கடந்த சிவராத்திரி அன்று கோவை ஈசா மையத்தில், ‘மகா சிவராத்திரி விழா’ நடைபெற்றது. நாட்டின் முதல்குடிமகள் திருமதி. திரெளபதி முர்மூஅவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்கள். அப்போது ஈசா மையத்தில் ‘செறிவூட்டப்பட்ட ருத்ராட்சம்‘ வழங்கப்படும் என்று விளம்பரம் ஜொலித்தது. நமக்கோ அது என்ன? செறிவூட்டப்பட்ட ருத்ராட்சம்? என்ற கேள்வி எழுந்தது. இப்போதுதான் புரிகிறது ‘செறிவூட்டப்பட்ட’ என்பதின் சூட்சுமம். ஒன்றியத்தின் 75ஆவது ஆண்டு சுதந்திர தின உரையில், “2024க்குள் பொது விநியோக முறை (PDS) (அதாவது, நமது ரேசன் கடைகளில்) மற்றும் பள்ளிகளில், மதிய உணவு உட்பட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அரிசி செறிவூட்டப்பட்ட அரிசியாக வழங்கப்படும்“ என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்.

நமது மாநிலத்தின் உணவுத்துறை அமைச்சர், திரு. சக்கரபாணி அவர்கள், ‘’அடுத்த வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், வழக்கமான அரிசியுடன், செறிவூட்டப்பட்ட அரிசியைக் கலந்து விற்பனை செய்யப்படும்‘’ என்று தகவல் தெரிவித்துள்ளார். ரேசன் அரிசி நமக்குத் தெரியும். அதென்ன செறிவூட்டப்பட்ட அரிசி? அரிசியைச் செறிவூட்டுவதற்கு உலக அளவில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றனவாம். நமது ஒன்றியத்தில், ஆரம்ப காலத்தில் தேவையான சத்துகளை அரிசியின் மேல் பூச்சாகப் பூசிச் செறிவூட்டினார்களாம். ஆனால், என்ன பிரச்சனை என்றால்? தண்ணீரில் அரிசியைக் கழுவும்போது, களையும்போது, இட்லி தோசைக்காக ஊற வைக்கும்போது, மேலே செயற்கையாகப் பூசப்பட்ட, அதாவது அவர்கள் மொழியில் செறிவூட்டிய, அந்தச் சத்துக்கள் தண்ணீரில் கரைந்துபோய் விடும். நீங்கி விடும். அகன்று விடும். அதனால் ஒரு பயனும் இல்லை.enriched riceஎனவே, இக்குறைபாட்டைக் களைந்த அதி புத்திசாலிக் கண்டுபிடிப்பாளர்கள், தற்போது அரிசியையும், தேவையான சத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்து கூழாக்கி, மாவாக்கி, அந்தக் கூழாக்கிய மாவை அச்சில் ஊற்றி, தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற உலோகங்களை அச்சில் ஊற்றி, நமக்குத் தேவையான பலப்பல வடிவங்களைக் கொண்டு வருவோமே அதுமாதிரி, அந்தக் கூழாக்கிய மாவை, அரிசி வடிவ அச்சில் ஊற்றி, அரிசியைப் போலவே கொண்டு வந்து விடுவார்களாம். பார்க்க அது சாதாரண அரிசியைப் போலவே இருக்கும். எந்த ஒரு வித்தியாசமும் நமக்குத் தெரியாது. பிறகு, இதை ஒரு கிலோ அரிசிக்கு 10 கிராம் வீதம், அதாவது 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட செயற்கை அரி-சியைக் கலப்படம் செய்து விற்பார்களாம். நமது குழந்தைகளுக்கு அந்தக் கலப்பட அரிசியை வழங்குவார்களாம். அதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாம்.

