கவிதை என்ற இலக்கிய வடிவம் அழகியலும், பொருட்செறிவும் இணைந்த கலவை. ஆரம்பத்தில் பல படைப்பாளர்கள் கவிதை எழுதுவதன் மூலமாகத் தன்னைப் படைப்பாளியாகப் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான பதிப்பகங்கள் கவிதை நூலை அச்சிட முன்வராத சூழலைத் தமிழ்ச் சமூகம் பல காலமாகச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. தங்கள் கவிதைகளை நூலாக வெளியிட விரும்பியவர்கள் தாமே பதிப்பகத்தைத் தொடங்கிய வரலாறுகள் உண்டு. அப்படித் தொடங்கப்பட்ட பதிப்பகங்கள் வழியாக எத்தனையோ இளம் கவிஞர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகி இருக்கின்றனர். அப்படி ஊக்குவிக்கும் நிலையில் அகநி வெளியீடாக, ஒரு தொகுப்பு நூலாக வந்திருக்கும் ‘100 கவிஞர்கள் 100 கவிதைகள்’ என்ற இந்த நூல் கவிஞர்களைக் கொண்டாடக் கற்றுக் கொடுக்கிறது.

thangam moorthy book 500இந்த உலகம் நிலைத்து நிற்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நிலத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்ட பிறகும் மழை பொழிவதற்கு என்ன காரணம்? தன்னலம் சூழ்ந்த பூமியில் மற்றவர்களுக்காகத் தன்னை, தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொள்ளும் மனிதர்கள்தான் உலகம் நிலைப்பதற்கும், மழை பொழிவதற்கும் பொறுப்பாகிறார்கள். தன்னிலிருந்து பிறக்கும் முத்துக்களைத் தனக்கானதாக மாற்றிக் கொள்ள ஒருபோதும் நினைத்ததில்லை கடல். பூவிலிருந்து புறப்பட்டு வரும் மணத்தை எந்த மலரும் வேலி போட்டு அடைத்து வைத்துக் கொண்டதில்லை. உயரமான மரக்கிளைகளைத் தன் தும்பிக்கை மூலம் எளிதாக வளைத்து உண்ணும் யானை தானே முழுவதையும் உண்ணாமல் பின்னால் வரும் மான்களுக்கும் விட்டுச் செல்கிறது.

தன்னை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் பிற உயிர்களுக்காக வாழும் வாழ்க்கை பொருள் பொதிந்ததாக மாறிவிடுகிறது. அந்த வகையில் தன்னுடன் சேர்த்து நூறு கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு நூலாக்கி இருக்கிறார் ரசனையாளரும் கவிஞருமான தங்கம் மூர்த்தி. கல்வியாளர், பட்டிமன்றப் பேச்சாளர் போன்ற அடையாளங்களைக் கொண்ட இவர், தான் ரசித்த கவிதைகளை நம்மையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்கள் இன்று இணையத்தை எட்டிப் பார்த்திருக்கிறது. அதற்குக் காரணம் யாரோ ஒருவரின் ரசனையாக இருக்க வேண்டும். தான் ரசித்த, நேசித்த எழுத்துக்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தந்து அடுத்த தலைமுறையினரின் ரசனையை மேம்படுத்த வேண்டும் என்று செயல்பட்டிருக்கின்றனர். அதன் விளைவாக நூற்றியைம்பது அல்லது இருநூறு ஆண்டுகளுக்குள் அழிந்து போகும் தமிழ் ஓலைச் சுவடிகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திவிட மீண்டும் மீண்டும் படி எடுத்திருக்கின்றனர். இன்று நம் கைகளுக்குக் கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த முறையில்தான் கிடைத்திருக்கின்றன.

ஒவ்வொரு விருட்சத்தின் விதையைப் பார்த்து வியக்க வைப்பதைப் போல வெவ்வேறு பொருள்களில் அமைந்த கவிதைகளை ரசித்திருக்கிறார் கவிஞர். குழந்தைகள் பற்றிய கவிதைகள், குழந்தைகள் உலகத்தைப் புரிய வைக்கும் கவிதைகள், பெண்களின் வலிகளைச் சொல்லும் கவிதைகள், அன்பை விதைக்கும் கவிதைகள், போராட்ட மனத்தின் கவிதைகள், இயற்கை சார்ந்த கவிதைகள், வாழ்வியல் கவிதைகள், சமத்துவத்தைப் பேசும் கவிதைகள், அழகியல் கவிதைகள் என்று நூறு கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது.

