book review copy“நீளந் தாண்டுதலில் எந்தளவுக்குப் பின்னால் ஓடுகிறீர்களோ, அந்த அளவுக்கு அதிகமான தூரத்தை நீங்கள் தாண்ட முடியும். வரலாற்றைப் படிப்பதும் அப்படித்தான்” எனக் குறிப்பிட்டார் வின்சென்ட் சர்ச்சில். வரலாற்றைப் படிப்பது, வரலாற்றைப் படைப்பதற்காகத்தான் என்பதை இதன்வழி புரிந்து கொள்கிறோம்.

கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ள முடியாது. மேலும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடியாது.

எனவேதான் வரலாறு என்பது நம் மீதான சுமை அல்ல; மாறாக நம் கையிலிருக்கும் ஒளிவிளக்கு. இதை உணராவிட்டால், மரத்தின் ஒரு பகுதிதான் நான் என்பதை அறியாத இலையைப் போல, நாம் வீழ்வோம்.

“வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் வரலாற்றிலிருந்து மீண்டும் மீண்டும் நாம் கற்றுக் கொள்கிறோம்" என்று இதைத்தான் டெஸ்மாண்ட் டூ டூ குறிப்பிட்டார்.

தனிமனித வாழ்வாகட்டும், வரலாற்று நிகழ்வாகட்டும் அது தரும் படிப்பினையைக் கற்றுக் கொண்டோம் என்றால், வரலாற்றின் ஆன்மாவை நாம் கண்டு கொண்டோம் என்று பொருள்.

அதிக உழைப்பைச் செலுத்தி, அதிக நேரத்தைச் செலுத்தித் தன் வாழ்நாளில் ஒருவர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படைச் செய்திகளை, எவ்விதச் சிரமத்தையும் நமக்குக் கொடுக்காமல் நமக்காக ஒருவர் அந்த அறிவுத்தேடலை மேற்கொண்டால், அது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்? அந்த அனுபவத்தை, அனுகூலத்தை ஸ்டாலின் குணசேகரன் “வரலாற்றுப் பாதையில்” எனும் நூல் மூலம் நமக்கு நல்குகிறார்.

சூரியனுக்குக் கீழுள்ள, காலத்தால் அழியாத ஈர்ப்புமிக்க பல்வேறு செய்திகளை 118 தலைப்புகளில் 475 பக்கங்களில் வடிகட்டிச் சாறு பிழிந்து நம் முன் விருந்தாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.

2007 சனவரி 18 முதல் நாள்தோறும் ஒரு கட்டுரையாக ‘ஜனசக்தி’ நாளிதழில் இவை தொடர்ச்சியாக வெளிவந்தது என்பது ஓர் அசுர சாதனை ஆகும்.

பனித்துளி ஒன்று ஆலமரத்தையே தன்னுள் படம் பிடித்துக் காட்டுவது போல், மூன்று அல்லது நான்கு பக்கங்களில், எடுத்துக் கொண்ட பொருள் குறித்த காத்திரமான தகவல்களைக் குறுங்கட்டுரைகளாகத் தருகிறார் நூலாசிரியர்.

அவர் எடுத்துக் கொண்ட தலைப்புகளே அவரது ஆளுமையை வெளிப்படுத்துகின்றன.

மகளிர் என்றால் வாலென்டினா, கல்பனா சாவ்லா, மேடம் காமா, அஞ்சலா டேவிஸ், கே.பி. சுந்தராம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, கல்பனா தத், பிரீதிலதா, தில்லையாடி வள்ளியம்மை, நாகம்மாள் - கண்ணம்மாள், கேப்டன் இலட்சுமி, அருணா ஆசப் அலி, மீராபென், நைட்டிங்கேல் என எத்தனை வகையான ஆளுமைகள்!

அறிவியல் அறிஞர்கள் என்றால் மேடம் கியூரி, ஆல்பிரட் நோபல், எடிசன், டார்வின், கலிலியோ, சி.வி. இராமன், ஜி.டி.நாயுடு, விக்ரம் சாராபாய் என எத்தனை சாதனையாளர்கள்!

விடுதலை வீரர்கள் என்றால் சூர்யா சென், செண்பகராமன், உத்தம்சிங், திப்பு சுல்தான், ஜதீந்திரநாத் தாஸ், திருப்பூர் குமரன், சந்திரசேகர ஆசாத், வ.உ.சி., மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை என எவ்வளவு தியாகிகள்!

