கேயே இருந்து விடுவது - இவை தானே! இந்த அபத்தமான முடிவின்மூலம் இதைத்தான் தமிழவன் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறார். அதற்காகவே இந்த யுத்தி. ஏனென்றால் அவருடைய ’ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில்’ பயன்பட்ட மாய மெய் நிலைவாத யுத்தி இல்லை இங்கே கையாளப்பட்டது. எனவே நம்பமுடியாத முடிவை அந்த அடிப்படையில் பார்க்கமுடியாது என்பது நாவலாசிரியருக்குத் தெரியாமல் இல்லை. அரசியல் வாழ்க்கையும் தனி மனித வாழ்க்கையும் எப்படி ஒட்டாமல் இருக்கின்றனவோ அதுபோல இரட்டைக் கதைகளும் ஒட்டாமல் போகின்றன. எனவே நாவலின் உட்பொருளும் கட்டமைப்பும் இயைந்து போகின்றன. இதனைக் கொண்டுவருவதுதான் நாவலின் வெற்றி.

இன்னொன்று: கடைசி இயலில் பாதி கதையாடல் நிகழ்காலத்திலும், பாதி இறந்த காலத்திலும் இருக் கின்றன. இந்த யுத்தியை பிர்சிக் தனது Ôஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்பும்’ என்ற நாவலில் இரட்டை ஆளுமையைக் குறிக்கப் பயன்படுத்துவார். இங்கு தமிழவன் இறந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றில் ஒன்று கரைந்துபோவதைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.’

Ôஆடிப்பாவைபோல’ நாவல் ஒரு சோதனைக் கதை ((experimental fiction). மாய மெய்நிலைவாத யுத்தியை முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்திய தமிழவன் இப்போது இன்னொரு யுத்தியையும் தமிழுக்குக் காட்டுகிறார். அகராதி வரிசையில் கதையைச் சொல்வது, ஆண்/பெண் என்ற இரு முடிவுகளைக் கதைக்குத் தருவது, குறுக்கும் நெடுக்குமாகக் கதையைப் படிக்கச் செய்வது முதலான புதுமை யுத்திகளைக் கையாளும் பாவிச் போல தமிழுக்கு இன்னும் பல புதிய யுத்திகளைத் தமிழவன் தருவார் என்று நம்பலாம். தரமான இந்நூலை எதிர்வெளியீடு சிறப்பாக வடிவமைத்திருக்கிறது.

ஆடிப்பாவை போல

ஆசிரியர்: தமிழவன்

வெளியீடு : எதிர் வெளியீடு

பொள்ளாச்சி

விலை: ` 350/-