விடை தெரியாத கேள்விகளை ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லி அமைதி படுத்துகின்றனர். எல்லாவற்றிற்கும் காரண காரியம் ஆராய முற்படும் அறிவு கேள்விகளை எழுப்பித் தன் இருப்பை அடையாளப்படுத்திக் கொள்கிறது. கடவுளைப் பற்றிய கொள்கைகளின் மீது வினா எழுப்பாமல் பின்பற்ற வேண்டும் என்ற நடைமுறை ஒருபுறம். அறிவியல்பூர்வமாக முடிவு காண விழையும் யதார்த்தம் மற்றொரு புறம். இதற்கிடையில் சிக்கித் திணரும் கடவுளர்களின் நிலையைக் காட்டும் கவிதை இதோ – பக்தன் முன் தோன்றும் கடவுள் அவன் கேட்கும் வரம் தரத் தயாராகிறார். என்ன வரம் வேண்டும் என்ற கேள்வி கேட்டுப் பக்தனின் மனக்கருத்தைக் கடவுள் அறிய நினைக்கும் வேளையில்

“அதுகூடத் தெரியாத

நீர் என்ன கடவுள்’’

என்று முடியும் நீலமணியின் கவிதை தொகுப்பாசிரியரை ஈர்த்தது போலவே நம்மையும் ஈர்க்கிறது.

வாழ்க்கை ஒரு வித்தியாசமான அஞ்சல்காரன். சரியான கடிதத்தைத் தவறான முகவரியில் சேர்த்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை ரசித்துக் கொண்டிருக்கும். பொருள் தேவை இல்லாதவனுக்குப் பொருளை வாரி வழங்குவதும், எளிய குடிசை வீட்டின் மீது புயல் காற்று சுழன்று சுழன்று அடிப்பதும், துறவியாக நினைப்பவரிடம் காதலைச் சொல்வதும், பல்லாண்டு வாழத் துடிப்போரை அற்ப ஆயுளில் சாகடிப்பதும் என்று பல வேளைகளில் வன்மத்தை நிகழ்த்துகிறது வாழ்க்கை. அப்படித்தான் புழுக்கமான அறையில் வசிக்கும் ஒருவர் காற்று வீசுவதை எதிர்பார்த்துச் சாளரத்தைத் திறந்து வைத்திருக்கிறார். அவர் நினைத்தபடி காற்று வீசியது என்னவோ உண்மைதான். கூடவே சாளரத்தையும் மூடிவிட்டுச் சென்றுவிட்டது காற்று என்பதில் எத்தனையோ நூற்றாண்டுக் கால வாழ்வியல் கண்முன் விரிகிறது.

சொந்த கூடு கட்டிக் கொள்ளத் தெரியாத பறவைகள் எதை நம்பி இந்தப் பூமிக்கு வருகின்றன? போர்களால் ஆதரவற்றுப் போகும் குழந்தைகள் யாரை நம்பி வாழ்கின்றன? மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் நம்பிக்கை இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்? எப்படியும் யாரிடமாவது அன்பும், ஆறுதலும் கிடைத்துவிடும் என்ற உண்மையில்தானே இத்தனையும் நடக்கிறது! ஆனால் சமீப காலமாக மனிதநேயத்துக்குச் சவால்விடும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சாலைகளில் நடக்கும் விபத்துகளைக் கண்டும் காணாமலும் போகும் மனிதர்களைப் பார்க்கும் போது உலகம் முடிந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அப்படியான ஒரு கவிதையைப் பதிவு செய்கிறது நூல்.

மதிவண்டியில் ஏற்றிவரும் தக்காளிக் கூடை சரிந்து விழுவதாக ஒரு கவிதை தொடங்குகிறது. சரிந்து விழும் தக்காளிக் கூடையில் திசைக்கு ஒன்றாகச் சிதறிவிடுகின்றன தக்காளிப் பழங்கள். இதுகூட பாதிப்பு இல்லை. இப்படிச் சாலையில் பரிதவிக்கும் அந்தத் தொழிலாளிக்கு உதவுவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. எல்லோரும் தனக்கான வேலையை நினைத்தபடி கடந்து செல்கின்றனர் என்று கவிஞர் வேதனையோடு பேசுகிறார்.