கலை - இலக்கியப் படைப்பாளிகள் என்றால் பாப்லோ நெரூடா, பெர்னாட்ஷா, மாக்சிம் கார்க்கி, சார்லி சாப்ளின், பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், தமிழ்ஒளி என எத்தனை எழுத்து வேந்தர்கள்!

சமயச் சீர்திருத்தவாதிகள் என்றால் புத்தர், நாராயண குரு, இராமாநுசர், வள்ளலார் எனப் பல்வேறு சான்றோர்கள்!

மேற்காண் ஆளுமைகள் குறித்துப் புத்தக ஆர்வலர்கள் பல செய்திகளைப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆனால் பலரும் ஏற்கெனவே அறிந்திருக்கும் செய்திகளைத் தவிர்த்து, வாசகர்கள் அறிந்திராத செய்திகளை, ஒரு தேனீயைப் போல அறிவுத்தளத்தில் அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து இக்கட்டுரைகளைச் செதுக்கியுள்ளார் ஸ்டாலின் குணசேகரன்.

கோபுரத்திலிட்ட விளக்குகள் போல் ஒளிரும் ஆளுமைகளைத் தவிர, நாம் சற்றும் அறிந்திராத, உரிய அங்கீகாரம் பெற்றிராத குடத்திலிட்ட விளக்குகளாக வரலாற்றின் பக்கங்களில் உறைந்து நிற்கும் ‘எம்டன்’ ஆரோக்கியசாமி, அரங்கசாமி ராஜா, சேலம் சிறைத்தியாகிகள் சுப்பு - ஆறுமுகம் - காவேரி முதலியார் - ஷேக் தாவூத், இராஜபாளையம் காளியம்மாள் போன்ற பல்வேறு தியாகமலர்களை நம் கவனத்திற்குக் கொண்டு வந்து சீரியதோர் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியிருக்கிறது இப்புத்தகம்.

மற்ற வரலாற்று நூல்களிலிருந்து இந்த நூல் வேறுபட்டிருக்கும் போற்றத்தக்க கூறு இது.

வரலாறு என்பது ஒரு சில தனிநபர்களால் உருவாக்கப்படுவதல்ல, மாறாக அது மக்களின் மகத்தான பங்களிப்போடு ஒரு சில முன்னோடிகளால் உருவாக்கப்படுவது என்ற மாறுபட்ட கண்ணோட்டம், இந்நூல் முழுவதும் விரவிக் கிடப்பதை ஆழ்ந்து படிக்கும் ஒருவர் சட்டென உணர்ந்து கொள்ள முடியும்.

‘அகிலத்தை அசைத்த அறிக்கை’ எனும் கட்டுரை அதை மெய்ப்பிக்கிறது. 30 வயதான கார்ல் மார்க்ஸ் மற்றும் 28 வயதான பிரடெரிக் எங்கெல்சு ஆகியோர் 1848ஆம் ஆண்டு வெளியிட்ட ‘கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை’ ‘உலகத்தைப் புரட்டிப் போட்ட நெம்புகோல்களில் ஒன்றாக’ மாறியதைச் சுட்டுகிறது அது.

அதேபோல், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் எனும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் 1852 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ எனும் நூல் ஆதிக்க நிறவெறிக்கு எதிரான ஒரு பெரும் போரை எவ்வாறு மக்களிடையே உருவாக்கியது என்பதை ‘ஒரு புத்தகம்! ஒரு யுத்தம்!’ எனும் கட்டுரை தெளிவாக்குகிறது.

முதலில் 5000, பிறகு 10,000 என ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்த ‘இந்தப் புத்தகம், வெளி வந்த ஓராண்டிற்குள் 3,00,000 படிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன. எட்டு அச்சு இயந்திரங்கள் இரவு பகலாக இயங்கி இந்த நூலை அச்சடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தன.

மூன்று காகித ஆலைகள் காகிதங்களை இப்புத்தகத்திற்காக உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் முழுக்க ஈடுபட்டிருந்தன. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியாமல் திணறல் ஏற்பட்டது.

