mahakavi poetதமிழின் நவீன கவிதை வரலாற்றை பொருத்தவரையில் ஈழத்துக்கு தனியான இடமொன்றுள்ளது. பாரதியால் பிரக்ஞை பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது. சொல் புதிதான நவகவிதை பாரதியின் வாரிசுகளால் தொடர்ந்து பின்பற்றப்பட்டது. தமிழக வாரிசுகளுடன் ஒப்பிடும் பொழுது ஈழத்து நவீனக்கவிதை ஒரு தனித்துவ அடையாளத்தை கொண்டதாக அமைந்துள்ளது.

ஈழத்துக்கே உரிய வாழ்க்கை அனுபவங்களும், மொழியும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலரின் கவித்துவ ஆழுமைகளுமே அதனை சாத்தியப்படுத்தின. அந்த சாத்தியபாட்டால் ஈழத்து நவீன தமிழ்க் கவிதை மேலும் சுவைப்புதிது, பொருள் பதிது, வளம் புதிது, சொற்புதிதானதாய் அமைவு பெற்றது. இதனை சாத்தியப் படுத்தியவர்களுள் மஹாகவியும் ஒருவர்.

ஈழத்து நவீன தமிழ்க் கவிதை

முன்னோடிகளுள் முதன்மையானவர் மஹாகவி. நவீன கவிதை பரப்பில் தனக்கெனப் தனிப்பாதை அமைத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ற உருவங்களையும், உள்ளடக்கங்களையும் தனது கவிதைகளில் கையாண்டார். இவரது இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி 1927 ஜனவரி 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். கொழும்பில் எழுதுவினைஞராக உத்தியோகம் செய்த இவர் தமது 28 ஆம் வயதில் திருமணம் முடித்தார். பாண்டியன் சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன் ஆனார்.

இவரது கவிதை பங்களிப்பு பற்றி நோக்குவோமானால் தமது 14 ஆம் வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் ஆரம்பத்தில் பண்டிதன் என்னும் புனைப்பெயரில் கவிதைகளை எழுதினார். பின்னர் இவர் மஹாகவி என்னும் புனைப்பெயரைத் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் சூட்டிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவன், மாபாடி, மஹாலட்சுமி முதலிய புனைப்பெயர்களிலும் கவிதை படைத்துள்ளார். தமது 16 ஆம் வயதில் எழுதிய கவிதைகளை வானகம், புரட்சி, கவிக்கன்னி, ஆகிய தலைப்புக்களில் சிறிய கையெழுத்துத் தொகுதிகளாக வெளியிட்டார்.

1943 இல் கிராம ஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆனந்தன் ஆகிய முதலிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகின. சுமார் மூன்று தசாப்தங்கள் ஈழத்து தமிழ்க் கவிதையின் வளர்ச்சியின் வளம் சேர்த்தவர் மஹாகவி. இவர் அக்காலத்தில் சுமார் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் குறும்பாக்களையும் பாநாடகங்களையும் சிறுவர் பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவிதை பங்களிப்பு எத்தன்மையானது? அக்கவிதையின் வளர்ச்சி போக்கு பற்றி ஆராய்வதாக இந்த கட்டுரை அமையும்.

மஹாகவியின் கவிதைகள் தனித்துவமானவை. ஆரம்பத்திலே பாரதிதாசன், கலைவாணன் ஆகியோர் மஹாகவியை அதிகம் பாதித்துள்ளனர். பாரதிதாசனும் கலைவாணனும் தனக்கு தாயும் தகப்பனும் போன்றவர்கள் என்று மஹாகவி கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வளர்ச்சிப் போக்கிலே மஹாகவி இவர்களை விட்டு நீண்டத்தூரம் சென்று விட்டார். இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்தப்பூர்வமாக கவிதையில் சித்தரித்து காட்டியமை தமிழ் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கிய பங்களிப்பாகும்.

"இன்னவைதாம் கவிஎழுத
ஏற்றப்பொருள் என்று பிறர்
சொன்னவற்றை, நீர் திருப்பிச்
சொல்லாதீர், சோலை கடல்
மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள். மீந்திருக்கும்
இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றை பாடுங்கள்.''