‘‘பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை’’

என்ற கல்யாண்ஜியின் கவிதை ஆழமானது.

மரம் என்ற இயற்கையின் பிள்ளை தன்னிடம் உள்ள சகலவிதமான பொருள்களையும் தந்து மனித உயிர்களை வாழ்விக்கிறது. எல்லாவற்றையும் பெற்றுக் கொள்ளும் மனிதன் மரத்தின் பயன்பாட்டை மறந்து திரிகிறானே என்ற கோபம் வெளிப்படும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை இயற்கையை நோக்கித் திரும்ப அழைக்கிறது.

சூரியன் அஸ்தமிக்காத பேரரசுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள் என்று ஆங்கிலேயப் பேரரசு மார்தட்டிக் கொண்டது. ஆனால் அடிமை வாழ்க்கை வாழ்பவருக்கு விடியலே கிடையாது. தங்கள் நிர்வாணத்தை விற்று ஆடை வாங்க முற்படும் விலைமகளிர் வாழ்க்கை இரவிலேயே கழிந்து விடுகிறது என்று கவிஞர் நா. காமராசன் ஆதங்கப்பட்டத்தைப் பதிவு செய்யும் தொகுப்பாசிரியர் இந்தச் சமூகம் எப்படியாக மாறவேண்டும் என்ற தெளிவைச் சொல்லாமல் மௌனமாக விளக்குகிறார்.

ஒரு பக்கம் ஒரே தேசம் என்று சொல்லிப் பன்முகத் தன்மையைக் கொன்று விடுகிறார்கள்; இன்னொரு பக்கம் பிறப்பின் வழி, பொருளாதாரத்தின் நிலையில் உயர்வு தாழ்வு சொல்லி, சமத்துவத்தைக் கொன்று போடுகிறார்கள். எப்படி ஒருகையின் ஐந்து விரல்களும் அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப வேறு வேறு மாதிரி படைக்கப்பட்டு விரல்கள் என்ற தன்மையில் பொதுவாகப் பார்க்கப்படுகிறதோ அதுபோல ஏற்றத் தாழ்வைக் களைய வேண்டி இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் நல்லது என்ற விருப்பத்தைச் சொல்லும் பழநிபாரதியின் வரிகளைத் தொகுப்பாசிரியர் தேர்வு செய்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

கங்கையாற்றுக்கு ஆண் – பெண் என்ற வேறுபாடு கிடையாது; மீன்களின் நாற்றத்தையும், பூக்களின் நறுமணத்தையும் ஒன்றுபோலவே பாவிக்கிறது; மனிதர்கள் நீராடினாலும் சரி பிணங்களை மிதிக்கவிட்டாலும் சரி ஆறு ஒரே மாதிரி பயணப்படுகிறது என்ற இடத்தில் சமத்துவப் பூக்களைப் பூக்கச் செய்யும் பெரிய தத்துவத்தைப் போதிக்கிறது கவிதை.

ஒரு குழந்தை எதையாவது கேட்டு அழும்போது அடம்பிடிக்காதே என்று சொல்லும் பெற்றோர்கள் சொன்ன பேச்சைக் கேட்காமல் இருப்பவர்களை இத்தனை பிடிவாதம் கூடாது என்று பேசும் சமூகம் தன்னை இழிவாகப் பேசியவர் முன் வாழ்ந்து காட்டும் நேரத்தில் மட்டும் அதை வைராக்கியம் என்று கொண்டாடுகிறது. சமீபத்தில் திருத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக அறவழியில் போராட்டும் நடத்தினர். அதற்கான வெற்றியாக அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. குடிமக்களின் நியாயமான கோரிக்கைக்குக் கிடைத்த பரிசு என்று நாடே கொண்டாடுகிறது. அதுபோல சரியான செயல்கள் சொற்களின் பொருளைத் தீர்மானிக்கின்றன.

இங்கு, கவிஞர் சக்தி ஜோதி தீபம் எண்ணெயால் எரியவில்லை என்ற புதிய உண்மையைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார். அது தன்னை விழுங்கக் காத்திருக்கும் இருட்டை வென்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஒளிர்கிறது என்கிறார். அருளாளர்கள் ஊற்றிய தண்ணீரில் எரிந்த விளக்குகளும் வைராக்கியத்துடன் ஒளிர்ந்திருக்கும் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.