அந்நாடு முழுக்க ஓரளவேனும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்நூல் இருந்தது. இரண்டாண்டுகள் கழிவதற்குள் சுமார் 60 மொழிகளில் இந்நூல் வெளியாகி உலகை வலம் வந்தது... இந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு ஒரு பிரமாண்டமான தீப்பற்றி எரிவது போல் இருந்தது.

எதிர்ப்பின்றி அலையலையாக அதிலிருந்து கிளர்ந்த உணர்ச்சிப் பெருக்கு மோதியது. வானமெல்லாம் அதன் ஜோதிதான் கடலையும் கடந்து சென்றது. உலகம் அனைத்துமே இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை; பேசவுமில்லை என்பது போல் தோன்றியது’ எனச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர்,

‘இப்புத்தகம் உள்நாட்டு யுத்தத்தையே உருவாக்கியது’ என ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டதையும் தவறாமல் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் கருப்பின விடுதலைக்கு வித்திட்ட நூலைப் போன்றே, இங்கிலாந்தின் முடியாட்சியிலிருந்து அமெரிக்கா விடுதலை பெறக் காரணமாக இருந்த மற்றொரு நூலைப் பற்றியும் குறிப்பிடுகிறார் ஸ்டாலின் குணசேகரன்.

இங்கிலாந்தில் பிறந்த தாமஸ்பெயின், ‘இங்கிலாந்து எனும் தேசத்திற்குக் கீழ்ப்படிந்த அடிமை நாடாக அமெரிக்கா இருக்கக் கூடாது என்பதற்கான காரண காரியங்களை விளக்கி 'பகுத்தறிவு’ (common sense) என்ற துண்டுப் பிரசுரத்தை எழுதி வெளியிட்டார்.

1776 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் தேதி பகுத்தறிவு வெளியானது. வெறும் 47 பக்கங்களே கொண்ட இந்தத் துண்டுப்பிரசுரம் ‘ஓர் ஆங்கிலேயரால் எழுதப் பெற்றது’ என்ற அறிவிப்புடன் வெளிவந்தது. அச்சடித்து வெளிவந்த மூன்று மாதங்களில் 1,20,000 பிரதிகள் விற்றன. பின்னர் வெகு விரைவில் 5,00,000 பிரதிகள் சர்வ சாதாரணமாக விற்றுத் தீர்ந்தன.

இலக்கிய வரலாற்றிலேயே இந்த அளவுக்கு ஒரு நூல் விற்றதே இல்லை. தாமஸ் பெயினின் ‘பகுத்தறிவு’ வெளியான ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதே போல் ‘தமிழைப் போற்றிய காந்தியடிகள்’ என்ற அருமையான கட்டுரை குறிப்பிடத்தக்கது. தமிழின் மீதும், தமிழ் மக்களின் தியாகத்தின் மீதும் காந்தியார் கொண்டிருந்த மதிப்பை இக்கட்டுரை விதந்தோதுகிறது.

“தமிழர்களைச் சந்திக்கும் போது என் உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்த உணர்ச்சி இது. இதற்குக் காரணம் வெளிப்படையானதே. சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்ற இந்தியர்களிடையே உள்ள பல்வேறு பிரிவினருள் இப்போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள்தான்... எந்த முறையில் பார்த்தாலும் இந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தமிழர்கள் என்பதை அவர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.

எள்ளளவும் மிகைப்படுத்தி இதனை நான் கூறவில்லை... மற்ற இந்தியர்கள் தமிழர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.

அவர்கள் புகழ் மேலும் மேலும் விசாலமடைந்து கொண்டு போகிறது. தமிழர் தொண்டுக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அவர்கள் கற்பிக்கும் பாடத்தை மற்றவர்கள் பின்பற்றி, அரவமில்லாமல் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதுதான் சிறந்த கைம்மாறு...” Òநம்மில் கொஞ்சம் பேருக்கு மட்டுமே திருவள்ளுவரின் பெயர் தெரியும்.

அந்த மாமுனிவரின் பெயரை வட இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள். திருக்குறள் கூறும் ஞானத்தின் பொக்கிஷத்தை அவரைப் போன்று வழங்கியவர்கள் வேறு எவருமிலர்” எனப் புகழ்மாலை சூட்டியதோடு, ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி’ என்று தனது முழுப் பெயரையும் தமிழில் கையெழுத்தாகப் போட்டுக் கொடுத்துப் பலரையும் பரவசத்தில் ஆழ்த்தினார் காந்தியடிகள் என்பதையும் இக்கட்டுரை பதிவு செய்கிறது.

சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை வைக்க வேண்டும் என மக்கள் தலைவர் ஜீவா உள்ளிட்ட பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் வலியுறுத்திப் போராடியதை ‘தமிழ்நாடு கேட்ட வங்காளம்’ எனும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.

1956 ஆம் ஆண்டு மார்ச்சு 28 ஆம் நாள் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மாநில மறுசீரமைப்புத் தீர்மானத்தின் பொழுது ஜீவா அவர்கள் இப்பரிந்துரையை முன்மொழிந்துள்ளார்.

“மொழி வழிப் பிரிவினை, தேசிய ஒற்றுமையைச் செழுமைப் படுத்துகிறதேயழிய அதைப் பிரித்துவிடவில்லை என்பதைத் துரதிர்ஷ்டவசமாகச் சமீப காலத்தில் நம்முடைய தலைவர்கள், மேலிடத்தார் ஒப்புக் கொள்ளாமல் மொழி வழிப் பிரிவினை, வெறியாகத்தான் மாறும் என்று தப்புக்கணக்குப் போடுவது இன்னும் இருக்கிறது.

நாங்கள் இந்த அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ளவில்லை... தமிழன் என்ற பெயரால் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். நிதியமைச்சரையும், முதலமைச்சரையும், காங்கிரஸ் தரப்பிலே இருக்கிற மற்ற உறுப்பினர்களையும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

‘தமிழ்நாடு’ என்று பெயரிடுவதுதான் முறை. தமிழர்கள் நல்ல முறையிலே இதயபூர்வமாக நம் தேசிய முன்னேற்றத்திற்கும், ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டங்களை நிறைவேற்றவும், தமிழ்நாடு என்ற திருப்பெயரைச் சூட்ட வேண்டியது அவசியமென்று கேட்டுக் கொண்டு, இந்தத் திசையிலே இதைப் பார்க்க வேண்டுமேயழிய ஒருவருக்கொருவர் கட்சி சார்பிலே இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜீவா அவர்கள் வலியுறுத்தியது வரலாறு என்பது பலரும் அறியாத செய்தியாகும்.

மேலும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பாசு மக்களவையில், “சென்னை மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனவும், மைசூர் மாநிலத்திற்குக் ‘கர்நாடகம்’ எனவும் பெயரிட வேண்டும்" என ஆணித்தரமாகப் பேசியுள்ளார்.

சென்னை மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 1956 ஆம் ஆண்டு தியாகி சங்கரலிங்கனார் 78 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து மரணத்தைத் தழுவினார்.

வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் புகழ்மிக்க தலைவர் பூபேஷ் குப்தா அவர்கள், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டியதன் தேவையைப் பல்வேறு ஆதாரங்களையும், எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் அழுத்தமாகப் பேசினார்.

இதனை அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்று வாழ்த்தினார்.

இவ்வளவு முயற்சிகளுக்கும், தியாகங்களுக்கும் பின்னர் அண்ணா தமிழக முதல்வராக ஆன பிறகு. 1967 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது என்பதைக் காண்கிறோம்.

வரலாற்று நாயகனாகிய கார்ல் மார்க்சின் காதல் மனைவி ஜென்னியின் உயரிய தியாகத்தையும், மார்க்சுக்காக அவர் பட்ட அளப்பரிய துன்பங்களையும் சித்தரிக்கும் ‘மூலதனத்தின் மூலதனம்’ எனும் கட்டுரையும், கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரது காவிய நட்பையும் ஈர்க்கத்தக்க வகையில் படம் பிடிக்கும் ‘தோழமை’ எனும் கட்டுரையும் முத்தாய்ப்பாக விளங்குவனவாகும்.

ஈ.வெ. ராமசாமி நாயக்கர், ‘பெரியார்’ என அழைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியை ‘பெரியாரைப் பெரியாராக்கிய பெரியோர்’ எனும் கட்டுரை விளக்கமாகத் தெரிவிக்கிறது.