என்று தன் ஆரம்ப காலத்திலேயே அவர் கவிதை எழுதினார். நிகழ்கால பிரச்சினைகளையும், கவிதையின் பாடுபொருளாக்கி அதனை இன்றைய யுகத்திற்கு இழுத்து வரல் அவசியம் என்று பிற்காலத்தில் அவர் எழுதினார்.

"இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்
இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்
இன்றைய காலத் திழப்புகள் எதிர்ப்புகள்
இன்றைய காலத் திக்கட்டுக்கள்''

ஆகியவையே கவிதையில் இடம்பெற வேண்டும் என்று அவர் சொன்னார். இதுவே அவரது கவிதை கொள்கையாகும். சமகால பிரக்ஞை, சமூக பிரக்ஞை யதார்த்தம் ஆகியவையே அவரது கொள்கையின் அடிப்படையாகும். மஹாகவி பெருந்தொகையாக இயற்றிய தனிக்கவிதைகளில் ஒரு பகுதி வள்ளி (1955), வீடும் வெளியும் (1973) ஆகிய தொகுதிகளாக நூல் உருப்பெற்றுள்ளன. பொருட்பத்து, பொருள் நூறு என்னும் தலைப்புக்களில் அமைந்த கவிதை தொகுப்புகள் கையெழுத்து பிரதி, தட்டச்சு பிரதிகளாக உள்ளன. பத்திரிகைகளில் பிரசுரமான தனிக்கவிதைகளில் பல நூல் வடிவம் பெறாத நிலையில் உள்ளன.

இவரது கவிதை பாடுப்பொருள்களில் முக்கிய அம்சமாக சமகால உணர்வும், சமூக உணர்வும் அதிகம் காணப்படுகின்றது. இவையே மஹாகவியின் கவிதையாக்கங்கள் பலவற்றுக்கும் அடிநாதமாக அமைந்த உணர்வு நிலை. சமகால உணர்வு, சமூக உணர்வு, ஆழ்ந்த மனித நேயம் என்பனவாகும். அவர் தனது மண், அதன் சமூக பண்பாட்டு அம்சங்கள் அங்கு வாழும் தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர் முதலியோரது முயற்சி திறன் ஆகியவற்றில் ஈடுபாடும் கொண்டிருந்தார்.

ஏழைகள், பாதிக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்போர் மீது அவருக்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்டிருந்தது. அவர்களின் அந்த நிலைக்கு காரணமான சமூக முரண்பாடுகள் மீது அவர் வெறுப்புக் கொண்டார். அவரது பல்வேறு கவிதையாக்கங்களிலும் புலப்பட்டு நிற்கின்ற உணர்வு நிலைகள் இவைகள் எனலாம். இதனை பேராசிரியர் எம்.ஏ நுஃமான் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்.

""மஹாகவியின் யதார்த்தம் அவர் கையாண்ட கவிப்பொருளின் ஊடாக வெளிவருகின்றது. கிராமப் புறத்து விவசாயிகள், நகர்ப்புற வாழ்க்கைக்குப் பலியான ஏழைகள் மத்திய தர வர்க்கத்தினர் போன்ற சாதாரண மக்களின் வாழ்க்கை மீது விழுந்திருப்பதனை அவரது படைப்புக்களில் காணலாம். பொதுவாக 1955 க்கு பிந்திய மஹாகவியின் பெரும்பாலான கவிதைப் படைப்புக்கள் சாதாரண மக்களின் வாழ்க்கை நிலை, சமூக முரண்பாடுகள் அவற்றின் விளைவான மனித நடத்தை முதலியனவே சித்தரிக்கப்பட்டுள்ளன.''

மேற்குறித்த சமகால சமூக மனிதநேய உணர்வு நிலைகள் யதார்த்த அணுகுமுறை என்பவற்றிற்குச் சான்றுகளாக சில கவிதைகளைக் காணலாம்.

சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த அதீத சாதிய வெறியால் ஒரு இளைஞன் கொல்லப்பட்ட செய்தியினை ‘தேரும் திங்களும்’ என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகின்றான்.