அன்பின் துளிக்குள் ஒட்டுமொத்த உலகத்தையும் அடிக்கிவிடலாம் என்பதற்கு ‘சமாளிக்கப்பட்ட இரவு’ என்ற கவிதை மிகப்பெரிய உதாரணம். பொருளாதாரத்தைத் துரத்திக் கொண்டிருக்கும் தந்தை ஒருவர் தன் வருமானத்திற்காக வைத்திருக்கும் சிறிய கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அப்பா தனக்கான தின்பண்டங்களையோ அல்லது வேறு பொருள்களையோ கொண்டு வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் மகளுக்காக இரவைப் பொட்டலத்தில் கட்டி எடுத்துச் செல்வதாக ஒரு கவிதை.

இரவு என்பது நட்சத்திரங்களும், மேகங்களும் இணைந்த இனிய பொழுது. இந்த இரவு வெளிச்சமும் தருகிறது. மடித்து வந்த நட்சத்திரங்களையும், மேகங்களையும் மகளிடம் கொடுக்கும் அப்பா வெளிச்சம் காட்டும் விளக்கை அணைத்துவிட்டு இரவைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொள்கிறார். மகளோ அவர்மீது அன்பு நட்சத்திரங்களையும், மேகங்களையும் பரப்பித் தன் அப்பாவை வானமாக்கி மகிழ்கிறாள். அப்படியே தந்தையை அணைத்தபடி உறங்கவும் செய்கிறாள்.

மகள்கள் எப்போதுமே அவர்கள் பிறந்த வீட்டின் தேவதைகளாகவே கருதப்படுகின்றனர். தேவதைகள் நிலவுக்குள் வசிப்பர் என்றெல்லாம் நம்பும் நம் சிந்தனைக்கு அந்தத் தேவதையே முழுநிலவாக மாறியதாகப் பேசுகிறது கவிதை. ஒரு நிலவு இருக்கும் இடம் வானமாகத்தானே இருக்கும். எனவே அந்த முழுநிலவு தன் அப்பாவைத் தனக்கான வானமாகவே மாற்றும் மாயத்தை நிகழ்த்திவிடுகிறாள்.

குழந்தைகள் தெய்வங்களுக்கு நிகரானவர்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ற கவிதை இது. பொதுவாக, குழந்தைகள் எந்தப் பொருளையாவது வாயில் வைத்துக் கடிக்கும் பழக்கம் உடையவை. அப்படி இருக்கும் குழந்தைகளைப் பெரியவர்கள் கடிந்து கொள்வது வழக்கம். ஆனால் அதுபோல் கடிந்து கொள்ளாதீர்கள் என்கிறார் கவிஞர் வலங்கைமான் நூர்தீன்.

‘‘பென்சில்களை

வாயில் வைத்துக் கடிக்கும்

சில குழந்தைகளை

கடிந்து கொள்ளாதீர்கள்

அவர்கள் எச்சில்பட்டு

அவைகளும் துளிர்க்கலாம்’’

என்று மரப்பென்சில்களை வாயில் வைத்துக் கடிக்கும்போது அந்த ஈரம் பட்டு ஒருவேளை இலைகள் துளிர்க்கக்கூடும் என்ற இடத்தில் குழந்தைகளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்று கற்றுத் தருகிறார்.

ஒரு புல்லின் நுனியில் தோன்றும் மலையின் அழகை ரசிக்கும் கவிஞன் உலவிய மண்ணில் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் இருக்கும் பிரம்மாண்டத்தைச் சரியாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். மொழிகள் புரியாத பருவமான குழந்தைப் பருவத்திலேயே காலமெல்லாம் இருந்து விடலாம் என்ற கவிஞரின் விருப்பம் இந்த உலகத்தின் சூழ்ச்சிகளுக்கு எதிரான மனநிலையை விளக்குகிறது. எல்லோருமே வஞ்சனை புரியாத குழந்தைகளாகி விடலாம் என்ற நிலைக்கு அழைத்துச் செல்கிறது. கவலைகள் அற்ற குழந்தைப் பருவம் என்று மகிழ்ச்சியாக இருந்தாலும் பாலினத்திற்கென்று தனியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது சமூகம். புழுக்கமான வீட்டில் காற்றோட்டமாக உறங்க நினைக்கிறது குழந்தை.