சரி. எதற்கு அய்யா? இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி? என்று கேட்டால், இந்திய ஒன்றியத்தில் பிறக்கும் குழந்தைகளில், மூன்றில் ஒரு குழந்தை நுண்ணூட்டச் சத்துக்குறைபாடுடன் பிறக்கிறதாம். அப்படியான நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இரத்தசோகை, நோய் எதிர்ப்புச் சக்தி, அறிவாற்றல் செயல்பாடு பலவீனமாதல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும்தானாம். எனவே, குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டுமாம். அதற்காகத்தான் இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசியாம். அடக் கொடுமையே. இங்கு ஏற்கெனவே ஆயிரத்தெட்டு உணவு அரசியல். இதில், இது என்ன புதுக்கொடுமை? என்று கேட்க வேண்டியிருக்கிறது.

உண்மையில், நமது உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களை எப்படிப் பெறுவது? எப்படி உண்பது? எப்படி முறைப்படுத்துவது? என்கிற விழுமியமானதொரு உணவுப் பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள் நாம். மூத்த முன்னோடியான அறிவு மரபின் சொந்தக்காரர்கள் நாம். ‘பசித்துப் புசி’ என்று எளிய மக்கள் வழக்கிலும், “மருந்ததென வேண்டாவாம் யாக்கைக்கு” என இலக்கிய வழக்கிலும், அறிவார்ந்த, ஆரோக்கியமான, உணவுப் பண்பாட்டின் மரபு நாம். உண்மையில் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது அதி முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இயற்கையான காய்கறிகளில், கனிகளில், தானிய மணிகளில் இருக்கிறது ஊட்டச் சத்துக்கள். நமது உடலில் ஏற்படும் சத்துக் குறைபாட்டைச் சரிசெய்ய, சீர்செய்ய, சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடுவது ஒருவகை. சத்தை மட்டும் தனியாக, அதாவது மருந்தாக எடுத்துக்கொள்வது மற்றொரு வகை. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மருந்துகளைவிட, உணவுகளில் இருக்கும் சத்துக்களைத்தான் உடல் எளிதாகக் கிரகித்துக் கொள்ளும் என்பதுதான் அறிவியல். இவர்கள் என்னடாவென்றால்? அறிவியலுக்கு எதிராக இயங்குகிறார்கள். அதை நமக்குத் திணிக்கிறார்கள். நமது முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் மூத்த பாட்டன், பாட்டிகளெல்லாம் இறக்கும்வரை நன்கு திடகாத்திரமாய்த்தானே இருந்தார்கள்.

இயங்கினார்கள். உழைத்தார்கள். நிலத்தில் பாடுபட்டுத் தானிய மணிகளை விளைவித்து, உண்டு, செரித்துக் காலம் கழித்து வந்தார்கள். அவர்கள் எந்த செறிவூட்டப்பட்ட அரிசியைத் தின்று திடகாத்திரமாய் இருந்தார்கள்? அவ்வளவு தூரம் முன்னே போக வேண்டாம்.

நமது பாட்டன், பாட்டிகள் எந்த செறிவூட்டப்பட்ட அரிசியைத் தின்று திடகாத்திரமாய் வாழ்ந்து மடிந்தார்கள்?

நமக்கு விவரம் தெரிந்து, தீபாவளி, பொங்கல் என்று சிறப்பு விழா நாட்களில்தான், ‘நெல்லுச் சோறு’ என்று சிறப்பு உணவாகக் கொடுக்கப்படும். மற்றபடி கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, குதிரைவாலி என்று இயல்பாகவே பல தானிய உணவுமுறைதான். அது எப்போது ஒற்றைத் தானிய உணவானது? காலையில் இட்லி, தோசை மதியம் பட்டை தீட்டப்பட்ட வெள்ளைவெளேர் என்றிருக்கும் தூய வெண் அரிசி, மறுபடியும் இரவிற்கு அதே அரிசிச் சோறு அல்லது “எங்க வீடுகள்ல எப்பவும் டிபன்தான்” என்று பீற்றிக் கொள்ளும் அரிசி மாவு உணவுதான். இப்படி மூன்று வேளைக்கும் அரிசி மட்டுமே என்கிற ஒற்றைத் தானிய உணவு அரசியல் எப்படி வந்தது?