ஊரெல்லாம் கூடி ஒரு தேர் இழுக்கிறதே
வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை
என்று
வந்தான் ஒருவன்
அவன் ஒரு இளைஞன்
மனிதன்தான்.
நில்! என்றான் ஓரான்
நிறுத்து! என்றான் மற்றோரான்
புல் என்றான் ஓரான்
புலை என்றான் இன்னோரான்
கொல் என்றான் ஓரான்
கொளுத்து! என்றான் வேறோரான்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்துதொன்று வெட்டொண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து மல்லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர்க்கொண்டது போல வெடுக்கென்று நின்றுவிட
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந்திருந்துவிட்டாள் ஊமையாய் தான் பெற்ற
மக்களுடைய மதத்தினை கண்டப்படி
முந்தநாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அந்தோ மண்ணிற் புரள்கிறது.

மதத்தின் பெயரால் நிகழும் தீண்டாமை கொடுமையின் கற்புலக்காட்சியாக விரியும் இக்கவிதையின் ஊடாகச் சமூக முரண்பாடுகள் மீது தனது வெறுப்புணர்வையும் அகன்ற மனித நேயத்தையும் வெளிப்படுத்தி விடுகின்றார் மஹாகவி.

இவரது கவிதையின் உணர்வு நிலை, சித்தரிப்புத் திறன் என்பவற்றின் விரிந்த நிலைகளிளேயே பல கவிதைகள் சான்று பகிர்கின்றன.

இவரது கவிதையின் மற்றுமொரு தனித்துவம் சாதாரண மனிதனின் வாழ்வியலை களமாகக்கொண்டு சாதாரண மனிதனையே இலக்கியக் கருவாக்கிக் கவிதை பாடியுள்ளார். உதாரணமாக யாழ்பாணப் பிரதேச மீனவ சமூகத்தின் வாழ்க்கை பிரச்சினைகளை ‘புதியதொரு வீடு’ எனும் தொகுதியில் நயம்பட காட்டியுள்ளார். கடலுக்குச் சென்ற மீனவன் ஒருவன் மீண்டு வராத நிலையில் அவன் இறந்துவிட்டான் எனக்கருதிய சமூகம் அவனது மனைவிக்கு வேறொருவனை துணைவனாக்குவதும் இறவாது மீண்ட கணவன் எய்தும் மனப்போராட்டங்கள் எத்தன்மை வாய்ந்தது என்பதனையும் கீழ்வரும் பாடலில் காட்டியுள்ளார்.

சிறுநண்டு மணல்மீது
படமொன்று கீறும்
சிலவேளை இதைவந்து
கடல்கொண்டு போகும்
கறிசோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல்மீது இவள்கொண்ட
பயமொன்று காணும்
கோடைக் கொடும்பனி
மழைக்குளிரை அஞ்சி
கோடி புரத்தினுள்
உறங்கிவிடலாமோ.
ஆடை கலைந்து தலை
மீதினில் அணிந்தோம்
ஆழக்கடல் தயிர்
எனக்கடைய வந்தோம்.

மஹாகவியின் மற்றுமொரு தனித்துவ அம்சம் சமுதாய அவலங்களை நகைச்சுவையுணர்வில் ‘குறும்பா’ எனும் வடிவை கையாண்டு வெளிப்படுத்தியுள்ளன. சமகால உணர்வு, சமூக உணர்வு யதார்த்த அணுகுமுறை என்பவற்றின் மூலம் ஈழத்து தமிழ்க் கவிதையின் உள்ளடக்கத்தின் புதிய வளர்ச்சி நிலைகளை ஏற்படுத்தினார். கவிதையின் வடிவ நிலை, சித்தரிப்பு நிலை என்பவற்றிலும் புதுமையை ஏற்படுத்துவதில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தாமே புதிய பரிசோதனைகளை மேற்கொண்டார். தமது பெரும்பான்மையான கவிதைகளைக் ‘குறும்பா’ வடிவின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். சமுதாய அவலங்களையும், நெஞ்சுருக பாடுகிறார். சமுதாயத்தில் நிகழும் ஆபாசங்கள், அபத்தங்கள் கேலிக்குரிய விடயங்கள் முதலியவற்றைப் புலப்படுத்துவதற்கு ஏற்றதாகக் ‘குறும்பா’ பயன்படுத்தப்பட்டது. தமது சமகால சமுதாயத்தில் பல்வேறு முரண்பாடுகளையும் கேலிக்குரியனெவும்,

நகைச்சுவையூட்டத்தக்கனவுமான அம்சங்களையும் அதன் ஊடாக வெளிப்படுத்தினார்.