குழந்தையின் தாயோ மேலாடையும் கீழாடையும் இல்லாமல் வீட்டில்கூட இருக்கக்கூடாது என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள். காரணம் தன் பிள்ளை குழந்தை என்றாலும் பெண் குழந்தையாக இருப்பதால் செங்கலால் கட்டப்பட்ட சுவருக்கும் கண்கள் உருவாகிவிடுகின்றன என்ற கவிஞர் அ. வெண்ணிலாவின் கவிதை பெண்ணை வெறும் உடலாகப் பார்க்கும் இந்தச் சமுதாயத்தின் கயமைத்தனத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.

கற்பு, தாலி என்று பெண்கள் ஒடுக்கப்படும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ‘நானும் நீயும்’ என்ற கவிதையை முன்மொழிகிறார் தங்கம் மூர்த்தி. திருமணம் முடிந்த பிறகு கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்வது இயல்பு. அந்துறைகின்ற பொழுதுகளிலும் கணவன் நாற்காலியில் அமர்ந்திருப்பான், மனைவி அவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்க வேண்டும். தனக்கு மணமாகிவிட்ட அடையாளங்களுடன் ஒரு பெண் இருக்க வேண்டும். ஆனால் ஆணுக்கு இந்த நிர்பந்தம் இல்லை. இதில் ஏதேனும் குறை நேர்ந்தால் அவளின் ஒழுக்கம் மீதான கேள்வி எழுப்பப்படும்.

‘‘உன் இனத்து

கற்புக்கரசிகளைச் சொல்லி

உன்னை மிரட்டுவேன் நான்

என் இனத்து அயோக்கியர்களின்

பட்டியல் தெரிந்தும்

அமைதியாய் இருப்பாய் நீ’’

என்ற வரிகள் மூலம் கவிஞர் ஜெயபாஸ்கரன் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் சொல்லி அங்கலாய்க்கிறார்.

ஒருவேளை கைபிடித்த கணவன் மனைவி இறப்பதக்கு முன்பு இறந்துவிடுவானேயானால் கட்டியவனை நினைத்துக் கொண்டே சாகும்வரை இருந்துவிடவேண்டும். இதே நிலை கணவனுக்கு ஏற்பட்டால் மனைவியின் தங்கையை மறுமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கைக்குள் நுழையலாம் என்ற பாரபட்சம் எத்தனை கொடுமையானது!

நிறைவாகத் தன் கவிதையை அச்சேற்றி இருக்கிறார் கவிஞர் தங்கம் மூர்த்தி. மற்றவர்களின் மரணச் செய்தியை அறிவிக்கும் எளிய மனிதன் ஒருவன் படுத்த படுக்கையில் இருந்து மரணத்தைத் தழுவுகிறான். பெருங்குரலெடுத்துக் கம்பீரத்துடன் இறந்தவர்களின் எல்லா விவரங்களையும் பொறுமையாகச் சொல்லி எல்லோருக்கும் இறந்தவர் யார் என்பதைத் தெளிவாகப் புரிய வைப்பான். ஆனால் அவன் இறப்பைப் பற்றிய செய்தி வெளியில் சொல்லப்படவே இல்லை. தொண்டையில் புண் உண்டாகிப் பலவீனமாகிப் போய் இறக்கும் அந்த விளிம்பு நிலை மனிதன் பற்றிய இறப்புச் செய்தியைச் சொல்ல ஒருவரும் இல்லை என்று அவன் தாய் வருத்தம் இடத்தில் மனிதத்தை மலரச் செய்கிறார்.

இன்றும் இறப்பு குறித்த செய்தியை ஆட்டோவில் ஒலிவாங்கியின் துணையுடன் புதுக்குரல் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்தக் குரலில் சோகம் இருப்பதில்லை. இறப்புச் செய்தியை அறிவிப்பதால் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலை ஒருபுறம்; எல்லோரையும் உண்டு செரித்தபடி சுற்றிக் கொண்டிருக்கின்ற உலகம் மற்றொரு புறம். யாருக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லாமல் அன்றைக்கான அவர்கள் வேலை முடிந்தால் போதும் என்ற நிலையில் இயங்கும் சமூகத்தின் மீது தன் கவிதை வழி கல்லெறிந்திருக்கிறார் எழுத்தாளர்.

- முனைவர் மஞ்சுளா

Pin It