முன்பு சொன்னார்கள், உழைக்காமல் உடலுழைப்பின்றி முதலாளியாய் இருப்பவனுக்குத் தான் சர்க்கரை வியாதி வருமாம். அது பணக்கார வியாதியாம். இன்று எமது தொலைதூர எளிய கிராமத்துக் கூலி உழைப்பாளிக்கும் நீரழிவு நோய். மருந்து மாத்திரைகளோடு, ஊசி என்றாலே பயந்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டு, நடுங்கும் எங்கள் எளிய மக்கள் கைகளில், இன்று அன்றாட இன்சுலின் ஊசிகள். இப்போது சொல்கிறார்கள். பரிந்துரைக்கிறார்கள். வாய் கிழிய வியாக்யானம் செய்கிறார்கள். அரிசி என்றாலே அது வெறும் மாவுச் சத்து மட்டுந்தானாம். வெறும் ‘கார்போ ஹைட்ரேட்’ மட்டுந்தானாம். எனவே, பல தானிய உணவிற்கு மாறுங்கள் என்கிறார்கள். எப்படியிருக்கிறது கதை? அப்படித்தானய்யா நாங்கள் ஆண்டாண்டு காலமாய் இந்த மண்ணில் உண்டு, உறங்கி, புணர்ந்து, எங்கள் வம்சா வழிகளைப் பெருக்கி வாழ்ந்து கிடந்தோம். இதில் தந்திரமாய் உங்கள் உணவு அரசியலை உள் நுழைத்துவிட்டு, இப்போது வேறுவகையில் இலாபம் பார்க்கத் துடிக்கிறீர்கள்,

நமது தொலைக்காட்சிகளில் திடீரெனத் தோன்றிடும் அந்த நடிகை கேட்பார். “உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா?” என்று. ஏம்மா. காலங்காலமாய் எங்கள் பாட்டனும், பாட்டியும் அடுப்புக் கரியையும், உப்பையும் கொண்டுதானம்மா பல் துலக்கி வந்தார்கள். ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று, குச்சிகளைக் கொண்டு பல் துலக்கி, ஆரோக்கியமாய் வாழ்ந்து வந்தவர்களை, திருப்புகழைப் பாடாமலேயே வாய்துர் நாற்றமின்றி, வாய் மணக்க மணக்க வாழ்ந்து திரிந்தவர்களை நிறுத்தி, அவர்கள் கையில் பற்குச்சியையும் பற்பசையையும் திணித்துவிட்டு, இப்போது கேட்கிறீர்கள்? உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா? என்று. யாருக்காக வந்தது? இந்த உணவு அரசியல்? யார் நலன் காக்கத் திணிக்கப்பட்டது? இந்த உணவு அரசியல்? யாரின் லாபப் பெருக்கெடுப்புக்குத் திணிக்கப்பட்டது இந்த உடல் நலஅரசியல்?

அட. மெத்தப் படித்த மேதைகளே. சூறையாடும் முதலாளிகளின் லாபப்பெருக்கெடுப்பிற்கு அடி பணிந்து, ஏவல் செய்யும் ஆட்சியாளர்களே. உங்களுக்குத் தெரியுமா? சத்துக் குறைபாடு என்பது, நபருக்கு நபர் வேறுபடக்கூடியது என்று. நபருக்கு நபர், ஆளுக்கு ஆள், உடல் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறு வேறு மரபணு. வேறு வேறு நோய் எதிர்ப்புக் கூறு. அவரவர்களின் கை ரேகை போல. ஆளாளுக்கு மாறுபடும். வேறுபடும். இதில் எப்படி எல்லோருக்குமான, பொத்தாம் பொதுவான, ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மருந்து? உண்மையில், ஒருவருக்கு அதில் தேவையான ஊட்டச்சத்துக் கிடைத்தாலும், மற்றொருவருக்கு அதுவே பின்விளைவுகளையும் ஏற்படுத்தலாம். மேலும், செயற்கை ஊட்டமேற்றப்பட்ட உணவால், உடலில் சத்து அதிகரித்ததற்கான சான்று உலகில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை.