முந்தலிலே வாழ்கின்ற தேவர்
முழுத்தொழிற்கும் முதலாளி ஆவர்.
இந்த விலை விற்கிறதே
ஏன் செருப்பை தேய்ப்பான் என்று
அந்தரத்திற் தான் நடந்துபோவார்

செருப்பு தேயும் என்றஞ்சி நிலத்தில் நடக்கத் தயங்கும் கஞ்சப்பிரபுக்கள் பற்றிய கிண்டல் மேலுள்ள கவிதை காட்டுகிறது.

உருகி வழிபடும் பக்தர் முன் இறைவன் நேரில் காட்சி கொடுத்து வா என அழைத்தால் அவர் என்ன செய்வார் என்ற சிந்தனையில் உதித்த சுவையான கற்பனையைக் கவிதையில் கீழ்வருமாறு கூறியுள்ளார்.

நல்லையர் நெக்குருகி நைந்தார் நம்பெருமான் வா என்று வந்தார் நில்லையா என்றடியார் நேரேபோய்த் தம் மனைவி செல்லம்மாள் சேலையுள் மறைந்தார்.

உயிர் பறிக்கவரும் யமனைக்கூடச் சமாளிக்கும் அளவிற்கு கை இலஞ்சம் வளர்ந்து விட்டது என்பதனை நகைச்சுவை ததும்பக் கீழ்வரும் கவிதையில் கூறியுள்ளார்.

முத்தெடுக்க மூழ்கிறான் சீலன்
முன்னாலே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின்
கைத்தலத்திற் பத்து முத்தைப்
பொத்தி வைத்தான் போவான் முச்சூலன்.

மஹாகவி யின் கவிதைகளில் பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் சாதாரண பேச்சோசைப் பாங்கில் அமையப்பெற்றுள்ளது. செம்மொழிச் சொற்களுக்குப் பதிலாக பாமரர்கள் அன்றாட வாழ்வில் பிரயோகிக்கும் சொற்களைக் கவிதையில் சேர்த்துள்ளான்.

சேலையொன்று சரசரப்புற்றது.
திறப்பும் பூட்டும் கறகறப்புற்றன.
வேலி யோகறை யான்படர்ந்துள்ளது
மெல்லவே அந்த மண்அதிர் வுற்றது.

மஹாகவியின் ஆரம்ப காலக் கவிதைகள் சிலவற்றில் கற்பனைவாதப் பண்புகள் காணப்படும்போதிலும் யதார்த்தப்போக்கே அவரது பிரதான படைப்புக்களில் முக்கிய பண்பாகும்.

கவிதையின் வடிவமைப்புக்கு ஒரு முழுமை கொடுப்பதிலும் மஹாகவியின் பங்கு முக்கியமானது. செய்யுள் உருவமும் கவிதை வடிவமும் ஒன்றே என மயங்கும் அநேகர் இன்றும் உள்ளனர். விருத்தம், வெண்பா அகவல் சிந்து போன்ற செய்யுள் உருவங்களில் கட்டுரைப் பாங்கில் எழுதப்படும் கருத்துக்கள் சங்கதிகள் அனைத்தும் கவிதைகள் என்றே கருதப்படுகின்றன.

இதன் மறுதலையில் புதுக்கவிதை எழுதுபவர்கள் எனப்படுவோர் வரிசை அமைப்புடைய உரைநடையில் எழுதுப்படும் துணுக்குகள் நொடிகள் கிண்டல்கள் கருத்துரைகள் அனைத்தும் கவிதை என்றே கருதுகின்றனர். மஹாகவி இவ்விரு போக்குகளிலிருந்தும் மாறுபடுகின்றார். அவர் தனது கவிதைகளுக்கு மரபு ரீதியதான செய்யுள் உருவங்களையே கையாண்டப்போதிலும் அவரது கவிதைகளின் வடிவ அமைப்புக்கும் அவர் கையாளும் செய்யுள் உருவங்களுக்கும் இடையே அவை கவிதைப் பொருளின் வைப்பு முறைமைக்கான ஒரு ஊடகமாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பதனைத் தவிர உள்ளார்ந்த பிணைப்புகள் எதுவும் இல்லை.

அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தம்மளவில் செய்யுளுக்கு புறம்பான முழுமையான வடிவ அமைப்பு உடையவனவாக உள்ளன. ஒரு கவிதையின் தொனிப்பொருள் அக்கவிதை முழுவதும் பரவி படிப்படியாக வளர்ச்சியுற்று முழுமை அடைகின்றது. தமிழ் செய்யுள் நடை வளர்ச்சியிலும் மஹாகவியின் பங்கு குறிப்பிடக்கூடிய முக்கியத்துவம் உடையது.

தற்கால உரைநடைக்கு சமாந்தரமாக செய்யுள் நடையை நவீனப்படுத்துவதில் மஹாகவி பல வெற்றிகளைக் கண்டுள்ளார். பேச்சோசைப் பாங்குக்கும் இவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மஹாகவியின் அலாதியான வெளிப்பாட்டு திறனும் குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய ஒன்றே. அது அவரது தனித்துவத்தின் பிரிதொரு முக்கிய கூறு.

மஹாகவியின் கவிதைகள் எளிமையானதாகத் தோன்றலாம் ஆனால் அவை கருத்தாழமிக்கவை. உதாரணமாகப் பல்லி என்ற கவிதையைக் குறிப்பிடலாம். சிறுவண்டு ஒன்றைப் பல்லி விழுங்கி விடுகின்றது. அதைக்கண்ட குழந்தை விம்மி வெடித்து விசித்தளரிற்று எனத்தொடங்கும் கவிதை ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகின்றது.

மஹாகவியிடம் நாம் நேர்த்தியான நகைச்சுவையை காணலாம். நேர்மை எனும் கவிதை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் நகைச்சுவைதான் அவரது தனி முத்திரை என்று நாம் கூறிவிடமுடியாது. புள்ளியளவில் ஒரு பூச்சி, மீண்டும் தொடங்கும் மிடுக்கு, ஒருத்தோற்றம், வீசாதீர், நீருலவன், ஒரு கனவு என்பவற்றை அவரது கலைநயம் மிக்கதும், உணர்வுப்பூர்வதுமான படைப்புக்களாக அவதானிக்கலாம்.

ஈழத்துக் கவிதைத் துறைக்கு வளம் சேர்த்த மஹாகவியின் பங்களிப்பானது பரந்த ஆய்வுநிலைக்குற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. காரணம் கவிதைத் துறையில் தனக்கெனத் தனிப்பாதை அமைத்துக்கொண்டு காலத்துக்கு ஏற்ற உருவ உள்ளடக்கங்களையும் தமது கவிதைகளின் பாடுபொருளாகக் கையாண்ட மஹாகவி பல புதுமைகளை ஏற்படுத்தியுள்ளார். தமிழ் கவிதைத் துறையில் எட்டயபுரத்து மகாகவியை போலத் தானும் பல புதுமைகளை புகுத்தியுள்ளார். மஹாகவியின் வருகையால் ஈழத்து நவீன கவிதைத் துறைக்கு புது இரத்தம் பாய்ச்சப்பட்டது எனலாம். இவரின் வருகையே ஈழத்து நவீன கவிதையின் உருவ உள்ளடக்கங்களைப் புதிய தளத்திற்கு இட்டுச்சென்றது என்ற முடிவுக்கு வரலாம்.

உசாத்துணைகள்

  1. இலங்கை தமிழ் இலக்கியம், தில்லைநாதன். எஸ், மஹாகவிக்கு மறைவில்லை, 1997, தேசிய கலை இலக்கிய பேரவை வெளியிடு.கொழும்பு.
  2. வீடும் வெளியும், பத்மாசனி உருத்திரமூர்த்தி, 1973 வாசக சங்கர் வெளியீடு, கல்முனை.
  3. ஈழத்து நவீன கவிதை முன்னோடிகள், அ.ப.மு அஸ்ரப், 1998, யுனெட்டட் வெளியீடு கொழும்பு.

(கட்டுரையாளர், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளர்.)

- மாரிமுத்து யோகராஜ்

Pin It