1938 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு’ மீனாம்பாள் சிவராஜ், டாக்டர் தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார், பார்வதி அம்மையார், பண்டித நாராயணி அம்மையார், தாமரைக்கண்ணி அம்மையார் போன்றோர் பங்கேற்கச் சிறப்பாக நடைபெற்றது.

பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“இந்தியாவில் இதுவரையில் தோன்றிய சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. இராமசாமி செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரும் இல்லாததாலும், அவர் பெயரைச் சொல்லிலும் எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானம்தான் இப்பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலேயே முதலானதும் முக்கியமானதும் ஆகும் என்பது சுவைபடப் பதிவாகி உள்ளது.

ஸ்டாலின் குணசேகரனது சொற்பொழிவு மற்றும் எழுத்துகளைக் கூர்ந்து கவனிப்பவர்கள், அவற்றில் பொதிந்து கிடக்கும் முக்கியமானதோர் அம்சத்தைக் கண்டறிய முடியும். அவரது வெளிப்பாட்டுப் பாணி, ஒரு திரைப்பட இயக்குநரது தன்மையில் அமைந்திருக்கும்.

அதாவது எதையும் காட்சிப்படிவமாக முன்வைப்பது என்பதுதான் அவரது தனித்தன்மை. அதனாலேயே அவரது சொற்பொழிவாகட்டும், எழுத்தாகட்டும் மக்களை எளிதில் ஈர்க்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் இளம் தேசபக்தர்கள் இந்தியக் கொடியைப் பறக்க விடுவதைச் சித்தரிக்கும் பொழுது, அவரது பேனா, திடுமென ஒரு புகைப்படக் கருவியாகி விடுகிறது. ஏதோ ஒரு துப்பறியும் திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுந்த பீதியோடுதான் வாசகன் அந்தக் காட்சியைக் காண நேர்கிறது.

அதே போல், சோசலிசப் புரட்சியாளர்கள் சூர்யாசென் தலைமையில் வங்கத்திலுள்ள 'சிட்டகாங்' ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றும் நிகழ்வையும் நொடிக்கு நொடி ஆவலைத் தூண்டும் காட்சிப் படிமமாகக் காணமுடியும்.

இப்படி வரலாறும், திரைப்படமும், இலக்கியமும் கலந்த சித்திரங்களாக இருப்பதால், இக்கட்டுரைகள் சூடும் சுவையும் மிக்கதாக மிளிர்கின்றன. இத்தகைய பன்முகத்தன்மை ( variety) ஊடுசரமாகக் கரைந்திருப்பதால், ஒரே அமர்வில் வாசிக்கத் தூண்டும் ஈர்ப்பு (Readability) இப்புத்தகத்தின் தனிச்சிறப்பாகும்.

வரலாறு எனும் இயந்திரத்தை இயக்கும் எரிபொருளாக விளங்குபவை வியர்வையும் இரத்தமும்தான். தனிமனித அளவிலாகட்டும், நாடு தழுவிய நிகழ்விலாகட்டும் இந்த இலக்கணம் செவ்வனே பொருந்துவதைக் காண முடியும்.

அந்த வகையில், இந்நூலிலுள்ள குறுங்கட்டுரைகளில் வியர்வையோ அல்லது இரத்தமோ உறைந்து கிடப்பதை முதல் வாசிப்பிலேயே ஒரு புத்திசாலி வாசகன் கண்டுகொள்ள முடியும்.

‘படித்ததில் பிடித்ததும், பிடித்ததில் சுவைத்ததும், சுவைத்ததில் நிலைத்ததுமான செய்திகள், தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகளை வைத்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன’ எனவும், ‘இந்த வரலாற்றுக் குறுங் கட்டுரைகள், பெரும் நூல்களை வாசிக்கத் தூண்டும் நோக்கில் எழுதப்பட்டவையாகும்.

இந்நூலை வாசித்தவர்கள் வரலாற்றுத் தேடல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்களெனில், அதுவே இந்நூலின் வெற்றி எனக் கொள்ளலாம்’ எனவும் நூலாசிரியர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நூலைப் படித்து முடித்தவர்கள், ‘தனது நோக்கத்தில் ஸ்டாலின் குணசேகரன் சிறப்பான வெற்றி பெற்றுள்ளார்’ என்பதைக் குன்றின் மேலிருந்து பிரகடனப்படுத்துவார்கள்.

- கண.குறிஞ்சி

Pin It