கர்ப்பிணியான எங்கள் தாய்மார்களைப் பார்த்து என்ன சொல்கிறீர்கள்? அம்மா. உங்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளது. ‘ஹீமோகுளோபின்’ கம்மியா இருக்கு. எனவே, இந்த இரும்புச் சத்து டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறீர்கள். மருந்து நிறுவன விற்பனை அதிகரிப்பிற்கு, லாப வேட்கைக்குச் சேவகம் செய்கிறீர்கள். உண்மையில், ‘ஹீமோகுளோபின்’ குறைபாட்டுக்கு இரும்புச் சத்து மட்டுமன்றி வேறு பல ஊட்டச் சத்துக் குறைபாடுகளும் காரணமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. உடலியல் இப்படி இருக்க, இரும்புச்சத்தை மட்டுமே அதிகரித்தால், அது ‘ஹீமோகுளோபின்’ பிரச்னையைச் சரிசெய்துவிடாது. மாறாக, உணவில் இரும்புச்சத்து அதிகரிப்பதால், நீரிழிவு, கணையப் பிரச்னை, காசநோய் போன்ற நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகளும் அதில் இருப்பதாக மருத்துவ அறிவியல் கூறுகிறது. இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் நிறைய இருக்கிறது. சொல்லிச் சொல்லித் தீராத ஆயிரமாயிரம் உணவு அரசியல் உண்டு இங்கு. எழுதி எழுதித் தீராத ஆயிரமாயிரம் பக்கங்கள் உண்டு இங்கு. இந்த இடத்தில் நம் கவனக் குவிப்பு ஒன்று. அப்படியானால்? மீண்டும் அந்தப் பழைய காலத்திற்கே, சமூகத்தைப் பின் தள்ளிக் கொண்டு போகப் போகிறோமா நாம்? இல்லை. நிச்சயமாக இல்லை. வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் இவை எல்லாம் வேண்டும். கண்டிப்பாக வேண்டும். ஆனால், அது யாருக்காக? யார் நலன் நோக்கி? என்பதிலும், இந்தப்பூமியைச் சேதப்படுத்தாமல் நுகர்ந்து, அதை முன்னிலும் மேம்படுத்தி, வருகிற சந்ததிகளுக்குப் பக்குவமாகக் கையளித்துப் போவதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை.

இறுதியாக, இந்தச் ‘செறிவூட்டப்பட்ட’ என்பதின் அரசியலை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதுமானது. இப்படித்தான் முன்பு கேட்டார்கள். உங்கள் உப்பில் அயோடின் இருக்கிறதா? என்று. என்னவானது? சிறு குறு அளவில் உப்பளங்கள் வைத்து உப்புக் காய்ச்சி வணிகம் செய்து கொண்டிருந்த சிறு குறு உப்பு வணிகம், டாட்டா போன்ற பெரு வணிகக் குழுமங்களின் கைகளுக்குச் சென்று விட்டது. முன்பெல்லாம் இரவில், எங்கள் எளிய சிற்றூர் மளிகைக் கடையினை அடைத்திடும்போது, எல்லாப் பொருட்களையும் எடுத்தடைத்துப் பாதுகாக்கும் எங்கள் மளிகைக் கடைக்காரர், வாசலில் மட்டும் உப்பு மூட்டையை அப்படியே வைத்து விடுவார். இன்று அப்படியா? கல் உப்பைக் ‘கிரிஸ்டல் உப்பு’ என்றும், விரலிடுக்கில் நைசாக வழு வழுத்துக் கீழுதிரும் பொடி உப்பு வரை, டாட்டா, பிர்லா என ஏன்? ஆன்மிகச் சாமியார் என்ற போர்வையில், பன்னாட்டுச் சூறையாடும் முதலாளியாக வளர்ந்து நிற்கும் பாபா ராம் தேவ்வின் பதஞ்சலி குழுமத்தின் கைகளில் உப்பு வணிகம் லாபம் கொழித்துத் தள்ளுகிறது.

ஒரு சாதாரண உப்புதானே என்று வாளாவிருக்காமல், அது அந்நிய ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கான அரசியல் எதிர்ப்பு என்று, மிக நீண்ட நெடிய உப்புச் சத்தியாக்கிரக அரசியல் போராட்டங்களைச் சந்தித்த வரலாறு நமக்கு உண்டு. என்ன? அதை அரசியல் பாடத்திற்காக, மதிப்பெண்களுக்கானதாக மட்டுமே குறுக்கி விட்டோம். ஒரு சாதாரண உப்பு எப்படி அயோடின் கலந்த உப்பாக, செறிவூட்டப்பட்ட உப்பாக, இந்நாட்டு, பன்னாட்டுச் சூறையாடும் வணிக முதலாளி முதலைகளின் பகாசுர வணிகக் கைகளில் மாட்டிக் கொண்டதோ, அதைப்போலவே, நாளை நமது உழவுத் தொழிலும் கை மாறப் போகிறது. மாறிவிடப் போகிறது. மாற்றிவிடச் சூழ்ச்சி வலை பின்னப்பட்டு வருகிறது என்பது மட்டும் திண்ணம். அதன் அரசியற் சொல்லாடலே, இந்த ‘செறிவூட்டப்பட்ட’ என்பது. தென்னகத்தின் நெற் களஞ்சியங்கள், நாளை அம்பானி, அதானி நெற்களஞ்சியங்களாகலாம். நமது காவிரி டெல்டாக்கள், பன்னாட்டு, இந்நாட்டுச் சூறையாடும் முதலாளிகளின் டெல்டாக்கள் ஆகலாம். இதற்குத் தகுந்த முன்னுதாரணம், நமது சென்னைக் கடற்கரை இப்போது ‘அதானி கடற்கரை’ என்று ஆகியிருக்கிறதே அதைப்போல.

ஆக, இங்கு நமக்குத் தேவை. ‘செறிவூட்டப்பட்ட’ என்கிற மாய்மாலங்கள் அல்ல. அந்த மாய்மாலங்களை, மக்கள் மத்தியில் உலவவிட, நிலவவிட, நிலைநிறுத்திடச் செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஒன்றுதான், நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன, ‘சிவராத்திரியில் செறிவூட்டப்பட்ட ருத்ராட்சங்கள்’. எளிய மக்களின் கடவுள் நம்பிக்கையின் வாயிலாகச் சொல்லிச் சொல்லி, அவர்களை இந்தச் சொல்லாடல்களுக்கு வசப்படுத்துவதுதான். உண்மையில் நமக்குத் தேவை, உடனடித் தேவை செறிவூட்டப்பட்ட அரிசி அல்ல, செறிவூட்டப்பட்ட அரசுகளே. மக்கள் நலன் சார்ந்த அரசு மட்டுமே தேவை. அப்படியில்லாமல் மக்கள் விடுதலைக்கெதிராகத்தான் இந்த அரசுகளும் ஆட்சியாளர்களும் செயல்படுவார்கள் எனில், அதை முறியடிக்கும், அம்பலப்படுத்தும், முகத்திரை கிழிக்கும், தெளிவுபடுத்தும், வென்றெடுக்கும் மகத்தான மக்கள் பணி மக்கள் விடுதலைக்காய் களமாடும் நம் முன்னே உள்ளது.

- பாட்டாளி

Pin It